Monday 23 February 2015

ஸ்ரீரங்கம் - வலைப் பதிவர்கள் சந்திப்பு (2015)


சென்ற திங்கட் கிழமை மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K (திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்) செல்போனில், பெங்களூரிலிருது திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் ஸ்ரீரங்கம் வரப்போவதாகவும், வலைப்பதிவர்கள் சந்திப்பு ஒன்று நடைபெறும் என்றும், நாள் இடம் நேரம் பின்னர் தெரிவிப்பதாகவும், அவசியம் வரவேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். 

அன்றே மூத்த வலைப்பதிவர் திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களும் என்னோடு தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தார். இன்னொரு மூத்த வலைப்பதிவர் திருமதி ருக்குமணி சேஷசாயி அவர்கள் இல்லத்தில் (வடக்கு வாசல் , ஸ்ரீரங்கம்) 22.02.15 ஞாயிறு அன்று சந்திப்பு நடைபெறும் என்றும் அவர் சொன்னார். மேலும் V.G.K அவர்கள் “ நான் தங்களிடம் ஃபோனில் இப்போது பேசியபடி மிகச்சரியாக 3.45க்கு மேல் 4 மணிக்குள் என் இல்லத்திற்கு தாங்கள் வந்தால் போதும்.  நம் இருவரையுமே திருமதி. ராதாபாலு அவர்கள், தன் சொந்தக்காரில் அழைத்துச் செல்வதாகச் சொல்லி இருக்கிறார்கள். என்றும் தெரிவித்து இருந்தார். சொன்னபடி நான் திரு V.G.K அவர்களது இல்லத்திற்கு மாலை 4 மணிக்கு சென்றேன். திருமதி. ராதாபாலு அவர்கள் எங்கள் இருவரையும் அவருடைய காரில், பதிவர்கள் சந்திப்பு நிகழும் திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள் இல்லம்”விக்னேஷ் அருணோதயா“ (ஸ்ரீரங்கம்) அழைத்துச் சென்றார்கள். பிறகு திரும்பி வரும்போதும் அப்படியே எங்கள் இருவரையும் V.G.K அவர்களது இல்லம் வரை கொண்டுவந்து விட்டார்கள். திருமதி. ராதாபாலு அவர்களுக்கு அநேக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலக்கிய வட்டம்

அங்கே ஒரு நல்லதொரு இலக்கிய வட்ட சந்திப்பு திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களது இல்லத்தில் நடந்தது. அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள்
திருமதி. ரஞ்சனி நாராயணன் மற்றும் அவர் கணவர்
திருமதி. கீதா சாம்பசிவம்
திரு VGK  (வை.கோபாலகிருஷ்ணன்)
ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி
திரு. ரிஷபன்
திருமதி ராதாபாலு  
திருமதி. ஆதி வெங்கட் 
செல்வி. ரோஷ்ணி
தமிழ் இளங்கோ ஆகிய நான்
திரு மௌலி (அஷ்டாவதனி; வலைப்பதிவர் மாதங்கியின் தந்தை)

நூல்கள் அன்பளிப்பு:

இந்த இலக்கிய வட்டத்தில் மூன்று வலைப் பதிவர்கள், தாங்கள் எழுதிய நூல்களை அங்கு வந்திருந்த அனைவருக்கும் அன்புடன்  வழங்கினார்கள்.

திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள் தான் எழுதிய “திருக்குறள் கதைகள் என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார்.


திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள் தான் எழுதிய “விவேகானந்தர் மற்றும் “மலாலா ஆயுத எழுத்து ஆகிய நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்கள்.

ஆரண்யநிவாஸ்  திரு. ராமமூர்த்தி அவர்கள் தான் எழுதிய ஆரண்ய நிவாஸ் என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார்.

கலந்துரையாடல்:

நேற்றைய சந்திப்பினில், எனக்குத் தெரிந்த ஒரே வலைப் பதிவாளர் திரு V.G.K அவர்கள் மட்டுமே. எழுத்தாளர் ரிஷபனும் ஆரண்யநிவாஸ்  ராமமூர்த்தி அவர்களும் அவர்களுக்கே உரிய புன்முறுவலோடு நல்ல நகைச்சுவை கருத்துக்களை தங்களது உரையாடலில் சொல்லி கலகலத்தார்கள். இவர்களோடு ரஞ்சனி நாராயணனின் வீட்டுக்காரரும் சேர்ந்து கொண்டார். திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள தனது இல்லம் வந்த (வலைப் பதிவர்களை) விருந்தினர்களை சிறப்பாக கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகம் பேசாது, செயல்பட்டுக் கொண்டிருந்தார். மற்றைய சகோதரிகளும் எல்லோரும் நன்றாகவே வலையுலகைப் பற்றி அலசினார்கள்.


(படம் மேலே - இடமிருந்து வலம்) நிற்பவர்கள்: தி.தமிழ் இளங்கோ, மௌலி, ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, V.G.K., அமர்ந்து இருப்பவர்கள்:அம்மா மடியில் ரோஷ்ணி, ஆதி.வெங்கட், ருக்மணி சேஷசாயி, நாராயணன், ரஞ்சனி, கீதா சாம்பசிவம், ராதாபாலு - (படம் உதவி:(நன்றியுடன்) திரு V.G.K )

பொதுவாகவே சில பெண் பதிவர்கள் வலையுலகம் வந்தும் சமையல்கட்டை விட்டு வெளியே வராமல், சமையல் செய்வதைப் பற்றியே எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியாத்தனமாய் ஒரு கருத்தை அங்கே அடியேன் சொல்லி விட்டேன். உடனே, அங்கிருந்த சகோதரிகள் அனைவரும் அந்த கருத்தினை சுடச்சுட வறுத்து எடுத்து விட்டனர்.

அஷ்டாவதனி திரு மௌலி அவர்களின் நிகழ்ச்சிகளை, தனது இல்லத்தில் ஒருநாள் நடத்தப் போவதாகவும், இங்கு வந்திருந்த வலைப்பதிவர்கள் அனைவரும் தமது குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் வரவேண்டும் என்றும் ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி அவர்கள் அழைப்பு விடுத்தார். எனவே இன்னொரு வலைப்பதிவர் சந்திப்பினை திருவானைக்கோவிலில் இந்த ஆண்டே எதிர் பார்க்கலாம்.

கலந்துரையாடலுக்கு பின்னர் திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நல்ல டிபனும் காபியும் கொடுத்து உபசரித்தார். 

எழுத்தாளர் ரிஷபன் தனது புகைப்படம் வலைப்பதிவினில் வருவதை விரும்பாதவர் என்று V.G.K ஏற்கனவே தனது பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தார். மற்றவர்களும் எப்படி என்று எனக்கு தெரியாது. எனவே அவரிடம்  நீங்களே படங்கள் எடுத்து, உங்கள் பதிவினில் வெளியிடுங்கள்  என்று கேட்டுக் கொண்டு இருந்தேன். எனவே நான் அதிகம் படங்கள் ஏதும் எனது கேமராவில் எடுக்கவில்லை. அவரும் ஸ்ரீரங்கத்தில் நடந்த வலைப் பதிவர்கள் சந்திப்பு பற்றி, அழகிய படங்களுடன், அவருக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் தந்துள்ளார். இன்னும் அன்றைய வலைப்பதிவர் சந்திப்பினில் கலந்து கொண்ட மற்றவர்களும் அந்த இனிய நிகழ்வை பதிந்துள்ளனர். அவற்றைப் படிக்க கீழே உள்ள இணைய தளங்களில் (CLICK) சொடுக்கவும்.


பதிவர் மாநாடு ஸ்ரீரங்கத்தில்! (கீதா சாம்பசிவம்)

திருவரங்கத்து குட்டி பதிவர் மாநாடு!!  (ஆதி வெங்கட்)



ஸ்ரீரங்கம் பதிவர் மாநாடு! (ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி)



சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-3 (வை.கோபாலகிருஷ்ணன்)

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-4
(வை.கோபாலகிருஷ்ணன்)

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-5
(வை.கோபாலகிருஷ்ணன்)

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-6
(வை.கோபாலகிருஷ்ணன்)

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! நிறைவுப்பகுதி-7
(வை.கோபாலகிருஷ்ணன்)

 


Monday 16 February 2015

எனக்கு வந்த மோசடி குறுஞ்செய்தி (SCAM SMS)




இப்போதெல்லாம் மோசடி செய்பவர்கள் செல்போனை துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். அடிக்கடி மோசடியான எண்ணத்துடன் விளம்பரங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் (SMS)  வருகின்றன. சாதாரணமாக இதுமாதிரி வரும் “பெயரிலி (ANONYMOUS ) செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. ஏனெனில் லாட்டரியில் உங்களுக்கு கோடிக் கணக்கில் பரிசு விழுந்துள்ளது என்று செய்தி வந்தால் நம்பும்படியாகவா இருக்கிறது. அதுவும் வெளிநாட்டு லாட்டரியில். எனவே இதுமாதிரி வரும் குறுஞ்செய்திகளை (SMS) உடனுக்குடன் அழித்துவிடுவது வழக்கம்.
                                                                 

                                                                
சென்ற வாரம் 91 88 82 230415 என்ற எண்ணிலிருந்து, எனது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) ஒன்று வந்தது. அதில் இருந்த செய்தி இதுதான்.

Pls contact me on this email: (c88@careceo.com) for a matter which requires your urgent attention but cannot be discussed over the phone. Sorry for my approach.

படித்தவுடனேயே இது ஒரு மோசடி குறுஞ்செய்தி (SCAM SMS) என்பது புரிந்து விட்டது. ஆனாலும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. சரி, யாரோ நம்மிடம் விளையாடிப் பார்க்கிறார்கள் என்று தெரிந்தது. இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக யார் என்று பார்க்க ஆர்வம் வந்தது. வழக்கம் போல நம்ம கூகிளில் (அப்புறம் GOOGLE  எதற்கு இருக்கிறது ) cc88careceo.com என்று கொடுத்து தேடிப் பார்த்தேன். அங்கே போய் பார்த்ததில் SCF எனப்படும் SCAM CALL FIGHTERS என்ற ( www.scamcallfighters.com)  இணையதளம் கண்ணில் பட்டது. அங்கே,

8882724325 என்ற எண்ணிலிருந்து உங்களை அழைத்தது யார்? உங்களை ஏமாற்றப் பார்க்கிறார்களா? இதுவும் ஒருவகை மோசடி அழைப்பா? மோசடிப் பேர்வழிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் “

என்று எச்சரிக்கை செய்தனர். இந்த செய்தி பற்றி சொல்ல வந்த, முதன்மை துப்பறிவாளர் இது மாதிரியான செய்திகளுக்கு, தெரிந்தோ தெரியாமலோ மறுமொழி (REPLY) ஒன்றை நீங்கள் அனுப்பினால், அவர்கள் பொய்யான சட்ட அறிவிப்பு (LEGAL NOTICE) ஒன்றினை உங்களுக்கு அனுப்பி, சிக்கலில் மாட்டி விட்டு பணம் பறிக்க முயலுவார்கள். என்று எச்சரிக்கை செய்கிறார்.

                                                            
உங்கள் செல்போனுக்கு மோசடியாக வரும் சில குறுஞ்செய்தி வார்த்தைகள் இவை. 

“Your mobile number has won $1.5 Million in  ... ...

“You have won $1000 … … Gift card. Enter code 5566 at ... ...

“You have been selected for interview with … … …”

“You have won a free cruise! Visit  website to claim your free cruise!”

மேலும் அந்த இணைய தளத்தில், இதுபோன்ற பல மோசடி குறுஞ்செய்திகளைப் பற்றியும், அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் நிறைய சொல்லி இருந்தார்கள். இந்த இணையதளம் சென்றால் இன்னும் அதிக விவரங்களைப் பார்க்கலாம்.

இது மாதிரியான மோசடிசெய்தி ஆசாமிகளிடமிருந்து தப்பிப்பது எப்படி? ஒரே வழி, இந்த மாதிரியான செய்திகளுக்கு மறுமொழி ஏதும் கொடுக்காமல், அவற்றை நீக்கி விடுவதுதான். எனவே நான் எனக்கு வந்த குறுஞ்செய்தியை யார் அனுப்பி இருப்பார்கள், எங்கே இருக்கிறார்கள், என்ன செய்வது என்று குழம்பாமல் மேற்கொண்டு தொடர்ந்து செல்லவில்லை. ஏனெனில் இவ்வாறு தொடர்ந்து செல்வது சிலசமயம் வேறு சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும். எனவே ஒரே முடிவாக எனக்கு வந்த மோசடி குறுஞ்செய்தியை வழக்கம் போல நீக்கி விட்டேன்.  



Tuesday 10 February 2015

திருமழபாடி குடமுழுக்கு (2015)



பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
                                                                                -  சுந்தரர் (தேவாரம்)



சொந்த ஊர் திருமழபாடி என்பதால், ஒரு மாதத்திற்கு முன்பே, ஊரிலிருந்து சொந்தக்காரர் ஒருவரும் மற்றும் கோயில் திருப்பணிக் கமிட்டியில் இருந்த ஒருவரும், அப்பா வீட்டிற்கு வந்து மகா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சென்றார்கள். எல்லோரும் குடும்பத்துடன் திருமழபாடிக்கு செல்ல வேண்டும் என்பது விருப்பம். ஆனால் மகனுக்கு அடுத்தநாள் கல்லூரித் தேர்வு என்பதால், எனது மகனும் மனைவியும் வரவில்லை. எனது அப்பா-அம்மா இருவராலும் வர இயலவில்லை. நான் மட்டும் குடமுழுக்கு நாள் அன்று (08.02.2015, ஞாயிற்றுக் கிழமை) காலையில் திருச்சியிலிருந்து கிளம்பி சென்று வந்தேன். நான் சென்ற நேரம் அப்போதுதான் விழா முடிந்து மக்கள் கலைந்து கொண்டு இருந்தார்கள். நான் திருமழபாடி கோயில் கோபுர தரிசனம் செய்து விட்டு, கோயிலுக்குள் செல்ல முயன்றேன். கோயிலுக்குள் உள்ளே நுழைய முடியவில்லை. ஒரே மக்கள் வெள்ளம். இன்னொருநாள் வந்து கொள்ளலாம் என்று திரும்பி விட்டேன். அப்போது நான் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே.
                              
















குடமுழுக்கு செய்திகள்:

08.02.2015, ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்ற, திருமழபாடி அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் பற்றி தமிழ் தினசரிகள் சிறப்பாக செய்திகள் வெளியிட்டு இருந்தன. தினமணியில் வந்த செய்தி இது.

அரியலூர் மாவட்டம், திருமழபாடி ஸ்ரீசுந்தராம்பிகை சமேத ஸ்ரீ வைத்தியநாத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் திருப்பதிகங்கள் பாடி வழிபட்ட சிறப்பு வாய்ந்ததும், நந்திஎம்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும்.

மேலும்,மார்க்கண்டேய முனிவருக்காகச் சிவபெருமான் கையில் மழுப்படையேந்தி திருநடனம் புரிந்த பெருமை உடையதும், சோமாஸ்கந்தரின் வடிவம் ஒரே கற்சிலையில் அமையப் பெற்றுள்ள சிறப்புடையதும் திருமழுவாடி என்று அழைக்கப்படும் திருமழபாடியில் உள்ள இச்சிறப்பு மிகு திருத்தலத்தில் நீர்மையன், வஜ்ரதம்பேஸ்வரர், மழுவாடி ஈசர், திருமழபாடி மகாதேவர் ஆகிய திருப்பெயர்களுடன் அருள்பாலிக்கும் அருள்மிகு சுந்தராம்பிகை உடனமர் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயிலின் ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

தருமபுர ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம், 24-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் அதிபர் காசிவாசி முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள், மற்றும் திருமழபாடி ஸ்ரீஸ்ரீ சுயம்பிரகாச சுவாமிகள் மடாலயத் தலைவர் சிவானந்த சுவாமிகள் ஆகியோர் அருளாசியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, ஸ்ரீ வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது.

இதில், அரியலூர், திருமழப்பாடி, திருமானூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
                           -  (நன்றி : தினமணி 09.02.2015)
       
வலைத்தளங்களில்:

தஞ்சையம்பதி என்ற வலைத்தளத்தில் சகோதரர் துரை செல்வராஜூ அவர்கள்  கும்பாபிஷேக தரிசனம் என்ற பதிவில்
திருமழபாடி குடமுழுக்கு சம்பந்தமாக படங்களுடன் அதிக விவரமாக எழுதியுள்ளார். அவருக்கு நன்றி.

திருமழபாடியைப் பற்றிய முந்தைய எனது வலைப்பதிவு ithu
நானும் எனது ஊரும் (தொடர் பதிவு) - திருமழபாடி

Saturday 7 February 2015

அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்களுக்கு




தமிழ் வலையுலகில் அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது. அவரது “சாமியின் மன அலைகள் ( இப்போது மன அலைகள்) என்ற பதிவு அவ்வளவு பிரசித்தம். தமிழ்மணத்தில் இன்றைய இடுகைகள் என்ற இடத்தில் மட்டுமல்லாது, மறுமொழிகள், இன்று/இந்த வாரம் சூடான இடுகைகள் என்ற பகுதிகளிலும் இவரது பெயர் மின்னிக் கொண்டே இருக்கும். சுவாரஸ்யமான இவரது பதிவுகளில் வரும் பின்னூட்டங்களை படிப்பதற்கென்றே அங்கெல்லாம் சென்று மீண்டும் மீண்டும் அவரது பதிவினையும் மற்றும் கிண்டலான மற்றவர்களது கருத்துரைகள் மற்றும் இவரது நகைச்சுவையான பதிலடிகளையும் ரசித்துப் படிப்பது வழக்கம். நானும் அவ்வப்போது கருத்துரைகள் எழுதுவது உண்டு. சற்று உற்று இவரது பதிவுகளை பார்த்தோமானால் நிறையபேர் இதே போன்று ரசிப்பதைக் காணலாம். ஆகக் கூடி தமிழ் வலையுலகை எப்போதும் கலகலப்பாக வைத்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்களில் இவரும் ஒருவர்.

சில நாட்களாகவே கண்ணுக்கு தெரியாத சில பின்னூட்ட ஆசாமிகள் மீது அவருக்கு கோபம் போலிருக்கிறது.  லாலா மிட்டாய் கடைக்காரன் திடீரென்று ஷட்டரை இழுத்து கடையை பூட்டியது போல http://swamysmusings.blogspot.com/2015/01/blog-post_27.html நான் விடுதலை ஆகிறேன்  என்று தனது கருத்துரைப் பெட்டியை (COMMENTS BOX) மூடிவிட்டு,

இன்றுடன் என் பதிவில் இருக்கும் பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டேன். இதுகாறும் என் பதிவுகளில் பாராட்டியும் எதிர்கருத்துகளைக் கூறியும் என்னை உற்சாகப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

என்று அறிவிப்பும் செய்து விட்டார். சில கடைகளில் “இன்று ரொக்கம் நாளை கடன் என்று அட்டை தொங்குவது போல, அவரது வலைத்தளத்தில் இந்தத் தளத்தில் பின்னூட்டப் பெட்டி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இப்போது அதனை எடுத்து விட்டார்.. இவருக்கு என்ன ஆதங்கம் என்பது பற்றி  பதிவுலகம்பற்றி என் சிந்தனைகள் http://swamysmusings.blogspot.com/2015/01/blog-post_16.html என்ற இவரது பதிவினில் தெரிந்து கொள்ள முடிகிறது.

இப்போதும் அவ்வப்போது பின்னூட்டம் இல்லாத இவரது பதிவுகளை தமிழ்மணத்தில் காண முடிகிறது. இருந்தாலும் முன்பு போல் அடிக்கடி மீண்டும் மீண்டும் படிக்கும் அளவுக்கு தமிழ்மணத்தில் காண இயலவில்லை. தமிழக அரசு விருது பெற்ற சில திரைப்படங்கள் வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு ஓடுவது போல தமிழ்மணத்தில், அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்களது மன அலைகள் வந்த வேகத்தில் ஒரே நாளில் மறைந்து விடுகின்றன. இது என்னைப் போன்ற அவரது வாசகர்களுக்கு ஒரு பெருங் குறையே.

அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் தனது வலைத்தளம்  தொடங்கிய புதிதில், அதற்கான காரணத்தை நதிமூலம் என்ற தலைப்பினில் (ஐந்து பதிவுகளில் 2009- பிப்ரவரி) நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். ஐந்தாவது பதிவினில்

// எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்கலாம் என்று இந்த வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறேன். இது சந்தோஷத்தை கொடுக்குமா அல்லது கஷ்டத்தை கொடுக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும். இதுதான் இந்த வலைத்தளத்தின் நதிமூலம்.//  ( http://swamysmusings.blogspot.in/2009/02/5.html )

என்று சொல்லுகிறார்.

எனக்குத் தெரிந்து, ஆரம்பம் முதல் அவரது பதிவுகளைப் படித்த வரையில், அவரது பதிவுகள் மகிழ்ச்சியையே கொடுத்துள்ளன. கஷ்டத்தைக் கொடுக்கவில்லை. எனவே அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் முன்பு போல தனது வலைத்தளத்தில் கருத்துரைப் பெட்டியை (COMMENTS BOX)  வைக்கும்படி (இது அவரது தனிப்பட்ட விருப்பு என்ற போதிலும்) கேட்டுக் கொள்கிறேன்.)



Tuesday 3 February 2015

ஒப்பாரிப் பாடல்கள்



திருச்சி டவுன் கடைவீதி பக்கம் போய் ரொம்ப நாளாகி விட்டது. அண்மையில் டவுன் பக்கம் போயிருந்த போது, சத்திரம் பஸ் நிலையம் அருகே (நேஷனல் ஹைஸ்கூல் வாசலில்) சினிமா பாட்டு, வசன புஸ்தகங்கள் விற்கும் பெரியவரிடம் “ என்னங்க நான் போன மாசம் எடுத்து வைக்கச் சொன்ன ரத்தக்கண்ணீர் வசன புத்தகம் வந்ததா? “ என்று கேட்டேன். அவர் இல்லைஎன்றார். அவரிடம்தான், முன்பு சில பழைய சினிமா பாட்டு, வசன புஸ்தகங்கள் வாங்கினேன். சரி, வந்தததற்கு அவரிடம் வேறு ஏதாவது வாங்குவோம் என்று, அவரது  தரைக் கடையை ஒரு பார்வை பார்த்ததில் “நவீன ஒப்பாரி கோர்வைஎன்ற புத்தகம் தென்பட்டது. வாங்கினேன்.

ஒப்பாரி வைத்தல்:

ஒருவர் இறந்து போனால் அவரது நெருங்கிய உறவினர்கள், அவரது உடலைச் சுற்றி ஒப்பாரி வைத்து அழுவது வழக்கம். அதிலும் கிராமத்தில் வயதான பாட்டிமார்கள் அழும்போது தனக்குத் தெரிந்த அல்லது பழைய பாடல்களை ஒப்பாரியாக சத்தமிட்டு பாடுவார்கள். இன்னும் சிலர் அவர்களாகவே இட்டுக் கட்டி பாடுவதும் உண்டு. இப்படி பாடுபவர்களை உறவினர்களே பாடச் சொல்லி கேட்டுக் கொள்வார்கள். அதே போல இந்த பாடல்களை கூலிக்கு பாடுபவர்களும் உண்டு. அவர்கள் மார்பிலே அடித்துக் கொண்டு பாடுவார்கள். இவர்களை “கூலிக்கு மாரடிப்பவர்கள்?என்று சொல்வார்கள். அப்போதெல்லாம் இந்த வேலையை, கூட்டமாக வாழும் ஒருசில அரவாணிகள் செய்தார்கள். (இப்போது இந்த வழக்கம் அவ்வளவாக இல்லை; படிப்படியாக குறைந்து வருகிறது) ஆனாலும் அத்தனை பேருக்கும், சொல்லி வைத்தாற்போல மளமள என்று கண்ணீர் வருவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவே இருக்கும்.

கூலிக்கு மாரடிப்பதை பற்றி ஒரு கிராமப்புற கதை ஒன்று உண்டு. ஒரு இழவு வீடு. எல்லோரும் அழுது கொண்டு இருக்கிறார்கள். அந்த வீட்டில் பாகற்காய் பந்தல் ஒன்று இருக்கிறது. பந்தலில் பாவற்காய்கள். அங்கே கூலிக்கு மாரடித்து அழ வந்த, இரண்டு பெண்டுகளில் ஒருவள் அழுகையோடு அழுகையாக பாடும்போது,

பந்தலிலே பாவக்கா
பந்தலிலே பாவக்கா

என்று குறிப்பாக, இன்னொருத்திக்கு தெரிவிக்கிறாள்.. அவளும்,

போகையிலே பாத்துக்குவோம்
போகையிலே பாத்துக்குவோம்

என்று பதில் பாட்டு பாடுகிறாள். இதனைக் கேட்டதும், வீட்டுக்கார அம்மாள்,

அது விதைக்கல்லோ விட்டிருக்கு
அது விதைக்கல்லோ விட்டிருக்கு

என்று எதிர்பாட்டு பாடினாளாம். ( இந்த கதையை அறிஞர் அண்ணா அவர்கள் தனது கம்பரசம் என்ற நூலில் மேற்கோளாக கூறியுள்ளார். அதன் சுருக்கம்தான் இங்கே தரப்பட்டுள்ளது)

இன்னும் சில ஊர்களில், ரொம்பவும் வயதானவர்கள் இறந்தால், மைக் செட் கட்டி, இரவு நேரம் டியூப் லைட் வெளிச்சத்தில் விடியவிடியவும் காலையிலும்,  ஒப்பாரி வைப்பார்கள். இன்னும் சிலர், சவுண்ட் சர்வீஸ் வைத்து, கிராமபோன் (  ) இசைத்தட்டு மூலம் ஏழூருக்கும் கேட்க ஒலிபரப்பிய நாட்களும் நினைவுக்கு வருகின்றன.

நவீன ஒப்பாரி கோர்வை

அன்றைய காலகட்டத்தில், ரத்ன நாயக்கர் & சன்ஸ் மற்றும் ஸ்ரீமகள் கம்பெனி வெளியிட்ட பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை, பஞ்ச தந்திரக் கதைகள், அல்லியரசாணி மாலை போன்ற கதை நூல்களை வாசித்து இருக்கிறேன். இன்றைக்கு அவை கிடைக்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு சிலர் அந்த பழைய பாணியில் வெளியிடும் ஒருசில கதைகள், பாட்டு புஸ்தகங்கள் இன்றும் சாலையோர கடைகளில் கிடைக்கின்றன.

நான் இப்போது, வாங்கியது ஸ்ரீ தனலட்சுமி புத்தக நிலையம், சென்னை வெளியிட்ட “நவீன ஒப்பாரி கோர்வைஎன்ற நூலாகும். உள்ளடக்கமாக பஞ்ச கல்யாணி ஒப்பாரி, சிங்கப்பூர் ஒப்பாரி, நவரச ஒப்பாரி என்று நிறைய ஒப்பாரி பாடல்கள். (LAMENTATIONS)  தகப்பனாருக்குப் புலம்பல், தாயாருக்குப் புலம்பல், புருஷனுக்கு புலம்பல், அண்ணனுக்குப் புலம்பல் என்று நூல் முழுக்க புலம்பல் மயம்.

பாடல்களை எழுதியவர் பூர்வீகம் ஒன்றும் தெரியவில்லை. நூலின் இடையிடையே, ஜெகமெங்கும் புகழ்பெற்ற இன்பகான கீதமணி, திரிசிரபுரம் ஸ்ரீமான் ஆர்டி.தங்கமுத்து தாஸ் அவர்கள் இயற்றிய என்று பாடலாசிரியர் புகழ் பாடக் காணலாம். அவர் எழுதிய சில வரிகள் இங்கே.

தகப்பனாருக்கு புலம்பல் இது _

வண்ணமணி தந்திமரம்
என்னைப் பெற்ற அப்பா
வார்த்தை மிக பேசுமரம்
என்னை ஈன்றவர் துரை
மாண்டீர் என்று
எனக்கு வார்த்தை வந்து கேட்டவுடன்
என்னைக் கொண்ட வல்லவரை முன்னே விட்டு
வந்து சேரும் முன்னாலே
நீங்கள் பெற்ர பெரியமகள் நின்றழுதால்
பேசாது வன்னிமரம்
நடுமகள் நின்றழுதால்
நடுங்காது வன்னிமரம்
கடமகள் நின்றழுதால்
கலங்காது வன்னிமரம்
நீபெற்ற செல்வி நான்
வாய்க்கரிசி கொண்டு
சீயக்காயரப்புக் கொண்டு
சீயாளி மேளம் சிதம்பரத்து மாலை கொண்டு
சிகப்புநிற பட்டுக் கொண்டு
நான் தாங்கி அடியை வைத்து
தலைமீது கையை வைத்து
ஓங்கியழுது வந்தால்
உங்கள் வாசல்
உயர்ந்த மரம் ஓசையிடும்  (பக்கம்.10)


ஒப்பாரி இலக்கியம்:

எனது கல்லூரி நாட்களில், நாட்டுப்புற இலக்கிய வரிசையில், நாட்டுப்புற பாடல்களின் தொகுப்புகளை படித்து இருக்கிறேன். அவற்றுள் சிறந்த தொகுப்பாக நா.வானமாமலை தொகுத்த, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்வெளியிட்ட “தமிழர் நாட்டுப் பாடல்கள் என்ற நூலினைச் சொல்லலாம். அந்த நூலின் இறுதியில் நிறைய ஒப்பாரிப் பாடல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. அதிலிருந்து ஒரு பாடல் இங்கே

ஆண்டுதோறும் மகளையும், மருமகனையும் அழைத்து மணைபோட்டு வரிசை கொடுத்து தந்தை வீட்டில் உபசாரம் செய்வது வழக்கம். தந்தை இறந்துவிட்டார். அடுத்த ஆண்டில் மாரியம்மன் திருவிழா வரும். ஆனால் அவளை அழைத்து அன்போடு பாராட்ட யார் இருப்பார்கள்?

          வாரம் ஒரு நாளு
         
வள்ளியம்மை திருநாளு
         
வள்ளியம்மை திருநாளில்
         
வரிசையிட ஒருவரில்லை
         
மாசம் ஒரு நாளு
         
மாரியம்மன் திருநாளு
         
மாரியம்மன் திருநாளில்
         
மாலையிட யாருமில்லை
         
மணைப்போட ஒருவரில்ல.

இலக்கிய நூல்களில்:

கம்பராமாயணத்தில் ஒருகாட்சி. இராவணனின் மகன் இந்திரஜித்தை, போரில் இலக்குவன் கொன்று அவனது தலையை இராமனின் காலடியில் சமர்ப்பிக்கிறான். இந்திரஜித்தின் தலையில்லாத முண்டம் போர்க்களத்தில் கிடக்கிறது. மகன் இறந்த செய்தி கேட்டு போர்க்களம் வந்த இராவணன் தனது மகன் இந்திரஜித்தின் உடலைக் கட்டிக் கொண்டு அழுகிறான். அப்போது  மகனே! எனக்கு நீ செய்யத் தக்க இறுதிக் கடன்களை எல்லாம் நான் உனக்கு செய்யும் நிலைமையை அடைந்தேன். என்னை விட இழிந்தவர்கள் யாருமில்லைஎன்று புலம்புகிறான்.

'சினத்தொடும் கொற்றம் முற்ற,
      இந்திரன் செல்வம் மேவ,
நினைத்தது முடித்து நின்றேன்;
      நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம்,
      ஏங்கி ஏங்கி, உனக்கு
நான் செய்வதானேன்! என்னின்
      யார் உலகத்து உள்ளார்?' 39

                    - கம்பராமாயணம் (யுத்த காண்டம், இராவணன் சோகப் படலம்)

அரிச்சந்திரன் புராணத்தில் “சந்திரமதி புலம்பல்பெரிதாக பேசப்படும். வாய்மையையே வாழ்க்கை நெறியாகக் கொண்டவன் மன்னன் அரிச்சந்திரன். விதிவசத்தால் அவன் ஒரு பக்கமும் அவனது மனைவி சந்திரமதியும் மகன் தேவதாசன் வேறு ஒரு பக்கமும் பிரிகின்றனர். ஒருநாள் மகன் தேவதாசன் பாம்பு கடித்து மரணம் அடைகிறான். அப்போது சந்திரமதி, அவனது உடலை மடியில் வைத்துக் கொண்டு ஆற்றாது புலம்புகின்றாள். இந்த புலம்பலை கிராமப்புறக் கூத்துக்கள் நடைபெறுகையில், உருக்கமாகச் சொல்லுவார்கள். நல்லூர் (இராமநாதபுரம்) வீரகவிராயர் இயற்றிய அரிச்சந்திர புராணம்என்னும்  நூலில் சந்திரமதி புலம்பும் பாடல் இது.

நிறை யோசை பெற்ற பறையோசை யற்று
   
நிரையாய் நிறைந்த கழுகின்
சிறையோசை யற்ற செடியூ டிறக்க
   
விதியா ரிழைத்த செயலோ
மறையோ னிரக்க வளநாட னைத்தும்
   
வழுவா தளித்த வடிவேல்
இறையோ னளித்த மகனே உனக்கு
  
மிதுவோ விதித்த விதியே.

                        - அரிச்சந்திர புராணம் (பாடல் எண். 998)