அண்மையில்
ஒரு பெரியகாரியம். வழக்கம் போல அங்கே பந்தலில் இருந்தவர்களுக்கு, தமிழ் மக்களுக்கே
வரும் சந்தேகங்களில் ஒன்றைப் பற்றிய பேச்சு. “இறந்தவரை எரிப்பதா? புதைப்பதா?” என்பதுதான். இந்த கேள்வியை அடிப்படையாக வைத்து, தமிழ்
சினிமாவில் கவுண்டமணி நகைச்சுவை காட்சி ஒன்று இருக்கிறது என்று நினைக்கிறேன்.
தமிழர் மரபு:
தமிழர்கள்
ஓரிடத்திலேயே தங்கும் இயல்பினராக இருந்தனர். முல்லை (காடும் காடு சார்ந்த பகுதி),
குறிஞ்சி ( மலையும் மலை சார்ந்த பகுதி), மருதம் (வயலும் வயல் சார்ந்த பகுதி),
நெய்தல் ( கடலும் கடல் சார்ந்த பகுதி) என்று நான்கு வகை நிலங்களில் அவர்களது
வாழ்க்கை அமைந்தது. அரேபிய பாலைவனம் போன்ற அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை. பாலை
என்பது முல்லை நிலமோ, குறிஞ்சி நிலமோ அதிக வெப்பம் (வெயில்) காரணமாக வறட்சி
காரணமாக மாறுபாடு அடையும்போது மட்டும் அமைவது.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
(சிலப்பதிகாரம், காடுகாண் காதை, 64-66)
நம்நாட்டு
பாலை நிலம் மீண்டும் பெரும் மழை பெய்தால் பழைய நிலைக்கு வந்து விடும் தன்மையது..
இந்த
நால்வகை நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் நிலையாக ஓரிடத்தில் இரு்ந்தபடியினால் அதற்கு
ஏற்றவாறு தமது பழக்க வழக்கங்களை அமைத்துக் கொண்டனர். இயற்கை தெய்வங்களை ஒவ்வொரு
நிலத்திற்கும் ஏற்ப வழிபட்டனர். இறந்தவர்களது உடலை தாங்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே
புதைத்து இறந்தவர்களை வழிபட்டனர். அதிலும் பல இடங்களில் புதைப்பதற்கு தாழிகள்
எனப்படும் பெரிய மண்பாண்டங்களை பயன்படுத்தி இருக்கின்றனர். புதைத்த இடத்தில் அடையாளத்திற்காக
நடுகற்களையும் நட்டு வைத்தனர்.
தெற்கே
குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் அப்போது நிகழ்ந்த கடல்கோளின் (அந்நாளைய
சுனாமியின் ) போது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்தனர். எனவே இறந்த மூதாதையர்கள் நினைவாகவும் அவர்களுக்கு
மரியாதை செய்யும் விதமாகவும், இறந்தவர்களைப் புதைக்கும் போது, அவர்களது தலையை
தெற்கு திசையில் இருக்குமாறு வைத்து (தெற்கு வடக்காக) புதைத்தனர். சிலர் இந்த முறையை கைலாயமலை வடக்கில்
இருப்பதால் வடக்கு நோக்கி முகம் இருப்பதாக புதைக்கின்றனர் என்று சொல்லுகிறார்கள்.
தூங்கும்போது தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு
இருக்கலாம். காரணம் மேலே இறந்தவர்களை புதைக்கும் முறைமைதான். அறிவியல் முறைப்படியும் சரி என்று சொல்கிறார்கள். என்னைக் கேட்டால் நமக்கு எது சவுகரியமோ
அந்த பக்கம் தலையை வைத்து தூங்கிக் கொள்ள வேண்டியதுதான். (தமிழ்
கிறிஸ்தவர்கள் அவர்களது மதத்தின் வழக்கப்படி இறந்தவர்களது உடலை கிழக்கு மேற்காக
புதைப்பார்கள்.)
அக்கினி வழிபாடு
வடவர்கள்
கலாச்சாரமும் இந்தியர்கள் கலாச்சாரமும் கலந்ததன் விளைவாக உண்டான இந்தோ –
ஆரிய நாகரிகம், தமிழகத்திலும் பரவியது இதன் விளைவு அக்கினி வழிபாடு. பொதுவான ஒரு கருத்து என்னவெனில் ஆரியர்கள்
கூட்டம் கூட்டமாக நாடோடிகளாக
வாழ்ந்தவர்கள்.. அவர்கள் அக்னியை வழிபட்டவர்கள். அக்னியை எங்கு சென்றாலும் ஒரு
மண்சட்டியிலோ அல்லது பாத்திரத்திலோ
எடுத்துச் சென்றார்கள். அவர்கள் ஓரிடம் விட்டு ஓரிடம் நகரும்போது
கூட்டத்தில் யாரேனும் இறந்தால் புதைப்பதில்லை. அவ்வாறு புதைத்தால் இறந்தவர்களது
உடலை எதிரிகளோ அல்லது விலங்குகளோ தோண்டி வெளியில் வீசக்கூடும். மேலும் இறந்த
உடலைப் புதைத்த இடத்திலேயே அவர்கள் அதிக நாள் தங்கி இருந்து காத்துக் கொண்டு
இருக்க முடியாது. எப்போதும் வேறு இடம் பெயரும் சூழ்நிலை. எனவே அவர்கள் இறந்த உடலை
அந்த இடத்திலேயே எரித்தார்கள். தாங்கள்
வழிபடும் அக்னி கடவுளுக்கு சடங்குகளைச் செய்தார்கள். இது அவர்களுடைய வழக்கமாக
இருந்தது. ( இங்கு ஆரியரையும், பார்ப்பனர் எனப்படும் பிராமணரையும் ஒன்றாகக்
கருதக் கூடாது. ஆரியர் வேறு; பிராமணர்கள் வேறு.
ஆரியர்களின் பழக்க வழக்கங்களை அப்படியே ஏற்றுக் கொண்டவர்கள் பிராமணர்கள்
என்று சொல்லலாம் – இது எனது கருத்து.)
வடக்கிலிருந்து
தமிழகத்தின் மீது எடுக்கப்பட்ட பண்பாட்டு படையெடுப்புக்கள்,
புராண மதங்களின் கலப்பு மற்றும் பௌத்தம், சமண மதங்களின் வருகை போன்றவற்றால் இந்தோ
- ஆரியர் கலாச்சாரம், முக்கியமாக அக்கினி வழிபாடு, நாளடைவில் தமிழர்களின் வாழ்வியலிலும் நுழைந்தது.
தமிழரின் பல பழக்க வழக்கங்கள் மாறுபட்டன. சிலர் முழுக்க முழுக்க இந்தோ -ஆரியர்
பழக்க வழக்கங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு தமிழர்களிடமிருந்து வேறு பட்டவர்களாக காட்டிக் கொண்டனர். சிலர் தங்களை ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது தமிழர்களில் நாங்கள்
உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்ள, அக்னி புத்திரர்கள் என்று அழைத்துக்
கொண்டனர். அவ்வாறு வந்த ஒரு பழக்கங்களில் ஒன்றுதான் தமிழர்கள் இறந்தவர்களை
எரிப்பது என்பது.
எனவே
இறந்தவர்களை எரிப்பது என்பது தமிழர் வழக்கம் இல்லை. இறந்தவரை புதைப்பதுதான் தமிழர் மரபு. இறந்தவர்களை எரித்த இடம் சுடுகாடு.
இடுகுழியில் இட்டு புதைத்த இடம் இடுகாடு. இரண்டும் ஓரிடத்திலேயே உள்ளது. ஆனால்
இப்போது சூழ்நிலையின் காரணமாக, மயானத்தில் இடப்பற்றாக் குறை காரணமாக எரிக்கவும்
செய்கின்றனர். (இடப்பற்றாக்
குறைக்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகளே.)
புறநானூற்றில் இரு வேறு காட்சிகள்:
சோழன்
குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் இறந்து விடுகிறான். அவனை புதைப்பதற்காக
மண்தாழி ஒன்று செய்யப்படுகிறது. அப்போது அங்கே வந்த அவனுடைய நண்பர் புலவர் ஐயூர்
முடவனார் “ கலம் (மண் தாழி) செய்பவரே! கலம் செய்பவரே! சோழன் குளுமுற்றத்துத்
துஞ்சிய கிள்ளி வளவனை அடக்கம் செய்ய அவன் உடம்புக்கு நீங்கள் தாழி ஒன்றை செய்து
விடுவீர்கள். ஆனால் அவனது புகழ் உடம்பினை அடக்கம் செய்வதற்கான பெரிய மண் தாழியினை உங்களால் செய்திட முடியுமோ?
“ என்று கேட்கிறார். அதாவது அவனது புகழினை மறைக்க முடியாது என்பது கருத்து.
கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை,
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே; யாங்கு
ஆகுவை கொல்?
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை,
விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை அயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப்,
பெருமலை
மண்ணா, வனைதல்
ஒல்லுமோ, நினக்கே?
- பாடியவர் ஐயூர் முடவனார் (புறநானூறு . 228 )
இந்த
பாடலில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், தமிழர்கள் இறந்தவர்களைப் புதைத்தார்கள்
என்பதே. இதில் மன்னர்களைத்
தாழியில் இட்டு புதைக்கும் வழக்கம் இருந்ததை தெரிந்து கொள்ளலாம்.
இன்னொரு
பாடல். நம்பி நெடுஞ்செழியன் ஒரு குறுநில மன்னன். அவன் மரணம்
அடைகின்றான். அவனது உடலை எரிப்பதா அல்லது
புதைப்பதா என்ற விவாதம் அப்போதும் நடந்து இருக்கிறது போலிருக்கிறது. அந்த
விவாதத்தினை மையப்படுத்தி பேரெயின் முறுவலார் என்ற புலவர், அந்த மன்னனின்
பெருமைகளோடு பாடிய பாடல் இது.
தொடியுடைய தோண்மணந்தனன்
கடிகாவிற் பூச்சூடினன்
தண்கமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
நட்டோரை யுயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
வேந்துடை யவையத் தேங்குபுகழ் தோற்றினன்
வருபடை எதிர் தாங்கினன்
பெயர்படை புறங்கண்டனன்
கடும்பரிய மாக்கடவினன்
நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்
ஓங்குகியல களிறூர்ந்தனன்
தீஞ்செறி தசும்புதொலைச்சினன்,
பாணுவப்பப் பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
இடுக வொன்றோ சுடுக வொன்றோ
படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.
- புறநானூறு 239
பாடியவர் : பேரெயின் முறுவலார்
பாடப்பட்டவர்: நம்பி
நெடுஞ்செழியன்
இந்த பாடலில் புலவர், நீங்கள் புதைத்தாலும் சரி அல்லது எரித்தாலும்
சரி, என்னவோ பண்ணிக் கொள்ளுங்கள் என்று வெறுத்து பேசுவது
தெரிகிறது.
இந்த இரு புறநானூற்று பாடல்களையும், கால ஆராய்ச்சி
செய்தால், இதில் எது பிந்தியது என்று தெரிய வரும். நெருப்பின் பயன்பாட்டை அறியும்
முன்னர் மனித இனத்தில், இறந்தவர்களை நிச்சயம் புதைத்துதான் இருப்பார்கள்.
எரித்தால் என்ன? புதைத்தால் என்ன?
எது
எப்படி இருப்பினும், உடம்பில் உயிர் இருக்கும்
வரைதான, ஆட்டமும் பாட்டும் கொண்டாட்டமும். இறந்த பின்பு அந்த உடம்பினை, நன்றாகத் தூய்மை செய்து அடக்கம் செய்தால் என்ன? அல்லது கண்ட இடத்திற் போட்டால் என்ன? ஒன்றுமே இல்லை. – இந்தக்
கருத்தைச் சொல்லும் நாலடியார் பாடல் இது
நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.
- நாலடியார் ( பாடல் எண்.26 )
(பொருள்)
உடம்பு என்னும் தோல் பையில் இருந்து கொண்டு தனது தொழில்களைச் செய்து வரும் கூத்தன்
( உயிர் ), அவ்வுடம்பினை விட்டு வெளியேறிய பின்பு, அந்த உடலை நாரினால் கட்டி
இழுத்தால் என்ன? நன்றாகத் தூய்மைசெய்து அடக்கம் செய்தால என்ன? அல்லது கண்ட இடத்தில்
போட்டால்தான் என்ன? அதனால் பலரும் பழித்தால்தான் என்ன ? அதனால் வருகின்ற
பெருமை சிறுமைகள் ஒன்றுமிlல்லை
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx