Sunday, 28 July 2013

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைஎனது நெருங்கிய உறவினர்கள் பலரும் இருப்பது தஞ்சை மாவட்டத்தில். பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் உடம்புக்கு ஏதாவது என்றால் அருகிலுள்ள மருத்துவமனையில் பார்ப்பார்கள். உடல்நிலை ரொம்பவும் மோசம் என்றால் உடனே நோயாளியை எடுத்துச் செல்லும் இடம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை( THANJAVUR MEDICAL COLLEGE HOSPITAL )தான். இவர்களுக்கு மட்டுமல்ல தஞ்சை மாவட்டம் அதைச் சுற்றியுள்ள மற்ற மாவட்டக்காரர்களுக்கும் மிகவும் நம்பிக்கையான மருத்துவமனை இதுவே ஆகும். விபத்து அல்லது விஷம் குடித்தல், வெட்டு குத்து போன்ற நிலைகளில் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் நேரே இங்குதான். ஒரு அரசு மருத்துவமனை மக்கள் மத்தியில் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பது நல்ல விஷயம்தான். எல்லோரும் இந்த மருத்துவமனையை “மெடிக்கல்” (MEDICAL) என்றுதான் அழைக்கிறார்கள்.

முன்பு ஒருமுறை இந்த மெடிக்கலில் ஒருவரை பார்த்துவிட்டு வெளியே வந்தபோது பஸ் ஸ்டாப்பில் ஒருவர் சொன்னது “ சார்! நான் மட்டும் இங்கு மெடிக்கலுக்கு வரவில்லை என்றால் செத்தே போயிருப்பேன் சார்! நன்றாக பார்க்கிறார்கள். மருந்து எல்லாமே இலவசம். வெளியில் பார்த்துக் கொள்ள எனக்கு வசதி இல்லை.“ என்றார். அவர் நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்காரர். அந்த மருத்துவமனைக்கு வரும் பலரும் இதுமாதிரி  சொல்லக் கேட்கலாம்.  வசதி படைத்தவர்களும் இங்கு வருகிறார்கள். உள்நோயாளிகள் வெளி நோயாளிகள் என்று எப்போதும் மக்கள் கூட்டம்.

இவ்வளவு மருத்துவ வசதியை இலவசமாக செய்து தரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை வருகின்ற மக்கள் சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை என்பது வருத்தமான விஷயம். இதனைக் கண்கூடாகக் காணலாம். அங்கு வரும் மக்களிடம் சுத்தம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மருத்துவமனை வரலாறு:

1958- இல் அன்றைய ஜனாதிபதி டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி (THANJAVUR MEDICAL COLLEGE) க்கு அடிக்கல் நாட்டினார். அப்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ A Y S பரிசுத்தம் நாடார் அவர்கள் கல்லூரிக்கான வைப்புத் தொகையையும். கல்லூரிக்கான 89 ஏக்கர் இடத்தையும் தஞ்சை ரோட்டரி சங்கம் (ROTARY CLUB OF THANJAVUR) சார்பாக தந்தார். அப்போது சென்னை மாகாண முதன் மந்திரியாக இருந்த தலைவர் கு காமராஜ் அவர்கள் இந்த தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு ஒப்புதல் தந்தார். 1959 இல் தஞ்சை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் ,அங்கு பயின்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் (பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள) ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை ( Govt. Raja Mirasdar Hospital ) இல் பயிற்சி டாக்டர்களாக பயிற்சி பெற்றனர்.

பின்னர் மக்கள் தொகை, பயிற்சி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக 1964 இல் (இப்போதும் சென்னை மாகாண முதன்மந்திரியாக இருந்தவர் தலைவர் கு காமராஜ் அவர்கள்)  தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (THANJAVUR MEDICAL COLLEGE HOSPITAL ), பிரிக்கப்படாத தஞ்சாவூர், நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை   மாவட்ட மக்களுக்காக தொடங்கப் பட்டது.  அன்றிலிருந்து தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் இந்த மருத்துவ மனையைப் பயன்படுத்தி வருகின்றனர். மக்களால் மறக்கப்பட்ட காங்கிரஸ் அரசின் சாதனைகளில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் ஒன்று.

புகைப் படங்கள்:

இரண்டு வாரங்களுக்கு முன், எனது உறவினர் பையன் ஒருவன் பள்ளி இடைவேளையின்போது பெஞ்சுகளின் மீது ஏறி விளையாடியபோது கீழே விழுந்து விட்டான். அவனுக்கு அடி வயிற்றில் நல்ல அடி. 108 ஆம்புலன்சு மூலம் இங்கே கொண்டு வந்தார்கள். அவனை இரண்டு முறை சென்று பார்த்தேன். மறுபடியும் சென்ற வாரம் அங்கு சென்றபோது மெடிக்கலில் சில கட்டிடங்களை படம் எடுத்தேன்.

படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரம்பகால கட்டிடம்


படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  புதிய கட்டிடம்படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  புதிய கட்டிடம் ( புற நோயாளிகள் பிரிவு )

Saturday, 27 July 2013

துள்ளித் துள்ளி ஓடும் வலைத்தளம்அண்மையில் வலைச்சரம் “ ஆசிரியை பொறுப்பேற்ற சகோதரி அம்பாள் அடியாள் அவர்கள், எனது வலைத்தளத்தினை அறிமுகம் செய்ய விரும்பி இருக்கிறார். ஆனால் எனது வலைத்தளம் படிக்க முடியாமல் துள்ளுவதாகவும் இதுபற்றி எனக்கு தெரிவிக்கும்படியும் சென்னை பித்தன் அவர்களிடம் சொல்லி இருக்கிறார்கள்.அவரும் இதனைத் தெரிவித்து விட்டு அதற்கான தீர்வு இங்கே...http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html   நானும் என் தளத்தை அவ்வாறே சரி செய்தேன் “ என்று சொல்லி இருந்தார். சென்னை பித்தன், சகோதரி அம்பாள் அடியாள் இருவருக்கும் நன்றி!

சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களும் முன்பு ஒருமுறை எனது வலைத்தளம் துள்ளுவதாக சொல்லி இருந்தார். நானும் ப்ளாக்கர் நண்பன் வலைத் தளத்தில் சொன்னது போல் செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் html மாற்றம் செய்ய வேண்டி வரும் என்பதால் முயற்சி செய்யவில்லை. ஏனெனில் ஆரம்ப காலத்தில் நான் ஒரு வலைப்பதிவை தொடங்கி தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நிறுவ html இல் மாற்றம் செய்யப் போய் அந்த தளமே காணாமல் போய் விட்டது.


blogspot.in இலிருந்து blogspot.com இற்கு மாறிய கதை:

நாம் கூகிளில் ஜிமெயில் (GMAIL) கணக்கு தொடங்கி, ப்ளாக்கரில் (BLOGGER) நமது வலைப் பூவை (BLOGSPOT) நமது விருப்பப் பெயரில் தொடங்குகிறோம். இந்தியாவில் இருப்பவர்கள், இந்திய முகவரியைக் கொடுக்கிறோம். எனவே நமது வலைப்பூவானது blogspot.in என்றுதான் முடியும்.  ஆனால் இவ்வாறு முடியும் வலைப்பதிவுகளில்  த்மிழ்மணத்திற்கு பதிவுகளை திரட்டுவதில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுகின்றன. 

எனவே நமது பதிவுகளை, blogspot.in இலிருந்து blogspot.com இற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்: அதற்கு திரு. சசிகுமார் அவர்களின்வந்தேமாதரம்வலையின்பிளாக்கர் தளங்கள் புதிய முகவரிக்கு (.in .au) Redirect ஆவதை தடுக்க ஒரு சூப்பர் வழிwww.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html  என்ற கட்டுரையில் இந்த பிரச்சினைக்கு எளிமையான முறையில் தீர்வு சொல்லப்பட்டு இருந்தது.  இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள வழிமுறையில், நான் எனது பதிவிற்கு இப்படித்தான் செய்தேன். இதில் நமது வலைத் தளத்தில் ஒரு  GADGET –DASHBOARD -  இல் இணைப்பதோடு வேலை முடிந்து விடுகிறது. தமிழ்மணத்தில் மட்டும்தான் இப்படியா என்று தெரியவில்லை.

HTML இல்  மாற்றம் செய்யலாமா?

நாம் எல்லோரும் இப்போது GOOGLE தரும் இலவச சேவையில் ப்ளாக்கர் ( BLOGGER )  என்று எழுதி வருகிறோம். GOOGLE இல் அன்று தொடங்கி இன்றுவரை நிறைய மாற்றங்கள். நாளைக்கே அவர்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு காலி செய்யச் சொன்னால் நாம் வந்துவிட வேண்டியதுதான். அடிக்கடி மாற்றம் நிகழும், இந்த மாதிரி சூழ்நிலையில் BLOGGER VERSION  இல் HTML  இல் நமது வசதிக்குத் தக்கபடி மாற்ற்ம் செய்து கொண்டே இருந்தால் என்ன ஆவது? இதுபற்றி தொழிநுட்பம் தெரிந்த பதிவர்கள் உடனுக்குடன் மாற்றம் செய்து விடுவார்கள். மற்றவர்கள் கதை என்ன ஆவது? எனக்கு தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நிறுவ html இல் மாற்றம் செய்யப் போய் அந்த தளமே காணாமல் போன கதை மீண்டும் வந்துவிடக் கூடாது.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட ப்ளாக்கர் நண்பன் “ தளத்திலும் ஒரு தீர்வு சொல்லி இருக்கிறார்கள்:

// ஒருவேளை பதிவர் இதை செய்யவில்லை என்றால் வாசகர்கள் நாம் எப்படி படிக்க வேண்டும்?மிக எளிது! வலைப்பூ முகவரியில் இறுதியாக .com/ncr என்று கொடுத்தால் அந்த வலைப்பூ .com முகவரியிலே இருக்கும், Redirect ஆகாது. உதாரணத்திற்கு http://malaithural.blogspot.com/ncr
NCR என்பதன் அர்த்தம் No Country Redirect ஆகும். இதை தான் மேலே உள்ள ஜாவா நிரலில் செய்திருக்கிறார்கள். //


எனவே நண்பர்களே வலைத்தளம் துள்ளிக் குதிக்கும் விஷயத்தில்  HTML இல்  மாற்றம் செய்யாமல் ஏதேனும் மாற்றுவழி இருந்தால் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது வலைத்தளத்தை பார்வையிடும்போது ஏதேனும் பிரச்சினை இருப்பவர்களும் எனக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.


துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன?
வெள்ளிக்கொலுசு போகும் திசையில்
பாவிநெஞ்சு போவதென்ன? (துள்ளித் துள்ளி)


(படம்: வெளிச்சம் பாடியவர் KJ ஜேசுதாஸ் இசை: மனோஜ்க்யான்)Xxxxxxxxxxx
பின் இணைப்பு (நாள்; 01.08.15)

ஒரு தகவலுக்காக மட்டும் இதனை பதிவு செய்துள்ளேன்.

அன்புள்ள ப்ளாக்கர் நண்பன் அப்துல்பாசித் அவர்களுக்கு வணக்கம்! எனதுதுள்ளித் துள்ளி ஓடும் வலைத்தளம் (http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_9497.html) என்ற பதிவிற்கு, தாங்களே முன்வந்து ஆலோசனை தந்து இருந்தீர்கள். உண்மையில் பயம் காரணமாக அதன்படி உடனே அதனை பின்பற்றவில்லை. இப்போது நீங்கள் சொன்னபடி எனது வலைப்பதிவில் மாற்றம் செய்து விட்டேன். தங்களுக்கு நன்றி! உங்களுடைய பதிவினை மேற்கோள் சொல்லி எனக்கு வழிகாட்டிய சென்னை பித்தன் அவர்களுக்கும், எனக்கு சொல்லுமாறு சொல்லிய ச்கோதரி அம்பாள் அடியாள் அவர்களுக்கும், மற்றும் இது விஷயமாக சுட்டிக் காட்டிய சகோதரிகள் கவிஞர் வேதா. இலங்காதிலகம் மற்றும் மனோ சாமிநாதன் அவர்களுக்கும் நன்றி!

அன்புடன்தி.தமிழ் இளங்கோ
வலைப் பதிவு: எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL http://tthamizhelango.blogspot.com
நாள்: 06.08.2013

Thursday, 25 July 2013

எனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு )சகோதரி தென்றல் சசிகலாஅவர்கள்
( http://veesuthendral.blogspot.in ) முன்பு  ஒருமுறை 
 எனது ஊர் தொடர் பதிவு “ என்ற தலைப்பில் எழுத அழைத்தார்கள். உடனே ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களது சொந்த ஊருக்கு (திருமழபாடி) கேமராவோடு சென்று வந்து ஒரு பதிவு எழுதினேன்.. மின்னல் வரிகள் பால கணேஷ், மதுரைத் தமிழன் ( அவர்கள் உண்மைகள்) வரிசையில் சகோதரி தென்றல் சசிகலா அவர்கள மறுபடியும் தொடர்பதிவு கணினி அனுபவம் குறித்து எழுத அழைத்துள்ளார். நான் ஒருநாள் அனுபவம் என்று எழுத இயலாது. ஏனெனில் எனது பணிக்காலத்தில், கிட்டதட்ட பத்து ஆண்டுகள் வங்கிப் பணியின் நிமித்தம் கம்ப்யூட்டரிலேயே காலம் ஓடியது. எனக்கு அவர்களைப் போல நகைச்சுவையாக எழுத வராது. இருந்தாலும் சுருக்கமாக எழுதுகிறேன்! தென்றலுக்கு நன்றி! (படத்தில் இருப்பது எங்கள் வீட்டு கம்ப்யூட்டர்)

வங்கிக்குள் நுழைந்த கம்ப்யூட்டர்:

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே “ –  என்ற நன்னூல் இலக்கண வரிகள் எந்த காலத்திலும் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.. அந்த வகையில் வங்கித் துறையிலும் பல மாற்றங்கள் நுழைந்தன. அவற்றுள் ஒன்று கணினி மயமாக்குதல். இருக்கின்ற பணியாளர்களை வெளியே அனுப்பாமல், அவர்களுக்கு  வங்கி சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் பயிற்சி கொடுத்தனர். மேலும் அதற்கென்று தனியே ஒரு படி ( Computer allowance) தந்தார்கள்.
 
“ஒருவிரல் கிருஷ்ணா ராவ்

எங்கள் வங்கியில், ஆரம்பத்தில் தினசரி வேலைகளை செய்வதற்கு BACK OFFICE முறையை நகர்ப்புற கிளைகளில் தொடங்கினார்கள். சீனியாரிட்டி அடிப்படையில் எங்கள் வங்கிக் கிளையில் எனக்கும் கிடைத்தது. ஆனால் யாராவது விடுப்பு எடுத்தால் மட்டுமே நான் கம்ப்யூட்டரில் உட்கார முடியும். எல்லோருக்கும் போலவே எனக்கும் வங்கியிலேயே கம்ப்யூட்டர் பயிற்சி தந்தார்கள். எனக்கு ஆங்கில டைப்ரைட்டிங் பயிற்சி உண்டு. ஆனால் வருடக் கணக்காக அந்த பக்கமே போகாததால் ஒருவிரலில் கம்ப்யூட்டரில் தட்டினேன். அப்போது ஒருவிரலில் தட்டச்சு செய்பவர்களை “ஒருவிரல் கிருஷ்ணா ராவ்என்று கிண்டல் செய்வார்கள். ( ஒரு விரல் என்ற படத்தில் நடித்ததால் கிருஷ்ணா என்பவருக்கு அந்த பெயர்) எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கம்ப்யூட்டர் பணிசெய்தேன். உடன் மற்றவர்களும் உதவி செய்தனர். ஒருவிரல் மூலமாகவே விரைவுப் பணி (SPEED WORK) பழக்கத்தில் வந்தது. அன்றிலிருந்து கம்ப்யூட்டர் பணி சம்பந்தமான குறிப்புகளை ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளத் தொடங்கினேன். பின்னாளில் அந்த குறிப்புகள் நன்கு பயன்பட்டன. .

முழுதும் கணினிமயமான கிளை ( FULLY COMPUTERISED BRANCH )

சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வந்தது. முழுதும் கணினிமயமாக்கப் பட்ட திருச்சியில் உள்ள மற்றொரு கிளைக்கு SENIOR ASSISTANT ஆக மாறுதல் ஆனேன். வாடிக்கையாளர்கள் பணி செய்ய எனக்கென்று ஒரு கம்ப்யூட்டர் (வண்ணத் திரை) அங்கு ஒதுக்கப்பட்டது. BANK MASTER என்ற PROGRAMME. அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின்  மற்ற வங்கிக் காசோலைகளை CLEARING செய்யும் பணிக்கென்று WORDSTAR  - ( DOS ) PROGRAMME  செய்யப்பட்ட கறுப்பு வெள்ளை கம்ப்யூட்டரிலும் பணி. நான் அதில் LOGIN செய்வது வந்த காசோலைகள் விவரங்களை அதில் ஏற்றி ப்ளாப்பியில் சேமிப்பது , பிரிண்ட் எடுப்பது மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டேன். அங்கு கம்ப்யூட்டர் அதிகாரியாக இருந்த சங்கர் என்பவர் நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். வங்கி பயிலகத்திலும் பயிற்சி கொடுத்தார்கள். கம்ப்யூட்டரில் வங்கி வேலை என்பது எனக்கு மிகவும் ஆர்வமாகவே இருந்தது. சோர்வு தட்டவில்லை.

கோர் பேங்கிங் ( CORE BANKING ):

அந்த கிளையிலிருந்து பதவி உயர்வு பெற்று  SPECIAL ASST  ஆக இன்னொரு கிளைக்கு சென்றேன். கொஞ்சநாள்தான். வங்கியில் இன்னொரு புதிய மாற்றம். கோர் பேங்கிங் முறையைக் கொண்டு வந்தார்கள். இது முழுக்க முழுக்க இந்தியாவில் உள்ள மற்ற கிளைகளோடும் உடனுக்குடன் பணபரிமாற்றம் செய்யும் முறை. அதிக கவனமாக இருக்க வேண்டும். பழைய சிஸ்டத்திலிருந்து இன்னொரு சிஸ்டத்திற்கு மாறும்போது ஏகப்பட்ட வேலைகள். இரண்டு சிஸ்டங்களையும் வெவ்வேறு கம்ப்யூட்டரில் மாறி மாறி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். ஒரு வழியாக கோர் பேங்கிங் முழு பயன்பாட்டிற்கு வந்தது. அப்புறம் ஒரு பெரிய கிளைக்கு மாறுதல். முதலில் காசாளர் அப்புறம் ATM சம்பந்தப்பட்ட ( பணம் லோடு செய்வது உட்பட) கம்ப்யூட்டர் பணிகள். அங்கிருந்த போதுதான் வீட்டிற்கென்று ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். முழுக்க முழுக்க எனது பையன் கம்ப்யூட்டர் கேம் விளையாடினான். நான் தமிழ்மணம் போன்ற திரட்டிகளை படிப்பதோடு சரி.

விருப்ப ஓய்வு ( VRS )

முன்பு ஒருமுறை  எலலா வ்ங்கிகளிலும் விருப்ப ஓய்வு முறை கொண்டு வந்தார்கள்.. நிறையபேர் வெளியே போனார்கள். அதற்கு அடுத்து சில ஆண்டுகள் கழித்து, மறுபடியும் ஒரு விருப்ப ஓய்வு திட்டம் வந்தது. கணக்கு போட்டுப் பார்த்தேன். நான் பணியில் இருக்கும் போது (வருமான வரி போக) என்ன சம்பளம் வாங்கினேனோ அதே சம்பளம் விருப்ப ஓய்வு பெற்றாலும் கிடைக்கும் ( பென்ஷன் + வங்கி டெபாசிட் வட்டி ) என்று தெரிந்தது. நான் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து எனக்கு கடன் கிடையாது. தேவைக்கு மேல் ஆசைபட்டதும் கிடையாது. ஆடம்பர வாழ்க்கையும் இல்லை. எனவே கடன் தொந்தரவுகள் கிடையாது. யோசனையாகவே இருந்தேன். ஏற்கனவே விருப்ப ஓய்வில் சென்றவர்கள், இருப்பவர்கள், குடும்பத்தார் ஆகியோரிடம் செய்த ஆலோசனைக்குப் பிறகு விருப்ப ஓய்வில் வந்துவிட்டேன்.

விருப்ப ஓய்வில் வந்துவிட்ட பிறகு வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் வலையுலகம் நுழைந்தேன். நானும் ஒரு ப்ளாக்கர் (BLOGGER) ஆனேன். இப்பொழுதும் தட்டச்சு விஷயத்தில் நான் இன்றும் ““ஒருவிரல் கிருஷ்ணா ராவ் தான்.


படம் (மேலே ) இப்போது எடுக்கப்பட்டது.

எழுத வாருங்களென அழைக்கின்றேன்: 

வலையுலகில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அழைக்கிறேன். ஐந்து பேர் என்பது முடிவல்ல என்று நினைக்கிறேன்.

சுப்பு தாத்தா http://subbuthatha72.blogspot.in

ராஜலக்‌ஷ்மி பரமசிவம்  http://rajalakshmiparamasivam.blogspot.in

ஜோதிஜி திருப்பூர்   http://deviyar-illam.blogspot.in

வை.கோபாலகிருஷ்ணன்   http://gopu1949.blogspot.in

வெங்கட் நாகராஜ்  venkatnagaraj  http://venkatnagaraj.blogspot.com

அன்பின் சீனா http://cheenakay.blogspot.in

N பக்கிரிசாமி  http://packirisamy.blogspot.com

கரந்தை ஜெயக்குமார்  http://karanthaijayakumar.blogspot.com

கே. பி. ஜனா... http://kbjana.blogspot.com

மாதேவி   http://sinnutasty.blogspot.in

ரஞ்சனி நாராயணன்  http://thiruvarangaththilirunthu.blogspot.in

சென்னை பித்தன்  http://chennaipithan.blogspot.com


இராஜராஜேஸ்வரி  http://jaghamani.blogspot.com

மதுமதி    www.madhumathi.com

மனோ சாமிநாதன்  http://muthusidharal.blogspot.in

வவ்வால்   http://vovalpaarvai.blogspot.in

தமிழ் செல்வி  http://vinmugil.blogspot.in

வேதா. இலங்காதிலகம்  http://kovaikkavi.wordpress.com  


Monday, 22 July 2013

பழைய ரயில்வே கேட்முன்பெல்லாம்  நான் பஸ்ஸில் பயணம் செய்யும்போது அடிக்கடி சாலையில் குறுக்கிடும் சமாச்சாரம் ரயில்வே கேட்தான். இதனை ரயில்வே லெவல் கிராஸிங் என்றும் சொல்வார்கள். ஆனாலும் அதிலும் சுவாரஸ்யம் இருக்கிறது. நடுவில் சிவப்பு வட்டம் போட்ட தகடு பதிதத பழைய ரயில்வே கேட்டை, நம்மில் பலர் மறந்தே இருப்பார்கள். இந்தகாலத்துப் பிள்ளைகள் பலருக்கு பார்க்க வாய்ப்பே இருக்காது. ஏனெனில் இப்போது கௌபாய் படத்தில் வருவதுபோல் இருபக்கமும் இரும்புக் குழாயில் சங்கிலிகள் கோர்த்த கேட். இது பழைய கேட் போன்று உறுதியானது இல்லை. ரயில்வே கேட்டில் ரயில் கடக்கும் வரை காத்திருக்க சிலருக்கு பொறுமை இருக்காது. சர்க்கஸ் வேலை செய்வார்கள். உடம்பை வளைத்து நெளித்து இருசக்கர வண்டியை கேட்டுக்கு அடியில் நுழைத்து தாண்டுவார்கள். பழைய ரயில்வே கேட்டில் இப்படி எல்லாம் செய்ய முடியாது. இப்போது பல ரயில்வே கேட்டுக்கள் இல்லை. பெரும்பாலும் அவை இருந்த எல்லா இடத்திலும் நான்கு வழிச்சாலை மேம்பாலங்கள்.

சின்னச்சின்ன வியாபாரம்:

பஸ் போய்க் கொண்டு இருக்கும்.. திடீரென்று பஸ் நின்றுவிடும். எட்டிப் பார்த்தால் வரிசையாக பஸ்கள், லாரிகள், மாட்டு வண்டிகள். காரணம் ரயில்வே கேட்டை மூடி இருப்பார்கள்.. சார் வெள்ளரி, சார் பலாப்பழம், சார் முறுக்கு, சார் மோர், அம்மா மல்லி பூ என்று ஒரே குரல்கள். கொஞ்சநேரம் மூடுவதால் சிலர் வாழ்வில் கொஞ்சம் வருமானம். இந்த வியாபாரமும் அந்த பகுதியில் விளையும் பொருட்களை குறைந்த விலையில் விற்பதாக இருக்கும். எங்கள் வங்கியின் SAVINGS BANK BALANCING SQUAD – இல் இருந்தபோது தினமும் திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு பஸ்சில் பயணம். புதுக்கோட்டைக்கு சற்று முன்னால் இருக்கும் ரயில்வே கேட்டில் வெள்ளரி பிஞ்சு வியாபாரம் நன்றாக இருக்கும். (இப்போதும் புதுக்கோட்டை சென்றால் பஸ்நிலையத்தில்  அந்த இளம் வெள்ளரி பிஞ்சுகளை ஆசையாக வாங்கி பழைய நினைவுகளோடு சாப்பிடுவதுண்டு) திருச்சி மணப்பாறை சாலை ரயில்வேகேட்டில் மணப்பாறை முறுக்கு. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் லாலாபேட்டை ரயில்வேகேட் என்றால் வாழைப்பழம். இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒரு ரயில்வே கேட ஒரு பொருளுக்கு விஷேசம். இப்போது எல்லா இடத்திலும் ரெயில்வே மேம் பாலங்கள்.

பஸ் பயணிகள்

சிலர் பஸ் ஏறியதிலிருந்து பஸ் ஒரு பத்துநிமிஷம் எங்காவது நிற்காதா என்றே வருவார்கள். அவர்கள் பஸ் நின்றதும் ஒரே ஓட்டமாக ஒரு ஒதுக்குப்புறம் சென்றுவிட்டு அப்பாடா என்று வருவார்கள்.. அப்போதெல்லாம் சாலை ஓரம் வரிசையாக பெரிய பெரிய புளிய மரங்கள். தம் போடும் நண்பர்களுக்கு இழுக்க இழுக்க , கேட் திறக்கும்வரை இன்பம் என்பார்கள். ரயில்வே கேட் திறக்க எப்படியும் கால்மணி நேரம் ஆகும். சிலசமயம் பக்கத்தில் ரயில் நிலையம் இருந்தால் இரண்டு வண்டிகள் வந்து செல்லும்வரை மூடி இருக்கும்.

கோடம்பாக்கம் ரயில்வே கேட்:

பழைய பத்திரிகைகளில் கோடம்பாக்கம் ரயில்வேகேட் பற்றி நிறைய ஜோக்குகள், கார்ட்டூன்கள் வரும். காரணம் அந்த கேட் வழியாகத்தான் சினிமா நட்சத்திரங்கள் கார்களில் கோடம்பாககம் ஸ்டுடியோக்களுக்கு சென்று வருவார்கள். கோடம்பாககம் ரயில்வேகேட் போட்டதும் கார்களில் கருப்புக் கண்ணாடிகளுக்கு உள்ளே இருப்பது யார் என்று பார்ப்பதற்கென்றே சில ரசிகர்கள் (பெரும்பாலும் வெளியூர்க்காரர்கள்) அந்த பக்கம் சுற்றிக் கொண்டு இருப்பார்கள். ஒரு ரயில்வே லெவல் கிராஸிங்கில் நடந்த கொலையை கண்டுபிடிப்பதுதான்,. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த “புதிய பறவை “ திரைப்படத்தின் சஸ்பென்ஸ். 
இளையராஜாவின் பகவதிபுரம் ரயில்வேகேட் “ என்று ஒரு திரைப்படம் கூட வந்தது. “குசேலன்என்ற படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்றில், வடிவேலு  லெவல்கிராசில், பஸ் பயணிகளுக்கு கட்டிங் ஷேவிங் செய்வார்.

ரயில்வே கேட் கீப்பர்கள்:

இப்போதெல்லாம் ரயில்வே கேட்கீப்பர்கள் பற்றி தூங்கிவிட்டார் என்றோ, போதையில் இருந்தார் என்றோ செய்திகள் வருகின்றன. அப்போதெல்லாம் அப்படி கிடையாது. காக்கி பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு கழுத்தில் ஒரு சிவப்பு துண்டு போட்டுக் கொண்டு உஷாராக இருப்பார்கள். பெரியவர்களாக இருந்தால் வாயில் பீடித் துண்டோ அல்லது சுருட்டோ புகைந்தபடி இருக்கும். கேட் கீப்பர் ரூமிற்கு வெளியில் அவசரத்திற்கு ஒரு சைக்கிள். ரோட்டோரத்தில் நிழலில் அவரது நண்பர்கள் தாயம் அல்லது ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டு இருப்பார்கள்.

கையசைக்கும் குழந்தைகள்


ரயில்வே கேட்டை ரெயில் நெருங்கும் போது திடீரென்று அதிக சப்தம். நீராவி என்ஜின் இணைத்த ரயில் குப்குப் என்று வேர்த்தபடி செல்லும். பஸ்ஸில் இருக்கும் பிளளைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. ரயிலுக்கு டாட்டா சொல்வார்கள். அதேபோல ரயிலில் இருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க பஸ்ஸில் இருப்பவர்களுக்கு கையசைப்பார்கள். சில குழந்தைகள் ஒன்னு, ரெண்டு என்று ரெயில் பெட்டிகளை எண்ணும். கூட்ஸ் ரெயில் என்றால் வெறும் எண்ணுதல் மட்டும்தான். நான் இதுமாதிரி சமயங்களில் கையசைக்கும் குழந்தைகளைப் பார்த்து நானும் கையசைப்பேன். இதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.                   
           ( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 
Saturday, 20 July 2013

எம்ஜிஆர் கட்ட நினைத்த “தமிழ் நாடு ” எழுத்து வடிவ கட்டிடங்கள்      ( தமிழ் பல்கலைக் கழகம்” Photo thanks to www.thehindu.com )

ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தமது வலைப்பதிவில் “ கரந்தை தமிழ்ச் சங்கம் “ வரலாற்றினை தொடராக எழுதி வருகிறார். அண்மையில் எழுதிய பதிவில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தஞ்சையில் தமிழ் பல்கலைக் கழகம் நிறுவ எடுத்துக் கொண்ட தகவல்களை எழுதியுள்ளார். (கரந்தை - மலர் 16  http://karanthaijayakumar.blogspot.com/2013/07/16.html ) அந்த கட்டுரையைப் படித்ததும் தமிழ் பல்கலைக் கழகம் குறித்த சில நினைவுகள் வந்தன.


Tamil university library building open ceremony  (Opened by Chief Minister  Dr. M.G.R )

                              
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு இவைகளை ஆராய்ச்சி செய்ய தஞ்சையில் தமிழ் பல்கலைக் கழகம் நிறுவ  ஆவன செய்தார். சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் ( அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று) உருவாக்கப்பட்டது. 
  
இங்கு  குறிப்பிடத்தக்க செய்தி ஒன்று.  தமிழ் பல்கலைக் கழகம் அமைந்த இடம் வாகையூர் என்று அழைக்கப் படுகிறது. அங்குள்ள கட்டிடங்களின் அமைப்பு வானத்திலிருந்து பார்க்கும்போது தமிழ் நாடு என்ற எழுத்துக்கள் தோன்றும்படி தொடங்கப்பட்டது. ஆனால் மி மற்றும்  ழ் என்ற இரண்டு எழுத்துக்கள் வடிவில் மட்டுமே கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. என்ன காரணத்தினாலோ ( வேறு என்ன? எல்லாம் அரசியல்தான்.) மற்ற எழுத்துக்களின் வடிவில் கட்டடங்கள் கட்டப்படவே இல்லை. அப்போது இண்டர்நெட் வசதி இப்போது உள்ளது போல் கிடையாது. செய்தித் தாள்கள் மூலம் விவரம் அறிந்ததோடு சரி. இப்போது இருக்கும் கட்டிடங்களை  விக்கிமேப்பியாமூலம் காணலாம். மி மற்றும் ழ்என்ற இரண்டு எழுத்துக்கள் வடிவில் மட்டுமே  கட்டிடங்கள் இருப்பதைக் காணுங்கள். இங்கே க்ளிக் செய்யுஙகள்.

இங்கு எம்ஜிஆர்  தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினைக் .காணலாம். தஞ்சாவூர், தமிழ் பல்கலைக் கழகத்தில், விட்டுப் போன எழுத்துக்கள் வடிவங்களில் கட்டிடங்களை கட்டினால் தமிழ் நாடு நிறைவுறும்.

இது பற்றிய விவரங்களை இணையத்தில் தேடியபோது இந்த செய்தி விவரமாக எங்கும் இல்லை. சென்ற மாதம் வெளியான DECCAN CHRONICLE – இல் (23 ஜூன் 2013) “ Tamil letters shape varsity building “ என்ற தலைப்பில் ப்ரமிளா கிருஷ்ணன் என்பவர் எழுதிய கட்டுரையை இணையத்தில் படிக்க நேர்ந்தது. அதில் வெளிவந்த படம் இது. ( http://www.deccanchronicle.com/130623/news-current-affairs/article/tamil-letters-shape-varsity-building )
 தமிழ் பல்கலைக் கழகத்தின் அதிகாரப் பூர்வமான இணைய தளத்தில் இந்த செய்தியோ, தமிழ் பல்கலைக் கழகம் தொடங்க எம்ஜிஆர் செய்த உதவிகளைப் பற்றியோ, புகைப் படங்களோ, வரலாறு எதுவும் இல்லை. இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. இப்போது நடக்கும் அரசு எம்ஜிஆர் வழிவந்த அரசு. எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தமிழ் பல்கலைக் கழக வளாகத்தில் எம்ஜிஆர் கட்ட நினைத்த “தமிழ் நாடு என்ற வடிவில் அமையும் கட்டிட அமைப்பை முடிக்க வேண்டும் மேலும் தமிழ் பல்கலைக் கழக இணையதளத்தில் எம்ஜிஆர் தொடங்கிய வரலாற்றினையும், துவக்ககால புகைப் படங்களையும் வெளியிட ஆவன செய்ய வேண்டும்.கட்டுரை எழுத துணை நின்றவை: (நன்றியுடன்)


www.sthapatimps.org/gallery.html