Showing posts with label பென்ஷன். Show all posts
Showing posts with label பென்ஷன். Show all posts

Sunday, 10 January 2016

ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்



நேற்று (09.ஜனவரி.2016, சனிக்கிழமை) மாலை திருச்சியில் பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்கம் (STATE BANK OF INDIA PENSIONERS’ ASSOCIATION) நடத்திய, சிறப்பு கூட்டம், திருச்சிராப்பள்ளி கிளையில் நடைபெற்றது. உறுப்பினர் என்ற முறையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். இறை வணக்கத்தோடு கூட்டம் தொடங்கியது. திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். SBI  திருச்சி மண்டல மேலாளர் மற்றும் திருச்சி கிளையின் உதவி பொது மேலாளர் ஆகியோர் துவக்க உரை நிகழ்த்தினர்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் GROUP MEDICLAIM POLICY ‘A’ மற்றும் GROUP MEDICLAIM POLICY ‘B’ என்ற இரண்டு பாலிசிகள் உள்ளன. இவை FAMILY FLOATER GROUP HEALTH INSURANCE POLICIES FOR SBI RETIREES எனப்படும். இந்த திட்டம் குறித்து . திரு ஜெய கிருஷ்ணன் அவர்கள், (Officer, Retired) உரையாற்றினார். மேலும் இந்த திட்டத்தை ஸ்டேட் வங்கியுடன் இணைந்து நடத்தும் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக இருவர் வந்திருந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கம் தந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே. 



                                ….. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் …..

நமது பாரத ஸ்டேட் வங்கி, ஊழியர்களுக்கு அவர்களது பணிக்காலத்தில் அனைத்து விதமான மருத்துவச் செலவுகளையும் தானே ஏற்றுக் கொண்டு, நமது வங்கி ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினரையும் பேணி வந்தது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெறும்போது முன்பு தந்தது போல வங்கி  நமக்கு உதவிட முடியவில்லை.எனினும் அவ்வப்போது சில திட்டங்களை அறிமுகப்படுத்தி விருப்பப்பட்டவரிடம் சந்தாதொகை வசூலித்து அவர்களூக்கு உதவி வந்தது. தற்போது அமுலில் இருக்கும் REMBS என்ற ஓய்வூதியர் மருத்துவ நலத் திட்டம் கடந்த பல ஆண்டுகளாக அமுலில் இருந்து வருவது தெரிந்ததே. அத்திட்டத்தில் பல அவசியமான மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று நாம் கூறி வந்தோம். REMBS திட்ட பலன், விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும் 60 வயதுக்கு முன் வங்கிப்பணி முடிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், அவர்கள் சந்தாதொகை செலுத்த முன்வந்தபோதும் மறுக்கப்பட்டது. இந்த அநீதி களையப்பட வேண்டும் என்று நாம் நெடுங்காலமாக கோரி வந்தோம். இப்பொழுது ஒரு புதிய திட்டத்தை அமுல்படுத்தி அதன்படி நமது கோரிக்கைகளுக்கு ஓரளவு செவிசாய்த்துள்ளது நமது வங்கி. அந்த திட்டத்தின் பலனை நமது உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இந்தப் புதிய திட்டம் A பாலிசி என்றும் B பாலிசி என்றும் இரு வகைப்படும். ஏற்கனவே SBI – REMBS என்ற திட்டத்தில் உறுப்பினராக இருந்தவர்கள் புதிய A பாலிசி என்ற திட்டத்தின் உள் சேர்க்கப்படுவார்கள். ஏனையோர், அதாவது வங்கியின் மருத்துவப்பலன் திட்டத்தில் சேராதவர்கள் B பாலிசி என்ற திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீடு தொகையை நாமே நமது விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.. ஆனால் அதற்குண்டான பிரிமியம் தொகையை நமது கையிலிருந்து ஆண்டுதோறும் செலுத்த வேண்டும். REMBS திட்டத்தில் இருந்தவர்களுக்கு, அவர்களுக்கு உறதி அளிக்கப்பட்ட தொகை முழுவதும் தீரும்வரை வங்கியே பிரிமியம் செலுத்தும். அதன்பின் REMBS திட்டத்தில் இருந்தவர்களும் தங்களுடைய பிரிமியத்தை தாங்களே செலுத்த வேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரிமியம் தொகை ஆண்டுதோறும் மாறும். சேவைவரியும் கூடுதலாக (14.5%) செலுத்த வேண்டும். காப்புத் தொகையும் பிரிமியமும் கீழ் உள்ள அட்டவணைப்படி இந்த ஒரு வருடத்திற்கு இருக்கும் 
         
காப்புத்தொகை (லட்சத்தில்)
பிரிமியம்
3
 5577
4
 7282
5
 9285
7.5
12677
10
16902
15
23353
20
33804
25
42255



திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு ATM கார்டுபோல ஒரு அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அட்டையைக் கொண்டு எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேற்படி சிகிச்சைக்கான பில் எதுவும் கட்ட வேண்டியதில்லை. வங்கியிடம் முன்ஒப்புதல் வாங்க வேண்டியதில்லை. மருத்துவமனை இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிடம் தானே பெற்றுக் கொள்ளும்.

REMBS திட்டத்தில் ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் புதிய திட்டத்தில் 1.4.2016 அன்று இணைக்கப்படுவார்கள். எந்தத் திட்டத்தில் இல்லாதவர்களும். குடும்ப பென்ஷன் வாங்குவோர்களும் திட்டத்தில் சேர, தாங்கள் அப்ளிகேசனை. பென்சன் வாங்கும் கிளையில் 1.1.2016 முதல் 31.3.2016குள் தர வேண்டும். இந்த அப்ளிகேசன் பாரம் வங்கி கிளையில் கிடைக்கும்.

… 63 வகையான நோய்களுக்கு மருத்துவமனையிலும், வீட்டிலிருக்கும்போதும் ஆகும் மருத்துவ செலவுகள்

… ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஓமியோபதி, இயற்கை வைத்தியம் மூலமும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். 

புதிய இன்ஷ்யுரன்ஸ் திட்டத்தில் சேர்வதற்கு கடைசிநாள் 31.03.2016
இது தொடர்பாக விரிவான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

( கட்டுரை – நன்றி: SBI ELDERS VOICE (SUPPLEMENT) 24th DECEMBER 2015 )

( குறிப்பு: இப்போது அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும், மற்றும் தனியார் நிறுவனங்களிலும், தங்கள் ஊழியர்களுக்கும் பணிஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தினை எல்லோரும் தெரிந்து கொள்ளவும், ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே மேலே சொன்ன கட்டுரையை இங்கு அப்படியே டைப் செய்து வெளியிட்டுள்ளேன்.)

Sunday, 27 July 2014

திருச்சி – பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்க கூட்டம் (JULY.2014)



ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் நலனை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்கம் (STATE BANK OF INDIA PENSIONERS’ ASSOCIATION) இயங்கி வருகிறது. மேலும் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்காக SBI ELDERS VOICE என்ற மாதப் பத்திரிகையும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் எனக்கு அழைப்பு வந்ததால் திருச்சியில் நேற்று (26 ஜூலை 2014) மாலை நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்கம் (STATE BANK OF INDIA PENSIONERS’ ASSOCIATION)  கூட்டத்திற்கு சென்று வந்தேன்.

கூட்டம் , ஸ்டேட் வங்கி, திருச்சிராப்பள்ளி கிளையில் நடைபெற்றது. திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். SBI  உதவி பொது மேலாளர் S. சீனிவாச ராகவன் தலைமை தாங்க, திருமதி சரஸ்வதி அவர்கள் இறை வணக்கம் பாட கூட்டம் இனிதே தொடங்கியது.

(படம் மேலே) SBI திருச்சிராப்பள்ளி கிளை

(படம் மேலே)  இறை வணக்கம்

முன்னதாக 80 வயது நிறைவடைந்த சங்க உறுப்பினர்களுக்கு பொன்னாடை போற்றி கவரவிக்கப் பட்டது. ( 80 வயது நிரம்பிய கூட்டத்திற்கு வர இயலாத உறுப்பினர்களுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று பொன்னாடை போர்த்தியதாக திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார் ) திரு K.கோமதிநாயகம் (SBI CHIEF MANAGER (HR) , V.R.உதயசங்கர் (துணைத் தலைவர்), M. அசோக் (மண்டலச் செயலாளர், SBOA), திரு R. டேவிட் ஜெயகர் ராய் ( துணைப் பொதுச் செயலாளர், SBSU) ஆகியோர் உரையாற்றினார்கள். சங்க உறுப்பினர்கள் திருவாளர்கள்  சிவஞானம், பாலகிருஷ்ணன், வாசுதேவன், சங்கர், ஜெயசிங்கம், ஜம்புநாதன், ராமமூர்த்தி, ஆறுமுகம், மற்றும் முனுசாமி ஆகியோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பென்ஷன்தாரர்களின் பிரச்சினைகள் குறிப்பாக ஸ்டேட் வங்கி டிஸ்பென்சரியில் மருந்து, மாத்திரை இல்லாதது,  மெடிக்கல் பில்கள் தாமதம் ஆவது , MUTUAL WELFARE SCHEME இல் உள்ள சங்கடங்கள் பற்றி நிறைய கருத்துரைகள் சொன்னார்கள். முக்கியமாக 7-ஆவது ஊதிய ஒப்பந்த பென்சன்தாரர்களுக்கு மட்டும் அவர்களுக்குரிய பென்ஷன் தரப்படாதது குறித்து நிறையவே ஆதங்கப்பட்டார்கள். கூட்டத்தின் இறுதியில் சிறப்புரை ஆற்றிய பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்க தலைவர் திரு H.கணபதி அவர்கள், சங்க உறுப்பினர்களின் சந்தேகங்கள் கேள்விகளுக்கான பதில்களையும், ஸ்டேட் வங்கியின் பென்ஷன் வரலாறு மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், கோர்ட்டில் வழக்குகள் இருக்கும் நிலைமை, வழக்குகள் போடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும் பேசினார்.  

கூட்டத்தின் ஆரம்பத்தில் துளசி பார்மசிஸ் A/C இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார் இலவசமாக  இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் தந்தனர். மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு, காரம் , காப்பி இவைகளோடு நினைவுப் பரிசாக சிறிய CELLO CRUNCH INSUILATED CARRIER  வழங்கப்பட்டது. திரு அண்ணாமலை அவர்கள் நன்றியுரை கூற தேசிய கீதத்துடன் கூட்டம் இனிதே முடிவுற்றது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக செய்து இருந்தார்.

(படங்கள் மேலே) வரவேற்பாளர்கள்
  
(படம் மேலே) திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு

(படம் மேலே) சிறப்பு அழைப்பாளர்கள்










(படங்கள் - மேலே) கூட்டத்திற்கு வந்து இருந்தவர்கள்

(படங்கள் - மேலே) 80 வயது நிரம்பிய சங்க உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது)

(படம் மேலே) சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு, காரம் , காப்பி இவைகளோடு நினைவுப் பரிசாக சிறிய CELLO CRUNCH INSUILATED CARRIER  வழங்கப்பட்டது.

(படம் மேலே) கூட்டத்தில் ஒரு காட்சி

(படம் மேலே) SBI  உதவி பொது மேலாளர் S. சீனிவாச ராகவன் அவர்கள் தலைமை உரை

(படம் மேலே) திரு K.கோமதிநாயகம் (SBI CHIEF MANAGER (HR)

(படம் மேலே) M. அசோக் (மண்டலச் செயலாளர், SBOA) அவர்கள் உரை

 
(படம் மேலே) திரு R. டேவிட் ஜெயகர் ராய் ( துணைப் பொதுச் செயலாளர், SBSU) அவர்கள் உரை

(படம் மேலே) V.R. உதயசங்கர் (துணைத் தலைவர்) அவர்கள் உரை

(படம் மேலே) சங்க தலைவர் திரு H.கணபதி அவர்கள் சிறப்புரை




Saturday, 17 December 2011

இந்திய ஓய்வூதியர் தினம் ( PENSIONERS’ DAY OF INDIA)


டிசம்பர், 17. இந்திய ஓய்வூதியர் தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்தியாவில் பென்ஷன் என்பது ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட நல்ல அம்சங்களில் ஒன்று. 1982 - ஆம் ஆண்டு டிசம்பர் 17 - ஆம் நாள், இந்திய உச்சநீதி மன்றம் ஓய்வூதியம் பற்றிய குறிப்பிடத்தக்க ஒரு தீர்ப்பினை D S நகாரா என்பவரது வழக்கில் ( NAKARA CASE ) வழங்கியது. அதில் Pension is neither a gift nor a reward or bounty. Pension is the right of a retired Government Servant who had served nation for a long time" என்று குறிப்பிட்டது. ஒரு காலத்தில் ஓய்வூதியர் என்றால் அவர்கள் வயதானவர்கள் என்ற நிலை இருந்தது. இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விருப்ப ஓய்வு முறை வந்த பிறகு நடுத்தர வயதுள்ளவர்களும் ஓய்வூதியம் பெறுவோர்களாக உள்ளனர். அவர்களும் சில மாதங்களில் வயதானவர் களாக வந்து விடுவார்கள். சில நிறுவனங்களில் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. கருணைத் தொகை என்ற பெயரில் கடமையே என்று தருகிறார்கள். இப்போது விற்கும் விலைவாசியில் அந்த கருணைத் தொகை என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி கொடுப்பது போன்றது தான்.

முன்பெல்லாம் ஓய்வூதியம் பற்றிய அதிக தகவல்களை தெரிந்து கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட அலுவலக மூத்த ஊழியர்களையோ அல்லது தம்மைப் போல ஓய்வு பெற்ற விவரம் தெரிந்த ஓய்வூதியர்களையோ தேடிப் போய் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்கள் தரும் விவரங்களும் துல்லியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது கணிணியுகத்தில் இண்டர்நெட் மூலம் அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. மத்திய மாநில அரசுகள் தங்கள் இணையத் தளங்கள் ( www.pensionersportal.gov.in  ) மூலம் ஓய்வூதியர்களுக் கான, ஓய்வுக்கால பயன்கள், ஓய்வூதிய விதி முறைகள், அறிக்கைகள் என்று எல்லா தகவல்களையும் உடனுக்குடன் தெரிவிக்கின்றன. மாநில அரசு இணைய தளங்கள் அந்தந்த மொழியிலேயே வெளியிடுகின்றன. நமது தமிழ் நாடு அரசும் (www.tn.gov.in ) ஓய்வூதியம் பற்றிய செய்திகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி களில் வெளியிட்டு வருகிறது.

இப்போது அனைத்து ஓய்வூதியங்களும் வங்கிகளின் மூலமே வழங்கப் படுகின்றன. எனவே ஓய்வூதியகாரர்களுக்கு வங்கிகளில் அவர்களது ஓய்வூதியத்தின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. பலர் சரியான திட்டமிடுதல் இல்லாத படியினால் காலம் முழுக்க கடனாளியாகவே இருந்து இறந்து போகின்றனர். இன்னும் சிலர் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு, கடன் வாங்கிய ஆசாமி கட்டாதபோது இவர்கள் நோட்டீஸ், வழக்கு , வக்கீல் என்று நிம்மதியை இழக்கிறார்கள். எனவே ஓய்வூதியர்கள் கவனமாக இருத்தல் அவசியம். வங்கிகளில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் என்று சில சமயம் அழைப்பார்கள். சென்ற கூட்டத்தில் சொன்ன அதே குறைகளை சில ஓய்வூதியர்கள் இந்த கூட்டத்திலும் சொல்லுவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு நோட் புத்தகத்தில் அன்றைய தினம் மட்டும் ஓய்வூதியர்கள் சொல்வதை குறித்துக் கொள்வதோடு சரி. உண்மையாகவே ஓய்வூதியதாரர்களுக்கு வேண்டியன செய்பவர்களும் உண்டு. இன்னும் சில வங்கிகளில் எதற்கு வம்பு என்று  இதுபோன்று ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டமே கூட்டுவதில்லை. வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர் களுக்கு கிடைக்கும் கடன் வசதிகள் தபால் அலுவலகம் மூலம் பெறுபவர்களுக்கு கிடைப்பதில்லை.

பல ஓய்வூதியர்கள் தங்களது சேமிப்புகளை வங்கிகளிலேயே வைத்துள்ளனர். அதில் பெரிதாக ஏதும் வட்டி வந்து விடப் போவதில்லை. அதிலும் TDS என்ற பெயரில் வருமான வரியை பிடித்து விடுகின்றனர். இதனால் சில ஓய்வூதியர்கள் அதிக வட்டிக்காக மோசடி நபர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போய் தவிக்கின்றனர். எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் ஓய்வூதியர்களின் சேமிப்பிற்கு சலுகை காட்டினால் நல்லது. கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் வந்த பிறகு ஓய்வூதியர்கள் எந்த சந்தேகம் கேட்டாலும் சென்னை போன்ற இடங்களில் உள்ள தங்களது தலைமை அலுவலகத்தினை கை காட்டுகிறார்கள்.அங்கிருந்து விவரம் பெறுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. அந்தந்த கிளைகளிலேயே இவற்றை நிவர்த்தி செய்தால் நல்லது.