Sunday 25 January 2015

மாதொரு பாகனும் பெருமாள் முருகனும்                  
                                                ( PICTURE - COURTESY: “GOOGLE”)

நாட்டில் அவரவருக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். வாய்க்கு இல்லை, வயிற்றுக்கு இல்லை என்று கால் வயிற்று கஞ்சிக்கு மக்களில் பலர், ஒருபக்கம் அல்லாடிக் கொண்டு இருந்தாலும், “ யார் சிறந்தவர் அல்லது விஞ்சியவர் என்று இன்னொரு பக்கம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருக்கும் தேசம் இது. எனக்கு பெருமாள் முருகன் யாரென்று தெரியாது. அவர் நூல்களைப் படித்ததும் கிடையாது. அண்மையில் அவர் எழுதிய “மாதொரு பாகன் சர்ச்சை , மற்றும் அவரது உருக்கமான அறிக்கை என்று பரபரப்பான செய்திகளைப் படித்தவுடன் எனக்கும் என்ன ஏதென்று அறியும் ஆர்வக் கோளாறு வந்துவிட்டது.

என்ன பிரச்சினை?

மாலைமலரில் வந்த செய்தி இது:

திருச்செங்கோடு, டிச. 26– திருச்செங்கோட்டில் இன்று காலை பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் , மோரூர் கண்டங்குல கொங்கு நாட்டு வேளாளர் அறக்கட்டளை அமைப்பினர் ஆகியோர் கைலாசநாதர் கோவில் வாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருச்செங்கோடு நகர காவல் நிலையத்துக்கு வந்தனர். இந்த ஊர்வலத்துக்கு ஏற்கனவே போலீசார் அனுமதி மறுத்த போதிலும் அவர்கள் தடையை மீறி ஊர்வலமாக வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவிலைப் பற்றியும். பெண்களை பற்றியும் மிக இழிவாக சித்தரித்து மாதொரு பாகன் என்ற புத்தகம் எழுதிய எழுத்தாளர் நாமக்கல் பெருமாள் முருகன் மற்றும் அந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த அமைப்பினர் கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர் அந்த புத்தகத்தின் நகலை தீவைத்து எரித்தனர். அதன் பிறகு எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
                                      -  (நன்றி : மாலைமலர் )
                                                                                      
வழக்கம் போல கூகிளில் (GOOGLE) தேடிய போது பிரச்சினையின் சாராம்சத்தை உணர முடிந்தது. மேலும் 2010 - இல் வெளிவந்த நூலுக்கு இப்போது எதிர்ப்பு. கடந்த நாலு வருடங்களாக அந்த ஊரைச் சேர்ந்தவர்களில் ஒருவர் கூடவா இந்த நூலை படிக்காமல் இருந்திருப்பார்கள் எனும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மேற்கொண்டு விவரம் தெரிந்து கொள்ளலாம் என்று பெருமாள் முருகனின் வலைத்தளம் www.perumalmurugan.com சென்றால்   404. That’s an error. ஒரு அறிவிப்பு வருகிறது. ஒருவேளை புத்தகம் கடையில் கிடைக்கிறதோ என்னவோ என்று, எதற்கும் உதவும் என்று சகோதரர் S.மது அவர்களது வலைத்தளத்திலிருந்து http://www.malartharu.org/2015/01/mothoru-paakan.html இந்த நூலை டவுன்லோட் (Download) செய்து கொண்டேன். அவருக்கு நன்றி.ஒரு புத்தகத்தை வாசிப்பது போல், மின்நூலை தொடர்ந்து வாசிக்க முடியாது என்பதால் புத்தகக் கடைகளில் சென்று கேட்டேன். எங்கும் இல்லை. ஆன் லைனில் வாங்கலாம் என்று நுழைந்தால் OUT OF STOCK என்ற பதில். வேறு வழியின்றி மேலே சொன்ன அடோப் ரீடர்(Adobe Reader) டவுன்லோட் வழியே நாவலை படித்தேன்.

கதைச் சுருக்கம்:

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முந்திய கதை என்பதனை, நாவலைப் படித்து முடித்த பின்னர்தான் தெரிந்து கொள்ள முடிகிறது.

அந்த கிராமத்துக்கு அருகில் இருக்கும் ஒரு பெரிய ஊரின் தேர்த் திருவிழாவின் போது, குழந்தை இல்லாதவர்கள், சாமிக் குழந்தை வரம்வாங்குவது வழக்கம் (கடவுளின் பெயரால், இருளில், காட்டில், கூட்டத்தோடு கூட்டமாய்  முகம் தெரியாத ஆணிடம் (சாமி) உறவு கொண்டு பெண் கர்ப்பம் தரிப்பது) காளி பொன்னா தம்பதியினருக்கு குழந்தை இல்லை. பொன்னாவின் அம்மாவும் மாமியாரும் அண்ணனும் , ஊர் வழக்கப்படி வரம் வாங்க தேர்த் திருவிழாவுக்கு பொன்னாவை போகச் சொல்ல, கணவன் காளிக்கு இதில் உடன்பாடு இல்லை. பொன்னா சாமி வரம் வாங்க, தேர்த் திருவிழா செல்கிறாள். கதை முடிவில் காளியின் வாழ்வு முடிகிறது. அவலச் சுவையில் முடியும் நாவல் இது.

நாவலில் வரும் கதை மாந்தர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அந்தக் கால கிராமிய நடையிலேயே கொண்டு செல்லுகிறார் ஆசிரியர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் அடையும் ஏக்கத்தினையும், மற்றவர்கள் வறடன், வறடி என்று செய்யும் ஏளனத்தையும்  அவர்கள் அடையும் மனக்குமுறலையும் காளி பொன்னா (பொன்னாயீ) என்ற பாத்திரப் படைப்புகள் வழியே நூல் முழுக்க காணலாம். பழமையை எதிர்த்து அந்த காலத்தில் கிராப் வைத்துக் கொண்ட மைனர் வாழ்க்கை நடத்திய சித்தப்பா நல்லுப் பையன். அவருக்கு ஆக்கிப் போடும் அருந்ததியர் பையன்,  காளியை இரண்டாம் திருமணம் செய்யச் சொல்லும் மாட்டுத் தரகர் செல்லப்பா கவுண்டர், சேக்காளியாகவும் மச்சானாகவும் வரும் முத்து. இப்படி சிலர்.

இன்னும் பூவரசு மரம், நாடார் குறி சொல்லுதல், குழந்தை இல்லாததற்கு சாபம்தான் காரணம் என்று சொல்லப்படும் சாபக் கதைகள், பட்டியில் ஆடு வளர்த்தல், பிள்ளை இல்லாதவர்கள் கோயில் கோயிலாக போதல்,கடலைக்காய் பயிரிடும் முறை, தீண்டத் தகாதவர்கள் சூழல், தெய்வக் குழந்தை வாங்குதல் என்று கதை நீண்டு கொண்டே செல்கிறது.

இடையிடையே,

“முண்டை வளர்த்த பிள்ளை தண்டமாகத்தான் போகும்
நல்லாயி பொல்லாதவ நாளும் கெழமயும் இல்லாதவ
நாம என்ன கோட்ட கட்டி ஆள்ற வம்சமா
இன்னிக்கு நம்மள எவன் பாக்கறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னக்கித் தேவடியாதான்

போன்ற வாசகங்களையும் காணலாம்
                                                                     
எழுத்தாளரின் ஆர்வக் கோளாறு:

இந்த நூலின் நடையைப் பார்க்கும் போது, ஒரு பேராசிரியர் ஒருவர்தான் இப்படி எழுதினாரா என்று யோசிக்க வைத்தது. காரணம் பச்சையாக, கிராமங்களில் பேசும் பல சொற்களை, குஜிலி அச்சக புத்தகங்கள் போல, நாவலின் பல இடங்களில் பேராசிரியர் பெருமாள் முருகன் சர்வ சாதாரணமாக கதா பாத்திரங்கள் வழியே பேசுகிறார். இவற்றை “இடக்கரடக்கல் என்ற முறையில் தவிர்த்து இருக்கலாம்.

இது ஒரு நாவல் என்ற படியினால், கதையினில் வரும் ஒரு பெரிய ஊரின் பெயரை கற்பனைப் பெயராக வைத்து புனைந்து இருந்தால் இவ்வளவு தூரம் பிரச்சினை வந்து இருக்காது என்று எண்ணத் தோன்றுகிறது. முன்பெல்லாம் ஒரு கதையை நூலாக வெளியிடும் போது சட்ட பாதுகாப்பிற்காக, “இந்த கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்லஎன்று ஒரு அறிவிப்பை செய்து இருப்பார்கள். இப்போது நிறையபேர் அப்படி செய்வது இல்லை. ஆனால் நூலாசிரியர் பெருமாள் முருகன் அவர்கள், தனது முன்னுரையில் ரகசிய ஊற்றுக்களில் ஒன்று“ என்று தனது கருத்துக்களை  நியாயப்படுத்தி இருப்பது, நூலை எதிர்ப்பவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. பெருமாள் முருகனே இவ்வளவு தூரத்திற்கு இது போகுமென்று எதிர்பார்த்து இருக்க மாட்டார். தன்னுடைய சொந்த ஜாதிதானே ஒன்றும் ஆகாது என்று அசட்டையாக நினைத்து , ஆர்வக் கோளாறு காரணமாக எழுதியதாகவே தெரிகிறது.

நூலைப் பற்றி பொதுவாகச் சொல்வதானால் கொங்கு வட்டார வழக்கு மொழி நிரம்பிய ஒரு நாவல், எதிர்ப்பாளர்களால் இலக்கிய உலகில், அனைவரது பார்வையையும் தன் பக்கம் இழுத்து விட்டது.

சாதாரண குடிமகன் தனக்குத் தெரிந்ததை சொல்லிவிட்டு போய்விடுவான். அவன் சொன்னது அன்றே அப்போதே காற்றோடு காற்றாய் மறைந்து விடும். ஆனால் அதனையே எழுத்தாக்கி அச்சில் ஏற்றினால் ஆவணமாக மாறிவிட வாய்ப்பு அதிகம். உலகம் இதிலே அடங்குதுஎன்று தொடங்கும் பாடலில் வரும்

பொய் சொன்னாலும்
மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப்
பலனில்லே - அதை
மையில நனச்சுப்
பேப்பரில் அடிச்சா
மறுத்துப் பேச ஆளில்லே

                - பாடல் கண்ணதாசன் (படம்: குலமகள் ராதை)

என்ற வரிகள் இதைத்தான் சொல்லுகின்றன..
  
மிரட்டல் தவறு

எது எப்படி இருந்த போதிலும், சட்டப்படி வழக்கு தொடருவதை விடுத்து, எல்லோருமாகச் சேர்ந்து, ஒரு எழுத்தாளரையும் அவரது குடும்பத்தாரையும்  மிரட்டியது தவறாகவே தோன்றுகிறது. இதே அவர் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்திருந்தால் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. பெருமாள் முருகன் மீதுள்ள பொறாமை அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாகவே யாரோ சிலர் இந்த நூலைப் பற்றி பெரிதாக்கி இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. ஏனெனில் 2010 - இல் வெளியான இந்த நூலுக்கு இப்போதுதான் (2014 2015 இல்) எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது.  

எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்

என்று எழுத்தாளர் எழுதிக் கொடுக்கும் அளவிற்கு நிலைமை போய் விட்டது வருத்தமான விஷயம்தான். ஒருவேளை அவர் மீண்டும் எழுதத் தொடங்கினாலும், அவருடைய எழுத்துக்களில் பழைய யதார்த்தத்தை எதிர் பார்க்க இயலாது என்பது உண்மை. அவரும் அவர் குடும்பத்தினரும் இப்போது எப்படி இருக்கின்றனர்? பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பது பற்றிய செய்திகள் ஏதும் இல்லை.Monday 19 January 2015

மாற்றம் ஒன்றே மாறாததுபெரும்பாலும் வீட்டில் குடும்பத்துடன் நான் டீவி பார்ப்பதில்லை. இதனால் பல திரைப்படங்களையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்க்க இயலாமல் போய்விடும். முக்கிய காரணம், வேறொன்றுமில்லை. பிள்ளைகளோடு சேர்ந்து பார்க்குமளவுக்கு டீவி நிகழ்ச்சிகளும், படங்களும் இல்லை என்பதுதான். இதன் காரணமாக நான் தனியே டீவியில் படம் பார்த்தால் ஒன்று பாதிப் படமாக இருக்கும்; அல்லது படம் முடியும் தறுவாயில் இருக்கும். இதன் காரணமாக அண்மையில் ஜெயா டீவியில் ஒளி பரப்பிய கோச்சடையான் படத்தில் வரும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற பாடலையும் அது சார்ந்த சில காட்சிகளையும் மட்டுமே காண முடிந்தது. அப்புறம் வழக்கம் போல யூடியூப்பில் (YOUTUBE) அந்த பாடலை பார்த்தேன். இந்த பாடலில் வரும் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இந்த  பொன்மொழியை அடிக்கடி பத்திரிகைகளிலும் வலைப் பதிவுகளிலும் மேடைப் பேச்சுக்களிலும் பலர் சுட்டிக் காட்டுவதை பார்த்திருக்கலாம். ஆனால் இந்த வார்த்தையை சொன்னது யார் என்று சொல்வதில்லை.

என்றும் மாறாதது

ஆதியில் தொடங்கிய மனிதனின் நடை பயணம் இன்று பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கும் அதற்கு அப்பாலும் நீண்டு போய்க் கொண்டு இருக்கிறது. காலத்திற்கு தகுந்தவாறு மாறிக் கொண்டவர்களுக்கு பிழைப்பு கிடைத்தது. உதாரணத்திற்கு நம் நாட்டில் பார்ப்போம். கைரிக்‌ஷா போய் சைக்கிள் ரிக்‌ஷா வந்தது. அப்புறம் ஆட்டோவாக மாறியது. இந்த தொழில் செய்தவர்களில் மாற இயலாதவர்கள் காணாமல் போனார்கள். பல இடங்களில் சுனாமி வந்தது வாரி சுருட்டியது. இதில் பலநாட்டின், பலருடைய வாழ்க்கை முறையே மாறிப் போனது. இன்னும் கம்ப்யூட்டர் , செல்போன் என்று எவ்வளவோ மாற்றங்கள் மனித வாழ்வில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆக மாற்றம் ஒன்றே மாறாதது.   

ஹெராகிளிடஸ் (HERACLITUS)

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இந்த பொன்மொழியைச் சொன்னவர் ஹெராகிளிடஸ் (HERACLITUS)என்ற கிரேக்க அறிஞர். (படம் மேலே) இவர் கிரேக்கத்தில் சொன்னதை ஆங்கிலத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது (Change is the only immutable) மற்றும்மாற்றம் ஒன்றே நிலையானது  (Change is the only constant) என்று இரண்டு விதமாக மொழிபெயர்த்தனர். இன்னும் சிலர் There is nothing permanent, except Change” என்றும் எழுதினர்.

ஹெராகிளிடஸ், Ephesus  என்ற நகரில் (இது ஆசியா மைனர் என்ற இடத்தில், தற்போதைய துருக்கி நாட்டில் உள்ளது) ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திரமான சிந்தனையாளர். உலகளாவிய ஒரு சக்தியின் மேல் நம்பிக்கை உள்ளவர். தனிமை விரும்பி. புலம்பல் ஞானி (Weeping Philosopher) என்று அழைக்கப்பட்டவர். தனக்கென்று பின்தொடரும் மாணவர் பட்டாளம் ஏதும் இல்லாதவர். இவரது காலம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் (கி.மு 535 கி.மு 475) ஆகும்.

இந்த பொன்மொழி பிரபலமானது எப்படி?


பராக் ஒபாமா (BARACK OBAMA) அவர்கள் 2008 - இல் அமெரிக்க குடியரசுத் தலைவராக வந்தார். (இப்போது இரண்டாம் முறை) அப்போது தனது உரை ஒன்றில் மாற்றம் தேவை என்று உரையாற்றினார். அன்றுமுதல் இந்த பொன்மொழியும் ஊடகங்களில் கூடவே சேர்ந்து பிரபலமாயிற்று.

பாடல் வரிகள் மற்றும் வீடியோ:
       

ரஜினி வசனம்:
எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு

குழு:
உண்மை உருவாய் நீ
உலகின் குருவாய் நீ
எம்முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ
உன் மார்போடு காயங்கள்
ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள்
நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே
மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

ரஜினி வசனம்:
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது

பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது
சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்

நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை செயல்

குழு:
உடலா உயிரா பெயரா நீ ?
மூன்றும் இல்லை செயலே நீ
விதியை அமைப்பது இறைவன் கையில்
அந்த விதியை முடிப்பது உந்தன் கையில்

உன் வில்லோடு வில்லோடு
வீரம் கொடு
உன் சொல்லோடு சொல்லோடு
மாற்றம் கொடு
மாற்றம் ஒன்று தான் மாறாதது

ரஜினி வசனம்:
நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?

நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

பெற்றோர்கள் அமைவது விதி;
நண்பர்களை அமைப்பது மதி

சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்

நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்

குழு:
உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்…!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது..

பாடல்: வைரமுத்து  - படம்: கோச்சடையான்
இசை: A.R.ரகுமான்
பாடியவர்கள்: ரஜினிகாந்த், ஹரிசரண்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது” - என்ற என்ற இந்த பாடலை, கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் (YOUTUBE) இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)கட்டுரை எழுத துணை நின்றவை (நன்றியுடன்):
கோச்சடையான் பாடல் வரிகள்

                      (ALL PICTURES - COURTESY: "GOOGLE IMAGES")

  

Wednesday 14 January 2015

தி இந்து – பொங்கல் மலர் – 2015 (ஒரு பார்வை)

பொதுவாகவே எந்த புத்தகம் வாங்கினாலும், குறிப்பாக பத்திரிகைகள் வெளியிடும் பொங்கல் மலர், தீபாவளி மலர் போன்றவற்றை மேலெழுந்த வாரியாக ஒரு பார்வை பார்ப்பது வழக்கம். அப்புறம், நேரம் கிடைக்கும்போது, சாவகாசமாக ஆழ்ந்து படிப்பது வழக்கம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தி இந்து பொங்கல் மலர் 2015 சிறப்பாக வெளி வந்துள்ளது. (விலை ரூ120/=) பேப்பர் போடும் தம்பியிடம் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் கிடைத்தது. வழக்கம் போல எனது ஒரு பார்வை இங்கே.

ஆன்மீகம்:

பெரும்பாலும் பத்திரிகைகள் வெளியிடும் தீபாவளி மலர்களில் இறைவன் படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு தி இந்து பொங்கல் மலர் நிறைய ஆன்மீக விஷயங்களை உள்ளடக்கியதாக, சுருக்கமாக இருந்தாலும் தெளிந்த நீரோடைபோல விளக்குகிறது. புத்தகத்தின் இடையிடையே மேலே இணைத்துள்ள விஷ்ணுவின் படம் போன்று, மகேஸ்வர வழிபாடு, விஷ்ணு துர்கா, காயத்ரி தேவி, அனுமன், மதுரை மீனாட்சி அம்மன், கிருஷ்ணர், சீரடி சாய்பாபா ஆகிய தெய்வீக முழுபக்க வண்ண படங்களையும் காணலாம்.
  

“ சீரிய சிங்கம் செறிவுற தீ விழித்து என்று, தனது அஹோபிலம் நவ நரசிம்மர் ஆலய தரிசனம் பற்றி சொல்லுகிறார் என்.ராஜேஸ்வரி அவர்கள்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காணபது அறிவு என்றார் திருவள்ளுவர். திரிசிரபுரம் என்றழைக்கப் பட்ட இன்றைய திருச்சியில் அன்று வாழ்ந்தவர் தாயுமான சுவாமிகள். அவர் “ இறைவன் ஆனந்த மயமானவன். எல்லா உயிர்களும் ஆனந்தத்தையே விரும்புகின்றன. இறைவனிடம் லயிப்பதே பரமானந்தம் என்ற தத்துவத்தை உணர்த்தியவர் சுவாமிகள் என்று அவரது பாடல்களிலிருந்து  சிலவற்றை எடுத்துக் காட்டி விளக்குகிறார் சி.ஹரி அவர்கள். உங்களுக்கு இறைவன் வேண்டுமா? பிரம்ம சூத்திரத்தின் ஒரு பகுதியை தெய்வீகச் சுவையாக விளக்குகிறது இன்னொரு கட்டுரை.

திரைக் காலம்


நீங்கள் பழைய தமிழ் திரைப்படங்கள், பாடல்கள், நடிகர்-நடிகைகள் பற்றிய செய்திகள் மீது தனி ஆர்வம் உள்ளவரா? அப்படியானால் இந்த பொங்கல் மலர் உங்களுக்கு நிச்சயம் பிடித்துப் போகும். வாங்கி படியுங்கள்.


தமிழ் மவுனப்பட காலம் (1917) தொடங்கி, 1931 முதல் 1960 வரையிலான நிகழ்வுகளை சுவைபட விளக்குகிறது “ பயணத்தில் பளிச்சிடும் திருப்பங்கள். எழுதியவர்: கோ.தனஞ்ஜெயன்.


தமிழ் சினிமாவின் தந்தை - கே.சுப்ரமணியம் பற்றிய நினைவலைகள் பற்றி இன்னொரு கட்டுரை. ஆசிரியர் ஆர்.சி.ஜெயந்தன். இன்னும் “பாகவத நடிகர்கள் கட்டுரையில் M.K. தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் என்று வரிசைப் படுத்தி சுவையான செய்திகளைத் தருகிறார் சுரேஷ் கண்ணன்.

பிரதீப் மாதவன், பா.தீனதயாளன்,பி.ஜி.எஸ் மணியன். மோகன் வி.ராமன்  ஆகியோரது கட்டுரைகளில் இன்னும் நிறைய பழைய சினிமா தகவல்கள். அன்றைய கனவுக் கன்னி டி.ஆர். ராஜகுமாரி, எம்.ஜி.ராம்சந்தர் (எம்ஜிஆர்), வி.சி.கணேசன் (சிவாஜி கணேசன்), ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி, பத்மினி, சாவித்திரி, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம்  என்று நடிக நடிகையர் பட்டாள வரிசையை மேலும் காணலாம். அனைத்து கட்டுரைகளுக்கும் தேவையான புகைப்படங்கள் உதவி செய்தவர் ஞானம்.

“இப்போ நினைச்சாலும் ஆச்சரியமா இருக்கு என்று தனது பழைய நினைவுகளை சொல்லுகிறார் முதுபெரும் இயக்குநர் ஆண்டனி மித்ரதாஸ். ஜெயிலிலிருந்து வெளியே வந்த M.K.T பாகவதர்  நிலைமை பற்றி இவர் சொல்லும்போது உருக்கமாக உள்ளது

சினிமா என்றால் கண்ணதாசன் இல்லாமலா? “வண்ணமயமான கண்ணதாசன்என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ளார்.

சுற்றுலா:
தன்னிகரற்ற பெருமைகள் என்ற பெயரில், யுனெஸ்கோ மரபுச் சின்னங்கள் (WORLD HERITAGE SITES) என்ற புகழ்பெற்ற மாமல்லபுரம், தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், தாராசுரம், ஸ்ரீரங்கம், புனித ஜார்ஜ் கோட்டை, செட்டிநாடு, கழுகுமலை, பழவேற்காடு ஏரி ஆகிய சுற்றுலா இடங்கள் பற்றியும் மற்றும் நீலகிரி மலை ரயில், பட்டாடைகள் குறித்தும் உள்ள ஒரு பக்கக் குறிப்புகள் படங்களுடன் சிறப்பாக உள்ளன.

கொழும்பு டாக்டர் அ முத்துலிங்கம் தனது பயணங்கள் குறித்து (ஆதி பண்பு) பேசுகிறார். தனது டார்ஜிலிங் பயணம் எவ்வாறு இருந்தது என்று படங்களுடன் சொல்லுகிறார் பிருந்தா கணேசன். ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் சுற்றிய அனுபவம் மகுடேஸ்வரனுடையது.  சொர்க்கமே என்றாலும் ... ... அது சிங்கப்பூர் போலாகுமா என்று ஒரு கட்டுரை

இன்னும் பிற:


தாமிரபரணிக்கு அருகே உள்ள கல்லூர் என்ற தனது கிராமத்தில் பொங்கல் விழா நாட்களுக்கு முன்னும், பொங்கலன்றும் ஊர்மக்கள் எப்படியெல்லாம் மகிழ்வுடன் இருப்பார்கள் என்பது பற்றி பேசுகிறார் ஏ.வி.பெருமாள்.
ஓவியர்கள் கோபுலு, ஜெயராஜ், மணியம் செல்வன், மாருதி, ராமு, வீர சந்தானம் ஆகியோரைப் பற்றிய புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டு உள்ளன. தனது ஜல்லிக்கட்டு அனுபவங்கள் பற்றி பேசுகிறார்  புகைப்படக் கலைஞர் செந்தில் குமரன். இன்னும் பழைய எழுத்தாளர்கள் சிலரது கதைகளை மீள் வாசிப்பு செய்யலாம்.

தமிழ்நாட்டிலுள்ள நாட்டு நாய்கள் மிகவும் பேர் போனவை. குறிப்பாக ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை வகை வீட்டு வளர்ப்பு நாய்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவதாக ப.கோலப்பனின் ஒரு கட்டுரை.


படங்கள் நன்றி: தி இந்து.

முக்கிய குறிப்பு: இங்கு மேலே உள்ள அனைத்து படங்களும் தி இந்து பொங்கல் மலர் 2015 இலிருந்து கேனான் டிஜிட்டல் கேமரா (CANON POWERSHOT A800) வினால் எடுக்கப்பட்டவை.


                                      அனைவருக்கும் எனது உளங்கனிந்த
                                                பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Sunday 11 January 2015

சீமைக் கருவை – தீமையா?
எந்த ஊர் சென்றாலும் அந்த ஊரின் ஆற்றங் கரை, குளக்கரை, கண்மாய், புறம்போக்கு நிலம் - என்று எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது சீமைக் கருவை எனப்படும் சீமைக் கருவேலம் (PROSOPIS JULIFLORA) மரங்கள்தாம். இது ஒரு வகை முள்மரம். ஆஸ்திரேலியாவிலிருந்து நமது இந்தியாவுக்கு இதன் விதைகள் கொண்டு வரப்பட்டதாக சொல்லுகிறார்கள்.

சீமைக் கருவை ஒழிப்பு:

இப்போது சீமைக் கருவேலமரம் ஒழிப்பு என்று குரல்கள் எழத் தொடங்கி உள்ளன. அதாவது சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப் படுகிறது, தாவரங்களுக்கு பாதிப்பு, கால்நடைக்கு பாதிப்பு என்றெல்லாம் பட்டியல் இடுகின்றனர். குறிப்பாக பேஸ்புக் (FACEBOOK)போன்ற சமூக வலைத் தளங்களில் இவற்றைக் காணலாம். ஒருவர் பேஸ்புக்கில் எழுதி விட்டால் போதும். அந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை அல்லது நம்பகமானது என்றெல்லாம் யோசிப்பதில்லை. உடனே ஆளாளுக்கு ஒருவருக்கொருவர் நட்பு வட்டங்கள் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர்.

எனக்கு தெரிந்து இவர்கள் பரபரப்பாக சொல்வதைப் போல, சீமைக் கருவேல மரங்களால் அதிகம் பாதிப்பு இருப்பது போல தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் நாடு எப்போதோ சுடுகாடாக மாறி இருக்கும். யூக்லிப்ட்ஸ் (EUCALYPTUS) மரங்களையும் இப்படித்தான் சொன்னார்கள். ஆனால் இப்போதோ பல இடங்களில், தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் யூக்லிப்ட்ஸ் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

எனவே எனது ”மாற்று சிந்தனை” கட்டுரை இது.

மரத்தின் பயன்பாடுகள்:

இன்று நாடு முழுக்க வீட்டுக்கு வீடு கழிப்பறை (TOILET ) கட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு உண்டாகி இருக்கிறது. ஆனால், காலம் காலமாக பல கிராமங்களில் இன்றும் அவசரத்திற்கு என்று ஒதுங்குவது இந்த கருவ மரங்கள் அடர்ந்த காடுகளுக்குத் தான். வீட்டிற்கும் தோட்டங்களுக்கும் வேலியாக பயன்படுவதால் வேலிக்கருவை என்ற பெயரும் உண்டு.


இன்றும் பல வீடுகளில், உணவு விடுதிகளில் அடுப்பெரிக்க பெரிதும் பயன்படுவது சீமைக் கருவேல மரங்கள்தான். கிராமம் சென்றால், பல பெண்கள் இந்த மரத்தினை வெட்டி, இலைகள் மற்றும் முட்களை நீக்கி விட்டு, விறகிற்காக கட்டு கட்டாக சுமந்து வருவதைக் கணலாம். இந்த மரங்களை விறகுக்காக பயன்படுத்துவதால் தான் மற்ற மரங்கள் அடுப்புக்கு போகாமல் தப்பின. இதன் பிசின், கோந்து எனப்படும் பசை தயாரிக்க உதவுகிறது. எனக்கு தெரிந்து, கிராமத்தில் இருந்த எங்கள் உறவினர் ஒருவர் அவர் தோட்டத்தில் இருந்த கருவை மரங்களை விற்று, தன் வீட்டு திருமணம் ஒன்றை நடத்தினார்.அடுப்புக்கரி தயார் செய்வதற்கும், செங்கல் சூளையில் நெருப்பு மூட்டவும், இந்த மரம் பெரிதும் பயன்படுகிறது. எனவே வியாபார ரீதியாகவும் இந்த மரங்கள் கிராமப்புற மக்களுக்கு நல்ல வருமானம் தருகின்றன.


இதன் மஞ்சள் நிற விதைகளை கால்நடைகள் விரும்பித் தின்னுகின்றன. எனது சிறுவயதில், எனது தாத்தா வீட்டில், அவர் இந்த விதைகளைப் பறித்து மூட்டையாக வைத்து இருப்பார். எங்கள் தாத்தா வீட்டு பட்டியில் இருந்த ஆடுகளுக்கு நானே இந்த விதைகளை அள்ளி போட்டு இருக்கிறேன்.   

தி இந்து கட்டுரை:

தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன் அவர்களின் கட்டுரை ஒன்று  தி இந்து “ ( ஜூலை, 1, 2014) தமிழ் இதழில் வந்துள்ளது. அதில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:

// இயல் தாவரமோ, அயல் தாவரமோ முதலில் மண்ணரிப்பைத் தடுத்து மண் வளத்தைப் பாதுகாக்கிறது, விறகைத் தருகிறது. இன்றைக்கும் சாதாரண மக்கள் தாவர எரிபொருளையே சார்ந்திருக்கிறார்கள். அயர்ன் செய்பவர்கள், டீக்கடைக்காரர்கள் சீமை கருவேலத்தின் மர கரியை நம்பித் தொழில் நடத்துகிறார்கள். தென் மாவட்டங்களில் சீமை கருவேல மரத்தில் இருந்து கரி தயாரிக்கும் தொழில் முக்கியமானது. ஆடு, மாடுக்குத் தீவனமாகவும் இந்தத் தாவரம் இருக்கிறது. பல்வேறு வகைகளில் பயன்தரும் இயற்கைவளம் இது.
இப்படிப் பல்வேறு பொருளாதார நலன்களைத் தரும் தாவரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமா என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்தால், சாதாரண மக்களுக்குப் பொருளாதாரரீதியில் பெரும் இழப்பு ஏற்படும். அதற்கு மாற்று ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதேநேரம் சீமை கருவேலத்தின் கண்மூடித்தனமான பரவலை முறையாக நிர்வகிக்க வேண்டியது அவசியம்தான்.
இப்படி அயல் தாவரங்களை எதிர்க்கும்போது, வேறு விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். யூகலிப்டஸ் எனும் தைல மரம் இல்லையென்றால், காகிதத் தொழிற்சாலைகளால் நமது காடுகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கும்? கிட்டத்தட்ட 20-30 சதவீதக் காடுகள் அழிந்து போயிருக்கும்.
மரம் வெட்டுவதையும் நடுவதையும் முறைப்படுத்தத் தாவர ஆணையம் போன்ற அமைப்பு தமிழகத்தில் தேவை. பூனாவில் இது போன்ற குழு இருக்கிறது. ஓர் இடத்தில் உள்ள மரத்தை வெட்டலாமா, கூடாதா என்பது பற்றி முடிவெடுப்பது மட்டுமில்லாமல், ஓரிடத்தில் எந்த மரத்தை நடுவது உகந்ததாக இருக்கும் என்றும் இந்தக் குழு ஆலோசனை வழங்கலாம். அதற்கான நிபுணத்துவம் கொண்டவர்களை உள்ளடக்கி, இந்தக் குழுவை உருவாக்கப்பட வேண்டும். //
( நன்றி : tamil.thehindu.com/general/environment/சீமை-கருவேலத்தை-ஒழிக்கத்தான்-வேண்டுமா-தாவரவியல்-பேராசிரியர்-நரசிம்மன்/article6164634.ece )

எனவே சீமைக் கருவையை ஒரு தீமையான மரம் என்று சொல்லுவதை விட, அதனை எப்படி பயன்படுத்தினால் நல்லது என்று யோசித்தால் சமூகநலனுக்கு நல்லது.

          (ALL PICTURES - COURTESY: "GOOGLE IMAGES")

 Friday 9 January 2015

மறைந்த பதிவரின் பெயரில் கேள்வியும் - பதிலும்அய்யா பழனி கந்தசாமி அவர்களது பதிவுகள் ரொம்பவும் சுவாரஸ்யமானவை. அவரது வாசகர்களில் நானும் ஒருவன். சிலசமயம் தனது கம்ப்யூட்டரில் ஏதாவது செய்து விட்டு, மாட்டிக்கொண்டு ஙேஎன்று விழிப்பார்; பின்னர் மீண்டு வந்த கதையை ஒரு பதிவாகப் போடுவார். அல்லது தான் வாங்கிய புதிய பொருட்களைப் பற்றிய தனது அனுபவத்தினை எழுதுவார். இவை என் போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இதுவாவது பரவாயில்லை. சில சமயம், பிரச்சினையான தலைப்புகளில் பதிவுகளைப் போட்டு விட்டு , எக்கச்சக்கமான கருத்துரைகளை சாதகமாகவும், பாதகமாகவும் பெற்று, எல்லாவற்றிற்கும் அசராது பதில்கள் சொல்லியும்,  வலையுலகில் பரபரப்பாக இருப்பார்.

கேள்வியும்- பதிலும்:

அண்மையில், அவர் பரபரப்பாக குடும்பப் பெண்கள் கடைப் பிடிக்க வேண்டியவை  என்று ஒரு பரபரப்பான பதிவை வெளியிட்டார். அதில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் சில கேள்விகள்..

// எவ்வளவு மூடத்தனமான குறிப்புகள். வாசல் எங்கே இருக்கிறது , சாணம் தெளிக்க? பொட்டில்லாமல் இருக்கக் கூடாது சரி, அப்படியானால் கணவனை இழந்தோர்? தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள். //

அதற்கு அய்யா பழனி. கந்தசாமி அவர்கள்,

//அது தெரியாத மூடனாக இருப்பதால்தானே இப்படிப்பட்ட பதிவுகள் எழுதிக்கொண்டு இருக்கிறேன். அறிவியல் ரீதியான விஷயங்களைத் தருவதற்குத்தான் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்களே?//

என்று பதில் அளித்ததோடு, இதற்காகவே ஒரு தனி பதிவு ஒன்றினை,

மூடத்தனமான பதிவுகள்

என்று வெளியிட்டு இருந்தார். இதில் என்ன  பெரிதாக கண்டு பிடித்து விட்டாய்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மேற்கொண்டு படியுங்கள்.

பொன்னியின் செல்வன்:

பொன்னியின் செல்வன் என்ற அந்த பதிவரின் பெயரில் கேள்வி கேட்டது பற்றியோ அல்லது அய்யா அவர்கள் பதில் எழுதியது அல்லது பதிவு போட்டதெல்லாம் பெரிய விஷயமில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் என்ற பதிவர் இறந்து  ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகி விட்டன என்பதும், இறந்து போன அந்த வலைப் பதிவரின் தாய், தனது மகனின் நினைவாக அந்த வலைத் தளத்தினை தொடர்ந்து நடத்தி வருகிறார் என்பதும் அவர்தான் இந்த கேள்வியைக் கேட்டவர் என்றும், அய்யாவுக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவேதான் இந்த பதிவு.

இறந்த மகனின் நினைவாக அம்மா:

கார்த்திகேயன் என்பவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். பெங்களூரில் பணிபுரிந்து வந்தார். இவர் கார்த்திக் என்ற பெயரில் “விஜயநகரம்” ( Vijayanagar – விஜயநகரம் http://vijayanagar.blogspot.in )  என்ற வலைத் தளம் ஒன்றினைத் தொடங்கி எழுதி வந்தார். இவர் ஒருநாள் தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தபோது , சாலையில் சறுக்கி விழ, வேறு வேலையாக அங்கு சாலை ஓரம் நின்று கொண்டிருந்த செந்தழல் ரவி அவர்கள், ஓடிச் சென்று கார்த்திக்கை தனது மடியில் கிடத்துகிறார். இவரும் ஒரு பதிவர். ஆனால் இருவருக்கும் ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாது. அறிமுகம் கிடையாது. அப்போது அங்கு என்ன நடந்தது என்பதனை, சகோதரர் செந்தழல் ரவி அவர்கள், கீழ்க்கண்ட தனது பதிவினில் விவரிக்கிறார். இந்த பதிவினையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் அவசியம் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ( இந்த பதிவினை நான் ஒரு வாசகனாக , எனது வலைத்தளம் தொடங்குவதற்கு முன்பு படித்தது)


பொன்னியின் செல்வன் என்ற கார்த்திகேயன் ( கார்த்திக்) இறந்த பிறகு, தனது மகன் மீதுள்ள பாசத்தால், அவரது நினைவாக, அவரது தாய் அவரது Vijayanagar – விஜயநகரம் “ என்ற பதிவினை தொடர்ந்து நடத்தியும், பதிவுகள் எழுதியும் வருகிறார். இந்த செய்தி மலைப்பூட்டும் செய்தியாகவே உள்ளது. அந்த வலைத் தளத்தில், இறந்து போன கார்த்திக் பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. திறமைசாலியான ஒரு இளைஞன் சின்ன வயதிலேயே முடிந்து போனது கண்ணீரை வரவழைத்தது.  

என்னுடைய கருத்து:

கார்த்திக்கின் அம்மா அவர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு தன மகன் பெயரிலேயே பதிவுகள் எழுதப் போகிறார்? ஒரு மன சாந்திக்காகவே என்றாலும், மற்றவர்கள் பதிவினில் இன்னொருவர் பெயரினில் கருத்துரைகள் எழுதுவதும் கேள்விகள் கேட்பதும் தவறு அல்லவா? சில சமயம் குழப்பமும் வரலாம். எனவே சகோதரி (கார்த்திக்கின் அம்மா) அவர்கள், தனது மகன் பற்றிய சோகத்திலிருந்து மீண்டு வந்து, தனது பெயரிலேயே ஒரு வலைத் தளத்தினைத் தொடங்கி எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இதில் தனது மகனைப் பற்றிய நினைவலைகளை மற்றவர்களுக்குச் சொல்லி, மகனுக்கு அஞ்சலி செய்யலாம். அவரது மகனின் ஆன்மாவும் சாந்தி அடையும். 

  Friday 2 January 2015

வி.கிரேஸ் பிரதிபா – துளிர் விடும் விதைகள் (நூல் அறிமுகம்)சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் (05.10.2014, ஞாயிறு) மாலை புதுக்கோட்டை, நகர்மன்றத்தில் ஒரு இனிய விழா நடை பெற்றது. ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களது மூன்று  நூல்கள் வெளியீட்டு விழாதான் அது. நானும் போயிருந்தேன்.அப்போது அய்யா முத்துநிலவன் அவர்களும் மற்ற நண்பர்களும் “ தேன் மதுரத் தமிழ் கிரேஸ் என்ற வலைப்பதிவர் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும், வலைப் பதிவர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே தனது குடும்பத்துடன் வந்து இருக்கிறார். அவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். தமிழார்வம் மிக்கவர் ‘ என்றும் சொன்னார்கள். அவரை அறிமுகமும் செய்து வைத்தனர். தேன் மதுரத் தமிழ் கிரேஸ் எனப்படும் அந்த பதிவர் சகோதரி வி.கிரேஸ் பிரதிபா அவர்கள். அவருடைய வலைத் தளத்தின் பெயர் (http://thaenmaduratamil.blogspot.com) தேன் மதுரத் தமிழ் என்பதாகும். இன்னும் http://innervoiceofgrace.blogspot.com மற்றும் http://sangamliteratureinenglish.blogspot.com என்ற தன்னுடைய ஆங்கில வலைத் தளங்களிலும் எழுதி வருகிறார்.

சகோதரி வி.கிரேஸ் பிரதிபா அவர்கள் எழுதிய துளிர் விடும் விதைகள் என்ற கவிதை நூலை அறிமுகம் செய்து எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பெரும்பாலும் இவரது கவிதைகள், புதுக் கவிதைகளுக்கே உரிய “இயல்பு நவிற்சி அணி கொண்டு அலங்கரிக்கின்றன.

தமிழின் பெருமை:

தமிழுக்கு தமிழ், செந்தமிழ், தீந்தமிழ் என்று பல பெயர்கள். சொல்லிக் கொண்டே போகலாம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் என்று பாடினார். செவ்வாயோ எவ்வாயோ  எக்கிரகம் சென்றிடினும் தமிழ் கொண்டே சென்றிடுவாய் (பக்கம்.23) என்ற கொள்கை கொண்ட நமது சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள்,

பல மொழி கேட்பினும்
அயல் மொழி பயன்படுத்தினும்
இன்னுயிராய்க் குருதியோடு கலந்தது தமிழன்றோ?
வாய் மொழி மாறினும் உயிர் மொழி மாறுமோ?
இடையில் துவங்கி இடையில் போன மொழிபல உண்டு
இடையூறு பல தாண்டித் தொன்றுதொட்டு
என்றும் இளமையுடன் செம்மொழியாய் இனிப்பினும்
இனிப்பது எம் தமிழ் அன்றோ!
                                       - (பக்கம்.22)

என்று சொல்லி மகிழ்கிறார்.

தந்தையின் பங்கு:

ஒரு குழந்தையின் வளர்ப்பினில் அந்த குழந்தைக்கு தாய் செய்யும் தியாகங்கள் போன்றே தந்தையின் தியாகமும் மகத்தானது. சமுதாயத்தில்  தாயின் தியாகம் போற்றப்படும் அளவிற்கு, தந்தையின் தியாகம் நினைக்கப் படுவதில்லை. திருவள்ளுவர், தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி என்றும், மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்றும் பேசுகிறார். நமது கிரேஸ் அவர்கள்,

என் தந்தாய்
நீ
எல்லாம் தந்தாய்
எதுவும் எதிர்பாராமல்

என்னைச் செதுக்கிய சிற்பியே
நீ இல்லாமல் நான் வெறும் கல்லே
என்னை உருவாக்கிய குயவனே
நீ இல்லாமல் நான் வெறும் மண்ணே   
                     - (பக்கம்.26)

என்று, தந்தையர் தினத்தன்று, தந்தையின் பெருமையைச் சொல்லி சிறப்பிக்கின்றார்.

தண்ணீர் தண்ணீர்:

இப்போது எங்கு பார்த்தாலும் தண்ணீர் பிரச்சினைதான் பெரிதாகப் பேசப்படுகிறது. இரண்டு உலக யுத்தங்கள் வந்து விட்டன. இனி மூன்றாவது உலக யுத்தம் என்ற ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள். அன்று தண்ணீருக்காக அலைந்த காகம் ஒன்று, பானையின் அடியில் இருந்த கொஞ்சம் தண்ணீரைக் குடிக்க, சிறு சிறு கற்களைப் போட்ட கதை எல்லோருக்கும் தெரியும். நமது கவிஞர் அன்றைய கதையை நினைவு படுத்தி,  

கதை கூறிய என் சிந்தை
கவர்ந்ததே ஒரு காக்கை
தொடுத்ததே கேள்விக் கணை

கூழாங்கல் எங்கே?
பானையும் எங்கே?
தண்ணீரும்  எங்கே எங்கே?
                     - (பக்கம்.32)

என்று கூழாங்கல் மறைந்து போகும் நிலைமை, மண் பானையின் பயன்பாடு அருகி வந்தமை, தண்ணீர்ப் பிரச்சினையென்று சுற்றுப்புறச் சூழல் பற்றி, சில வரிகளில் ஓவியமாய் வரைகின்றார்.

கடற்கரையில்:

கடற்கரையில் நுரைத்து வரும் நுரைக் கற்றைகளை வெள்ளிக் கொலுசிற்கு உவமையாக்கி காட்டுகிறார்.

நுரைக்கும் வெள்ளியைக்  கொலுசாய் அணிவிக்க
காலை வருடும் அலைகள்
அவற்றிடம் பொறாமை கொண்டு கால்களைப்
புதையச் செய்யும் மணல்

                          - (பக்கம். 61)

இந்த வரிகள் வரும் கடற்கரை என்ற கவிதையில் நிறையவே உவமைகளைக் காணலாம்.

கம்ப்யூட்டர் காலம்:

இது கம்ப்யூட்டர் யுகம். இது வந்ததும் தொலந்து போனவை எத்தனை எத்தனையோ? தபால் எழுதுவது கூட மின்னஞ்சல் வழியேதான். அதில் கையெழுத்தே கிடையாது. கவிஞரின் நுணுக்கமான சிந்தனை வரிகள் இவை.

அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணிணியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை!
              
             -( பக்கம்.94) 

பாட்டு வரும்:

முன்பெல்லாம் பெண் கவிஞர்கள் காதலைப் பற்றி வெளிப்படையாக பாடுதல் அரிது. இன்று அப்படி இல்லை. வலைப்பதிவில் பல பெண் கவிஞர்கள் எழுதி வருவதைக் காணலாம். நமது சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் எழுதிய காதல் பாடல்களில் ஒன்று இதோ

நாடியில் விரல் வைத்து
நாள்கணக்காய் யோசித்தாலும்
எழுதுகோலைக் கடித்து கடித்து
எழாமல் எண்ணினாலும்

காகிதத்தைக் கசக்கி கசக்கி
கடமையாகச் சிந்தித்தாலும்
கவிழ்ந்து படுத்து மணிக்கணக்காய்
காலாட்டி யோசித்தாலும்

வராத கவிதை நீர்வீழ்ச்சியாய்
வந்ததே உனைக் கண்டதும்

                    - ( பக்கம். 48)
  
இந்த வரிகளைப் படித்ததும், எனக்கு எம்ஜிஆர் சரோஜாதேவி பாட்டு வரும் உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்என்று பாடும் டூயட் காட்சி நினைவுக்கு வந்தது. படத்தின் பெயர் நான் ஆணையிட்டால். பாடலாசிரியர் - வாலி

ஆண்: பாட்டு வரும்

பெண்: என்ன?

ஆண்: பாட்டு வரும்  உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்

பெண்: ம் ... ம்ஹூம் ...

ஆண்: பாட்டு வரும்  உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
      அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
       உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
      அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

பெண்: அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
       அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும் 

பாட்டு வரும்  உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்என்ற என்ற இந்த பாடலை, கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)தமிழ்ப் பணி தொடரட்டும்:

நூலினைப் பற்றி சிறப்பாக இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் (வி.கிரேஸ் பிரதிபா) அவர்கள் ஐங்குறுநூறு பாடல்களுக்கு எளிமையான உரை எழுதி இருக்கிறார். மேலும் தமிழ் இலக்கியம் சம்பந்தமாக ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இவைகளும் நூல்களாக வெளி வந்தால் நல்லது. தமிழ் இலக்கியத்திற்கு இவை மேலும் சிறப்பு செய்யும். வாழ்க அவரது தமிழ்ப் பணி.                                              
                                                          
இவரது இந்த கவிதை நூலானது மதுரையில் நடந்த  வலைப் பதிவர்கள் சந்திப்பு மாநாட்டில் (26.10.2014 ஞாயிறு) சிறப்பாக வெளியிடப்பட்டது. 

'துளிர் விடும் விதைகள்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

நூலின் பெயர்: துளிர் விடும் விதைகள்
நூலாசிரியர்:   வி.கிரேஸ் பிரதிபா
பக்கங்கள்: 104  விலை ரூ 100/=
நூல் வெளியீடு: அகரம், மனை எண்.1, நிர்மலாநகர், தஞ்சாவூர்
               613 007 போன்: 04362 239289