முன்னாள் பாரதப்
பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் செவ்வாய்க்
கிழமை அன்று
படுகொலை செய்யப்பட்டார் அப்போது நாங்கள் திருச்சி அய்யப்ப நகரில் வாடகை வீட்டில்
குடியிருந்தோம். அப்பாவும் அம்மாவும் என்னோடு இருந்தனர். எனது தங்கைக்கு ஜூன்
முதல் வாரத்தில் திருமணம் என்பதால், அப்பா மட்டும் உறவினர்களுக்கு நேரில் சென்று
அழைப்பிதழ் கொடுப்பதற்காக, அன்றுதான் இரவு ரெயிலில் புறப்பட்டு சென்னைக்கு சென்று
கொண்டு இருந்தார். நாங்கள் எல்லோரும் வழக்கம் போல எல்லா வேலைகளையும் முடித்து
விட்டு தூங்கிவிட்டோம். நான் மறுநாள்
எப்போதும் போல காலை வேலைகளை முடித்து விட்டு மெயின் ரோட்டிற்கு சில
பொருட்கள் வாங்க சென்றேன். ஒரு கடை கூட இல்லை. எல்லாம் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரே
மயான அமைதி. கடைத் தெருவில் இருந்த திமுக பேனர்கள்,கொடிக் கம்பங்கள் சின்னா
பின்னமாகக் கிடந்தன. திமுகவின் சின்னமான
உதயசூரியன் வடிவில் இருந்த டியூப் லைட்டுகள் யாவும் உடைக்கப்பட்டு கிடந்தன. ஏதோ
கட்சி தகராறு என்று நினைத்தேன். ஒருவரிடம் கேட்ட போது ” விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியை குண்டு வைத்து
கொன்று விட்டனர். திமுகதான் காரணம் என்று பேசிக் கொள்கிறார்கள் “ என்று விஷயத்தை மெதுவாகச் சொன்னார். அப்புறம்தான் முதல்நாள்
இரவில் (21.05.1991 அன்று) ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி அவர்கள்
கொல்லப்பட்டார் என்பது தெரிந்தது. அப்போது தேர்தல் நேரம். அப்போதைய பிரதமர்
சந்திரசேகர். மேலும் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. அப்போது
அதிமுக – காங்கிரஸ் கூட்டணி
இருந்தது குறிப்பிடத் தக்கது.
உடனே வீட்டிற்கு ஓடினேன். நாங்கள் இருந்த வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு நண்பர். ரெயில்வேக்காரர். அதிமுக அனுதாபி. அவரிடம் நான் பேசியபோது அவர் திமுகவையும், இலங்கைத் தமிழர்களையும் கடுமையாக திட்டிப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர்கள் பலர் திருச்சியில் கருணாநிதி நகர், அய்யப்ப நகர், சீனிவாச நகர், குமரன் நகர் – முதலான இடங்களில் வாடகைக்கு இருந்து வந்தனர். எங்கள் வீதியில் எனக்கு அறிமுகமான ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம் இருந்தனர். அவர்களுக்கு எங்களுக்கு முன்பே விஷயம் தெரிந்து இருந்தது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர்களைப் பார்த்து கவனமாக இருங்கள் என்று சொன்னேன். இதுபோல் நிறையபேர் வெளியில் வராமல் இருந்தார்கள். எங்கள் பகுதியில் நடமாட்டம் இல்லை. வீதிகளில் போலீஸ் ஜீப்புகளின் ரோந்து அதிகமாக இருந்தது.
நான் வேலைக்கு சென்றாக
வேண்டும். எனது டிவிஎஸ் மொபட்டில் வங்கிக்கு சென்று வந்தேன். வங்கியில்
வாடிக்கையாளர்களும் அதிகம் இல்லை. நிறைய பெண் ஊழியர்கள் விடுப்பில் இருந்து
விட்டனர். சாலையில்.மக்கள் நடமாட்டம் இல்லை. பஸ் சர்வீஸ் இல்லை. ஒரு சில இடங்களில்
கல்வீச்சு. ரெயில்கள் ஆங்காங்கே அப்படியே நிறுத்தப்பட்டதாக செய்திகள். காங்கிரஸ்காரர்களும் அதிமுகவினரும் பல இடங்களில் ராஜிவ் காந்தி படத்திற்கு மாலைகள் போட்டு
ஊதுவத்தி ஏற்றி வைத்து இருந்தனர். வானொலியில் ஒரே சோகம். அப்போது சன் டீவி போன்ற தனியார் சேனல்கள் எதுவும் இல்லை. இருந்த ஒன்று
தூர்தர்ஷன் மட்டுமே. அதிலும் இரங்கல் செய்திகள்; பஜனைப் பாடல்கள்.
சென்னைக்கு
ரெயிலில் சென்ற எனது தந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள இயலவில்லை. அப்போது செல்போன் புழக்கத்தில்
இல்லாத நேரம். வீட்டிலும் போன் வசதி இல்லை.(சொந்த வீடு கட்டியதும் போன் வசதி
வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டோம்). அடுத்தநாள் மாலை சென்னையில் உள்ள
மாமாவிடம் போனில் விசாரித்தபோது அப்பா இன்னும் வரவில்லை என்று சொன்னார். எங்களுக்கு ஒரே பதட்டம். இரண்டுநாள் கழித்து அப்பாவைப் பற்றிய தகவல்
கிடைத்தது. விழுப்புரத்தில் நடு வழியில் வண்டி நிறுத்தப்பட்டு விட்டதால் ரெயில்வே
குவாட்டர்சில் இருந்த சொந்தக்காரர் வீட்டில் இருந்து விட்டு சென்னைக்கு வந்துள்ளார்.சென்னையில்
மேலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு இயல்புநிலை வந்த பிறகு வீட்டுக்கு வந்தார். எங்களுக்கும் நிம்மதி!
(PICTURES : THANKS TO “ GOOGLE ”)