எங்கள் பக்கத்து
வீட்டுக்காரர் வீட்டில் அவரும், அவரது மனைவியும்தான் இருக்கிறார்கள். பிள்ளைகள்
சென்னை மற்றும் பெங்களூரில். அதனால் அடிக்கடி பிள்ளைகள் இருக்கும் இடத்திற்கு சென்று
விடுவார்கள். அவர் தனது வீட்டு மாடியில் கீற்றுக் கொட்டகை ஒன்றை போட்டு , ஒரு
அறையைப் போல் தடுத்து, பழைய சாமான்கள் போட்டு வைக்கும் ”ஸ்டோர் ரூமாக” வைத்து இருந்தார்.
அவர் ஒரு தடவை ( கடந்த ஏப்ரல் –
மே ) வெளியூர் போன சமயம், அந்த அறையில் ஒரு பெண்பூனை குடித்தனம் நடத்தி குட்டிகள்
போட்டு குடும்பம் நடத்தியது. அவர் ஊரிலிருந்து வந்ததும் முதல் வேலையாக அவைகளை
பயமுறுத்தி வெளியே அனுப்பினார். மேலேயிருந்த அவை கீழே வந்தன. கீழேயும் அவர்
பயமுறுத்த எங்கள் வீட்டு மாடிப்படிகள் வழியே மேலே இருந்த கெஸ்ட் ஹவுஸுக்கு வெளியே இருந்த ஷெட்டில்
அடைக்கலம் ஆகி விட்டன. தாய், குட்டிகள் எல்லாமே வெள்ளை.
( படம் – மேலே) பூனைகள் வந்த புதிதில்
எங்கள் வீட்டில்
இருந்த ”ஜாக்கி” என்ற
செல்லநாய் இருந்தவரை எதுவும் உள்ளே வராது. அது இறந்து விட்ட படியினால், இப்போது தடுக்க
யாரும் இல்லை. எங்கள் ஜாக்கிக்குப் பிறகு நாங்களும் எந்த செல்லப் பிராணியும்
வளர்க்க விரும்பவில்லை. எனவே மேலே இருந்த பூனைகளை விரட்டி விட்டேன். அவைகளோ வீட்டை
ஒட்டி இருந்த போர் தண்ணீர் இறைக்கும் மோட்டார் அறைக்குள் சென்று விட்டன. ஒரு
கட்டத்தில் என்னைக் கண்டாலே தாய்ப்பூனை, ஓடிவிடும். அந்த குட்டிப் பூனைகள் மிரள
ஆரம்பித்து கத்த ஆரம்பித்தன. இரக்கப்பட்டு, சரி இருந்து போகட்டும் என்று விட்டு விட்டேன்.
அப்புறம் எங்கள் வீட்டில் நான், எனது மனைவி, மகன் மூவரும் அவற்றின் மீது பரிதாப்பட்டு
பால், உணவு வைக்க அவைகள் இப்போது தங்கள் அன்பினால் எங்களை நண்பர்களாக மாற்றி
விட்டன.
கடந்த ஆறு மாதத்தில்
நன்கு வளர்ந்து விட்டன. அந்த பூனைகள் வீட்டு வராண்டாவோடு சரி. அப்புறம் வீட்டின்
கொல்லைப்புறம், செடிகள் உள்ள தோட்டம் காலியிடத்தோடு வேறு எங்கும் தொந்தரவு
செய்வதில்லை. இவைகளுக்கு உணவு வைக்கும்போது எங்கிருந்தோ அக்கம் பக்கம் இருக்கும்
இவைகளின் சொந்தக்கார பூனைகளும் வந்து விடும். அவைகளும் இப்போது
நண்பர்களே.
(படம் – மேலே)வந்த பூனைகளின் சொந்தங்கள்
(படம் – மேலே) கடந்த எனது பதிவொன்றில் வந்த படம்
சென்ற மாதம் சில
நாட்களாக எங்கள் பகுதியில் நல்ல மழை. மேலும் ஒரே குளிர். அருகில் உள்ள மைதானத்தில்
இருந்து, தாயைப் பிரிந்த குட்டிநாய்
ஒன்று, எங்கள் வீட்டு இரும்பு கேட் இடைவெளி வழியாக உள்ளே வந்து விட்டது.. பார்க்க
பாவமாக இருந்தது. விரட்ட மனம் இல்லை. மழை முடியும் மட்டும் இருக்கட்டும் என்று,
அதற்கு சாப்பிட பால் கொடுத்தோம்.
மழை விட்டும் அது போக
வில்லை. இங்கேயே தங்கி விட்டது. நாங்களும் அதனைக் கட்டி போடவில்லை. அதனால் வீட்டுக்கு
வெளியே போய் விட்டு, மீண்டும் உள்ளே வந்து விடும். ஆரம்பத்தில் இங்கே இருந்த
பூனைகள் குட்டி நாயைக் கண்டதும் அஞ்சி ஓடின. இப்போது குட்டி நாய், பூனைகள்
எல்லோரும் நண்பர்கள். அருகருகே ஒன்றாய் இருந்து சாப்பிடுகின்றன; விளையாடுகின்றன;
ஒன்றையொன்று கட்டி பிடித்தபடி தூங்குகின்றன.
குட்டி நாய் கொஞ்சம்
பெரியதானதும், எங்கள் வீட்டு கிரில் கேட் இடைவெளி வழியாக உள்ளே வரமுடியாது
போய்விடும். அப்போது அப்படியே வெளியில் (எங்கள் கிராமத்து நாய்களைப் போன்று)
விட்டு விடலாம் என்று இருக்கிறோம்
பழகும் விதத்தில் பழகிப்பார்த்தால்
பகைவன்கூட நண்பனே
பாசம் காட்டி ஆசைவைத்தால்
மிருகம் கூட தெய்வமே
பகைவன்கூட நண்பனே
பாசம் காட்டி ஆசைவைத்தால்
மிருகம் கூட தெய்வமே
வளர்த்தப் பிள்ளையும் மாறிவிடும்
வாழும் உறவும் ஓடிவிடும்
வாயில்லாத உயிரை வளர்த்தால்
காடுவரைக்கும் கூட வரும்.
வாழும் உறவும் ஓடிவிடும்
வாயில்லாத உயிரை வளர்த்தால்
காடுவரைக்கும் கூட வரும்.
அன்புகாட்டும் முகம் தெரியும்
அணைக்கும் நண்பன் குரல் தெரியும்
பண்பு தெரியும் நன்றி தெரியும்
பதில் சொல்லாமல் துணைபுரியும்
அணைக்கும் நண்பன் குரல் தெரியும்
பண்பு தெரியும் நன்றி தெரியும்
பதில் சொல்லாமல் துணைபுரியும்
சிரிக்கும் உறவில் நெருக்கமில்லை
சேர்ந்து துடிக்கும் பாசமில்லை
பிரியும் பொழுது பெருகும் கண்ணீர்
பேசும் பேச்சில் வருவதில்லை!
சேர்ந்து துடிக்கும் பாசமில்லை
பிரியும் பொழுது பெருகும் கண்ணீர்
பேசும் பேச்சில் வருவதில்லை!
- பாடல்: கண்ணதாசன் ( படம்: தெய்வச்செயல்)