Showing posts with label கண் மருத்துவம். Show all posts
Showing posts with label கண் மருத்துவம். Show all posts

Sunday, 10 March 2013

கண் ஆபரேஷன் கட்டணம்



.என்னவென்று தெரியவில்லை. கண்களில் ஒரே கூச்சம். கண்களிலிருந்து அடிக்கடி தண்ணீர் வந்தது.. அப்போதுதான் நேஷனல் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் சேர்ந்து இருந்தேன் பெரும்பாலும் கல்லூரி கட்டடங்களின் வெளிப்புறம் வெளிர் மஞ்சள் நிறம்தான். வகுப்பறையில் உட்கார்ந்து இருக்கும்போது ஜன்னல் வழியே பார்க்கும்போது, வெளியில் எதிர்ப்புறம் உள்ள கட்டடங்களில் வெயில் பட்டு கண்ணை கூசச் செய்யும். வழக்கம் போல கண்களிலிருந்து தண்ணீர். வேறு வழியில்லை. கண் மருத்துவமனை சென்று மருத்துவரைப் பார்த்தேன். அவர் கண்ணாடி போடச் சொன்னார். சில மருந்தும் எழுதிக் கொடுத்தார். கொஞசநாள்தான். கண்களில் தொந்தரவு இல்லை. அப்புறம் கண்ணாடி எதுவும் அணிவதில்லை.

வங்கி வேலையில் சேர்ந்து 25 ஆண்டுகள் வரையிலும் எனக்கு கண்ணாடி தேவைப் படவில்லை. அதன்பிறகு கண்களில் எல்லோருக்கும் ஏற்படும் குறைபாடு வந்தது. பொடி எழுத்துக்களை படிக்க இயலவில்லை. காரணம் வங்கிப் பணிகளில் கம்ப்யூட்டர் பணி. எப்போதும் பார்க்கும் கண் மருத்துவமனை சென்று பார்த்தேன். மருத்துவர் படிப்பதற்கென்று ஒரு கண்ணாடி போடச் சொன்னார். படிக்கும் சமயம் மற்றும் வங்கிப் பணி செய்யும்போது மட்டும் போட்டுக் கொண்டேன். அப்புறம் தொலைவில் இருக்கும் பொருட்களைப் பார்க்கவும் படிப்பதற்கும் இரண்டு லென்சுகள் உள்ள கண்ணாடி போட நேர்ந்தது. பெரும்பாலும் இரு சக்கர வண்டியில் செல்லும்போது, பகலில் மட்டும் அணிந்து கொண்டேன்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் மாலை நேரங்களில் யாரையும் எதனையும் தெளிவாகக் காணமுடியவில்லை. எனவே எப்போதும் பார்க்கும் கண் மருத்துவ மனைக்கு சென்றேன். கண்ணில் புரை இருப்பதாகவும், ஆபரேஷன் செய்தால் சரியாகிவிடும் என்றார்கள். முதலில் ஒரு கண். சிலநாள் சென்றதும் இன்னொரு கண் ஆபரேசன் செய்யலாம் என்று முடிவு செய்தேன்.அப்போது பணியில் இருந்தேன். எனது நேரம் அப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச கண் பரிசோதனை முகாமில், அறுவை சிகிச்சை செய்தவர்கள் பலருக்கு கண் பார்வை போனதாக செய்தி வந்தது.. எனவே பயந்து போய் நான் கண் ஆபரேஷன் யாரிடமும் செய்யாமல் தவிர்த்தேன். கொஞ்சநாள் கழித்து வேறு ஒரு கண் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்தேன். அவர்கள் ஆபரேஷன் மற்றும் லென்ஸ் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு கண்ணிற்கு ரூ 28000 ஆகும் என்றார்கள். ஆக இரண்டு கண்ணிற்கும் ரூ 56000 ஆகும். இதற்கிடையில் எனது உறவினர் ஒருவர் பத்தாயிரம் மட்டுமே செலவானதாகச் சொன்னார். எனது பெரியம்மா மகன் ஒருவர் (வேறு மாவட்டத்துக்காரர்) தனக்கும் உறவினர்களுக்கும் அரசு கண் மருத்துவ மனையிலேயே செலவில்லாமல் ஆபரேஷன் செய்து கொண்டதாகவும் இப்போது எல்லோருக்கும் பார்வை நன்றாக இருப்பதாகவும் சொன்னார். மேலும் எந்த மருத்துவ மனையானாலும் கண்ணிற்கு அவர்கள் பொருத்துவது இந்தியன் லென்ஸ் (ரூ500) அல்லது அமெரிக்கன் லென்ஸ் ( ரூ1000) என்றும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் கண் ஆபரேஷனுக்கு என்று அவர்கள் வாங்கும் (நிர்வாகச் செலவுகள்) தொகைதான் அதிகம். என்றும் சொன்னார். (இது அப்போதைய கணக்கு) எனக்குத் தெரிந்த ஆப்டிகல்ஸ் (OPTICALS) கடைக்காரரும் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு ஆம் என்று தயக்கத்துடன் இந்த உண்மையை ஒத்துக் கொண்டார்.

எதற்கும் எனது கண்களை இன்னொரு டாக்டரிடம் காட்டினால் ந்ல்லது என்று எனக்கு தோன்றியது. எனவே நான் என் பெரியம்மா மகன்  சொன்ன மருத்துவரிடம் (தனியார், பக்கத்து மாவட்டம்) சென்று கண்களைப் பரிசோதனை செய்து கொண்டேன். அவர் எனது கண்களில் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு கண்களில் கோளாறு இல்லையென்றும் எப்போதும் போல இப்போது அணியும் கண்ணாடியையே போட்டுக் கொண்டால் போதும் என்றும் சொல்லி விட்டார். அன்றிலிருந்து இன்றுவரை பகல் இரவு எதுவானாலும் தேவைப்படும் சமயங்களில் மட்டும் கண்ணாடி அணிந்து கொள்கிறேன். கடந்த ஐந்து வருடமாக ஆபரேஷன் எதுவும் இல்லை. இருந்தாலும் மறுபடியும் தொந்தரவு. இப்போது ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யப் போகிறேன். வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் வந்ததால் எங்கள் வங்கியில் CLAIM  எதுவும் செய்ய முடியாது.  கண்ணில் ஆபரேஷன் தேவைதான் என்றால் செய்து கொள்ள வேண்டியதுதான்.


( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )