Showing posts with label தஞ்சை மருத்துவக் கல்லூரி. Show all posts
Showing posts with label தஞ்சை மருத்துவக் கல்லூரி. Show all posts

Sunday, 28 July 2013

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை



எனது நெருங்கிய உறவினர்கள் பலரும் இருப்பது தஞ்சை மாவட்டத்தில். பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் உடம்புக்கு ஏதாவது என்றால் அருகிலுள்ள மருத்துவமனையில் பார்ப்பார்கள். உடல்நிலை ரொம்பவும் மோசம் என்றால் உடனே நோயாளியை எடுத்துச் செல்லும் இடம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை( THANJAVUR MEDICAL COLLEGE HOSPITAL )தான். இவர்களுக்கு மட்டுமல்ல தஞ்சை மாவட்டம் அதைச் சுற்றியுள்ள மற்ற மாவட்டக்காரர்களுக்கும் மிகவும் நம்பிக்கையான மருத்துவமனை இதுவே ஆகும். விபத்து அல்லது விஷம் குடித்தல், வெட்டு குத்து போன்ற நிலைகளில் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் நேரே இங்குதான். ஒரு அரசு மருத்துவமனை மக்கள் மத்தியில் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பது நல்ல விஷயம்தான். எல்லோரும் இந்த மருத்துவமனையை “மெடிக்கல்” (MEDICAL) என்றுதான் அழைக்கிறார்கள்.

முன்பு ஒருமுறை இந்த மெடிக்கலில் ஒருவரை பார்த்துவிட்டு வெளியே வந்தபோது பஸ் ஸ்டாப்பில் ஒருவர் சொன்னது “ சார்! நான் மட்டும் இங்கு மெடிக்கலுக்கு வரவில்லை என்றால் செத்தே போயிருப்பேன் சார்! நன்றாக பார்க்கிறார்கள். மருந்து எல்லாமே இலவசம். வெளியில் பார்த்துக் கொள்ள எனக்கு வசதி இல்லை.“ என்றார். அவர் நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்காரர். அந்த மருத்துவமனைக்கு வரும் பலரும் இதுமாதிரி  சொல்லக் கேட்கலாம்.  வசதி படைத்தவர்களும் இங்கு வருகிறார்கள். உள்நோயாளிகள் வெளி நோயாளிகள் என்று எப்போதும் மக்கள் கூட்டம்.

இவ்வளவு மருத்துவ வசதியை இலவசமாக செய்து தரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை வருகின்ற மக்கள் சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை என்பது வருத்தமான விஷயம். இதனைக் கண்கூடாகக் காணலாம். அங்கு வரும் மக்களிடம் சுத்தம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மருத்துவமனை வரலாறு:

1958- இல் அன்றைய ஜனாதிபதி டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி (THANJAVUR MEDICAL COLLEGE) க்கு அடிக்கல் நாட்டினார். அப்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ A Y S பரிசுத்தம் நாடார் அவர்கள் கல்லூரிக்கான வைப்புத் தொகையையும். கல்லூரிக்கான 89 ஏக்கர் இடத்தையும் தஞ்சை ரோட்டரி சங்கம் (ROTARY CLUB OF THANJAVUR) சார்பாக தந்தார். அப்போது சென்னை மாகாண முதன் மந்திரியாக இருந்த தலைவர் கு காமராஜ் அவர்கள் இந்த தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு ஒப்புதல் தந்தார். 1959 இல் தஞ்சை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் ,அங்கு பயின்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் (பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள) ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை ( Govt. Raja Mirasdar Hospital ) இல் பயிற்சி டாக்டர்களாக பயிற்சி பெற்றனர்.

பின்னர் மக்கள் தொகை, பயிற்சி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக 1964 இல் (இப்போதும் சென்னை மாகாண முதன்மந்திரியாக இருந்தவர் தலைவர் கு காமராஜ் அவர்கள்)  தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (THANJAVUR MEDICAL COLLEGE HOSPITAL ), பிரிக்கப்படாத தஞ்சாவூர், நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை   மாவட்ட மக்களுக்காக தொடங்கப் பட்டது.  அன்றிலிருந்து தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் இந்த மருத்துவ மனையைப் பயன்படுத்தி வருகின்றனர். மக்களால் மறக்கப்பட்ட காங்கிரஸ் அரசின் சாதனைகளில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் ஒன்று.

புகைப் படங்கள்:

இரண்டு வாரங்களுக்கு முன், எனது உறவினர் பையன் ஒருவன் பள்ளி இடைவேளையின்போது பெஞ்சுகளின் மீது ஏறி விளையாடியபோது கீழே விழுந்து விட்டான். அவனுக்கு அடி வயிற்றில் நல்ல அடி. 108 ஆம்புலன்சு மூலம் இங்கே கொண்டு வந்தார்கள். அவனை இரண்டு முறை சென்று பார்த்தேன். மறுபடியும் சென்ற வாரம் அங்கு சென்றபோது மெடிக்கலில் சில கட்டிடங்களை படம் எடுத்தேன்.

படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரம்பகால கட்டிடம்


படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  புதிய கட்டிடம்



படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  புதிய கட்டிடம் ( புற நோயாளிகள் பிரிவு )