Showing posts with label தங்கம் மூர்த்தி. Show all posts
Showing posts with label தங்கம் மூர்த்தி. Show all posts

Wednesday, 27 December 2017

தங்கம் மூர்த்தியின் தேவதைகளால் தேடப்படுபவன்



புதுக்கோட்டை புரவலர், கவிஞர் தங்கம் மூர்த்தி எழுதிய ஒரு கவிதை நூலை ரொம்ப நாட்களாக வாங்க முயற்சி செய்து, சென்ற மாதம்தான், புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாங்க சந்தர்ப்பம் அமைந்தது. அந்த கவிதை நூலின் பெயர் ‘தேவதைகளால் தேடப்படுபவன்’ என்பதாகும். நூலை வாங்கி, வீட்டிற்கு வந்தவுடனேயே படிக்கத் தொடங்கி படித்தும் முடித்து விட்டேன்.

ஆசிரியர் பற்றி

தேவதைகளால் தேடப்படுபவன் என்ற இந்த நூலின் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களை நான் நேரில் சந்தித்தது புதுக்கோட்டை வீதி இலக்கிய கூட்டங்களில் தான். ஒருமுறை புதுக்கோட்டையில் நடந்த இணையத் தமிழ் பயிற்சி முகாமில் முனைவர் B.ஜம்புலிங்கம் அய்யா அவர்கள், தமிழ் விக்கிபீடியாவில் இவரைப் பற்றி எழுதி, தொடங்கி வைத்தார். பின்னர் அவரே அங்கு விரிவாக்கமும் செய்துள்ளார்.

தங்கம் மூர்த்தி தமிழ் நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் என்னும் சிற்றூரில் 19 ஆகஸ்டு 1964இல் பிறந்தார். இவரது தந்தை கே.கே.தங்கம், தாய் ஜெயலட்சுமி. சிறந்த இலக்கியவாதி மற்றும் கல்வியாளர் என்ற நிலையிலும் இவர் அரும்பணியாற்றிவருகிறார். சுமார் 10 கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவருடைய கவிதைகள் இலக்கிய மட்டும் பட்டிமன்ற மேடைகளில் மேற்கோளாகக் காட்டப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இவரது நூல்கள் பாடத் திட்டத்தில் உள்ளன. இவரது கவிதை நூல்கள் ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, மலாய், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் கவிஞர் சிற்பி விருது, கவிக்கோ விருது, செல்வன் காக்கி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது, மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். ( நன்றி https://ta.wikipedia.org )

மனதைத் தொட்ட கவிதை

இந்த கவிதை நூலைத் திறந்ததுமே சிறு முன்னுரையாய் ஒரு கவிதை. என் மனதைத் தொட்ட வரிகள். வெள்ளந்தியாய் அந்த கிராமத்து மக்கள் பேசும் இயல்பான நடையில். வார்த்தை ஜாலம் ஏதுமில்லை. கவிஞரின் மனதிலிருந்து விழுகின்றது கண்ணீர் அருவி.

பார்வை
மங்கலாய்த் தெரியுதேப்பா
என்றார்
அறுவை சிகிச்சைக்குப் பிறகு
இவ்வளவு வெளிச்சமானதா
இவ்வுலகம் என்றார்
                                                  
இப்போது
மங்கலாய்த் தெரிகிறதெனக்கு
அம்மா இல்லா
இவ்வுலகு             (இந்நூல் பக்கம்.3)

கவிதையைப் படித்தவுடன், எனது அம்மா நினைவில் வந்தார்– என்னவென்றே நான் எழுதுவது. கனத்த மனத்தோடு அடுத்து நகர்ந்தேன்
.
சித்தர் ஞானம்

காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா’ என்று பாடி வைத்தான் ஒரு கவிஞன். வாழ்க்கை என்றால் என்ன என்று உங்களுக்குள்ளே ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். நிச்சயம் சரியாகச் சொல்ல முடியாது. நமது கவிஞரும் ‘மெய் உணர்தல்’ என்ற தலைப்பில் ஒரு கவிதையைச் சொல்லி இருக்கிறார்.

எல்லாம்
அடைந்துவிட்டதைப் போலிருக்கிறது
எல்லாம்
இழந்துவிட்டதைப் போலவும் இருக்கிறது
……. ……. ……. …….
நன்றாய்
வாழ்ந்ததைப் போலிருக்கிறது
என்றோ
செத்ததைப் போலவும் இருக்கிறது.     (இந்நூல் பக்கம்.3)

இங்கே இவர் எழுதிய வரிகள் இதுதான் வாழ்க்கை, இதுதான் உலகம் என்று உணர்த்துவது போல் இருக்கிறது.

திருவிழாக்கள்

விழா என்றாலே மகிழ்ச்சிதான். ஒவ்வொரு ஆண்டும் விழாக்கள் வருகின்றன. சின்ன வயது சந்தோஷம் இப்போதும் இருக்கின்றதா என்றால், இல்லை என்றே சொல்லலாம்.. இன்றும் திருவிழா என்றால், புத்தாடை அணிந்து இனிப்புடன் குதூகலிப்பது குழந்தைகள்தாம். கவிஞரின் வரிகள் இவைகள்.

திருவிழாக்களை
வரவேற்று
அழைத்து வருகிறார்கள்
குழந்தைகள்
                                                         
குழந்தைகளைக் கண்டதும்,
குதூகலத்துடன்
துள்ளுகின்றன
திருவிழாக்கள்       (இந்நூல் பக்கம்.14)

எதார்த்தமான உண்மைகள்

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் சொல்லும் பெரும்பாலான கவிதைகள்  எதார்த்தமானவைகளாக, உள்ளதை உள்ளபடி உரைக்கும் உண்மைகளாக உள்ளன. இதனை தமிழ் இலக்கியத்தில் ‘இயல்பு நவிற்சி அணி’ என்பார்கள்.

இப்போதெல்லாம் உடற்பயிற்சியின் வரிசையில் நடைப்பயிற்சி (Walking) என்பது ரொம்ப ரொம்ப அவசியம் ஆகி விட்டது. அதிலும் ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் நிறையவே ஆலோசனைகள்.. இந்த நடத்தல் (Walking) குறித்து கவிஞர் கண்ட காட்சி இது.

நடைப்பயிற்சி செய்வோரில்
பலரும்
நடைப்பயிற்சி செய்வதில்லை
….. …. …. …. ….….. …. …. …. ….
அலைபேசியில் பேசியே
அத்தனை சுற்றும்
முடிப்போருண்டு
…… …. … … ….. …..….. …. …. …. ….
மருத்துவருக்கு பயந்தும்
மனைவிக்கு பயந்தும்
வருவோருண்டு
…… …. … … ….. …..….. …. …. …. ….
பாதியில் நிறுத்தி
பழங்கதை உரைத்து
கெடுப்போருண்டு
…… …. … … ….. …..….. …. …. …. ….
என்போல்;
எப்போதாவது
நடப்போருண்டு
…… …. … … ….. …..….. …. …. …. ….
என்று நிறையவே சொல்லிச் செல்கின்றார். (இந்நூல் பக்கம் .49 - 50)

இப்போதெல்லாம் ‘தோட்டி முதல் தொண்டைமான் வரை’ எல்லோரும் விசிட்டிங் கார்டு அடித்து வைத்துக் கொள்கிறார்கள். ஏதாவது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ‘சாப்பாடு பிரமாதம் … யார் சமையல்?” என்று சொல்லி விட்டால் போதும், உடனே அந்த சமையல் மாஸ்டர் அல்லது காண்டிராக்டர் நம் முன்னே வந்து அவருடைய  விசிட்டிங் கார்டை தந்து விட்டு, “சார் யாரும் கேட்டால் சொல்லுங்கள்” என்று தருகிறார். இதுவாவது பரவாயில்லை. ஏதேனும் துக்க நிகழ்ச்சிக்கு போகும்போது, அங்கே ஆடி பாடி பறையோ அல்லது ட்ரம்மோ அடிப்பவர்களைப் பார்த்து “எந்த ஊர் செட்” என்றவுடனேயே ஒரு கார்டை நீட்டி “சார் நாங்க திருவிழாவிற்கும் அடிப்போம் “ என்று சொல்லுகிறார்கள். எனக்கு இது மாதிரியான விசிட்டிங் கார்டு அனுபவங்கள் நிறையவே உண்டு.

கவிஞர் தனது அனுபவத்தை நகைச்சுவையாகவே சொல்கிறார்.  
   
அந்த
மரண ஊர்வலத்தின்
முன் பகுதியில்
பறையடித்துச் சென்றவர்களில்
ஒருவன் என்னிடம் தந்தான்
அக்குழுவின் விசிட்டிங் கார்டை
                                                                    
பரிந்துரைக்கச் சொல்கிறானா
பயன்படுத்தச் சொல்கிறானா    (இந்நூல் பக்கம் 57)

குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிக் கொண்டே அரசாங்கம் மதுக் கடைகளை திறந்து வைத்து குடிக்கச் சொல்லுகிறது. இப்போது குடிப்பது என்பது பேஷனாகி விட்டது சிலருக்கு.. ‘குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு” என்பது பழமொழி. கவிஞரின் வரிகள் கீழே.

குறைந்த ஒளியின்கீழ்
ச்சியர்ஸ்
சொல்லிக் கொள்கின்றன
கோப்பைகள்
                                                     
திரவத்துளி பட்டதும்
மெல்ல நழுவி
வெளியேறுகின்றன
பொய்கள்
                                                     
உண்மைகளோ
தள்ளாடியபடி
தவிக்கின்றன   (இந்நூல் பக்கம் 40)

இதுபோன்ற தள்ளாடல்கள் இக்கவிதையில் நிறையவே உண்டு  குடித்துப் பார்க்கவும் . மன்னிக்கவும் படித்துப் பார்க்கவும்.

நடிகர் பி.யூ.சின்னப்பா அவர்களைப் பற்றி இரண்டு பக்கக் கவிதையும் இந்நூலில் உண்டு.

இன்னும்  வளர்ப்பு வண்ண மீன்கள், தொட்டிச் செடிகள், செல்லப் பிராணிகள், பறவைகள், மனுக்கள் படும்பாடு, திருட்டு புளியம்பழம் – என்று நிறையவே தொட்டுச் செல்கிறார் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்.

எனக்குத் தெரிந்து கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் புதுக்கோட்டை புரவலர். இன்னும் கல்விப் புரவலர் என்றும் சொல்லலாம். புதுக்கோட்டையில் நடந்து முடிந்த இரண்டு புத்தகத் திருவிழாக்களின்  வெற்றிக்கு இவரது ஆர்வமும் முனைப்புமே முக்கிய காரணம் எனலாம். இவரது மேடைப் பேச்சை நிறைய சந்தர்ப்பங்களில் ரசித்து கேட்டு இருக்கிறேன். வாசிப்பு அனுபவம் உள்ளவர். இவருக்குள் நிறையவே அனுபவங்கள். எனவே இவர் கவிதை படைப்பதோடு நின்றுவிடாமல், நிறைய கட்டுரைகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் எழுதி,  அவற்றையும் நூல்களாக வெளியிட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

நூலின் பெயர்:  தேவதைகளால் தேடப்படுபவன்
நூலின்  வகை: கவிதை நூல்
ஆசிரியர்:   தங்கம் மூர்த்தி
நூலின் விலை: ரூ 60  ­ பக்கங்கள்: 70
பதிப்பகம்: படி வெளியீடு, சென்னை – 600078 பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், Ph 044 65157525 – Mobile 91 8754507070