(இப்போது தினசரி செய்திகளாக கோர்ட், வழக்கு, வாய்தா, சாட்சி, தீர்ப்பு – என்று படித்ததன் விளைவாக மனத்துள் எழுந்த கட்டுரை இது)
முன்பெல்லாம், நான்
பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் திருச்சி பெரிய கடைவீதியில், எல்லா ஞாயிறும், பெரும்பாலும்
எல்லா கடைகளுக்கும் விடுமுறையாக கடைகள் மூடியே இருக்கும். அந்நாட்களில் மாலை
வேளைகளில் அந்த கடைகளின் வாசலில் பழைய புத்தகங்கள், காலண்டர் வியாபாரம்
செய்பவர்கள் தரைக்கடை வியாபாரம் செய்வார்கள். காலண்டர் வியாபாரிகள் ஒன்றிரண்டு
படங்களை கடைகளை மூடியிருக்கும் ஷட்டர்களில் (அனுமதியோடுதான்) தொங்க விட்டு
இருப்பார்கள். அவற்றுள் ஒன்று, இறந்த பிறகு, மனிதனுக்கு நரகத்தில் கிடைக்கும்,
அவன் செய்த பாவங்களுக்கான தண்டனைகள் பற்றியது. அதிலுள்ள தண்டனைகளைப் பார்க்கும்
போது வேடிக்கையாக இருக்கும். இந்த மாதிரி படங்களை யாரும் வாங்கி வீட்டில்
மாட்டியதாகத் தெரியவில்லை. இப்போதும் இதுமாதிரி படங்கள் விற்பனைக்கு வருகின்றனவா
என்றும் தெரியவில்லை.
கிட்டத்தட்ட எல்லா
மதத்திலும் பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்ற நம்பிக்கைகள் உள்ளன; “அவரவர்
செய்த பாவங்களுக்கு ஏற்ப கடவுளின் தண்டனை உண்டு; பாவம் செய்தவர்கள் நரகத்தை
அடைந்து தாங்க முடியாத துன்பங்களை அடைவார்கள்” என்ற நம்பிக்கை உண்டு. பாவம் – புண்ணியம் பற்றி கவிஞர்
கண்ணதாசன் தனது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்னும்
நூலில் விரிவாகவே சொல்லி இருக்கிறார். இந்த பாவங்களெல்லாம் மன்னிக்கக் கூடியவைகளே
என்று சொல்லி, ஐரோப்பாவில் பாவமன்னிப்பு
சீட்டுக்கள் விற்று காசு பார்த்த காலமும் உண்டு.
நரக நம்பிக்கை:
இந்த நரகத்தைப் பற்றி
சொல்லும் போது கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரிதான் சொல்கிறார்கள். அதாவது இது
ஒரு தனி உலகம். இறந்து போன ஆத்மாககளில் பாவம் செய்த ஆத்மாககளை தனியாக அடைத்து தண்டிக்கும் உலைக்கூடம். கிட்டத்தட்ட ஒரு பிருமாண்டமான சிறைச்சாலை.. முள்
கட்டையால் அடித்தல், சூலம் போன்ற ஆயுதங்களால் குத்துதல், கொதிக்கும் எண்ணெய்க்
கொப்பறையில் போட்டு எடுத்தல், அக்னி குண்டத்தில் வாட்டுதல் போன்ற காரியங்கள்
செய்தல். எல்லாமே கற்பனைதான். இப்படி பயங்கரமாக சொன்னாலும், இன்றைய மக்கள் யாரும்
பயந்த மாதிரிதான் தெரியவில்லை. அவரவர் தெரிந்தும் தெரியாமலும் பாவங்களை செய்து
கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் நரகம் சம்பந்தப்பட்ட, இண்டர்நெட்டில்
பார்த்த சில படங்களை இங்கு தந்துள்ளேன்.
நரகம் என்றதும்
எனக்கு சட்டென்று நினைவுக்கு வருவது ஸ்ரீ கருட புராணம்.
இந்த புராணத்தை வாங்கியதிலிருந்து மூன்று தடவை படித்து இருக்கிறேன். இந்த புராணம்
பற்றி, அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. ஏனெனில், விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படம் வந்த பிறகு இந்த புராணம், தமிழ் கூறு
நல்லுலகில் பிரசித்தமாகி விட்டது. இந்த நூலில் 28 வகை நரகங்கள் பற்றி
சொல்லப்பட்டுள்ளன.
1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்களைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ரக்ஷணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.
(நன்றி: தினமலர்)
இதில் கூறப்பட்டவை
அனைத்தும் நடக்குமா என்று எனக்கு தெரியாது.
பாவமன்னிப்பு
சீட்டு:
ஐரோப்பாவில் ஒரு காலத்தில் ( 11 தொடங்கி 15, 16 ஆம் நூற்றாண்டுகளில்) INDULGENCES எனப்படும் பாவமன்னிப்பு சீட்டுகள் கிறிஸ்தவ ஆலயங்களில் விற்கப்பட்டன. இதன்படி ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்து. இதன்படி அந்த பாவமன்னிப்பு சீட்டை வாங்கினால் (எந்த பாவத்திற்காக வாங்கினாரோ) அவர் செய்த அந்த பாவம் அவரை விட்டு நீங்கி விடும். பாவம் செய்யும் ஒவ்வொரு தடவையும் வாங்க வேண்டும். எனவே பாவம் செய்த ஒவ்வொருவரும இவற்றை வாங்கியவுடன் அவர்கள் செய்த பாவம் அவர்களை விட்டு நீங்கி விடும்; பாவமன்னிப்பு பெற்று புனிதமடைந்து விடுவார்கள் என்ற கருத்து பரப்பப் பட்டது. ரோமில் இருந்த St. Peter's Basilica போன்ற கிறிஸ்தவ ஆலயங்களை புதுப்பிப்பதற்கும் , தேவாலய செலவுகளுக்கும் என்று இவை விற்கப்பட்டாலும், அந்நாளைய கிறிஸ்தவ பாதிரிமார்களின் ஆடம்பர செலவுகளுக்கே அதிகம் செலவழிக்கப்பட்டது. அப்புறம் காலப்போக்கில் இந்தமுறை நீங்கி விட்டது.
இந்த விவகாரத்தில் JOHANN TETZEL (1465 -1519) என்ற ஜெர்மானிய பாதிரியாரின் பெயர் நிரம்பவும் அடிபட்டது. இவர் ஊர் ஊராகச் சென்று பாவமன்னிப்பு சீட்டுக்களை பொது இடங்களில் விற்றார். இந்த பாவமன்னிப்பு சீட்டுக்களை வாங்குவதன் மூலம், மூடநம்பிக்கை மிகுந்தவர்கள், தாங்கள் நரகத்திற்கு செல்ல மாட்டோம் என்று நம்பினார்கள். இன்னும் சிலர் இந்த சீட்டுக்களை இறந்து போன தங்கள் உறவினர்களுக்காகவும் வாங்கி அவர்களது பாவங்களைப் போக்கினார்கள்.
இந்த முறையைக் கடுமையாகக்
கண்டித்தவர் மார்ட்டின் லூதர் (MARTIN LUTHER (1483 - 1546) எனப்படும் சீர்திருத்தவாதி. இதுபற்றி இவர்
எழுதிய ‘Ninety-Five Theses’ என்ற நூலில்
இவரது கருத்துக்களைக் காணலாம்.
பெரியார் சொன்ன குட்டிக்கதை:
இந்த பாவமன்னிப்பு
சீட்டு சம்பந்தமாக பெரியார் சொன்ன ஒரு சின்னக் கதையும் உண்டு.அதன் சுருக்கம் இங்கே.
ஒரு பாதிரியார் பாவங்களைப் போக்கும் பாவமன்னிப்பு சீட்டுக்களை விற்று வந்தார். அவரிடம் ஒருவன் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக பாவமன்னிப்பு சீட்டுக்களை வாங்கி வந்தான். ஒருநாள் அவன் அந்த பாதிரியிடம் “அய்யா இதுநாள் வரை நான் செய்த பாவங்களுக்கு மட்டும் பாவமன்னிப்பு சீட்டு வாங்கி வந்தேன். இனிமேல் நான் செய்யப் போகும் பாவங்களுக்கும் முன் கூட்டியே சீட்டுக்கள் வாங்கிக் கொள்ளலாமா?” என்று கேட்டான். அதற்கு பாதிரியாரும் சம்மதம் தெரிவித்தார். உடனே பணம் கொடுத்து சில சீட்டுக்களை வாங்கிக் கொண்டான். அவன் ஒரு திருடன். திருடுவது அவன் தொழில். எனவே அவன் சிலநாள் கழித்து, இரவில் அந்த பாதிரியின் வீட்டிலேயே நுழைந்து, கத்தியைக் காட்டி இருக்கும் பணம் எல்லாவற்றையும் கொடுக்கும்படி மிரட்டினான். பாதிரியார் “நீ நரகத்திற்குத்தான் செல்வாய்” என்று அலறினார். அந்த திருடனோ சாவகாசமாக ”அதற்காகத்தான் முன் கூட்டியே உங்களிடமிருந்து பாவமன்னிப்பு சீட்டுகள் வாங்கி விட்டேன்” என்று , அந்த சீட்டுக்களை காட்டிவிட்டு, அவரிடமிருந்த பணம் யாவற்றையும் கொள்ளையடித்து சென்று விட்டான்.
ஒரு பாதிரியார் பாவங்களைப் போக்கும் பாவமன்னிப்பு சீட்டுக்களை விற்று வந்தார். அவரிடம் ஒருவன் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக பாவமன்னிப்பு சீட்டுக்களை வாங்கி வந்தான். ஒருநாள் அவன் அந்த பாதிரியிடம் “அய்யா இதுநாள் வரை நான் செய்த பாவங்களுக்கு மட்டும் பாவமன்னிப்பு சீட்டு வாங்கி வந்தேன். இனிமேல் நான் செய்யப் போகும் பாவங்களுக்கும் முன் கூட்டியே சீட்டுக்கள் வாங்கிக் கொள்ளலாமா?” என்று கேட்டான். அதற்கு பாதிரியாரும் சம்மதம் தெரிவித்தார். உடனே பணம் கொடுத்து சில சீட்டுக்களை வாங்கிக் கொண்டான். அவன் ஒரு திருடன். திருடுவது அவன் தொழில். எனவே அவன் சிலநாள் கழித்து, இரவில் அந்த பாதிரியின் வீட்டிலேயே நுழைந்து, கத்தியைக் காட்டி இருக்கும் பணம் எல்லாவற்றையும் கொடுக்கும்படி மிரட்டினான். பாதிரியார் “நீ நரகத்திற்குத்தான் செல்வாய்” என்று அலறினார். அந்த திருடனோ சாவகாசமாக ”அதற்காகத்தான் முன் கூட்டியே உங்களிடமிருந்து பாவமன்னிப்பு சீட்டுகள் வாங்கி விட்டேன்” என்று , அந்த சீட்டுக்களை காட்டிவிட்டு, அவரிடமிருந்த பணம் யாவற்றையும் கொள்ளையடித்து சென்று விட்டான்.
இந்த பாவமன்னிப்பு
சீட்டுகளும் இப்போதும் பரிகாரம் என்ற பெயரில் சிலரால் செய்யப்படும் பணம் பறிக்கும்
சமாச்சாரங்களும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கின்றன.
(ALL
PICTURES COURTESY: GOOGLE IMAGES)
கட்டுரை எழுத
உதவியவை(நன்றியுடன்):
Wikipedia (English
& Tamil)
ஸ்ரீ கருட புராணம்
(பிரேமா பிரசுரம்,சென்னை)
தினமலர் மற்றும் விடுதலை






