Showing posts with label ராசி. Show all posts
Showing posts with label ராசி. Show all posts

Thursday, 16 January 2014

திருமண பொருத்தம் - நட்சத்திரம், ராசி பார்க்கலாமா?



ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் வீட்டிற்கு போயிருந்தேன். அவர் மக்கள் சமூகப் பணிகளில் ஆர்வம் மிக்கவர். நான் போயிருந்த சமயம் பேராசிரியர் வீட்டில் இரண்டு வயதான தம்பதினர் இரண்டு ஜோடிகள் வந்து இருந்தனர். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடி , பேராசிரியரிடம் சொல்லிவிட்டு போக வந்தவர்கள். இதுபோல் அடிக்கடி நிறையபேர் அவர் வீட்டிற்கு வந்து, தங்கள் பிள்ளைகளைப் பற்றிய விவரம் தந்துவிட்டு போவார்கள். பேராசிரியர் வீட்டில் ஆண் , பெண் என்று நிறைய வரன்கள் அடங்கிய பைல்கள் இரண்டு இருந்தன. வந்தவர்கள் அவற்றில் இருந்த விவரங்களைப் பார்த்துவிட்டு நட்சத்திரப் பொருத்தம் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றனர். பேராசிரியர் இந்த திருமண தகவல் சேவையை சமுதாயப் பணியாக இலவசமாக, ஒரு அறக்கட்ட்ளைக்காக  செய்து வருகிறார். நான் அவரிடம் எல்லாவற்றையும் கம்ப்யூட்டரில் ஏற்றி இலவசமாக எல்லோரும் பார்க்கும் வண்ணம் வலைத்தளம் ஒன்றைத் தொடங்கியும் தருவதாகச் சொன்னேன். அவரும் சரி என்றார்.

என்ன பொருத்தம் ஆகா என்ன பொருத்தம்:

அவர் வீட்டில் இருந்த இரண்டு பைல்களையும் எனது வீட்டிற்கு எடுத்து வந்தேன். தேவையான தகவல்கள் மட்டும் கொண்ட பொதுவான PROFILE ஒன்றை உருவாக்கிவிட்டு அதன்படி எல்லா வரன்களின் விவரத்தையும் கம்ப்யூட்டரில் ஏற்றத் தொடங்கினேன். டாக்டர்கள், சிவில் என்ஜீனியர்கள், சாப்ட்வேர் என்ஜீனியர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள், தனியார் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நிறையபேர். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளின் விவரத்தோடு , எது இருக்கிறதோ இல்லையோ கட்டு கட்டாக ஜாதகத்தைத்தான் முக்கியமாக இணைத்து இருந்தார்கள். அதிலும் சிலர் தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தோடு இன்ன நட்சத்திரம், இன்ன ராசி உள்ளவைகளே பொருத்தம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

வரன் விவரங்கள் அடங்கிய பைல்கள் என்னிடம் இருந்த படியினால், பேராசிரியர் தனது வீட்டிற்கு வருபவர்களை என்னிடம் அனுப்பி வைத்தார். வந்தவர்கள் பேராசிரியர் அவர்களிடம் கொடுக்க இருந்த வரன் விவரங்களை என்னிடம்  கொடுத்துவிட்டு , என்னிடம் கொடுக்கப்பட்ட பைல்களில் இருந்து தேவையான வரன்களின் குறிப்புகளை குறித்துக் கொள்வார்கள். பெரும்பாலும் எல்லோரும் வெளியில் எடுத்துப் போய் ஸிராக்ஸ் போட்டுக் கொள்வார்கள். வருபவர்கள் எல்லோரும் பிள்ளைகளின் பெற்றோர்தான். அவர்கள் பிறந்த தேதி, பிறந்த இடம், வயது, படிப்பு, வேலை, போட்டோ எல்லாம் பார்ப்பார்கள். பிடித்து இருக்கும். இருந்தாலும் கடைசியில் நட்சத்திரம், ராசியில் வந்து நின்று விடுவார்கள். பொருத்தம் இல்லை என்பார்கள். அதிலும் பெண் பிறந்த நட்சத்திரங்களில், குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் (அவற்றை இங்கு குறிப்பிடத் தேவையில்லை) என்றால் கேட்கவே வேண்டாம்.

அனைத்து வரன்களையும் டைப் செய்து முடிந்ததும், ஒரு இலவச திருமண தகவல் வலைத்தளத்தை, அறக்கட்டளை ஒன்றினுக்கு உருவாக்கிவிட்டு, பைல்கள் இரண்டையும் பேராசிரியரிடம் ஒப்படைத்து விட்டேன். இனிமேல் அவர் பார்த்துக் கொள்வார்.

பொருத்தம் பார்க்கலாமா? வேண்டாமா?

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். பெண்பார்க்கும் விஷயத்தில் மாப்பிள்ளை வீட்டார் செருப்பு தேயத்தேய அலைந்து விசாரிக்க வேண்டும் என்று கூட அப்பொழுது சொல்வார்கள். முப்பது வயதுக்கு மேல் ஆகி விட்டாலே நட்சத்திரம், ராசி பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என்றும் சொல்கிறார்கள் திருமணப் பொருத்தம் பத்து என்றால் அதில் ஆறு பொருத்தமாக இருந்தால் கூட போதும் என்று சொல்பவர்களும் உண்டு.. ஆனாலும் எல்லோரும் 10/10  ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள்.

 சுயம்வரம்என்ற பெயரில் திருமண தகவல் மையம் ஒன்று  வரன்தேடும் நிகழ்ச்சி ஒன்றை ஒரு கல்யாண மண்டபத்தில் நடத்தினார்கள். அங்கும் இதே நிலைமைதான். ஒவ்வொரு பெற்றோரும் மேடையில். தமது பிள்ளைகளின், பிறந்த தேதி, பிறந்த இடம், வயது, படிப்பு, வேலை என்று சொல்லிவிட்டு இன்ன நட்சத்திரம் உள்ள வரன்தான்  வேண்டும் என்று முடித்தார்கள். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர் மேடையில் தனது டாக்டர் மகனோடு மேடைக்கு வந்தார். மகனின் விவரங்களை மட்டும் சொல்லிவிட்டு, ராசி, நட்சத்திரம் சொல்லவில்லை. உடனே கூட்டத்தில் இருந்தவர்கள்  பையனின் ராசி, நட்சத்திரம் சொல்லச் சொன்னார்கள். அவர் “ நான் எனக்கு மருமகளாக வருபவருக்கு ராசி, நட்சத்திரம் பார்ப்பதில்லை. ஆனாலும் பெண் வீட்டார் இதனைப் பார்த்துக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை. பையனை பிடித்து இருந்தால் தொடர்பு கொள்ளவும் “ என்று சொன்னார்.

எனவே தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும்போது நட்சத்திரம், ராசி பார்ப்பது என்பது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது.
  
உறவுக்குள் நடக்கும் திருமணம்:

அந்த காலத்தில் மாமன் மகனையும், மாமன் மகளையும், உற்வுக்காரர்களுக்குள் திருமணம் முடித்தபோது ரொம்பவும் நுணுக்கமாக பார்த்ததாகத் தெரியவில்லை.. என்னுடைய அப்பா அம்மா திருமணம் நட்சத்திரம் , ராசி பார்த்து நடக்கவில்லை. உறவுமுறைக் கல்யாணம்தான். என்னுடைய திருமணத்தில் நான் எதுவும் பார்க்கவில்லை. ஆனால் பெண் வீட்டில் பார்த்துக் கொளவதில் ஆட்சேபனை இல்லையென்று சொல்லி விட்டேன்.

இன்று  எத்தனையோ காதல் திருமணங்கள் நடக்கின்றன. குறிப்பாக நகர்ப்புறத்தில் நிறையவே நடக்கின்றன. நட்சத்திரம், ராசி பார்ப்பதில்லை. நன்றாகவே இருக்கிறார்கள். இங்கு மனப் பொருத்தம் மட்டுமே! ஒரு சில திருமணங்கள் தோல்வியில் இருக்கலாம். காதல்மணத்தைப் பற்றி காதலும் ஜாதியும் http://tthamizhelango.blogspot.com/2012/11/blog-post_23.html என்ற தலைப்பில் ஏற்கனவே பதிவு ஒன்றில் நான் எழுதியிருப்பதால் அதனைப் பற்றி விவரிக்கவில்லை.

நாள், நட்சத்திரம், ராசி பார்த்து இருவீட்டாரும், நடத்திய  திருமணங்களிலும் தோல்விகள் உண்டு. இன்றைக்கு குடும்பநல கோர்ட்டுகளில் அதிகம் இழுவையில் இருப்பவை எல்லாம் பார்த்து நடந்தவைதான். திருமணத்திற்கு முன் யோக்கியமாக இருக்கும் ஒருவர் திருமணத்திற்குப் பின் பிறழ்ந்து போனால் என்ன செய்ய முடியும். எல்லாம் பார்த்து தாலி கட்டப் போகும் சமயத்தில் நின்று போன திருமணங்களும் உண்டு.

ஒவ்வொரு சமூகத்திலும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் திருமண ரேஸில் நின்று கொண்டு இருக்கிறார்கள். இதில் நிறையபேர் முதிர் கன்னிகள் மற்றும் முதிர் கண்ணன்கள். ஜாடிக்கு ஏற்ற மூடி என்று, ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்று பார்த்தாலே போதும். நிறையபேருக்கு திருமணம் நடந்துவிடும். எந்த மணமாக இருந்தாலும் இருமனம் ஒத்தால் திருமணத்திற்குப் பின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். இனிக்கிற வாழ்வே கசக்கும். கசக்கிற வாழ்வே இனிக்கும்.

மக்களைப் பெற்ற மகராசி “ என்ற படத்தில் “ ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா? “ என்று தொடங்கும் பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ கீழே க்ளிக் செய்யவும். ( பாடல்: கவிஞர் கா மு ஷெரீப்  பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாசன் & சரோஜினி, இசை: கே வி மகாதேவன் )


 
( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )