Monday 29 January 2018

தமிழ்மணம் ரேங்க் – மறுபடியும் முதலில் இருந்துநான் ஒரு மூத்த குடிமகன் (Senior Citizen). எனவே தினமும் காலையில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, எங்கள் வீட்டு கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து இண்டர்நெட்டை பார்க்கத் தொடங்கினால், முதலில் பார்ப்பது கூகிள் (Google); அப்புறம் தமிழ்மணம், மின்னஞ்சல் …. … என்று போகும். அதிலும் நம்ப தமிழ்மணத்தை தினமும் பார்த்து விட்டுத்தான் எழுந்து போவேன். காரணம் இன்றைக்கு நமது வலைப்பதிவு நண்பர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள், நாட்டு நடப்பைப் பற்றி இன்றைய சூடான விமர்சனம் என்ற ஆவல்தான். தமிழ்மணம் சிறப்பைப் பற்றியும், அது ஏன் எல்லோராலும் விரும்பப் படுகிறது என்பதனையும் இங்கு விவரித்துச் சொல்ல வேண்டியதில்லை.

திடீர் சுணக்கமும் பராமரிப்பும்

சில மாதங்களாகவே தமிழ்மணத்தில் ஒரு சுணக்கம். தளத்தைப் படிக்க உட்கார்ந்தால், அது திறக்கவே ரொம்பநேரம் ஆகி விடும். நண்பர்களின் பதிவைப் படித்து விட்டு, ஓட்டுப் பட்டையைத் திறந்து ஓட்டு போடுவதற்குள் , வேர்ட்பிரஸ்சில் கமெண்ட் எழுதும் கணக்காக, போதும் போதும் என்று ஆகி விடும். திடீரென்று ஒருநாள் தமிழ்மணத்தில் நுழையவே முடியவில்லை. சம்பந்தா சம்பந்தம் இன்றி ஒரு தளம் வரும். அப்புறம் ஒருநாள், 

// தளம் பராமரிப்பு வேலை தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தளத்தின் சேவையில் ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு வருந்துகிறோம். விரைவில் தமிழ்மணம்/திரைமணம் தளங்கள் செயல்பட தொடங்கும் //

என்று ஒரு அறிவிப்பு வந்தது. அப்பாடி என்று ஒருவித மகிழ்ச்சி.

நம்ப புலவர் சா.இராமானுசம் அய்யா அவர்கள் கூட, புலவர் கவிதைகள் என்ற தனது வலைத்தளத்தில்,

எப்போது நீவருவாய் தமிழ்மணமே-இங்கே
   எல்லோரும் எதிர்பார்க்க தமிழ்மணமே
ஒப்பேது  இல்லையது தமிழ்மணமே-பலரும்
   ஓயாத கவலைமிக தமிழ்மணமே
தப்பேது தடங்கலுக்கு தமிழ்மணமே-ஏற்ற
   தடங்கண்டு சரிசெய்வாய் தமிழ்மணமே
செப்பேது உன்சேவை தமிழ்மணமே-மேலும்
   செம்மைமிக வந்திடுவாய் தமிழ்மணமே

என்று ( http://www.pulavarkural.info/2018/01/blog-post_22.html ) எழுதினார்.

புதிய பட்டியல்

ஒருவழியாக தளம் பராமரிப்பிற்குப் பின்னர், தமிழ்மணம் மீண்டும் மின்னத் தொடங்கி விட்டது. ஆனாலும் பாவம், இந்த தமிழ்மணம் ரேங்க்தான், இப்போது  பலரையும் (என்னையும் சேர்த்துதான்) உசுப்பி இருக்கும். என்னதான் வெளியில் பலரும் நான் தமிழ்மணம் ரேங்க் பட்டியலைப் பற்றி கவலைப் படுவதில்லை என்று உதார் விட்டாலும், ஒவ்வொருவரும் அவரவர் ரேங்க் என்ன என்று எட்டிப் பார்க்கத்தான் செய்கின்றனர். தமிழ்மணம் ரேங்கிற்காக அடிதடியே நடந்து இருக்கிறது என்றால் சொல்ல வேண்டியதில்லை.

// தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank) கடந்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு பதிவும் பெறும் பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும் //

என்று தமிழ்மணம் சொன்னாலும், இப்போது எல்லாமே தலைகீழாக போய் விட்டது. என்ன கணக்கு, ஏன்  எப்படி இப்படி ஆனது என்று தெரியவில்லை.
சென்ற ஆண்டு (2017) கடைசி அல்லது இந்த வருடம் (2018) முதல் வாரத்தில் முதல் ரேங்கில் இருந்த ‘எங்கள் ப்ளாக்’ இப்போது 20 ஆவது ரேங்கில் இருக்கிறார்கள்.. புலவர் அய்யா அவர்கள் 98 இல் இருக்கிறார். எண் 5 இல் இருந்த G.M.B அவர்கள் இப்போது 266 ஆவது ரேங்க். எனது தளத்தினை எடுத்துக் கொண்டால், 9 அல்லது 12 என்று மாறி மாறி ரேங்கில் இருந்த நான் (இன்று) இப்போது 210 ஆவது ரேங்க்கிற்கு வந்து விட்டேன்..
  
மறுபடியும் முதலில் இருந்து

இருந்த போதும், இப்போதுள்ள தமிழ்மணம் பட்டியலில், பழைய பதிவர்கள் பலரையும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சிதான்.

எனவே தமிழ்மணம் ரேங்க் பற்றி கவலைப் படுபவர்கள், மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் அல்லது இயல்பாகவே பழைய நிலைக்கு தமிழ்மணம் வந்துவிடும் என்று எப்போதும் போல் எழுத வேண்டும். மறுபடியும் ஒரு வருடம் கழித்து, பராமரிப்பு என்றால், ரேங்க் கணக்கு அவ்வளவுதான். நடிகர் வடிவேலு காமெடி ஒன்றில் சொல்லும் “மறுபடியும் சியர்ஸா?” என்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது.

Tuesday 9 January 2018

இராய செல்லப்பா அவர்களுடன் ஒரு சந்திப்புசென்ற மாதத்தில் ஒருநாள் மூத்த வலைப்பதிவர் திரு. இராய செல்லப்பா அவர்களிடமிருந்து செல்போன் அழைப்பு. தான் ஒரு வேலையாக திருச்சிக்கு வரப் போவதாகவும், அப்போது V.G.K (திரு வை.கோபால கிருஷ்ணன்) அவர்களையும், என்னையும் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். மகிழ்ச்சியான செய்தி. நானும் திரு V.G.K அவர்களிடம் இதுபற்றி செல்போனிலும், தெரிவித்து இருந்தேன். சொன்னது போலவே திருச்சிக்கு வந்திட்ட இராய செல்லப்பா அவர்கள், போன் செய்தார். நானும் திரு V.G.K அவர்களும் அவரை அவர் தங்கி இருக்கும் ஹோட்டல் அஜந்தாவில், 07.01.18 ஞாயிறு – மாலை சந்திப்பது என முடிவானது. 

இராய செல்லப்பா


வங்கி அதிகாரியாக பல முக்கிய நகரங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர். டெல்லி தமிழ்ச்சங்கத்தில் சிறப்பான தமிழ்ப் பணிகளைச் செய்தவர்
.
செல்லப்பா தமிழ் டயரி ( http://chellappatamildiary.blogspot.com ) இமயத்தலைவன் ( http://imayathalaivan.blogspot.in

என்ற தனது வலைத்தளங்களில் எழுதி வருகிறார். இவர் எழுதிய  சொல்லட்டுமா கொஞ்சம்?, உண்மைக்குப் பொய் அழகு, அபுசி – தபசி (தொகுதி.1 மற்றும் தொகுதி.2 ), ஊர்க்கோலம் – ஆகிய மின்னூல்களை ‘புஸ்தகா’ வெளியிட்டுள்ளது. தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் என்ற நூலை அகநாழிகை வெளியிட்டுள்ளது.


ஹோட்டல் அஜந்தாவில்

அன்று (07.01.18 ஞாயிறு) மாலை நான் எனது இருப்பிடத்திலிருந்து, கே.கே.நகர் பஸ் ஸ்டாண்ட் சென்றேன். அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்து ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக ஒரு பஸ் கூட இல்லை. ஆட்டோவில் போகலாம் என்றால், ஆட்டோ ஸ்டாண்டே காலி. எல்லாமே சவாரிக்கு போய் விட்டன. நல்ல வேளையாக ஒரு தனியார் பஸ் வந்துவிட அதில் பயணம் செய்து சென்று விட்டேன். எனக்கு முன்னதாக திரு V.G.K அவர்கள் ஆட்டோவிலேயே ஆண்டார் தெருவிலிருந்து (சத்திரம் பேருந்து நிலையம்) ஹோட்டல் அஜந்தா வந்து விட்டார்.

ஹோட்டல் அஜந்தா அந்த காலத்து தங்கும் விடுதி என்றாலும், நவீன கால முறைக்கு ஏற்ப மாற்றம் செய்யப் பட்டது. காலை, மாலை, இரவு நேர டிபன் வசதியும் உண்டு. மதியச் சாப்பாடும் (மோர்க் குழம்பும், பாயாசமும் விஷேசம்) உண்டு. எல்லாமே நன்றாக இருக்கும். நான் இங்கு அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன். எனது மகள் திருமணத்திற்கு முன்னதான நிச்சயதார்த்தம்,. இங்குள்ள மினி ஹாலில்தான் நடைபெற்றது.) பெரிய திருமண மண்டபமும் உண்டு.

கலந்துரையாடல்

(படம் மேலே) திருப்பதி வெங்கடாசலபதி படம் முன் திரு V.G.K

(படம் மேலே)   திரு V.G.K மற்றும் இராய. செல்லப்பா

(படம் மேலே) திரு V.G.K ,இராய. செல்லப்பா மற்றும் நான்

அங்கிருந்த வரவேற்பு (Reception) ஹாலில் ஒரு பெரிய வெங்கடாசலபதி படம். அதன் அருகே கோபு சாரை (V.G.K) நிற்க வைத்து நான் படம் எடுத்துக் கொண்டு இருந்த சற்று நேரத்தில் .இராய செல்லப்பா அவர்கள் வந்து விட்டார். சிறிதுநேரம் கழித்து அவருடைய மனைவியும் வந்து விட்டார். அவர்கள் தங்கி இருந்த அறை சிறியது என்ற படியினால் ஹாலிலேயே எங்களது உரையாடல் தொடங்கியது.  வழக்கம் போல பரஸ்பரம் ஒருவரைப் பற்றி ஒருவர் விசாரித்துக் கொள்ளல், மற்றும் பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொள்ளல் என்று ஒரே மகிழ்ச்சி. .(நான் ஏற்கனவே புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு மாநாட்டில் அய்யா இராய.செல்லப்பா அவர்களைச் சந்தித்து இருக்கிறேன்)

(படம் மேலே) திரு V.G.K அவர்கள் இராய.செல்லப்பாவுக்கு தந்த அன்பளிப்புகள்
(படம் மேலே) இராய.செல்லப்பா அவர்களுக்கு எனது பரிசுகள்

இராய செல்லப்பா அய்யா, எங்கள் இருவருக்கும் ஸ்வீட் காரம் அடங்கிய பைகளைத் தந்தார். நமது கோபு சார் (V.G.K) செல்லப்பா சாருக்கு பழங்களையும்,  தான் எழுதிய நூலையும் பரிசாகத் தந்தார். நான் ஒரு GOOD DAY பிஸ்கட் பாக்கெட்டினையும், ஆரண்ய நிவாஸ் (ஆசிரியர் ராமமூர்த்தி) என்ற சிறுகதைத் தொகுப்பையும் கூடவே 2018 ஆம் வருட தமிழ் டைரியையும் செல்லப்பா சாருக்கு என் அன்புப் பரிசாகக் கொடுத்தேன்.

இராய. செல்லப்பா அய்யா அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்த போது, தான் ஒரு முக்கியப் பணிக்காக திருச்சி நேஷனல் கல்லூரிக்கு வந்து இருப்பதாகவும், 11ஆம் தேதி வரை இங்கு இருக்கப் போவதாகவும் சொன்னார். மேலும் தான் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த ‘ஶ்ரீமந் நாராயணீயம்’ என்ற ஶ்ரீமத் பாகவத நூல் விரைவில் வெளிவரும் என்றும் குறிப்பிட்டார்.

அவர் தனது சொந்த ஊர் இராணிப்பேட்டை என்றும், கார்ப்பரேஷன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்றும் சொன்னார். அவரது பெயரில் உள்ள ‘இராய’ என்பதன் விவரம் கேட்ட போது இரா என்பது இராணிப்பேட்டையையும்; ய என்பது தந்தையின் பெயரான யக்ஞசாமியையும் குறிக்கும் என்றார். அப்போது இராணிப்பேட்டைக்கு அப்பெயர் வந்ததன் காரணத்தையும் சொன்னார்.

செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்குவின் மனைவி ராணிபாய். இவள் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவள். தேசிங்கு கபடமாகக் கொல்லப்பட்டதை அறிந்த, அவள் உடனே தீக்குளித்து மாண்டாள். அவள் பெயரால் இந்த ஊருக்கு இராணிப்பேட்டை என்று பெயர்.

இன்னொரு தகவலையும் சொன்னார். சென்னைக்கு வந்த பெரு வெள்ளத்தின் போது, அகநாழிகை பதிப்பகத்தில் இருந்த நிறைய புத்தகங்கள் சேறு படிந்து வீணாகி விட்டன என்றும், பதிப்பகத்திற்கு நிறையவே நஷ்டம் என்றும் சொன்னார். அவற்றுள் இவர் எழுதிய நூலின் பிரதிகளும் அடங்கும் என்றும் தெரிவித்தார்.

உணவு விடுதியில்உரையாடல் முடிந்ததும் எங்கள் இருவரையும் அங்கிருந்த ரெஸ்டாரண்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு செல்லப்பா சார் சூடான சுவையான மொறுமொறு பக்கோடாவிற்கு ஆர்டர் தந்தார். சாப்பிட்டு முடிந்ததும் காபி வந்தது. எல்லாம் உண்டு முடிந்ததும் நானும் கோபு சாரும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டோம். 

 

Sunday 7 January 2018

ஜீ.எம்.பி எழுதிய ‘நினைவில் நீ‘பெங்களூரில் வசிக்கும் மூத்த வலைப்பதிவர் G.M.B எனப்படும் திரு G.M. பாலசுப்ரமண்யம் அவர்கள் சிறந்த வலைப்பதிவர். தனது அனுபவங்களை  ‘gmb writes’ என்ற தனது வலைத்தளத்தில்  (http://gmbat1649.blogspot.com ) வாழ்வியல் சிந்தனைகளாக எழுதுபவர். தனது தன்விவரத்தில் (Profile} இவ்வாறு “ 77 years young and vibrant,particular about values in life, love all, always try to do better the next time, am an open book.” – என்று தன்னம்பிக்கையோடு குறிப்பிடுகிறார். 

நினைவில் நீ – என்ற நாவல்

அண்மையில் மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்கள் எழுதிய ‘நினைவில் நீ‘ என்னும் நாவலைப் படித்து முடித்தேன். அந்த நாவல் மீதான எனது பார்வையே இந்த கட்டுரை. 

இந்த நாவலைப் படிக்கும்போது, அவர் எழுதிய ‘வாழ்வின் விளிம்பில்’ என்ற நூலில் உள்ள ‘விளிம்புகளில் தொடரும் கதை’ யில் வரும் ரங்கசாமி என்ற பாத்திரப் படைப்பும் நினைவில் வந்தது. அந்தக் கதையின் தொடர்ச்சி தானோ, இந்த நாவல்?

நாவலின் கதை

இந்த நாவலின் கதை என்று எடுத்துக் கொண்டால், பாபு என்ற லட்சியவாதியின் சோகமான வரலாறு என்றே சொல்லலாம். பாபுவின் தந்தை ரங்கசாமிக்கு மூன்று ஆண் மற்றும் ஒரு பெண். தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு பிராமணரான ரங்கசாமி வேறொரு ஜாதிப் பெண்ணை மணந்து கொள்கிறார். இது அவரது மாமியாருக்கு  பிடிக்கவில்லை. பேரப் பிள்ளைகளையும் சேர விடவில்லை. இதில் கடைக்குட்டி பாபு மட்டும் அப்பா கட்சி.. இரண்டாம் தாரமும் அவளது நான்கு சிறு வயது பிள்ளைகளும் தனிக் குடித்தனமாக இருக்கிறார்கள்.

 மரணத் தறுவாயில் இருந்த ரங்கசாமி தனது மூன்றாவது மகன்  பாபுவிடம் சித்தியின் குடும்பத்தை தனக்குப் பின், அவன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி வாங்கிக் கொள்கிறார். அப்பாவின் மறைவுக்குப் பிறகு அவனும் அவ்வாறே செய்கிறான். அதேசமயம் பாபு தனது அம்மா வயிற்றில் தன்னோடு பிறந்தவர்களையும், சித்தி குடும்பத்தையும் ஒன்றாக சமாதானமாக வாழ முயற்சி எடுக்கிறான். இந்த கடமைகளுக்கு இடையே, அவனுக்குள்ளும் ஒரு டீச்சர் பெண்ணோடு காதல். குடும்ப பாரத்தை சுமப்பதில், தனது முயற்சியில், கொண்ட காதலில்,  பாபு வெற்றி அடைந்தானா என்பது தான் நாவலின் மையம் 

கதா பாத்திரங்கள்

பிராமணரான ரங்கசாமிக்கு  மொத்தம் எட்டு பிள்ளைகள் என்றதுமே இது ஒரு அந்தகாலத்து குடும்பக்கதை என்று புரிந்து விடுகிறது
.
தனது கணவன் ரங்கசாமியின் மரணத்திற்குப் பிறகு நான்கு குழந்தைகளை வைத்துக் கொண்டு அல்லாடும் சித்தி கல்யாணி. இந்த சித்தியிடமிருந்து தனது பேரன் பாபுவை பிரிக்க நினைக்கும் பாட்டி (ரங்கசாமியின் மூத்த மனைவியின் அம்மா; மாமியார்); இதற்கு என்னென்னவெல்லாம் செய்கிறாள் (ஒரு கட்டத்தில் பாபுவின் அக்காளிடம் பாபு – சித்தி உறவையும் கொச்சைப் படுத்துவாள்) என்பதை அறியும்போது இப்படியும் ஒரு பெண்ணா? என்று எண்ணத் தோன்றுகிறது. 

அவன் அண்ணன் கண்ணனுக்கு தான் பிறந்த பிராமண ஜாதிதான் உயர்ந்தது என்ற எண்ணம். இன்னும் பாபுவுக்காக  ஏங்கும், பாபுவுக்காக, சமூக சேவையின் பொருட்டு, சம்பளம் வாங்காமல் பாடம் சொல்லித் தரும், மராத்தியப் பெண் சியாமளா டீச்சர். –  என்று பல கதா பாத்திரங்கள். நாவலின் பல அத்தியாயங்களைப் படித்த பிறகுதான் யார் யாருக்கு உறவு, கதை எங்கே நகர்கிறது என்பதே தெரிய வருகிறது. எத்தனை பேர் இருந்தாலும், நாவலின் நாயகன் பாபுவைச் சுற்றியே கதை என்பதால் குழப்பம் இல்லை.  
  
லட்சியக் கனவுகள்

முன்பெல்லாம் எழுத்தாளர்கள் சமுதாயத்திற்குப் பயன் தரும் கருத்துகளை, ஒரு லட்சியத்தோடு எழுதினார்கள். அவர்களது கட்டுரைகளிலும், கதைகளிலும், நாவல்களிலும் இது எதிரொலித்தது. உதாரணத்திற்கு மணிக்கொடி எழுத்தாளர்கள் என்ற வரிசையைச் சொல்லலாம். இதே போன்று இந்த நூலின் ஆசிரியர் ஜீ.எம்.பி அவர்களும் சமுதாயத்திற்கு தேவையான கருத்துகளை இந்நாவலின் இடையிடையே சொல்லி இருக்கிறார். 

ஒரு கட்டத்தில்  அண்ணன் தம்பி வாக்கு வாதத்தில் யார் உண்மையான பிராமணர், எது சுயநலம் இல்லாத சமூக தொண்டு போன்ற கருத்துகள் முன் வைக்கப் படுகின்றன.(இந்நூல் அத்தியாயம்.10)

அண்ணனின் கேள்வி
 பாபு நீ மேடை ஏறி பிரசங்கம் பண்ணுவதில் கை தேர்ந்தவன் என்று எனக்குத் தெரியும். அதை இங்கே ஸ்தாபிக்க வேண்டாம். மேடையிலே பேசினா நாலு பேர் பொழுது போச்சேன்னு கை தட்டுவா. அதுதான் பெருமைன்னு தவறா நெனச்சிட்டு இருக்கே. பேசற பேச்செல்லாம் வாழ்க்கை நடைமுறைக்கு ஒத்து வராதுனு உனக்குப் புரியலை. புரியவும் புரியாது. … …. ….. 

நீ என்னடான்னா செயல்ல மட்டுமில்லாம வாக்கிலயும் சூத்திரனா மாறிட்டே. எனக்கு அப்படி வாழ முடியாது. நம்ம முன்னோர்கள் வகுத்த வழிமுறைகளெல்லாம்  சுத்த ஹம்பக் என்று நீ சொல்ற மாதிரி என்னால் நினக்க முடியாது. அப்படியானா நமக்கு முன்னாலே பிறந்து இந்த நாட்டிலே வளர்ந்த எல்லோரும் ஒண்ணுமே தெரியாத முட்டாள்களா.?நீ ஒருத்தன் மட்டும்தான் எல்லாம் தெரிஞ்ச புத்திசாலியா.? இல்லை எனக்குத் தெரியாமல் தான் கேட்கிறேன்

தம்பி பாபுவின் பதில்
 அண்ணா நான் சொல்றத நீங்க சரியாப் புரிஞ்சுக்கலை வாழ்க்கையிலே குலம் கோத்திரம் எல்லாம் மனசைப் பொறுத்தவரை சரியா இருந்தா நல்லதண்ணா. ஆனால் அதுவே ஒரு சில வகுப்பாளுங்க தரமில்லாமலேயே உயர்த்தப் படறதும், மத்தவங்க நசுக்கப் படற்துக்கு ஒரு கருவியா, எண்ணமா சமுதாயத்துலே ஒரு நிலை அடைஞ்சிருக்கிறது தப்புன்னுதான் நான் சொல்ல வரேன்

நீங்க வணங்கற தெய்வத்தைதான் நானும் வணங்குகிறேன்.மற்ற சாதிக்காரங்களும்--. ஹிந்துக்கள் வணங்கறாங்க. இதுலே உயர்வு தாழ்வுக்கு இடம் எங்கேன்னுதான் புரியலை. இதையெல்லாம்தான் விவேகாநந்தர் முதல் பாரதி வரை சொல்லி இருக்காங்க. அவங்க சொன்னதைக் கேட்டு அந்த சமயம் கைதட்டிப் பொழுது போக்கின கூட்டம் இருக்கலாம். ஆனால் எனக்கு அதுதான் சரின்னு ஒரு உறுதி பிறந்திருக்கு. என்னைப் போல எவ்வளவோ பேருக்கும் பிறந்திருக்கலாம். அது நன்மையாய்தான் முடியும்.//
                                                                        
இதேபோல பாபுவின் புரட்சிகரமான உரையாடல்களும், பாரதி குறித்தான இலட்சிய மேடைப் பேச்சும்இருக்கின்றன. (இந்நூல் அத்தியாயம்.7)

// மனித குல உணர்வும் நாட்டுப் பற்றும் பாரதியின் பாடல்களில் இரண்டறக் கலந்து விளங்குகிறது.நிலை கெட்ட மனிதரைக் கண்டு நெஞ்சு பொறுக்காத பாரதிதனி மனிதனுக்குணவிலை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று வஞ்சினம் எடுக்கிறார். ஆற்றல் நிரம்பப் பெற்ற சமுதாயத்தை சிருஷ்டிக்க விரும்புபவன் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் கேடுகெட்ட இந்த ஜகத்தையே அழிப்போம் என்கிறான்.இந்த அழிவு குஞ்சு வெளிவர முட்டை ஓடு அழிக்கப்படும் தன்மையுடைத்தாய் தான் இருக்கும்.  பயிர் செழுமையாக வளர கள்ளியும் காளானும் வேரோடு ஒழிக்கப் படத்தான் வெண்டும்

ஆள்பவன் ஆளப் படுபவன் என்ற பேதமற்ற சமுதாயத்தில் பெயரளவுக்கு இந்நாட்டு மன்னர் என்றில்லாமல் உண்மையிலேயே மனிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஒவ்வொருவருடைய கடமையாகும்.கடமையை செவ்வனே செய்ய இடம் தராத இன்றைய சமுதாயம் கடந்த கால பழக்க வழக்க சட்ட திட்ட கோட்பாடுகளிலிருந்து மீட்சி பெற வேண்டும் மீட்சி பெற சாதி பேதமற்ற சமுதாயம் வளர வேண்டும். மூட நம்பிக்கைகளின் நிலைகளன் இந்தியா என்ற சொல்லுக்கு இழுக்கு வர வேண்டும்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக,உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்ய வேண்டும் அப்போதுதான் புதிய சமுதாயம் பிறக்கும் அப்போதுதான் நாம் பழம் பெரும் பாரத நாட்டின் புதல்வர் என்ற சொல்லுக்கு அருகதையாவோம்.பெருமை தருவோம் வாழ்க பாரத தேசம். வளர்க பாரதிகண்ட சமுதாயம்.” என்று கூறி பாபு பேச்சை முடித்ததும் கைதட்டல் //

நூலில் உள்ள, மேலே சொன்ன கருத்துகள் போன்றவை, இந்த நூலின் ஆசிரியர் ஜீ.எம்.பி அவர்களின் நேரடிக் கருத்தோ என்று எண்ண வைக்கிறது.

ஏனெனில் நாவலைப் படிக்கும் போது, கூடவே எனக்கு புரட்சிகரமான எண்ணம் கொண்ட இவரது வலைப்பதிவுகளும் நினைவில் வந்தன. 

என்னதான் புரட்சி அது, இது என்று நாவலின் நாயகன் பேசினாலும், அவனது முடிவு என்பது அந்த நாவலாசிரியரின் கையில்தான் என்பதனை இந்த நாவல் காட்டி விடுகிறது.

இந்த நாவலில் காணப்படும் தத்துவ விசாரணைகள் எனது மனத்தைக் கவர்ந்த படியினால், நேரம் கிடைக்கும் போது,  மீண்டும் இந்த நூலை படிக்கலாம் என்று இருக்கிறேன்.

நூல் விவரம்

இந்த அருமையான நாவலை Pustaka Digital Media ( http://www.pustaka.co.in )  மின் நூலாக வெளியிட்டுள்ளது. விலை ரூ 88/= . நூலாசிரியர் G.M.B அவர்கள் பற்றி பதிப்பகத்தார் தந்த குறிப்புரை இது … 

 // 78 வயதுடைய ஜீ.எம். பாலசுப்பிரமணியம், திருச்சி பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலையில் தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவில் பொறுப்பான பதவியில் இருந்து பணி விருப்ப ஓய்வு பெற்றவர். இளவயதில் இருந்தே எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். நாளும் காணும் வாழ்வின் பல நிகழ்வுகளைதன் கதைகளிலும் கவிதைகளிலும் வெளிப்படுத்த முயற்சிப்பவர். // 

அய்யா ஜீ.எம்.பி அவர்களை திருச்சியில் PLA.Krishna Inn ஹோட்டலில் (03.07.13) ஒரு முறையும், மதுரை வலைப்பதிவர் சந்திப்பு (26.10.14) நிகழ்ச்சியிலும், மற்றும் அவர் புதுக்கோட்டை போகும் வழியில் திருச்சியில் Breeze Residency (10.10.15) இலும் மற்றும் மறுநாள் (11.10.15) புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பிலும் சந்தித்து இருக்கிறேன்.

தொடர்புடைய எனது பிற பதிவு

வாழ்வின் விளிம்பில்ஆசிரியர் G.M.B https://tthamizhelango.blogspot.com/2014/11/gmb.html