Showing posts with label எல்.ஆர் ஈஸ்வரி. Show all posts
Showing posts with label எல்.ஆர் ஈஸ்வரி. Show all posts

Wednesday, 11 July 2012

எல்.ஆர். ஈஸ்வரியின் மயக்கும் குரல்

மாரியம்மன் பாடல்கள் என்றால் அது எல்.ஆர். ஈஸ்வரி பாடியதுதான். தமிழ் நாட்டில் எந்த ஊரில் அம்மன் திருவிழா நடந்தாலும் எல்.ஆர். ஈஸ்வரியின் கணீர் குரலில் மாரியம்மன் பாடல்களை ஸ்பீக்கரில் வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்தவல்லி தெய்வயானை அம்மா
விற்கோல வேதவல்லி விசாலாக்ஷி
விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி
சொற்கோவில் நான் அமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே.
                                  - பாடல்: அவினாசி மணி

எங்கள் திருச்சியில் ஆண்டுதோறும் காவிரிக் கரையில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறும். அப்போது திறந்த வெளிக் கலையரங்கில் நடைபெறும்  எல்.ஆர். ஈஸ்வரி இன்னிசைக் கச்சேரிக்கு மக்கள் திரளாக வருவார்கள். குறிப்பாக அப்போதைய இளைஞர்கள ஆக்‌ஷனோடு கூடிய அவர் பாடல்களை கேட்க ஆர்வமாக வருவார்கள். மாரியம்மன் பாடல்களை மட்டுமல்லாது, பல மயக்கும் தேனிசைப்  பாடல்களையும் திரைப் படத்தில் பாடியவர்.

தமிழ்நாட்டின் பல ஊர்களில், குறிப்பாக கிராமங்களில் மணமகளை மணமேடைக்கு அழைத்து வரும்போது எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய,

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ?
          - பாடல் கண்ணதாசன் படம்: பாசமலர்                    

என்ற தொடங்கும் இந்த பாடலை நிச்சயம் ஒலி பரப்புவதை இன்றும் காணலாம்.

ஆலய்மணி படத்தில் சிவாஜி கணேசன் பாடுவது போன்று ஒரு காட்சி.கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமாஎன்ற அந்த பாடலுக்கு எல்.ஆர். ஈஸ்வரி கொடுத்த ஹம்மிங் அவ்வளவு இனிமையாக இருக்கும்.

இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சிகளில் மேடையில் இவர் பாடும் போது பாடலுக்கு ஏற்ப சில ஆக்‌ஷன்களும் செய்வார். அந்த பாடல்கள் திரையில் ஹிட் ஆனதைப் போலவே மேடையிலும் ஒன்ஸ்மோர் போட வைத்தன.

இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
எவ்வளவோ இருந்தாலும் 
எப்படித்தான் பார்த்தாலும்  இவ்வளவுதான்
 - பாடல்: அவினாசி மணி (படம்: உலகம் இவ்வளவுதான்)                               

வல்லவன் ஒருவன் படத்தில் வில்லி விஜயலலிதாவுடன் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்த ஒரு பாடல், எல்.ஆர். ஈஸ்வரியின் அசத்தலான
குரலில்.

பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா   
 -பாடல்:கண்ணதாசன்                                                            
இந்த பாடலில் வரும் எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் ஒருவித ஏற்ற இறக்கத்தோடு இருக்கும்.

ஆடவரெல்லாம் ஆட வரலாம்!
காதல் உலகம் காண வரலாம்!
பாவையரெல்லாம் பாட வரலாம்!
பாடும் பொழுதே பாடம் பெறலாம்!
-         பாடல்: கண்ணதாசன் (படம்: கறுப்பு பணம்)

வெள்ளிவிழா என்ற படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடிகை ஜெயந்தியும் ஜோடியாக நடித்து இருப்பார்கள். ஜெமினி கணேசன் சேஷ்டைகளுக்கு ஏற்ப ஜெயந்தி ஒரு பாடல் காட்சியில் நடித்து இருப்பார். பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. இதோ அந்த பாடல்.

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடிமீது கண்மூடுவேன்  
          - பாடல்: வாலி (படம்: வெள்ளி விழா)

பணமா பாசமா என்று ஒரு படம். அதில் நடிகை விஜய நிர்மலா தள்ளு வண்டியில் பாடிக் கொண்டே எலந்த பழம் விற்பார். அந்தக் காட்சிக்குத் தகுந்தவாறு “எலந்த பயம் எலந்த பயம் “ என்ற பாடலை மெட்ராஸ் பாஷையில் பாடி இருப்பார். இந்த பாடல் தமிழ் நாட்டை ஒரு கலக்கு கலக்கியது.

இதே போல் ஜெயலலிதா ஒரு படத்தில் தள்ளு வண்டியில் இளநீர் விற்கும் போது நான் ஏழு வயசிலே எளநி வித்தவ( பாடல்: வாலி படம்: நம்நாடு ) என்று பாடுவார். இதற்கு பின்னணி பாடியவர் ஈஸ்வரிதான்.

தில்லானா மோகனாம்பாள் என்ற படத்தில் நடிகை மனோராமா “பாண்டியன் நானிருக்கஎன்று ஒரு டப்பாங் குத்து ஸ்டைலில் ஒரு பாடலைப் பாடி ஆட்டத்தையும் போடுவார். அது மனோரமாவின் சொந்தக் குரல் போல இருந்தது.. ஆனால் மூச்சு விடாமல் அந்தப் பாட்டை பின்னணியில் பாடி அசத்தியவர் எல்.ஆர். ஈஸ்வரிதான்.


இன்னும் நிறைய பாடல்கள். சொல்லிக் கொண்டே போகலாம்.

இவரேதான் அவரே ( படம்: நல்ல இடத்துச் சம்பந்தம்)
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை (படம்: இருவர் உள்ளம்)
சீட்டுக்கட்டு ராஜா ராஜா ( படம்: வேட்டைக்காரன்)
பட்டத்து ராணி ( படம்: சிவந்த மண்)
பிறந்த இடம் தேடி (படம்: நான் ஆணையிட்டால்)
முத்துக் குளிக்க வாரீகளா ( படம்: அனுபவி ராஜா அனுபவி )
ராஜ ராஜஸ்ரீ (படம்: ஊட்டிவரை உறவு)
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் (படம்: அவள் ஒரு தொடர் கதை)
ஆட்டுக் குட்டி ஆட்டுக் குட்டி மாமாவைப் பாரு ( படம்: மணி ஓசை)

( குறிப்பு: சூழ்நிலையின் காரணமாக என்னால் தொடர்ச்சியாக வலைப் பதிவுகள் பக்கம் வர இயலவில்லை. சில பதிவர்கள் சொல்லிக் கொண்டே, விடை பெற்றுச் சென்று விட்டனர். தொடர்ச்சியாக எழுதி வந்த பல பதிவர்களைக் காண இயலவில்லை. என்னையும்  அந்த வரிசையில் சேர்த்து விடக் கூடாது என்பதற்காக  போட்ட சினிமா பதிவு இது)