Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, 15 March 2016

ஜாதியும் கலப்பு மணங்களும்



தமிழ்நாட்டில் ஜாதி என்பது அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது. நாளையும் இருக்கும். தமிழர்கள் இந்த ஜாதிகளுடனேதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அன்றும் கலப்பு திருமணங்கள் நடைபெற்றன. இன்றும் நடைபெறுகின்றன. நாளையும் நடைபெறும். ஆனால் இப்போது சமீப காலமாக தமிழ்நாட்டில் ஜாதிவெறி கொலைகள் எனப்படும் கவுரவக் கொலைகள் பற்றிய செய்திகள் (இதில் என்ன கவுரவம் என்று தெரியவில்லை) அடிக்கடி வருகின்றன. ஆனால் கலப்புமணம் செய்துகொண்டு நன்றாக இருக்கும் பலபேருடைய தகவல்கள் வெளிவருவதில்லை. 

ஜாதியும் தொழிலும்:

வருணாசிரம அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு தொழில் உண்டு. அவரவர், அவர்களது குலத்தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்பது இதன் சாராம்சம். ஆனால் எனது ஜாதி, எனது ஜாதி என்று பேசும் ஜாதித் தலைவர்கள் உட்பட யாரும் அவரவர் ஜாதித் தொழில் செய்வதில்லை. காலம் மாறிவிட்டது. வரவேற்க வேண்டிய மாற்றம்தான். உதாரணத்திற்கு முன்பெல்லாம் மருத்துவம் பார்க்கும் தொழிலை நாவிதர்கள் எனப்பட்ட மருத்துவர் ஜாதியினர்தான் பார்த்தார்கள். இப்போது மருத்துவர் எனப்படும் டாக்டர் தொழிலுக்கு எல்லா ஜாதியினரும் போட்டி போடுகின்றனர். அதேபோல கட்டிடத் தொழில், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்களை குறிப்பிட்ட ஜாதியார் மட்டுமே செய்தனர். இப்போது இதற்கு என்ஜீனியர் படிப்பு, தொழில் என்று போட்டி. எனவே தங்கள் பெயருக்கு முன்னால் என்ஜீனியர் மற்றும் டாக்டர் அல்லது மருத்துவர் என்று பட்டம் வைத்துக் கொள்கிறார்கள். அதேபோல சலவைத் தொழிலை அந்த காலத்தில் வண்ணார் எனப்படுபவர்களே செய்து வந்தனர். இந்த காலத்தில் டிரை கிளீனர்ஸ் என்ற பெயரில் முதலீடு போடும் பிற சாதியினரே செய்வதைக் காணலாம். அதே போல செருப்புக் கடை முதலாளிகள். மற்றும் பல நகராட்சிகளில் குப்பை அள்ளும் ஒப்பந்தக்காரர்கள்.

எனக்கு தெரிந்தவர்கள்:

எனக்குத் தெரிந்து எனது உறவினர்களிலும் சரி , நண்பர்கள் வட்டாரத்திலும் சரி வெவ்வேறு ஜாதியினைச் சேர்ந்தவர்கள் கலப்பு மணம் செய்துகொண்டு நன்றாகத்தான் இருக்கிறார்கள். சில பேரை மட்டும், சில சம்பவங்களைமட்டும் இங்கு பெயர் இல்லாது குறிப்பிடுகிறேன்.

எனக்கு நன்கு அறிமுகமான ஒரு பேராசிரியர். அவருடைய அம்மா வன்னியர்; அப்பா ஆதிதிராவிடர். இருவரும் ஒரே கிராமம். இருவரும் காதலித்தார்கள். பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு. வழக்கம் போல இரு சமூக மோதல்கள். மாறி மாறி பஞ்சாயத்து நடந்தது. அந்த அம்மா உறுதியாக காதலன் பக்கமே நின்றார். (இந்த சம்பவம் நடந்தது சுமார் 65 வருடங்களுக்கு முன்னால்) பேராசிரியரின் அப்பாவுக்கு ஒரு நண்பர். அவர் அதே ஊர்ப் பக்கம், தேவர் சமூகத்தைச் சார்ந்தவர். அவர் தனது தாழ்த்தப்பட்ட நண்பருக்கு உறுதுணையாக நின்று திருமணத்தை நடத்தி வைத்தார். உள்ளூரில் ஆதிதிராவிடர் தெருவில்தான் இருவரும் கடைசிவரை வாழ்ந்தனர். மூன்று பெண்கள், மூன்று பையன்கள் (ஆதி திராவிடர் சான்றிதழ்) பையன்கள் நல்ல படிப்பு ; நல்ல உத்தியோகம். ஆரம்பத்தில் இவர்களோடு பேசாது இருந்த தாய்மாமன்கள் (வன்னியர்) பின்னர் இவர்கள் வீட்டு  நல்லது கெட்டது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். அண்மையில் பேராசிரியரின் அம்மா மறைந்தபோது , அந்த அம்மாவின் வன்னிய உறவினர்களும் வந்து இருந்து செய்ய வேண்டிய சிறப்புகளை செய்தனர். நானும் சென்று இருந்தேன்.

இன்னொருவர் பொதுத்துறையில் பணிபுரிந்தவர். திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்.. அவர் காதலித்த பெண் ஆதி திராவிடர். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த அவரது பெற்றோர், பின்னர் அவரது திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர்களது ஒரே பையன் தனது அப்பாவழி சொந்தக்கார பெண்ணை (சைவப் பிள்ளைமார்) திருமணம் செய்து கொண்டார். அவர்களது ஒரே பெண் அம்மா ஜாதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பையனை மணம் செய்து கொண்டார். 

அடுத்து இன்னொருவர். ஸாப்ட்வேர் என்ஜீனியர். தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் காதலித்தது ஒரு எஸ்சி பெண் (ஸாப்ட்வேர்). வீட்டில் வழக்கம் போல எதிர்ப்பு. பையனின் பெரியம்மா மகள் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு பிரச்சினையாகி, பின்னர் சமாதானம் ஆனவர்கள். அந்த பெரியம்மாவின்  முயற்சியில் இந்த தேவர் – எஸ்ஸி திருமணம் நடந்தது. இருபக்கமும் இருந்து கலந்து கொண்டார்கள். நானும் சென்று இருந்தேன்.

இன்னொருவர் வங்கி மானேஜர். முத்துராஜா சமூகத்தைச் சார்ந்தவர். அவரது பெண் (ஸாப்ட்வேர் துறை) காதலித்தது அய்யங்கார் பையனை. அவரும் ஸாப்ட்வேர். இருவர் வீட்டு சம்மதத்தின் பேரில், அய்யங்கார் சமூக வழக்கப்படி திருமணம் நடந்தது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மணமகள் மடிசார் புடவையில் இருந்தார். நான் இந்த திருமணத்திற்கும் சென்று இருந்தேன்.

பொதுத்துறை வங்கியில் பணிபுரிந்த ஒரு பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ராஜூ வகுப்பைச் சார்ந்த நாயுடு பையனைக் காதலித்தார். அவர் ஒரு பிசினஸ்மேன்.  இரண்டு பேருடைய பெற்றோரும் நண்பர்கள். எதிர்ப்பு இல்லை. திருமணம் நடந்தது. நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

பிராமணரில் அய்யர், அய்யங்கார் என்று இரண்டு பிரிவினர். எனது நண்பர் (அய்யர்) பொதுத்துறை வங்கியில் பணி புரிந்தவர். அவர் தனது பெண்ணின் விருப்பப்படி அவள் காதலித்த அய்யங்கார் பையனுக்கே , அய்யங்கார் சமூக முறைப்படி திருமணம் நடத்தி வைத்தார். 

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் கலப்பு திருமணம் செய்து கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் பட்டியலை இங்கு வரிசையிட்டால் கட்டுரை நீண்டு விடும்.

காரணம் என்ன?

இப்போது இருக்கும் சுதந்திரம் போல் பெண்களுக்கு அப்போது கிடையாது. பள்ளிக்கூடம் செல்லும் பெண்கள் வயதுக்கு வந்தவுடனேயே பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள். பெற்றவர்கள் பார்த்து யாரைக் கட்டிக் கொள்ளச் சொல்கிறார்களோ அவர்களுக்குத்தான் கழுத்தை நீட்ட வேண்டும். இப்போதோ இருபாலர் கல்வி (Co education), மேற்படிப்பு, கம்ப்யூட்டர், செல்போன், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று சமூக வலைதளாங்களைக் கையாளூதல், பெண்கள் வேலைக்குச் செல்லுதல் என்று பெண்கள் விழிப்புணர்வு விஷயங்கள் அதிகம் வந்து விட்டன. எனவே பெண்கள் ஜாதிக்கு அதிகம் முக்கியத்துவம் தருவதில்லை. காதல் திருமணம் குறிப்பாக கலப்புத் திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன. அதி தீவிர ஜாதி மற்றும் மத  உணர்வாளர்களுக்கும், ஆணாதிக்க உணர்வாளர்களுக்கும் இதில் உடன்பாடில்லை. மேலும் பெண்ணுக்கும் தகப்பன் சொத்தில் பங்கு உண்டு என்ற இப்போதைய சட்டம்தான், (பெண் தனக்கு அப்பன் சொத்தில் ஒன்றும் வேண்டாம் என்று சொன்னாலும் ) ஜாதீய உணர்வாளர்களை அதிகம் கலவரப்படுத்துகிறது.

முன்பெல்லாம் இதுமாதிரி கலப்புமணம் நடந்தால் இது அவர்களுடைய தனிப்பட்ட விவகாரம் அல்லது குடும்பப் பிரச்சினை என்று இருந்து விடுவார்கள். இப்போதோ அது தங்கள் சொந்த ஜாதிப் பிரச்சினை என்று சிலர் கிளம்பி விடுகிறார்கள். சொந்த ஜாதிக்காரன் கஷ்டத்தில் இருக்கும் போதெல்லாம் வந்து எட்டிப் பார்க்காதவர்கள் இந்த கலப்புமண விஷயத்தில், குறிப்பாக ஆண் தாழ்த்தப்பட்டவர் என்றால் வந்து விடுகிறார்கள். இந்த ஊடகங்களும் விவாதம் என்ற பெயரில் தமிழகத்தை ஒரு ஜாதிவெறிக் களமாகவே மாற்றி வருகின்றன. அதிலும் ஒரு மருத்துவர், தனது அரசியல் லாபத்திற்காக தமிழ்நாட்டில் ஜாதி அரசியல் செய்ய ஆரம்பித்தவுடன் இந்த ஜாதிவெறி  இன்னும் அதிகம் தூண்டப்பட்டு வருகிறது..எல்லா ஜாதியிலும் தன் ஜாதி என்ற உணர்வு கொண்ட தீவிரவாதிகளும் உண்டு; மிதவாதிகளும் உண்டு. இன்னும் தனது ஜாதியையே கண்டு கொள்ளாதவர்களும் உண்டு. 



Friday, 23 November 2012

காதலும் ஜாதியும்




நெஞ்சம் மறப்பதில்லை என்று ஒரு பழைய தமிழ் திரைப்படம். டைரக்டர் ஸ்ரீதரின் இயக்கத்தில் கல்யாண்குமார் தேவிகா நடிப்பில் உருவான படம். போன ஜென்மத்தின் போது தனது பண்ணையில் வேலை செய்யும் பண்ணையாள் மகளை (தேவிகா) அந்த ஜமீனின் ஜமீன்தார் மகன் (கல்யாண்குமார்) காதலிக்கிறார்.

அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை நெஞ்சில்
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை

இரவுக்கும் பகலிடம் கோபமில்லை இந்த

ஏழையின் காதலில் பாபமில்லை
  
-         (பாடல் : கண்ணதாசன்)


என்று பாடித் திரிகிறார்கள். இது பிடிக்காத ஜமீன்தார் (நம்பியார்) காதலர்கள் இருவரும் குதிரை வண்டியில் தப்பும்போது, அந்த பெண்ணை தனது வேட்டைத் துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகிறார். அவள் இறந்த சோகத்தில் ஜமீன்தார் மகனும் இறந்து விடுகிறார். அப்போதைய வெள்ளைகாரர்கள்  அரசு ஜமீன்தாருக்கு தண்டனை தந்து அந்தமான் சிறைக்கு அனுப்பி வைக்கின்றனர். சிறை தண்டனை முடிந்து வந்த அந்த ஜமீன்தார் தனது அரண்மனையில் மறைந்து வாழ்கிறார். காதலர்கள் இருவரும் . அடுத்த ஜென்மத்தில் பிறக்க விதி வசத்தால் அவர்கள் காதல் தொடருகிறது.

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை

நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை
   - (பாடல் : கண்ணதாசன்)

இதனை அறிந்த, (அவர்களது அடுத்த ஜென்மத்திலும் உயிரோடு இருக்கும்) 109 வயதுள்ள கிழட்டு ஜமீன்தார்  இந்த ஜென்மத்திலும் உங்களை சேர விடமாட்டேன் என்று அந்த பெண்ணை சுடுவதற்கு தனது பழைய துப்பாக்கியை தூக்குகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஜமீன்தார் புதை மணலில் சிக்கி இறக்கிறார். போன ஜென்மத்தில் சேரமுடியாத காதலர்கள் இந்த ஜென்மத்தில் சேருகின்றனர். (கடைசி உச்சகட்ட (Climax) காட்சியில் நம்பியாரின் பயங்கரமான தோற்றம், ஆவேசமான நடிப்பு இவைகளை மறக்க முடியாது.) இந்த படத்தில் காதலின் வலுவான சக்தி எது என்பதனை ஸ்ரீதர் காட்டியுள்ளார்.


எட்டி மரம். அதன் அருகில் ஒரு முல்லைக் கொடி. அது ஒன்றினை பற்றிப் படரும் இயல்புடையது.  அந்த முல்லையானது எட்டிமரம் என்று விலகுவதில்லை. அதன் மீது படரத்தான் நினைக்கிறது. இதனை மனோன்மணியம் இவ்வாறு கூறுகிறது.


பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்;
அருகுள
து  ட்டியே யாயினும் முல்லைப்
படர்கொடி படரும்
(மனோன்மணியம் - முதல் அங்கம்: ஐந்தாம் களம்)

கவிஞர் கண்ணதாசன் காதல் பாடல்கள் பல இதனைத்தான் சொல்லுகின்றன. தாழையாம் பூ முடிச்சு என்று தொடங்கும் பாடலில் கவிஞர்

மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்

கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
          -  பாடல் : கண்ணதாசன்  ( படம்: பாகப்பிரிவினை)

என்ற வரிகளைச் சொல்லுகிறார். இன்னொரு இடத்தில்

காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே

வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே அது

வேதம் செய்த உருவம் போல மறைவதில்லையே

         - பாடல் :கண்ணதாசன்  ( படம்: பாவமன்னிப்பு)

என்று பாடுகிறார்.

அவள் ஓர் செவிலித் தாய். கண்ணுக்கு கண்ணாய் வளர்த்த அவளது பெண் தன் காதலனுடன் சென்றுவிட்டாள். தன் மகளையும் அவளது காதலனையும் தேடி பாலை நிலத்தில் செல்கிறாள். எதிரே ஒரு ஜோடி. அந்த பெண் அவளது மகளைப் போலவே இருக்கிறாள். அருகில் சென்று பார்த்தாள். அவள் வேறு ஒரு பெண். இது போல் பல ஜோடிகள். தேடித் தேடி அவளது கால்கள் நடை தளர்ந்து விட்டன. கண்கள் ஒவ்வொருவரையும் உற்று உற்று பார்த்து ஒளி இழந்து விட்டன. அப்போதுதான் அவளுக்கு தெரிகிறது. தனது மகளையும் அவளது காதலனையும் போன்று உலகில் வானத்து நட்சத்திரங்களைப் போன்று அநேகர் என்று. இனி எங்கு தேடுவேன் என்று  அவர்களை மனதால் வாழ்த்திவிட்டு அந்த தாய் திரும்பி விடுகிறாள்.

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே

அகலிரு விசும்பின் மீனினும்

பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
                             -  வெள்ளிவீதியார்.  ( குறுந்தொகை 44 )


பாரதியார்  தனது குயில் பாட்டில்

காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்

என்று கீதமிசைக்கிறார்.

பாரதிதாசன்

காதல் அடைதல் உயிரியற்கை - அது
கட்டில் அகப்படும் தன்மையதோ - அடி
சாதல் அடைவதும் காதலிலே - ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய். 
                                 -  ( பாரதிதாசன் கவிதைகள்

என்று பாடியுள்ளார்.

இப்படி மேற்கோள்கள் பலவர்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

காதல் என்பதற்கு எந்த இலக்கணமும் கிடையாது. இலக்கிய படைப்புகள்தான் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. யாரும் திட்டம் போட்டு காதல் கொள்வது கிடையாது. அது ஒரு இயற்கையான ஒன்று. இன்றைய சினிமாக்களிலும் சின்னத் திரைகளிலும் பழிவாங்கும் வில்லத்தனமான கதைகளில் காதலை கொச்சைப் படுத்தி விட்டார்கள்.