Showing posts with label முத்துநிலவன். Show all posts
Showing posts with label முத்துநிலவன். Show all posts

Monday, 30 October 2017

சோவியத் புரட்சி நூற்றாண்டு - கூட்டம்



நேற்று முன்தினம்(28.10.17 – சனிக் கிழமை) மாலை, திருச்சி ஹோட்டல் அருண் – மாக்ஸி ஹாலில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வயல் மாதந்திரக் கூட்டம், சோவியத் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டம் நடைபெற்றது.

நான் மேலே சொன்ன த.மு.எ.க.ச மற்றும் வயல் எதிலும் உறுப்பினர் கிடையாது. சிறப்பு சொற்பொழிவாளரான ஆசிரியர் நா. முத்துநிலவன் அய்யா அவர்கள், வாட்ஸ்அப்பில் கூட்டத்திற்கான அழைப்பிதழை அனுப்பி இருந்தார்.  நானும் சென்று இருந்தேன். வீட்டை விட்டு கிளம்பும் முன் மழை. கொஞ்சம் விட்டதும் ஆட்டோவில் சென்று வந்தேன்.

கூட்டம் துவங்கும் முன் எடுக்கப்பட்ட படங்கள்.(கீழே)
(மேலே இடையாற்று மங்கலம் ஆசிரியர் அ.சவரிமுத்து அவர்களுடன் நான்)

கூட்டம் துவங்கிய பின்

 
புதுக்கோட்டை கவிஞர் – ஆசிரியர் நா. முத்துநிலவன் அய்யா அவர்கள் ‘வீழ்வோம் என்று நினைத்தாயோ?” என்ற தலைப்பினில் சிறப்புரை ஆற்றினார். ஜார் மன்னர் காலம் தொடங்கி சோவியத் புரட்சி நடந்த 1917 நவம்பர் வரையில் நிகழ்ந்த நிகழ்வுகளை நன்கு விவரமாக எடுத்துரைத்தார்; மேலும் இரண்டாம் உலகப்போர், ஹிட்லரின் பாசிச வெறி மற்றும் அவனது கடைசி நாட்கள், இந்தியாவில் நுழைந்துள்ள கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் பண மதிப்பிழப்பு மற்றும் ஜீ.எஸ்.டியால் மக்களுக்குண்டான இன்னல்கள் பற்றியும் தனக்கே உரிய நடையில் விளக்கினார்.
(படம் மேலே) – ஆசிரியர் நா. முத்துநிலவன் அவர்கள்.

Saturday, 19 August 2017

தமிழ் – திரு 2017 விருதிற்கான எனது தேர்வு - ஆசிரியர் நா.முத்து நிலவன்



தி இந்து (தமிழ்) தினசரி இதழின் ஆயிரக் கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். அண்மையில் இவ்விதழ் 16 ஆகஸ்ட் 2017 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

தமிழ் – திரு விருதுகள்:

// தமிழ் மொழிக்காக அளப்பறிய பணியாற்றிவரும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் எளிய அடையாளம் ‘தமிழ் – திரு’ விருதுகள். எல்லா விஷயங்களையும் வாசகர்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இந்த விருதுக்கான ஆளுமைகளைப் பரிந்துரைக்கும் பெரும் பொறுப்பையும் வாசகர்களிடமே ஒப்படைக்கிறது //

முழு விவரம் மேலே படத்தில்.

தேர்வுக்கான படிவம்:

மேலும் வாசகர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஒரு அறிவிப்பை 18 ஆகஸ்ட் 2017 அன்று வெளியிட்டு, ‘என் தேர்வு’ என்று ஒரு படிவமும் வெளியிட்டு இருந்தார்கள். (படம் கீழே)

பத்திரிகையில் வந்த, மேலே சொன்ன படிவத்தையே பரிந்துரை படிவமாகப் பயன்படுத்தி அஞ்சலில், தி இந்து, தமிழ் - திரு விருதுகள், கஸ்தூரி மையம், 124,வாலாஜா சாலை, சென்னை 600002) என்ற விலாசத்திற்கு அனுப்பலாம். அல்லது www.yaadhumthamizhe.com என்ற இணையதளம் சென்றும், பரிந்துரை செய்யலாம்.

எனது தேர்வு மற்றும் பரிந்துரை:

தி இந்து (தமிழ்) இதழ் – தமிழ்திரு விருதுகள் 2017 இற்கான படிவத்தில் ஒவ்வொருவரும் கல்வி, ஆய்வு, கலை, இலக்கியம், தொழில்நுட்பம் என இந்த 5 துறைகளுக்கும், துறைக்கு ஒருவர் என்று பரிந்துரைக்க வேண்டும். நான் இலக்கியத்திற்கு மட்டுமே பரிந்துரை` செய்துள்ளேன்.

எனக்கு அஞ்சலில் அனுப்புவதைவிட, இணையதளம் வழியே பரிந்துரைப்பது எளிதாக இருந்த படியினால், நான் இலக்கியத்திற்கான பரிந்துரையில், ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களின் பெயரை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளேன். 

யார்:
நா.முத்துநிலவன், சீனிவாசநகர் 3ஆம் தெரு, மச்சுவாடி, புதுக்கோட்டை-622 004. செல்பேசி -94431 93293 - மின்னஞ்சல் muthunilavanpdk@gmail.com

எதனால்:
புதுக்கோட்டையில் வசிக்கும் திரு நா.முத்துநிலவன் அவர்கள் பணிஓய்வு பெற்ற தமிழாசிரியர்; சிறந்த கவிஞர்; முற்போக்கு எழுத்தாளர்; பட்டிமன்றப் பேச்சாளர்; வலைப்பதிவர்; கல்வி மற்றும் இலக்கிய சிந்தனை நூல்களை எழுதியுள்ளார்: இணையதள பயிற்சி முகாம்களை முன்னின்று நடத்தி பல வலைப்பதிவர்களை உருவாக்கியவர். இன்னும், 11 அக்டோபர் 2015இல் புதுக்கோட்டையில் நடந்தவலைப்பதிவர் திருவிழாவை கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தியவர்

வேண்டுகோள்:

எனவே, இந்த விருதுக்கான படிவம் அனுப்பும், தி இந்து (தமிழ்) வாசகர்களில், புதுக்கோட்டை ஆசிரியர் நா.முத்துநிலவன் மீது அன்பு கொண்ட அன்பர்கள் அனைவரும், இலக்கியத்திற்கான தேர்வில் அவரது பெயரையே தேர்வு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

அதிக வாசகர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் விருதுக்கான இறுதிப்பட்டியல் உருவாகும் என்பதால், பரிந்துரைகள் ஆசிரியரின் பெயரில் குவியட்டும்.  


Wednesday, 26 November 2014

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! - நூல் விமர்சனம்



புதுக்கோட்டை ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் பற்றிய அறிமுகம் தேவையில்லை. சிறந்த கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் (தஞ்சை) விக்கிபீடியாவில் இவருக்கென்றே ஒரு கட்டுரையை தொகுத்து இருக்கிறார் என்றால், இவரைப் பற்றி அதிகம் இங்கு சொல்ல வேண்டியதில்லை. அண்மையில் புதுக்கோட்டையில் ஆசிரியர் நா.முத்துநிலவன் (05.10.2014, ஞாயிறு அன்று) எழுதிய மூன்று வெளியிடப்பட்டன.அவற்றுள் “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!  என்ற நூலும் ஒன்று. நூல் முழுக்க கல்விச் சிந்தனைகள் நிறைந்த கட்டுரைகள்.

நூல் வெளியீட்டு விழா முடிந்தவுடனேயே, பல நண்பர்கள் தொடர்ந்து அவர் நூல்களைப் பற்றிய கட்டுரைகளை வலைப்பதிவில் வெளியிட்டனர். இப்போது நாமும் எழுதினால் சரியாக இருக்காது என்பதனால் அப்போது எழுதவில்லை.

(படம் மேலே)முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! நூல் வெளியீடு நன்றி: வளரும் கவிதை (http://valarumkavithai.blogspot.com/2014/10/blog-post_7.html)

கல்விமுறையும் பள்ளிகளும்:

அதிக மதிப்பெண் வாங்குவதற்காகவே மாணவர்கள் பள்ளிப் படிப்பில் படிக்கிறார்கள், படிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதனை சொல்லுகிறார்.. நமக்குத் தெரிந்தவரையில் பல பள்ளிகள் இந்த மதிப்பெண் போட்டியில், மாணவர் தேர்ச்சியில் அதிக சதவீதம் காட்ட  வேண்டும் என்பதற்காக, 9 ஆம் வகுப்பிலேயே 10 ஆம் வகுப்பு பாடங்களையும், 11 ஆம் வகுப்பிலேயே + 2 ( 12 ஆம்)  வகுப்பு பாடங்களையும் தொடங்கிவிடுகிறார்கள். தேறமாட்டார்கள் என்பவர்களை மாற்றுச் சான்றிதழ் (T.C) கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். தனது ஆதங்கத்தினை இவ்வாறு சொல்லுகிறார்

பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும், சில அரசுப்பள்ளிகளிலும் கூட 9,11ஆம் வகுப்புகளை நடத்தும் வழக்கமே இல்லை! அந்தமாணவர்க்கு, முறையே10, 12ஆம் வகுப்புப் பாடங்களே இரண்டுவருடங்களும் நடத்தப்படுவது ஊரறிந்த ரகசியமாக உள்ளது! இரண்டு வருடமும் ஒரே புத்தகத்தை உருப்போட்டமாணவர்கள், தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளில் உருப்படாதமதிப்பெண் எடுக்கும் ரகசியமும் இதுதான்! அந்தந்த வயதிற்கும், உளவியல்- சொல்லாற்றல்-பொது கவனிப்புத் தன்மைக்கும் ஏற்றவாறு பாடங்கள் தயாரிக்கப்படுவது உண்மை யெனில், இந்தப்பள்ளிகள் இந்த வகுப்புகளையே புறக்கணித்துவிட்டு-ஒரே தாண்டாகத் தாண்டி-அடுத்த வகுப்புக்கு மாணவர்களைக் கடத்திகொண்டு போவது எப்படி அனுமதிக்கப் படுகிறது?  (பக்கம்.32)

வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை மருந்துபோலத் தருகிறோம்! கல்வி சுமையாகிறது! வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை விருந்துபோலத் தருகிறோம்! வாழ்க்கையே சுமையாகிறது! (பக்கம்.34)
               
ஆசிரியர்கள் படும்பாடு:

ஒரு மாணவன் அதிக மதிப்பெண் பெறுவதற்கு எவ்வளவோ சமூகக் காரணங்கள் உண்டு. ஆனால், இந்த மதிப்பெண் போட்டியில் ஆசிரியர்கள் மட்டுமே படும் தொல்லைகளைப் பட்டியலிட முடியாது. அரசுப் பள்ளிகளில் ஓடாத குதிரைகளை, போட்டியில் ஓட்டிக் காண்பிக்க வேண்டும். பல பள்ளிகளில் இந்த வகுப்பு ஆசிரியர்களுக்கு விடுப்பே கிடையாது. அதிலும் பல தனியார் பள்ளிகளில் கேட்கவே வேண்டாம்.ஓயாமல் படிப்பு, படிப்பு என்றால் மாணவர்களுக்கும் சரி, ஆசிரியர்களுக்கும் சரி மன அழுத்தம்தான் மிஞ்சுகிறது. பெற்றோர்களும் விதி விலக்கல்ல. இதனால் ஏற்படும் உரசல்கள், மோதல்கள் பற்றி அடிக்கடி பத்திரிகையில் காண்கிறோம். சென்னையில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியை கொலையே செய்யப்பட்டு இருக்கிறார்.

“ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்? என்று கேள்வி கேட்ட  நமது ஆசிரியர் சொல்லும் பதில்,  அல்ல அல்ல குற்றச்சாட்டு  இது. ( ஆசிரியர் என்பது பொதுப்பால் சொல் என்பது இவரது கருத்து. )

 அந்தச் சகோதரியின் உடலில் கத்திக் குத்து மீண்டும் மீண்டும் விழ விழக் கத்திக் கதறிய கதறலில், பொங்கிப் பெருகிய ரத்தத்துளியின் கறைபட்டு யார் யாரெல்லாம் குற்றவாளிகளாகி நிற்கிறார்கள் தெரியுமா? நாம் எல்லாரும்தான்! இது, உண்மை வெறும் இகழ்ச்சி இல்லை! (பக்கம்.23)

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்தவர் அல்லவா? இன்னும் வெளிப்படையாகவே தனது மனக்குமுறல்களை சொல்கிறார்.

நூறு விழுக்காடு தேர்ச்சிக்காகப் பல தனியார் பள்ளிகளும் சில அரசுப்பள்ளிகளும் கூட எடுக்கும் நடவடிக்கைகளை மனச்சாட்சியுள்ள ஆசிரியர் எவரேனும் தட்டிக் கேட்டால் கல்வித்துறை பேரைச் சொல்லியே அவர்களை ஓரங்கட்டி விட்டு மாணவர்களைப் படுத்தும்பாடு கொஞ்சமா நஞ்சமா? காலை 4மணிக்கே எழுப்பி விட்டு வீட்டுப்பாடம், பிறகு தனிப்பயிற்சிக்கு ஓடி, பிறகு வந்து பள்ளிக்கூடம் ஓடி, பிறகு மாலை பள்ளியிலிருந்து வந்ததும் எதையோ வாயில் கொட்டிக் கொண்டே உடைமாற்றிக் கொண்டு, மீண்டும் தனிப் பயிற்சிக்கு ஓடி, இரவு 8மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து மீண்டும் மாடுபோல அன்று நடந்த, முந்திய நாள்களில் படிக்க விட்டுப்போன பகுதிகளை அசைபோட்டு- இரவு படுக்க 11மணி யாகிவிடும் குழந்தைக்கு வயது 15! "ஓடி விளையாடு பாப்பா" என்ற பாரதி பாட்டைப் படித்து ஒப்பிக்காமல் விளையாடப்போன குழந்தைக்கு கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மனஅழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப் படுத்தி சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியரால்- அதிகமாகாதா என்ன? (பக்கம்.25 26)

விருதுகளும், மாணவன் தந்த விருதும்:

பல பொதுத்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் தணிக்கை (Audit) நடந்து முடிந்தவுடன், தணிக்கைச் சான்றிதழ் (Inspection Report) தரும்போது,  சான்றிதழோடு சில ஊழியர்களுக்கு, வேலைத் திறமை, சேவை மனப்பான்மை இவற்றின் அடிப்படையில் நற்சான்றிதழ் (Good Report). கொடுப்பார்கள். பெரும்பாலும் நிர்வாகத்தில் காக்காய் பிடிப்பவர்களுக்கே இந்த சான்றிதழ் கொடுக்கப்படும்

முன்பெல்லாம் அரசு விருதுகள் எல்லாம் தகுதி பார்த்து தேடிப் பிடித்து தந்தார்கள். பணிக் காலத்திலேயே விருது, வாழ்நாளிலேயே விருது என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரும். ஆனால் விருது என்பது இப்போது அரசியலாகி விட்டது. அதிலும் கேட்டுப் பெற வேண்டும். இதுபற்றி ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் என்ன சொல்லுகிறார்?

தமிழக அரசு தரும் நல்லாசிரியர்’ விருது ஒவ்வோராண்டும் செப்டம்பர்-5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது. இந்த விருது மட்டுமன்றி,  கலைமாமணி   விருது பற்றிய செய்திகளும் வரும்போதெல்லாம் ‘அட இவருக்கா இந்த விருது?’ எனச் சிலர் பெயர்களைப் பார்த்து ஆச்சரியப் படுவதும்சில பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவதும் தொடர்கதையாகிவிட்டது! இதனால்இவ்விருதுகள் வரவர கேலிக்கூத்தாகிவிருது பெற்றவர்க்கும்,-ஏன்விருதுக்குமே கூட- மரியாதையற்ற நிலை உருவாகி வருகிறது! அரசுகள் மாறலாம்கட்சி-அரசியல் மாறலாம்ஆனால் மரபுசார்ந்த சிலமாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு. (பக்கம்.48)

பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனைத் தொடர்ந்து எஸ்.பி.பால சுப்பிரமணியனும் பத்மஸ்ரீ விருது பெற்றுவிட்டார். சுசிலாம்மா பத்மவிபூஷன் விருதே பெற்றுவிட்டார். இவர்களின் தகுதியறிந்து அந்த விருதுகளைத் தந்த மத்தியஅரசுஇவர்களுக்கு முன்னோடியான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஏன் இன்னும் பத்மஸ்ரீ விருதுகூடத் தரவில்லை எனும் கேள்வி எழுவது நியாயம் தானேபாவம், அவர் இந்த “விருது வாங்கும்தொழில் நுட்பம் தெரியாதவரோ என்னவோ? (பக்கம்.52)

நமது ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை. இவரிடம் படித்த மாணவன் ஒருவன் “சுட்டி விகடன்என்ற வார இதழில் எனக்குப் பிடித்த ஆசிரியர் என்ற கட்டுரையில் நமது ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறான். ஆசிரியரின் பெருமித வரிகள் இதோ ... ...

இதைவிட அரசு தரும் நல்லாசிரியர்விருது பெரிதா என்ன?
இது போதும்பா... நாம் விதைத்த விதைகள் வீணாவதில்லை... சரியான நிலத்தில் சரியானபடி விழுந்தது ஆங்காங்கே வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது...  நம் உழைப்பு வீணாகிவிட வில்லை என்று மனசின் ஓரத்தில் சிறு கசிவு... என் பிள்ளைகள் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... வேறு யாரும் புரிந்துகொண்டால் என்ன? புரியாவிட்டால் என்ன? என் தலையில் டர்பன் தலைப்பாகை முளைத்திருந்தது. (பக்கம். 138)

நூலின் தலைப்பு:

நூலின் தலைப்பாக உள்ள முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! “ என்ற கட்டுரையில் சில வாழ்வியல் சிந்தனைகள் பற்றிய கருத்துக்களை தருகிறார். குறிப்பாக செல்போன், கம்ப்யூட்டர், பேஸ்புக் மற்றும் தொலைக்காட்சி பற்றியெல்லாம் சொல்லுகிறார். அதில் சில வரிகள்.

முகநூலில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட, முகம்தெரியாத அல்லது முகத்தை மாற்றிக்கொண்ட யாரோ ஒருவரிடம் ஏமாந்துவிடக் கூடிய ஆபத்தும்உள்ளது என்பதை எந்தநேரத்திலும் மறந்துவிடக் கூடாது மகளே! உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ கவனமாகத்தான் இருப்பாய்! இருக்க வேண்டும். (பக்கம்.61)

எனது ஆசை:

கல்வி என்றால் என்ன, அந்த கல்வியை எப்படி திட்டமிட வேண்டும் என்ற அனுபவமிக்க ஒரு ஆசிரியரின் அனுபவப் பிழிவே இந்த நூல் எனலாம். இன்னும் இந்த நூலில் சமச்சீர் கல்வி, தமிழில் சரியாக எழுதுதல், தாய்மொழிக் கல்வி, தனது ஆசிரியர் பணி அனுபவங்கள் என்று நிறையவே சொல்லி இருக்கிறார். அவற்றையெல்லாம் விரித்து எழுதினால் இந்த கட்டுரையைப் படிக்கும் அன்பருக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். எல்லோருடைய வீட்டு நூலகங்களிலும், தமிழ்நாட்டில் எல்லா நூலகங்களிலும் இந்த நூல் இடம்பெற வேண்டும், இன்னும் இவரது மற்றைய நூல்களைப் பற்றியும் நான் எழுத வேண்டும் என்பது எனது ஆசை.

(படம் - மேலே) ஆசிரியர் முத்துநிலவன் அவர்களுடன் நான்)

நூலின் பெயர்: முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!
நூலாசிரியர்: நா. முத்துநிலவன்
நூலின் விலை ரூபாய் 120/=  - பக்கங்கள் : 157
வெளியீடு: அகரம், மனை எண்.1, நிர்மலா நகர்,
           தஞ்சாவூர் -613 007 போன்: 04362 239289