முன்பெல்லாம் நான் பஸ்ஸில் பயணம் செய்யும்போது அடிக்கடி
சாலையில் குறுக்கிடும் சமாச்சாரம் ”ரயில்வே
கேட்”தான். இதனை ரயில்வே லெவல் கிராஸிங்
என்றும் சொல்வார்கள். ஆனாலும்
அதிலும் சுவாரஸ்யம் இருக்கிறது. நடுவில் சிவப்பு வட்டம் போட்ட தகடு பதிதத பழைய ரயில்வே
கேட்டை, நம்மில் பலர் மறந்தே இருப்பார்கள். இந்தகாலத்துப் பிள்ளைகள் பலருக்கு
பார்க்க வாய்ப்பே இருக்காது. ஏனெனில் இப்போது கௌபாய் படத்தில் வருவதுபோல்
இருபக்கமும் இரும்புக் குழாயில் சங்கிலிகள் கோர்த்த கேட். இது பழைய கேட் போன்று
உறுதியானது இல்லை. ரயில்வே கேட்டில் ரயில் கடக்கும் வரை காத்திருக்க சிலருக்கு பொறுமை
இருக்காது. சர்க்கஸ் வேலை செய்வார்கள். உடம்பை வளைத்து நெளித்து இருசக்கர வண்டியை
கேட்டுக்கு அடியில் நுழைத்து தாண்டுவார்கள். பழைய ரயில்வே கேட்டில் இப்படி எல்லாம்
செய்ய முடியாது. இப்போது பல ரயில்வே கேட்டுக்கள் இல்லை. பெரும்பாலும் அவை இருந்த எல்லா இடத்திலும் நான்கு வழிச்சாலை
மேம்பாலங்கள்.
சின்னச்சின்ன
வியாபாரம்:
பஸ் போய்க் கொண்டு
இருக்கும்.. திடீரென்று பஸ் நின்றுவிடும். எட்டிப் பார்த்தால் வரிசையாக பஸ்கள்,
லாரிகள், மாட்டு வண்டிகள். காரணம் ரயில்வே கேட்டை மூடி இருப்பார்கள்.. சார்
வெள்ளரி,
சார் பலாப்பழம்,
சார் முறுக்கு,
சார் மோர், அம்மா மல்லி பூ என்று ஒரே குரல்கள். கொஞ்சநேரம் மூடுவதால்
சிலர் வாழ்வில் கொஞ்சம் வருமானம். இந்த வியாபாரமும் அந்த பகுதியில் விளையும்
பொருட்களை குறைந்த விலையில் விற்பதாக இருக்கும். எங்கள் வங்கியின் SAVINGS BANK
BALANCING SQUAD –
இல் இருந்தபோது
தினமும் திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு பஸ்சில் பயணம். புதுக்கோட்டைக்கு
சற்று முன்னால் இருக்கும் ரயில்வே கேட்டில் வெள்ளரி பிஞ்சு வியாபாரம் நன்றாக
இருக்கும். (இப்போதும் புதுக்கோட்டை சென்றால்
பஸ்நிலையத்தில் அந்த இளம் வெள்ளரி
பிஞ்சுகளை ஆசையாக வாங்கி பழைய நினைவுகளோடு சாப்பிடுவதுண்டு) திருச்சி மணப்பாறை சாலை
ரயில்வேகேட்டில் மணப்பாறை முறுக்கு. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில்
லாலாபேட்டை ரயில்வேகேட் என்றால் வாழைப்பழம். இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒரு ரயில்வே
கேட ஒரு பொருளுக்கு விஷேசம். இப்போது எல்லா இடத்திலும் ரெயில்வே மேம் பாலங்கள்.
பஸ் பயணிகள்
சிலர் பஸ்
ஏறியதிலிருந்து பஸ் ஒரு பத்துநிமிஷம் எங்காவது நிற்காதா என்றே வருவார்கள். அவர்கள்
பஸ் நின்றதும் ஒரே ஓட்டமாக ஒரு ஒதுக்குப்புறம் சென்றுவிட்டு அப்பாடா என்று
வருவார்கள்.. அப்போதெல்லாம் சாலை ஓரம் வரிசையாக பெரிய பெரிய புளிய மரங்கள். தம்
போடும் நண்பர்களுக்கு இழுக்க இழுக்க , கேட் திறக்கும்வரை இன்பம் என்பார்கள். ரயில்வே
கேட் திறக்க எப்படியும் கால்மணி நேரம் ஆகும். சிலசமயம் பக்கத்தில் ரயில் நிலையம்
இருந்தால் இரண்டு வண்டிகள் வந்து செல்லும்வரை மூடி இருக்கும்.
கோடம்பாக்கம் ரயில்வே
கேட்:
பழைய
பத்திரிகைகளில் கோடம்பாக்கம் ரயில்வேகேட் பற்றி நிறைய ஜோக்குகள், கார்ட்டூன்கள்
வரும். காரணம் அந்த கேட் வழியாகத்தான் சினிமா நட்சத்திரங்கள் கார்களில் கோடம்பாககம்
ஸ்டுடியோக்களுக்கு சென்று வருவார்கள். கோடம்பாககம் ரயில்வேகேட் போட்டதும்
கார்களில் கருப்புக் கண்ணாடிகளுக்கு உள்ளே இருப்பது யார் என்று பார்ப்பதற்கென்றே
சில ரசிகர்கள் (பெரும்பாலும் வெளியூர்க்காரர்கள்) அந்த பக்கம் சுற்றிக் கொண்டு
இருப்பார்கள். ஒரு ரயில்வே லெவல் கிராஸிங்கில் நடந்த கொலையை கண்டுபிடிப்பதுதான்,. நடிகர்
திலகம் சிவாஜி கணேசன் நடித்த “புதிய பறவை “ திரைப்படத்தின் சஸ்பென்ஸ்.
“ இளையராஜாவின் பகவதிபுரம் ரயில்வேகேட் “ என்று ஒரு திரைப்படம் கூட வந்தது.
“குசேலன்” என்ற படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்றில், வடிவேலு லெவல்கிராசில், பஸ் பயணிகளுக்கு கட்டிங் ஷேவிங்
செய்வார்.
ரயில்வே கேட் கீப்பர்கள்:
இப்போதெல்லாம்
ரயில்வே கேட்கீப்பர்கள் பற்றி தூங்கிவிட்டார் என்றோ, போதையில் இருந்தார் என்றோ
செய்திகள் வருகின்றன. அப்போதெல்லாம் அப்படி கிடையாது. காக்கி பேண்ட் சட்டை போட்டுக்
கொண்டு கழுத்தில் ஒரு சிவப்பு துண்டு போட்டுக் கொண்டு
உஷாராக இருப்பார்கள். பெரியவர்களாக இருந்தால் வாயில் பீடித் துண்டோ அல்லது
சுருட்டோ புகைந்தபடி இருக்கும். கேட் கீப்பர் ரூமிற்கு வெளியில் அவசரத்திற்கு ஒரு
சைக்கிள். ரோட்டோரத்தில் நிழலில் அவரது நண்பர்கள் தாயம் அல்லது ஆடுபுலி ஆட்டம்
ஆடிக் கொண்டு இருப்பார்கள்.
கையசைக்கும் குழந்தைகள்
ரயில்வே கேட்டை
ரெயில் நெருங்கும் போது திடீரென்று அதிக சப்தம். நீராவி என்ஜின் இணைத்த ரயில்
குப்குப் என்று வேர்த்தபடி செல்லும். பஸ்ஸில் இருக்கும் பிளளைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. ரயிலுக்கு டாட்டா சொல்வார்கள். அதேபோல
ரயிலில் இருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க பஸ்ஸில் இருப்பவர்களுக்கு கையசைப்பார்கள். சில குழந்தைகள் ஒன்னு,
ரெண்டு என்று ரெயில் பெட்டிகளை எண்ணும். கூட்ஸ் ரெயில் என்றால் வெறும் எண்ணுதல் மட்டும்தான். நான் இதுமாதிரி சமயங்களில் கையசைக்கும்
குழந்தைகளைப் பார்த்து நானும்
கையசைப்பேன். இதிலும் ஒரு மகிழ்ச்சி
இருக்கத்தான் செய்கிறது.
.
(
PICTURES : THANKS TO “ GOOGLE ” )