Wednesday 28 March 2018

சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே!


கதையின் ஆரம்பத்திலேயே ஒரு பிளாஷ்பேக்காக தனது மலரும் நினைவுகளாக , நாற்பது வருடத்திற்கு முந்தைய மின்விளக்கே அதிகம் இல்லாத, திருச்சி நகரத்தையும், அந்தக் கால நடுத்தர மக்கள் ஒண்டு குடித்தனங்களாக வாழ்ந்த முறையையும் சுவைபடச் சொல்கிறார். அவர் சொல்லும், அப்போதைய மக்கள் பயன்படுத்திய சிம்னி அரிக்கேன் விளக்குகள், திரி ஸ்டவ் , ரம்பத்தூள் அடுப்புகள் இந்தக் கால பிள்ளைகளுக்கு தெரியாது. மேலும் அப்போதைய அங்கிருந்த  நடுத்தர மக்களது சமூக நிலைமை, பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் இவற்றைச் சொல்லி அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறார். இந்த காலத்து தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய பழைய கால குடித்தனம் பற்றிய செய்திகள் சுவையாக உள்ளன.

ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் அவ்வளவு லேசில் பேசிவிட முடியாது. ஏதாவது புத்தகம் அல்லது நோட்ஸ் வாங்க வேண்டும் என்றாலும் யாரேனும் ஒரு பெரியவர் துணையோடுதான் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மலர்ந்த ஒரு காதல் கதையைச் சொல்லுகிறார்.

ஒரு பெண் தனது காதலை எப்படி வெளிப்படுத்துவாள் என்பதனை சுவையாகவே சொல்கிறார். அவனிடம் வலிய வந்து பேசுதல், அவன் வைத்து இருந்த குழந்தையை வாங்கி அவன் எதிரிலேயே முத்தம் கொடுத்தல், குழந்தையைத் தரும் சாக்கில் தொடுதல் என்று தெரியப் படுத்துகிறார்.

ஒருநாள் எதிர்பாராத விதமாக ஒரு தீபாவளி சமயம் அவள் வீட்டிற்கு அவள் பெற்றோர் இருக்கும் சமயம் அவள் வீட்டிற்கு அவன் செல்ல நேரிடுகிறது. அங்கு அவள் கையால் அவனுக்கு இனிப்பும் காரமும் தருகிறார்கள். மேலும் அவனது வேலை, சம்பளம் இவற்றையெல்லாம் அந்த பெண்ணின் பெற்றோர் விசாரிக்கிறார்கள். இதனால் அவன் தனக்குத்தான் இந்த பெண் அமையும், இவர்கள்தான் தனக்கு மாமனார் மாமியார் என்ற பரவசத்துடன் வீட்டுக்கு வருகிறான். அதற்குப் பிறகு அந்தப் பெண்ணை அவன் காணவே முடியவில்லை. அவனுடைய காதல் அவனுக்குள்ளேயே அடக்கமாகி விட்டது.  ஆனாலும் அவள் கையில் இருந்து வாங்கி சாப்பிட்ட ரவாலாடு மட்டும் அவன் நினைவை விட்டு அகலவில்லை. அவனுக்கு சொந்தத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையும் நல்ல விதமாகவே அமைகிறது. இங்கே இன்னாருக்கு இன்னார் என்ற தத்துவதைச் சொல்லுகிறார் கதாசிரியர் திரு V.G.K அவர்கள்.  

இதற்கிடையில் எதிர்பாரத விதமாக பல வருடத்திற்குப் பிறகு அந்த பெண்ணை கடைவீதியில் சந்திக்கிறான். அவனும் அவளும் ஒரு உணவு விடுதிக்குச் சென்று பேசுகின்றனர். அப்போது இருவரும் அடையும் மனப் போராட்டங்களை சொல்லுகிறார். 

இருவருக்குமே வயதான தோற்றம். இருப்பினும் பழைய நினைவுகள். இவ்வாறு பேசியது போல் அப்போதே பேசி இருந்தால், ஒருவேளை இருவரது காதலும் நிறைவேறி இருக்கும். அவளிடம் அவன் தன் மணிபர்சைத் தந்து வேண்டியதை எடுத்துக் கொள் என்று சொல்கிறான். அவளோ அவன் நினைவாக ஒரு நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு அப்படியே பர்சை கொடுத்து விடுகிறாள். இங்கே பணத்துக்காக அவள் விரும்பவில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

இறுதியாக தனது மகனின் காதலியாக வருபவள் தனது முன்னாள் காதலியின் மகள்தான் என்று தெரிந்து கொள்ளும்போதும், தனது காதலி இப்போது மனநிலை பாதிக்கப்பட்டவள் என்பதனை அறியும் போதும் அவன் மறக்க மனம் கூடுதில்லையேஎன்று படும்பாட்டை திரு V.G.K அவர்கள் தனக்கே உரிய எழுத்துத் திறமையால் கதையை நகர்த்துகிறார். இறுதியில் அவன் அந்த பெண்ணின் மகளை தனது மருமகளாக ஏற்றுக் கொள்ளும்போது வாசகர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறான்.

முக்கிய குறிப்பு:

திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன் ( http://gopu1949.blogspot.in ) அவர்கள் நடத்திய, V.G.K சிறுகதைகள் விமர்சனப் போட்டிக்கு, நான் அனுப்பி வைத்த எனது இரண்டாவது விமர்சனக் கட்டுரை (26.03.2014) இது)

தொடர்புடைய எனது முந்தைய பதிவு:
சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK 03 - சுடிதார் வாங்கப் போறேன்

Sunday 25 March 2018

சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK 03 - சுடிதார் வாங்கப் போறேன்


வலைப்பதிவு உலகில் VGK என்றும், கோபு அண்ணா என்றும், வை.கோ என்றும் அன்புடன் அழைக்கப்பெறும் அய்யா திருச்சி வை கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. அவர் எழுதிய சுடிதார் வாங்கப் போறேன்என்ற கதையில் ஒரு குடும்பத்து பெரியவர் தனது ஆர்வக் கோளாறு காரணமாக அடையும் மனப் போராட்டங்களை  தனக்கே உரிய நகைச்சுவை நடையில் சொல்லுகிறார்.  

சஸ்பென்ஸ்.

சிறுகதை என்றால் ஒரு சஸ்பென்ஸ் .... படிக்கக் கையில் எடுத்தால் கீழே வைக்க மனது வரக்கூடாது. அந்த வகையில் எடுத்தவுடனேயே  // வெகு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் ஜவுளிக்கடைக்குப் போக வேண்டிய நிர்பந்தம்.  ஒவ்வொரு தடவை போய் ஜவுளிகள் வாங்கி வந்ததும் இனி அந்தப் பக்கம் போகவே கூடாது என்று சபதம் செய்து கொள்வேன்.// என்று சொல்லி. கதையைத் தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டி விடுகிறார். சரி பெரியவர் அவருடைய பெண்ணுக்கு சுடிதார் வாங்கப் போகிறார் போலிருக்கிறது என்று நினைத்தால், அவருடைய மனைவிக்கு ஜவுளி எடுத்த கதைகளைச் சொல்லி அவருக்காக இருக்குமோ என்று சொல்லி, கடைசியில் வீட்டுக்கு வரப்போகும், மகனுக்காக நிச்சயிக்கப்பட்ட பெண் என்று சஸ்பென்ஸை உடைக்கிறார். அப்புறமும் சஸ்பென்ஸ். அந்த பெண் அந்த சுடிதாரை வாங்கியதும் என்ன செய்தாள் என்று கதையை நகர்த்துகிறார். நமக்கு மேலும் ஆவல்.

கண்முன்னே காட்சிகள்:

திரு VGK அவர்கள தனது கதைகளில், கற்பனையாகச் சொல்கிறாரா அல்லது தனது அனுபவத்தைக் கதையாகச் சொல்கிறாரா என்று பிரிக்க முடியாத அளவுக்கு காட்சிகளை மனக்கண் முன்பு கொண்டு வருபவர். இந்த கதையில்  நகரத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையின் அமைப்பை அப்படியே விவரித்து மனக்கண் முன் நிறுத்துகிறார். உதாரணத்திற்கு

// முழுவதும் குளுகுளு வென்று ஜில்லிட்டுப்போக வைக்கும் ஏ.ஸி க் கட்டடம். கடையின் உள்ளே நுழையும் போதே வருவோர் தலையில் [ஏற்கனவே நமக்குள்ள ஒரு சில முடிகளையும் பறக்கச் செய்யும் புயலென ] ஜில் காற்று வேகமாக அடிக்கும்படி ஒரு சிறப்பு ஏற்பாடு.  வேறு கடைகளுக்குப் போய் விடாமல், இங்கேயே இந்தக்கடையிலேயே நாம் ஜவுளிகள் வாங்கி விட வேண்டும் என்று ப்ரைன் வாஷ் செய்யவதற்காகவே இது போல வைத்திருப்பார்களோ என்னவோ! //

இப்படியாக கடையில் நுழைந்தது முதல் சுடிதார் வாங்கி வரும் வரை சுவையாகச் சொல்கிறார். இடையிடையே விற்பனைப் பெண்கள் எப்படியாவது ஒன்றை விற்றுவிட வேண்டும் என்று , அவர் பார்ப்பதைல்லாம் // அருமையான கலர் மற்றும் டிசைன் ஸார்போட்டுப் பார்த்தால் சூப்பராக இருக்கும் அவங்க சிகப்பு உடம்புக்கு// சொல்வதை கிண்டலடிக்கிறார்.

சுடிதார் வாங்கிவிட்டு வரும் வழியில், பல்வேறு டிசைன்களில் சுடிதார் அணிந்த இளம்பெண்களை பார்க்கிறார். அப்போது அவருக்கு தான் வாங்கிய சுடிதார் வருங்கால மருமகளுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்று மனக்குழப்பம். பரிசுப் போருள் வாங்கிச் செல்லும்  அனைவருக்கும் வரும் ஒரு எண்ணத்தை சுவையாக விவரிக்கிறார்.

நகைச்சுவை:

பெண்கள் துணிக் கடையில் நுழைந்தால் ஒரு டிசைனை மட்டும் பார்த்து திருப்தி அடைய மாட்டார்கள் என்பது பொதுவாகச் சொல்லப்படுவது. அதிலும் ஆண்களே பார்த்து வாங்கினால் என்ன நடக்கும்?  வீட்டுக்காரர் வாங்கி வந்த புடவையை பெண்கள் எப்படி எடை போடுகிறார்கள் என்பதனை, // மின் விளக்கு வெளிச்சத்திலும், சூரிய வெளிச்சத்திலும் பல முறை பார்த்து விட்டு அதை ஒரு ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, ”எந்தக் கடையில் வாங்கினீர்கள்? என்ன விலை?” என்பதைத் தெரிந்து கொண்டு, ”பில் இருக்கிறதா? அது பத்திரமாக இருக்கட்டும்.  தேவைப்பட்டால் இதைக் கொடுத்து விட்டு வேறு புடவை மாற்றி வாங்கி வந்து விடலாம்” என்பாள். // என்று சொல்லும்போது நம்மையும் அறியாமல் சிரித்து விடுகிறோம். அவர்களே எத்தனை கடை ஏறி இறங்கினாலும், எத்தனை டிசை பார்த்தாலும் வாங்கி வருவது ....

// திரும்பத் திரும்ப இந்தப் பச்சையும் நீலமும் தான் அமைகிறது”  என்றும் சொல்வதுண்டு.  //

பெரியவர் நினைப்பு என்னவென்றால் சுடிதார் விலை அதிகம் இருந்தால் போதும்; அது உயர்ந்தது. யூனிபார்ம் மாதிரி பேண்ட் சட்டைக்கு மேட்சிங் பார்த்தால் போதும். அதே மாதிரி சுடிதாரையும் வாங்கப் பார்க்கிறார். இதனைப் புரிந்து கொண்ட கடைக்காரப் பெண்  பெரியவரை ஒரு மாதிரியாக பார்த்து சிரித்துக் கொண்டே அவள், “அதே கலரில் வராது சார், யூனிஃபார்ம் மாதிரி போட மாட்டார்கள்” என்கிறாள்.

குடும்பம் என்றால்:

குடும்பத்திற்கு எது தேவை. அன்பு ஒன்றே பிரதானம் என்று

// அன்பையும், பாசத்தையும், பிரியத்தையும் நேருக்குநேர் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள மாட்டாளே தவிர, இதுபோல வேறு யாராவது உசிப்பிவிட்டால் போச்சு! “நம்மாளு, நமக்கு மட்டும் தான்; இவள் யாரு குறுக்கே” என்று கொதித்தெழுந்து விடும் சுபாவம் கொண்டவள். //

என்ற வரிகள் மூலம் உணர்த்துகிறார்.

ஐம்பது வருஷத்திற்கு முன்பெல்லாம் நிச்சயமே செய்து இருந்தாலும் அந்த பெண்ணோடு மாப்பிள்ளையாக வரப் போகிறவர் அவ்வளவு லேசில் பேசி விட முடியாது. இப்போது எல்லாமே மாறிப் போச்சு. இவர் எடுத்துக் கொடுத்த சுடிதார் அந்த பெண்ணுக்கும் பிடித்து விட்டது. வெளியூரில் 400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பெரியவரின் பையனுக்கும் பிடித்துப் போகிறது அது எப்படி?  // டிஜிடல் கேமராவில் போட்டோ எடுத்து, இண்டெர்நெட் மூலம் அவனுக்கு அனுப்பி விட்டுத் தான் எங்களைப் பார்க்க வந்திருக்கிறாள் எங்கள் வருங்கால மருமகள். // என்று முடிக்கிறார். அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு.

முடிவுரை:

மனைவிக்கோ, மகளுக்கோ, மருமகளுக்கோ ஆண்கள் மட்டும் தனியாகப் போய் துணி எடுத்தால் எப்படி இருக்கும் என்பதன் கற்பனைதான் இந்தக் கதை. சுவாரஸ்யமாக எழுதிய திரு VGK அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

முக்கிய குறிப்பு:

(வலைப்பதிவர்களால் V.G.K என்றும், கோபு அண்ணா என்றும் அன்பாக அழைக்கப்படும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்  (http://gopu1949.blogspot.in) 2014 - இல் அவரது சிறுகதைகளை ஒட்டி, 40 வார காலம் தொடர்ச்சியாக, சிறுகதை விமர்சனப் போட்டிகள் நடத்தினார். எழுத்தாளர் ஜீவி (http://jeeveesblog.blogspot.in பூவனம்) அவர்கள் நடுவராய் இருந்து சிறப்பித்தார்.

நானும் ஆர்வம் கொண்டு இரண்டு கதைகளுக்கு, இரண்டு விமர்சனங்கள் எழுதி அனுப்பினேன். போட்டியில் நான் வெற்றி பெறாவிட்டாலும், கலந்து கொண்டமைக்கான போனஸ் பரிசு எனப்படும் ஆறுதல் பரிசு (ரூ100/= (50+50) கிடைத்தது. அதில் எனது முதலாவது விமர்சனக் கட்டுரை (03.02.2014) இது)

தொடர்புடைய எனது முந்தைய பதிவு:

திருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும் http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post.html

Thursday 1 March 2018

நம்பிக்கையே வாழ்க்கை.



அன்பு நண்பர்களுக்கு வணக்கம்! இன்று எனக்கு பிறந்தநாள் (01.03.1955). வயது 63 முடிந்து 64 தொடங்கியுள்ளது. நான் உயிரோடு இருக்கிறேனா என்பதனையே, இன்று கண் விழித்த பிறகுதான் நிச்சயம் செய்து கொண்டேன். ஏனெனில், 10 நாட்களுக்கு முன்னர் (19.02.18 திங்கட் கிழமை - காலை 9.15 மணி அளவில் எனக்கு கடுமையான மூச்சுத் திணறலும் மயக்க நிலையும் ஏற்பட்டு, ஆபத்தான நிலைமையில்,  ஒரு மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டேன். அங்கு உடனடியாக எனக்கு வேண்டிய முதலுதவிகளை நன்றாகவே செய்து காப்பாற்றி விட்டார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர், எனக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும்,  உடனடியாக இதய அறுவை சிகிச்சை (Open Heart Surgery) செய்ய வேண்டும் என்றும் சொல்லி 23.02.18 வெள்ளியன்று டிஸ்சார்ஜ் செய்தார்கள்; வீட்டுக்கு சென்றுவிட்டு ஒருவாரம் கழித்து ஆபரேஷனுக்காக வரச் சொன்னார்கள். 

(நான் ஏற்கனவே வலது முழங்கையில் வந்த பெரிய கட்டிக்கு ஒரு அறுவை சிகிச்சை, அப்புறம்  ‘appendix’ ஆபரேஷன்  மற்றும் அண்மையில் விபத்து காரணமாக இடது குதிகாலில் அறுவை சிகிச்சை – என்று மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவன். எனவே மீண்டும் அறுவை சிகிச்சையா என்று எனக்குள் ஒரு நடுக்கம்) 

வீட்டுக்கு வந்தவுடன், எதற்கும் இன்னொரு டாக்டரிடம் (Second Opinion) கேட்டுக் கொள்ளலாம் என்று, (27.02.18 செவ்வாய்க் கிழமை) மூத்த அனுபவம் வாய்ந்த M.D.,D.M – Cardiologist ஒருவரிடம் சென்று முழு விவரத்தையும், எனது பயத்தினையும் சொன்னோம். அவரது மருத்துவ மனையில்,  எனக்கு ECG Scan, BP, Urine மற்றும் Blood சோதனைகள், Echo Test மற்றும் Tread Mill Test ஆகியவை செய்யப்பட்டன
.
அதன் பிறகு மாலை 4.30 அளவில் டாக்டர் எங்களை அழைத்தார். அப்போது அவர் // இதற்கு முன்பு நீங்கள் பார்த்த, மருத்துவ மனையில் கொடுத்துள்ள CD மற்றும் ரிப்போர்ட்டுகள் அடிப்படையில் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருக்கின்றன. இதய அறுவை சிகிச்சை (Bypass surgery) செய்து கொள்வதா வேண்டாமா என்பது குறித்து நீங்கள்தான் முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் இதய அறுவை சிகிச்சை செய்து விட்டதாலேயே, எல்லாம் சரியாகி விட்டது என்று யாராலும் Guarantee தர முடியாது. யாரும் சொல்லவும் மாட்டார்கள், அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் RISK மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவை இருக்கத்தான் செய்யும் // என்று சொன்னார். மேலும் இங்கு செய்த சோதனைகளிலும், உங்களுக்கு இதயத்தில் பிரச்சினைகள் இருப்பதாகவே காட்டுகின்றன என்று சொன்னார்.

நான் எனது கருத்தாக // டாக்டர் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள பயமாக இருக்கிறது; முடிந்தவரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமலேயே மருந்துகளை எடுத்துக் கொள்ளவே விரும்புகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதன்படியே செய்கிறேன் // என்று தெரிவித்தேன்.
                                                                                                                                                        
உடனே டாக்டர் // அப்படியானால், நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளுவதில் மற்றும் பழக்க வழக்கங்களில், நீங்கள் கட்டுப்பாடுடன் இருந்து கொள்ள வேண்டும்; இந்த முறையிலும் Guarantee கிடையாது. RISK இருக்கத்தான் செய்யும் // என்று சொன்னார். மேலும் டாக்டர் என்னிடம் எந்த மாதிரியான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி எப்படி எல்லாம் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, முப்பது நாட்களுக்கு மருந்துகள் எழுதி கொடுத்துவிட்டு 15 நாட்கள் கழித்து வரச் சொல்லி இருக்கிறார்.

நானும் 27.02.18 செவ்வாய்க் கிழமை இரவிலிருந்து அவர் கொடுத்த மருந்தையே எடுத்து வருகிறேன். எல்லாம் இறைவன் செயல் மற்றும் அருள் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையே வாழ்க்கை.

( இன்று (01.03.18) எனது ஃபேஸ்புக் பக்கம் நான் எழுதியது இது.