Showing posts with label முதுமக்கள் தாழி. Show all posts
Showing posts with label முதுமக்கள் தாழி. Show all posts

Wednesday, 16 October 2013

கருணைக் கொலையும் முதுமக்கள் தாழியும்



எங்கள் பகுதியில் இருக்கும் வயதான பாட்டி ஒருவர் ரொம்பவும் முடியாமல் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு  பார்க்கச் சென்றோம். அவருக்கு 80 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும். அவருக்கு இரண்டும் பெண்கள். மூத்த மகள் வீட்டில் இருந்தவர் இளைய மகள் வீட்டிற்கு வந்தபோது  இப்படி படுத்த படுக்கையாக ஆகி விட்டார். கிட்டத்தட்ட ஒருவருடமாக இதே நிலை. “கடவுள் அழைத்துக் கொண்டால் தேவலை “ என்று அந்த பாட்டியின் மகள் புலம்புகிறார். வேறு என்ன செய்ய முடியும்?

இப்போது பத்திரிகைகளில் அடிக்கடி நான் வாசிக்கும் விஷயம் கருணைக் கொலை என்பதாகும். அதாவது கடுமையான் நோயினாலோ அல்லது  அதிக முதுமையினாலோ அதிக வேதனையில் இருப்பவரை நஞ்சிட்டோ அல்லது  வேறு வழியிலோ இறக்கச் செய்தல். இதனை ஆங்கிலத்தில்
EUTHANASIA  என்று சொல்கிறார்கள். விலங்குகளை இவ்வாறு கொல்வதை ANIMAL EUTHANASIA   என்பார்கள். EUTHANASIA என்பதற்கு “நல்ல மரணம் என்று பொருள். இது கிரேக்க மொழிச் சொல்.

விலங்குகளுக்கு கருணைக் கொலை: ( ANIMAL EUTHANASIA)

காட்டில் நன்றாக இருக்கும் வரை  விலங்குகள் ஓடித் திரியும். அதிக நோய்வாய்ப் பட்டாலோ அல்லது முதுமையின் காரணமாகவோ உடல் தளர்வுறும்போது காட்டில் ஓரிடத்தில் விழுந்து விடுகின்றன. எழ முடியாத அவைகள் அவற்றை உண்ணும் பிராணிகளுக்கு உணவாகி விடுகின்றன. மரணம் அங்கே சர்வசாதாரணமாகி விடுகிறது.ஆனால் நாட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு மரணம் என்பது வளர்த்தவர்களை தாங்கிக் கொள்ள முடியாத துயரத்தில் தள்ளி விடுகிறது.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர். கிறிஸ்தவ சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர். அவர் பத்து வருடங்களுக்கும் மேலாக வளர்த்த சாம்சன் என்ற நாய்க்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அருகிலுள்ள பிராணிகள் நல மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றார்கள். அவர்கள் அதனை பிழைக்காது,  இன்னும் ஒரு வாரத்தில் இறந்துவிடும் என்று சொல்லி விட்டார்கள். மேலும் நாய் முதுமை அடைந்து விட்டபடியினால் மரண அவஸ்தையால் ரொம்பவும் வேதனைப் படுவதால், அதற்கு அமைதியான மரணம் ஏற்பட கருணைக்கொலை செய்து விடலாம் என்றார்கள். நண்பரும் அவர்கள் வீட்டாரும்  அதற்கு முதலில் உடன்படவில்லை. பின்னர் சாம்சனின் அமைதியான மரணத்திற்காக ஒத்துக் கொண்டார்கள். ஊசி மருந்துமூலம் அந்த உயிர் கருணைக்கொலை செய்யப்பட்டது.



பந்தயக் குதிரைகள் பந்தயத்தின்போது தடுமாறி விழுந்து படு காயம் அடையும்போதும், நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படும்போதும் கருணையின்றி சுட்டுக் கொல்லப் படுகின்றன.  அண்மையில் இங்கிலாந்தின்  எலிசபெத் மகாராணி கலந்து கொண்ட அணிவகுப்பில் ஒரு குதிரை படுகாயம் அடைந்தது. அந்த குதிரை கருணைக் கொலை செய்யப்பட்டதாக செய்தி வந்தது.

மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்த கன்றுக்குட்டி ஒன்று தீராத நோயினால் துடித்தது. அது படும் வேதனையக் கண்ட காந்தி, அதனை விஷ ஊசி போட்டு கருணைக் கொலை செய்யச் சொன்னதாக ஒரு தகவல் உண்டு.

மனிதர்களுக்கு கருணைக்கொலை ( EUTHANASIA )

தீராத நோயினால் அவதிப்படும் சிலர் நோயின் கொடுமை தாங்காது தற்கொலை செய்து கொள்கின்றனர். இன்னும் சிலர் டாக்டரிடம் தங்களை கருணைக் கொலை செய்துவிடுமாறு அழுகிறார்கள். ஆனால் இந்தியாவில் இந்த கருணைக் கொலைக்கு சட்டத்தில் இடம் இல்லை.

அண்மையில் ஈரோட்டில் தனது 75 வயது அக்கா முதுமையின் காரணமாக படும் துன்பத்தைக் காண சகியாத 70 வயது தம்பி அக்காளை கொலை செய்ததாக செய்தி வந்தது.

மும்பை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் ( KING EDWARD MEMORIAL HOSPITAL) நர்சாக பணியாற்றியவர் அருணா ஷான்பாக். (ARUNA  SHANBHAG ). இவரை 1973ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஒரு துப்புரவு தொழிலாளி சோகன்லால் பார்த வால்மீகி என்பவன் பலாத்காரம் செய்ததோடு, நாயைக் கட்டும் இரும்புச் சங்கிலியால் கழுத்தை இறுக்கினான். அதில் அருணா ஷான்பாக் கோமா நிலையை அடைந்தார். அப்போது அவருக்கு வயது 23. அன்றுமுதல் அவரை அவருடன் வேலை பார்த்த நர்சுகள் அதே ஆஸ்பத்திரியில் வைத்து 37 ஆண்டுகளுக்கும் மேலாக  பராமரித்தனர். அவர் நிலைமையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. (குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டது.) இதனைக் கண்டு வேதனைப் பட்ட எழுத்தாளர் பிங்கி விரானி என்பவர், அருணாவை கருணைக் கொலை செய்திட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் அருணாவை பராமரித்து வந்த KEM நர்சுகளுக்கு இதில் உடன்பாடு இல்லை.நீண்டகாலம் நடந்த இந்த வழக்கில் 2011 மார்ச் 7 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப் பட்டது. இந்த மனுவை விசாரித்த  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, கியான்சுதா மிஸ்ரா ஆகியோர்  மனுவை தள்ளுபடி செய்து

// நமது நாட்டில் `ஆக்டிவ் யுதானாசியா' என்கிற கருணை கொலை சட்ட விரோதமானதாகும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் `பேசிவ் யுதானாசியா'வுக்கு (ஒரு நோயாளி மருத்துவ சாதனங்களின் உதவியோடு உயிர் வாழ்கிறபோது, அவருடைய உயிர் பிரிவதற்காக அனுமதித்து, அந்த உயிர் காக்கும் சாதனங்களை விலக்கிக்கொள்வதுதான் `பேசிவ் யுதானாசியா') அனுமதி வழங்கப்படுகிறது.//


என்று தீர்ப்பு சொன்னார்கள். தீர்ப்பு சொன்ன அன்று கோமாவில் நினவில்லாமல் கிடந்த அருணா ஷான்பாக்கிற்கு வயது அறுபது. இந்த தீர்ப்பைக் கேட்டதும் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை நர்சுகள் வரவேற்றனர்.

சகோதரி அருணா ஷான்பாக். (ARUNA  SHANBHAG ). பற்றி சகோதரர் யெஸ் பாலபாரதி அவர்கள்  அருணா-வை கருணைக் கொலை செய்ய உதவுங்களபதிவர்களே.. (தேதி: 04.ஜனவரி.2010)” ன்ற பதிவை எழுதியுள்ளார்.. http://blog.balabharathi.net/?page_id=10  உருக்கமான கட்டுரை. 

முதுமக்கள்தாழி - கருணைக் கொலையின் அடையாளம்


பொதுவாக இறந்தவர்களை புதைத்தல் என்பது தமிழர் மரபு. உயிர் எப்போது போகும் என்று தெரியாத செயல் இழந்த நோயாளிகளையும் , நினைவில்லாத,  அதிக வய்துடைய முதுமக்களையும் பெரிய பானை போன்ற தாழியில் (JAR BURIAL ) வைத்து புதைத்தனர். இந்த தாழிகள் முதுமக்கள் தாழிகள் எனப்பட்டன. அவ்வாறு புதைக்கும்போது மண்பானையில் தண்ணீர் மற்றும் அரிசி, அவர்கள் பயன்படுத்திய சில பொருட்களையும் வைத்தனர். உண்மையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் செய்த கருணைக் கொலையின் அடையாளமே இந்த முதுமக்கள் தாழிகள் என்பது எனது கருத்து ஆகும். 

ஆரம்பகாலத்தில் தொல்பொருள் துறையினர் தமிழ்நாட்டில் அரிக்காமேடு, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்தபோது இந்த முதுமக்கள் தாழிகளை கண்டெடுத்தனர். இப்போது வீடு கட்ட, கிணறு தோண்ட, ஆறு கால்வாய்களை அகலப்படுத்த என்று  பொக்ளின் எந்திரம் மூலம் ஆழமாக தோண்டும்போது தமிழகத்தின் பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன..

// விருத்தாசலம் அருகே, கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில், கிடைத்த பொருட்களில், சிந்து சமவெளி நாகரிக மக்களின் பெருங்கற்கால குறியீடுகள் உள்ளன. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த, தர்மநல்லூரில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., வரலாற்றுத் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தர்மநல்லூர், இலுப்பை தோப்பில், வீடு கட்ட மண் எடுத்தபோது, 20 அடி ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று இருப்பது தெரிந்தது வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், அங்கு சென்று, 180 செ.மீ., உயரம், 90 செ.மீ., அகலமுள்ள, முதுமக்கள் தாழியை, தோண்டி எடுத்தனர். தாழிக்குள், கருப்பு சிவப்பு நிறத்தில் நான்கு மண் பானைகள், சுடுமண் பொம்மைகள், 15 செ.மீ., இரும்பு வாள், சில்லு கருவிகள், மனிதனின் எலும்புக் கூடு ஆகியவை இருந்தன //

(நன்றி: தினமலர் www.dinamalar.com/news_detail.asp?id=792915  )

இங்கு எகிப்தில் உள்ள பிரமிடுகளில் அரசன், அரசி ஆகியோருடன்  அவர்களுடைய பணியாளர்கள் உயிரோடும் மற்ற பொருட்களோடும் அடக்கம் செய்யப்பட்ட வரலாற்றினை நினவில் கொள்ளுங்கள்.



கட்டுரை எழுத உதவி:


http://en.wikipedia.org/wiki/Aruna_Shanbaug_case   


PICTURES THANKS TO  “ GOOGLE “