Sunday 29 November 2015

சென்னையில் வெள்ளம் – 2015



ஐம்பது வருடங்களுக்கு முன்னர், ” வானிலை அறிவிப்பு! அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது” என்று வானொலியில் சொன்னால், கேட்டுக் கொண்டிருப்பவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். காரணம் அன்று அவர்கள் சொன்ன காலக் கணக்கிற்கு மழை பெய்யாது; அறிவிப்பே இல்லாத நாட்களில் வானம் பொத்துக் கொண்டு கொட்டோ கொட்டென்று கொட்டும். வானொலி அறிவிப்பில் குறையேதும் இல்லை. அன்றைய தொழில் நுட்பம் அப்படி. இன்றைய தொழில் நுட்பம் எல்லாவற்றிலும் மேம்பட்டு நிற்கிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நம்ப ரமணன் சார் டீவி அலைவரிசைகளில் சொன்னால் பெய்யெனப் பெய்யும் மழையாக இருக்கிறது. மக்களும் திரு. முனைவர் S.R.ரமணன் அவர்கள் சொன்னால்தான் நம்புகிறார்கள். தி இந்து (தமிழ்) நாளிதழ் 09.11.15 அன்று வெளியிட்ட செய்தி இது.

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: சென்னை - காரைக்கால் இடையே இன்று இரவு கரையை கடக்கும்- 2 நாள் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
(http://tamil.thehindu.com  Published: November 9, 2015 08:09 IST )

ஆனாலும் என்ன பயன்? வருமுன் காக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காததால் அண்மையில் பெய்த மழையில் சென்னை வெள்ளக்காடானது. இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடிந்த பாடில்லை.

பல வலைப்பதிவர்கள் சென்னையில் இருந்தும், சென்னையில் மழை, வெள்ளம் பற்றிய பதிவுகளை ஒன்றிரண்டு பேரே எழுதினார்கள். கீழே பத்திரிகை, டீவி போன்ற ஊடகங்களில் வந்த சில காட்சிகள் கீழே.

படம் மேலே: COURTESY: BBC 19.11.15

படம் மேலே: COURTESY: Deccan Chronicle 18.11.15

படம் மேலே: COURTESY:Ground report 18.11.15

படம் மேலே: COURTESY: Hindustan Times 19.11.15

படம் மேலே: COURTESY: Huffington Post 17.11.15

படம் மேலே: COURTESY: Huffington Post

படம் மேலே: COURTESY: IBN live 13.11.15

படம் மேலே: COURTESY: Indian Express 21.11.15

 படம் மேலே: COURTESY: India real time 17.11.15

படம் மேலே: COURTESY: NDTV 17.11.15

படம் மேலே: COURTESY: One India 13.11.15

படம் மேலே: COURTESY: One India 17.11.15

படம் மேலே: COURTESY: One India 17.11.15

படம் மேலே: COURTESY: Tamil Media 16.11.15

படம் மேலே: COURTESY: The Guardian 18.11.15

படம் மேலே: COURTESY: The Quint 16.11.15

படம் மேலே: COURTESY: Vikatan 13.11.15
  
புயல், மழை, வெள்ளம் – சம்பந்தப்பட்ட எனது பிற பதிவுகள்:
திருச்சி: 1977 புயல் வெள்ளத்தில் நான் http://tthamizhelango.blogspot.com/2013/11/1977.html

ஊருக்குள் மழைநீர் – ஏன்? http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_17.html

                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)


Thursday 26 November 2015

ஆற்றுக் குளியல்




என்னதான் வாளி வாளியாக, குளியலறையில், தண்ணீரில் குளித்தாலும், அந்த ஆற்றுக் குளியலுக்கு ஈடு ஆகாது. அதிலும் அவரவர் ஊரில், ஓடும் ஆற்றில், மேடு பள்ளம் அறிந்து பயமில்லாமல் போடும் குளியலுக்கு ஈடு இணை கிடையாது.

காவிரியில் குளியல்:

(படம் – மேலே: திருச்சி மேலச்சிந்தாமணி காந்தி படித்துறை (படத்தின் நடுவில் உள்ள பசுமையான இடம்) : நன்றி தி இந்து)

(படம் - மேலே : கரை புரண்டோடும் காவிரி

இன்றைக்கும் காவிரி என்றால், எனக்கு கரை இரண்டும் தொட்டுச் சென்ற அந்நாளைய நினைவுதான் வருகின்றது. திருச்சி நகர்ப் பகுதியில் குடியிருந்தபோது , மேலச்சிந்தாமணி அக்ரகாரம் படித்துறை என்ற காந்தி படித்துறையில், காவிரியில் குளித்த அந்த நாட்கள் பசுமையாய் நினைவில் இருக்கின்றன. இங்கிருந்து பார்த்தால் எதிரே தொலைவில், அம்மாமண்டபம் படித்துறை தெரியும். காவிரி ஆற்றில் தண்ணீர் வலம் சுழித்து வேகமாக ஓடும்.

சனி நீராடு - என்றபடி, சனிக்கிழமை எண்ணெய்க் குளியல் போடுபவர்கள் உண்டு.  ஆண்கள் படித்துறையில் எண்ணெய்க் குளியல் போடுபவர்களுக்கு, எண்ணெய் தேய்த்து, உடம்பு முழுக்க பிடித்து விட்டு, கை கால்களில் சொடக்கு எடுத்து, மாலிஷ் செய்துவிட என்றே அன்று ஆட்கள் இருந்தனர். இன்றைய விலைவாசியோடு ஒப்பிடுகையில், அன்றைக்கு இதற்கான கட்டணம் அதிகம் இல்லை.. அவர்களே எண்ணெய், அரப்புத்தூள் சகிதம் இருப்பார்கள். குளியலுக்கு வரும் சிலர், இவை இரண்டையும் வீட்டிலிருந்தே கொண்டு வருவதும் உண்டு. எண்ணெய் தேய்த்துக் கொண்டவர்கள், வெறும் உடம்போடு கோவணம் அல்லது இடுப்புத் துண்டோடு படித்துறை படிக்கட்டுகளில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருப்பார்கள். எண்ணெய் உடம்பில் ஊறியதும் அப்புறம் குளியல். (திருப்பூர் பனியன் கம்பெனிகள் வரும்வரை, அந்நாளில் உள்ளாடையான ஜட்டி அவ்வளவு பிரபலம் இல்லை;)

நீச்சல் தெரியாது:

எனக்கு நீச்சல் தெரியாது. எனவே தண்ணீர் நிறைய ஓடும்போது, ஆற்று ஓரத்திலேயே பெரியவர்கள் துணையோடு, இரண்டு படிகளுக்குள்ளேயே இறங்கி குளிப்பது வழக்கம். ஒருமுறை தடுமாறி விழுந்து ஆற்றோடு போக இருந்தேன். நல்லவேளையாக எங்கள் சின்னம்மா என்னை சட்டென்று பிடித்து மேலே இழுத்து விட்டார்கள். அதிலிருந்து ஆற்றில் அதிகம் தண்ணீர் என்றால் இறங்குவதற்கு பயம். வெளியூர் சென்றால், ஆற்றுக் குளியல் போடுவது இல்லை. நீச்சல் தெரிந்த பையன்கள், ஆற்றங்கரையில் இருக்கும் பிள்ளையார் கோயில் மேடையில் இருந்தோ அல்லது மரக்கிளையில் இருந்தோ ஆற்றில் குதித்து விளையாடுவார்கள்.

(படம் - மேலே: நன்றி http://farm4.static.flickr.com/3492/4565723442_481fc9ce8b_m.jpg )

கோடை நாட்களில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வருவது நின்று விடும். காவிரி இரண்டு அல்லது மூன்று வாய்க்கால்களாக பிரிந்து ஓடும். நடு ஆற்றில் மணற்பரப்பும் அதிகம் இருக்கும். கரையோரம் வரும் குடமுருட்டி ஆற்றின் தண்ணீர் கலங்கலாக இருக்கும்.  எனவே இடுப்பளவு தண்ணீரில் ஆற்றைக் கடந்து அந்தக் கரைக்கு ( நடு ஆற்றிற்கு ) சென்று விடுவோம். அங்கிருந்தவாறே ஆற்றில் ஆனந்தக் குளியல். சிலசமயம் அம்மாமண்டபத்திற்கு எதிரேயும் போய் விடுவதுண்டு. கோடைக்கால விடுமுறை முடியும் மட்டும் ஆனந்தம்தான். தண்ணீர் அதிகம் இல்லாத இந்த கோடை காலத்தில், திருச்சி மலைக்கோட்டை கோயில் யானையை இந்த படித்துறைக்கு அருகில்தான் தினமும் அழைத்து வந்து குளிப்பாட்டுவார்கள். (இப்போது அந்த வழக்கம் நின்று விட்டது)

வேலையில் சேர்ந்த பிறகு காவிரிப் பாலம் வழியே ஆற்றைக் கடந்து, அக்கரைக்குச் சென்று, நடு ஆற்றிற்கு வந்து குளிப்பது வழக்கம்.

கொள்ளிடம் குளியல்:

காவிரி ஆற்றின் கிளை நதி கொள்ளிடம். அந்த ஆற்றின் கரைகளில்தான் அம்மாவின் ஊர் தென் கரையிலும், அப்பாவின் ஊர் வட கரையிலும் இருக்கின்றன. படிக்கும் போது, விடுமுறை நாட்களில், அம்மாவின் ஊருக்குச் சென்றால் கொள்ளிடம் ஆற்றுக் குளியல்தான். அப்போதெல்லாம் அந்த ஊர் கொள்ளிடத்தின் கரை ஓரம், அவ்வளவாக ஆழம் இருக்காது; ஊற்றுநீரே ஓடைபோல் (கல்லணை தொடங்கி) இடுப்பளவு ஆழத்தில் ஓடும். அப்போதெல்லாம் முதலைகளும் இல்லை. ( காவிரியில் எப்போது முதலை வந்தது என்பது தனிக்கதை ) எனவே பயமில்லாமல் குளிக்கலாம். நானும் எனது கிராம நண்பர்களும் காலையில் குளிக்கச் சென்றால் மதியம் வரை ஆற்றில்தான், இருப்போம். ( காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம் என்று சொல்கிறோம். ஆனால் கொள்ளிடத்தையும் அந்நாளில் காவிரி என்றே அழைத்து இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.(“ஆறிரண்டும் காவேரி; அதன் நடுவே சீரங்கம்” என்று ஒரு நாட்டுப் பாடல் வரி உண்டு )

     உழவர் ஓதை மதகுஓதை உடைநீர் ஓதை தண்பதங்கொள்
     விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி.
                      
-          இளங்கோ அடிகள் (சிலப்பதிகாரம்)

                 
                 (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

Sunday 22 November 2015

ஐநூறு, ஆயிரம் என்றால் நம்பர் வேண்டுமாம்



எனக்கு இந்த நெட் பாங்கிங் & பாஸ்வேர்டு சமாச்சாரம் எல்லாம் தேவையில்லை என்பதால் இந்த கணக்குமுறையை வைத்துக் கொள்ளவில்லை. எனவே போன் பில் என்றாலும் மின்சார பில் என்றாலும்  நேரிடையாகவே சென்று பணம் கட்டுவது வழக்கம். மற்றும் கார்ப்பரேசன் சம்பந்தப்பட்ட கணக்குகளுக்கும் இதே வழக்கம்தான். எங்கே போனாலும், கியூவில் நிற்கவேண்டும் என்பதால், சொன்ன தேதிக்கு முன்னதாகவே கட்டி விடுவேன். அவ்வளவுதான்.

இப்போதெல்லாம் எந்த வங்கி ஏடிஎம் என்றாலும், பணம் எடுக்கப் போனால் ஆயிரம், ஐநூறு ரூபாய்களைத்தான் அள்ளி அள்ளித் தருகின்றன. ( நம்ம கணக்கில் இருந்துதான்.) பெட்ரோல் பங்காக இருந்தாலும், பழமுதிர்ச்சோலை அல்லது ஷாப்பிங் மால்களாக இருந்தாலும் சரி, அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் நாம் கொடுக்கும் ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சரி பார்த்து வாங்கிக் கொள்கிறார்கள். எந்த மறுப்பும் சொல்வதில்லை. சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள இன்னொரு ஊழியரிடம் அல்லது மானேஜரிடம் காட்டி கேட்டுக் கொள்கிறார்கள். சில இடங்களில் கள்ள நோட்டைக் கண்டறியும் மெஷின் (fake note detector) வைத்து இருக்கிறார்கள்.

அங்கே இப்படி:

எப்போதுமே இந்த அரசு ஊழியர்கள் தனி பாதையில்தான் போவார்கள் போல. சில மாதங்களுக்கு முன்பு போன் பில் கட்ட போயிருந்தேன். வழக்கம் போல ஏடிஎம்மில் வந்த ஐநூறு, ஆயிரம் ரூபாய்களை கொடுத்தேன். கூடவே போன் எண்கள் எழுதப்பட்ட தனித் தாள் வேறு. கொடுத்தவுடனேயே கவுண்டரில் இருந்த பெண் ஊழியருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இது.

” சார் … நீங்கள் கொடுத்துள்ள பேப்பரில் நீங்கள் கொடுக்கும் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் நம்பரையும் எழுத வேண்டும் “

“ என்னம்மா … திடீர் என்று “

“ சார் நாங்க இதனை எழுதிப் போட்டு ஒரு மாதமாகி விட்டது. அதோ பாருங்கள் அந்த அட்டையை “

“ என்னம்மா ஒரு பழக்கடையிலும் , பெட்ரோல் பங்கிலும் சர்வ சாதாரணமா வாங்கிக் கொள்கிறார்கள். நீங்கள் மட்டும், அதுவும் ஒரு அரசாங்க ஆபிஸில் இதுமாதிரி எழுதச் சொல்வதே தப்பு “

“ சார் அவுங்க வாங்கிப் போடுவாங்க. இங்கு எங்களால் முடியாது. கள்ள நோட்டு வந்தால் எங்களால் கையை விட்டு கட்ட முடியாது “

அவரிடம் மேற்கொண்டு வாக்குவாதம் பண்ணுவதில் பிரயோஜனம் இல்லை; எனக்கும் விருப்பம் இல்லை. எனவே வேறு வழியில்லாது அவர்கள் சொன்னபடியே எழுதிக் கொடுத்துவிட்டு பணம் கட்டி வந்தேன்.

இங்கே அப்படி:

அங்கே அப்படி என்றால், இங்கே – இன்னொரு அலுவலகத்தில் ஏற்பட்ட அனுபவம் வேறு  மாதிரி. மின்சார பில் பணம் கட்ட போயிருந்தேன். அங்கே வேறு மாதிரி எழுதிப் போட்டு இருந்தார்கள். டெலிபோன் ஆபிஸிலாவது தனி சீட்டில் போன் நம்பரோடு, ரூபாய் நோட்டுகளின் நம்பரையும் எழுதச் சொன்னார்கள். இங்கு ஒவ்வொரு ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களிலும் மின்சார இணைப்பு எண்ணை பென்சிலால் (பத்து இலக்கம்) எழுத வேண்டுமாம். ரூபாய் நோட்டுக்களில் எழுதக் கூடாது என்று நமது ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா உத்தரவே போட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கவுண்டரில் கேட்டேன். அங்கும் ஒரு பெண்மணி ‘சார், நாங்கள் கலெக்‌ஷன் கட்டும் xxxx பாங்கியிலேயே கேட்டு விட்டோம். அப்படி பென்சிலால் நம்பர் எழுதுவதால் பிரச்சினை இல்லை என்று சொல்லி விட்டார்கள்.” என்று சொன்னார்.

பணம் கட்ட வரிசையில் நிற்கும் யாரும் எனக்கு ஆதரவாக பேசவில்லை. தெரிந்த ஒருவர் மட்டும் என்னிடம், “சார் அவர்கள் சொல்லுவது போல் செய்துவிட்டு போங்கள். இதில் என்ன சிரமம் உங்களுக்கு. இல்லையேல் நமக்குத்தான் தொந்தரவு. வீட்டில் வந்து நம்மிடம் அது இருக்கிறதா, இது இருக்கிறதா என்று ஆரம்பிப்பார்கள்” என்று சொன்னார்.. அவர் சொல்வதும் சரிதான். அங்கும் வேறு வழியில்லை. அந்த அம்மணி சொன்னபடியே எழுதிக் கொடுத்தேன். அவர் பணத்தை எண்ணிப் பார்த்து விட்டு, அங்கே இருந்த மெஷினில் (fake note detector) ஒருமுறை போட்டு செக்கப் செய்து கொண்டார்.
   
நானும் வங்கிப் பணியில் இருந்தவன் தான். ஆரம்பகாலத்தில் கேஷியராக பணிபுரிந்த போது கட்டு கட்டாக கைகளில் பணத்தை எண்ணியவன். அப்போது எங்களுக்கு எந்த (fake note detector) மெஷினும் தரப்படவில்லை. எல்லாம் ஒரு அனுபவம், மூத்தவர்கள் வழிகாட்டுதல் என்று ஒரு நம்பிக்கையின் பேரிலேயே பணத்தை வாங்கினோம்; கொடுத்தோம். இப்போது காலம் மாறிவிட்டது.

பத்திரிக்கை செய்தி:

/// டெல்லி: பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளில் எழுதினால் கள்ள நோட்டுகளுக்கும், உண்மையான நோட்டுகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது என பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. ரூபாய் நோட்டுகளில் வெள்ளையாக இருக்கும் பகுதியில் பொதுமக்களும், நிறுவனங்களும், நம்பர், பெயர் மற்றும் தகவல்களை எழுதுகின்றனர். கள்ள நோட்டுகளுக்கும், உண்மையான ரூபாய் நோட்டுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அந்த வெள்ளை பகுதியில் உள்ள பாதுகாப்பு குறியீடு மூலமாகவே கண்டுபிடிக்க முடியும். அதில் எழுதிவிட்டால், வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது. எனவே, பொதுமக்களும், நிறுவனங்களும் ரூபாய் நோட்டுகளில் இனி எழுத வேண்டாம் என ரிசர்வ் வங்கி தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ///

(நன்றி: தமிழ் ஒன் இந்தியா – தேதி: ஜூலை,17,2015.