Friday 24 February 2012

வலைப்பதிவும் விருதும்


சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்கள் ( http://veesuthendral.blogspot.in )  தமிழார்வம் மிக்க நல்ல கவிஞர். சினனச் சின்ன வரிகளில் அழகின் சிரிப்பையும் மனித இயல்புகளையும் கவிதையாக தருபவர். அவர்கள்   VERSATILE  BLOGGER AWARD -  என்ற விருதினை எனக்கு தந்து என்னை பெருமைப் படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றியும், மகிழ்ச்சியும்.

இந்த விருதினைப் பெற்றவர்கள் தனக்கு பிடித்த ஏழு விஷயங்களை சொல்வதோடு இந்த விருதினையும் ஐந்து பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். எனக்கு பிடித்தமான ஏழு விஷயங்கள். 1. புத்தகம் படித்தல். 2. பழைய தமிழ் சினிமா பாடல்கள். 3.பயணம் செய்தல் 4.போட்டோகிராபி 5. வலைப் பதிவு 6. மற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவி. 7. காபி (COFFEE)

ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் நன்றாகவே பதிவுகள் எழுதுகின்றனர். பதிவர்கள் அனைவரும் அவரவர் வேலையை சரியாகத்தான் செய்கிறார்கள். வலைப் பதிவின் மூலம் எனக்கு அறிமுகமான பலர் ஏற்கனவே இந்த விருதினை பெற்றுள்ளனர். யாருக்கென்று தருவது? சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்கள் தனக்கு கிடைத்த விருதினைப் பகிர்ந்தளித்ததைப் போல அவர் முலம் எனக்கு கிடைத்த  VERSATILE  BLOGGER  AWARD   என்ற இந்த விருதினை கீழ்க் கண்ட ஐவருக்கு அளிப்பதில்  மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

1.திரு. ஞானவெட்டியான்.( ஆலயங்கள் http://koyil.siththan.com திருச்சியில் நான் பணிபுரிந்த அரசு வங்கி கிளையில் எங்களுக்கு கள அதிகாரியாக இருந்தவர். இப்போது வலைப் பதிவுகளில் ஆன்மீகக் கருத்துக்களை எழுதி வருகிறார்.)

2.திருமதி. T.V. தங்கமணி (எமது கவிதைகள http://kavidhaithuligal.blogspot.in இவரது முழு விவரம் தெரியவில்லை. தானுண்டு தன் கவிதையுண்டு என்று எதனையும் எதிர்பாராது வண்ண விருத்தங்களை இசையோடு வலைப் பதிவில் பாடுகிறார். எங்கள் ஊரான திருமழபாடியைப் பற்றியும் பாடி இருக்கிறார்.

3.பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் ( வேர்களைத் தேடி http://gunathamizh.blogspot.in  வலைப் பதிவில் தமிழ் இலக்கிய மணம் கமழ பதிவுகள் தருபவர் )

4.மதுரை சரவணன். ( http://veeluthukal.blogspot.in ஆசிரியர். கல்வி சம்பந்தமான நல்ல சிந்தனைகள் தருபவர். )

5.வவ்வால். ( http://vovalpaarvai.blogspot.in  திடீர் திடீரென்று வந்து புள்ளி விவரக் கட்டுரை களைத் தருவார். இவர் முழு விவரமும் தெரியவில்லை. சுருக்கென்று பின்னூட்டமும் தருவார்.)

ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபத்திற்கு என்று ஒளி தொடர்வதைப் போன்று அனைவருக்கும் விருதுகள் பரவட்டும்.

மேலே சொன்ன பதிவர்களும் இந்த விருதை ஏற்று நீங்களும் ஐந்து பேருக்கு இந்த விருதினை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தொடர் பதிவு போல பதிவர்களாகிய நாம் ஒருவருக்கு ஒருவர் விருதுகள் தந்து கொள்வதில் தவறில்லை.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
                    _ பாடல்: வாலி ( படம்: படகோட்டி )Thursday 23 February 2012

ரெயில் நிலையங்களில் வட இந்திய பெண் மனநோயாளிகள்


பி.ஏ. படிக்கும்போதும், எம்.ஏ. படிக்கும் போதும் ஐந்து ஆண்டுகள் கல்லூரிகளுக்குப் போக, வர தினமும் ரெயில் பயணம்தான். திருச்சி ஜங்ஷனில் இறங்கி கொஞ்சம் தொலைவில் உள்ள கல்லூரிகளுக்கு நடைதான். அப்புறம் வேலை கிடைத்த பிற்பாடும், வேலை கிடைத்த முதல் மூன்று ஆண்டுகள் திருச்சியைத் தாண்டி மணப்பாறை வரை தினமும் ரெயில் பயணம் தொடர்ந்தது.

ரெயில்வே ஜங்ஷனில் விதம் விதமான நபர்களை சந்திக்கலாம். ஆனால் எல்லோரும் பரபரப்பாக இருப்பார்கள். அதிலும் பிளாட்பாரத்தில் வண்டி நுழையும் போதும் வண்டி கிளம்பும் வரையும் அதிக பரபரப்பும், அதிக இரைச்சலும் இருக்கும். வண்டி புறப்பட்டுச் சென்றதும் கொஞ்சநேரம் அமைதிக்குப் பின் அடுத்த வண்டியின் பரபரப்புக்கு பிளாட்பாரம் தயாராகிவிடும்.

இவ்வளவு இரைச்சல் பரபரப்புக்கும் இடையில் எதைப் பற்றியும் கவலைப் படாமல் சிலர் பிளாட்பாரத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டும் நின்றுகொண்டும் தனக்குத் தானே பேசிக் கொண்டும் இருப்பார்கள். அல்லது யாரேனும் ஏதாவது தின்பதற்கு தரமாட்டார்களா என்று பரிதாபமான விழிகளோடு பிளாட்பார கேண்டீன் அருகே நின்று கொண்டு இருப்பார்கள். என்னைப் போன்றவர்கள் அவர்களுக்கு ஏதேனும் தின்பதற்கு வாங்கிக் கொடுப்போம் . அங்கு வரும் துப்புரவுத் தொழிலாளி அவர்களை விரட்டிக் கொண்டு இருப்பார். அவர்கள் பைத்தியங்கள். பெரும்பாலும் பெண்கள். இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்ன என்றால் அந்தப் பைத்தியமான பெண்கள் பெரும்பாலும் வட இந்திய உடை அணிந்த நாற்பது அல்லது ஐம்பது வயதைக் கடந்த பெண்களாகவே இருப்பார்கள். நாம் சொல்லுவது அவர்களுக்கு புரியாது. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதனை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது. அந்தப் பக்கம் வரும் வட இந்திய பயணிகளும் இந்தி தெரிந்தவர்களும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிச் சென்று விடுவார்கள்.

ஒருமுறை அங்கு பணிபுரியும் தொழிலாளி ஒருவரை விசாரித்ததில் அவர் சொன்ன தகவல். வட இந்தியாவில் இருந்து வரும் சில பயணிகள், வீட்டில் தொந்தரவாக இருக்கும் வயதான பைத்தியம் பிடித்த பெண்களையும் அழைத்து வருவார்கள். அந்த மன நோயாளிப் பெண்களை வீட்டில் வைத்து பராமரிக்க இயலாத சூழ்நிலை அல்லது மருத்துவ செலவு செய்ய முடியாத நிலை இருக்கும். வைத்தியம் பார்த்தாலும் குணம் ஆகாது. ஊரில் கோயில் குளம் அழைத்துச் செல்வதாகச் சொல்லி அழைத்து வருவார்கள். பின்பு,  அவர்களை இராமேஸ்வரம் போன்ற கோயில் உள்ள  ஊர்களிலோ அல்லது வழியில் இதுபோன்ற பெரிய ரெயில்வே நிலையங்களிலோ விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். சொந்த ஊரில் போய் காணாமல் போய்விட்டதாகவும், எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும் பொய் சொல்லி விடுவார்கள். நாங்கள் இதுபோன்ற பெண்களை விரட்டவும் முடியாது. சமூக தொண்டு செய்யும் ஆட்களிடம் கொண்டு போய் விடவும் முடியாது. இவர்களிடம் தப்பாக நடந்து கொள்ளும் ஆசாமிகளும் இருக்கிறார்கள். ஒருவர் போனால் இன்னொரு மனநோயாளி வந்து கொண்டே இருப்பார். எனவே இரவில் கடைசி நேர பாசஞ்சர் ரெயில் எங்கு செல்கிறதோ அதில் ( பெரும்பாலும் இராமேஸ்வரம் ரெயிலில் ) ஏற்றி விட்டுவிடுவோம். அவ்வாறு போனவர்களில் சிலர் மறுபடியும் இங்கேயே வந்து விடுவதும் உண்டு. என்ன பண்ணுவது. என்றார்.

இப்போதும் ரெயில்வே நிலையங்களிலோ அல்லது அதன் அருகிலுள்ள பேருந்து நிலையங்களிலோ இதுமாதிரி வயதான, வட இந்திய அல்லது மொழி தெரியாத பைத்தியம் பிடித்த பெண்களைப் பார்க்க முடிகிறது. பரிதாபமாக உள்ளது. அந்த ஊழியர் அன்றுமுப்பது வருடங்களுக்கு முன்பு சொன்ன அன்றைய நிலைமை இப்போதும் உள்ளது போல் தெரிகிறது.  

Sunday 19 February 2012

புதுக் கவிதையின் வடிவம்.


அப்போது கவிதையை செய்யுள் என்று அழைத்தனர். நேர் நேர் என்றும் நிரை நிரை என்றும் இலக்கண உத்திகளை பார்த்து பார்த்து எழுதவில்லை. தளை தட்டாமல் எல்லாம் இயல்பாகவே முன்பெல்லாம் கவிதை பாடுவது என்றால், மரபுக் கவிதைதான். வந்தது. காரணம் இசையோடு இணைந்து பாடல்கள் புனையப் பட்டதுதான். இப்போது நாம் கணிணியில் தட்டச்சு செய்கிறோம். கணிணிப் பணிகளைச் செய்கிறோம். இவைகள் பழக்கத்தின் காரணமாக இயல்பாக வருகின்றன. அதே போன்று அப்பொழுது மரபுக் கவிதைகளின் இலக்கணம் எது என்பதனை யோசித்து, யோசித்து எழுதாமல் பழக்கத்தின் காரணமாக இயல்பாக எழுதினர்.

பெரும்பாலும் வார்த்தைகளை நீட்டியும் மடக்கியும் எதுகை மோனையோடு ஒரு கருத்தை உள்ளடக்கி சொல்லும்போது புதுக் கவிதை தோன்றி விடுகிறது. உணர்ச்சிகளை உள்ளபடியே கொட்டுவது புதுக்கவிதை.  புதுக் கவிதைகளை வசன கவிதைகள் என்றும் சொல்கிறோம்.  எல்லா புதுக் கவிதைகளையும் ராகத்தோடு பாட முடிவதில்லை. இசை அமைத்து பாடும்போது தட்டுகின்றன. மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இலக்கணம் உள்ளது மரபுக் கவிதை. இலக்கணம் மீறியது புதுக் கவிதை. அரசியலில் மேடைப் பேச்சிற்கு கவர்ச்சி அதிகம் தேவைப் பட்ட போது புதுக்கவிதைகள் பட்டி மண்டபம் வரை புது அவதாரம் எடுத்தன.

மகா கவி சுப்ரமண்ய பாரதியார் இரண்டிலும் வல்லவர். கவிஞர்கள் கண்ணதாசன், வாலி போன்றவர்களது  பாடல்கள் இன்னும் நிலைத்து நிற்கக் காரணம் நல்ல இசையமைப்பு தான். அவர்களும் இசையமைப்பதற்கு தகுந்தாற் போல தங்கள் பாடல் வரிகளில் திருத்தங்கள் செய்தனர். மேலும் இருவரும் இசைப் புலமையும் உள்ளவர்கள்.

மக்களின் வாழ்க்கையோடு இணைந்த இலக்கியத்திலிருந்து தோன்றியதுதான் இலக்கணம். “பழையன கழிதலும் புதியன புகுதலும் “ ( நன்னூல்) என்ற வாக்கியத்தின்படி தமிழ் இலக்கியத்தில் புதுக் கவிதையின் தாக்கத்தினை ஏற்றுக் கொள்வோம். பெரும்பாலும் புதுக் கவிதைகள் அகவற்பா எனப்படும் ஆசிரியப்பா வகையின் மறு வடிவங்களாகத்தான் உள்ளன. சங்க இலக்கியமான குறுந்தொகைப் பாடல்களின் வடிவமும் இன்றைய புதுக் கவிதைகளின் வடிவமும் ஒன்று போலவே இருக்கும். எடுத்துக் காட்டாக கீழே உள்ள பாடல்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

                                                                    -  செம்புலப்பெயனீரார்.

(தலைவன் தன்னை விட்டுப் பிரிந்து விடுவானோ என்று தலைவி அஞ்சுகிறாள். அவளது முகக் குறிப்பினை உணர்ந்த தலைவன் கூறிய பாடல்)

முன்பெல்லாம் பத்திரிக்கைகளுக்கு கவிதை எழுதி அனுப்பினால் நமது கவிதைகளை வெளியிடுவார்களா என்ற ஏக்கம் இருக்கும். அப்படியே வந்தாலும் அதன் ஆசிரியர் கைவண்ணத்தில் எடிட்  செய்துதான் வரும். இப்போது வலைப் பதிவில் கவிஞர்களின் புதுக் கவிதைகள் சுடச் சுட வந்துவிடுகின்றன. அவைகளில் சிலவற்றை காணலாம்.  ( புதுக் கவிதை பிதாமகர்களின் கருத்துக்களையோ கவிதைகளையோ இங்கு எழுத ஆரம்பித்தால் கட்டுரை நீண்டு விடும் என்பதால் எழுதவில்லை)

தொடர் பயணம்  என்ற  தலைப்பில்  வாழ்க்கையைப் பற்றி மதுரைக் கவிஞர் எழுதிய வரிகள் ---

  தேடலும் பயணிப்பதுமே
  வாழ்க்கையேயன்றி
  ஒன்றை அடைதலும் இல்லை
  ஒன்றில் அடைதலும் இல்லை
  இதில்  எனக்கு எவ்வித குழப்பமுமில்லை

-         கவிஞர் ரமணி (தீதும் நன்றும் பிறர்தர வாரா)

பனிமூடும் மார்கழியின் பின்னே என்ன வரும்? இதற்கு விடை தருகிறார் திருவரங்கத்தில் பிறந்த கவிஞர் ஒருவர்.

  பனிமூடும் மார்கழியின் பின்னே-பொங்கல்
  பரிசாகத்தான் இங்கு வருமே பெண்ணே!
  இனிதான தமிழர்திருநாளாம் இதற்கு
  ஈடுண்டோ வேறேதும் சொல்வாய் பெண்ணே!

-         கவிஞர் ஷைலஜா (எண்ணிய முடிதல் வேண்டும்)

பெரும்பாலும் கவிஞர்களுக்கு தனது ஊர்ப் பெருமை பற்றி பேச பிடிக்கும் நானும் எனது ஊரும் என்ற தலைப்பில்  பாரதிதாசன் வழியில் அழகின் சிரிப்பாய் ஒரு கவிஞர் -
  
    மாமரத்து குயில் ஓசை,
    மஞ்சு விரட்டிய மைதானம்,
    மலர் தேடும் வண்டுகள்,
    ஊஞ்சல் ஆடி விழுந்த ஆலமரம்,
    ஒரே ஒரு முறை ஊருக்குள் வந்து
    போகும் ஒற்றை பேருந்து!
          
                                                 - கவிஞர் சசிகலா ( தென்றல் )
      

சொல் மனமே சொல் என்ற தலைப்பில் மனதை ஆற்றுப் படுத்துகிறார் ஒரு கவிஞர் -

    சரியோ..
  தவறோ
  எதுவாயினும்
  சொல் மனமே சொல்
  நடப்பவை யாவும் நன்மைக்கே என்று

         - கவிஞர் யசோதா காந்த் ( இதமான தென்றல்)


குழந்தைகள் இல்லாத வீடு எப்படி இருக்கும்? சுத்தமும் அமைதியுமே எனக்கு நரகம் என்ற தலைப்பில் நெஞ்சில் ஒரு முள்ளாய், கனத்த இதயத்தோடு  கவிதை வரிகள்.

  வீடு முழுக்க சுத்தமும்
  அறைகள் தோறும் அமைதியுமே
   நரகமாய் இருந்தது
   குழந்தைகள் இல்லாத
   என் வீடு            - கவிஞர் கவிதைவீதி சௌந்தர்


ஒரு  பெண் குழந்தையை அதன் தாய் கொஞ்சுவதற்கும் தந்தை கொஞ்சுவதற்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு. தாயுள்ளத்தோடு குழந்தையை கொஞ்சும் பெண் கவிஞரின் வார்த்தைகளைப் பாருங்கள்!

  குட்டை வண்ணச் சட்டையிலே
  குதித்திரு கைதட்டி
  கும்மாளம் இடுகையிலே எனதுள்ளம்
  குதிக்குதடி விண்ணோக்கி

  கட்டி அணைக்கையிலே கள்ளி! நீ தந்த
  கன்னத்து முத்தமதில்
  என்னுள்ளம் கொள்ளை போகுதடி
  உள்ளமெல்லாம் துள்ளல் கொள்ளுதடி
          
               - கவிஞர் சந்திரகௌரி ( Kowsy Blog )

மதுரை சரவணன் கல்விச் சிந்தனை கொண்ட ஆசிரியர். அவர் தனது கிறுக்கல்கள் என்ற கவிதையில்

எத்தனை முறை வெள்ளையடித்தாலும்
கழிப்பறை சுவர்கள்
ஏதோ ஒரு மாணவனின்
மனக்குமுறலுக்கான
கிறுக்கலுக்காக
காத்துக்கிடக்கின்றன….           மதுரை சரவணன்
  
தாள ஸ்வரங்கள் “ என்ற தலைப்பில் ஒரு கவிஞர், தெருவில்
தோல் கருவியை இசைத்து வித்தைகள் செய்து காசு கேட்கும் சிறுவர்கள் குறித்து …….

காலிவயிற்றின் உறுமல்களை
எதிரொலித்த வாத்தியங்களும்
தன்னிலை மறந்து
தாளமிட்ட கால்களும்
ஓய்வெடுக்கும்
சிலஇடைக்காலத்துளிகளில்,
மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன
தட்டில்விழும் வட்ட நாணயங்கள்;
ஸ்வரம் தப்பாமல்
இறைஞ்சும் குரலுடன் இழைந்து..

                             -    கவிஞர் அமைதிச் சாரல் (கவிதை நேரமிது)

மேலே சொன்ன கவிதைகளின் வடிவம் அகவற்பா  அதாவது ஆசிரியப்பா வடிவிலேயே அமைந்துள்ளன.( நேர், நிரை எனப்படும் தளைகள் மாறுபடலாம்.) எனது இந்தக் கருத்தில் மற்றவர்கள் மாறுபடலாம்.

இளம்வயது மாணவனாக  இருந்தபோது தமிழார்வம் காரணமாக மரபுக் கவிதைகளையும், புதுக் கவிதைகளையும் பக்கம் பக்கமாய்  எழுதியது ஒரு காலம். அவை போன இடம் தெரியவில்லை. இப்போது ஒன்றிரண்டு புதுக் கவிதைகள் வலைப் பதிவில் எழுதுகின்றேன், எனது ஆத்ம திருப்திக்காக.

    குழந்தையின் மனதில் நிகழ் காலம்!
    இளைஞனின் மனதில் எதிர் காலம்!
    முதியவனின் மனதில் கடந்த காலம!
    எந்த காலம் என்றாலும்
    நம்பிக்கையில்தான் நமது காலம்
    நகர்ந்தே செல்கின்றது! 
               
                    -  வாழ்க்கையே போராட்டமாய்! (  எனது எண்ணங்கள் )
Friday 17 February 2012

மின்வெட்டு >>>>>


அன்றைக்கு கிடைத்த அரிக்கேன் விளக்கு
இன்றைக்கு கிடைக்க வில்லை!

மெழுகு வர்த்தியும் தீப்பெட்டியும் பெரும்பாலான
கடைகளில் இருப்பு இல்லை!

இரவில் நேரங்கெட்ட நேரங்களில்
முழிப்பும் முணுமுணுப்பும் தொடர்கதை ஆயிற்று!

மின்னல் வெட்டின் ஜாலம்
மனதில் ரசிக்க முடிந்தது!
மின்வெட்டின் காலம்
சபிக்கத்தான் தோன்றுகிறது!
வேறு என்ன செய்ய முடியும்!

இருட்டினில் கிடைத்த இந்திய சுதந்திரம்
இருட்டிலேயே இன்னமும் இருக்கின்றது! 

(Photo thanks to Photo_ Dictionary (Google)

Friday 10 February 2012

வாழ்க்கையே போராட்டமாய்!


குழந்தையின் மனதில் நிகழ் காலம்!
இளைஞனின் மனதில் எதிர் காலம்!
முதியவனின் மனதில் கடந்த காலம!
எந்த காலம் என்றாலும்
நம்பிக்கையில்தான் நமது காலம்
நகர்ந்தே செல்கின்றது!

அமைதிப் புறாவைப் படைத்தவன் - ஏனோ
வட்டமிடும் வல்லூறையும் படைத்தான்!
துள்ளித் திரியும் மானைப் படைத்தவன் ஏனோ
அடித்துக் கொல்லும் புலியையும் படைத்தான்!
ஒன்றைத் தின்று ஒன்று வாழும் 
உயிர் வித்தை நித்தம் நடக்கின்றது! 

மேட்டைப் படைத்தவன் அருகே
பள்ளத்தையும் படைத்தான்!
விண்ணை முட்டும் சிகரம் உண்டாக்கியவன் - 
அருகே ஆழ்கடல் அமைதியும் தந்தான்!
நல்லிதயங்கள் நடுவே நச்சு மனத்தினர்!
முரண்பாடுகளே படைப்பாய் இருக்கும்போது
வாழ்க்கையே போராட்டமாய் இருக்கின்றது!Wednesday 1 February 2012

கட்டாய ஹெல்மெட்: போலீசாரின் கெடுபிடிகள் தேவையற்றது.


முன்பெல்லாம் ஒரு துறை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அந்தந்த அமைச்சர்களைத் தவிர வேறு யாரும் வெளியில் பேட்டி தர மாட்டார்கள். மாவட்ட கலெக்டர்கள் கூட வாய் திறக்க மாட்டார்கள். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வலுவானதாக இருந்தது. தி.மு.க ஆட்சி காலம் தொடங்கி இப்போது தலை கீழாகப் போய்விட்டது. இப்போதெல்லாம் காவல் துறையினர்தான் பேட்டி கொடுக்கிறார்கள். உள்ளூரில் சில பெரிய மனிதர்கள்! நடத்தும் கடை திறப்புவிழா , காது குத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு அரசாங்க அறிவிப்புகளும் செய்கிறார்கள்.  மாவட்ட நிர்வாகத்தினர் யாரும் கருத்து சொல்வதில்லை. இதற்கு ஒரு உதாரணம் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமுல்படுத்துவதில் போலீசார் காட்டும் அதிக ஆர்வம் மற்றும் கெடுபிடிகள்.

பல மாவட்ட கலெக்டர்கள் யாரும் புதிதாக வரும்போது எந்த அதிரடி அறிவிப்பும் செய்வதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு காவல் அதிகாரி பதவி ஏற்கும்போதும் தவறாமல் சொல்லும் வாசகம் “ ஒண்ணாம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும்என்பதுதான். உடனே ஹெல்மெட் வியாபாரம் சூடு பிடித்து விடும். ஆங்காங்கே பதினெட்டு வயது நிரம்பாத பள்ளி மாணவ, மாணவியரைக் கொண்டு விழிப்புணர்வு என்ற பெயரில் ஊர்வலங்கள் விடுவார்கள்.  அவ்வாறு ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டும் எல்லோரையும் பிடித்து அபராதம் போடுகிறார்களா என்றால் அதிலும் பாரபட்சம்தான்.  அப்பாவிகள்தான் மாட்டுகிறார்கள். இதிலும் சிலர் காசு பார்த்து விடுகின்றனர்.

நமது நாட்டில் தொட்டதெற்கெல்லாம் இரு சக்கர வண்டியைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. பிள்ளைகளைப் பள்ளி கல்லூரி அழைத்துச் செல்ல, அலுவலகம் செல்ல , அவசர பொருட்கள் வாங்க என்று எல்லாவற்றிற்கும் தேவைப் படுகிறது. நமது நாட்டில் பஸ் கட்டணத்தையும் கும்பலையும் பார்த்தால் பயணம் செய்ய யோசிக்க வேண்டியுள்ளது. பஸ்ஸில் சென்று வருவதற்குள் ஒரு நாள் ஆகிவிடுகிறது. பஸ் வசதியும் அடிக்கடி கிடையாது. இரு சக்கர வண்டியை எடுத்தால் ஹெல்மெட் போட்டாயா என்று கேள்வி. ஹெல்மெட் போடுவது குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ளன.

வெளியூர் பயணத்திற்கு செல்லும் முன் இரு சக்கர வண்டிகளை ஸ்டாண்டில் விடும்போது ஹெல்மெட்டைப் பத்திரப் படுத்துவதற்கு படாதபாடு பட வேண்டியுள்ளது. சில ஸ்டாண்டுகளில் ஹெல்மெட் வைக்க தனி கட்டணம் வேறு வசூல் செய்கிறார்கள். சில ஸ்டாண்டுகளில் ஹெல்மெட்டை வைக்க அனுமதிப்பதில்லை. வண்டியை வைத்துவிட்டு கையோடு எடுத்துச் செல்லும்படி சொல்கிறார்கள். பிச்சைப் பாத்திரம் போன்று எங்கு சென்றாலும் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.  ஹெல்மெட் அணிவதால் பின்பக்கம் வரும் வண்டிகளின் சத்தம் கேட்பதில்லை. பலருக்கு ஹெல்மெட் அணிவதால் தலை சுற்றல், முடி உதிர்தல், தலை அரிப்பு போன்ற பிரச்சினைகள். இரு சக்கர வண்டி ஓட்டும் பெண்கள் ஹெல்மெட் அணிவதால் உண்டாகும் சங்கடங்கள் சொல்லவே முடியாது. அவ்வள்வு கஷ்டம். இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே விபத்தில் இருந்து தப்பிக்க முடியுமா? ஹெல்மெட் அணிந்தவர்களே விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை செய்திகளாக பார்க்கிறோம். இப்போது புதிதாக ஹெல்மெட் அணிந்த குற்றவாளிகள் வேறு  உருவாகியுள்ளனர்.

சாலையில் நின்று கொண்டு ஹெல்மெட் போடாதவர்களை ஏதோ தீவிரவாதிகளை துரத்துவது போல் பிடிக்கிறார்கள். அரை பாடி மணல் லாரியில் லைசென்ஸ் இல்லாமல் வேகமாகச் செல்லும் கிளீனர்கள், கறுப்புக் கண்ணாடியை ஏற்றிக் கொண்டு விரைந்து செல்லும் கார்கள், சிக்னலை மதிக்காமல் செல்லும் அரசு அதிகாரிகளின் கார்கள், நான்கு வழிச் சாலையில் விதிகளை மதிக்காத வாகனங்கள், இரவில் பிரகாசமான விளக்குகளில் வரும் வாகனங்கள், செல் போனில் பேசிக் கொண்டு வண்டி ஓட்டுதல் இவைகளைக் கண்டு கொள்வதே கிடையாது. சாலைகளில் ஒழுங்கான பராமரிப்பு இல்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் டிபார்ட்மெண்ட்டிற்கு கேஸ் பிடிக்க வேண்டும் என்பதுதான். உண்மையிலேயே அவர்களுக்கு போக்குவரத்தில் அக்கறை இருந்தால் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். சுலபமான வழி இரண்டு சக்கர வண்டியில் செல்பவனைப் பிடி என்பதுதான்.  அவன் பாவம் செய்தவன். மன்னிப்பே கிடையாது.

சென்ற பொதுத் தேர்தலில் இளைஞர்கள் பல்ரும் திமுகவிற்கு எதிராக வாக்களித்தற்கு முக்கிய காரணம் இந்த ஹெல்மெட் சட்டத்தில் போலீசார் செய்த கெடுபிடிதான். ஏனெனில் கட்டாய ஹெல்மெட் விஷயத்தில் ஆட்சியாளர்கள் அமைதியாக இருந்தாலும் இவர்கள் சும்மா இருப்பதில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள்தான் என்பதைப் போல உள்ளது. கட்டாய ஹெல்மெட் விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிக் கொண்டே சாராயக் கடைகள். புகை பிடித்தல் தீமையானது என்று சொல்லிக் கொண்டே பீடி, சிகரெட் வியாபாரம். அவற்றின் மீது அரசாங்க வரிகள்.   இவைகளைவிட ஹெல்மெட் போடுவதை  மட்டும் ஏன் கட்டாயப் படுத்த வேண்டும்? உண்மையில் இதில் சட்டத்தின் பின்னால்  ஒளிந்திருப்பது நிர்வாகத்தில் யார் பெரியவர் என்ற “ஈகோதான்.

(  Picture  thanks to GOOGLE )