சென்னையில், இந்த வருட (2015) தீபாவளியை (நவம்பர், 10 ஆம் தேதி)
யாரும் சரியாகக் கொண்டாடி இருக்க மாட்டார்கள். காரணம் சென்ற நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து இன்றுவரை ஒருமாதமாக
சென்னையில் நல்ல மழை.
முன்னறிவிப்பு:
சென்னை வானிலை மையம் வரப் போகும் புயல், மழை விவரத்தை முன்கூட்டியே
சொன்னது. யாரும் அதனை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. ரமணன் சார் சொன்னால் பள்ளிக்கூடங்களுக்கு
லீவு கிடைக்கும் என்றே இருந்து விட்டார்கள். இந்த அரசாங்கமும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக
எதுவும் செய்யவில்லை. முழுதும் நிரம்பிக் கொண்டு இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து
விடப் போகிறோம் என்ற அறிவிப்பு கூட செய்யவில்லை என்கிறார்கள். இன்னும் சிலர், போலீஸ்
மூலம் அறிவிப்பு செய்ததாகச் சொல்கிறார்கள். முன்பெல்லாம் இதுமாதிரியான சமயங்களில் மக்கள்
கூடும் இடங்களில் அல்லது தெருக்களில் தமுக்கு அடித்து அறிவிப்பு செய்வார்கள். அவர்களே
எதிர்பாராத பேரிடர் இது.
உயிரா/ உடைமையா?
சாதாரணமாக யாரும் உயிருக்கு ஆபத்து என்றால், பாதுகாப்பான இடம் தேடி
ஓடுவது இயல்பு. ( 1977 இல் திருச்சியில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளத்தின் போது, போட்டிருந்த
பேண்ட், சட்டையோடு, நான் உயிர் தப்பியது தனிக்கதை)
ஆனால் இப்போது ஏற்பட்ட பெரும் மழையின் போது, உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், சென்னை
நகர மக்கள் பலரும் ( நகர், புறநகர் இரண்டிலுமே ) தங்கள் குடியிருப்புகளை விட்டு உடனே
வெளியே வர முடியவில்லை. எப்போதும் போல மழை பெய்யும், தண்ணீர் இரண்டுநாள் இருக்கும்,
அப்புறம் வடிந்துவிடும் என்றே நம்பினார்கள். வெளியே வந்தால் பாதுகாப்பு இருக்காது என்றும்;
எங்கே நம் வீட்டில் இருக்கும் கார், பைக், டீவி, கம்ப்யூட்டர் போன்ற பொருட்களும் மற்றும்
நகைகளும் காணாமல் போய் விடுமோ என்று பயந்தும் அவற்றை பாதுகாப்பதிலேயே கவனமாக இருந்து
விட்டார்கள். தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர், படகுகளில் வந்து கூப்பிட்டபோது
கூட பலரும் வராததை டீவி செய்திகளில் காண முடிந்தது.
திருட்டு பயம்:
மக்கள் அச்சப்பட்டதிலும் காரணம் இருக்கிறது. நல்ல நாளிலேயே பூட்டிய
வீட்டை கொள்ளை அடிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, புயல், வெள்ளம் போன்ற பேரிடர்
காலங்களில் நடக்கும் திருட்டுக்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. வெளியில் பெண்களுக்கும்
பாதுகாப்பு இல்லை. விளைவு அதிக உயிர்ச்சேதம் மற்றும் அவஸ்தைகள். இப்போதும் பல இடங்களில்
பூட்டிய வீடுகளில் கொள்ளைகள் நடப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. சினிமா
துறையில் வேலைபார்க்கும், எனது உறவினர் ஒருவர் தனது விலையுயர்ந்த கேமரா, வீடியோ கேமரா
போன்ற பொருட்களை, அப்படி அப்படியே போட்டு , தனது ஸ்டுடியோவை பூட்டி விட்டு, கடவுள்
மீது பாரத்தைப் போட்டு விட்டு, சொந்த ஊர் வந்து விட்டார். அவரது மனமெல்லாம் இப்போது
அங்கேதான். ஊரே வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும்போது காவல்துறை மட்டும் என்ன செய்ய முடியும்.
அவர்கள் அவர்களது குடும்பத்தை மட்டுமே கவலைப்பட முடியும்.
ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்:
’வாங்க வாங்க … தாம்பரத்திற்கு அருகில்தான்…… முடிச்சூரிலிருந்து சென்னைக்கு முப்பது நிமிசம்தான்
…செங்கல்பட்டிலிருந்து கொஞ்ச தூரம்தான்….. ” – என்று கூவிக் கூவி அழைக்கும் சின்னத்திரை,
பெரியத்திரை நட்சத்திரங்களின் ரியல் எஸ்டேட் விளம்பரங்களை இப்போது டீவியில் காணவில்லை.
மழை நின்று, வானம் வெளுத்து, வெயில் வந்து, பூமி காய்ந்ததும் மறுபடியும் வந்து விடுவார்கள்.
சென்னையில் ஓடும் கூவத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று பல வருடங்களாக
சொல்லிக் கொண்டு இருந்தார்கள். கூவம் தன்னைத்தானே சுத்தம் செய்து கொண்டு விட்டது.
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
‘அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்” (படம்:
அன்னை) https://www.youtube.com/watch?v=U4e2qAlHLzg
‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” (படம்: அனுபவி ராஜா அனுபவி)
மெட்ராஸை சுத்திப் பாக்கப் போறேன்” (படம்: மே மாதம் )
’சென்னை வட சென்னை” (படம் மெட்ராஸ்)
ஆகிய திரைப்பாடல்களில் வரும் அந்த சுவாரஸ்யமான பழைய மெட்ராஸை எப்போது
மீட்டெடுக்கப் போகிறோம்?
(பாடல்களை youtube இல் கண்டு கேட்டிட அந்தந்த இணைய முகவரிகளை க்ளிக்
செய்யவும்)