என்னுடைய அப்பா திருச்சி
பொன்மலை ரெயில்வேயில் DY CONTROLLER OF STORES ஆக பணிபுரிந்தவர். சுமார் இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது 60 ஆவது
வயதில் பணி ஓய்வு பெற்றார். அப்போதெல்லாம் திருச்சியில் ரெயில்வே ஊழியர்கள், சக
ஊழியர் பணி ஓய்வு பெறும் நாளன்று அவருக்கு ஒரு வாக்கிங் ஸ்டிக்கையும் பரிசாகத்
தருவார்கள். என்னுடைய அப்பாவிற்கும் அதே போல அவரோடு பணிபுரிந்த ஊழியர்கள் வாக்கிங்
ஸ்டிக்கை நினவுப்பரிசுகளில் ஒன்றாகத் தந்தார்கள். அவர் அந்த வாக்கிங் ஸ்டிக்கை வாங்கிய
நாளிலிருந்து ஒருநாள் கூடப் பயன்படுத்தியது கிடையாது. இப்போது அவருக்கு
சர்டிபிகேட் பிரகாரம் வயது 88 (கிராமத்து உறவினர்கள் கணக்குப்படி அவருக்கு 90
வரும் ) இன்றும் அவர் எந்த வாக்கிங் ஸ்டிக்கையும்
பயன்படுத்தாமல் நன்றாகவே இருக்கிறார்.
வாக்கிங் ஸ்டிக:
நான் சிறுவனாக
இருந்தபோது பல முதியவர்கள் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நகரத் தெருக்களில் நடந்து
போவதைப் பார்த்து இருக்கிறேன். திருச்சி செயிண்ட் லூர்து மாதா ஆலயத்தில் ஒரு
வெளிநாட்டு பாதிரியார் இருந்தார். நல்ல உயரம். அவர் கையில் வாக்கிங் ஸ்டிக்
உதவியுடன்தான் நடப்பார். அதேபோல ஓய்வு பெற்ற பல அரசு ஊழியர்கள் மின்சார பில்லிற்கு
பணம் கட்ட வரும்போதும், ஓய்வூதியம் பெற தெப்பக்குளம் போஸ்டாபிசிற்கு வரும்போதும்,
டவுன்ஹால் தாலுகா அலுவலகம் வரும்போதும் வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியபடி வருவதைப்
பார்த்து இருக்கிறேன். கிராமங்களில் வாக்கிங் ஸ்டிக்கிற்குப் பதிலாக கைத்தடி வைத்து
இருப்பார்கள். அவ்வையார் போன்று கோலூன்றி நடப்பார்கள். அறுபது வயது ஆகிவிட்டாலே வயதாகி
விட்டது என்ற எண்ணம் அப்போது மக்களிடம் பரவலாக இருந்தது.
பாக்கியம்
ராமசாமியின் அப்புசாமி - சீதாப்பாட்டி கதைகளில் வரும் அப்புசாமி தாத்தா வாக்கிங்
ஸ்டிக்கோடு வரும் கேரக்டர். அப்போதைய பல அரசியல் தலைவர்கள் பலரது படங்களை வாக்கிங்
ஸ்டிக்கோடு காணலாம்.
வாக்கிங் ஸ்டிக்
எங்கே?
முன்புபோல் இப்போது
வாக்கிங் ஸ்டிக்கோடு வரும் மனிதர்களை அதிகம் காண முடிவதில்லை. கிராமத்திலும் அவ்வாறே.
தடியூன்றிய மனிதர்களைக் காண்பது அரிது. அறுபது வயதானாலும், எழுபது வயதானலும்
எல்லோரும் நன்றாகவே நடக்கிறார்கள். முதுமை என்ற உணர்வே வருவது இல்லை.
சராசரி வயது
அதிகரிப்பு:
அண்மையில் நான் திருக்கடையூர்: அறுபதாம் கல்யாணம் http://tthamizhelango.blogspot.com/2013/12/blog-post_28.html ) என்று ஒரு பதிவு எழுதினேன். அந்தப் பதிவினில்
அண்மையில் நான் திருக்கடையூர்: அறுபதாம் கல்யாணம் http://tthamizhelango.blogspot.com/2013/12/blog-post_28.html ) என்று ஒரு பதிவு எழுதினேன். அந்தப் பதிவினில்
//
திருக்கடையூரில் கோயில் வாசலில் நிறைய வேன்கள், டாக்சிகள். வெளியூரிலிருந்து வந்தவர்கள்.
மார்கழி என்பதால் நிறைய அய்யப்ப பகதர்கள். அவர்களுக்கு இடையில் மாலையும்
கழுத்துமாய் அறுபதாம் கல்யாண மணமக்கள். நிறையபேர் அறுபது ஆனவர்களாகவே தெரியவில்லை.(
காரணம் நவீன
மருத்துவம் மற்றும் உடல் - உடை அலங்காரம் போன்றவை ) //
என்று எழுதினேன்.
அதற்கு கருத்துரை தந்த மூத்த வலைப்பதிவர் “ நினைத்துப் பார்க்கிறேன் ” திரு வே நடனசபாபதி அய்யா அவர்கள்
// எனக்குத்தெரிந்து
கடந்த 25 ஆண்டுகளாகத்தான்
எல்லோரும் திருக்கடையூர் சென்று அறுபதாம் கல்யாணத்தை நடத்துகிறார்கள். அதற்கு முன்பு
அவரவர்கள் வீட்டிலேயே நடத்துவார்கள். மேலும் அறுபதாம் ஆண்டில் கல்யாணம்
நடத்துவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அப்போதெல்லாம் சராசரி ஆயுட்காலம் 55
தான் என்பதால் 60 வயது தாண்டியவர்கள் குறைவு என்பதால் அந்த வயதை
அடைந்தவர்கள் அந்த நிகழ்வை திருமணவிழாவாக கொண்டாடினார்கள்.//
என்று சராசரி
வயதைப் பற்றி சொன்னார். அவர் சொன்னதுபோல் இப்போது ஒரு இந்தியனின் சராசரி வயது
உயர்ந்து உள்ளது. இந்தியர்களின் சராசரி ஆயுள் 65.8 வயது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் புள்ளிவிபரங்கள்
தெரிவிக்கின்றன. மேலும்
நவீன மருத்துவ முறைகள் வந்து விட்டபடியினால் அறுபது அல்லது எழுபது வயதிலும்
ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. யாரும் வாக்கிங் ஸ்டிக்கை நாடுவதில்லை.
கிராமங்களில் கூட தடியூன்றிய முதியவர்களைக் காண முடிவதில்லை. நலவாழ்வுத்
துறையின் வளர்ச்சியும், ஊட்டச்சத்து
உணவுகளும் இந்தியர்களின் ஆயுள் அதிகரிக்க காரணம் என்று சொல்லுகிறார்கள்.
நோயற்ற வாழ்வே:
எனவே இன்றைய நவீன யுகத்தில் வயதானாலும், மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். நோய்களைக் கட்டுப்படுத்தலாம். எனபதனைக் கருத்தில் கொள்ளுங்கள். அனைவரும் ஆரோக்கிய வழியினை நாடுங்கள்
எனவே இன்றைய நவீன யுகத்தில் வயதானாலும், மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். நோய்களைக் கட்டுப்படுத்தலாம். எனபதனைக் கருத்தில் கொள்ளுங்கள். அனைவரும் ஆரோக்கிய வழியினை நாடுங்கள்
HEALTH IS WEALTH
நோயற்ற வாழ்வே குறைவற்ற
செல்வம்