Thursday 28 September 2017

ஆயுத பூஜை - நினைவுகள்



நான் பணிஓய்வு பெற்று விட்டேன். மனைவி மத்திய அரசுப் பணியில் இருக்கிறார். இன்று ( 28.09.17 ) மாலை ஆயுதபூஜையை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் கொடுத்த பொரி, பொட்டுக்கடலை பையையும் இன்னும் சிலவற்றையும் கொண்டு வந்தார். எனக்கு எனது பணிக்காலத்தில் நான் பணியாற்றிய வங்கிக் கிளைகளில் நடைபெற்ற பூஜைநாட்கள் நினைவுக்கு வந்தன.

எல்லாம் முதல்நாளேதான்.

நாளைக்கு ஆயுதபூஜை என்றால், முதல்நாளே, அதாவது இன்றைக்கே பெரும்பாலும் எல்லா அலுவலகங்களிலும் எல்லா வேலைகளையும் சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு அலுவலகத்தில் பூஜை செய்து விடுகிறார்கள். நான் வேலைக்கு சேர்ந்த புதிதில், ஒரு சீனியரிடம் “ சார் .. நாளைக்குத் தானே ஆயுதபூஜை. நாம் இன்றைக்கே அந்த பூஜையை செய்வது சரிதானா?” – என்று கேட்டேன். அதற்கு அவர் “ நீ சொல்வது சரிதான் … ஆனால் நாளைக்கும் நாளை மறுநாளும் இரண்டு நாள் ஆபிஸ் லீவு .. பூஜைக்காக யாரும் மெனக்கெட்டு வரமாட்டார்கள். அதனால் எல்லா ஆபிசிலும் இன்று இப்படித்தான்” என்றார். இதற்கு சாத்திரத்தில் ஏதேனும் விதிவிலக்கு இருக்கிறதா என்று நான் கேட்கவில்லை. வந்தோமா வேலையைப் பார்த்தோமா என்று ஓடிக் கொண்டு இருந்த நேரம் அது. நானும் எல்லோருடனும் சேர்ந்து சாமியைக் கும்பிட்டு விட்டு, கொடுத்த கொண்டைக்கடலை, பொரி, பழம் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு ட்ரெயினுக்கு நேரம் ஆயிற்று என்று அன்றைக்கு கிளம்பி விட்டேன்.

இதுவே நடைமுறை

ஆயுதபூஜை மட்டுமல்ல, அரசு அலுவலர்கள், அவரவர் அலுவலகங்களில் கொண்டாடும் பொங்கல், தீபாவளி போன்ற எல்லா பண்டிகைகளிலும் இதே நடைமுறைதான். எப்படியோ மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சரி. இதுவாவது பரவாயில்லை, முதலமைச்சர், அமைச்சர்கள், கலெக்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் சில தினங்களில், தீண்டாமை ஒழிப்பு, தீவிரவாத எதிர்ப்பு என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். ஒருவேளை அந்த தினம் விடுமுறை நாளாக இருந்தால், அதற்கு முதல்நாளே உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும். நல்லவேளையாக இந்திய சுதந்திரதினத்தை அன்றைய தினத்தில் மட்டுமே கொடியேற்றி கொண்டாடுகிறார்கள். 

நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை

நவராத்திரிவிழா என்றாலே எங்கள் வங்கியில் அது பெண்கள் கொண்டாடும் விழாவாக மாறி விடும். அதிலும் நான் வேலை பார்த்த இரண்டு கிளைகள், பெண் ஊழியர்கள் அதிகம். எல்லோரும் அந்த ஒருவாரம் பட்டு உடுத்திதான் வருவார்கள். இன்னும் சிலர் தங்கள் வீட்டு குழந்தைகளையும் அழைத்து வருவார்கள். முதல்நாளே கொலு வைத்து விடுவார்கள். வேலை நேரம் முடிந்ததும் கொலு வைத்துள்ள இடத்தில் பூஜை செய்து எல்லோருக்கும் அன்றைக்கு என்று விஷேசமாக செய்யப்பட்ட கொண்டைக்கடலை அல்லது பொங்கல் என்று பிரசாதத்தை வழங்குவார்கள். இந்த பிரசாதத்தை செய்யும் பொறுப்பை வெளியில், ஊழியர்களில் யாருக்கேனும் தெரிந்த ஒரு சமையல் மாஸ்டரிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

ஆயுதபூஜைக்கு விடுமுறை என்பதால். முதல்நாளே நவராத்திரி நிறைவு விழா, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என்று ஒரேநாளில் முடிந்துவிடும். அன்று எல்லோருக்கும் பொரி பொட்டுக்கடலை பொட்டலங்கள் மற்றும் தொன்னையில் வைக்கப்பட்ட மசாலாவுடன் கூடிய கொண்டைக்கடலையும் வழங்கப்படும். எல்லாம் முடிந்தவுடன் அந்த கொலு பொம்மைகள் ஒரு கறுப்பு டிரங்கு பெட்டியில் வைக்கப்பட்டு ஒரு மூலைக்கு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டு விடும். இனிமேல் அது அடுத்த ஆண்டுதான் திறக்கப்படும்.

மதச்சார்பற்ற

எனக்குத் தெரிந்து ரொம்பகாலமாக இந்த ஆயுதபூஜை என்பது மதச்சார்பற்ற ஒன்றாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சியில் பெரும்பாலும் மோட்டார் மெக்கானிக்குகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் டிரைவர்கள், ரெயில்வே ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள்  என்று எல்லா உழைக்கும் வர்க்கத்தினரும் இதில் மதவேறுபாடு இல்லாது ஒன்றாகவே கொண்டாடுகிறார்கள். வருடா வருடம் ஒவ்வொரு கார் ஸ்டாண்டிலும் இன்னிசை கச்சேரி நடக்கும். சென்ற ஆண்டு இதேநேரம் ஜெயலலிதாவின் உடல்நிலையை முன்னிட்டு இந்த கச்சேரி கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டார்கள். இந்த ஆண்டு முதல் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.


Tuesday 26 September 2017

காக்காமூக்கு செடி



நாங்கள் இருப்பது புறநகர்ப் பகுதி. அங்கங்கே காலிமனைகள். கடந்த சிலநாட்களாக நாட்டில் நல்ல மழை. எங்கள் ஏரியா பக்கமும்தான்.

புதிய பூவிது பூத்தது

மழைக்குப் பிறகு, எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் காலிமனைகளில் திடீரெனெ, பெரிய இலைகளுடன் புதிது புதிதாக சில செடிகள் - பூக்கவும் தொடங்கி விட்டன.




இதற்கு முன்னர் இந்த செடிகளை இங்கு பார்த்ததில்லை. ஆனாலும் வேறு எங்கோ இதே செடிகளை பார்த்ததாக நினைவு. பெயரும் தெரியவில்லை. சிலரைக் கேட்டதில் அவர்களும் தெரியவில்லை என்று சொல்லி விட்டார்கள். எனவே கிராமத்தில் இருக்கும், தஞ்சையில் தோட்டக்கலை துறையில் பணிபுரியும், எனது மாமா பையனுக்கு வாட்ஸ்அப்பில் இந்த செடிகளை படம் எடுத்து அனுப்பி விவரம் கேட்டு இருந்தேன். அவரும் தனது பதிலில், Botany name: martynia annua, Common name: Devil’s claw, Family name: pedaliaceae என்று தெரிவித்து இருந்தார்

செடியின் பெயர்

அப்புறம் வழக்கம்போல் martynia annua என்று கூகிளில் தேடியதில் விவரங்கள் கிடைத்தன. இந்த செடியானது தமிழில் புலிநகம், காக்காமூக்கு செடி, என்றும் பல்வேறு பெயர்களில் இதன் காயின் வடிவத்தை வைத்து அழைக்கப்படுகிறது. பூனைப்புடுக்கு என்றும் தமிழில் சொல்லுகிறார்கள். இந்த செடியின் காயும் அப்படித்தான் தோன்றுகிறது. தெலுங்கில் கருடமூக்கு என்று அழைக்கிறார்கள்.

காக்காமூக்கு செடியின் காய்

கீழே உள்ள காக்காமூக்கு செடி காய் படங்களைப் பார்க்கும் போது பெயர்ப் பொருத்தம் சரியானதாகவே தோன்றுகிறது. காரணப் பெயர் எனலாம். ஆங்கிலத்திலும் இந்த செடியின் பூவின் தோற்றத்தை வைத்துதான் Tiger’s claw, Devil’s claw, Cat’s claw என்று அழைக்கிறார்கள். Unicorn Plant என்பது இதன் பொதுப்பெயர்.

(கீழேஉள்ள படங்கள் : கூகிளுக்கு நன்றி)

9030 Photo By Marco Schmidt (Own work (own foto)) [CC-BY-SA-2.5 (http://creativecommons.org/licenses/by-sa/2.5)], via Wikimedia Commons Image 2 of 3

                                                                                                                                                      
நோய்க்கு மருந்து:

இது ஒரு காட்டு மூலிகை என்றாலும் TB (tuberculosis) எனப்படும் காசநோய், தொண்டைப்புண், பாம்புக்கடி, காக்கைவலிப்பு போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படும் என்று மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன.

குறிப்பு: தேள்கொடுக்கி என்றும் இந்தசெடி விக்கிபீடியாவில் சொல்லப்பட்டுள்ளது; ஆனால் தேள்கொடுக்கி என்று வேறொரு மூலிகையை இண்டர்நெட்டில் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

பிற்சேர்க்கை ( 27.செப்.17 - 3.57 p.m )

புலி நகம் செடி பற்றிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி! Martynia annua எனப்படும் புலி நகம் (காக்காமூக்கு) செடி Martyniaceae எனப்படும் தாவர குடும்பத்தை சேர்ந்தது. Pedaliaceae குடும்பத்தை சேர்ந்தது அல்ல. எள்ளு (Sesamum indicum) போன்றவகள் தான் Pedaliaceae குடும்பத்தை சேர்ந்தவை.


Tuesday 19 September 2017

தான் பொய்யாத தண்தமிழ்ப் பாவை – காவேரி



       பாடல் சால் சிறப்பின் பரதத் தோங்கிய
         கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி
         கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
         தான் நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை”
-    ( மணிமேகலை: 5.25 )

இப்போது திருச்சியில், காவிரியில் மகா புஷ்கர விழா என்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கடந்த 12–ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த மகா புஷ்கர விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு காவிரியில் நீர்ப் பெருக்கு. கல்லணையிலும் நீர் நிரம்பி திறந்து விடப்பட்டுள்ளதாக செய்தி. காய்ந்து போய், வறண்டு கிடந்த கல்லணையைப் பற்றி சென்றமுறை பதிவு ஒன்றை எழுதிய எனக்கு, இந்தமுறை, 17.09.17 ஞாயிறு அன்று தண்ணீர் நிரம்பிய காவிரியை சென்று பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. 

நடந்தாய் வாழி காவேரி

காவிரி என்றாலே இளங்கோ அடிகளுக்கு அதன்மீது அப்படி ஒரு காதல். புகார்க்காண்டத்தில் காவிரியை அப்படி புகழ்ந்து இருப்பார். நமக்கும் காவிரி என்றாலே, தண்ணீரும் காவிரியே என்று பார்ப்பதில் அளவற்ற மகிழ்ச்சிதான். அன்றுமாலை, எனது அம்மாச்சியின் ஊருக்கு(புதகிரி) சென்று விட்டு, திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அகரப்பேட்டை வழியாக கல்லணைக்கு வந்தேன். விடுமுறை நாள் என்பதால் அணைநீர் வெளியேறுவதைக் காண, வந்த மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கூடவே காவிரியில் கடலை போட வந்த செல்பி ஜோடிகள். போலீஸ்காரர் ஒருவர் மைக்கில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தார். ஆங்காங்கே இரண்டிரண்டு போலீஸ்காரர்கள்.

(படம் மேலே) கல்லணையிலிருந்து நீர் வெளியேறும் காட்சி.

(படம் மேலே) எந்த படத்தையும் ஒரு பின்னணியோடு எடுத்தால், அந்த காட்சி ரசிக்கத் தோன்றும். ஒரு மரத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

(படம் மேலே) எனது செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ ( சில நொடிகள் மட்டும் )

(படம் மேலே)  நடந்தாய் வாழி காவேரி

(படம் மேலே) இதுவும் அது

(படம் மேலே)  திறந்து விடப்படாத மதகின் அருகே, ஒதுங்கும் அடித்து வரப்பட்ட  குப்பைகள், கழிவுகள்






(படங்கள் மேலே) நீர் நிரம்பிய கல்லணை 

கல்லணை சிற்பிகள்

படம் மேலே - கல்லணையை நிர்மாணித்த கரிகால் சோழன்                        

கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனின் பெருமையையும், அணையின் நுட்பமான பெருமையையும் வெளி உலகுக்கு தெரியச் செய்தவர் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயர். இவர் கல்லணையை ஆய்வு செய்து மணற்போக்கிகளை அமைத்தார்..கல்லணைக்கு Grand Anicut என்ற பெயரைச் சூட்டியவரும் இவரே. 

படம் மேலே சர் ஆர்தர் காட்டன் நினைவாக ( கல்வெட்டில் உள்ள வாசகம்: SIR ARTHUR COTTON. The Engineer Who Designed & Constructed the under sluices across Coleroon during 1839 – Statue installed on 09.01.2005 )

அதேபோல இன்னொரு ஆங்கிலேயர் கர்னல் W.M..எல்லிஸ். இவர் சர் ஆர்தர் காட்டன் கனவு கண்ட காவேரி மேட்டூர் திட்டத்தை வடிவமைத்தவர். இவரே கல்லணைக்கும் வடிவமைத்துள்ளார். அவரைப் பாராட்டும் விதமாக குதிரை வீரன் சிலை அருகே ஒரு கல்வெட்டு.

படம் மேலே - கர்னல் W.M..எல்லிஸ் நினைவாக (கல்வெட்டில் உள்ள வாசகம்: CAUVERY METTUR PROJECT – GRAND ANICUT CANAL DESIGNED BY COL.W.M.ELLIS. C.I..E-R.E HEAD SLUICE STARTED 1929 COMPLETED 1931)

மற்ற காட்சிகள்

காவிரி புஷ்கரத்தை முன்னிட்டு, காவிரியில் தண்ணீர் திறந்து விடப் பட்டாலும், கல்லணையில் உள்ள மற்ற வெண்ணாறு, புதுஆறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மேட்டூர் அணை நிரம்பி, இங்கு நீர் வந்ததும் இந்த ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்படும். ( காவிரி பெருக்கெடுக்கும் சமயங்களில் மட்டும் கொள்ளிடத்தில் நீர் திருப்பி விடப்படும். )

(படம் மேலே) எனது சிறு வயதில், கல்லணைக்கு முதன் முதல் வந்தபோது நான் பார்த்த அந்த அகத்தியர் சிலை

(படம் மேலே) தேங்கிய குளமாய் காட்சி அளிக்கும் வெண்ணாறு

(படம் மேலே) பூங்காவில்

(படம் மேலே) எச்சரிக்கைப் பலகை

தொடர்புடைய எனது பிற பதிவு:
வறண்டாய் வாழி காவேரி! http://tthamizhelango.blogspot.com/2017/07/blog-post.html



Saturday 16 September 2017

சேம்பு எனப்படும் சேப்பங் கிழங்கு



ரொம்ப நாளைக்கு அப்புறம், எங்கள் சொந்த ஊருக்கு (திருமழபாடி) அருகில் உள்ள, எனது பெரியம்மா ஊருக்கு சென்று இருந்தேன்.  ஊரின் பெயர் ஆலம்பாடி மேட்டூர். இந்த ஊர், லால்குடி மார்க்கத்தில், சிதம்பரம் சாலையில், புள்ளம்பாடி, விரகாலூர் தாண்டி உள்ளது. கொள்ளிடம் ஆறு, வாய்க்கால், குளம் என்று பசுமையாக இருக்கும். சின்ன வயதினில் அந்த ஊருக்கு அடிக்கடி சென்று இருக்கிறேன். போன தடவை போயிருந்த போது மழை இல்லாததால் வறட்சிதான். இப்போது ஒருவாரமாக நல்ல மழை. எனவே இந்த தடவை ஊரில் நிறையவே பசுமை. வாய்க்கால் ஓரத்திலும் குளக்கரையிலும் நிறையவே சேமை இலைச் செடிகள். சேம்பு எனப்படும் இந்த சேப்பங் கிழங்குச் செடிகள். மஞ்சள் செடியைப் போன்று கொத்து கொத்தாக காட்சி தந்தன. (அப்போது அந்த ஊரில் எடுத்த புகைப்படங்கள் கீழே)




அந்த ஊருக்கு பள்ளி விடுமுறையில் போகும்போதெல்லாம், எனது வயதுப் பையன்களோடு, இந்த இலைகளை வைத்து விளையாடி இருக்கிறேன். எனக்குத் தெரிந்து திருச்சி, அரியலூர் மார்க்கத்தில் உள்ள ஊர்களில் பல உணவு விடுதிகளில் இந்த சேம இலையைத்தான் டிபன் கட்ட பயன்படுத்தினார்கள். குறிப்பாக இறைச்சி கடைகளில் இந்த இலைதான். இப்போது எல்லவற்றிலும் பிளாஸ்டிக் மயம்.

இந்த சேம்பு செடிகள் குத்துகுத்தாக, மஞ்சள் செடிகளைப் போன்றே வளரும். இந்த செடியின் அடியில் விளையும் கிழங்கு சேப்பங்கிழங்கு எனப்படும். சேப்பங்கிழங்கு பொரியல், சேப்பங் கிழங்கு புளிக்குழம்பு, சேப்பங் கிழங்கு மோர்க்குழம்பு சமையலில் பிரசித்தம். கிழங்கு வழவழவென்று இருக்கும். செய்யும் முறையில் செய்தால் சுவையோ சுவை. ( இந்த சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பை திருச்சி ஆண்டார் வீதியில் இருக்கும் ‘மதுரா லாட்ஜ்’ ஹோட்டலில் ருசித்து சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன.) இந்த சேப்பங்கிழங்கை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கலும் மூல வியாதியும் வராது என்று பெரியவர்கள் சொல்ல கேள்விப் பட்டு இருக்கிறேன்.   

                            (படம் – மேலே – சேப்பங்கிழங்கு – நன்றி கூகிள் )

எங்கள் ஊர்ப்பக்க, வாய்க்கால் ஓர செடிகளாக இருக்கும், இந்த சேப்பங் கிழங்குச் செடிகள், சில இடங்களில், வயல்களில் பயிரிடப்பட்டு நல்ல லாபத்தைத் தரும் தொழிலாக உள்ளது.

பிற்சேர்க்கை ( 18.09.2017 – 19.05 P.M )

ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மற்றும் வேளாண்மையில் பட்டம் பெற்றவருமான, மூத்த வலைப்பதிவர் V.N.S அய்யா அவர்கள், கருத்துரைப் பெட்டியில், மேலே பதிவு சம்பந்தமான ஒரு கருத்துரையை, ஒரு திருத்தத்தை கீழே சொல்லி இருக்கிறார். 

நீங்கள் வாய்க்கால் ஓரத்தில் பார்த்தவை சேப்பங்கிழங்கு குடும்பமான Araceae வைச் சேர்ந்தவை. ஆனால் அவை சேம்பு (சேப்பங்கிழங்கு) செடிகள் அல்ல என எண்ணுகிறேன். . நாம் சாப்பிடும் சேம்பு வின் தாவரப்பெயர் Colocasia esculenta. சேம்பில் மட்டும் ஆறு வகைகள் உள்ளன. 
  
சேம்பைப்பற்றி வெளியிட்டு சேப்பங்கிழங்கு வறுவலையும், மோர்க்குழம்பையும் நினைவூட்டிவிட்டீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி! //