Showing posts with label வரி. Show all posts
Showing posts with label வரி. Show all posts

Monday, 24 November 2014

மார்ச்சு மாதம் சம்பளம் இல்லை



உனக்கென்னப்பா ஒண்ணாம் தேதி வந்தால் கையில் டாண்ணு சம்பளம் வந்திடும் -  வார்த்தையில் கொஞ்சம், கூட குறைச்சல் இருக்கலாம். உத்தியோகத்தில் இல்லாதவர்களில் இந்த வார்த்தையை சொல்லாதவர்கள் குறைவு. மாத சம்பளக்காரர்கள் அனைவரும் அடிக்கடி கேட்டு இருப்பார்கள். ஆனால் மாதச் சம்பளக்காரர்கள் பலபேருக்கு மார்ச்சு மாதம் சம்பளம் இல்லை என்ற விஷயம் எத்தனை பேருக்கு தெரியும்.

வருமானவரி:

ஒவ்வொரு சம்பள உயர்வின் போதும் தனியார் ஊழியராகஇருந்தாலும்  சரி, அரசு ஊழியராக இருந்தாலும் சரி அவர்களுக்கு அப்படியே அள்ளி கொடுத்து விடுவதில்லை. எப்போதுமே சம்பள உயர்வு என்பது 10 சதவீதத்திற்கு மேல் போவதில்லை. இவர்கள் விலைவாசி உயர்வை காரணம் காட்டி சம்பள உயர்வு பெறுவார்கள்; அதற்கு அடுத்த நாளே இவர்கள் சம்பள உயர்வை காரணம் காட்டி அவர்கள் ஏற்றி விடுவார்கள். நிறைய பேருக்கு போனஸ் உச்சவரம்பு சட்டத்தின்படி போனஸே கிடையாது. ஆனால் வெளியில் எல்லோருக்கும் போனஸ் கிடைப்பது போன்ற செய்தி வெளிவரும். இப்படியே கண்ணாமூச்சி நடைபெறும்.

பெயருக்குத்தான் சம்பள உயர்வு. சம்பளம் உயர உயர, அதில் கால்வாசி அந்த வரி, இந்த வரி, வருமானவரி என்று போய்விடும். அரசு ஆணைப்படி சம்பளம் வாங்கும் அன்றே அந்தந்த மாதத்தில் வருமானவரி பிடித்துவிட வேண்டும். சிலபேர் மட்டும் மாதம்தோறும் வருமானவரியை சம்பளத்தில் பிடித்துக் கொள்ளச் சொல்லி எழுதி கொடுத்து விடுவார்கள். ஆனால் பலபேர் வருமான வரியை மார்ச்சு மாதத்தில் மொத்தமாகவோ அல்லது ஜனவரி மாதத்தில் இருந்து மூன்று தவணைகளாகவோ கட்டிவிடுவதாகச் சொல்வார்கள். இன்னும் சிலர் வருமானவரியை தவிர்ப்பதற்காக அரசு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய பார்ப்பார்கள். அதிலும் உச்சவரம்பு உண்டு. எனவே ஒரு கட்டத்தில் வருமான வரியிலிருந்து தப்பிக்க முடியாது.

மூன்றுமாத கஷ்டம்:

எனவே ஒவ்வொரு நிதி ஆண்டும் (Financial Year), முதல் ஒன்பது மாதங்கள் வாழ்க்கைச் சக்கரம் சராசரியாக இருக்கும். ஜனவரி வந்து விட்டாலே பதட்டம்தான். சம்பளம் குறையத் தொடங்கிவிடும். சிலபேருக்கு கடைசி இரண்டு மாதங்கள் (பிப்ரவரி, மார்ச்) சம்பளமே இருக்காது. எனவே சமாளிக்க இயலாதவர்கள் வெளியில் கடன் வாஙக ஆரம்பித்து விடுவார்கள். வட்டி தொழில் நடத்துபவர்களுக்கு இந்த மாதங்களில் நல்ல தொழில் இருக்கும். சிலபேருடைய கழுத்தில், காதில், கையில் இருந்தவைகள் பள்ளிக்கூடம் போய்விடும். சில இடங்களில் இலஞ்சம் பெற்றுக் கொண்டு ஆகும் காரியங்களும் நிறையவே நடக்கும்.

திட்டமிடுதல்:

சரியாகத் திட்டமிடுதல் மூலம் இந்த மூன்றுமாத கால பதற்றத்தை தவிர்க்கலாம். 1.எப்படி இருந்தாலும் கட்ட வேண்டிய வருமான வரியை கட்டித்தானே ஆகவேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள், நம்ப காசு நமக்கில்லை என்று நினைத்துக் கொண்டு மாதம்தோறும் வருமானவரியை சம்பளத்தில் பிடித்துக் கொள்ளச் சொல்லி விடலாம். அதனால் சுமை தெரியாது. 2. வருமான வரியை சேமிப்பாக மாற்ற நினைப்பவர்கள் வரிவிலக்கு தரும் PPF ( Public Provident Fund) Scheme இல் சேர்ந்து கொண்டு மாதாமாதம் கட்டலாம். இதேபோன்று R.D ( Recurring Deposit) எனப்படும், மாதாந்திர கணக்கைத் தொடங்கி , முதிர்வுத் தொகையை  வரிவிலக்கு தரும் அரசு சேமிப்பு பத்திரங்களில் முத்லீடு செயலாம். இந்த கணக்கை பிப்ரவரி மாதம் முடியுமாறு தொடங்க வேண்டும்.

ஆடம்பரத்தை தவிர்ப்பீர்:

முன்பெல்லாம் எல்லோரும் வருவாய்க்குத் தக்க செலவு செய்தார்கள். வருவாய்க்குத் தககவாறு ஆசைப் பட்டார்கள். வீட்டில் உள்ள்வர்களும் நமது குடும்பத்தில் இவ்வளவுதான் செய்யமுடியும், இவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும் என்று பொறுப்போடு இருந்தார்கள் இப்போதோ பலரும் கடன்பட்டாவது பகட்டான வாழ்க்கையை நடத்த ஆசைப்படுகின்றனர். ஒரு சாதாரண ஊழியராக இருப்பவர் தனது வருமானத்திற்கு தக்கவாறு வாழ ஆசைப்படுவதில்லை. தானும் ஒரு உயர் அதிகாரியைப் போன்றே வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். பிள்ளைகளை அரசு பள்ளிகளிலோ அல்லது கட்டணம் அதிகம் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ சேர்ப்பதில்லை. வசதி படைத்தவர்கள் பிள்ளைகள் படிக்கும் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து விட்டு அல்லாடுகிறார்கள். அவர்கள் சொல்லும் பதில் இதுதான் “ ஏன் எங்கள் பிள்ளைகள் மட்டும் அங்கு படிக்கக் கூடாதா? “ என்பதுதான்.


              தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
             
அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும்
             
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
             
எற்றே யிவர்க்குநா மென்று  
                                               (நீதி நெறி விளக்கம் 14 (குமரகுருபரர்)

இதன் பொருள்: நம்மை விட செல்வத்தில் குறைந்து இருப்பவர்களைப் பார்த்து நமது செல்வம் “ அம்மா பெரிது என்று மகிழ்ச்சி அடையுங்கள். அதேசமயம் நம்மைவிட அதிகம் படித்தவர்களைப் பார்த்து இவருக்கு முன் நாம் எம்மாத்திரம் என்று கர்வத்தை விடுங்கள்.


ALL PICTURES THANKS TO “GOOGLE”