Showing posts with label வங்கி. Show all posts
Showing posts with label வங்கி. Show all posts

Monday, 9 January 2017

பத்து ரூபாய் நாணயம்



செல்போனில் சமூக வலைத் தளங்கள், வந்தாலும் வந்தன வதந்திகள் தான் வேகமாக பரவுகின்றன. போகிற போக்கில் யாராவது எதையாவது கிளப்பி விடுகிறார்கள்; அது உண்மையா பொய்யா என்று கூட தெரியாமல் பலரும் பகிர்ந்து கொள்கின்றனர். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறும்போது அந்த பொய், மெய் போலவே ஆகி விடுகிறது. அந்த வகையில் இப்போது நம்நாட்டில் ’பத்து ரூபாய் நாணயம்’ செல்லாது என்ற வதந்தியினால் படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறது. 

பஸ்சில் கடைகளில்:

ஒவ்வொரு பஸ்சிலும் நடத்துநர்களின் இப்போதைய புலம்பல் என்பது இதுதான்.

“ சார், யாரைப் பார்த்தாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வாங்க மாட்டேன் என்கிறார்கள். டெப்போவில் எங்களுக்கு சில்லறை தரும்போது, பத்து ரூபாய் நாணயங்களைத் தந்து விட்டு, நீங்கள் வாங்காதீர்கள் என்று சொல்லுகிறார்கள்” 

ஒருநாள் பஸ்சில் பயணம் செய்யும் போது, ஒரு பெண்மணியிடம் சில்லரை இல்லாத படியினால், நடத்துநர், ஒரு பத்து ரூபாய் நாணயத்தை எப்படியோ கொடுத்து விட்டார்; அந்த அம்மா புலம்பிக் கொண்டே இருந்தார். இரக்கப்பட்ட பயணிகளில் ஒருவர், பத்து ரூபாய் தாள் ஒன்றைக் கொடுத்து அதனை வாங்கிக் கொண்டார்.

ஒருமுறை ஒரு டீக் கடையில், ஒருவர் கொடுத்த பத்து ரூபாய் நாணயத்தை வாங்கிய கடைக்காரர் அதில் உள்ள கோடுகளை எண்ணிப் பார்த்து வாங்கிக் கொண்டார். அதாவது 10 கோடுகள் இருந்தால் நல்ல நாணயமாம்; 15 கோடுகள் இருந்தால் கள்ள நாணயமாம்; (இது தவறு) 

வங்கிகளில் ஏன் வாங்குவதில்லை?

அண்மையில் ஒரு செய்தியைப் படித்தேன்

// இதுதொடர்பாக வணிகர்களி டம் கேட்டபோது, "நாணயங்களைப் பராமரிப்பது மிக கடினம். ரூபாய் தாள்களாக இருந்தால் கவுண்டிங் மெஷினில் வைத்து சுலபமாக கணக்கிட முடியும். ஆனால், நாணயங்களை அப்படி கணக்கிட முடியாது. மேலும், இந்த நாணயங்களை, வங்கி அதிகாரிகள் வாங்க மறுப்பதால் வேறு வழியில்லாமல் நாங்களும் வாங்குவதில்லை" என்றனர்.// 

( நன்றி: தி இந்து (தமிழ்) தேதி டிசம்பர்,30,2016)

இங்கே இந்த வியாபாரிகள், தங்கள் சவுகரியத்திற்காக யார் மீது பழி போடுகிறார்கள் என்று பாருங்கள். ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்ட நாணயங்களை புழக்கத்தில் விடுவதுதான் வங்கிகளின் பணி. வங்கி வாடிக்கையாளர்கள் அந்த நாணயங்களை, மீண்டும் கணக்கில் கட்டினாலும், மீண்டும் புழக்கத்தில் விட வேண்டும். அதிக நாணயங்களை வங்கியில் இருப்பு வைத்து இருந்தால், ஏன் புழக்கத்தில் விடவில்லை என்ற கேள்வி வரும். செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே வங்கிகளில் திரும்பப் பெற்றுக் கொள்ளுதல் என்பது பொருந்தும்.. ஆனால் யாரோ கிளப்பிய வதந்திக்கு அதிகாரப் பூர்வமான நாணயங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளூதல் என்பது நாணயப் புழக்கத்திற்கு தீர்வாகாது.

பத்து ரூபாய் நாணயம் செல்லும்

சம்பந்தபட்ட அதிகாரிகள் பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிவித்த பிறகும் வாங்க மறுக்கிறார்கள். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும், ஐம்பது பைசா நாணயங்களை வாங்க மறுக்கும் நிலையில், கூடுதலாக இந்த பிரச்சினை

இது பற்றி இணைய தளங்களில் தேடியபோது, 10 ரூபாய் நாணயம் வெளியான அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப, அது வெவ்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டது தெரிய வருகிறது.

(படம் மேலே) 1969 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 1970 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 1972 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2005 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2006 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2008 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2009 இல் வெளியிடப்பட்டது. 

(படம் மேலே) 2010 இல் வெளியிடப்பட்டவை.

(படம் மேலே) 2011 இல் வெளியிடப்பட்டது. 

(படம் மேலே) 2012 இல் வெளியிடப்பட்டவை 

(படம் மேலே) 2014 இல் வெளியிடப்பட்டது. 

(படம் மேலே) 2015 இல் வெளியிடப்பட்டவை

                                     (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

Sunday, 22 May 2016

வங்கிக் கடனை திரும்பக் கட்ட வேண்டுமா?



’கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் தார்வேந்தன் இலங்கை இராவணன்’ என்று சொல்லுவார்கள். கம்பர் இவ்வாறு பாடவில்லை; இது ஒரு தனிப்பாடல் வரி என்பார்கள். நிற்க. இப்போதெல்லாம் கடன் கொடுத்தவர்கள்தான் கலங்கி நிற்கிறார்கள் என்பது புதுமொழி. ஆனாலும் வங்கிக் கடன் என்றாலே கொடுத்தவரும் கலங்குவதில்லை; வாங்கியவர்களில் கலங்காதவர்களும் உண்டு.

இருபது அம்சத் திட்டம்:

நான் வெளியூரிலிருந்து உள்ளூர் நகரக் கிளைக்கு பணிமாற்றல் பெற்று வந்த நேரம். பாரதப் பிரதமரின் 20 அம்சத் திட்டத்தின் கீழ்,சுயவேலை வாய்ப்பு என்ற பெயரில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரையின்படி அரசு வங்கிகளில் கடன் தொகை வழங்கிக் கொண்டு இருந்தார்கள். வழக்கம் போல அவரவர் ஏரியாக்களுக்கு ஒதுக்கப்பட்ட வங்கிகளுக்கு மக்கள் படையெடுப்பு. விண்ணப்ப பாரங்களை பூர்த்தி செய்து தருவதற்கென்றே கடைவீதியில் சிலர் கடை போட்டு, கூடவே ஸிராக்ஸ் மெசினும் வைத்து நல்ல வியாபாரம். சில சமயம் வங்கி சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரியாவிடில் வங்கி ஊழியர்களிடம் கேட்டு விண்ணப்ப பாரங்களில் எழுதுவார்கள். . இதில் அரசியல்வாதிகள் சிபாரிசுக் கடிதங்களும் உண்டு. வேலை வாய்ப்பு அலுவலகம், தாலுகா அலுவலகம், கட்சி ஆபிஸ், வங்கிகள் என்று அலைந்ததன் பலனாக, கிட்டத் தட்ட எல்லோருக்குமே கடன் தொகை கிடைத்தது எல்லாம் முடிந்து கடன் வாங்கிய ஒருவர் என்னிடம் கடைசியாக கேட்ட கேள்வி “ சார்! வங்கியில் வாங்கிய இந்தக் கடனை திரும்பக் கட்ட வேண்டுமா?” என்பதுதான்.

விவசாயி என்றால்..

இந்திய விவசாயி என்றால் நிறையபேரின் மனக்கண்ணில் வருவது ஏர் கலப்பையும், மேலாடை அணியாத விவசாயியும்தான். ஆனால் நடைமுறையில், வங்கிக்கடன் பெறுபவர்கள் அனைவருமே வசதியான விவசாயிகள்தான். இவர்கள் இலவச மின்சாரம், உர மான்யம், விதை மான்யம், கடன் தள்ளுபடி என்று எல்லா சலுகைகளும் பெறுவார்கள். அவர்கள் விவசாயத்திற்கு என்று டிராக்டர் வாங்குவார்கள். தாங்கள் வைத்து இருக்கும் நிலங்களில் பயன்படுத்துவது மட்டுமன்றி, மற்ற விவசாயிகளுக்கும்  இந்த டிராக்டரை மணிக்கு இவ்வளவு என்று வாடகைக்கும் விடுவார்கள்.. ஆனால் கடன் வசூல் என்று போனால் பணத்தை ஒழுங்காக கட்டுவது இல்லை.  காரணம் என்றேனும் ஒருநாள் ஆட்சியில் இருக்கும் அல்லது ஆட்சிக்கு வர இருக்கும் அரசியல் கட்சிகள், இந்த விவசாயக் கடனை எல்லாம், தள்ளுபடி செய்துவிடும் என்ற எதிர்பார்ப்புதான். ஒரு சாதாரண விவசாயியும், ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் இந்த விவசாயியும் ஒன்றா? என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஒருமுறை நாளிதழ் ஒன்றில் நான் கண்ட விளம்பர வாசகம் ‘இலவச மின்சாரம் மற்றும் பம்புசெட்டுடன் கூடிய விவசாய பண்ணைத் தோட்டம் விற்பனைக்கு’

விஜயமல்லையாக்கள்:
                                                                                                                                                                  
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், ப்ளாக் – என்று விஜயமல்லையாவைப் பற்றி விமர்சனம் வராத நாளே இல்லை எனும் அளவுக்கு செய்தி பரிமாற்றம் இருந்தது. ஒருவிதத்தில் வங்கி நடைமுறைச் சட்டத்தில், கடன் வழங்குவதில் உள்ள அரசியலையும், வசூல் விஷயத்தில் உள்ள பலவீனத்தையும் இவர்களால்தான் மக்கள் தெரிந்து கொண்டனர் எனலாம். இதில் குறிப்பாக சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுபோன்ற மல்லையாக்கள் உருவாக எல்லா அரசியல் கட்சிகளுமே காரணம் என்பதுதான். இது போன்ற ஆட்களிடம் கட்சி பேதமின்றி நன்கொடை தாராளமாக இருக்கும். எனவே இந்த விஜயமல்லையாக்கள் வங்கிக்கடன் பெறுவதற்கு எல்லா அரசியல் கட்சிகளுமே உதவும். இவர்களும் கிடைத்த வாய்ப்பை பெற்றுக் கொண்டு, சட்டத்தில் இருக்கின்ற, சந்து பொந்துகளில் நுழைந்து, வங்கிக் கடனை, வாராக் கடனாக (NPA) மாற்றி விட்டு ’பெப்பே’ காட்டி விடுகின்றனர். சிறிய கடன்காரர்கள் வகை தெரியாமல் முழிக்கிறார்கள். இவர்களிலும் மல்லையாக்கள் இருக்கிறார்கள். வங்கிகளில் வாராக்கடன் என்பது நாட்டிற்கு பொருளாதாரக் கேடு.

                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

Friday, 19 December 2014

வங்கிக் கணக்குகளை கவனியுங்கள்


நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பழைய பெட்டிகள், தட்டுமுட்டு
சாமான்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அல்லது இறந்து போன தாத்தா, பாட்டி பெட்டிகளை அல்லது அலமாரிகளில் என்ன வைத்து இருப்பார்கள் என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். “இந்த கிழம் நமக்கெல்லாம் என்னத்தை  வைத்து இருக்கப் போகிறது? என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போது, ஒரு வங்கி கணக்கு புத்தகம் (Bank Pass Book) கிடைக்கின்றது. புரட்டிப் பார்க்கின்றீர்கள். அதில் வெறும் 32 ரூபாய் 50 காசு மட்டும்தான் இருக்கிறது. இதெல்லாம் ஒரு கணக்கா என்று அந்த புத்தகத்தை தூக்கி எறியப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு நிமிஷம்.

கணக்கெடுப்பு:

முன்பெல்லாம் மாத இருப்பு, காலாண்டு இருப்பு, அரையாண்டு இருப்பு, ஆண்டு இருப்பு  என்று அந்தந்த கிளைகளில் உள்ள கணக்குகளை, ஊழியர்கள் கணக்கெடுத்து சரி பார்ப்பார்கள். ஒரு கிளையின் நிதி நிலைமை ஆராயப்படுவதோடு, கணக்குகளில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிந்து சரி செய்யவும் இந்த இருப்புக் கணக்கெடுப்பு (BALANCING WORK) உதவும். இப்போது வங்கிகளில் எல்லாமே கம்ப்யூட்டர் மயம். எனவே சில நிமிடங்களில் எல்லாவற்றையும் எடுத்து விடுகிறார்கள்.

இயக்கப்படாத கணக்குகள்:

அவ்வாறு கணக்கிருப்பு எடுக்கும்போது, இயக்கப்படாத கணக்குகள் (Inoperative  Accounts) என்ற சில கணக்குகளையும் சரி பார்ப்பார்கள். சில வங்கிகளில் Inactive Accounts என்றும், Non Operative Accounts என்றும் சொல்வார்கள். மொத்தத்தில் அவைகளில் பல மாதங்களுக்கு வரவு செலவு இல்லாமல்  இயக்கப்படாத கணக்குகளாக செயலற்று இருக்கும். அவ்வாறு கணக்கெடுக்கும் போது சில கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பிற்கும் (Minimum Balance)  கீழே, நூறு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும். இன்னும் சில கணக்குகளில் இருப்பு ஆயிரக் கணக்கில் அல்லது அதற்கு மேலும் இருக்கும். ஐம்பதாயிரத்திற்க்கு மேல் இருக்கும் கணக்குகளும் உண்டு. இந்த இயக்கப்படாத வங்கிக் கணக்குகளில் திடீரென்று வரவு செலவு வந்தால் தனி கவனம் செலுத்த வேண்டியது, வங்கி நிரவாகத்தின் பொறுப்பு ஆகும். ஏனெனில் இது மாதிரியான கணக்குகளில்தான் மோசடி நடக்கும்.

வேலைக்கு சேர்ந்த புதிதில் இந்த கணக்குகளை இருப்பு (BALANCING WORK) எடுக்கும்போது எதுவும் நினைத்ததில்லை. சில மாதங்கள் கழித்து எனது மேலதிகாரியிடம் “ சார், இந்த மாதிரி நிறைய கணக்குகள் இருக்கின்றனவே, அதிலும் சில கணக்குகளில் அதிக தொகையும் இருக்கின்றனவே, இவற்றை சம்பந்தப்பட்ட டெபாசிட்தாரர்களுக்கு தெரிவிக்கலாமே அல்லது கடிதம் போட்டால் அவர்களுடை வாரிசுதாரர்களுக்கு போய்ச் சேருமே ? எல்லாம் உள்ளூர்தானே? ஏன் யாரும் அப்படி செய்வதில்லை?   என்று கேட்டேன்.

அதற்கு அவர் “செய்யலாம்தான். ஆனால் அதில் நிறைய வில்லங்கங்கள் இருக்கிறன. FIXED DEPOSIT போன்றவைகளுக்கு மட்டும்தான் நினைவூட்டல் கடிதம் அனுப்புவது வழக்கம். இது போன்ற இயக்கப்படாத சேமிப்பு கணக்குகளுக்கு அனுப்புவது இல்லை. நாம் கடிதம் அனுப்ப போய் , அந்த கடிதம்,  கணக்கை வைத்து இருப்பவருக்கோ அல்லது அவரது நேரடி வாரிசுக்கோ கிடைத்தால் பரவாயில்லை. வேறு யாரேனும் கிரிமினல் மூளைக்காரன் கையில் கிடைத்தால் நமக்குத்தான் தொந்தரவு. வீட்டில் பாஸ் புத்தகத்தை பார்ப்பவர்கள், அவர்களாகவே வருவார்கள் என்றார்.

இந்த கணக்குகளில் உள்ள இருப்புகள் யாவும் சில காலத்திற்குப் பிறகு உரிமை கோராத கணக்குகள் (UNCLAIMED DEPOSITS) என்ற வகையில் சேர்க்கப்பட்டு அரசாங்க கணக்கில் சேர்ந்து விடும். இப்போதைய கம்யூட்டர் நெட் ஒர்க்கில் அவை தாமாகவே போய் நின்றுவிடும். அந்த காலத்திற்கு ஏற்றது போல தனந்தேடி உண்ணாமற் புதைக்க வேண்டாம்  (உலகநீதி) என்றார் உலகநாதர் இந்த காலத்தில் சிலர் உண்ணாமல் கொள்ளாமல் செலவு செய்யாமல் பணத்தை வங்கி கணக்குகளில் வைத்துவிட்டு யாருக்கும் சொல்லாமல் இறந்து விடுகின்றனர். இவர்களை என்னவென்று சொல்வது?

( இது மாதிரியான இயக்கப்படாத கணக்குகளில் (Inoperative  Accounts) எச்சரிக்கையாக இருக்கும்படியும், இது மாதிரியான கணக்குகளுக்கும் கடிதம் அனுப்பும்படியும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி (RESRVE BANK OF INDIA) உத்தரவு போட்டு இருக்கிறது.  இதில் கடிதம் அனுப்புவதில் நடைமுறைச் சிக்கல்களே அதிகம் )

காரணங்கள்:

இதுமாதிரி பல சேமிப்பு கணக்குகள் செயல்படாமல் அல்லது இயக்கப்படாமல் (Inoperative) இருப்பதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். பலரும் தங்களது கணக்குகளை ரகசியமாகவே வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். பலபேர், வீட்டில் கூட சொல்வதில்லை. அடிக்கடி வெளியூருக்கு பணி மாறுதல் ஆகும் நிலைமையில் இருப்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒரு கணககைத் தொடங்கிவிட்டு அப்படியே விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். அதேபோல பல மாணவர்கள் கல்வி உதவித்தொகை (SCHOLARSHIP) வாங்கும்போது கணக்கைத் தொடங்குவார்கள்; உதவித்தொகை கணக்கில் வந்ததும். பணத்தை எடுப்பதோடு சரி. குறைந்த பட்ச இருப்புத் தொகையை (Minimum Balance)  மறந்து விடுவார்கள். 

சிலர் இறந்து போனதும் அவர்களுடைய சேமிப்புக் கணக்குகளும் இவ்வாறு ஆகி விடுகின்றன. அவர்களது வாரிசுகள், இறந்து போனவர் வங்கியில் கடன் வாங்கி ஏதேனும் வாங்கி இருந்தால் நம்மை கட்டச் சொன்னால் என்ன செய்வது என்ற பயம் வந்து வங்கிப் பக்கமே செல்வதில்லை. ஜாமீன் கையெழுத்து போட்டு இருந்தாலொழிய உங்களை யாரும் ஒன்று செய்யப் போவதில்லை. இப்போதெல்லாம் கடன் கணக்குகளுக்கு (LOAN ACCOUNTS)  இன்சூரன்ஸ் முறை வந்து விட்டது..(ஒரு தமிழ் திரைப்பட நகைச்சுவைக் காட்சி ஒன்றில், கவுண்டமணி செந்தில் ஜோடி, பொதுமக்கள் மத்தியில், இந்த பயத்தை நன்றாகவே விதைத்து இருக்கிறார்கள். அப்பாவி மக்களின் பயத்திற்கு கேட்க வேண்டியதில்லை.)   

என்ன செய்ய வேண்டும்?  

அந்த வங்கி கணக்கு புத்தகத்தை தூக்கி எறியப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்? குறைந்த இருப்பே இருக்கிறது என்று நினைக்காதீர்கள். ஒருவேளை அந்த பெரியவர் தனது வங்கிக் கணக்கு புத்தகத்தை மேற்கொண்டு அப்டேட் (UPDATE) செய்யாததினால் கணக்கில்  வந்த வேறு தொகை அவருக்கே தெரியாது போயிருக்கலாம். அல்லது அவர் ஒரு அரசாங்க ஊழியராகவோ அல்லது தனியார் ஊழியராகவோ இருந்து அவர் இறந்த பிறகு, அவருக்கு வரவேண்டிய ஏதேனும் நிலுவைத் தொகை (Arrears ) தொகை கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கலாம். அல்லது அந்த கணக்கை முன்னிட்டு FIXED DEPOSIT கள் இருந்து வரவு வைக்கப்படாமல்  இருக்கலாம். யார் கண்டது?

எனவே எதுவாக இருந்தாலும், அந்த வங்கி கணக்கு புத்தகத்தை வங்கிக்கு எடுத்துச் சென்று அப்டேட் (UPDATE) செய்யுங்கள். அந்த கணக்கு சம்பந்தப்பட்ட வேறு டெபாசிட்டுகள் இருக்கிறதா என்று விசாரியுங்கள். கணக்கைத் தொடர்ந்து வைத்து இருக்க முடியுமானால் தொடருங்கள். முடியாத பட்சத்தில் சட்டப்படி அந்த கணக்கை முடித்து விடுங்கள். எல்லோருக்கும் நல்லது.

                (ALL PICTURES THANKS TO “GOOGLE”)



Sunday, 27 July 2014

திருச்சி – பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்க கூட்டம் (JULY.2014)



ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் நலனை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்கம் (STATE BANK OF INDIA PENSIONERS’ ASSOCIATION) இயங்கி வருகிறது. மேலும் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்காக SBI ELDERS VOICE என்ற மாதப் பத்திரிகையும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் எனக்கு அழைப்பு வந்ததால் திருச்சியில் நேற்று (26 ஜூலை 2014) மாலை நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்கம் (STATE BANK OF INDIA PENSIONERS’ ASSOCIATION)  கூட்டத்திற்கு சென்று வந்தேன்.

கூட்டம் , ஸ்டேட் வங்கி, திருச்சிராப்பள்ளி கிளையில் நடைபெற்றது. திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். SBI  உதவி பொது மேலாளர் S. சீனிவாச ராகவன் தலைமை தாங்க, திருமதி சரஸ்வதி அவர்கள் இறை வணக்கம் பாட கூட்டம் இனிதே தொடங்கியது.

(படம் மேலே) SBI திருச்சிராப்பள்ளி கிளை

(படம் மேலே)  இறை வணக்கம்

முன்னதாக 80 வயது நிறைவடைந்த சங்க உறுப்பினர்களுக்கு பொன்னாடை போற்றி கவரவிக்கப் பட்டது. ( 80 வயது நிரம்பிய கூட்டத்திற்கு வர இயலாத உறுப்பினர்களுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று பொன்னாடை போர்த்தியதாக திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார் ) திரு K.கோமதிநாயகம் (SBI CHIEF MANAGER (HR) , V.R.உதயசங்கர் (துணைத் தலைவர்), M. அசோக் (மண்டலச் செயலாளர், SBOA), திரு R. டேவிட் ஜெயகர் ராய் ( துணைப் பொதுச் செயலாளர், SBSU) ஆகியோர் உரையாற்றினார்கள். சங்க உறுப்பினர்கள் திருவாளர்கள்  சிவஞானம், பாலகிருஷ்ணன், வாசுதேவன், சங்கர், ஜெயசிங்கம், ஜம்புநாதன், ராமமூர்த்தி, ஆறுமுகம், மற்றும் முனுசாமி ஆகியோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பென்ஷன்தாரர்களின் பிரச்சினைகள் குறிப்பாக ஸ்டேட் வங்கி டிஸ்பென்சரியில் மருந்து, மாத்திரை இல்லாதது,  மெடிக்கல் பில்கள் தாமதம் ஆவது , MUTUAL WELFARE SCHEME இல் உள்ள சங்கடங்கள் பற்றி நிறைய கருத்துரைகள் சொன்னார்கள். முக்கியமாக 7-ஆவது ஊதிய ஒப்பந்த பென்சன்தாரர்களுக்கு மட்டும் அவர்களுக்குரிய பென்ஷன் தரப்படாதது குறித்து நிறையவே ஆதங்கப்பட்டார்கள். கூட்டத்தின் இறுதியில் சிறப்புரை ஆற்றிய பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்க தலைவர் திரு H.கணபதி அவர்கள், சங்க உறுப்பினர்களின் சந்தேகங்கள் கேள்விகளுக்கான பதில்களையும், ஸ்டேட் வங்கியின் பென்ஷன் வரலாறு மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், கோர்ட்டில் வழக்குகள் இருக்கும் நிலைமை, வழக்குகள் போடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும் பேசினார்.  

கூட்டத்தின் ஆரம்பத்தில் துளசி பார்மசிஸ் A/C இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார் இலவசமாக  இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் தந்தனர். மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு, காரம் , காப்பி இவைகளோடு நினைவுப் பரிசாக சிறிய CELLO CRUNCH INSUILATED CARRIER  வழங்கப்பட்டது. திரு அண்ணாமலை அவர்கள் நன்றியுரை கூற தேசிய கீதத்துடன் கூட்டம் இனிதே முடிவுற்றது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக செய்து இருந்தார்.

(படங்கள் மேலே) வரவேற்பாளர்கள்
  
(படம் மேலே) திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு

(படம் மேலே) சிறப்பு அழைப்பாளர்கள்










(படங்கள் - மேலே) கூட்டத்திற்கு வந்து இருந்தவர்கள்

(படங்கள் - மேலே) 80 வயது நிரம்பிய சங்க உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது)

(படம் மேலே) சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு, காரம் , காப்பி இவைகளோடு நினைவுப் பரிசாக சிறிய CELLO CRUNCH INSUILATED CARRIER  வழங்கப்பட்டது.

(படம் மேலே) கூட்டத்தில் ஒரு காட்சி

(படம் மேலே) SBI  உதவி பொது மேலாளர் S. சீனிவாச ராகவன் அவர்கள் தலைமை உரை

(படம் மேலே) திரு K.கோமதிநாயகம் (SBI CHIEF MANAGER (HR)

(படம் மேலே) M. அசோக் (மண்டலச் செயலாளர், SBOA) அவர்கள் உரை

 
(படம் மேலே) திரு R. டேவிட் ஜெயகர் ராய் ( துணைப் பொதுச் செயலாளர், SBSU) அவர்கள் உரை

(படம் மேலே) V.R. உதயசங்கர் (துணைத் தலைவர்) அவர்கள் உரை

(படம் மேலே) சங்க தலைவர் திரு H.கணபதி அவர்கள் சிறப்புரை