Monday 26 March 2012

கம்பனின் வாழ்வில் விதியின் பிழை!


எல்லோரும் இன்புற்று இருக்கவே விரும்புகின்றனர். “ நல்லவன் வாழ்வான், கெட்டவன் அழிவான் என்பதும் “ வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்; என்பதும் கேட்பதற்கும் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் உள்ளன. ஆனால் நடைமுறையில்? 


பல ஆயிரக் கணக்கான மனிதர்கள் ஒரு பெரிய திறந்த வெளியில் கூடியுள்ளனர். வெளியிலிருந்து ஒருவன் ஏதோ ஒரு வெறுப்பின் காரணமாக கூட்டத்தில் ஒரு கல்லை கோபமாக விட்டெறிகிறான். ஒருவர் தலையில் விழுந்து பெரிய காயத்தை உண்டு பண்ணி விடுகிறது. அந்த கூட்டத்தில் அவர் மட்டுமா இருக்கிறார்? கல்லை எறிந்தவன் இவரைப் பார்த்து வீசவில்லை. இருவருக்குமே ஒருவரை ஒருவர் தெரியாது. அத்தனை பேரையும் விட்டு விட்டு அந்தக் கல் அவர் மீது மட்டும் விழுவானேன்? யாரைக் காரணம் சொல்வது?


விடிந்தால் ராமனுக்கு முடி சூட்டு விழா! அயோத்தியா பட்டணமே ஆரவாரமாக இருக்கிறது. ஒரே இரவில் தசரதனிடம் கைகேயி பெற்ற வரத்தால் இந்த ஆரவாரம் போய் விடுகிறது. ராமன் கானகம் செல்ல பரதனுக்கு முடி சூட்ட முடிவாகிறது. இதனைக் கேட்ட லட்சுமணன் கொதித்து எழுகின்றான். லட்சுமணனின் கடும் கோபத்தைக் கண்ட ராமன் அவனை நோக்கி “ தம்பீ! ஆறு என்றால் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இது இயற்கை விதி! ஆனால் அந்த ஆறே வற்றிப் போனால் ஆற்றின் மீதா குறை சொல்ல முடியும். அது போலத்தான். இங்கு இது நிகழ்ந்தமைக்கு யாருடைய பிழையும் காரணம் இல்லை. விதியின் பிழைதான். இதற்காக நீ கோபம் கொள்ளலாமா? “ என்று ஆற்றுகின்றான். இதோ கம்பனின் பாடல்!

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தான்
மதியின் பிழையன்று, மகன்பிழையன்று மைந்த
விதியின் பிழைஇதற்கு என்கொல் வெகுண்ட தென்றான்
-         கம்பராமாயணம் ( அயோத்தியா காண்டம் )


விதியின் பிழையை உணர்த்திய அதே கம்பனுக்கு சொந்த வாழ்க்கையிலும் அதனை சந்திக்க நேரிடுகிறது. கமபனின் ஒரே மகன் அம்பிகாபதி தன் அப்பனைப் போலவே நல்ல புலவன். ஆனால் சிருங்கார ரஸனை மிகுந்தவன். சோழ மன்னனின் மகள் அமராவதியை விரும்புகிறான். அவளும் அவனை விரும்புகிறான். மன்னன் இதனை விரும்புவானா? மன்னன் கோபம் கொண்டு அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதிக்கிறான்.  எவ்வளவோ முயன்றும் கம்பரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்நாள் இதுவிளையும் என்றெழுத்துத் தானிருக்க
என்னாலே ஆவதொன்று மில்லையே; - உன்னாலே
வந்ததுதான் அப்பா, மகனே, தவிப்பவர் ஆர்
முந்தையில்நீ செய்தவினை யே
                        - கம்பர் (தனிப் பாடல்)

என்று அவர் பாடும்போது நமது நெஞ்சம் கரைந்து விடுகிறது. கம்பன் மகன் அம்பிகாபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அப்போது கம்பர் விதியை நொந்து பாடிய பாடல்.....

மட்டுப்படாக் கொங்கை மானார் கலவி மயக்கத்திலே
கட்டுப்பட்டாய் என்ன காதல் பெற்றாய் மதன்கை அம்பினால்
பட்டுப் பட்டாயினும் தேறுவை யேஎன்று பார்த்திருந்தேன்
வெட்டுப்பட்டாய் மகனே தலைநாளின் விதிப்படியே
                                                          - கம்பர்  (தனிப் பாடல்)


கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்“ , “ கம்ப நாடன் கவிதையைப் போல் கற்றோர்க்கு இதயங் களியாதே “ என்று புகழப் படும் கம்பரின் வாழ்க்கையில் விதி விளையாடிய சோகம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
 


 





Sunday 18 March 2012

சினிமா பாட்டு புத்தகம்

சின்ன வயது ஞாபகங்கள் என்று சொல்லும் போது சினிமா பாட்டு புத்தகம் மறக்க முடியாதது ஆகும். அப்போது புத்தகம் என்று சொல்ல மாட்டார்கள். புஸ்தகம் அல்லது பொஸ்தகம் என்றுதான் சொல்வார்கள். சினிமா பாட்டு புஸ்தகம் என்பது பழைய செய்தித்தாள் போன்ற ஒரு தாளில் ( சாணித் தாள் என்றே சொல்வார்கள் ) சினிமா பாடல்களை அச்சடித்து ஒரு அணா அல்லது இரண்டு அணா என்று விற்பார்கள். ஒரு சினிமாப் படம் வந்ததும் பாட்டு புத்தகமும் விற்பனைக்கு வந்துவிடும். அந்த புத்தகத்தின் அட்டைப் படம் பெரும்பாலும் அந்த படத்தின் அன்றைய போஸ்டரின் கறுப்பு வெள்ளை போட்டோ நகலாகத்தான் இருக்கும். உள்ளே அந்த படத்தின் நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று எல்லா விவரங்களையும் தந்து இருப்பார்கள். புத்தகத்தில் பாடலின் வரிகளை இஷ்டத்திற்கு வடிவம் கொடுத்து இருப்பார்கள்.  முக்கியமான அம்சம் படத்தின் கதைச் சுருக்கம் தந்து, கதாநாயகி என்ன ஆனாள்? கதநாயகன் கொலைகாரனைக் கண்டு பிடித்தானா? வில்லன் முடிவு என்ன? என்ற கேள்விகள் கேட்டு கடைசி வரியாக “ விடையை வெள்ளித் திரையில் காண்கஎன்று முடித்து இருப்பார்கள். இது  மறக்க முடியாத வாசகம்.

எம்ஜிஆர் சிவாஜி போன்ற பிரபல நடிகர்கள் நடித்த படங்களுக்கு திரைப்படக் கம்பெனிகளே பாட்டு புத்தகங்கள் வெளியிடுவார்கள். அது கொஞ்சம் விலை அதிகமாகவும் கொஞ்சம் தரமான வெள்ளை தாளிலும் வெளிவரும். சில சமயம் அட்டைப்படம் கலர் பிரிண்ட்டாகவும் இருக்கும். இந்த சிறப்பு சினிமா பாட்டு புத்தகங்களை தியேட்டரில் மட்டுமே கேண்டீனில் விற்பார்கள். சில தீவிர ரசிகர்கள் படம் வெளிவந்த முதல்நாளே முதல் காட்சிக்கு செல்வார்கள். போய் வந்ததை ஏதோ வீர தீர செயலைச் செய்தது போன்று பெருமையாக பேசுவார்கள். அவர்கள் கையில் இந்த புத்தகங்கள் இருக்கும். இவை ஒரு பதிப்போடு குறைந்த பிரதிகளோடு சரி!



பெரும்பாலும் இந்த சினிமா பாட்டு புஸ்தகங்களை சினிமா தியேட்டருக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளிலும், பள்ளிகளுக்கு அருகில் உள்ள தரைக் கடைகளிலும் விற்பனை செய்வார்கள். அந்தகாலத்து பத்திரிக்கைகளில் வரும் தொடர்கதைகளை பைண்டிங் செய்வது போல, பாட்டு புத்தக பிரியர்களும் சினிமா பாட்டு புஸ்தகங்களையும் பைண்டிங் செய்து வைத்து இருப்பார்கள். நான் பள்ளி விடுமுறையில் எங்கள் அம்மாவின் கிராமத்திற்கு செல்லும் போது கிராமத்து நண்பர்கள் திண்ணையின் எறவானத்தில் ( இறவானம் > சாய் கூரை (தாழ்வாரம்) செருகி வைத்து இருக்கும் சினிமா பாட்டு புஸ்தங்களை எடுத்து கொடுப்பார்கள்..தென்னந் தோப்பிற்கு எடுத்துச் சென்று, நண்பர்களோடு ராகம் போட்டு பாடுவோம். அந்த காலத்து அருமையான பொழுது போக்கு நூல்கள் அவை. அப்போது இருந்த இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை ஒலி பரப்பிய பழைய திரைப் படப் பாடல்களும் சினிமா பாட்டு புத்தகங்களை வாங்க ஆர்வம் தந்தன.

முன்பெல்லாம் கோயில் திருவிழாக்கள், மாவட்டம் தோறும் அரசு நடத்தும் பொருட்காட்சிகள் ஆகிய பொது நிகழ்ச்சிகளில் இன்னிசை கச்சேரி நடைபெறும். அந்த இன்னிசை கச்சேரி நடத்த வரும் பாடகர்கள் , இசையமைப்பாளர்கள் கையில் இதுபோல் சினிமா பாட்டு புத்தகங்கள் அடங்கிய பைண்டிங்குகள் நிறைய இருக்கும். சினிமா பாட்டு புத்தகங்களை வைத்துதான் பாடுவதற்கு பயிற்சியும் எடுத்தார்கள். அப்பொழுதெல்லாம் திரைப்பட இன்னிசைக் கச்சேரிக்காரர்கள் மதுரை, சேலம் பக்கம்தான் அதிகம். அந்த ஊர்களில் இருந்துதான் மற்ற இடங்களுக்கு அழைப்பார்கள்.

இப்போதுகம்ப்யூட்டர்காலம்.எல்லாம் இண்டர்நெட்டிலேயே வந்து விடுகின்றன. பழைய மாதிரி சினிமா பாட்டு புஸ்தகங்கள் வெளி வருவதில்லை. அன்று தரையில் கிடந்து ரசிகர்களின் கைகளுக்கு வந்த பழைய சினிமா பாடல்கள்,  இன்று நல்ல தாளில் பாடலாசிரியர்களின் பெயரோடு “திரை இசைப் பாடல்கள்என்ற தொகுப்பாக நல்ல அமைப்போடு வெளி வருகின்றன. அதிலும் ஒவ்வொரு கவிஞரின் பெயரிலேயே வெளியிடுகிறார்கள். இன்னும் பழைய பாடல்களுக்கு மவுசு குறையவில்லை.

இந்த கட்டுரை சம்பந்தமாக சில பழைய சினிமா பாட்டு புஸ்தகங்களின் அட்டை படத்தை புகைப்படம் எடுத்த் போட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, ஒரு கடைக்காரரை அணுகினேன். அவர் சினிமா பாட்டு புத்தக மொத்த வியாபாரி. அவர் “ இப்ப எல்லாம்... யார் சார் பழைய பாட்டு புஸ்தகங்களை வாங்குறாங்க. எல்லாமே இண்டர்நெட்டுலேயே பார்த்துக்கிறாங்க  “ - என்றார். பழைய புத்தக வியாபாரிகளிடமும் இல்லை. எனவே பழைய சினிமா பாட்டு புத்தகங்களின் முன் அட்டைப் படங்களை படம் பிடித்து கட்டுரையில் சேர்க்க இயலவில்லை. 

எனவே கூகிள் உதவியுடன்  தேடியதில் கிடைத்த சில படங்களை பதிவில் சேர்த்துள்ளேன். கூகிளுக்கு நன்றி!
( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )






Thursday 8 March 2012

கரிச்சான் குஞ்சு - ”பசித்த மானிடம்”

மின்சாரம், பஸ், டெலிபோன், தார்ச் சாலைகள் அவ்வளவாக இல்லாத காலம். எதற்கெடுத்தாலும் சைக்கிள், மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டி சவாரி, ரயில் அல்லது நடைப் பயணம் என்று இருந்த நேரம். பஸ் போக்குவரத்து என்பது மிகவும் குறைவு. கடிதப் போக்குவரத்து மட்டுமே. இந்தியா சுதந்திரம் வாங்காத நேரம். இந்த கால கட்டத்தில், கதை முழுக்க முழுக்க கும்பகோணம் பக்கம் உள்ள தோப்பூர் கிராமத்து  அக்ரகாரத்தில் தொடங்குகிறது.

மாவட்ட மைய நூலகத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் இந்த நாவலை வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்தேன். நாவலின் போக்கு என்னை அப்படியே அந்த காலத்திற்கு இழுத்துச் சென்று விட்டது. ரசித்துப் படித்து முடித்தேன். நூலகத்தில் திருப்பித் தந்த பின்னர், நாவலை விலைக்கு வாங்க புத்தக கடைகள் சென்று கேட்டால் இல்லை. அதன்  பின்னர் அந்த நாவலை இரண்டாம் முறை படிக்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. இப்போது பதினைந்து நாட்களுக்கு முன்னர் நூலகம் சென்றபோது அந்த நாவல் கிடைத்தது. அப்போது இந்த நாவலை வெளியிட்ட பதிப்பகம் வேறு என்று ஞாபகம். இப்போது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட அந்த புதிய பதிப்பை கடைகளில் விசாரித்து வாங்கி விட்டேன். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இரண்டாவது தடவை படித்து முடிக்கும் போதும் அதே ரசனை மங்கவில்லை.

கதை என்பது கணேசன், கிட்டா என்ற இரு பிராமண மனுசாள் கதை. தோப்பூரைச் சேர்ந்த கணேசன் என்பவன் சத்திரத்தில் சிறு வயதிலேயே எடுபிடி  வேலைக்குச் சேர்ந்து பின்னர் படிக்க வேண்டும் என்ற ஆசையில் வெளியேறுகிறான். மகா யோக்கியனாக இருந்த அவன் சந்தர்ப்ப வசத்தால் கெட்டு குட்டிச் சுவராக தொழுநோயாளியாகி தத்துவ ஞானியாகிறான். அவன் ஊர் ஊராக நடையாய் நடந்து திரிகிறான். அவன் பயணம் செய்யும் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப் பள்ளி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், மாம்பழச் சாலை என்று அந்த காலத்து மனிதர்கள் வருகிறார்கள். கிட்டா என்பவன், தோப்பூரில் நிலம் நீச்சாக வாழ்ந்தவன். ஒரு கால கட்டத்தில் விவசாயம் பார்க்க முடியாத சூழ் நிலையில், பல தஞ்சாவூர் பிராமணர்களைப் போல நிலங்களை விற்றுவிடுகிறான். அதன் பிறகு சொந்தமாக டாக்ஸி, மருந்து கடை வியாபாரம் என்று  முன்னேறிய  குடும்பஸ்தன். மனைவியின் அக்காள் தொடுப்பால் இவன் படும் அவஸ்தைகள், பிள்ளைகளின் பிரச்சினைகள் என்று நாவல் தொடர்ந்து செல்கிறது.

அந்தகாலத்து தோப்பூர் அக்ரகாரம், கும்பகோணத்து தர்ம சத்திர சாப்பாடு, அரசலாற்றங்கரை, தர்ம ஆஸ்பத்திரி, அன்றைய பிராமணாள் காபி கிளப் என்று இயல்பான சமூக வாழ்க்கை பற்றிய விவரங்கள் என்று ஓட்டமும் நடையுமாக நாவல் போகிறது. தோப்பூர் அக்ரகாரத்தை விவரித்துச் சொல்லும்போது அப்போதைய பிராமணர்களின் நிலைமை, நிறையபேர் வெளியூருக்கு சென்று விட்ட படியினால் ஊரில் பாதி பாழ் மனைகள், வீடுகள், குத்தகைகாரர்களைச் சமாளிக்க முடியாமல் நிலங்களை விற்று ரொக்கமாக மாற்றிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறுதல், மைனர் வாழ்க்கை நடத்தி வாழ்ந்து கெட்ட சந்த்ரு என்று காட்சிகள் வருகின்றன. ஆவணி அவிட்டம் அன்று கணேசனுக்கு நடைபெறும் கிராமத்து பூணூல் கல்யாணம் மறக்க முடியாத ஒன்று. 

 
நாவலாசிரியர் அந்த காலத்து வடமொழி பயின்ற தமிழாசிரியர். கரிச்சான் குஞ்சு என்ற ஆர். நாராயணசாமி. தஞ்சை மாவட்டம் நன்னிலம் தாலுகாவைச் சேர்ந்த சேதனீபுரம் இவரது ஊர். சாஸ்திரிகள் குடும்பம். இதனால் நாவல் முழுக்க தஞ்சை பிராமணர்களின் மண் மணம் வீசுகிறது. தி.ஜானகிராமன் மற்றும் கு.ப.ரா ஆகியோரது நாவல்களை ரசிப்பவர்களுக்கு கரிச்சான் குஞ்சுவின் இந்த “பசித்த மானிடம்நிச்சயம் பிடிக்கும். மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை பசி தாகம்தான். சாப்பிட சாப்பிட பசிதான். தாகம் தீரத் தீர குடித்தாலும் தாகம்தான். வயிற்றுப் பசி, காமப் பசி, பணப் பசி, புகழ் பசி என்று. முடிவே இல்லை. இறுதியில் மிஞ்சுவது எதுவுமே இல்லை. இதனை மையக் கருத்தாகக் கொண்ட  இந்த  நூலானது , நாவல் இலக்கியப் பசி நிறைந்தவர்களுக்கு ஒரு புதையல்.

நூலின்பெயர்:பசித்த மானிடம்       
ஆசிரியர்    : கரிச்சான் குஞ்சு
வெளியீடு   :காலச்சுவடு பதிப்பகம்
விலை      : ரூ 200





Friday 2 March 2012

நானும் எனது ஊரும் (தொடர் பதிவு) - திருமழபாடி



தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர் கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் உள்ள திருவையாறு மற்றும் அதன் பக்கம் உள்ள சிவத் தலங்களையெல்லாம் பாடிவிட்டு இரவு திருவாலம்பொழில் என்ற தலத்தில் தங்குகிறார். அப்போது அவர் கனவில் தோன்றிய சிவன் “மழபாடியை மறந்தனையோஎன்று வினவ, மறுநாள் காலை, சுந்தரர் உன்னை அல்லால் வேறு யாரை நினைக்கேன்என்று திருமழபாடி சென்று பாடித் துதித்தார்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
                                                    -  சுந்தரர் ( தேவாரம் )
 
மேலே சொன்ன புகழ் பெற்ற தேவாரம் பாடப் பெற்ற திருமழபாடி எனது சொந்த ஊர்.(அதாவது அப்பா ஊர்).இதுஅப்போதைய பிரிக்கப்படாத திருச்சி மாவட்டத்தில், இப்போது அரியலூர்மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் உள்ளது. இதன தென்கரையில் வைத்தியனாதன் பேட்டை என்ற ஊர். இது திருவையாறு பக்கம். நாங்கள் விவசாயக் குடும்பம். அப்பா ரெயில்வேயில் வேலை பார்த்தது, நாங்கள் குடும்பத்தோடு வசித்தது, நான் படித்தது எல்லாமே திருச்சியில்தான். அப்பாய், தாத்தா ( அப்பாவின் பெற்றோர் ) இருந்தவரை பள்ளி மாணவனாக இருந்த சமயம் சொந்த ஊரான திருமழபாடி அடிக்கடி செல்வேன். இப்போது ஏதாவது காரியம் இருந்தால் மட்டும் சென்று வருவேன். ஊர்ப் பெயரையும் சேர்த்துதான் எனது தந்தை தனது பெயரை எழுதுவார்.

கொள்ளிடம் என்று ஆறு அழைக்கப் பட்டாலும் அதன் பெயர் இலக்கியங்களில் காவிரிதான். கொள்ளிடத்திற்கே உரிய தெளிந்த ஊற்று நீர் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். அதில் குதித்து விளையாடிய நாட்கள் பசுமையானவை. மேலும் மழைக் காலங்களிலும், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களிலும், திருமழபாடிக்கும் எதிரில் உள்ள வைத்தியனாதன் பேட்டைக்கும் பரிசல் விடுவார்கள். பரிசலில் செல்லும்போது யாரையும் நிற்க விடமாட்டார்கள். மற்ற நாட்களில் ஆற்றை நடந்துதான் கடக்க வேண்டும். அப்போதுஆற்றில் முதலைகள் கிடையாது. வைத்தியனாதன் பேட்டையில் கோரைப்பாய் பின்னும் தொழில் அன்று சிறப்பாக இருந்தது. திருமழபாடியில் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்தான் நெல், கரும்பு சாகுபடி அதிகம். அப்போதெல்லாம் ஊரில் மூலைக்கு மூலை வெல்லம் காய்ச்சும் தொழில் நடந்தது. ஊர் முழுக்க வெல்லப் பாகு மணம்தான். இப்போது சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பைத் தந்து விடுகிறார்கள். 



அப்போது திருச்சியிலிருந்து திருமழபாடிக்கு டி.வி.எஸ் பஸ்தான். கண்டக்டர்கள் ரொம்ப கண்டிப்பு.  நிர்வாகம் அரசு ஆணைப்படி எத்தனை பேருக்கு பஸ்ஸில் அனுமதி சொல்லி இருக்கிறதோ அத்தனை பேரைத் தான் எண்ணி ஏற்றிக் கொள்வார்கள். ஸ்டாண்டிங் எல்லாம் கிடையாது. பேருந்து நிறுத்த இடத்தில் மட்டும்தான் பஸ்ஸை நிறுத்துவார்கள். இப்போது “ பாரப்பா பழனியப்பா.... காரு வண்டி பறக்குதப்பா என்று நிறைய வாகனங்கள்.    

மழவர்கள் எனப்பட்டோர் பாடி வீடு அமைத்து தங்கி இருந்த படியினால் மழபாடி என்று பெயர். சிவனின் திருத்தலம் உள்ள ஊர் ஆனபடியினால் திருமழபாடி என்று ஆனது. சத்ரபதி சிவாஜி தஞ்சைக்கு செல்லும் போது ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், திருமழபாடி கோயிலில் தங்கியிருந்தார். வெள்ளம் வடிந்த பின்னர்தான் சென்றார். தஞ்சையை ஆண்ட ஏகோஜி ( சிவாஜியின் தம்பி) என்னும் மராட்டிய தளபதி திருமழபாடியில் முகாமிட்டு இருந்தபோது அவரது மனைவி பெற்றெடுத்த குழந்தைதான் சரபோஜி. ( பின்னாளில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் ) 

தேவாரம் பாடிய மூவரும் பாடிய சைவத் திருத்தலம் திருமழபாடி. நந்தீஸ்வரர் கல்யாணம், மாசி மகம் தேரோட்டம் இரண்டும் முக்கியமான திருவிழாக்கள். நந்தீஸ்வரர் கல்யாணத்தன்று இரவு நேரம் கோயிலுக்கு எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றின் மணல் வெளியில் திடீர்க் கடைகள் தோன்றி பெட்ரோமாக்ஸ் விளக்குகள், தீப்பந்த விளக்குகள், கோயில் வாசலில் மின்சார விளக்குகள் முதலான வெளிச்சத்தில் மக்கள் கூட்டத்தின் இரைச்சலில் வியாபாரம் நடக்கும். சிலப்பதிகாரம் சொன்ன இந்திர விழாதான் எனக்கு ஞாபகம் வரும். அன்றைய நாட்களில் ஊரே விழாக்கோலம் பூண்டு மகிழ்ச்சியாக இருக்கும். அக்கம் பக்கம் ஊர்களில் இருந்து மக்கள் அதிகம் வருவார்கள்.

திருச்சி, பெரம்பலூர் வழியாக வருபவர்கள் லால்குடி, புள்ளம்பாடி வழியாக
திருமழபாடியை வந்தடையலாம். அரியலூர் வழியாகவும், திருவையாறு வழியாக வருபவர்கள் திருமானூர் வந்தும் திருமழபாடி வரலாம். 
 
சொந்த ஊர் என்ற முறையில் திருமழபாடியைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போதைக்கு இது போதும். விரிப்பின் பெருகும். வரலாறு , மற்றும் கோயில் பற்றி தனியே ஒரு பதிவு போட வேண்டும்.  அவ்வளவு செய்திகள். நானும் எனது ஊரும் ( தொடர் பதிவு) என்ற தலைப்பில் சகோதரி தென்றல் சசிகலா அவர்கள் // அனைவருக்கும் தனது சொந்த ஊரைப்பற்றி நிச்சயம் எழுத வேண்டும்  என்ற எண்ணம் மனதில் இருக்கும். அதற்காகவே நான் இப்போது தொடர்  பதிவு  சார்பாக அழைக்கிறேன். //   என்று அழைத்து இருந்தார்கள். அதன் தொடர்ச்சியே இந்த பதிவு. அவர்களுக்கு எனது நன்றி. புகைப் படங்கள் எடுப்பதற்காக நேற்று ( 01.03.2012 ) காலை திருமழபாடி சென்று வந்தேன். படங்கள் Canon Power Shot A800 கேமராவால் எடுக்கப் பட்டவை.

இன்னின்னார்கள் தான் என்றில்லாமல், வலைப் பதிவு திரட்டிகளில் அடிக்கடி வந்து போகும், அனைத்து வலைப் பதிவர்களையும் அவரவர் ஊரைப் பற்றி எழுதுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

              .