Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Monday, 19 January 2015

மாற்றம் ஒன்றே மாறாதது



பெரும்பாலும் வீட்டில் குடும்பத்துடன் நான் டீவி பார்ப்பதில்லை. இதனால் பல திரைப்படங்களையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்க்க இயலாமல் போய்விடும். முக்கிய காரணம், வேறொன்றுமில்லை. பிள்ளைகளோடு சேர்ந்து பார்க்குமளவுக்கு டீவி நிகழ்ச்சிகளும், படங்களும் இல்லை என்பதுதான். இதன் காரணமாக நான் தனியே டீவியில் படம் பார்த்தால் ஒன்று பாதிப் படமாக இருக்கும்; அல்லது படம் முடியும் தறுவாயில் இருக்கும். இதன் காரணமாக அண்மையில் ஜெயா டீவியில் ஒளி பரப்பிய கோச்சடையான் படத்தில் வரும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற பாடலையும் அது சார்ந்த சில காட்சிகளையும் மட்டுமே காண முடிந்தது. அப்புறம் வழக்கம் போல யூடியூப்பில் (YOUTUBE) அந்த பாடலை பார்த்தேன். இந்த பாடலில் வரும் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இந்த  பொன்மொழியை அடிக்கடி பத்திரிகைகளிலும் வலைப் பதிவுகளிலும் மேடைப் பேச்சுக்களிலும் பலர் சுட்டிக் காட்டுவதை பார்த்திருக்கலாம். ஆனால் இந்த வார்த்தையை சொன்னது யார் என்று சொல்வதில்லை.

என்றும் மாறாதது

ஆதியில் தொடங்கிய மனிதனின் நடை பயணம் இன்று பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கும் அதற்கு அப்பாலும் நீண்டு போய்க் கொண்டு இருக்கிறது. காலத்திற்கு தகுந்தவாறு மாறிக் கொண்டவர்களுக்கு பிழைப்பு கிடைத்தது. உதாரணத்திற்கு நம் நாட்டில் பார்ப்போம். கைரிக்‌ஷா போய் சைக்கிள் ரிக்‌ஷா வந்தது. அப்புறம் ஆட்டோவாக மாறியது. இந்த தொழில் செய்தவர்களில் மாற இயலாதவர்கள் காணாமல் போனார்கள். பல இடங்களில் சுனாமி வந்தது வாரி சுருட்டியது. இதில் பலநாட்டின், பலருடைய வாழ்க்கை முறையே மாறிப் போனது. இன்னும் கம்ப்யூட்டர் , செல்போன் என்று எவ்வளவோ மாற்றங்கள் மனித வாழ்வில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆக மாற்றம் ஒன்றே மாறாதது.   

ஹெராகிளிடஸ் (HERACLITUS)

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இந்த பொன்மொழியைச் சொன்னவர் ஹெராகிளிடஸ் (HERACLITUS)என்ற கிரேக்க அறிஞர். (படம் மேலே) இவர் கிரேக்கத்தில் சொன்னதை ஆங்கிலத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது (Change is the only immutable) மற்றும்மாற்றம் ஒன்றே நிலையானது  (Change is the only constant) என்று இரண்டு விதமாக மொழிபெயர்த்தனர். இன்னும் சிலர் There is nothing permanent, except Change” என்றும் எழுதினர்.

ஹெராகிளிடஸ், Ephesus  என்ற நகரில் (இது ஆசியா மைனர் என்ற இடத்தில், தற்போதைய துருக்கி நாட்டில் உள்ளது) ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திரமான சிந்தனையாளர். உலகளாவிய ஒரு சக்தியின் மேல் நம்பிக்கை உள்ளவர். தனிமை விரும்பி. புலம்பல் ஞானி (Weeping Philosopher) என்று அழைக்கப்பட்டவர். தனக்கென்று பின்தொடரும் மாணவர் பட்டாளம் ஏதும் இல்லாதவர். இவரது காலம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் (கி.மு 535 கி.மு 475) ஆகும்.

இந்த பொன்மொழி பிரபலமானது எப்படி?


பராக் ஒபாமா (BARACK OBAMA) அவர்கள் 2008 - இல் அமெரிக்க குடியரசுத் தலைவராக வந்தார். (இப்போது இரண்டாம் முறை) அப்போது தனது உரை ஒன்றில் மாற்றம் தேவை என்று உரையாற்றினார். அன்றுமுதல் இந்த பொன்மொழியும் ஊடகங்களில் கூடவே சேர்ந்து பிரபலமாயிற்று.

பாடல் வரிகள் மற்றும் வீடியோ:
       

ரஜினி வசனம்:
எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு

குழு:
உண்மை உருவாய் நீ
உலகின் குருவாய் நீ
எம்முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ
உன் மார்போடு காயங்கள்
ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள்
நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே
மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

ரஜினி வசனம்:
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது

பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது
சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்

நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை செயல்

குழு:
உடலா உயிரா பெயரா நீ ?
மூன்றும் இல்லை செயலே நீ
விதியை அமைப்பது இறைவன் கையில்
அந்த விதியை முடிப்பது உந்தன் கையில்

உன் வில்லோடு வில்லோடு
வீரம் கொடு
உன் சொல்லோடு சொல்லோடு
மாற்றம் கொடு
மாற்றம் ஒன்று தான் மாறாதது

ரஜினி வசனம்:
நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?

நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

பெற்றோர்கள் அமைவது விதி;
நண்பர்களை அமைப்பது மதி

சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்

நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்

குழு:
உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்…!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது..

பாடல்: வைரமுத்து  - படம்: கோச்சடையான்
இசை: A.R.ரகுமான்
பாடியவர்கள்: ரஜினிகாந்த், ஹரிசரண்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது” - என்ற என்ற இந்த பாடலை, கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் (YOUTUBE) இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)



கட்டுரை எழுத துணை நின்றவை (நன்றியுடன்):
கோச்சடையான் பாடல் வரிகள்

                      (ALL PICTURES - COURTESY: "GOOGLE IMAGES")

  

Sunday, 7 December 2014

தன் வினை தன்னைச் சுடும்


எனது மாமா ஒருவர் அட்வகேட் கடவுள் நம்பிக்கை மிகுந்தவர். சிவநெறி பக்தியாளர். சின்ன வயதில், நான் பள்ளி மாணவனாக இருந்தபோது அவரிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டு வாதம் செய்வேன். அவரும் இவன் சின்னப் பையன்தானே உனக்கு எதற்கு இந்தக் கேள்வி என்று நினைக்காது சலிக்காது பதில் சொல்லுவார். (வக்கீல் அல்லவா?)

என் கேள்விக்கென்ன பதில்?

ஒருமுறை அப்போது அவரிடம் நான் கேட்ட கேள்வி இதுதான். “ ஒருவன் குற்றவாளி என்று தெரிந்தும் , அவன் உங்களிடம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட பிறகும் அவனுக்காக கோர்ட்டில் ஒரு வக்கீல் வாதாடி அவனைக் காப்பாற்றுவது எந்த விதத்தில் நியாயம்? குற்றவாளியைக் காப்பாற்றுவது சரியா?” என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் “ஒருவன் குற்றவாளி என்று தெரிந்தாலும்,, தன்னிடம் வந்த ஒருவனைக் காபபாற்ற வேண்டியது வக்கீல் தொழில் தர்மம். அந்த வக்கீல் அவனுக்காக வாதாடவில்லை என்றால் அவன் இன்னொரு வக்கீலிடம் போவான். அவ்வளவுதான். மேலும் எந்த ஒரு குற்றவாளியும் கோர்ட்டில் தண்டனையிலிருந்து தப்பித்தாலும் கடவுள் அளிக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இது உறுதி.  என்றார். அப்போது சில உதாரணங்களையும் சில தத்துவ விளக்கங்களையும் சொன்னார். அந்த வயதில் எனக்கு அவை அவ்வளவாக எனக்கு புரியவில்லை. இப்போது கேள்வி மட்டுமே மிஞ்சியது அவை நினைவில் இல்லை..

கௌரவம்  - திரைப்படம்:


நடிகர்திலகம் சிவாஜி கணேசன் (இரட்டை வேடங்களில்) நடித்த் ஒரு படம் “கௌரவம்.அந்த படத்தில் சிவாஜி ஒரு பெரிய அட்வகேட். (பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற வேடம்.) எந்த வழக்காக இருந்தாலும் தனது திறமையினால் ஜெயித்துக் காட்டுபவர். ஆனாலும் அவருக்கு ஜஸ்டிஸ் பதவி கிடைக்கவில்லை. எனவே அந்த வெறுப்பில், கொலைக் குற்றத்தை செய்த மோகன்தாஸ் (இந்த வேடத்தில் சுந்தரராஜன்) வழக்கில் தானாகவே ஆஜர் ஆகி, தனது வாதத் திறமையால் அவரை நிரபராதி என்று காப்பாற்றி விடுவார். தான் செய்த கொலைக் குற்றத்திலிருந்து தன்னைக் காப்பாறியதற்காக நன்றி சொல்ல சிவாஜியின் வீடு தேடி, சுந்தரராஜன் வருவார். அப்போது சிவாஜி பேசும் ஒரு வசனம்.  

மை டியர் யங் மேன்! சட்ட்த்திலிருந்து உன்னை காப்பாத்திட்டேன். ஆனா நீ செய்த காரியமே உன்னை சித்ரவதை செய்து அணு அணுவா கொன்னுடும். அதிலே இருந்து நீ தப்பவே முடியாது .... ... நீ இனிமே தப்பு ஏதாவது பண்ணுனே இந்த ஆத்து வாச படிய மிதிக்கவே கூடாது

அதே மோகன்தாஸ் (சுந்தரராஜன்) தான் செய்யாத ஒரு கொலையில், தான் மாட்டிக் கொண்டதாக  தன்னைக் காப்பாற்றும்படி பாரிஸ்டர் ரஜினிகாந்த்திடம் (சிவாஜி) இன்னொரு தடவை வருவார். வக்கீல் தொழில் தர்மம் அடிப்படையில் அவனது வழக்கை எடுத்துக் கொள்வார். அவர் எவ்வளவோ தனது திறமையைக் காட்டி வாதாடிய போதும் , ஒரு சின்ன சட்ட நுணுக்கத்தில் (LAW POINT) அவர் தோற்று விடுகிறார். அவரால் மோகன்தாஸைக் காப்பாற்ற முடியவில்லை.. செய்த தண்டனையில் தப்பிய ஒருவன், செய்யாத குறறத்திற்கு தண்டனை அடைகிறான்.

(இங்கு பாரிஸ்டராக நடித்த சிவாஜியை எதிர்த்து இளம் வக்கீலாக சிவாஜிக்கு இன்னொரு வேடம். (சிவாஜியை சிவாஜிதானே வெல்ல வேண்டும்? வேறொருவர் வரக் கூடாதே)

இந்த கௌரவம் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கியவர் வியட்நாம் வீடு சுந்தரம். இந்தக் கதை அவரது உறவினர் ஒருவரது சொந்தக்கதை; அதை சுந்தரம் சினிமாவுக்காக மாற்றி எழுதினார் என்று எனக்குத் தெரிந்த புத்தகக் கடை நண்பர் ஒருவர் சொன்னார். இந்த புத்தகக் கடைக்கு அடிக்கடி செல்லும்போது அவரது கடையில் உட்கார்ந்து பேசுவது வழக்கம். அப்போது அவர் சொன்ன தகவல் இது.

தண்டனை உண்டு.

நாம் சில விடை தெரியாத சில கேள்விகளுக்கு, நம் நாட்டு அரசியல்வாதிகளையும் மற்றும் நமது கண் முன்னே அடாது செய்யும் சிலரையும் வைத்து எடை போட்டுக் கொண்டு இருக்கிறோம். அதேபோல நாம் நல்லவராக நினைக்கும் ஒருவரை இன்னொருவர் கெட்டவர் என்கிறார். அவருக்கு துன்பம் வந்தால், இந்த நல்லவருக்கு இப்படி ஒரு சோதனையா என்று நாம் சொல்கிறோம். இன்னொருவரோ  அவன் செய்த பாவத்திற்கு அனுபவிக்கிறான் என்று அவரைப் பற்றி சொல்வதையும் கேட்டு இருக்கலாம். உண்மையில் அவரவர்கள் நன்றாக இருக்கிறார்களா இல்லையா என்பதனை அவரவர் வாழ்க்கையை கூர்ந்து பார்த்தால்தான் தெரியும். ஊரே கண்டு பயப்படும் ஒருவன் தனக்கு யாரோ செய்வினை செய்துவிட்டதாக உடம்பு முழுக்க மாந்திரீக கயிறுகள் கட்டிக் கொண்டு, பயந்து பயந்து வாழ்வதையும் காணலாம்.

எனவே யாராக இருந்தாலும் , குற்றம் செய்தவருக்கு ஏதோ ஒரு வழியில் நிச்சயம் தண்டனை உண்டு. இதனைத்தான் “ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் “ என்றும், “அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்என்றும் நம் முன்னோர்கள் சொன்னார்கள். சிலப்பதிகாரம் “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்று சொல்லுகிறது. முக்கியமாக “தன் வினை தன்னைச் சுடும் “ என்பது போல அவரவர் மனசாட்சியே அவரவரைக் கொல்லும்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்    -  ( திருவள்ளுவர் )

என்பது திருக்குறள்.

வலைப்பதிவர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தனது வலைத் தளத்தில் (http://karanthaijayakumar.blogspot.com) எழுதிய ஒரு கட்டுரையில் அவர் கேட்ட கேள்விக்கு நான் எழுதிய கருத்துரை இது.

// நண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம், அடிக்கடித் தோன்றிக் கொண்டே இருக்கிறது. வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை.//

இந்த சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே உண்டு. விடை தெரியா கேள்விகளில் இதனையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.

இதே சந்தேகத்தை கவிஞர் கண்ணதாசன் அவர்களும் எழுப்பி அதற்கு சில விளக்கமும் அர்த்தமுள்ள இந்து மதம் - 10 ஆவது பாகத்தில், நூலின் இறுதி அத்தியாயத்தில் தந்துள்ளார். ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் மன பக்குவத்தைப் பொறுத்தது.





( ALL PICTURES THANKS TO GOOGLE)

Sunday, 2 March 2014

செல்லப் பிராணிகளுக்கு சொர்க்கம் நரகம் உண்டா?



மனிதனுக்கு மட்டுமே இறப்பிற்குப் பின்பு நியாயத் தீர்ப்பு உண்டு என்றும், அதன் பின்னர் அவனது ஆன்மா சொர்க்கம் அல்லது நரகம் சென்றடைகிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால் நாம் செல்லமாக வளர்த்த செல்லப் பிராணிகளின் ஆன்மாக்கள் என்ன ஆகின்றன? சரியான விடை இல்லை. ஆனாலும் அவை எல்லா பிறப்பும் எடுத்து இறுதியில் மனித பிறவியை அடைகின்றன என்ற ஒரு சமய நம்பிக்கை உண்டு

புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லா மனிதராய் பேயாய் ங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

என்று பாடுகிறார் மாணிக்கவாசகர் (திருவாசகம்)

மகாபாரதத்தில்:

மகாபாரதத்தின் இறுதி கட்டத்தில் ( மகாபிரஸ்தானிக பருவம்) ஒரு காட்சி. தருமர் துறவு பூண்டு தனது சகோதரர்களோடும் துரோபதையுடனும் இமயமலைச் சாரலை அடைகிறார் கைலாசமலை நோக்கி முதலில் தருமர் , பின்னர் மற்ற ஐவர் என்று வரிசையாக மேலே செல்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் அவர்களைத் தொடர்ந்து ஒரு நாயும் வருகிறது. வழியில் அந்த நாயும் தருமரும் தவிர மற்றவர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். இறுதியில் இந்திரன் தனது தேரில் வந்து தருமரை சொர்க்கத்திற்கு அழைக்கிறான். “ என்னோடு வந்தவர்கள் இல்லாது சொர்க்கத்திற்கு வர விருப்பமில்லை என்று தருமர் மறுக்கிறார். “ அவர்கள் ஐவரும் ஏற்கனவே சொர்க்கம் அடைந்து விட்டார்கள்“ என்று இந்திரன் சொல்ல, தருமர் தன்னோடு வந்த நாயுடன் தேரில் ஏற முற்படுகிறார். “நீர் மட்டும் வரலாம். நாய்க்கு இடம் இல்லைஎன்று இந்திரன் தடுக்கிறான். அப்படியானால் நானும் வரவில்லைஎன்று மறுக்கிறார் தருமர். இந்த பதிலைக் கேட்டதும் நாய் வடிவில் வந்த தருமதேவதை தனது சுயரூபத்தைக் காட்டி தருமரைப் பாராட்டுகிறாள். பின்னர் மூவரும் சொர்க்கலோகம் அடைந்தனர் என்பது மகாபாரதம் சொல்லும் கதை.   

வானவில் பாலம் ( RAINBOW BRIDGE)

செல்லப் பிராணிகளை இழந்து வருந்தும் நெஞ்சங்களுக்கு ஆறுதல் சொல்ல  www.petloss.com என்று ஒரு இணையதளம் உள்ளது. இங்கு தங்களது செல்லப் பிராணியை இழந்தவர்கள் ஆன் லைன் வழியே, இறந்துபோன  தங்களது செல்லப் பிராணியின் ஆன்மாவிற்காக பிரார்த்தனை செய்து கொள்ளலாம். அங்கு வானவில் பாலம் ( RAINBOW BRIDGE)என்ற தலைப்பில் ஒரு கதைப்பாடல். சொல்லப்பட்டுள்ளது. எழுதியவர் பெயர் தெரியவில்லை. கதைச் சுருக்கம் வருமாறு.

  
சொர்க்கத்திற்கு (HEAVEN) செல்லும் வழியில் ஒரு பச்சைப் புல்வெளி. அந்த புல்வெளிக்கும் சொர்க்கத்திற்கும் இடையில் ஒரு பாலம். அதன் பெயர்  வானவில் பாலம் ( RAINBOW BRIDGE). செல்லப் பிராணி இறந்ததும் புல்வெளிகளும் சிறு குன்றுகளும் நிரம்பிய அந்த இடத்தை அடைகின்றது. அந்த இடத்தில் இந்த செல்ல பிராணி போன்று நிறைய செல்லப் பிராணிகள் இறந்தவுடன் அங்கு வந்து சேர்ந்துள்ளன. அங்கு அவைகளுக்குத் தேவையான உணவும், தண்ணீரும், விளையாட இடமும், சூரிய ஒளியும் கிடைக்கின்றன. இந்த செல்லப் பிராணிகள் அங்கு சென்றதும் நல்ல உடல்நலம் பெற்று வலிமையுள்ளதாக மாறி மற்ற செல்லப் பிராணிகளோடு விளையாடுகின்றன ஆனாலும் அவைகளுக்கு தங்களை நேசித்த அந்த அன்பு எஜமானர்கள் இல்லையே என்ற வருத்தமும் ஏக்கமும் ரொம்பவே உண்டு. எனவே அவர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் வழியில் உள்ள இந்த பாலத்திற்கு, எப்போது வருவார்கள் என்று எதிர்பார்த்தபடியே உள்ளன. அவைகளின் எஜமானர்கள் பூமியில் இறந்ததும் இந்த வானவில் பாலம் வழியே சொர்க்கத்திற்கு செல்ல வருகிறார்கள். அவ்வாறு வரும்போது தமது எஜமானர்களைக் கண்டவுடன்  இந்த செல்லப் பிராணிகள் ஒரே ஓட்டமாக தாவிச் செல்கின்றன. எஜமானர் மீது சந்தோஷத்தால் தாவி குதிக்கின்றன. நாவால் நக்குகின்றன. அதன்பின் அவைகளும் தமது எஜமானர்களோடு வானவில் பாலம் வழியாக சொர்க்கத்திற்கு செல்லுகின்றன.

காணொளி காட்சிக்கு கீழே உள்ள இணைய முகவரியை ‘க்ளிக்செய்யுங்கள்.


செல்லப்பிராணிகள் கல்லறை (  PET CEMETERY)

மேலை நாடுகளில் செல்லப் பிராணிகள் இறந்ததும் அவற்றின் எஜமானர்கள் , மனிதர்களை அடக்கம் செய்வது போலவே பிரார்த்தனையுடன் அவற்றை அடக்கம் செய்கிறார்கள். நியூமெக்சிகோவில் , வில்லியம்ஸ்பர்க் என்ற இடத்தில் செல்லப் பிராணிகளுக்கென்று கல்லறைத் தோட்டம் ஒன்று உள்ளது. அங்கே அவற்றைப் புதைக்க கட்டணம் வாங்குகிறார்கள். வாரம் ஒருமுறை செல்லப் பிராணிகள் அடக்கம் செய்யப்படுகின்றன.. புதைக்கும் வரை (பத்து நாட்களுக்கு மிகாமல்) குளிர்பெட்டியில் வைத்திருக்கும் வசதியும் உண்டு. அங்கு The Sierra County Humane Society “ என்ற சமூக தொண்டு நிறுவனம் இதனை ஏற்றுச் செய்து வருகிறது.. இவை போன்று பல இடங்களில் மேலை நாடுகளில், செல்லப் பிராணிகளுக்கென்று தனி கல்லறைத் தோட்டங்கள் உள்ளன. நமது நாட்டில் கிராமப்புற மக்களும் வசதியானவர்களும் தங்கள வளர்ப்பு பிராணிகள் இறந்ததும் அவற்றை வீட்டு தோட்டங்களில் புதைக்கின்றனர்.

டாக்டர் ஆல்பர்ட் ஸ்வைட்சர் விலங்குகளுக்கென்று ஒரு பிரார்த்தனைப் பாடல் எழுதியுள்ளார்.

A Prayer For The Animals

Hear our humble prayer, oh, God,
Especially for animals who are suffering;
For any that are haunted or lost or deserted
Or frightened or hungry;
For all that must be put to death.
We entreat for them all Thy mercy and pity,
And for those who deal with them
We ask a heart of compassion
And gentle hands and kindly words.
Make us, ourselves
To be true friends to animals
And so to share the blessings
Of the merciful.

Dr Albert Schweitzer


கட்டுரை எழுத உதவியவை

மகாபாரதம் - (மகாபிரஸ்தானிக பருவம்)

(PICTURES : THANKS TO  “ GOOGLE ”)


Saturday, 1 March 2014

ஒரு பிதற்றல் - இன்று எனக்கு வயது 60 தொடக்கம்!



எல்லாமே நேற்று நடந்தது போலவே இருக்கிறது! பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலைக்கு சேர்ந்தது, திருமணம் செய்தது, பிள்ளைகளைப் பெற்றது, அவர்களை வளர்த்தது,ஆளாக்கியது -  எல்லாமே இன்றுவரை ஒரு கனவாகவே தோன்றுகிறது! இத்தனை வருடங்கள் ஓடியது தெரியவில்லை. இன்று எனக்கு வயது 60 தொடக்கம்! எனது  பிறந்த தேதி 01.மார்ச்.1955

பிறப்பதற்கு முன் என்னவாக இருந்தோம்? இறந்து போனால் நமக்கு என்ன நடக்கும்? இப்போது நம்முடன் இருப்பவர்கள் நாளை நமது மரணத்திற்குப் பின் நாம் இருக்கும் இடம் தேடி வருவார்களா? நானும் முன்னோர் இடத்திற்குச் செல்வேனா? விடுபடாத பாசவலை! விடை தெரியாத கேள்விகள் ஓராயிரம்.

நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்றார்கள். நல்லவன் வாழ்வான், கெட்டவன் அழிவான் என்றார்கள். ஆனால் நல்லவனும் வாழ்கின்றான். கெட்டவனும் வாழ்கின்றான். நல்லது இது, கெட்டது இது என்பதும், பாவம் என்பதும் புண்ணியம் என்பதும் மனிதர்களால் மனிதர்களுக்காக செய்யப்பட்ட கட்டுமானங்கள் போலவே உள்ளன. வாழ்க்கையில் நடக்கின்ற விஷயங்கள் யாவும் வந்து போகும் காட்சிகளாகவே தோன்றுகின்றன.

இறைவன் இருக்கின்றானா? சில நிகழ்வுகள் யோசிக்க வைக்கின்றன. ஆனாலும் நமக்கும் மேலே ஏதோ ஒன்று நம்மை வழி நடத்திச் செல்வதாகவே உணர்கின்றேன். எனது நிலைமை ஒன்றும் மோசமாகவும் இல்லை. அடுத்தவர்கள் துணை தேவைப்படாத உடல் நலத்துடன், போதும் என்ற மனத்துடனேயே இருக்கிறது. எனக்கென்று என்ன கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கின்றது. இறைவனுக்கு நன்றி! இனி வரக் கூடிய காலமும் இப்படியே ஓடி விட வேண்டும்  என்றே  இறைவனிடம் வேண்டுகின்றேன்!

நேற்றுதான் பிறந்தேன் வளர்ந்தேன்
படித்தேன் பணியமர்ந்தேன்

நேற்றுதான் திருமணம் செய்தேன்
பிள்ளைகள் பெற்றேன்
படிக்க வைத்தேன் ஆளாக்கினேன்

எல்லாமே நேற்றைய நிகழ்ச்சிகள்
ஆகி விட்டன! கனவே வாழ்க்கை!

நல்லது செய்தால்
நல்லது நடக்கும் எனறே
நானும் நம்பினேன

வந்த துன்பங்கள் வதைத்தபோது
எனக்கு மட்டுமே ஏனென்று
எண்ணி எண்ணி மாய்ந்தேன்

வெளியில் வந்தே பார்த்தேன்
எல்லோர் மனதிலும் இதேதான்

அவரவர் மனதினில் இங்கு
தான்தான் நல்லவன் என்றால்
கெட்டவர் எவருமே இல்லை!


வாழ்க்கை என்றால்? வலைச்சரத்தில்
நான் எழுதிய வரிகளை கீழே நினைவு கூர்கின்றேன்!    

நான் கல்லூரி படித்த நாட்களில் கிராமத்திற்கு சென்ற போது ரொம்பவும் வயதான பெரியவர்கள் பலரைப் பார்த்து இத்தனை நாள் இருந்ததில் நீங்கள் கண்டது என்ன?”  கேட்பேன். அவர்கள் சிரிப்பார்கள். சிரித்துக் கொண்டே என்னத்தைச் சொல்றது. ஒன்னும் இல்லை என்பார்கள்.

இப்போது அதே கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். வாழ்க்கை என்றால் என்ன?” என்று நினைத்துப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் தெரிகிறது. இத்தனை நாட்கள் வாழ்ந்த நாட்களில் நாம் அடைந்த துயரம், துரோகம், அவமானம், ஏமாற்றம் ஆகியவை தானாகவே முன்னே வந்து நிழலாடுகின்றன. இனிமையான நினைவுகளை நாம்தான் அசை போட்டு கொண்டு வர வேண்டியுள்ளது. ஒரு சங்க இலக்கியப் புலவர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.

இன்னாது அம்ம,
இவ் உலகம்;
இனிய காண்க,
இதன் இயல்பு உணர்ந்தோரே
                     - பக்குடுக்கை நன்கணியார்  ( புறநானூறு 194 )


                                                 ( Picture above thanks to http://kaninitamilan.in )




(PICTURES : THANKS TO  “ GOOGLE ”)

Thursday, 3 October 2013

ஆசைக்கோர் அளவில்லை




எனது ஆரம்பப் பள்ளி வாழ்க்கை (1 5) கிறிஸ்தவ மெஷினரி நடத்திய ஆர்.சி நடுநிலைப் பள்ளியில். அப்புறம் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை (6 11) இந்து கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில். அங்கு வகுப்புகள் துவங்கும் முன்னர் எல்லோரும் ஓரிடத்தில் கூடி   காலை இறைவணக்கமாக சமஸ்கிருத துதியோடு “ அங்கிங் கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய் “ என்ற தாயுமானவர் முதல் பாடலையும் பாடுவோம். தாயுமானவர் பாடலை உரை இல்லாது புரிந்து கொள்வது கடினம். பின்னர் PUC படிப்பு திருச்சி நேஷனல் கல்லூரியில்.  பின்னர் பிஏ (தமிழ்)படிப்பை திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் முடித்துவிட்டு  மீண்டும் நேஷனல் கல்லூரியில் எம் ஏ (தமிழ் இலக்கியம்) சேர்ந்தேன்.அப்போது  “சைவசித்தாந்தம் எங்களுக்கு  ஒரு பாடமாக இருந்தது.அப்போது . தாயுமானவரின் பாடல்களைப் பற்றி ஓரளவு படித்து தெரிந்து கொண்டேன்.    





மனித வாழ்க்கை விசித்திரமானது. “ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். ஆனால் உற்று நோக்கினால் இந்த உலகில் நிகழந்த கண்டுபிடிப்புகள் மற்றும் உலகம் இயங்குவது எல்லாம் ஆசையினால்தான். ஆனால் மனிதனின் ஆசைக்கு அளவு உண்டா? நமது தாயுமானவர் ஆசைக்கோர் அளவில்லை “ என்கிறார். பட்டினத்தாரும் தாயுமானவரும் துறவிகள். அவர்கள் பாடல்களில் வாழ்க்கை நிலையாமை போன்ற கருத்துக்களை மட்டுமே அதிகம் காணலாம் நாமோ குடும்பஸ்தர்கள். நமக்குத் தேவையான கருத்துக்களை மட்டும்  இவர்கள் பாடல்களில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  
 


மண்ணாசை:

ஒரு மன்னன். இந்த மண்ணுலகமே அவன் ஆட்சியின் கீழ்தான் இருக்கிறது. இருந்தாலும் கடல் மீதும் தன் அதிகாரத்தைப் பரப்ப வேண்டும் என்ற பேராசை வருகிறது. தனது எல்லையை விரிவுபடுத்த அண்டை நாடுகள் மீது போர் தொடுக்கிறான். அவனது ஆசைக்கு அளவே இல்லை. இந்த உலகமே அவன் கீழ் இருந்தாலும் அவன் இறுதியில் ஆடி அடங்குவது ஆறடி மண்ணுக்குள் தான்.

நாம் வாழும்பொழுது உலகம் முழுவதையும் வளைத்து கட்டிக் கொள்ள விரும்புகிறோம்.ஆனால் இறந்த பிறகு எவ்வளவு சிறிய இடம் நமக்குப் போதுமானது என்று தெரிகின்றது.   -         மாசிடோனியா மன்னர் பிலிப்


பொன்னாசை:

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. ஆனாலும் மக்களுக்கு தங்கத்தின் மீது உள்ள மோகம் குறையவில்லை. வடக்கு திசையில் இருப்பவன் குபேரன். செல்வத்தின் அதிபதி. இதனால்தான் நிறைய கடைக்காரர்கள் தங்கள் கல்லாப் பெட்டி உள்ள இடத்தை வடக்கு நோக்கியே வைத்து இருப்பார்கள். அந்த குபேரன் போன்று சிலரிடம் பொன் இருக்கும். ஆனாலும் அவர்களிடம் ரசவாதம் செய்தால் பொன் கிடைக்கும் என்றால் அதற்கும் காடு மேடு என்று பொன்னுக்கு அலைவார்கள். மிடாஸ் (KING MIDAS) என்ற மன்னன் தான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று தேவதையிடம் வரம் வாங்குவான். கடைசியில் அவன் தனது ஒரே மகளை அன்புடன் தொடும்போது அவளும் தங்கப் பதுமையாகி விடுகிறாள். பேராசை பெரு நஷ்டம்.

இளமை மீண்டும் வருமா?


மனிதனின் வாழ்வில் இளமை முக்கியமானது. சந்தோஷமானது. அதே சமயம் இளமை நில்லாதது. சிலர் போன இளமை மீண்டும் வரவேண்டும் என் ஆசையினால் காயகல்பம் என்னும் மருந்தினைத் தேடி அலைந்து வாங்கிச் சாப்பிட்டு நெஞ்செரிச்சல் வந்து துன்பம் அடைகிறார்கள். காயகல்பம் என்பது சில மூலிகைகளைக் கொண்டு செய்யும் மருந்து. உண்மையில் இவர்கள் அந்த மருந்தை வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இளமை மீண்டும் கிடைக்காது. சாப்பிடுவது  உறங்குவது என்றே முடியும். 

இதோ ஒரு திரைப்படப் பாடலின் வரிகள் இந்த பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ கீழே உள்ள முகவரியில் “க்ளிக்செய்யுங்கள். https://www.youtube.com/watch?v=f1RMPVcUzIs 


ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

பருவமென்னும் காத்திலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்
நாளைய உலகின் பாதையை இங்கே யார் காணுவார்

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா மனம் பெறுமா முதுமையே சுகமா
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ
சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

                      - பாடல்: கண்ணதாசன் (படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்)
 


தாயுமானவர் பாடல்:

இப்படி மண்ணுலகில் மனிதர்கள் ஆசையினால் படும் துன்பங்களைக் கண்ட தாயுமான சுவாமிகள் “ தெய்வமே! எனக்கு உள்ளதே போதும். நான் நான் “ என்னும் அகங்காரத்தினால் பாசக் கடலுக்குள் விழாமல் காப்பாற்றி, எனக்கு பரிசுத்த நிலையை அருள்வாய். “ என்று வேண்டுகிறார்.

ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
       ஆளினுங் கடல்மீதிலே
    ஆனைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
       அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
        நெடுநா ளிருந்தபேரும் 
     நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
        நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
       உறங்குவது மாகமுடியும்
   உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
      ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற
       பரிசுத்த நிலையை அருள்வாய்
    பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
       பரிபூர ணானந்தமே. 
                     - தாயுமானவர் ( பரிபூரணானந்தம். பாடல் எண் 10) 



பாடலுக்கு எனது  உரை:

ஆசைக்கு ஓர் அளவே கிடையாது. ஒரு மன்னன் இந்த உலகம் முழுவதையும் கட்டி ஆண்டால் கூட, அவன் மனம் கடல் மீதும் தனது அதிகாரத்தை செலுத்தவே விரும்பும். குபேரனுக்கு நிகராக பொன் வைத்து இருப்பவர்கள் கூட இன்னும் பொன் வேண்டும் என்னும் ஆசையில் ரசவாதம் செய்ய அலைவார்கள். 

இவ்வுலகில் வய்தானவர்கள் மீண்டும் பழைய  இளமையுடன் வாழ வேண்டும் என்ற ஆசையினால் காயகல்பம் என்னும் மருந்தினைத் தேடி அலைந்து வாங்கிச் சாப்பிட்டு நெஞ்சு புண்ணாகி வருந்துவார்கள். எல்லாவற்றையும் யோசிக்கும் போது அவர்கள் வாழ்நாள் முழுவதும் நெஞ்செரிச்சல் தீர சாப்பிடுவது உறங்குவது என்றே முடியும்.

பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்ற பரிபூரண ஆனந்தத் தெய்வமே! எனக்கு உள்ளதே போதும். நான் நான் “ என்னும் அகங்காரத்தினால் ஒன்றை விட்டால் இன்னொரு ஆசை என்ற பாசக் கடலுக்குள் விழாமல் இருக்கும் பரிசுத்த நிலையை அருள்வாய். “

முடிவுரை:

சில தினங்களுக்கு முன்னர் நான் தாயுமானவர் பாடல் ஒன்றுக்கு பதிவு ஒன்றினை எழுதி இருந்தேன். எனது பதிவினைப் படித்த முன்னாள் வங்கி வேளாண் அதிகாரியும் “நினைத்துப் பார்க்கிறேன் என்ற பெயரில் வலைப்பதிவு http://puthur-vns.blogspot.com  எழுதி வருபவருமான  திரு வே நடனசபாபதி அவர்கள் மேலே சொன்ன தாயுமானவர் பாடலை நினைவு படுத்தி இருந்தார். அதன் எதிரொலிதான் இந்த பதிவு. அன்னாருக்கு எனது நன்றி!



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )