Showing posts with label திருமூலர். Show all posts
Showing posts with label திருமூலர். Show all posts

Wednesday, 2 April 2014

மரத்தை மறைத்தது ( ஜோதிஜி திருப்பூருக்கு ஒரு மறுமொழி)



சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்கள் ஆன்மீகம் சம்பந்தமாக தொடர் பதிவு எழுதி வந்தார். அதில் ஆன்மீகப் பற்றும் அடுத்தவர் சொத்தும்? (http://deviyar-illam.blogspot.com/2014/03/blog-post_27.html) என்ற பதிவிற்கு நான்

.... .....கட்டுரையின் இறுதியில் தன்னை உணர்தலே ஆன்மீகம் என்று சுருக்கமாக முடித்து விட்டீர்கள். ஆத்திகரும் நாத்திகரும் யூகங்களின் அடிப்படையில்தான் வாதங்களை வைக்கின்றனர்.

                                      
மரத்தை மறைத்தது மாமத யானை
                                      
மரத்தின் மறைந்தது மாமத யானை
                      
                                                 - திருமூலர் (திருமந்திரம் )

என்று கருத்துரை தந்தேன். ஜோதிஜி அவர்கள் மறுமொழியாக முடிந்தால் இதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? தெரிந்து கொள்ள விருப்பம்.
 
என்று கேட்டு இருந்தார். அதன் எதிரொலி இந்த கட்டுரை.

ஆன்மீகம் என்ற சொல்:

மனிதன் என்றைக்கு கடவுள் உண்டா இல்லையா என்று சிந்திக்கத் தொடங்கினானோ அன்றைக்கே ஆன்மீகமும் பிறந்து விட்டது. வாழ்க்கை என்றால் என்ன? மனித வாழ்க்கையில் பிறப்புக்கு முன் என்ன? இறப்புக்குப் பின் என்ன? பாவம், புண்ணியம் என்றால் என்ன என்று அனுமானத்தின் அடிப்படையிலும் சில காரண காரியங்களின் அடிப்படையிலும் சொல்வது ஆன்மீகம். இவற்றுள் அறிவியலுக்குப் புறம்பான  மூட நம்பிக்கைகளும் உண்டு. ஆன்மீகம் என்ற சொல்லுக்கு அகராதி சொல்லும் அர்த்தம் என்ன?

வாழ்க்கையின் சாராம்சத்தைப் பற்றியும் மனிதர்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவைப் பற்றியதுமான சிந்தனை. SPIRITUALITY  ( நன்றி: க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி)


சுருக்கமாகச் சொல்வதானால் ஆன்மீகம் என்றால் தத்துவ விளக்கம்.

கடவுள் உண்டா இல்லையா?

பொதுவான ஒரு விஷயம். எல்லா மதத்தினரும் நமக்கு மேலே ஒரு சக்தி , ஒரு இறைவன் இருப்பதை ஒப்புக் கொள்கின்றனர். என்னைப் பொறுத்தவரை நமக்கும் மேலே ஏதோ ஒன்று நம்மை வழி நடத்திச் செல்வதாகவே உணர்கின்றேன். எனவே ஏதோ ஒரு சக்தி உள்ளது என்ற இறை நம்பிக்கை உள்ளவன் நான்.

            தென்னாடுடைய சிவனே போற்றி!
                எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி (திருவாசகம்)

என்பது மாணிக்கவாசகர் வாக்கு  அதாவது தமிழ்நாட்டில் இறைவன் பெயரை சிவன் என்று சொல்லி போற்றி வழிபடுகின்றனர்; மற்றவர்கள் அவரவர் சமயச் சார்புக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்கள் வைத்து இறைவனை வழிபடுகின்றனர் என்பது பொருள். இறைவன் என்பது பொதுப் பெயர்.

            பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
           
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
           
கங்குகரை காணாத கடலே எல்லாம்
           
செய்யவல்ல கடவுளே தேவ தேவே!
                                    - திருவருட்பா 3-ம் திருமுறை

என்ற பாடலில் உலகில் உள்ள அனைத்து சமயங்களையும் ஆறுகளாகவும் அனைத்து ஆறுகளும் இறுதியில் ஒன்று சேரும் இடம் கடல் போல இறைவன் எனவும் உருவகப்படுததியுள்ளார் இராமலிங்க அடிகளார்.

கடவுள்  நம்பிக்கை என்பது அவரவர் சூழல், வாழ்க்கை முறை என்று வேறுபடும். பசியால் வாடும் சோமாலியா நாட்டு மக்களுக்கு உணவே தெய்வம். அவர்களிடம் போய் ஆன்மீகத்தை பற்றிப் பேசுவதைவிட உணவைக் கொடுத்து வயிற்றுப் பசியை தீர்ப்பதே மேல். கண்ணதாசன் இறைவன் பற்றி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு மாதிரி பாடுகிறார்.

ஆண் குரல்:
இறைவன் இருக்கின்றானா?
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

பெண்குரல்:

மனிதன் இருக்கின்றானா?
இறைவன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்?  எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை


               - பாடல்: கண்ணதாசன் ( படம்: அவன் பித்தனா?)

அவரின், இன்னொரு பாடல் வரிகள், இவை.

பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கோடை வெயிலின் நிழலே தெய்வம்  
           - பாடல்: கண்ணதாசன் (படம்: எங்க வீட்டுப் பெண்)

இதே கண்ணதாசன் வேறு ஒரு இடத்தில் உள்ளம் என்பது ஆமை என்று தொடங்கும் திரைப்படப் பாடல் ஒன்றில்,

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

-          பாடல்: கண்ணதாசன் (படம்:பார்த்தால் பசி தீரும்)


என்று சொல்லுகிறார்.


கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இன்னொரு இடத்தில் உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக என்று தொடங்கும் திரைப்படப் பாடல் ஒன்றில்,

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை அவனே தானறிவான்
           கவிஞர் கண்ணதாசன் (படம்: பாசம்)

என்று சொல்கிறார். கடவுளைத் தேடிதேடி அலைந்தவர்களைப் பற்றியும் அந்தக் கடவுள் எங்கிருக்கிறார் என்பது பற்றியும் சிவவாக்கியர் என்ற சித்தர்
 
            ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
             நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
            வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
            கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
                                                                                          - சிவவாக்கியர்

என்று பேசுகிறார். எனவே ஒருவன் நான் கடவுளை உணர்ந்தேன் என்று சொல்லுகிறான். இன்னொருவன் எனக்குத் தெரியவில்லை என்கிறான். உணர்பவனுக்குத் தெரியும் கடவுள், உணரர்தவனுக்குத் தெரிய நியாயமில்லை.

மரமும் யானையும்:

சைவசமயத்தில் திருமூலர் என்ற சித்தர் குறிப்பிடத் தக்கவர். இவர் எழுதிய திருமந்திரம் பத்தாம் திருமுறை என்று போற்றப்படுகிறது. இதிலுள்ள பாடல்கள் அனைத்தும் மறைபொருள் விளக்கமாகவே இருப்பதைக் காணலாம். மரத்தை மறைத்தது மாமத  யானை என்ற பாடல் பலராலும் அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும் பாடல்களில் ஒன்று. அவர் எழுதிய பாடலுக்கு விளக்கம் சொல்லலாம். ஆனால் முழுமையாகச் சொல்ல முடியாது. காரணம் திருமந்திரம் போன்ற சித்தர்களின் பாடல்கள்,  படிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு அர்த்தம் தரக் கூடியவை.

ஒருவன் கோயிலுக்கு போகிறான். பெரிய யானை ஒன்று நின்று கொண்டிருக்கிறது. அவனுக்கு யானை என்றால் பயம். எனவே மனதினில் கலவரம் தோன்ற பயத்தால் நின்று விடுகிறான். நேரம் ஆக ஆக அந்த யானை அசைவேதும் இல்லாது இருப்பதைக் காணுகிறான். பயம் தெளிந்து இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் போது அது மரத்தினால் ஆன யானை என்பதனைத் தெரிந்து கொள்கிறான். பின்னர் இன்னும் நெருங்கி அந்த மரச் சிற்பத்தை தொட்டு பார்க்கிறான். முதன் முதலில் பார்க்கும்போது அவனது மனதில் அது யானை என்ற உணர்வே இருந்ததால் அது மரத்தால் ஆனது என்ற உணர்வு இல்லை. மரம் என்று தெரிந்த பிறகு அவனது மனதினில் அது யானையாகத் தோன்றவில்லை.

இதே போலத்தான் பரம்பொருள் என்று ஒன்று இருப்பதை மனிதனிடம் உள்ள, ஆணவம்,கன்மம், மாயை என்ற மும்மலங்கள் (அழுக்கு) மறைக்கின்றன. இவற்றுள் ஆணவம் என்பது மனத்திமிர். கன்மம் (கர்மம்) என்பது ஊழ் அல்லது விதி. மாயை என்பது பொய்யான தோற்றம். இந்த மூன்றையும் நீக்கிவிட்டு பரம்பொருளை உணரலாம்.

                     மரத்தை மறைத்தது மாமத  யானை
                    
மரத்தின் மறைந்தது மாமத யானை
                    
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
                    
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே
                                                     - திருமூலர் (திருமந்திரம் 2290)

பொதுவாக சித்தர் பாடல்களை மேலெழுந்தவாறு படிக்கும் போது ஒரு அர்த்தமும், உள்நுழைந்து பார்க்கும் போது வேறு நுட்பமான கருத்தும் இருக்கும். இந்த பாடலை  கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்ற ஒரு பழமொழியோடு ஒப்பிட்டு சுருங்க விளங்கிக் கொள்ளலாம். மேலே சொன்ன யானை சிற்பத்திற்குப் பதிலாக அந்த இடத்தில் நாய் சிற்பத்தை வைத்துப் பார்க்கலாம். (சிறு தெய்வ வழிபாட்டுக் கோயில்களில் நாய் சிற்பத்தைக் காணலாம்) ஆனால் நாளடைவில் இந்த பழமொழியின் விளக்கம் என்பது நாயை அடிக்க கல் என்று மாறி விட்டது.

பெரும்பாலும் ஆன்மீகப் பேச்சு  என்றாலே பற்றறு இருத்தல், நிலையாமை என்றுதான் முடியும். ஆனால் இக்கால நடைமுறையில் நாம் எல்லாவற்றையும் உதறிவிட்டு போவது என்பது முடியாது எனவே குடும்பப் பொறுப்பில் உள்ளவர்கள் ஆன்மீகம் பற்றித் தெரிந்து கொள்வதில் தேவையான விஷயங்களை எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை. ஆன்மீகம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசலாம், எழுதலாம், கேட்கலாம்.. விடைதெரியாத கேள்விகள் ஆயிரமாயிரம் உள்ள இந்த உலகில் ஆன்மீகம் என்பது நமக்கு ஒரு ஆறுதல்! 

(குறிப்பு : இரண்டு நாட்களுக்கு முன்னரே எழுதி வைத்த இந்த கட்டுரையை எனது வலைத்தளத்தில் பதிவு செய்தபோதுதான், சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் மேலே சொன்ன அதே பதிவுக்கு சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களும் பதிலுக்கு  ஒரு கட்டுரையை எழுதியுள்ளார் என்ற விவரம் தெரிய வந்தது)