Monday 29 August 2016

புதுக்கோட்டை முப்பதாவது வீதியில் நான்



ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள், ’ புதுக்கோட்டை மாவட்டப் பாறை ஓவியங்கள்’ (ஆசிரியர்: நா.அருள்முருகன்) என்ற நூலின் பிரதிகள் வந்து விட்டதாகவும் தேவையுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி இருந்தார். நானும் புதுக்கோட்டை செல்ல, யோசித்துக் கொண்டிருந்த வேளையில் வீதி இலக்கியச் சந்திப்பிற்கான அறிவிப்பு வந்தது நல்லதாகப் போயிற்று. எனவே இந்த கூட்டத்தின் போது ‘பாறை ஓவியங்களைப் பெற்றுக் கொள்வதாக அவருக்கு செய்தி அனுப்பினேன். எனவே எப்போதும் போல இலக்கிய ஆர்வம் காரணமாக நேற்று (28.08..16 –ஞாயிறு) முற்பகல் புதுக்கோட்டையில் நடந்த ’வீதி கலை இலக்கியக் களம் – 30 ஆவது இலக்கியச் சந்திப்பு சென்று வந்தேன்.

கூட்டம் தொடங்கும் முன்:

கூட்டம் நடக்கும் ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜிற்கு காலை 9.30 அளவில் சென்றேன்.. இந்த மாத கூட்ட அமைப்பாளர்கள் ஓவிய ஆசிரியர் திரு பவல்ராஜ், ஆசிரியை செல்வி. த.ரேவதி இருவரும் அன்புடன் வரவேற்றனர். சற்று நேரத்தில், கூட்டத்தின் சிறப்பு விருந்தினரான, தஞ்சை எழுத்தாளர் நா.விச்வநாதன் அவர்கள் வந்து இருந்தார். எங்கள் இருவருக்குமே ஒருவரைப் பற்றி ஒருவருக்கு தெரியாது. எனவே நானே அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். மற்றவர்கள் வரும் வரை அவரிடம் பேசிக் கொண்டு இருந்ததில், அவர் செய்துள்ள தமிழ் இலக்கியப் பணிகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

நிகழ்ச்சிகள்:

(படம் மேலே) த.ரேவதி, மூட்டாம்பட்டி ராஜூ, நா.விச்வநாதன் மற்றும் பவல்ராஜ்

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை செல்வி த.ரேவதி அவர்கள் வரவேற்றுப் பேசினார். கவிஞர் மூட்டாம்பட்டி ராஜூ அவர்கள் தலைமை தாங்கி அருமையான உரை நிகழ்த்தினார்: இடையிடையே இலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளுக்கு விமர்சனமும் தந்தார். கூட்டத்திற்கு வந்திருந்த அன்பர்களும் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் முன்னிலை வகித்தார். (வந்தவுடன் நான் முன்பதிவு செய்து வைத்து இருந்த பாறை ஓவியங்கள்’ நூலின் இரண்டு பிரதிகளை என்னிடம் தந்தார். அவருக்கு நன்றி) 

கவிஞர்கள் மா.ஸ்ரீ.மலையப்பன், மீரா.செல்வகுமார், இ.மீனாட்சி சுந்தரம், ஆகியோர் கவிதை வாசித்தனர். ஆசிரியர் கு.ம.திருப்பதி கட்டுரை ஒன்றை வாசித்தார்.

(படம் மேலே) தமிழாசிரியர் குருநாத சுந்தரம் அவர்கள் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நூலினைப் பற்றிய தனது பார்வையைச் சொன்னார்.

(படம் – மேலேஆசிரியர் மகாசுந்தர் அவர்கள் ’வழக்குரை காதை – மீள்பார்வை’ என்ற தலைப்பில் உடல்மொழிகளோடு ஒரு பிரசங்கம் தந்தார். (படம் -நன்றி ஆசிரியை கீதா)

(படங்கள் - மேலே கடைசியில் உள்ள இரண்டு படங்களும் – வீதி வாட்ஸ்அப் குழுவில் மாலதி அவர்கள் பகிர்ந்தது – நன்றி) கவிஞர் ஆசிரியை தா.மாலதி அவர்கள் ‘’கருகித் தளிர்த்த துளிர்’ என்ற தலைப்பில் தான் எழுதிய சிறுகதை ஒன்றைச் சொன்னார்.

(படம் மேலே) வீதிக்குப் புதுமுகமாக வந்த கவிஞர் இந்துமதி பாரதியாரின் ‘காக்கைச் சிறகினிலே’ பாடலை வாசித்தார்.

(படங்கள் -மேலே) கூட்டத்தில்

(படம் மேலே) பெரியவர் தோழர் செம்பை மணவாளன் அவர்கள் தன்னுடைய  அனுபவங்களைச் சொன்னதோடு, எல்லோரும் தமிழில் கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சிறப்பு விருந்தினர்:

நேற்றைய இலக்கிய சந்திப்பில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தஞ்சை திரு நா.விச்வநாதன் அவர்கள், இந்திய அஞ்சல் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். கவிஞர் மற்றும் எழுத்தாளர். தஞ்சையின் ஐநூறு ஆண்டு கால வரலாற்றை மையமாக வைத்து `லட்சுமிராஜபுரம்’ என்ற நாவலொன்றை எழுதி வருகிறார். தனது சிறப்புரையில், வீதி – இலக்கியக் களத்தினைப் பாராட்டிய அவர் ” சிறப்பு விருந்தினர்களை காக்க வைக்காமல், முன்னதாகவே பேச அழைக்க வேண்டும் ” என்று ஒரு கருத்தைச் சொன்னார். யோசிக்க வேண்டிய ஒன்று.

( கீழே உள்ள படம் -நன்றி ஆசிரியை கீதா)


இந்த மாத கூட்டத்தின் அமைப்பாளர்களுள் ஒருவராகிய ஆசிரியர் திரு பவல்ராஜ் அவர்கள் நன்றி கூறினார்.

Wednesday 17 August 2016

சமயபுரம் – நண்பர்களின் அன்னதானம் (2016)



நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை (15.08.16), இந்திய சுதந்திர தினத்தன்று பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்கும் திருத்தலத்தில், கடைவீதியில்  29 ஆவது வருடமாக ஒரு அன்னதானம். ஆண்டுதோறும் நண்பர்கள் செய்து வருவது. நான் கடந்த ஒன்பது வருடங்களாக அவர்களோடு இணைந்துள்ளேன். திரும்பத் திரும்ப இதே விஷயத்தைப் பற்றி வருடம் தோறும் எழுத வேண்டுமா? என்று எனக்குள் ஒருவன் கேட்டான். அன்று புதுக்கோட்டையில் “வரலாறு முக்கியம் நண்பரே!” என்று என்னிடம் சொன்ன கவிஞர் வைகறையின் குரல் மனதுக்குள் ஒலித்ததால் இந்த கட்டுரை.

அன்னதானமும் அரசின் கட்டுப்பாடுகளும்:

முன்பெல்லாம் ஸ்ரீரங்கம். சமயபுரம் போன்ற இடங்களில்; தனிப்பட்ட முறையில் அன்னதானம் என்பது மதிய உணவாகவே இருந்தது. சிலர் ஒரு பெரிய பந்தல் போட்டு அல்லது கல்யாண சத்திரங்களை வாடகைக்கு எடுத்து சாப்பாடு போட்டனர். தயிர்சாதம், சாம்பார் சாதம் என்று கொடுத்தனர். தமிழ்நாடு அரசு, திருக்கோயில்களில் அன்னதானம் என்ற திட்டத்தைத் தொடங்கிய பிறகு, நிறையபேர் மதிய உணவை அன்னதானமாக வழங்குவதற்கு பதிலாக, திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குவதோடு நின்று விட்டனர். எங்களது நண்பர்கள், ஆரம்பத்தில் புளிசாதத்தோடு , இனிப்பு பன், தண்ணீர் பாக்கெட், சூடான பாதாம்பால் கொடுத்து வந்தனர். மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் கடுமையாக்கப் பட்டதால். தமிழக அரசு அன்னதானம் செய்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ள, கோகுல சமாஜம் அறக்கட்டளை மூலம், சமயபுரம் கடைவீதியில் பக்தர்களுக்கு காலை உணவை (இட்லி, பொங்கல், காபி) அன்னதானமாக நண்பர்கள் வழங்கினார்கள்.. அப்போது என்னால் எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் மட்டும் இங்கே. 
 
சமயபுரம் கடைவீதியில்:

(படம் மேலே) அன்னதானம் நடந்த கருப்பண்ண சாமி கோயில் வாசல்






 



(படம் மேலே) பால்குடம் கொண்டு வந்த பக்தர்கள் தேர்.

சமயபுரம் கோயில் முன்பு:

எப்போதுமே, வருடம் முழுவதும், சமயபுரம் கோயில் பக்தர்களால் நிரம்பி வழியும். கோயிலுக்குள் நுழைய முடியாது. அம்மன் தரிசன வரிசையும் நீண்டு காணப்படும் எனவே பல பக்தர்கள் கோயில் வாசலிலேயே (கிழக்கு) தேங்காய் உடைப்பு, சூடம் கொளுத்துதல், அகல் விளக்கு ஏற்றுதல் என்று வழிபட்டு சென்று விடுவார்கள். நானும் அவ்வாறே அன்று சூடம் ஏற்றி வழிபட்டு வந்தேன். அங்கு கோயில் வாசலில் எடுக்கப்பட்ட சில படங்கள் (கீழே) 





ஒரு முக்கிய அறிவிப்பு:

சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, 11.07.2016 முதல் மூலவரான அம்மன் தரிசனம் கிடையாது. அதற்குப் பதில் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மனின் வண்ணப்படம் மட்டுமே தரிசனமாக வைக்கப்பட்டுள்ளது. எனவே சமயபுரம் அம்மனை நேரடி தரிசனம் செய்ய விரும்புபவர்கள் குடமுழுக்கு நடந்த பின்னர் (தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை) செல்வது நல்லது. (படம் கீழே)


                                                                                                                                                                     
இதன் தொடர்ச்சியான முந்தைய பதிவுகள்:

சமயபுரம் கோயில்: நண்பர்கள் அன்னதானம் http://tthamizhelango.blogspot.com/2012/08/blog-post_13.html
சமயபுரத்தில் நண்பர்களின் அன்னதானம் (2013) http://tthamizhelango.blogspot.com/2013/08/2013.html   
அன்னதானம் செய்ய அரசு கட்டுப்பாடு http://tthamizhelango.blogspot.com/2014/02/blog-post_8.html 
சமயபுரம் - நண்பர்களின் அன்னதானம் (2014) http://tthamizhelango.blogspot.com/2014/08/2014.html 
சமயபுரம் – நண்பர்கள் செய்த அன்னதானம் (2015) http://tthamizhelango.blogspot.com/2015/08/2015.html 

Saturday 13 August 2016

தருண் விஜய் – பாராட்டுவோம்



ஹரித்துவாரில் கங்கைக்கரையில் திருவள்ளுவர் சிலையை எந்த அரசியல் கட்சி வைத்தால் என்ன? பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் அதிலும் வழக்கம் போல அரசியல். நம்மூர் தமிழ் மக்கள் வடக்கே போய் வள்ளுவர் சிலையை வைத்து விட முடியுமா? ஆனாலும் வள்ளூவர் மீதும் தமிழின் மீதும்  உள்ள மரியாதையின் காரணமாக, வட மாநில (உத்தரகாண்ட்) ராஜ்யசபா எம்.பி திரு தருண் விஜய் அவர்கள் அங்கே திருவள்ளுவர் சிலையை நிறுவ முயற்சி எடுத்தார். உடனே அங்கே உள்ள சாதுக்கள் எதிர்ப்பு என்று செய்தி வருகிறது. இங்கு தமிழ்நாட்டிலும் சிலர் இதற்கு நோக்கம் கற்பித்து அரசியல் பேசுகிறார்கள்.

கர்நாடகாவில் வள்ளுவர் :

அண்டை மாநிலமான கர்நாடகாவில்,  பெங்களூரில், தமிழ்ச்சங்கம் சார்பில், அல்சூர் ஏரிக்கரை பூங்காவில், 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை உடனே திறக்க முடிந்ததா? ( இத்தனைக்கும் கன்னடம் நமது திராவிட மொழிகளில் ஒன்று என்று தமிழர்களாகிய நாம் பெருமை பேசி வருகிறோம்; பெங்களூரிலும் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள்..) அப்போது கர்நாடக முதல்வராக இருந்த பங்காரப்பா ( காங்கிரஸ் ) மற்றும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், திருவள்ளுவர் சிலை 18 வருடங்களுக்கும் மேலாக சாக்கால் சுற்றப்பட்டு இருந்தது. பின்னர் அப்போதைய தமிழக முதல்வர், கலைஞர் கருணாநிதி அவர்களது முயற்சியால் அவரது ஆட்சிக்காலத்தில், பி.ஜே.பி முதலமைச்சராக எடியூரப்பா இருந்த போதுதான் ( ஆகஸ்டு 9, 2009) திறந்து வைக்கப்பட்டது. அதேபோல கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் (Sarvajna) உருவச்சிலை இங்கு சென்னையில் திறந்து ( ஆகஸ்டு 13, 2009) வைக்கப்பட்டது. கவிஞர் சர்வக்ஞர் தமிழ் சித்தர்கள் போன்று ஒரு சீர்திருத்தவாதி என்பதில் மிக்க மகிழ்ச்சிதான்.

வடக்கே என்ன பிரச்சினை:

பொதுவாகவே வட இந்தியர்களுக்கு, தமிழ்நாடு என்றாலே அவர்கள் இந்தி எதிர்ப்பாளர்கள் என்ற பரவலான எண்ணம் உண்டு.(தமிழ்நாட்டில் இந்தி படிப்பதை யாரும் எதிர்க்கவில்லை; அரசியல் அதிகாரத்தின் துணையோடு இந்தி இங்கு தமிழகத்தில் கட்டாய திணிப்பு செய்வதுதான் எதிர்க்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தி.மு.க மட்டுமல்ல, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பிற கட்சி தலைவர்களும் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்தனர். தி.மு.க முன்னணியிலிருந்து முன்னெடுப்பு செய்தது.என்பது வரலாறு)

மேலும் திருவள்ளுவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவர் சிலையை அங்கே வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று ஒரு கருத்து சொல்லப்பட்டது. திருவள்ளுவர் இன்ன ஜாதி என்றோ அல்லது இன்ன மதத்தினர் என்றோ இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை. வள்ளுவரைப் பற்றியும் இன்னும் சில புலவர்களைப் பற்றியும் இங்கு சொல்லப்படும் கதைகளுக்கு வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடையாது. பழைய தமிழகவரலாற்றின் பெரும்பகுதி இவ்வாறே இருக்கிறது. அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கோ அல்லது மதத்திற்கோ சொந்தமானவர் அல்ல. அவர் ஒரு உலகப் பொதுமறையாளர்.  

இப்பேர்பட்ட சூழ்நிலையில் திரு தருண் விஜய் அவர்கள் வடக்கே வள்ளுவர் சிலையை நிறுவ எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டத் தக்கது ஆகும். 

தருண் விஜய் பற்றி:


யார் இந்த தருண் விஜய் என்று பார்க்கும்போது அவரைப் பற்றிய விவரத்தை இணையதளங்களில் காண முடிகிறது. டேராடூனில் (உத்தர்காண்ட்) மார்ச் 2 ஆம்தேதி 1956 இல் பிறந்த இவர், பி.ஏ. பட்டதாரி; எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர். பாஞ்சசான்யா என்ற ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையின் எடிட்டராக இருந்தவர். நூல்கள் சிலவும்  எழுதியுள்ளார். பாரதீய ஜனதா கட்சி சார்பாக, உத்தரகாண்ட் ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தி இந்து (தமிழ்) பத்திரிகையில் அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி இங்கே.

தமிழ் மீது உங்களுக்குப் பாசம் உருவானது எப்படி

பெரும்பாலான வட இந்தியர்கள் இந்தி மொழி மீது உள்ள கர்வத்தினால், மற்ற மொழிகளை விமர்சிக் கிறார்கள். இதனால், நம் நாட்டின் மற்ற மொழிகளையும், ‘தமதுஎன ஏற்காத குணம் அவர்களிடம் இல்லாததை உணர்ந்தேன். இதைச் சரிசெய்ய விரும்பிய எனக்கு மற்ற தென் இந்திய மொழிகளில் தமிழின் மீதான ஆர்வம் அதிகமானது. தமிழின் பாரம்பரியம், கலாச்சாரம், ஒழுக்கம் போன்றவைதான் இதற்குக் காரணங்கள். தமிழை மற்ற மொழி என்று கூறாமல், எனது தாயின் மொழிகளில் ஒன்று என ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

மாநிலங்களவையில் இந்தி மட்டும் இருக்கும் தேசிய மொழிப் பட்டியல்களில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் எழுப்பிய குரலுக்குக் கிடைத்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ன?

எதிர்ப்பை விடப் பல மடங்கு ஆதரவுதான் எனக்கு அதிகமாகக் கிடைத்தது. தமிழகத்திலிருந்து திமுக தலைவர் மு. கருணாநிதி என்னைப் பாராட்டித் திருக் குறளைப் பரிசாக அளித்திருக்கிறார். ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் உட்படப் பலர் தொலைபேசி மூலம் அழைத்து பாராட்டினார்கள். அதிமுக சார்பிலும் அதன் எம்பிக்கள் பாராட்டுக் கடிதங்கள் எழுதியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வட இந்தியாவில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் நேரில் வந்து என்னைச் சந்தித்து நெகிழ்ந்துபோனார்கள்

எதிர்ப்புத் தெரிவித்த மிகச் சிலரிடம், தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அவர்கள் மனதையும் மாற்றுவேன்.  

(நன்றி: தி இந்து (தமிழ்) தேதி 14.செப்டம்பர் 2014 )

பாராட்டுக்குரியவர்:

ஆனாலும் திரு. தருண் விஜய் அவர்கள் அவர் ஒரு பி.ஜே.பி அரசியல்வாதி என்பதால், அவர் தமிழுக்கு செய்கின்ற நல்ல காரியங்களுக்கு உள்நோக்கம் கற்பித்து எதிர்ப்பவர்களும் இங்குண்டு. என்னைப் பொருத்தவரை, இவர்களது கருத்துக்களை புறந்தள்ளி விட்டு, வடக்கே வள்ளுவர் சிலையை நிறுவும் திரு. தருண் விஜய் அவர்களை பாராட்ட வேண்டியது நமது கடமை என்றுதான் சொல்வேன். 

                                                               xxxxxxxxxxxxxxxxxxxxxxx

( ஹரித்வாரில் தொடர்மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் சிலை நிறுவும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இம்மாத (ஆகஸ்ட் 2016) இறுதியில் திறப்புவிழா நடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது – புதிய தலைமுறை செய்தி 06.08.2016 / பார்க்க https://www.youtube.com/watch?v=I1GlIm6RbGc )

                    (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)