Sunday, 29 January 2017

வலையுலக அனுபவங்கள்(இன்று (29.01.2017 ஞாயிறு) வீதி – கலை இலக்கிய அமைப்பின் 35 ஆவது சந்திப்பு, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய மாடியில் அமைந்து இருக்கும், ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜில் காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது அந்த கூட்டத்தில் பேசுவதற்கு உதவியாக நான் எடுத்து வைத்து இருந்த எனது கட்டுரை இது)
.
கூட்டத்தின் தலைவர் T.சுதந்திரராஜன் அவர்களுக்கும், அமைப்பாளர் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும் புரவலர் கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கம். ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்கள் நேற்று முன்தினம் இம்மாத வீதி இலக்கிய கூட்டத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை (29.01.2017)  உங்கள் வலையுலக அனுபவங்கள் என்ற தலைப்பில் பேச முடியுமா என்று கேட்டார். நானும் சரி என்று சொல்லி, அப்போதே எனது வலைத்தளம் சென்று  குறிப்புகள் எடுக்கத் தொடங்கி விட்டேன்.  வலையுலக அனுபவங்கள் என்று எடுத்துக் கொண்டால், தொடர்ந்து எழுதும் எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பது எனது கருத்து. 

வலைப்பூ தொடக்கம் 

எங்கள் வீட்டில் 2005 இல் கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் இணைப்பு வாங்கியவுடன், தமிழ்மணம் போன்ற தமிழ் திரட்டிகளை படிக்கும் வாசகனாகவே இருந்தேன். பின்னர் கருத்துரைகளை எழுதும் ஆர்வம் வந்தபோது, தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியாது. எனவே வலைப்பதிவில் ஞானவெட்டியான் என்னும் பெயரில் எழுதிவந்த திரு ஜெயச்சந்திரன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அவர் இகலப்பை (eKalappai) என்ற தமிழ் எழுதியைப் பற்றி சொன்னார். இவர் நான் பணிபுரிந்த வங்கி கிளையில் எங்களுக்கு கள அதிகாரியாக இருந்தவர். இந்த இகலப்பை உதவியால் வலைப்பதிவுகளில் Open ID மூலம் பின்னூட்டங்கள் எழுதி வந்தேன். பின்னர் நாமும் ஒரு வலைப்பூ தொடங்கலாமே என்று யோசித்தபோது  வேர்ட் ப்ரெஸ்சிலா (Wordpress) அல்லது ப்ளாக்கரிலா (Blogger) என்று யோசித்தபோது, எல்லோரும் அதிகம் பயன்படுத்தும் ஜிமெயில் வழியான ப்ளாக்கரைத் தேர்ந்தெடுத்து ’பூவரசம் பூ’ என்ற வலைத்தளத்தை தொடங்கினேன். ஆனால் அதில் தமிழ்மணம் ஓட்டுபட்டைக்காக, HTML இல் மாற்றம் செய்தபோது அந்த வலைத்தளமே காணாமல் போனது. எனவே சில மாதம் சென்று, எனது எண்ணங்கள் http://tthamizhelango.blogspot.com என்ற இப்போதைய வலைத்தளத்தினை 19 செப்டம்பர் 2011 அன்று தொடங்கி  எழுதி வருகிறேன். வலைப்பதிவர்  திரு Faizal K.Mohamed  அவர்கள் எழுதிய. ஒரு கட்டுரையைப் படித்த பின்பு NHMWriter என்ற தமிழ் எழுதியையே இன்று எல்லா வகையிலும் பயன்படுத்தி வருகிறேன்.

என்ன எழுதுவது? 

தொடக்கத்தில் இலக்கியம் சம்பந்தமான பதிவாகவே இருக்க வேண்டும் என்று எழுதத் தொடங்கினேன். பின்னூட்டங்கள் என்று எடுத்துக் கொண்டால், ஆரம்பகாலத்தில் என்னுடைய பல பதிவுகளுக்கு பூஜ்யம்தான். இதனை ஆதங்கமாக வைத்து ஒரு பதிவு ஒன்றை (புதிய பதிவர்களே! பின்னூட்டம் பற்றி கவலைப் படாதீர்கள்!) வெளியிட்டேன். http://tthamizhelango.blogspot.com/2011/10/blog-post_25.html அதில் அப்போது அடிக்கடி வலையுலகில் வலம் வந்த வவ்வால் என்பவர்,

// சாரே கவலைப்பட்டாதிங்க நான் உங்களுக்கு ஆதரவு தரேன்.(பின்னூட்டம் கிடைக்காம ரொம்ப நொந்து போயிருப்பிங்க போல தெரியுது) இப்படி மரங்களை காப்போம், மண் வளம் காப்போம் , விவசாயிகள் பாவம்னுலாம் பதிவுப்போட்டா யாரும் எட்டிப்பார்க்கமாட்டங்க(அனுபவம்) சினிமா விமர்சனம்(கில்மா படமா இருந்த டபுள் ஓகே) அடல்ட் ஜோக், கிசு..கிசு எழுதீனா கல்லா கட்டலாம்! :-)) நான் கூட பேங்கில இருந்து வீஆரெஸ் வாங்கலாம்னு பார்க்கிறேன், ஆனால் ஒரு பேங்கிலும் எனக்கு வேலைத்தரமாட்டேன்கிறாங்க :-)) //

என்று நகைச்சுவையாக பின்னூட்டம் எழுதி இருந்தார். அவரது பின்னூட்டம் என்னை யோசிக்க வைத்தது. எனவே வலையுலகை ஒரு மீள்பார்வையாக பார்த்தேன். அப்போது வலையுலகில் மதச் சண்டை, ஜாதிச் சண்டை என்று ஒருபோக்கு ஓடிக் கொண்டு இருந்தது. எனவே எந்த நீரோட்டத்திலும் கலக்காது, அரசியல், அனுபவம், இலக்கியம், கவிதை, நூல் விமர்சனம், சினிமா, என பல்வேறு தலைப்புகளில் எழுதத்தொடங்கினேன். குறிப்பாக சினிமா, அரசியல் என்று எனது பழைய அனுபவங்களோடு நிகழ்கால சூழலையும் கலந்து எழுதியபோது எனது தளத்திற்கு நிறையபேர் வந்தார்கள். எந்த ஒரு பதிவையும் நமது அனுபவத்தோடு, நம்பகத் தன்மையோடு, மற்றவர்களை காப்பி செய்யாமல் நமது தனித் தன்மையோடு எழுதினால் வலையுலகில் நிச்சயம் வரவேற்பு உண்டு. நான் எனது தன்விவரத்தை (PROFILE) வெளிப்படையாகவே வைத்துள்ளேன்..எந்த பொருளில் எழுதினாலும், பொதுவெளியில் இந்தப் பதிவால் ஏதேனும் சட்ட சிக்கல் வருமா என்பதனையும் யோசித்துக் கொள்வேன். 

விமர்சனங்கள் (COMMENTS)

பல்வேறு தலைப்புகளில் எழுதினாலும் எனது தளத்திற்கு வந்து ஊக்கமளித்தவர்கள் மட்டுமல்லாது எதிர்மறை கருத்து தெரிவித்தவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் என்று எல்லோரும் உண்டு. பெரும்பாலும் அவைகள் எல்லாவற்றிற்கும் மறுமொழிகள் கொடுத்து விடுவேன். அதேபோல அவர்களுடைய வலைத்தளங்கள் சென்று எனது கருத்துரையையும் எழுதுவேன். ஆனாலும் ஒருகட்டத்தில் பெயரிலிகள் (Anonymous), முகமூடிகள், போலிகள் (Fake ID) என்று விதண்டாவாதம் செய்பவர்களின் தொந்தரவுகள் அதிகமாக இருந்தது. எனவே எனது வலைத்தள Comments Settings சென்று, அதில் இருந்த Anonymous தேர்வை நீக்கி விட்டேன். இருந்தாலும் சிலர் பேருக்கு ஒரு ஐடியை வைத்துக் கொண்டு வருகிறார்கள் (அவர்கள் தன்விவரம் (PROFILE) சென்று பார்த்தால் ஒன்றுமே இருக்காது) அவர்களால் பிரச்சினை ஏதும் இல்லாத வரை சரிதான்.

வலைப்பதிவர் சந்திப்பு:

நான் தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்தது நமது வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றால் மிகையாகாது. அந்த வகையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் நிறைய பதிவர்களை சந்திக்க முடிந்தது. இதன் பெருமை புதுக்கோட்டை ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களையே சேரும். அடுத்து மூத்த வலைப்பதிவர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை முன்னிட்டு பல வலைப்பதிவர்கள் எனக்கு அறிமுகம் ஆனதோடு சிலரை பதிவர்கள் சந்திப்பிலும் சந்திக்க முடிந்தது. மூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களும் எந்த ஊர் சென்றாலும், அந்த ஊர் வலைப்பதிவர்களைச் சந்திப்பதில் ஆர்வம் உள்ளவர்.

இந்த அடிக்கடியான வலைப்பதிவர் சந்திப்பின் வெற்றிக்கான முக்கியமான காரணம், அவரவர் எல்லையை உணர்ந்து , அவரவர் இடத்தில் இருந்து கொண்டு நட்பை தொடர்வதுதான்.
     
தொழில்நுட்ப அனுபவங்கள்:

வலைப்பதிவர் ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு மின்னஞ்சலும் , வலைப்பதிவிற்காக இன்னொரு மின்னஞ்சலும் வைத்துக் கொள்வது நல்லது. 

எனது வலைத்தளத்திற்கான எந்த தொழில்நுட்ப உதவி என்றாலும், Blogger இல் உள்ள Help பகுதிக்கு சென்று தேடுவேன். அல்லது Google சென்று ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் தேடினால் நிச்சயம் தீர்வு கிடைத்துவிடும். 

ஒருமுறை ஏற்கனவே வெளிவந்த, ’எல்லோர் கையிலும் ‘ரிவால்வர்’ என்ற பதிவினை எடிட் செய்யும்போது, DASHBOARD இல் ஏதோ ஒரு குழப்பத்தில் தவறுதலாக நீக்கி விட்டேன். பின்னர் Google's cache உதவியுடன் கண்டெடுத்து மீண்டும் அப் பதிவையும் அதிலுள்ள பின்னூட்டங்களையும் அப்படியே வெளியிட்டேன்.

என்னால் ஏதேனும் முடியாத பட்சத்தில் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு போன் செய்து அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே செய்து விடுவேன். நான் வலைப்பதிவு தொடங்கிய காலத்தில் எனது வலைப்பதிவில் Reply Button கிடையாது. ஏற்கனவே சுட்டுக் கொண்ட அனுபவம் காரணமாக, நானாகவே HTML இல் மாற்றம் செய்ய எனக்கு பயம். எனவே நான் என்னுடைய பாஸ் வேர்டை அவருக்கு அனுப்பி வைத்து மாற்றம் செய்து கொண்டேன். இப்போது ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் கீழே நான் மறுமொழிகள் எழுத எளிமையாக இருக்கிறது. 


Wednesday, 25 January 2017

திசைமாறிய போராட்டம்
ஜல்லிக்கட்டு பற்றிய எனது அபிப்பிராயம் எப்படி இருந்த போதிலும், சென்னை மெரினாவில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட போலீஸ் வன்முறையைக் கண்டு மனம் பதறாமல், கண்டிக்காமல் இருக்க முடியவில்லை. 

ஏதோ ஒரு ஆர்வத்தில் அல்லது ஆவேச உணர்வில், சமூக வலைத்தளம் வழியே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விடுக்கப்பட்ட வேண்டுகோள் முதலில் நூறுக்கும் குறைவான இளைஞர்களையே மெரினாவில் கொண்டு வந்து சேர்த்தது. ஆனால் வலைப்பின்னல் (Net Work) தாக்கம், நேரம் ஆக ஆக,  நூறு, ஆயிரம், பத்தாயிரம் என்றும் அதற்கு மேலும் மக்கள் கூடி விட்டனர். (ஏனெனில் ஒவ்வொரு குழுவிலும் குறைந்த பட்சம் நூறு உறுப்பினர்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம்)
                                                                                                                                                                 

ஆனால் இவ்வாறு கூடியவர்களுக்கு என்று ஒரு பொதுவான தலைமை இல்லை. இன்னின்னார்தான் வரவேண்டும், போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. எனவே உணர்வுபூர்வமான நிறையபேர் கலந்து கொண்டனர் என்பதே உண்மை. ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்க என்று தொடங்கிய இந்த அமைதிப் போராட்டத்தில், பின்னர் தமிழக நலன்சார்ந்த மற்ற பிரச்சினைகளுக்கும் சேர்த்து குரல் கொடுக்கப் பட்டபோது அதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் குரல் ஓங்கி ஒலிக்கப்பட்டது. இதனை சிலர் ரசிக்கவில்லை. 

சாதாரணமாகவே நாலுபேர் கூடினாலே ரெண்டு தட்டு தட்டும் போலீசும் மேலிடத்து உத்தரவு காரணமாக, இதனைக் கண்டு கொள்ளவில்லை. காரணம் ஜெயலலிதா மரணத்திற்குப் பின். இப்போது நிலவும் அசாதரணமான அரசியல் சூழல்தான். எப்போதுமே சிவப்பு சிந்தனை கொண்ட சில இயக்கங்களைக் கண்டாலே போலீசுக்கு அலர்ஜிதான்.. முன்னாள் டிஜிபி வால்டேர் தேவாரம் தொடங்கி இன்றுவரை எல்லா போலீஸ் அதிகாரிகளும், தமிழ்நாட்டில் நக்சல்களை ஒழித்து விட்டோம் என்று சொன்னாலும், அவ்வப்போது இது மாதிரியான மக்கள் போராட்டங்களில், அவர்களைக் காரணம் காட்டி ‘சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து விட்டார்கள்’ என்று போராட்டத்தை ஒடுக்குவது எப்போதுமே நடக்கும் ஒன்றுதான். அந்த வகையில் இப்போது நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தையும் திசை திருப்பி விட்டார்கள்.
                                                                                                                                                                   

மெரினாவில் அதிக அளவில் போலீஸ்படை குவிக்கப்பட்டவுடனேயே அல்லது மைக்கைப் பிடித்து, ”அவசரச் சட்டம் நிறைவேற்றப்படும்; உங்கள் கோரிக்கைக்கு வெற்றி; எல்லோரும் வெளியேறுங்கள்” என்று போலீஸ் சொன்னபோதே, இந்த போராட்டக்காரர்கள் சுதாரித்து வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ கடந்த ஆறு நாட்களாக போலீஸ் கொடுத்த ஒத்துழைப்பை நினைத்து, ‘போலீஸ் உங்கள் நண்பன்’ என்றாலும் சற்று விலகியே இருக்க வேண்டும் என்ற கடந்தகால போராட்ட அடக்குமுறைகளைப் பாடமாகக் கொள்ளாமல் ஏமாந்து விட்டார்கள். ஏனெனில் கீழ் நிலையில் உள்ள போலீஸ்காரர்களுக்கு மேலிடத்திலிருந்து எந்த மாதிரியான உத்தரவு எப்போது வரும் என்று அவர்களுக்கே தெரியாது.


இப்போது நீதிவிசாரணை தேவை என்று சொல்லுகிறார்கள். இதற்கு முன் நடந்த நீதிவிசாரணைக் கமிஷன்களின் தீர்ப்புகள் என்னவாயிற்று? என்ன செய்தார்கள்? என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். எதிர்க் கட்சியாக இருக்கும்போது போலீஸ் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள், ஆளும் கட்சியாக வந்த பிறகு, அவர்களும் அதே தவறினைச் செய்கிறார்கள். போலீஸ்துறை சுதந்திரமாக இல்லாது ஆட்சியாளர்களின்  கைப்பாவையாய் இருக்கும்வரை, இந்தமாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும்.
                                                                                                                                                                   

எது எப்படி இருந்த போதிலும், இந்த ஜல்லிக்கட்டை முன்னிட்டு, தமிழகத்தில் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி ஜனாதிபதி ஆட்சி அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட அரசாங்கம் (freezed government) வரவும், ஆறுமாதம் சென்று பொதுத்தேர்தல் வரவுமே வாய்ப்புகள் அதிகம். யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது கேள்விக் குறிதான்?
           
                                 (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

Thursday, 19 January 2017

ஜல்லிக்கட்டும் மாற்று கருத்தும்நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பதைப் போல, எந்த ஒன்றினைப் பற்றியும், இருவேறு கருத்துகள் உண்டாவது இயல்பு. அது போலவே ஜல்லிக்கட்டு விஷயத்திலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்று இருவேறு நிலைகள் உண்டு. இதன் எதிரொலி, இப்போது கூகிளில் ‘நீங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிப்பவரா இல்லையா’ என்று வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 

எனது பதிவும் எதிர்ப்பும்

ஜல்லிக்கட்டு விஷயத்தில் எனது நிலை என்பது, எதிர்ப்பு நிலைதான். (ஜல்லிக்கட்டு ஆதரவாளர் இல்லை) எனவே ஒரு வலைப்பதிவர் என்ற முறையில், சென்ற ஆண்டு (2016), ’ஜல்லிக்கட்டு – தடை வேண்டும்’ என்ற தலைப்பினில் http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post.html எனது வலைத்தளத்தில் ஒரு கட்டுரையை வைத்தேன். எனது கருத்துரைப் பெட்டியில் (Comments Box) ஆதரவு, எதிர்ப்பு என்று நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லி இருந்தார்கள்; நானும் அவற்றினுக்கு எனது நிலையில் மறுமொழிகளைத் தந்து இருந்தேன்.

பீட்டா (PETA) போன்ற அமைப்புகள் எதிலும் நான் சேரவில்லை. அவர்கள் ஜல்லிக்கட்டில் காளையை துன்புறுத்துகிறார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி எதிர்க்கிறார்கள். ஆனால் என்னைப் போன்றவர்கள், மனிதர்கள் இந்த ஜல்லிக்கட்டில் பலத்த காயமடைகிறார்கள், கை கால் ஊனமாகிறார்கள் மரணமடைகிறார்கள் என்ற ஆதங்கம் காரணமாக எதிர்க்கிறோம். இதில் என் போன்றவர்களது நிலைப்பாட்டில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். 
 
ஜல்லிக்கட்டு விஷயத்தில், சென்ற ஆண்டு இல்லாத அரசியல் பரபரப்பு , ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு இந்த ஆண்டில் அதிகம் உள்ளது. ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி, தமிழகத்தில் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம், மறியல் என்று செய்திகள் வருகின்றன.(இந்நேரம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்)

இந்த சூழ்நிலையில் எனது ஃபேஸ்புக்கிலும், நான் இணைந்துள்ள இரு வாட்ஸ்அப் குழுக்களிலும் மேற்படி எனது பதிவினை அண்மையில் பகிர்ந்தேன். இது விஷயமாக, ஒரு வலைப்பதிவு நண்பர் ஒருவர், எனது பதிவிற்கு, அவரது நண்பர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொன்னதாகவும், நீங்கள் இப்படி எழுதலாமா என்றும் ஆதங்கப்பட்டு என்னுடன் செல்போனில் பேசினார். நான் அவருக்கு மறுமொழியாக, உங்கள் நண்பர் எனது தளத்தில் கருத்துரை தந்தால் நான் விளக்கம் தருகிறேன் என்று சொல்லி விட்டு, ’இப்போது ஜல்லிக்கட்டுக்கு விரோதமாக யாரேனும் கருத்து சொன்னால், அவரைத் தமிழினத் துரோகியாகச் சித்தரிக்கும் போக்கு வந்துள்ளது’ என்றும் தெரிவித்தேன். 

இந்நிலையில், ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் நண்பர் ஒருவது வலைப்பதிவில் வந்த பின்னூட்டம் ஒன்றில்,

// நம்மில் இரு வலைப்பதிவர்களே மாறுபட்ட கருத்து சொல்கிறார்கள்... இதில் ஒருவர் தமிழ் இலக்கியம் (M.A) படித்தவர்... மற்றுமொருவர் ஊருக்கேற்ப குசும்புக்காரர்... இருவரும் பாவம்... இவர்களை திருத்த முடியாது..//

என்ற கருத்து பதியப்பட்டு இருந்தது. (இதில் தவறு ஏதும் இல்லை; அவர் கருத்தை அவர் சொல்லுகிறார்) இருந்தாலும் அவர் கருத்துப்படி, தமிழ் இலக்கியம் படித்தால் கட்டாயம் ஜல்லிக்கட்டை ஆதரிக்க வேண்டுமா? இல்லையேல் தமிழினத் துரோகி என்ற வரிசையில் வந்து விடுவார்களா?  இதில் மாற்றுக் கருத்து எதுவுமே சொல்லக் கூடாதா? என்பதுதான் எனது சந்தேகம். 

நமது இனம், கலாச்சாரம், பரம்பரை வழக்கம் என்று பலரும் பழைய பாதையிலேயே செல்லும் வேளையில், சிலர் மாற்றுக் கருத்தும் சொல்கிறார்கள் என்பதும் உண்மையே. பல பழைய கண்மூடிப் பழக்க வழக்கங்கள் (பரத்தையர் ஒழுக்கம், உடன்கட்டை ஏறுதல், விதவைக் கோலம், முதுமக்கள் தாழி, நரபலி, வெட்சி (ஆநிரை கவர்தல்) போன்றவை) இன்று இல்லாமல் போனதற்கு காரணம் என்னவென்று சொல்வது? காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாற்றம்தானே.

வரலாற்றுப் பக்கம் பார்வையைத் திருப்பினால் சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து, புத்தர், கலிலியோ, இராமாநுஜர், ராஜாராம் மோகன்ராய், பெரியார் ஈ.வெ.ரா என்று பல மாற்றுக்கருத்து சிந்தனையாளர்களைச் சொல்லலாம்.

இன்றைய போராட்டம்:

காவிரிப் பிரச்சினைக்காக கர்நாடகா மாநில பெங்களூருவிலிருந்து தமிழர்களைத் துரத்தி அடித்த போது வராத தமிழர் வீரம், ஜாதி ஆணவக் கொலைகள் நடந்தபோது வராத எல்லோரும் தமிழரே என்ற உணர்வு,  டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையின் போது வராத மாணவர் என்ற உணர்வு, அண்மையில் பணமதிப்பு இழப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்களின் மார்பகங்களின் மீது கைவைத்த கயமைத்தனத்தின் போது வராத ரோஷம் – இந்த ஜல்லிக்கட்டை முன்னிட்டு வந்து இருப்பது எதனால் என்பது, இதன் பின்புலம் என்ன என்ற கேள்வியில்தான் முடியும். உண்மையில் இப்போது, ஜல்லிக்கட்டை வைத்து, மக்களுக்கான மற்ற பிரச்சினைகளிலிருந்து மக்களை  திசை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.


Monday, 9 January 2017

பத்து ரூபாய் நாணயம்செல்போனில் சமூக வலைத் தளங்கள், வந்தாலும் வந்தன வதந்திகள் தான் வேகமாக பரவுகின்றன. போகிற போக்கில் யாராவது எதையாவது கிளப்பி விடுகிறார்கள்; அது உண்மையா பொய்யா என்று கூட தெரியாமல் பலரும் பகிர்ந்து கொள்கின்றனர். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறும்போது அந்த பொய், மெய் போலவே ஆகி விடுகிறது. அந்த வகையில் இப்போது நம்நாட்டில் ’பத்து ரூபாய் நாணயம்’ செல்லாது என்ற வதந்தியினால் படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறது. 

பஸ்சில் கடைகளில்:

ஒவ்வொரு பஸ்சிலும் நடத்துநர்களின் இப்போதைய புலம்பல் என்பது இதுதான்.

“ சார், யாரைப் பார்த்தாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வாங்க மாட்டேன் என்கிறார்கள். டெப்போவில் எங்களுக்கு சில்லறை தரும்போது, பத்து ரூபாய் நாணயங்களைத் தந்து விட்டு, நீங்கள் வாங்காதீர்கள் என்று சொல்லுகிறார்கள்” 

ஒருநாள் பஸ்சில் பயணம் செய்யும் போது, ஒரு பெண்மணியிடம் சில்லரை இல்லாத படியினால், நடத்துநர், ஒரு பத்து ரூபாய் நாணயத்தை எப்படியோ கொடுத்து விட்டார்; அந்த அம்மா புலம்பிக் கொண்டே இருந்தார். இரக்கப்பட்ட பயணிகளில் ஒருவர், பத்து ரூபாய் தாள் ஒன்றைக் கொடுத்து அதனை வாங்கிக் கொண்டார்.

ஒருமுறை ஒரு டீக் கடையில், ஒருவர் கொடுத்த பத்து ரூபாய் நாணயத்தை வாங்கிய கடைக்காரர் அதில் உள்ள கோடுகளை எண்ணிப் பார்த்து வாங்கிக் கொண்டார். அதாவது 10 கோடுகள் இருந்தால் நல்ல நாணயமாம்; 15 கோடுகள் இருந்தால் கள்ள நாணயமாம்; (இது தவறு) 

வங்கிகளில் ஏன் வாங்குவதில்லை?

அண்மையில் ஒரு செய்தியைப் படித்தேன்

// இதுதொடர்பாக வணிகர்களி டம் கேட்டபோது, "நாணயங்களைப் பராமரிப்பது மிக கடினம். ரூபாய் தாள்களாக இருந்தால் கவுண்டிங் மெஷினில் வைத்து சுலபமாக கணக்கிட முடியும். ஆனால், நாணயங்களை அப்படி கணக்கிட முடியாது. மேலும், இந்த நாணயங்களை, வங்கி அதிகாரிகள் வாங்க மறுப்பதால் வேறு வழியில்லாமல் நாங்களும் வாங்குவதில்லை" என்றனர்.// 

( நன்றி: தி இந்து (தமிழ்) தேதி டிசம்பர்,30,2016)

இங்கே இந்த வியாபாரிகள், தங்கள் சவுகரியத்திற்காக யார் மீது பழி போடுகிறார்கள் என்று பாருங்கள். ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்ட நாணயங்களை புழக்கத்தில் விடுவதுதான் வங்கிகளின் பணி. வங்கி வாடிக்கையாளர்கள் அந்த நாணயங்களை, மீண்டும் கணக்கில் கட்டினாலும், மீண்டும் புழக்கத்தில் விட வேண்டும். அதிக நாணயங்களை வங்கியில் இருப்பு வைத்து இருந்தால், ஏன் புழக்கத்தில் விடவில்லை என்ற கேள்வி வரும். செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே வங்கிகளில் திரும்பப் பெற்றுக் கொள்ளுதல் என்பது பொருந்தும்.. ஆனால் யாரோ கிளப்பிய வதந்திக்கு அதிகாரப் பூர்வமான நாணயங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளூதல் என்பது நாணயப் புழக்கத்திற்கு தீர்வாகாது.

பத்து ரூபாய் நாணயம் செல்லும்

சம்பந்தபட்ட அதிகாரிகள் பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிவித்த பிறகும் வாங்க மறுக்கிறார்கள். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும், ஐம்பது பைசா நாணயங்களை வாங்க மறுக்கும் நிலையில், கூடுதலாக இந்த பிரச்சினை

இது பற்றி இணைய தளங்களில் தேடியபோது, 10 ரூபாய் நாணயம் வெளியான அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப, அது வெவ்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டது தெரிய வருகிறது.

(படம் மேலே) 1969 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 1970 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 1972 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2005 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2006 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2008 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2009 இல் வெளியிடப்பட்டது. 

(படம் மேலே) 2010 இல் வெளியிடப்பட்டவை.

(படம் மேலே) 2011 இல் வெளியிடப்பட்டது. 

(படம் மேலே) 2012 இல் வெளியிடப்பட்டவை 

(படம் மேலே) 2014 இல் வெளியிடப்பட்டது. 

(படம் மேலே) 2015 இல் வெளியிடப்பட்டவை

                                     (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)