Monday, 25 November 2013

ஏழைபடும்பாடு ( LES MISERABLES )


சுமார் 40 வருடங்களுக்கு முன்னர், எனது மாணவப் பருவத்தில் நான் படித்த தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் இரண்டு. ஒன்று ஏழைபடும்பாடு. மற்றொன்று இளிச்சவாயன். பிரெஞ்சு இலக்கியத்தில் முக்கிய இடம் வகிப்பவர் விக்டர் ஹ்யூகோ ( VICTOR HUGO ) அவர் எழுதிய “ LES MISERABLES “  என்ற  நாவலை ஏழைபடும்பாடு “ என்ற பெயரில் யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்து இருந்தார். அதேபோல விக்டர் ஹ்யூகோ எழுதிய இன்னொரு L’HOMME QUI RIT (THE MAN WHO LAUGHS )  என்ற நாவலை இளிச்சவாயன்  என்ற பெயரில் தமிழில் தந்தார்.

ஏழைபடும்பாடு கதைச் சுருக்கம்:

ஜாம் வல் ஜான் (Jean Valjean) ஒரு மரம் வெட்டும் தொழிலாளியின் மகன். சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்தவன். கணவனை இழந்த ஆதரவற்ற தனது சகோதரிக்காகவும் அவளது எட்டு குழந்தைகளுக்காகவும் ரொட்டிக் கடையில் திருடும்போது பிடிபட்டு தூலோன் ( Toulon) சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறான். இடையிடையே சிறைச்சாலையிலிருந்து தப்புதல், சின்னச் சின்ன குற்றங்கள் என்று. 19 வருட சிறை தண்டனை அனுபவிக்கிறான். பின்னர் விடுதலையாகி வெளியில் வரும் அவனுக்கு மஞ்சள் பாஸ்போர்ட் (Yellow Passport) தருகிறார்கள். அதில் அவன் ஒரு குற்றவாளி என்ற விவரம் சொல்லப்பட்டு இருக்கும். எங்கு சென்றாலும் அவன் அதனைக் காட்டவேண்டும். அவன் குற்றவாளி என்பதால் அவனுக்கு உண்ண உணவும் தங்கும் இடமும் மறுக்கப் படுகிறது.

வெளியில் வந்ததும் அவனது சகோதரியைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் விசாரிக்கிறான். அவள் பாரீசில் ஏழு வயதான ஒரு குழந்தையோடு அச்சுக் கூடத்தில் கூலி வேலை செய்வதாகக் கேள்விப்பட்டான். மற்ற குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. பின்னர்  அவன் பாரிசுக்கு வெளியே திங்கு (Digne) என்ற நகருக்கு வருகிறான். அங்கு தனக்கு அடைக்கலம் கொடுத்த மிரியல் (Myriel) என்ற பாதிரியார் வீட்டில் வெள்ளி விளக்குகளை திருடி போலீசாரிடம் சிக்க, அவர்கள் ஜாம் வல் ஜானை பாதிரியாரிடம் கொண்டு வருகிறார்கள். அந்த பாதிரியார் அந்த வெள்ளி விளக்குகளை அவன் திருடவில்லை என்றும், தானே அவனுக்கு கொடுத்தத்தாகவும் சொல்லி காப்பாற்றுகிறார். பின்னர் அவனுக்கு அறிவுரை சொல்லி நல்வழிப்படுத்துகிறார். இதனால் மனம் திருந்திய ஜாம் வல் ஜான் தனது பழைய வாழ்க்கையை மறந்து மதேலன் (Madeleine) என்ற பெயரில் தன்னுடைய உழைப்பால் மாந்த்ரேல் நகரில் ஒரு கண்ணாடி தொழிற்சாலையை நிறுவி ஏழை மக்களுக்கு உதவுகிறான்.  அவனுடைய சேவை மனப்பான்மயைக் கண்ட அந்நகரத்து மக்கள் அவனை மேயராக்குகிறார்கள். அப்போது ஜாம் வல் ஜானின் பழைய வாழ்க்கையை தெரிந்த  இன்ஸ்பெக்டர் ஜாவர் ( Javert) என்பவன் அந்த ஊருக்கு போலீஸ் அதிகாரியாக வருகிறான். அவன் பழைய குற்றவாளியான மேயர் மதேலன் என்ற ஜாம் வல் ஜானை கைது செய்ய அலைகிறான்.

மதேலன் தொழிற்சாலையில் பாந்தேன் ( Fantine ) என்ற பெண் வேலை செய்து வருகிறாள். அவளை இன்ஸ்பெக்டர் ஜாவர் விபச்சாரம் செய்ததாக கைது செய்கிறான். அவளது துன்பக் கதையையும் கோஸத் (Cosette) என்ற அவளது மகள் தென்னாடியர்(Thénardier) என்பவனது விடுதியில் வேலைக்காரியாக கஷ்டப்படுவதையும் கேட்டு மேயர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்கிறான். அவளது மகளை தென்னாடியரிடமிருந்து மீட்டுத் தருவதாகவும் உறுதி சொல்கிறான். இதற்கிடையே ஒரு திருடனை  ஜாம் வல் ஜான் என்று கைது செய்கிறார்கள். மனசாட்சி உறுத்த கோர்ட்டில் தான்தான் அந்த உண்மையான ஜாம் வல் ஜான் என்று சொல்லி அந்த கைதி  விடுதலை பெற வழி வகுக்கிறான்.. தனது மகள் என்ன ஆவாளோ என்ற அதிர்ச்சியில் பாந்தேன் இறந்து விடுகிறாள் இன்ஸ்பெக்டர் ஜாவர் அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறான். கைதிகளிடையே கப்பலில் வேலை செய்தபோது பாய்மரத்தில் ஏறிய ஒரு மாலுமி கீழே விழும் நிலையில் கதறுகிறான். அவனைக் காப்பாற்றிவிட்டு, கடலில் விழுந்து யாருக்கும் தெரியாமல் தப்பி விடுகிறான். உலகம் அவன் இறந்ததாக நம்புகிறது.

தப்பிய அவன்  போஷல்வான் என்ற பெயரில், கோஸத்தைக் கண்டு பிடிக்கிறான். விடுதி நடத்தி வந்த தென்னாடியரிடமிருந்து அவளை பணம் கொடுத்து, விடுதலை செய்து அவளை ஒரு கிறிஸ்தவ கன்னியர் மடத்தில் சேர்த்து விடுகிறான். கோஸத்தை தனது வளர்ப்பு மகளாகவே ஏற்றுக் கொள்கிறான். வளர்ந்து பெரியவளான கோஸத்தை மாரியன்(Marius) என்ற இளைஞன் விரும்புகிறான். அவளும் அவனை விரும்புகிறாள். ஜான் வல் ஜான் இறந்ததை நம்பாத இன்ஸ்பெக்டர் ஜாவர்  கடைசியில் அவனைக் கண்டு பிடித்து கைது செய்யப் போகிறான். தனது மனசாட்சி உறுததியதால்,  அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸேன் (Seine) என்ற நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான். இறுதியில் மாரியனையும் கோஸத்தையும்  சேர்த்து வைத்துவிட்டு ஜான் வல் ஜான் இறக்கிறான்.

( இங்கு கதாபாத்திரங்களின் பெயர்களை யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் சொன்னபடியே குறிப்பிட்டு இருக்கிறேன்)

தழுவல் மொழிபெயர்ப்பு:

ஏழைபடும்பாடு என்ற பெயரில் யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அந்த பிரெஞ்சு நாவலை அப்படியே வரிக்கு வரி மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அவர் அந்த பிரெஞ்சு நாவலை தழுவல் நடையில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இருந்தார்.கதை நாயகனை ஜாம் வல் ஜான் என்று குறிப்பிடுகிறார்.பிரான்சில் இந்தக் கதை நடக்கும் சமயம் பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றது. சுத்தானந்த பாரதியார் இந்த நாவலை அந்த புரட்சியோடு இங்கு நடந்த இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு தகுந்தவாறு மாற்றி ஒப்பிட்டு வசனங்கள் எழுதினார்.

பிரெஞ்சுப் புரட்சி, வாட்டர்லூ சண்டை, அந்தக் கால பாரீஸ் அண்டர் கிரவுண்ட் சாக்கடைகளில் திருடர்கள் மறைந்து வாழ்தல், திருடர்களின் சாகசம், கிறிஸ்தவ கன்னியர் மடம், கல்லறைத் தோட்டம் , சவப் பெட்டியின் உள்ளே படுத்து தப்புதல் - என்று அந்தக்கால பிரான்ஸைப் பற்றி சுவைபட தெரிந்து கொள்ளலாம்.

விடுதி நடத்திய தென்னாடியர் (Thénardier) என்ற பாத்திரப் படைப்பை முழுக்க முழுக்க தமிழ் நகைச்சுவை பாத்திரமாகவே காணலாம்.

இடையிடையே தான் எழுதிய கதைக்குப் பொருத்தமாக சில பாடல்களையும் அவர் இயற்றி சேர்த்துள்ளார்.

பாந்தேனின் காதலன் தொலோமியே விடுதி ஒன்றில் குடித்து விட்டு பாடுகிறான்.

இன்பமா யிருப்போம்!
  இகத்தினிற் சுகிப்போம்!
அன்பினிற் களிப்போம்!
  ஆசையை நிறைப்போம்!
துன்பத்தை மறப்போம்!
  துயர்களைப் பொறுப்போம்!
நண்பரே, காதலாம்!
  நல்விரு துகப்போம்!  
               - ( அத்தியாயம் - 15)

எபோநி என்பவளது தம்பி குரோஷன் பாடிவதாக ஒரு பாடல்.

கட்டுகளைஉடைப்போம் எங்கள்
  கைவலியுள்ள மட்டும்
முற்றுகை போட்டெதிர்ப்போம் எதிர்
  மூளும் பகைச் சினவாள்
வெட்டி மடித்திடினும் அஞ்சா
  வீரராக விழுவோம்!
சுட்டுப் பொசுக்கிடினும் நாங்கள்
  சுதந்தரராய் இறப்போம்  
                   - ( அத்தியாயம் - 92)

ஆரம்பத்தில் பிரெஞ்சுப் புரட்சியாளர்களை வெறுத்த ஒரு தாத்தா பினனர் அவர்களைப் பாராட்டி பாடுகிறார்.

குடியரசு வாழ்க வாழ்கவே
முடியரசு வீழ்க வீழ்கவே
கொடியுயர்த்தி வீர பேரிகை
கொட்டுவோம் உக்லக மெங்குமே!
குடியரசு வாழ்க வாழ்கவே
-          ( அத்தியாயம் 105 )

சினிமாவில் ஏழைபடும்பாடு:

இந்த நூலை மையமாக வைத்து ஏழைபடும்பாடு என்ற பெயரில் ஒரு தமிழ் திரைப்படம். வெளிவந்தது. பழைய முதுபெரும் நடிகர் நாகையா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் ஜாவர் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சீதாராமன் என்ற எழுத்தாளர் ஜாவர் சீதாராமன் ஆனார். இவர் பட்டணத்தில் பூதம் என்ற படத்தில் ஜீபூம்பா என்ற பூதமாக வந்தவர்.  

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் “ ஞானஒளி . அதில் தனக்கு அடைக்கலம் கொடுத்த கிறிஸ்தவ பாதிரியாரிடமே வெள்ளி குத்து விளக்குகளை ஒருவன் திருடி விடுவதாக கதை ஒன்று சொல்லுவார்கள். அந்த திருடனை கையும் களவுமாக காவலர்கள் பிடித்துக் கொண்டு பாதிரியாரிடம் வரும்போது,அவர் அவனைக் காட்டிக் கொடுக்காது நல்வழிப் படுத்துவார். அந்த காட்சிக்கு அடிப்படை இந்த ஏழைபடும்பாடு என்ற நாவல்தான்.

(நான் படித்த இந்த ஏழைபடும்பாடு: என்ற நூல் நான்காம் பதிப்பாக 1952 ஆம் ஆண்டு சுத்த நிலையம் வெளியிட்டதாகும். இந்த நூலை இப்போது மணிவாசகர் பதிப்பகம், சென்னை மற்றும் கவிதா பதிப்பகம், சென்னை ஆகியோர் அழகுற வெளியிட்டு இருக்கிறார்கள். 400 பக்கங்கள்..)( PICTURES   THANKS TO  “ GOOGLE ” ) * மணிவாசகர் பதிப்பகத்தாரின் அட்டைப்படம் மட்டும் என்னால் எடுக்கப்பட்டது)

         

Monday, 18 November 2013

என்னைக் கவர்ந்த கிறிஸ்தவ கீதங்கள்எனது சிறு வயதிலிருந்து எனக்கு திருமணம் ஆகும் வரை  நாங்கள் திருச்சி டவுனில் இருந்தோம்..(இப்போது புறநகர்) நாங்கள் வசித்த இடம் கிறிஸ்தவர்கள் நிறைந்த பகுதியாகும். மேலும் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்தது ஹோலிகிராஸ் கான்வெண்ட் நடத்திய ஒரு கிறிஸ்தவ ஆரம்பப் பள்ளி ஆகும். எனவே நான் ஒரு இந்து என்றாலும், எனக்கு மத வேறுபாடு கடந்த கிறிஸ்தவ நண்பர்கள் உண்டு. அவர்களது ஆலயங்களுக்குச் செல்வது, நல்லது கெட்டது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது என்ற வகையில், அவர்களுடைய ஜெப முறைகளையும் அவர்களது கிறிஸ்த பாடல்களையும் நான் அறிவேன். அந்த வகையில் திருச்சி: புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church) http://tthamizhelango.blogspot.com/2012/09/st-lourdes-church_9.html என்று ஒரு பதிவையும் எழுதியுள்ளேன். இங்கு எனது மனம் கவர்ந்த சில கிறிஸ்தவ கீதங்களையும் அதனைச் சார்ந்த சில நிகழ்வுகளையும் குறிப்பிட விரும்புகிறேன். பாடல்களில் தொடக்கத்தில் உள்ள வரிகளை மட்டும் குறிப்பிட்டு உள்ளேன்.

கேளுங்கள் தரப்படும்

நாங்கள் முன்பு வசித்த வீட்டிற்கு அருகில் சர்ச் ஒன்று உண்டு. கிறிஸ்துமஸ் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னரே மூங்கில் குச்சிகளைக் கொண்டு “கிறிஸ்துமஸ் கூண்டு தயார் செய்தல், இயேசு பிறந்த மாட்டுக் கொட்டகை ஜோடித்தல், கலர்க் காகிதங்களைக் கொண்டு கொடிகள் செய்து தோரணங்கள் கட்டுவது என்று வேலைகள் நடக்கும். சிறுவனான நானும் அதில் பங்கு கொள்வேன். அந்த சர்ச்சில் விழாக் காலங்களில் ஒலிபெருக்கியில் முதலில் பாடும்பாடல்  கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் ... ... “ என்று தொடங்கும் பாடல்தான். இன்றும் அந்த கணீர் குரலில் தொடங்கும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அந்தநாள் ஞாபகங்கள் வந்துவிடும்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு 
தேடுங்கள் கிடைக்குமென்றார் 
பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா 

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்.  

எனை ஆளும் மேரி மாதா
 
அப்போதைய மறக்க முடியாத இலங்கை வர்த்தக ஒலிபரப்பு வானொலியில் எல்லா சமயப் பாடல்களையும் காலையில் ஒலி பரப்புவார்கள். அவற்றுள் மிஸ்ஸியம்மா ( ஜெமினி கணேசன் சாவித்திரி நடித்தது ) படத்தில் வரும் “ எனை ஆளும் மேரி மாதா “ என்று தொடங்கும் பாடலை அடிக்கடி ஒலி பரப்புவார்கள்.

எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா

எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா

பரிசுத்த ஆவியாலே
பரபுத்ரன் ஈன்ற தாயே
பரிசுத்த ஆவியாலே
பரபுத்ரன் ஈன்ற தாயே
ப்ரபு ஏசு நாதன் அருளால்
புவியோரும் புனிதம் அடைந்தார்

எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா

( படம்: மிஸ்ஸியம்மா (1955) - பாடல்: தஞ்சை ராமையாதாஸ்- பாடியவர் P லீலா இசை S ராஜேஸ்வர ராவ் )

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள். 
 
இடைவிடா சகாயமாதா:
 
திருச்சி பாலக்கரையில் சகாயமாதா கோவில் உள்ளது. என்னைவிட மூத்தவர், ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்த மார்ட்டின் என்பவர். அவர் ஒவ்வொரு புதன்கிழமையும் பணி முடிந்ததும் மாலைவேளை இந்த கோயிலுக்கு செல்வார். ஒருமுறை அவர் என்னையும் இந்த கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பிரார்த்தனைக்கு முன்னர் அந்த சர்ச்சில் சில பாடல்களை ஒலிபரப்பினர். அவற்றுள் எனது மனங் கவர்ந்த பாடல்  
“இடைவிடா சகாயமாதா “ என்று தொடங்கும் பாடல். இன்று அந்த மார்ட்டின் உயிரோடு இல்லை.

இடைவிடா சகாயமாதா
இணையில்லா தேவமாதா 
பாவவினை தீர்ப்பாள்
பதமுனை சேர்ப்பாள் 
நிதம் துணை சேர்ப்பாயே

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்.

நீலக் கடலின் ஓரத்தில்:

கிறிஸ்தவ சமயம் சார்ந்த பல் திரைப் படங்கள் ஆங்கிலத்திலும் , தமிழிலும் வந்துள்ளன. ஆங்கிலத்தில் வெளிவந்த THE TEN COMMANDMENTS மற்றும் BENHUR இரண்டையும் மிகவும் ரசித்தவன் நான். இவற்றுள் பத்துக் கட்டளைகள் படம் பற்றி  திரைப் படம் - பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS)  http://tthamizhelango.blogspot.com/2012/10/ten-commandments.html என்ற பதிவையும் எழுதி உள்ளேன்.

கவிஞர் கண்ணதாசன் சிறந்த கவிஞர். அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் ( பத்து பாகங்கள் ) என்ற நூல் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. அவர் இந்து மதத்தில் ஈடுபாடு மிக்கவராயினும் சமய நல்லிணக்கம் கொண்டவர். அவர் படைத்த “இயேசு காவியம் என்ற நூலே இதற்கு சான்று. அவர் “அன்னை வேளாங்கண்ணிஎன்ற படத்திற்காக எழுதிய நீலக் கடலின் ஓரத்தில்என்று தொடங்கும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நீலக்கடலின் ஓரத்தில்
நீங்கா இன்பக் காவியாமாம்...
தென்னை உயர பனை உயர
செந்நெல் உயர்ந்து வளம் செழிக்கும்
வேளாங்கண்ணி என்னும் ஊராம்

(பாடல்: கண்ணதாசன் படம்: அன்னை வேளாங்கண்ணி பாடியவர்கள்:T.M.சௌந்தரராஜன் & P மாதுரி, இசை: ஜி தேவராஜன் )

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்
  
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்:


நாங்கள் இருந்த பகுதியில் கடைவீதியில் டேவிட் என்ற பெரியவர் “ டேவிட் மளிகை “ என்ற பலசரக்கு கடை வைத்து இருந்தார். அவரிடம்தான் எங்களுக்குத் தேவையான மளிகை சாமான்களை வாங்குவோம். அவர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு  சென்று இருந்தபோது, மணமக்கள் மேடைக்கு வரும் வரை கிறிஸ்தவ கீதங்கள் பலவற்றை ஒலி பரப்பினார்கள். அவற்றுள் ஒன்று கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் “ என்று தொடங்கும் இந்த பாடல் -

கட்டடம்  கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியால்  வைத்து அடித்தல்ல
ரம்பத்த்தால்  மரத்தை அறுத்தல்ல

ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம்  கற்களாலே
உத்தமர் இயேசுவே  அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார்

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்.

மேலே சொன்ன திருமண நிகழச்சியில் மணமக்கள் மேடைக்கு வந்து அமர்ந்தவுடன் அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல்

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம்
இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம்

மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி 
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி 
நல்மணமக்கள் மீது நாம்...
எல்லா மலரும் தூவிடுவோம்.

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம்
இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம்

மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன் 
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க...
நம் வேண்டுதலோடு தூவிடுவோம்.

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்.


இவைகள் மட்டுமல்லாது இன்னும் பாடல்கள் உண்டு. இங்கு எழுத இடமும், உங்களுக்கு படிக்க நேரமும் இல்லாத படியினால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

(PICTURES  &  VIDEOS  THANKS  TO  GOOGLE) Monday, 11 November 2013

திருச்சி: 1977 புயல் வெள்ளத்தில் நான்அன்று சனிக்கிழமை. ( 1977 நவம்பர் 12 ) மணப்பாறையில் வங்கியில் பணி புரிந்து கொண்டு இருந்தேன். திருச்சியிலிருந்து வேலைக்கு கிளம்பும்போதே புயல் பற்றிய செய்திகளைச் சொல்லி வானொலியும் பத்திரிகைகளும் பயமுறுத்தின. வங்கியில் பெயருக்குத்தான் சனிக்கிழமை அரைநாள் வேலைநேரம். ஆனால் முழுநாள் வேலை இருக்கும். அன்றும் அப்படித்தான். காசாளராக வேலை பார்த்துக் கொண்டு இருந்தபோது கடுமையான காற்று வீசியது. கூடவே மழை. மின்தடை ஏற்பட்டதால் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் பணிகளை முடித்தோம்.

மணப்பாறை திருச்சி:

மணி மாலை 3 மணி இருக்கும். வெளியே வந்தேன். மழை விட்டு இருந்தது. புயலுக்குப் பின்னே அமைதி. மணப்பாறை பஸ் நிலையத்தில் மழைத் தண்ணீர் வாய்க்கால் போல் ஓடிக் கொண்டு இருந்தது. வேடசந்தூர் - குடகனாறு அணை உடைந்து விட்டதாகவும்  ஊரை சுற்றி வெள்ளமாகவும் மரங்கள் விழுந்து கிடப்பதாலும் பஸ், ரெயில்  கிடையாது என்று சொல்லி விட்டார்கள். ஏதோ ஒரு புண்ணியத்தில்  தனலட்சுமி ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி பஸ் ஒன்று வந்தது. திருச்சிக்கு செல்பவர்கள் அனைவரும் அதில் ஏறிக் கொண்டோம்.

பஸ்ஸில் செல்லும்போது வீடு சென்று கொண்டு இருக்கும்போது ஒழுங்காக வீடு சென்று சேருவோமா என்ற பயம். எங்கு பார்த்தாலும் வெள்ளம். சாலையில் ஆங்காங்கே தண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. மரங்கள் விழுந்து கிடந்தன. சாலை போக்குவரத்து அதிகம் இல்லை. எதிரில் வரும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கை சொன்னபடியே சென்றார்கள். பஸ் டிரைவர் சாமர்த்தியமாகவும் மெதுவாகவும் ஓட்டினார். ஆலம்பட்டிபுதூர் வானொலி நிலையம் டவர் அருகே வந்தபோது குறுக்கே ஒரு பெரியமரம் சாலையை அடைத்துக் கொண்டு கிடந்தது. பஸ்ஸை டிரைவர் நிறுத்தி விட்டார். உடனே காரில் இருந்த அனைவரும் அவரவர் பங்கிற்கு மரக் கிளைகளை ஒடித்து போட்டோம். பயணிகளில் ஒருவர் வைத்து இருந்த அரிவாள் கொஞ்சம் பெரிய கிளைகளை வெட்ட உதவியது. பஸ் செல்லும் அளவிற்கு பாதை ஏற்பட்டது. அப்போது  எங்கள் பஸ்சிற்கு பின்னால் வந்து நின்று கொண்டு  இருந்த கார்களில் இருந்து யாருமே இறங்கவில்லை. பாதை ஏற்பட்டதும் அதில் இருந்து ஒருவர் இறங்கி வந்து இரு கைகளையும்  கூப்பி நன்றி சொன்னார். அவர் நடிகர் கமலஹாசன். நிறைய பேர் அவரிடம் கைகுலுக்க ஓடினார்கள். பின்னர் அவர் வந்த காரும் உடன் வந்த காரும்  எங்களுக்கு முன்னால் செல்ல வழி கொடுத்தார்கள். கமலஹாசன்  காரில் இருந்தபடியே  கையசைத்து விட்டு சென்றார். அதன்பிறகு  பஸ் கிளம்பியது. ராம்ஜிநகரைத் தாண்டியதும் இன்னொரு சோதனை. கோரையாறு வழிந்து கொண்டு இருந்தது. பாலத்தின் மீது பஸ் மெதுவாக கடந்தது. அங்கே அடுத்த கரையில் கருமண்டபத்தில் சாலையில் மக்கள் வெள்ளம். ஊருக்குள் தண்ணீர் நுழைந்து விட்டதாகச் சொன்னார்கள் ஒருவழியாக திருச்சிக்கு மாலை வீடு வந்து சேர்ந்தேன். திருச்சி நகரம் முழுக்க புயல் வெள்ளம் காரணமாக ஒரே பரபரப்பு.   

 1977 நவம்பர் 13 - எங்கள் பகுதியில் வெள்ளம்:

அப்போது நாங்கள் திருச்சி சிந்தாமணி பகுதியில் வாடகைக்கு குடியிருந்தோம். காவிரி ஆற்றில் வெள்ளம் என்றால் முதலில் பாதிக்கப்படுவது சிந்தாமணிதான். அன்று காலை ( 1977 நவம்பர் 13 ) நான் ஊர் எப்படி இருக்கிறது என்று பார்க்க வெளியில் சென்றேன். இப்போது சத்திரம் பேருந்து நிலையமாக இருக்கும் இடம், அன்று செயிண்ட் ஜோசப் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியாகும். அதன் அருகில் உள்ள வயல்கள் யாவும் கோணக்கரை - குடமுருட்டி ஆறு வரை தண்ணீர் மயம். அப்புறம் காவிரிபாலம் வந்தேன். பாலத்தை தொட்டபடி ஆற்றில் தண்ணீர் வேகமாக ஓடியது. எதிரே ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதி கடலுக்கு அப்பால் இருப்பது போல் தெரிந்தது. ஸ்ரீரஙத்திற்கு எந்தநேரமும் ஆபத்து வரலாம் என்று பயமுறுத்தினாரகள். ஆற்றில் பல வீடுகளின் கூரைகள், வைக்கோல் போர்கள், பீரோக்கள், கட்டில்கள் என்று பல பொருட்கள் அடித்து வரப்பட்டன. சிலர் பாலத்தின் கீழே கரையில் ஒதுங்கும் பொருட்களை  “எரிகிற கொள்ளியில் இழுத்தவரை லாபம் என்று கயிறு வீசி எடுத்துக் கொண்டு இருந்தனர்.

அன்று மாலை, உறையூர்க்காரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கோணக்கரையை இடிக்கப் போவதாவும். நாங்கள் இருக்கும் பகுதியில் வெள்ளம் வந்துவிடும் என்றும் சொன்னார்கள். எனவே எப்பொழுதும் சூட்கேசில் இருக்கும் சர்ட்டிபிகேட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு முன்னே செல்லுமாறு சொன்னேன்.  அப்பா, அம்மா, தங்கை மூவரும் பாதுகாப்பான இடம் தேடி சென்றார்கள். நாங்கள் இருந்தது ஒரு ஓட்டு வீடு. நான் வீட்டை பூட்டிவிட்டு வருவதற்குள் தண்ணீர் வந்துவிட்டது. மெயின்ரோடு வருவதற்குள் இடுப்பளவு தண்ணீர் வேகமாக வந்தது. மேலும் மேலும் வெள்ளம் உயர்ந்து கொண்டே வந்தது. அருகில் இருந்த லாட்ஜ் கட்டிடத்தில் இருந்து “ மேலே வாருங்கள் மேலே வாருங்கள் “ என்று என்னைப் பார்த்து கத்தினார்கள். நான் தட்டு தடுமாறி அந்த கட்டிடத்தின் மாடிப்படிகளில் ஏறி சென்றேன். கண் எதிரேயே வலுவிழந்த பல வீடுகள் இடிந்து விழுந்தன. என்னுடைய அப்பா, அம்மா, தங்கை என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. விடிய விடிய அந்த கட்டிடத்திலேயே இருந்தேன். அடுத்தநாள் காலை கீழே இறங்கி வந்தேன். தண்ணீர் வடியவே இல்லை. தெரிந்தவர்களை விசாரித்த போது என்னுடைய பெற்றோர் தங்கை மூவரும் தெரிந்த செட்டியார் வீட்டு மாடியில் ஏறி தப்பித்து இருப்பதாகச் சொன்னார்கள்.திருச்சி சிந்தாமணி அண்ணா சிலைக்கும் ஆண்டார் தெரு பகுதிக்கும் படகுகள் விட்டு வயதானவர்களையும் பெண்களையும் மீட்டுச் சென்றார்கள்.


ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி செய்த உதவி:
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோர் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தார்கள். நாங்கள் எங்கள் அப்பாவின் நண்பர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு செல்வது என்று முடிவெடுத்து அங்கே சென்றோம். கூடவே அப்போது ஊரிலிருந்து வந்து சித்தப்பாவின் வீட்டில் இருந்த வயதான அப்பாயியையும் ( அப்பாவின் அம்மா ) அழைத்துக் கொண்டோம். ஆசிரியரைப் பற்றி சில வரிகள். பிராமண சமூகத்தைச் சேர்ந்த அவர் ஆர் சி உயர்நிலைப் பள்ளியில், உதவித் தலைமை ஆசிரியராக இருந்தவர். இந்து மதத்தில் மட்டுமன்றி , கிறிஸ்தவ மதத்திலும் ஈடுபாடு கொண்டவர். கிறிஸ்தவ கீதங்கள் நன்றாக பாடுவார். அடித்தட்டு மக்களுக்கு இலவச கோச்சிங் மற்றும் சமூக சேவைகள் பல செய்தவர்..அவரது வீடு வடக்கு ஆண்டார் தெருவில் இருந்தது. அவர் வீட்டில் நாங்கள் ஒருவாரம் தங்கி இருந்தோம். ஆசிரியர் குடும்பத்தார் எல்லோருமே எங்களை அவர்கள் வீட்டு விருந்தாளியாகவே வைத்துக் கொண்டனர் 

எங்கள் பகுதியில் வெள்ளம் வடிந்தவுடன் எங்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தேன். வீட்டில் இருந்த எல்லா பொருட்களும் வெள்ளத்தால் முற்றிலும் நாசமாகி இருந்தன. நாங்கள் வைத்து இருந்த புத்தகங்கள் யாவும் சேற்றால் உருக்குலைந்து போய் கிடந்தன. தெருவெங்கும்  வெள்ளக் குப்பைகளோடு நாற்றம். வீட்டை சுத்தம் செய்யவே ஒரு வாரம் தேவைப்படும். எனவே ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் நன்றி சொல்லி விட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் பேர் தங்கியிருந்த திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் தங்கினோம். அங்கு தங்க இடமும் உணவும் கொடுத்தார்கள். 

 மேட்டூர் அணை உடைந்த கதை:
        (  1977 வெள்ளத்தில் S R  கல்லூரி .படங்க்ள் உதவி: S R College , Trichy)

வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மணப்பாறை மற்றும் பல இடங்களுக்கு பஸ் வசதி இல்லை. எனவே வேலைக்கும் செல்ல இயலவில்லை. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருச்சி நகரப் பகுதிகளை பார்த்து வர நடந்து சென்றேன். செயிண்ட் ஜோசப் கல்லூரி, இ ஆர் உயர்நிலைப் பள்ளி , சாவித்திரி வித்தியா சாலை, எஸ் ஆர் கல்லூரி மற்றும் தில்லைநகர் , உறையூர் , புத்தூர் என்று எல்லாமே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள். (இன்றும் வெள்ளம் வந்ததின் நினைவாக செயிண்ட் ஜோசப் கல்லூரி கட்டிடங்களில்  H.F.L - NOVEMBER, 13, 1977 ( H.F.L என்றால் HIGH FLOOD LEVEL ) என்று எழுதப் பட்டு இருப்பதைக் காணலாம்.மக்கள் கூட்டம் கூட்டமாக தங்க இடம் கிடைத்த பகுதிகளில் தங்கி இருந்தனர். தென்னூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று எல்லோரும் வேகமாக ஓட ஆரம்பித்தனர். பஸ், கார் என்று  அனைத்து வாகனங்களும் சாலையில் வேகமாகச் சென்றன. ஓடிக் கொண்டிருந்த ஒருவரிடம்  என்ன விஷயம் என்று கேட்டேன். “மேட்டூர் அணை உடைந்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம மலைக்கோட்டை மூழ்கி விடும் “ என்று சொல்லிக் கொண்டே ஓடினார். நானும் எனது பங்கிற்கு இருப்பிடம் நோக்கி ஓடத் தொடங்கினேன். அப்போது போலீஸ் ஜீப்பில் மைக்கில் “ மேட்டூர் அணை உடையவில்லை. வதந்தியை யாரும் நம்பாதீர்கள் “ என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள். அதன் பிறகுதான் வீதியில் அமைதி திரும்பியது.

அப்புறம் ஒரு வாரம் சென்று எல்லோரும் பழையபடி வீட்டிற்கு திரும்பினோம். சுத்தம் செய்தாலும் ஒரு மாதத்திற்கும் மேல் வெள்ளத்தின் வாடை போகவில்லை.
  
செய்திச் சுருக்கம்:

அப்போது வந்த புயல் வெள்ளம் பற்றிய  செய்திச் சுருக்கம் இதுதான்:

நாகப்பட்டினத்துக்கு கிழக்கே வங்க கடலில் உருவான புயல் நவம்பர் 12-ந்தேதி தமிழ்நாட்டுக்குள் புகுந்து மணிக்கு 65 மைல் வேகத்தில் வீசியது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. நாகப்பட்டினம் வெளி உலகில் இருந்து 5 நாட்கள் துண்டிக்கப்பட்டு கிடந்தது.

திருச்சி அருகேயுள்ள கோரை ஆறு உடைப்பு எடுத்துக் கொண்டதால் திருச்சி கிராபட்டி, புத்தூர், கருமண்டலம், மிளகுபாறை, ராமலிங்கநகர் முதலிய பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. ஊருக்குள் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் ஓடியது. பிஷப் ஹீபர் கல்லூரி, தேசிய கல்லூரி ஆகியவற்றில் வெள்ளம் புகுந்தது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. படகுகளிலும் ஹெலிகாப்டர்களிலும் சென்று ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானத்தில் இருந்து உணவு பொட்டலங்கள் போடப்பட்டன. புயல்-வெள்ள சேதப்பகுதிகளை முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். விமானத்தில் பறந்தபடி பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "நாங்கள் விமானத்தில் சென்று பார்த்தபோது எங்கும் தண்ணீரைத்தான் பார்த்தோம். எத்தனை நதிகள் புதிதாக உருவாகி இருக்கிறதோ என்று எண்ணத்தக்க அளவில் தண்ணீர் இருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன.

ஆனால் உயிர் சேதம் பற்றி சரியாக மதிப்பிட முடியவில்லை" என்று கூறினார். தண்ணீர் வற்றிய பிறகு சேறும் சகதியுமாக உள்ள இடங்களில் பிணங்கள் உருக்குலைந்து கிடந்தன. சில பகுதிகளில் ஒரே இடத்தில் குவியல் குவியலாக பிணங்கள் கிடந்தன.

திண்டுக்கல் அருகே வேடசந்தூர் பக்கம் இருந்த குடவனாறு அணை வெள்ளத்தின் வேகம் தாங்காமல் உடைந்தது. இந்த அணை நீர் அருகில் இருந்த 3 கிராமங்களை அடியோடு அழித்து விட்டது. வெள்ளம் வரும் என்று பயந்து ஏராளமானபேர் ஊரை காலி செய்து ஓடியதால் உயிர் தப்பிவிட்டார்கள்.  

பிறகும் அடுத்தடுத்து புயல் உருவானது. இதனால் மழை நீடித்து மீட்பு பணி பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் புயல்-மழைக்கு பலியானார்கள். எண்ணிக்கை 504 ஆக உயர்ந்தது. அதிகப்படியாக தஞ்சை பகுதியில் 189 பேரும், மதுரை பகுதியில் 136 பேரும் பலியாகி இருந்தனர். இறந்துபோன கால்நடைகள் 20 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டது.

நன்றி! : -  மாலைமலர் (காலச் சுவடுகள் )