Monday 27 April 2015

பின்னூட்டம் எழுதுவது



கம்ப்யூட்ட்ர், இண்டர்நெட் என்று வீட்டிற்கு வந்தபோது எல்லாமே மகிழ்ச்சியான தருணங்கள்தாம். அதிலும் முதன்முதலில் தமிழில் வலைப்பதிவுகளையும்  வலைப் பதிவாளர்களையும் திரையில் பார்த்தபோது ஏற்பட்ட சந்தோஷம் சொல்லி மாளாது. அவர்களது வலைத்தளங்கள் சென்று நமது கருத்துரைகளையும், ஊக்கம் தரும் பின்னூட்டங்களையும் வெளியிடுவது, அவற்றிற்கு அவர்கள் தரும் மறுமொழிகளை படிப்பது என்பதும் ஒரு வித மகிழ்ச்சியே. அப்புறம் வலைத்தளம் தொடங்கி நானும் ஒரு ப்ளாக்கர் (BLOGGER) என்று சொல்லிக் கொண்டபோது ஏற்பட்ட சந்தோஷத்தை எப்படி சொல்வது?

விமர்சனம் என்பது

எந்த ஒன்றையும் அதனைப்பற்றி ஓரளவேனும் தெரிந்து கொண்ட பிறகே நமது கருத்தினை தெரிவித்தல் முறை. அதே போல ஒரு கட்டுரையையோ அல்லது புத்தகத்தைப் பற்றியோ, அதனைப் படித்த பின்னரே கருத்து தெரிவித்தால் நல்லது. இப்போதெல்லாம் வலையுலகில் உடனுக்குடன் பாராட்டுவதோடு, குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனாலும், சிலர் படிக்காமலேயே கருத்துரை சொல்வதில் கில்லாடிகள். அந்த கட்டுரையைப் பற்றி பொத்தாம் பொதுவாக ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ் என்று விமர்சனம் தருகிறார்கள். இன்னும் சிலர் ரைட்டு என்றோ அல்லது சில ஸ்மைலிகளைப் போட்டோ முடித்து விடுவார்கள். இதற்குப் பதில் இவர்கள் தமது கருத்தினை சொல்லாமலே போய் விடுவது நல்லது .

அண்மையில் மறைந்தவர் பட்டாபட்டி ( http://pattapatti.blogspot.in ) என்ற பதிவர் இவற்றையெல்லாம் கண்டு வெறுத்துப் போய் தனது வலைத்தளத்தில் எழுதி வைத்திருந்த வரிகள் இவை.

கீழ்கண்ட பின்னுட்டங்களை, தயவு செய்து.. அன்புகூர்ந்து.... என்னுடைய பதிவில் போட்டுவிட்டு.. பிரச்சனைய சந்திக்கவேண்டாம்..

ஆகா.. சூப்பர்..
வாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஹா..ஹா
:-)
:-(
ம்..ம்..
Online...
வடை எனக்கு...
Present..
வடைபோச்சே....

கருத்துரையா? பின்னூட்டமா?

ஒரு வலைப்பதிவில் ஒரு கட்டுரையை வெளிவந்தவுடன் நமது கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி சொல்வது கருத்துரைகள். (Comments) அவ்வாறன்றி அந்த கட்டுரையின் ஆசிரியருக்கு உற்சாகம் ஊட்டும் வண்ணம் எழுதுவது பின்னூட்டம் (Feedback). மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது இரண்டும் ஒன்று போலவே தோன்றும். ஆனால் வலையுலகில் எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் என்றே சொல்கிறார்கள்.

   
முகமூடிகளும் அனானிகளும்

வலைப்பதிவில் பலபேர் தங்களது உண்மையான பெயரில் எழுதுவதில்லை. இந்த முகமூடிப் பதிவர்கள் (MASKED WRITER) எழுதுவதில் சுய கட்டுப்பாடு எதுவும் இல்லை. வானமே எல்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். மற்றவர்கள் வலைத்தளம் வந்து இஷ்டத்திற்கு கருத்துரைகளும் தருவார்கள்; சிலர் வம்புக்கு நிற்பார்கள்.  இந்த முகமூடி பதிவர்களிலும் நன்கு சுவாரஸ்யமாக எழுதுபவர்கள் உண்டு. இவர்கள் தரும் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கும். சிலர் தரும் பின்னூட்டங்கள் உற்சாகம் தருவதாயும் கருத்துக்கள் நிரம்பியதாகவும் இருக்கும். இவர்கள் என்னதான் சிறப்பாக எழுதினாலும், ஒருநாள் கூட,  நான்தான் அந்த பதிவை எழுதினேன் என்று வெளிப்படையாக, தங்கள் நண்பர்களிடம் கூட சொல்லிக் கொள்ள முடியாது. குந்திதேவி தன்னுடைய மகன் கர்ணனை வெளிப்படையாக , மகன் என்று சொல்லிக் கொள்ள முடியாது போன்ற நிலை. இதனால் என்ன பயன்? எனவே அவர்கள் தங்கள் பெயர் முதலான சுயவிரங்களைத் தந்து விட்டே எழுதலாம்.

அனானிகள் (ANONYMOUS) என்று ஒரு வகையினர். GOOGLE இல் கணக்கு இல்லாத இவர்களால், கருத்துரைகள் மட்டுமே தர இயலும். இவர்கள் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட முகமூடி பதிவர்கள் போன்றே இருக்கும். உற்சாகமான பின்னூட்டங்களையும், கருத்துரையின் முடிவில் பெயர் தருபவர்களும் உண்டு.

இன்னும் சிலர். இவர்களுக்கு GOOGLE இல் கணக்கு இருக்கும். BLOGGER என்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு உலாவுவார்கள். அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள,  தன்விவரங்கள் (PROFILE) போய் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. ABOUT ME என்று வெறுமனே இருக்கும். இந்த போலி ப்ளாக்கர்கள் சிலர் தேவையற்ற கருத்துரைகளைத் தந்து நம்முடன்  மல்லு கட்டுவார்கள். இவர்களோடு வாதம் செய்வது என்பது காற்றோடு சண்டை போடுவதற்கு சமானம்.

ஜாதி, மதம், அரசியல், ஆன்மீகம் அல்லது இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் என்று எழுத ஆரம்பித்தால் போதும், இந்த முகமூடிகள், அனானிகள், போலிகள் வந்து குதித்து விடுவார்கள்.

அதிலும் சிலர் கழிப்பறை கிறுக்கல்கள் போன்று எழுதி தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்வார்கள்.

மட்டுறுத்தல் (COMMENTS MODERATION):

எனவே பலரும் கருத்துரை பெட்டியில் (COMMENTS BOX) , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக SETTINGS  வழியே மட்டுறுத்தல் (COMMENTS MODERATION) என்ற ஒன்றை அமைத்துக் கொள்கின்றனர். எனவே மட்டுறுத்தல்  என்பது சில வேண்டாத தொல்லைகளை தவிர்க்க ஒரு வகையில் துணையாக நிற்கிறது. அதேசமயம் இந்த முறையைக் கையாளுவதால் நாம் நமக்கு வரும் கருத்துரைகளை வெளியிடுவதற்கு என்று நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. அல்லது அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது கம்ப்யூட்டர் முன்னே உட்கார வேண்டி உள்ளது. வெளியூர் சென்று விட்டால் இவைகள் அப்படியே நிறைந்து விடுகின்றன.

WORD PRESS  இல் கருத்துரை எழுதுவது என்பதும் கிட்டத்தட்ட ஒருவகை COMMENTS MODERATION வகைதாம். மேலும் இதில் நமது மின்னஞ்சல், நமது பெயர், நமது வலைத்தளத்தின் பெயர் என்று எல்லாவற்றையும் கேட்கிறார்கள். அப்புறம் "Your email address will not be published"  என்றும் சொல்லுகிறார்கள். அவ்வளவு எளிதில் யாருக்கும் நம்பிக்கை வருவதில்லை. இதனாலேயே WORD PRESS  இல் எழுதும் நண்பர்களுக்கு அதிகம் பின்னூட்டங்கள் வருவதில்லை.

வலைப்பதிவில் அனைத்தையும் படிப்பதற்கே நேரம் இல்லாத போது , இவ்வளவு தொல்லைகளையும் தாங்கி வாசகர் அல்லது வலைப்பதிவர் பின்னூட்டம் எழுத பொறுமைதான் வேண்டும். கருத்துரை பெட்டியில் (Comment Box) சிலர் ( தான் ஒரு உஷார் பேர்வழி என்பது போல) ஏதேதோ தடைகள் வைக்கிறார்கள். அதிலும் சிலர் வைத்துள்ள Word verification மற்றும் நீங்கள் ரோபோட்டா என்ற கேள்வி போன்றவை, பெரிய தொல்லை.
அந்த பதிவுகள் பக்கம் கருத்துரை போடும் அளவுக்கு பலருக்கும் பொறுமை கிடையாது. எனவே நிறையபேர் அந்த பதிவிலிருந்து வேறு பதிவிற்கு தாவல் (Skip) செய்துவிடுகிறார்கள்.
COMMENTS MODERATION இல்லாத விடத்து, நமது பதிவினில் வெளியாகிவிட்ட சில வேண்டாத கருத்துரைகளை துணிந்து நீக்குதல் தவறில்லை.

இந்த தொல்லைகளை எல்லாம் தவிர்க்க, கூகிள் நிறுவனம், வலைப்பதிவினில் கருத்துரைப் பெட்டியுடன் (COMMENTS BOX), பேஸ்புக்கில் (FACEBOOK) உள்ளது போல் லைக் (LIKE ) பட்டனையும் வைத்தால் சிறப்பாக இருக்கும். குறிப்பாக தமிழ்மணம் போன்ற திரட்டிகள் இதனை வைத்து வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் ஊக்குவிக்கலாம்.
                                                                 
சிறப்புச் செய்தி:

மூத்த வலைப்பதிவர் திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் எல்லோருடைய வலைத் தளத்திற்கும் சென்று ஊக்கம் அளிப்பவர். தனது வலைத்தளத்திற்கு வந்த, பின்னூட்டங்கள் அனைத்தையும் தொகுத்து பன்னிரண்டு தொடராக வெளியிட்டு ஆவணப் படுத்தி உள்ளார். துவக்க பதிவு இது.

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-1 http://gopu1949.blogspot.in/2015/03/1.html


                                  ( ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES )

Saturday 25 April 2015

கடந்த 20 வருடங்களில் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை



இண்டர்நெட்டில் அடிக்கடி பழைய சமாச்சாரங்களையும் தோண்டி எடுத்து பார்ப்பது வழக்கம். அப்படித்தான் ஒருமுறை பார்த்து கொண்டு இருந்த போது  கடந்த 86 வருடங்களில் தங்கம் என்ன விலைக்கு விற்றது என்ற பட்டியல் கிடைத்தது. அதனை மையமாக வைத்து தங்கம் விலை – 86 வருட பட்டியல். என்ற ஒரு பதிவினை http://tthamizhelango.blogspot.com/2012/10/86.html வெளியிட்டேன். வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. COPY & PASTE பதிவர்கள் அந்த பதிவினை அப்படியே அல்லது தங்களுக்கு தகுந்தவாறு மாற்றியோ தங்கள் தளங்களில் வெளியிட்டுக் கொண்டார்கள்.

சென்ற மாதம் சில காரணங்களை முன்னிட்டு இண்டர்நெட்டில் வாகன வேட்டை நடத்தியபோது, எல்லோரும் பயன்படுத்தும் பெட்ரோல். கெரசின், டீசல் மற்றும் எல்பிஜி (எரிவாயு) ஆகியவற்றின் (1989.ஏப்ரல் முதல் ஜூன்.2010 வரை உண்டான) விலைப் பட்டியல் கிடைத்தது. (நன்றி: REUTERS) இதனை வலைப்பதிவு நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

TABLE-Fuel prices in India's capital since 1989

YEAR        PETROL  KEROSENE    DIESEL     LPG  
 --------------------------------------------------
 Apr 1  1989     8.50    2.25       3.50      57.60
 Mar 20 1990     9.84     --        4.08       -- 
 Oct 15 1990    12.23    2.77       5.05       -- 
 Jul 25 1991    14.62    2.52        --       67.90
 Sep 16 1992    15.71     --        6.11      82.75
 Jan 12 1994      --      --         --       98.30
 Jan 14 1994      --      --         --       93.05
 Feb 02 1994    16.78     --        6.98       -- 
 Jul 03 1996    21.13     --        9.04     119.95
 Jul 07 1996      --      --        8.02       -- 
 Sep 02 1997    22.84     --       10.34     136.00
 Nov 07 1997      --      --       10.29       -- 
 Dec 12 1997      --      --       10.39       -- 
 Mar 01 1998      --      --       10.25       -- 
 Apr 04 1998      --      --       10.01       -- 
 May 20 1998      --      --        9.87       -- 
 Jun 03 1998    23.94     --         --        -- 
 Jan 09 1999      --      --        8.89       -- 
 Feb 01 1999      --      --         --      152.00
 Feb 28 1999    23.80     --        9.94     146.00
 Apr 20 1999      --      --       10.37       -- 
 Oct 06 1999      --      --       13.91       -- 
 Jan 15 2000#   25.94     --       14.04       -- 
 Mar 23 2000      --     5.55        --      196.55
 Apr 03 2000*   26.07     --         --        -- 
 Sep 30 2000    28.44    8.35      16.55     232.25
 Nov 03 2000**  28.70     --         --        -- 
 Nov 22 2000      --     7.35        --      222.25
 Mar 03 2001***   --      --       17.06       -- 
 Jan 12 2002    27.54     --       17.09       -- 
 Mar 01 2002    26.54    8.98      16.59     259.95
 Mar 17 2002      --      --         --      240.45
 Jun 04 2002    28.94     --       17.99       -- 
 Jun 16 2002    29.18     --       18.23       -- 
 Aug 16 2002    29.00     --       18.05       -- 
 Sep 01 2002    29.20     --        8.34       -- 
 Sep 16 2002    29.66     --       18.68       -- 
 Oct 01 2002    29.91     --       18.91       -- 
 Oct 17 2002    30.24     --       19.23       -- 
 Nov 01 2002    30.26     --       19.25     241.20
 Nov 16 2002    29.57     --       18.57       -- 
 Dec 01 2002    28.91     --       18.06       -- 
 Jan 03 2003    29.93     --       19.07       -- 
 Jan 16 2003    30.33     --       19.47       -- 
 Feb 01 2003    30.71     --       19.84       -- 
 Mar 01 2003    32.10     --       21.21       -- 
 Mar 16 2003    33.49     --       22.12       -- 
 Apr 16 2003    32.49     --       21.12       -- 
 Apr 27 2003    31.49     --       20.12       -- 
 May 01 2003    31.50     --       20.13       -- 
 May 16 2003    30.40     --       19.18       -- 
 Jun 01 2003    30.30     --       19.08       -- 
 Jun 26 2003     --      9.01        --        -- 
 Sep 01 2003    32.40     --       20.33       -- 
 Oct 01 2003     --       --         --      241.60
 Oct 16 2003    31.70     --       19.73       -- 
 Dec 16 2003    32.70     --       20.73       -- 
 Jan 01 2004    33.70     --       21.73       -- 
 Mar 01 2004    33.71     --       21.74       -- 
 Jun 16 2004    35.71     --       22.74     261.60
 Aug 01 2004    36.81     --       24.16       -- 
 Nov 05 2004    39.00     --       26.28     281.60
 Nov 16 2004    37.84     --         --        -- 
 Jun 21 2005    40.49     --       28.45       -- 
 Jun 25 2005      --     9.08        --        -- 
 Sep 07 2005    43.49     --       30.45       -- 
 Apr 01 2006    43.51     --       30.47       -- 
 May 25 2006      --     9.09        --        -- 
 Jun 06 2006    47.51     --       32.47       -- 
 Nov 30 2006    44.85     --       31.25       -- 
 Feb 16 2007    42.85     --       30.25       -- 
 Mar 01 2007    42.85     --       30.25       -- 
 Jun 06 2007    43.52     --       30.48       -- 
 Sep 27 2007      --     9.16        --        -- 
 Feb 15 2008    45.52     --       31.76       -- 
 May 24 2008    45.56     --       31.80       -- 
 Jun 05 2008    50.56     --       34.80     346.30##
 Jul 18 2008    50.62     --       34.86       -- 
 Sep 12 2008     --      9.22        --        -- 
 Dec 06 2008    45.62     --       32.86       -- 
 Jan 29 2009    40.62     --       30.86     279.70
 Jul 02 2009    44.63     --       32.87     281.20
 Oct 27 2009    44.72     --       32.92       -- 
 Feb 27 2010    47.43     --       35.47       -- 
 Apr 01 2010### 47.93     --       38.10@    310.35@
 Jun 26 2010    51.43    12.22     40.10     345.35

NOTE: Petrol, diesel and  kerosene prices are in rupees per litre, while LPG prices are per cylinder of 14.2 kilograms.
COURTESY:



                      ( ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES )




Friday 24 April 2015

கவிஞர் வைரமுத்து – மவுனம் கலைய வேண்டும்.



இலக்கிய உலகில் சர்ச்சை என்பது காலம் காலமாக இருந்து வருவதுதான். அஞ்சு தமிழ்ப் புலவர்கள் இருக்கும் இடத்தில், ஒரு போலீஸ் ஸ்டேஷன் தேவைப்படும் என்று கிண்டலடித்த காலமும் உண்டு. அதாவது அந்த அளவிற்கு அவர்களுக்கு இடையில் வாதங்கள் அனல் பறக்கும் என்பதுதான். அந்த வகையில் இப்போது சிக்கி இருப்பவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். கவிஞருக்கு என்று இருக்கும் புகழ் மற்றும் மரியாதைக்கு அவர் தானாக விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ரசிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். 

     (ஒரு விழாவில் கமல்ஹாஸன், ஜெயகாந்தன், வைரமுத்து) 

குமுதத்தில் வந்த கடிதம்:

கவிஞர் வைரமுத்துவும், மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனும் இலக்கிய நண்பர்கள். இலக்கிய உலகில் ஒரு எழுத்தாளரின்  நூலுக்கு இன்னொரு எழுத்தாளர் பாராட்டி அணிந்துரை தந்து கொள்வது என்பது புதிய விஷயமன்று. அந்த வகையில், குமுதம் (27.04.2015) வார இதழில் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகளை ஜெயகாந்தன் பாராட்டி எழுதியதாக ஒரு கடிதம் வந்தது. அத்தோடு அதுதான் ஜெயகாந்தனின் கடைசி எழுத்தும் என்று சொல்லி இருந்தார்கள்.



 
பேஸ்புக்கில் ஜெயகாந்தனின் மகள் :

விஷயம் அத்தோடு முடிந்து போயிருக்கும். ஆனால் இது விஷயமாக எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் தீபா லட்சுமி அவர்கள், அப்படி ஒரு கடிதம் அப்பா எழுதவில்லை, அப்பாவே பாராட்டி கையெழுத்து போட்டது போன்று வெளியிட்டு விட்டார்கள் என்பதாகும். இதற்கு அவர் சொல்லும் காரணம், கடந்த ஓராண்டு காலமாகவே எழுத்தாளர் ஜெயகாந்தன் எதனையும் நினைவில் வைத்துக் கொள்ளவோ எழுதவோ அல்லது வாசிக்கவோ முடியாத நிலையில் இருந்தார் என்பதுதான். தீபா லட்சுமி அவர்கள் தனது பேஸ்புக்கில் (FACEBOOK) https://www.facebook.com/deepajoe கொடுத்த விளக்கம் இது.


கேட்டு வாங்கும் பாராட்டுக்கள்:

சகோதரி மு.வி.நந்தினி அவர்கள் குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன்  என்ற தலைப்பினில் (http://mvnandhini.com/2015/04/22 )ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் காலம் காலமாக நடந்துவரும், இதழியல் துறை சாராத, மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார். சகோதரி மு.வி.நந்தினி அவர்கள் எழுத்தாளர், வலைப்பதிவர் மற்றும் ஊடக பணியில் ஒன்பதாவது ஆண்டினை எட்டி இருப்பவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. அவர் மேலே சொன்ன தனது பதிவினில்,

குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன் சர்ச்சையில் வைரமுத்துவை இந்த அளவுக்கு தூற்ற அவசியமில்லை. காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான்

என்று கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதில் நான் எழுதிய கருத்துரை இது.


 மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான ஒரு நல்ல கவிஞர் வைரமுத்து. இவர் விளம்பரத்திற்காக ஒரு காரியத்தை செய்தார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

// காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். //

இலக்கிய உலகில் பத்திரிகைகள் மத்தியில் பிரபலங்களின் கையெழுத்தை அவர்களது அனுமதியோடு மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வழக்கத்தை இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த நடைமுறை தெரியாத ஜெயகாந்தன் மகள் தீபா லட்சுமி, கவிஞர் வைரமுத்து விஷயத்தை பெரிதுபடுத்தி விட்டாரோ என்னவோ? தெரியவில்லை. கவிஞர் வைரமுத்து மவுனம் கலைய வேண்டும்.
  
எனவே கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது மவுனத்தைக்  கலைத்து உண்மை என்ன என்பதனை விளக்க வேண்டும் எது எப்படியோ பேஸ்புக்கில் வலம் வந்த ஜெயகாந்தன் மகளை ஊடகங்கள் இனிமேல் பிரபலமாக்கி விடும்.

                    ( ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES )




Monday 20 April 2015

ஜெயகாந்தன் – எனது பார்வை


எனக்கு ஜெயகாந்தன் என்றாலே அன்றைய காலத்து அச்சகங்களில் இருந்த டிரெடில் எந்திரமும் அதன் ஓசையும் தான் ஞாபகம் வரும். காரணம் அந்த தலைப்பில் அவர் எழுதிய சிறு கதையோடு ஒன்றிப் போய் படித்தேன். ஒரு காலத்தில் இந்த டிரெடில் எந்திரம் இயக்கும் அச்சக வேலையாள் பணியையும் ஜெயகாந்தன் செய்து இருக்கிறார் என்பதனை பிற்பாடு தெரிந்து கொண்டேன்.

என்.சி.பி.எச் புத்தகக் கடையில்:

நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது திருச்சி சிங்கார தோப்பில் இருந்த NCBH எனப்படும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸிற்கு அடிக்கடி போவது வழக்கம். அன்றைய தினம் அங்கே பணி புரிந்த தோழர்கள் எனக்கு நல்ல பழக்கம். எனவே அங்கு போவதோடு அவர்கள் நடத்தும் புத்தக கண்காட்சிகளுக்கும் செல்வதுண்டு. அப்போது அங்கேயே உட்கார்ந்து நிறைய புத்தகங்களை படித்து எனது இலக்கிய தாகத்தை தணித்துக் கொண்டேன். அங்கே தொடர்ந்த வாசிப்பு பழக்கம் இன்றும் எனக்குள் தொடர்கிறது.

அந்த NCBH புத்தகக கடையில் அவர்கள் வெளியிட்ட நூல்களோடு கம்யூனிஸ்டு புத்தகங்கள் மற்றும் சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்த தமிழாக்கம் செய்யப்பட்ட ருஷ்ய நூல்கள் மட்டுமே இருக்கும். மற்றைய பதிப்பகங்களின் நூல்கள் விற்க அனுமதி இல்லை. ஆனாலும் விதி விலக்காக மீனாட்சி புத்தக நிலையம், புதுக்கோட்டை  வெளியிட்ட  எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நூல்களை மட்டும் அனுமதித்து இருந்தார்கள். காரணம் தோழர்களுடன் அவருக்கு இருந்த தொடர்புதான்.அந்த வகையில் ஜெயகாந்தன் நூல்களில் பெரும்பாலானவற்றை ரசித்து படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த புத்தகக் கடையுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்து நானும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸும்! என்ற தலைப்பில் http://tthamizhelango.blogspot.com/2012/07/blog-post_16.html ஒரு பதிவும் எழுதியுள்ளேன்.

ஜெயகாந்தன் காலம்:

ஜெயகாந்தன் தனது எழுத்துக்களை எழுதிய காலம் என்றால், அப்போதுதான் இந்தியா சுதந்திரம் அடைந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டு இருந்த நேரம். சாதாரண தொழிலாளர்கள் கம்யூனிச தொழிற்சங்களில் இணைந்து உணர்வுப் பூர்வமாக பாட்டாளி வர்க்கமாக இயங்கிய காலம். இன்றைய காலம் போன்று டீவி, செல்போன், இண்டர்நெட், பேஸ்புக், ட்விட்டர் போன்ற குறுக்கீடுகள் மக்களுக்கு இல்லாத காலம். சினிமா பார்த்தல், பத்திரிகைகளில் வரும் சிறுகதைகள், தொடர் நாவல்கள், புத்தகங்கள் வாசித்தல் என்று வாசிப்பில் மக்கள் பொழுது போக்கிய காலம். எனவே ஜெயகாந்தன் படைத்திட்ட சாதாரண கதாபாத்திரங்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன.

பாத்திரப் படைப்புகள்:

சாதாரணமாக மற்ற எழுத்தாளர்கள் வந்தது, போனது என்று குடும்பக் கதைகளை எழுதிக் கொண்டு இருந்த நேரத்தில் இவர் சமுதாய சிக்கல்களை மய்யமாக வைத்து எழுதிய கதைகள் வாசகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டன. உதாரணமாக யாருக்காக அழுதான்? , கோகிலா என்ன செய்துவிட்டாள்?, சில நேரங்களில் சில மனிதர்கள், பாவம், இவள் ஒரு பாப்பாத்தி , ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும், உன்னைப் போல் ஒருவன் போன்ற நாவல்களைச் சொல்லலாம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். (இந்த நாவல்களின் கதைச் சுருக்கங்களை மற்றவர்களைப் போல மீண்டும் மீண்டும் சொல்லி உங்களுக்கு அலுப்பு உண்டாக்க விரும்பவில்லை). தன்னுடைய படைப்புகளுக்கும் வித்தியாசமான  தலைப்புகளையே வைத்து வாசகர்களைக் கவர்ந்தார்.

ஜெயகாந்தன் வீட்டை விட்டு வெளியேறிய நாளில் ஆரம்ப காலத்தில் பேப்பர் விற்கும் பையன் ,கடைச் சிறுவன், அச்சக தொழிலாளி என்று பல வேலைகளை செய்து இருக்கிறார். மேலும் கம்யூனிஸ்டு தோழர்களிடமும் பழக்கம். எனவே அவரது பாத்திரப் படைப்புகளில் கொஞ்சம் சிவப்பு நெடி வீசியது.  இவரது சில பாத்திரப் படைப்புகள், எழுத்தாளர் புதுமைப் பித்தனின் கதைகளை நினைவு படுத்தின.( உதாரணம் புதுமைப் பித்தனின் பொன்னகரம்)

டிரெடில்  என்ற சிறு கதை, ஒரு சிறிய அச்சகத்தில்  கம்பாஸிட்டர், பைண்டர், மெஷின்மேன் என்று எல்லா வேலைகளையும் பார்க்கும் வினாயக மூர்த்தி என்ற தொழிலாளியின் நிலைமையோடு, அந்தக் கால பிரிண்டிங் பிரஸ் இருந்த காலத்து சமூக சூழலையும் காட்டுகிறது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று ஒரு சிறுகதை. நந்தவனம் எனப்படும் சுடுகாட்டில் ஒரு குடிசை போட்டுக் கொண்டு, மயான வேலைகள் பார்த்த ஆண்டி மற்றும் அவனது மனைவி முருகாயி பற்றிய கதை இது. அடுத்தவர் பிணங்கள் வரும்போதெல்லாம், காரணம் புரியாமலேயே

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி."

என்ற பாடலைப் பாடுவான்; அழக்கூட மாட்டான். தனது கருமத்திலேயே கண்ணாக இருப்பான். அவனுக்கு தனது மகன் இருளனின் இறப்புக்குப் பிறகுதான் இறப்பின் சோகம் வலிக்கிறது. அப்போது முதல் ஒவ்வொரு பிணமும் மயானத்திற்கு வரும் போதெல்லாம் அழத் தொடங்கியவன், அழுது கொண்டே இருக்கிறான்.

கீழ்ஜாதி என்றழைக்கப்பட்ட ஜாதியில் பிறந்த அம்மாசி என்ற கிழவனிடம், ஒரு பிராமணப் பெண் தனது குழந்தையை ஒப்படைத்து விட்டு இறந்து போகிறாள். அவன் அந்த குழந்தையை ஏற்றுக் கொண்டு அவளுக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்கிறான். ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்  என்ற கதை சொல்லும் கதை இது.
                                                       
அக்கினிப் பிரவேசம் என்ற கதையில், தனது கெட்டுப் போன (அறியாத பருவம்) மகளை, அவள் தலையில் தண்ணீரை ஊற்றி, தூய்மைப் படுத்திவிட்டு ஜீரணித்துக் கொள்ளும் ஒரு தாய் அப்போது பரபரப்பாக பேசப்பட்டாள்.

ஜெயகாந்தனின் அரசியல்:

காம்ரேடுகளிடம் இருந்தாலும் இவர் கம்யூனிஸ்டு இயக்கத்தில் முழுமையாக தன்னை ஒரு முழுநேரத் தொண்டனாக ஈடுபடுத்திக் கொண்டு கட்சி மேடைகளில் பேசியதாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் காம்ரேடுகள் இவரது எழுத்துக்களில் உள்ள ஈர்ப்பின் காரணமாக அவரை அங்கீகரித்தனர் என்பதே உண்மை. இவர் அணிந்த ஆடை, கண்ணாடி மற்றும் இவரது முரட்டுத்தனமான மீசை இவரை வித்தியாசமாகவே காட்டின. எனக்குத் தெரிந்து ஒரு கல்லூரி பேராசிரியர் ஒருவர், இவரைப் போலவே தோற்றம் நடை உடை பாவனையோடு இவரைப் போலவே நீண்ட மீசையும் வைத்து இருந்தார்.

ஆரம்பத்தில் இருந்தே ஜெயகாந்தனுக்கு திராவிட அரசியல் என்றால்  கொஞ்சமும் பிடிக்காது. எனவே அவ்வப்போது தி.மு.க தலைவர்களைப் பற்றி சர்ச்சையான தனது கருத்துக்களை வெளிப்படையாகவே சொல்லுவார். ஒரு கட்டத்தில் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டபோது ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டே (கண்ணதாசனுக்கும் இவருக்கும் இந்த விஷயத்தில் ரொம்பவே ஒற்றுமை ) திமு.கவை எதிர்த்தார். குறிப்பாக சினிமாவுக்குப் போன சித்தாளு என்ற நூல் எம்ஜிஆர் ரசிகர்களை மிகவும் கோபப்பட வைத்தது. இந்த நாவலில் வாத்தியார் என்ற பாத்திரப் படைப்பின் பெயரில் கடுமையான விமர்சனங்கள். (பின்னாளில் கலைஞர் மு.கருணாநிதியும் இவரும் பகைமை இல்லாது நண்பர்களாக மாறியது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்) ஜெய ஜெய சங்கர..., ஹர ஹர சங்கர என்ற நூல்கள் இவர் முற்றிலும் ஆத்திகத்திற்கு மாறியதை உணர்த்துபவை.

                                                                 
ஜெயகாந்தன் என்றால் ஒரு கம்பீரமான எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை. இன்றைக்கும் என்னிடம் இருக்கும் ஜெயகாந்தன் எழுதிய படைப்புகளை சில சமயம் மீள் வாசிப்பு செய்வதுண்டு. அண்மையில் நான் வாங்கிய நூல் ஆனந்த விகடன் வெளியிட்ட “ஜெயகாந்தன் கதைகள்


                                         (  PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES  )


Thursday 16 April 2015

வலைச்சரம் – ஒரு வேண்டுகோள்



சில மாதங்களுக்கு முன்னர் “தமிழ் திரட்டிகளுக்கு என்ன ஆயிற்று? என்ற ஒரு பதிவினை எழுதி இருந்தேன்.அதில்(http://tthamizhelango.blogspot.com/2014/05/blog-post_9869.html ) என்ன காரணம் என்று தெரியவில்லை? இப்போது சமீப காலமாக நன்கு பிரபலமாக இருந்த தமிழ் தளங்கள் நின்று விட்டன. அல்லது செயல்படாமல் நிற்கின்றன என்ற எனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்தேன்.

இப்போது வலைச்சரத்தில் 22.மார்ச்.2015 இற்குப் பிறகு புதிதாக ஆசிரியர் பொறுப்பேற்க யாரும் வராதபடியினால் அப்படியே நிற்கிறது. வலைச்சரம் மீதுள்ள ஆதங்கத்தில் (அன்பர்கள் மன்னிக்கவும்) எழுதிய கட்டுரை இது.

வலைச்சரம்:


தமிழ் வலையுலகில் தனி மணிமகுடமான் வலைச்சரம் 26.02.2007 இல் தொடங்கப் பட்டது வலைச்சரம். இங்கு வாரம் ஒரு வலைப் பதிவர் ஆசிரியராக இருப்பார். அவர் தனது மனங் கவர்ந்த அல்லது படித்த வலைப் பதிவர்களை அந்த வாரம் முழுக்க அறிமுகம் செய்ய வேண்டும். அப்போது வலைச்சரத்திற்கு வரும் பின்னூட்டங்களுக்கும் பதில் தர வேண்டும். இதுதான் வலைச்சரத்தின் நடைமுறை. இந்த வலைச்சரத்தில் வலைப்பதிவர் உதவிப்பக்கம் மற்றும் தமிழில் எழுத மென்பொருள் என்று ஆக்க பூர்வமான பதிவுகளும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் வலைச்சரத்தில் யார் யார் ஆசிரியர்களாக இருந்தார்கள் என்ற பட்டியலும் இருக்கின்றது வலைச்சரத்திற்கு ஒருவாரம் ஆசிரியர் பொறுப்பு என்பது பெருமிதமாகவும் அந்த வலைப் பதிவரையும் அறிமுக நண்பர்களையும் ஊக்குவிப்பதாகவும் இருக்கின்றது.

அன்பின் சீனா மற்றும் தமிழ்வாசி பிரகாஷ்

அன்பின் சீனா அவர்கள் வலைச்சர வரலாற்றை கீழ்க்கண்ட தனது பதிவுகளில் எழுதி இருக்கிறார். மேலும் அன்று தொடங்கி இன்றுவரை பொறுப்பேற்ற வலைப்பதிவர் பெயர், வலைத்தள முகவரி, மின்னஞ்சல் மற்றும் செல் போன் எண்கள் ஆகியவற்றை கொண்ட MS WORD XL  கோப்பு (FILE) ஒன்றையும் தந்துள்ளார். வலைப் பதிவர்களோடு தொடர்பு கொள்ள இந்த கோப்பு பயன்படும்.




வலைச்சரத்தில் அந்த வார ஆசிரியரின் பணி நிறைவடைந்த ஒவ்வொரு ஞாயிறு அன்றும், அடுத்த வாரம் வரப் போகும் ஆசிரியரைப் பற்றி அறிமுகம் செய்வது அன்பின் சீனாவின் வழக்கம்.

அன்பின் சீனா அவர்களுக்கு வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் குழுவில் துணையாக இருந்து வருபவர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள். இவர் "வலைச்சரம்" சீனா ஐயா சிறப்புப் பேட்டிhttp://www.tamilvaasi.com/2012/02/blog-post_27.html  என்ற பதிவினை மீள் பதிவாக வெளியிட்டுள்ளார். இந்த பதிவினில் வலைச்சரம் பற்றிய தகவல்கள், மற்றும் வலைப் பதிவர்களுக்கான பயனுள்ள தகவல்களைக் காணலாம்.

எனது வேண்டுகோள்

கடந்த ஏழு ஆண்டுகளாக  தொடர்ந்து இயங்கி வந்த வலைச்சரத்தில், கடந்த மாதங்களில் ஒரே ஆசிரியர் ஒருவாரம் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விட்டு அடுத்த வாரமும் அவரே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. தனது அனுபவத்தை, விடாது கருப்பு வலைச்சரத்தில்! என்றே தலைப்பிட்டு எழுதினார் திரு வெங்கட் நாகராஜ் அவர்கள்.

மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K (வை.கோபால கிருஷ்ணன்) அவர்கள் என்னை ஒருவாரம் வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்க அழைத்தபோதும், இரண்டாவது முறையாக அன்பின் சீனா அவர்கள் அழைத்தபோதும், அப்போது கண்ணில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உடனடியாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இருந்த போதிலும் அப்போதிருந்தே, வலைச்சரம் ஆசிரியர் பணிகளுக்காக வலைப்பதிவர்கள் பற்றிய குறிப்புகள் படங்கள் ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொண்டேன். பின்பு அன்பின் சீனா அவர்கள் மறுபடியும் அழைத்தபோது, தட்டாமல் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு பணி (18.பிப்ரவரி.2013 முதல் 24.பிப்ரவரி.2013 முடிய) செய்தபோது இவை உதவின. அவ்வப்போது பின்னூட்டங்கள் இடும்போது மட்டும் கொஞ்சம் அதிகம் கம்ப்யூட்டரில் உட்கார வேண்டி இருந்தது. மேலும் நான் பணி விருப்பஓய்வு பெற்று வீட்டில் இருந்தபடியினால் பணிச்சுமையோ அல்லது அலுப்போ தெரியவில்லை.  

அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள், வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது எழுதியது இது.

// ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா. பதிவர்களையும் அவர்களின் பதிவுகளையும் தேடிப்பிடிச்சு, தினம் ஒரு பதிவு வீதம் போட்டு, வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதி, மூச்சு முட்டிப் போச்சுங்க.  ஆச்சு, ஒரு மாதிரியாகத்தானே இந்த வலைச்சர ஆசிரியப் பொறுப்பு என்னும் இன்பமான சுமையை இறக்கி வைக்கிறேன். //

                                         ( PICTURE - COURTESY: “ GOOGLE IMAGES  )

இதற்கு வலைப்பதிவர்கள் மத்தியில் நிலவிவரும் சலிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது தொடர்ச்சியாக ஏழு நாட்கள் ஆசிரியர் பொறுப்பில் இருக்க வேண்டுமே என்ற எண்ணமும் இருக்கலாம். ஏனெனில் முன்புபோல் அதிகம் யாரும் எழுதுவதும் இல்லை; பின்னூட்டங்கள் தருவதும் இல்லை.

இப்போது வலைச்சரம் கடந்த மூன்று வாரங்களாக அப்படியே நிற்கிறது. எனவே “வலைச்சரம்  அடுத்து என்ன யுத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலைப்பதிவர்கள் யோசிக்க வேண்டிய தருணம் இது. என்னுடைய ஆலோசனை என்னவெனில், ஆசிரியர் பணிக்கு யாரும் இல்லாத போது வலைச்சரத்தின் அந்நாளைய பழைய பதிவுகளை மீள் பதிவுகளாக வெளியிடலாம். இதில் ஒன்றும் தவறேதும் இல்லை. வாழ்க வலைச்சரம்!