Showing posts with label சுற்றுப்புறம். Show all posts
Showing posts with label சுற்றுப்புறம். Show all posts

Sunday, 11 January 2015

சீமைக் கருவை – தீமையா?




எந்த ஊர் சென்றாலும் அந்த ஊரின் ஆற்றங் கரை, குளக்கரை, கண்மாய், புறம்போக்கு நிலம் - என்று எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது சீமைக் கருவை எனப்படும் சீமைக் கருவேலம் (PROSOPIS JULIFLORA) மரங்கள்தாம். இது ஒரு வகை முள்மரம். ஆஸ்திரேலியாவிலிருந்து நமது இந்தியாவுக்கு இதன் விதைகள் கொண்டு வரப்பட்டதாக சொல்லுகிறார்கள்.

சீமைக் கருவை ஒழிப்பு:

இப்போது சீமைக் கருவேலமரம் ஒழிப்பு என்று குரல்கள் எழத் தொடங்கி உள்ளன. அதாவது சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப் படுகிறது, தாவரங்களுக்கு பாதிப்பு, கால்நடைக்கு பாதிப்பு என்றெல்லாம் பட்டியல் இடுகின்றனர். குறிப்பாக பேஸ்புக் (FACEBOOK)போன்ற சமூக வலைத் தளங்களில் இவற்றைக் காணலாம். ஒருவர் பேஸ்புக்கில் எழுதி விட்டால் போதும். அந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை அல்லது நம்பகமானது என்றெல்லாம் யோசிப்பதில்லை. உடனே ஆளாளுக்கு ஒருவருக்கொருவர் நட்பு வட்டங்கள் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர்.

எனக்கு தெரிந்து இவர்கள் பரபரப்பாக சொல்வதைப் போல, சீமைக் கருவேல மரங்களால் அதிகம் பாதிப்பு இருப்பது போல தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் நாடு எப்போதோ சுடுகாடாக மாறி இருக்கும். யூக்லிப்ட்ஸ் (EUCALYPTUS) மரங்களையும் இப்படித்தான் சொன்னார்கள். ஆனால் இப்போதோ பல இடங்களில், தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் யூக்லிப்ட்ஸ் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

எனவே எனது ”மாற்று சிந்தனை” கட்டுரை இது.

மரத்தின் பயன்பாடுகள்:

இன்று நாடு முழுக்க வீட்டுக்கு வீடு கழிப்பறை (TOILET ) கட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு உண்டாகி இருக்கிறது. ஆனால், காலம் காலமாக பல கிராமங்களில் இன்றும் அவசரத்திற்கு என்று ஒதுங்குவது இந்த கருவ மரங்கள் அடர்ந்த காடுகளுக்குத் தான். வீட்டிற்கும் தோட்டங்களுக்கும் வேலியாக பயன்படுவதால் வேலிக்கருவை என்ற பெயரும் உண்டு.


இன்றும் பல வீடுகளில், உணவு விடுதிகளில் அடுப்பெரிக்க பெரிதும் பயன்படுவது சீமைக் கருவேல மரங்கள்தான். கிராமம் சென்றால், பல பெண்கள் இந்த மரத்தினை வெட்டி, இலைகள் மற்றும் முட்களை நீக்கி விட்டு, விறகிற்காக கட்டு கட்டாக சுமந்து வருவதைக் கணலாம். இந்த மரங்களை விறகுக்காக பயன்படுத்துவதால் தான் மற்ற மரங்கள் அடுப்புக்கு போகாமல் தப்பின. இதன் பிசின், கோந்து எனப்படும் பசை தயாரிக்க உதவுகிறது. எனக்கு தெரிந்து, கிராமத்தில் இருந்த எங்கள் உறவினர் ஒருவர் அவர் தோட்டத்தில் இருந்த கருவை மரங்களை விற்று, தன் வீட்டு திருமணம் ஒன்றை நடத்தினார்.அடுப்புக்கரி தயார் செய்வதற்கும், செங்கல் சூளையில் நெருப்பு மூட்டவும், இந்த மரம் பெரிதும் பயன்படுகிறது. எனவே வியாபார ரீதியாகவும் இந்த மரங்கள் கிராமப்புற மக்களுக்கு நல்ல வருமானம் தருகின்றன.


இதன் மஞ்சள் நிற விதைகளை கால்நடைகள் விரும்பித் தின்னுகின்றன. எனது சிறுவயதில், எனது தாத்தா வீட்டில், அவர் இந்த விதைகளைப் பறித்து மூட்டையாக வைத்து இருப்பார். எங்கள் தாத்தா வீட்டு பட்டியில் இருந்த ஆடுகளுக்கு நானே இந்த விதைகளை அள்ளி போட்டு இருக்கிறேன்.   

தி இந்து கட்டுரை:

தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன் அவர்களின் கட்டுரை ஒன்று  தி இந்து “ ( ஜூலை, 1, 2014) தமிழ் இதழில் வந்துள்ளது. அதில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:

// இயல் தாவரமோ, அயல் தாவரமோ முதலில் மண்ணரிப்பைத் தடுத்து மண் வளத்தைப் பாதுகாக்கிறது, விறகைத் தருகிறது. இன்றைக்கும் சாதாரண மக்கள் தாவர எரிபொருளையே சார்ந்திருக்கிறார்கள். அயர்ன் செய்பவர்கள், டீக்கடைக்காரர்கள் சீமை கருவேலத்தின் மர கரியை நம்பித் தொழில் நடத்துகிறார்கள். தென் மாவட்டங்களில் சீமை கருவேல மரத்தில் இருந்து கரி தயாரிக்கும் தொழில் முக்கியமானது. ஆடு, மாடுக்குத் தீவனமாகவும் இந்தத் தாவரம் இருக்கிறது. பல்வேறு வகைகளில் பயன்தரும் இயற்கைவளம் இது.
இப்படிப் பல்வேறு பொருளாதார நலன்களைத் தரும் தாவரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமா என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்தால், சாதாரண மக்களுக்குப் பொருளாதாரரீதியில் பெரும் இழப்பு ஏற்படும். அதற்கு மாற்று ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதேநேரம் சீமை கருவேலத்தின் கண்மூடித்தனமான பரவலை முறையாக நிர்வகிக்க வேண்டியது அவசியம்தான்.
இப்படி அயல் தாவரங்களை எதிர்க்கும்போது, வேறு விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். யூகலிப்டஸ் எனும் தைல மரம் இல்லையென்றால், காகிதத் தொழிற்சாலைகளால் நமது காடுகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கும்? கிட்டத்தட்ட 20-30 சதவீதக் காடுகள் அழிந்து போயிருக்கும்.
மரம் வெட்டுவதையும் நடுவதையும் முறைப்படுத்தத் தாவர ஆணையம் போன்ற அமைப்பு தமிழகத்தில் தேவை. பூனாவில் இது போன்ற குழு இருக்கிறது. ஓர் இடத்தில் உள்ள மரத்தை வெட்டலாமா, கூடாதா என்பது பற்றி முடிவெடுப்பது மட்டுமில்லாமல், ஓரிடத்தில் எந்த மரத்தை நடுவது உகந்ததாக இருக்கும் என்றும் இந்தக் குழு ஆலோசனை வழங்கலாம். அதற்கான நிபுணத்துவம் கொண்டவர்களை உள்ளடக்கி, இந்தக் குழுவை உருவாக்கப்பட வேண்டும். //
( நன்றி : tamil.thehindu.com/general/environment/சீமை-கருவேலத்தை-ஒழிக்கத்தான்-வேண்டுமா-தாவரவியல்-பேராசிரியர்-நரசிம்மன்/article6164634.ece )

எனவே சீமைக் கருவையை ஒரு தீமையான மரம் என்று சொல்லுவதை விட, அதனை எப்படி பயன்படுத்தினால் நல்லது என்று யோசித்தால் சமூகநலனுக்கு நல்லது.

          (ALL PICTURES - COURTESY: "GOOGLE IMAGES")

 



Monday, 4 March 2013

தேவை: பயோகேஸ் சிலிண்டர்கள்



பதிவு பண்ணி பதினைந்து நாளாச்சு. இன்னும் கேஸ் சிலிண்டர் வரவில்லை!”
சமையல் எரிவாயு விலை இன்னும் உயரும்
இனி கேஸ் சிலிண்டருக்கு மானியம் கிடையாது
மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைப்பு



இப்படியாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் பற்றிய செய்திகளை பத்திரிகைகளிலும் , தொலைகாட்சிகளிலும், மக்கள் மத்தியிலும்  
பேசப்படுவதை பார்க்கலாம்.







சமையலுக்கு விறகு அடுப்பு, கெரசின் ஸ்டவ் எனப்படும் மண்ணென்ணெய் அடுப்பு, கரி அடுப்பு, கேஸ் ஸ்டவ், மின்சார ஸ்டவ் ( INDUCTION STOVE),  என்று காலம்தோறும் மனிதன் தனது தேவைக்கேற்ப பயன்படுத்தி வருகிறான். மின்சார  ஸ்டவ்வை  ( INDUCTION STOVEமின்வெட்டின் காரணமாக  தேவையான நேரத்திற்கு பயன்படுத்த இயலவில்லை.  

 
இப்போது இந்தியாவில் மக்களிடையே அதிக பயன்பாட்டில் இருப்பது இயற்கை எரிவாயு எனப்படும் LPG GAS  ( Liquefied petroleum gas)  - தான். இப்போது வாகனங்களை இயக்கவும் இந்த கேஸ் பயன்படுகிறது. இதனாலும்நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வருவதாலும் தட்டுப்பாடு அதிகம். ரேஷன் முறையிலும் ஏகப்பட்ட தில்லுமுல்லு வேலைகள். சட்ட விதிகளை மீறி வீட்டு உபயோகத்திற்கான LPG கேஸ் சிலிண்டர்கள் ஓட்டல்கள், வாகனங்களுக்கு திருட்டுத்தனமாக விற்கப்படுகின்றன.

எனவே இந்த இயற்கை எரிவாயு (NATURAL GAS)   முறையிலிருந்து மாறி, உயிரிவாயு (BIO GAS) முறைக்கு நாடு மாறவேண்டும். இரண்டு விதமான முறையும் இருந்தால் எரிவாயு தட்டுப்பாடின்றி இருக்கும். ஏற்கனவே நமது நாட்டில் உயிரிவாயு (BIO GAS) பயன்பாடு இங்கும் அங்குமாய் இருந்து வருகிறது. இதுபற்றிய செய்திகள் தமிழ் நாட்டு பத்திரிகைகளிலும் வந்துள்ளன. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராலாயாவின் சக்தி சுரபி“, - திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அவர்களது சொந்த உபயோகத்திற்கென ஏற்படுத்திக் கொண்ட (பெரிய அளவிலான) பயோகேஸ் யூனிட், -  கோயம்புத்தூர், சாய்பாபா காலனியில் பிரபு என்பவரின் வீட்டில் அவரது சொந்த உபயோகத்திற்கென உற்பத்தி செய்யப்படும் பயோகேஸ் , - கடலூர் பிள்ளையார் குப்பத்தில் மக்கள் தங்களுக்காக தயாரித்துக் கொள்ளும் பயோகேஸ் பயனபாடு பரங்கிப் பேட்டையில் பயோகேஸ் யூனிட் - என்று செய்திகள் வந்துள்ளன. இவை  பயோகேஸ் பயன்பாட்டிற்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பை உணர்த்தும்.



 

ஆனாலும், இதற்கான உபகரணங்கள் இடத்தை அடைத்துக் கொள்வதாலும் பாதுகாப்பு காரணங்களினாலும் இன்னும் அதிக பயன்பாட்டிற்கு வரவில்லை.எனவே இந்த உயிரிவாயு (BIO GAS) திட்டத்தை பெரிய அளவில் தொடங்கி, கிடைக்கும் எரிவாயுவை இப்போதுள்ள கேஸ் சிலிண்டர்களில் அடைத்து விற்பனை செய்யலாம். மேலும் இதற்கு அரசு மானியம் உண்டு என்பதால் அரசாங்கம் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களையும்  அனுமதிக்கலாம். உயிரிவாயு (BIO GAS) சிலிண்டர்களுக்கு பச்சை வண்ணம் பூசி தனியே வித்தியாசப் படுத்தலாம். அல்லது  மேலே உள்ள படத்தில் ள்ளது போன்ற PORTABLE BIOGAS சிலிண்டர்களையும் தயார் செய்து சந்தைப் படுத்தலாம். இதனால் இப்போதைய கேஸ் தட்டுப்பாடு நீங்கும். தொழில் முனைவோர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் இருக்கும். இதனால் பலருக்கு வேலைவாய்ப்பும்  அமையும்.

கடுமையான மின்வெட்டு காரணமாக சூரிய சக்தியை (SOLAR ENERGY) மாற்று சக்தியாக மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் யாரும் எடுக்காத ஒரு துணிச்சலான காரியத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்து இருக்கிறார்கள். ஒரு தொலை நோக்கு திட்டத்தோடு தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” ( Tamil Nadu Solar Energy Policy 2012 )என்ற ஆவணத்தை  சென்ற ஆண்டு, 20.10.2012 அன்று  தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இப்போது எங்கு பார்த்தாலும் சூரிய சக்தி (SOLAR ENERGY) தேவைப் படுவோர் அணுகவேண்டிய விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாற்றத்திற்கு காரணமான கொள்கை அறிவிப்பைத் தந்த, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டுக்கள். இதைப் போலவே உயிரிவாயு (BIO GAS) திட்டத்தினையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும். LPG சிலிண்டர்கள் போன்று
உயிரிவாயு (BIO GAS) சிலிண்டர்களும் மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு வரவேண்டும்.

சீனாவிலிருந்து மலிவு விலை சைக்கிள்கள் இறகுமதி செய்ய முயற்சி நடந்தபோது, இங்கிருக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் சுதேசி விதேசி என்று தடை செய்தார்கள். அதேபோல் பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க பல தடைகள். இந்த உயிரிவாயு (BIO GAS) திட்டத்தினை செயல்படுத்த விடாமல் தடுக்கவும் உள்குத்து அரசியல் நம்நாட்டில் நடக்கும். இருந்தாலும் நாட்டு மக்கள் நலன் கருதி -  நாட்டிற்கு இப்போது தேவை: பயோ கேஸ் சிலிண்டர்கள்

ஊதுகிற சங்கை ஊதி வைப்போம். நல்லது நடந்தால் சரி!



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 



Wednesday, 17 October 2012

ஊருக்குள் மழைநீர் – ஏன்?



முன்பெல்லாம்  (ஐம்பது வருடத்திற்கு முன்பு) மழைக் காலம் வந்து விட்டால் குறைந்தது மூன்றுமணி நேரமாவது மழை இருக்கும். சிலசமயம் காற்றும் மழையோடு போட்டி போடும். காற்று ஓய்ந்ததும் மழை அடர்த்தியாக நின்று நிதானமாக பெய்யும். சிலசமயம் நாள் முழுக்க அல்லது விடிய விடிய கூட மழை பெய்தது உண்டு. அப்போது கூட பள்ளிக்கூடங்களுக்கு அவ்வளவு மழையிலும் விடுமுறை தரமாட்டார்கள். பிள்ளைகள் குடை பிடித்துக் கொண்டு அல்லது பெற்றோர் துணையோடு பள்ளிக்கு சென்று வருவார்கள். எவ்வளவு மழைநீர் பெய்தாலும் ஊருக்குள் தேங்காது. மழைநீர் தெருக்களில் வாய்க்கால் போல் செல்லும். பிள்ளைகள் காகித கப்பல் செய்து தண்ணீரில் விட்டு விளையாடுவார்கள். பள்ளமான இடத்தில் அல்லது ஆற்றங்கரையோரம் வீடு கட்டியவர்கள் மட்டும் துன்பத்திற்கு உள்ளாவார்கள். அதுவும் மாவட்ட நிர்வாகத்தினரால் உடனே சரி செய்யப்பட்டுவிடும்.

ஆனால் இப்போதோ ஒரு சின்ன மழை அரைமணி நேரம் பெய்தால் கூட ஊர் தாங்கமாட்டேன் என்றாகி விடுகிறது. அந்த சின்ன மழையையும் செய்தியாகப் போட்டுவிடுகிறார்கள். மழை வருவதற்கு முன்னரே எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை தந்து விடுகிறார்கள். ஒரு மூன்று மணிநேரம் மழை பெய்தால் போதும். தெருக்களில் வெள்ளம். வீட்டிற்குள் வந்து விடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்குகிறது. இதற்கு காரணம் என்ன?


          ( PHOTO  THANKS TO www.photoblog.nbcnews.com )


சாலை அமைக்கும் முறை:

எப்போதும் வீடு கட்டும் போது தெருச் சாலைகளின் உயரத்தை கணக்கிட்டு, வீட்டை உயர்த்தி கட்டுவார்கள். வீட்டைச் சுற்றி சுற்றுச் சுவருக்குள் இருக்கும் காலி இடம் மற்றும் தோட்டத்தை மண்போட்டு வெளியிலிருந்து தண்ணீர் உள்ளே வராதவாறு அமைப்பார்கள். தெருச் சாலைகளையும் ஊருக்கு வெளியே உள்ள சாலைகளையும் அமைக்கும் போது ரொம்பவும் உயர்த்த மாட்டார்கள். மேலும் ஆங்காங்கே தண்ணீர் வெளியேற சின்னச்சின்ன கால்வாய்கள் அமைப்பார்கள். அதேபோல் பழைய சாலையை புதுப்பிக்கும் போதும் பழைய தார்ச் சாலையை வெட்டி எடுத்துவிட்டு பழைய உயரத்திற்கே அமைப்பார்கள். இதனால் எவ்வளவு மழை பெய்தாலும் மழைநீர் வெளியேறி விடும். ஊருக்குள் தண்ணீர் தேங்குவதில்லை. ஆனால் இப்போதோ இந்த நடைமுறைகளை கடைபிடிப்பதில்லை. பழைய தார்ச்சாலைகளை வெட்டி எடுப்பதில்லை. அப்படியே சாலையின் மேல் சாலையை அமைத்து உயர்த்திக் கொண்டே போகிறார்கள். ஊரைச் சுற்றி இருக்கும் சாலைகள் குளத்துக் கரைகள் போல் அமைந்து விடுகின்றன.. பழைய வீடுகள் இதனால் பாதிக்கப் படுகின்றன. ஒரு சின்னமழை பெய்தால் கூட தண்ணீர் வெளியேறுவதில்லை. இப்போது எங்கு பார்த்தாலும் உயரம் உயரமாக நான்குவழிச் சாலைகள். பல இடங்களில் மழைநீரோ அல்லது வெள்ளப் பெருக்கோ ஏற்பட்டால் வெளியேற வழி இல்லை. அவைகளுக்கு அடியில் பல ஊர்கள்.

ஆக்கிரமிப்புகள்:

ஒரு இடத்தில் இது இராணுவ நிலம் “ என்ற பெயர்ப் பலகை. அந்த பெயர்ப் பலகையை தவிர சுற்றி இருக்கும் இராணுவ நிலம் முழுக்க ஆக்கிரமித்து வீடுகள். அங்கு உள்ளவர்களுக்கு ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, மின்சாரம் எல்லாமே உண்டு. அதேபோல ஆறு, வாய்க்கால், குளம், குட்டை என்று ஆக்கிரமித்தவர்களுக்கும் மேற்படி சொன்ன அனைத்தும் கிடைக்கும். அப்போதெல்லாம் அதிகாரிகள் ஜீப்பில் அடிக்கடி ரோந்து வருவார்கள். இதுமாதிரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள். முன்பு ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ஒரு பயம் இருந்தது. இது மாதிரியான ஆக்கிரமிப்புகளை அகற்றினால் வெள்ளநீர் சரியான முறையில் வெளியேறிவிட வாய்ப்பு அதிகம்.


விளைநிலங்கள் வீட்டுமனைகளாக:

முன்பெல்லாம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும்போது சாலையின் இருபுறமும் ஒரே வயல்களாக. நீர் நிலைகளாக இருக்கும். கொக்குகளும் நாரைகளும் பறப்பதைக் காணலாம். இப்போதோ புதுப்புது நகர்களின் பெயரில் வண்ண வண்ண கொடிகள் பறக்கின்றன. எல்லா வயல்களும் வீட்டு மனைகளாகிக் கொண்டு வருகின்றன. இங்கு கட்டப்படும் வீடுகள் பின்னாளில் மழைக்காலங்களில் தண்ணீரால் தத்தளிக்கின்றன.  



குப்பை கூளங்கள்:

திருச்சியிலிருந்து தஞ்சைக்கு செல்லும்போது வழியில் வல்லம் என்ற இடத்தில் ஒரு காட்சியை பார்க்க நேரிட்டது. ஒரு கல்லூரி சாலை ஓரத்தில் உள்ள வாய்க்கால் கரையில் அமைந்துள்ளது. சாலைக்கும் கல்லூரிக்கும் இடையில் வாய்க்கால் மேல் ஒரு சின்ன பாலம். அந்த கல்லூரியின் குப்பைகளை (தேவையற்ற காகிதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட) அந்த பாலத்திற்கு அடியில் வாய்க்காலில்தான் கொட்டுகிறார்கள். இது போன்று நாடெங்கும் நிறையபேர் செய்கிறார்கள். இதுபோல கொட்டுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாக்கடை, கால்வாய்களில் தேங்கும் குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும். 

           

Wednesday, 30 May 2012

பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில்


பிளாஸ்டிக் பைகள் அவ்வளவாக அறிமுகம் ஆகாத சமயம். மளிகைக் கடைகள் முதல் சிறிய கடைகள் வரை பொருட்களை பேப்பரில்தான் கட்டி கொடுப்பார்கள். தள்ளு வண்டிக்காரரிடம் திராட்சைப் பழம் வாங்கச் சென்றால், பழைய பேப்பர் கடையில் வாங்கிய மிகவும் மெல்லிதான டைப்ரைட்டிங் பேப்பரில் எடை போட்டு நூலில் கட்டிக் கொடுப்பார். பெரும்பாலும் நூல் ரோஸ் கலரில்தான் இருக்கும். அதேபோல மளிகைக் கடைகளிலும் எண்ணெய்ப் பொருட்களைத் தவிர எல்லா பொருட்களையும் பழைய செய்தித்தாளில் பொட்டலம் போட்டு சணல் கயிற்றால் கட்டிக் கொடுப்பார்கள். பொருட்கள் வாங்குபவர் கூடையையோ அல்லது பையையோ எடுத்துச் சென்று வாங்கி வருவார். இது அப்போதைய நடைமுறை.

இந்தியாவிலேயே முதன் முறையாக, கடலூரைச் சேர்ந்த டாக்டர் C.K. ராஜ்குமார் என்பவர் வெல்வெட் ஷாம்பூ என்ற நிறுவனத்தை தொடங்கி, 1979 வாக்கில் தலைக்கு போடும் ஷாம்பூவை ஷாஷேயில் (சிறிய பிளாஸ்டிக் பையில்) விற்கத் தொடங்கினார்.. பெரிய கடை முதல் சாதாரண பெட்டிக் கடை வரை விற்பனை.  புதிய உத்தியின் காரணமாக நல்ல வியாபாரம். பெரிய பாட்டில்களில் அடைத்து வைக்கப் பட்ட விலை அதிகமான பிரபலமான நிறுவனங்களின் ஷாம்பூ வியாபாரம் தேங்க ஆரம்பித்தது. பார்த்தார்கள் பெரிய கம்பெனி முதலாளிகள், ஷாம்பூ, ஹேர்டை மட்டுமல்லாது எல்லா பொருட்களையுமே (எண்ணெய் உட்பட) பிளாஸ்டிக் பையில் கம்பெனி பெயரோடு விற்கத் தொடங்கினார்கள். கடைகளிலும் பிளாஸ்டிக் தூக்குப் பையை (Carry Bag) அவர்கள் பங்கிற்கு இலவசமாக கொடுத்தார்கள்.  இந்த நடைமுறை மக்களுக்கு வசதியாகவும் பிடித்தும் போயிற்று.


ஆனால் இப்போது இத்தனை ஆண்டிற்குப் பிறகு, திடீரென்று பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கொடி பிடிக்கிறார்கள். இவ்வளவு தூரம் பயன்பாட்டிற்கு வந்த பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள் ஏதேனும் கண்டு பிடித்தார்களா என்றால் இல்லை. பிளாஸ்டிக் பையில் இப்போதும் அடைத்து விற்கப்படும் பொருட்களை தடை செய்யவும் இல்லை. பிளாஸ்டிக் தூக்குப் பைகளையும் சின்ன குவளைகளையும் மட்டுமே தடை செய்கிறார்கள். பாதிக்கப்படுவது சிறுவியாபாரிகளும் பொதுமக்களும்தான். இதுதான் சாக்கென்று சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால் நடத்துபவர்களும் இதுவரை இலவசமாக கொடுத்து வந்த பிளாஸ்டிக் தூக்கு பைகளுக்கும் விலை வைத்து காசு பார்க்க ஆரம்பித்து விட்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு என்றால், காசுக்கு மட்டும் பிளாஸ்டிக் தூக்கு பையை விற்பது சரியா?  அதிகாரிகள் திடீர் ரெய்டு என்ற பெயரில் சிறு வியாபாரிகளை தொந்தரவு செய்வார்கள். பெரிய நிறுவனங்கள் பக்கம் எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. வழக்கம் போல பள்ளி மாணவர்களை வைத்து  பிளாஸ்டிக் எதிர்ப்பு ஊர்வலம். பின்னர் போட்டோவுடன் செய்தி தருகிறார்கள்.

பிளாஸ்டிக் நல்லது இல்லை என்றால் அதற்கு மாற்று கண்டு பிடிக்க வேண்டும். அல்லது பயன்படுத்தப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாற்று சூழலுக்கு பயன்படுத்த வேண்டும். ஊராட்சி நகராட்சிகளில்  அள்ள வேண்டிய குப்பைகளை அள்ளி, துப்புரவு பணிகளை தினமும் ஒழுங்காகச் செய்தாலே போதும். அதை விட்டுவிட்டு பொதுமக்களுக்கு சமூக சேவை என்ற பெயரில் இம்சைதான் நடக்கிறது.
.





Monday, 30 April 2012

அபாயம்: சாலை ஓரக் கிணறுகள்



அண்மையில் ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியிலிருந்து ஈரோட்டிற்கு பஸ்சில் சென்றேன். கரூரைத் தாண்டியதும் ஈரோடு முடிய சாலை ஓரம் சுற்றுச் சுவர் இல்லாத தரைமட்டக் கிணறுகள் வழி நெடுக ஆங்காங்கே இருப்பதைப் பார்த்தேன். நன்கு ஆழமாகவும்  தண்ணீரோடும் இருக்கின்றன சில இடங்களில் சாலை வளைந்து திரும்பும் திருப்பங்களிலும் உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் நிரம்பி அவை இருப்பதே தெரியாது. பஸ்ஸில் செல்லும் போது எந்த நிமிடம் எந்த கிணற்றில் பாயுமோ என்ற அச்சத்திலேயே இருந்தேன். ஆனால் வழக்கமாக தினமும் அந்த வழியே பயணம் செய்வோர் அதனைப் பற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. சேலம் நாமக்கல் பகுதியில் பஸ்சில் பயணம் செய்யும் போதும் இதே அனுபவம். சாலை ஓரம் தடுப்புச் சுவர் இல்லாத தரை மட்ட கிணறுகள் அதிகம் உள்ளன.. நாடு முழுக்க இந்த நிலைமைதான்

அந்த கிணறுகளின் உரிமையாளர்களோ அல்லது அந்த பகுதியில் உள்ள அதிகாரிகளோ இது குறித்து ஏதும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அவர்களை விடுங்கள். எதற்கெடுத்தாலும் கொடி பிடிக்கும் அரசியல் கட்சியினரோ அல்லது உண்ணாவிரதம் இருக்கும் சமூக ஆர்வலர்களோ கூட இதுபற்றி வாய் திறப்பதில்லை.

அண்மைய (28.04.12) செய்தி இது. வேலூர் மாவட்டம் வடகடப்பந்தாங்கல் ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் சென்ற ஆட்டோ, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்புச் சுவர் இல்லாத 80 அடி ஆழ் கிணற்றில் பாய்ந்து 7 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இது போல சாலை ஓரம்  சுற்றுச் சுவர் இல்லாத தரை மட்டக்  கிணறுகளில் வாகனங்கள் பாய்ந்து விபத்தில் சிக்குவது, உயிர்ப் பலி என்று அடிக்கடி செய்திகளாக வருகின்றன. இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் நாமக்கல் மாவட்டம் மல்லூரில் சாலை ஓரம் இருந்த சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றில் வாகனம் ஒன்று விழுந்து 13 பேர் பலி ஆனார்கள். அப்போது இருந்த ஆட்சியாளர்கள் உடனே சுற்றுச் சுவர் இல்லாத அனைத்து தரை மட்ட கிணறுகள் யாவற்றிலும் சுவர் கட்டும்படியும் கட்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு அத்தோடு சரி. நடைமுறைப் படுத்தவில்லை இன்னும் விபத்துக்கள் தொடர் கதையாகத்தான் உள்ளன.

தினமலர் பத்திரிக்கையில் இந்த அபாயகரமான் கிணறுகளைப் பற்றி செய்திக் கட்டுரைகளாக அடிக்கடி எழுதுகிறார்கள். தினமலரில் வந்த மூன்று படங்கள்.

                                         
                     ( படங்கள்: நன்றி தினமலர் (Google )

முன்பெல்லாம் சாலை ஓரம் அதிகம் மரங்கள் இருந்தன. பள்ளத்தில் பாயும் வாகனங்களை அந்த மரங்கள் ஓரளவு தடுத்து நிறுத்தின. இப்போதோ மரங்களே இல்லாத நால்வழிச் சாலைகள். சில இடங்களில் சாலை மிகவும் உயரத்தில் செல்கிறது. அருகே அதிக ஆழமும் தண்ணீரும் உள்ள சுற்றுச் சுவர் இல்லாத தரை மட்டக் கிணறுகள். அத்தோடு சரியாக மூடப்படாத பள்ளங்கள், தூர் நிரம்பிய கிணறுகள். இந்தச் சூழலில் நால்வழிச் சாலையில், அதிக பயணிகளோடு அதி வேகத்தில் செல்லும் பயணிகள் பேருந்துகள், கார்கள். எப்போது என்ன நடக்குமோ என்று நினைக்கவே .... பயமாகத்தான் உள்ளது. ஏற்கனவே நான்கு வழிச் சாலையில் அடிக்கடி அதிக விபத்துகள். இது போன்று சாலைகள் ஓரம் பலி வாங்கக் காத்திருக்கும் அபாயமான கிணறுகளை அப்புறப் படுத்தினால் நல்லது. எனவே சம்பந்தப் பட்டவர்கள் இது குறித்து  நடவடிக்கை எடுத்தால் நல்லது.  




    



Friday, 18 November 2011

பேருந்து நிலைய கழிப்பிடங்கள், உணவு விடுதிகள்

நாம் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருப்போம். பேருந்து ஒவ்வொரு ஊரையும் கடந்து சென்று கொண்டு இருக்கும். முக்கியமான ஒரு ஊரையோ அல்லது நகரத்தையோ அடையும் போது நம்மையும் அறியாமல் மூக்கை பொத்திக் கொள்வோம். அந்த ஊரின் பேருந்து நிலையத்தை நெருங்கி விட்டோம் என்பதற்கு அடையாளம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஊரின் பேருந்து நிலையமும் இந்த நிலைமைதான். அங்குள்ள கழிப்பிடங்களின் துர்நாற்றம் இவ்வாறு நம்மை மூக்கை பொத்தச் செய்கின்றன.

பேருந்து நிலையங்களில் இருக்கும் இலவச கழிப்பிடங்களைப் பற்றி சொல்ல வேண்டிய தில்லை. ஆண்கள் பெண்கள் என்ற எழுத்துக்களையோ அல்லது படங்களையோ காணமுடியாது. சுவர்கள் முழுக்க எரனியா ஆபரேஷன் , ஆண்மைக் குறைவு வைத்திய விளம்பரங்கள்தான். தப்பித் தவறி போய்விட்டால், அன்று முழுக்க குமட்டல்தான். கட்டணக் கழிப்பிடங்களில் தண்ணீர் வைத்து இருப்பார்கள். அவ்வளவுதான். மற்றபடி சுகாதாரத்தை தேட வேண்டும். பாசி படர்ந்த தரை,  ஓட்டை கதவுகள், உடைந்து போன குவளைகள் என்று வெறுப்பேற்றும் சமாச்சாரங்கள். மழைக் காலத்தில் கால் வைக்க முடியாது. உடல் ஊனமுற்றவர்கள் நிலைமை சொல்ல வேண்டியதில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் அனைத்து பேருந்து நிலையங்களிலும், அந்த கழிப்பிடங்களை ஒட்டியே பல உணவு விடுதிகள், டீக் கடைகள் அமைந்திருக்கும். அந்த கடைகளின் பின்புற ஜன்னல்கள் அல்லது அல்லது ஏசி மெஷின்களின் பின்புறம், கழிப்பிடங்களை ஒட்டியே அமைக்கப்பட்டு இருக்கும். சில இடங்களில் அந்த கடைகளுக்கும் கழிப்பிடங்களுக்கும் ஒரே குழாயில் தண்ணீர் வசதிக்காக இணைப்புகள் கொடுத்து  இருப்பார்கள். அந்த கடைகள் பெரும்பாலும் ஊராட்சி அல்லது நகராட்சிகளால் வாடகைக்கு விடப்பட்டவைகளாக இருக்கும். அந்தக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுபவர்கள் யாரும் அருவருப்பு  அடைவதாகத் தெரியவில்லை. அந்தக் கடைகளில் இருக்கும் உணவுப் பொருட்களினால் வரக்கூடிய நோய்களைப் பற்றி யாரும் கவலைப்பட்ட மாதிரியும் இல்லை. அந்த ஊர் சுகாதார
ஆய்வாளர்கள் என்ன ஆனார்கள்?

இனிமேல் புதிய பேருந்து நிலையங்களை அமைக்கும் புண்ணியவான்கள் இந்த விஷயங்களையும் கவனித்தால் நல்லது.

Saturday, 22 October 2011

மரங்களை வாழ விடுங்கள்


அசோகர் செய்த தொண்டுகள் யாவை என்று கேட்டால் போதும். பள்ளிப் பிள்ளைகள் ஒப்புவிப்பது முதலில் “அசோகர் சாலைகள் போட்டார். மரங்கள் நட்டார்என்பதுதான். சாலையோர மரங்கள் அவ்வளவு நன்மையானவை. இப்போது தங்க நாற்கரச் சாலை என்ற பெயரில் இந்தியா முழுவதும் நீண்ட,அகலமான சாலைகள் அமைக்கப் பட்டன. சாலை பணிகளின்போது  சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டப் பட்டன.அவைகளுக்கு ஈடாக புதிய மரங்கள் நடப் பட வேண்டும். தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். ஆனால் மீண்டும் மரங்கள் அதிகம் நடப் பட்டதாகத் தெரியவில்லை. மேலும் மரங்களுக்குப் பதிலாக சாலைகளின் நடுவே அரளி மலர்ச் செடிகளைத்தான் அதிகம் காண முடிகிறது.

பல நகரங்களில் திடீரென்று ஒருநாள் சிலர் ஆர்வலர்கள் என்ற பெயரில் நடச் சொல்லி மரக் கன்றுகளைத் தருவார்கள். சிலர் மரங்களைப் பற்றி மணிக் கணக்கில் பேசுவார்கள்.சிலதொண்டு நிறுவனங்களும், பள்ளிகளும், நகரசபைகளும் சாலை ஓரங்களில் இருபுறமும் மரங்கள் நடுவார்கள். பள்ளி மாணவர்களிடையே மரங்களின் அவசியம் பற்றி பாடம் சொல்வார்கள். மரம் நடு விழாக்கள் நடத்தப் படும். தினசரிகளில் புகைப் படங்களோடு செய்திகள்  வெளியிடப்படும்.இத்தனை மரங்கள் இத்தனை மணிகளில் எங்களால் நடப்பட்டன என்று புள்ளி விவரம் தருவார்கள். கொஞ்ச நாள் தண்ணீர் ஊற்றுவார்கள். மரங்களும் அப்புறம் தானாக வளரத் தொடங்கி விடும். நன்கு வளர்ந்து சாலைகளில் நிழல் தரத் தொடங்கும்.

மரங்கள் தங்களுக்கு மேலே உள்ள மின் கம்பிகளைத் தொட்டும் தொடாமலும் அப்பாவியாக நின்று கொண்டிருக்கும். திடீரென்று ஒருநாள் மின் வாரியத்திலிருந்து ஆட்கள் வருவார்கள்.  பராமரிப்பு என்ற பெயரில் சாலையோர மரங்களை யெல்லாம் மொட்டையாக்கி விட்டு சென்று விடுவார்கள். மரங்களை நட்ட புண்ணியவான்களோ பொது மக்களோ யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அவர்கள் மறுபடியும் மரங்களை நடுவார்கள். இவர்கள் மறுபடியும் வெட்டுவார்கள். ஒரு முடிவே இல்லை. பாவம் மரங்கள்.

நண்பர்களே மரங்களை நட்டதோடு உங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். மின்வாரிய ஊழியர்களே இதற்கு ஒரு வழி காணுங்கள். மரங்களை வாழ விடுங்கள்.


Friday, 23 September 2011

தங்க நாற்கரச் சாலை வந்த பிறகு.............


சாலையிலே புளியமரம்... ஜமீன்தாரு வச்ச மரம்என்று ஒரு பழைய பாடல் இலங்கை வானொலியில் முன்பெல்லாம் அடிக்கடி ஒலி பரப்புவார்கள்.இப்போது அந்த பாடலை கேட்கவே முடிவதில்லை என்பதோடு சாலையில் இருந்த புளிய மரங்களையெல்லாம் நான்கு வழிச்சாலை என்ற பெயரில்
பிடுங்கி எறிந்து விட்டார்கள்.வாஜ்பாயின் கனவுத் திட்டமான “தங்க நாற்கர சாலை திட்டம் நல்ல திட்டம். நாடு பொருளாதார மேம்பாடு அடைய சாலைகளை இணைக்கும் திட்டமாகும்.நல்ல நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட இந்த சாலைகள் வந்த பிறகு மக்கள் கொத்து கொத்தாக விபத்தில் இறக்கின்றனர்.இதைப் பற்றி ஆட்சியாளர்களோ அதிகாரிகளோ யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

முன்பெல்லாம் சாலைகளில் வளைவுகள் அதிகம். பயந்து பயந்தும் பார்த்து பார்த்தும் வண்டிகளை ஓட்டினார்கள்.இப்போது தொடக்கம் முதல் கடைசி வரை வேகம்...வேகம்..வேகம்தான். “U”- திருப்பம் வரை சென்று திரும்ப நிறைய பேருக்கு பொறுமை கிடையாது.அப்படியே திரும்பி ஒருவழிப் பாதையில் எதிர் திசையில் வருகின்றனர்.அந்த பாதையில் ஒழுங்காக வருபவர்கள் சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து விடுகிறது.செல் போன் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்து குறித்து நிறையபேர் பக்கம் பக்கமாக எழுதிவிட்டனர். செல்போன் அடிமைகள் யாரும் கேட்பதாக இல்லை.

நகர்ப்புறச் சாலைகளில் நின்று கொண்டு சாலை விதிகளை மீறுவோர் மீது கவனம் செலுத்தும் போலீஸார் ஏனோ நான்கு வழிச் சாலைகளில் கண்டுகொள்வது கிடையாது.விபத்துக்களை குறைக்க கடும் நடவடிக்கை தேவை என்பதோடு, மக்கள் மத்தியிலும் நான்குவழிச் சாலைகளைப் பற்றிய விழிப்புணர்வும் தேவை.