Showing posts with label கண்ணீர் அஞ்சலி. Show all posts
Showing posts with label கண்ணீர் அஞ்சலி. Show all posts

Wednesday, 7 December 2016

ஜெயலலிதா - கண்ணீர் அஞ்சலி!



                              
                                  (செல்வி ஜெ.ஜெயலலிதா 24.02.1948 – 05.12.2016)

                         நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
                         பெருமை உடைத்துஇவ் வுலகு. _ (திருக்குறள்.336)

(இதன் பொருள்; நேற்று இருந்தவர் இன்று இல்லை என்னும் பெருமை கொண்டது இந்த உலகம்)

அவர் நலமாக திரும்பி வந்து விடுவார் என்றே, எல்லோரும் நம்பிக்கையோடு இருந்த வேளையில், ஜெயலலிதாவின் எதிர்பாராத மரணம் நடந்தே விட்டது. சாகக் கூடியா வயதா என்றால், இன்றைய காலச் சூழலில், மருத்துவ விஞ்ஞானமும் மனிதனின் சராசரி வயதும் அதிகரித்துள்ள நிலையில், அவரைவிட மூத்தவர்கள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும்போது, தனது 68 ஆவது வயதில், அவருடைய மரணம் என்பது துரதிர்ஷ்ட வசமானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், - ஆகிய மொழிகளை பேசக்கூடிய திறமை பெற்றவர். இந்திய பிரதமர் பதவிக்கான போட்டியாளர்களில் இவரது பெயரும் உண்டு. பணபலம், அதிகார பலம், ஆள் பலம் என்று எல்லாம் இருந்தும் – அவர் மகிழ்ச்சி இல்லாதவராகவே, மன அழுத்தம் மிகுந்தவராகவே, அரசியல் சூழ்நிலைக் கைதியாகவே வாழ்ந்து இறந்து போயிருக்கிறார். நோய் முற்றிய கடைசி நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாலும், ஆரம்பத்திலும் கடைசியிலும், உடம்புக்கு என்ன மாதிரியான வேதனையில் இவர் இருந்தார் என்பது, வெளி உலகுக்கு கடைசிவரை தெரியாமலேயே போய்விட்டது.

உண்மையில் அவரை நேசிப்பவர்களாக இருந்து இருந்தால் அவரை அந்தச் சூழ்நிலையில், மன அழுத்தத்தில் இருந்து விடுவித்து இருப்பார்கள். அவரும் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வாய்ப்புகள் இருந்து இருக்கக் கூடும். ஆனால் பலரும், அவரது செல்வாக்கை வைத்து, அவரை வைத்து அரசியல் பண்ண வேண்டும், அதிகாரத்தை அடைய வேண்டும், பணம் பண்ண வேண்டும், பிழைப்பு நடக்க வேண்டும் என்றே நடந்து கொண்டார்கள். அவர் உயிரோடு இருந்தபோது, பாக்கெட்டில் ‘அம்மா’வின் படத்தை, வெளியே தெரியும்படி வைத்துக் கொண்டு, தேம்பித் தேம்பி அழுது பதவி ஏற்றவர்கள், அவர் இறந்தபோது ஏனோ குமுறக்கூட இல்லை. 

எனது மாணவப் பருவத்தில், நான், அந் நாளைய எம்ஜிஆர் ரசிகன். அவரது படங்களைப் பார்ப்பதோடு சரி. மற்றபடி,சினிமா ரசனையை, எனது படிப்பிற்கு இடையூறாக வைத்துக் கொண்டதில்லை. எம்ஜிஆர் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். இருந்தாலும் எனக்கு எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா பல படங்களில் நடித்து இருந்தாலும், அவரை எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடியாக என்னால் பார்க்க இயலவில்லை. காரணம் ஜெயலலிதா ஒரு குழந்தை முகம் கொண்டவராகவே எனக்கு தோன்றினார். இருப்பினும் அவர் எம்.ஜி.ஆரோடு நடித்த ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண், எங்கள் தங்கம், என் அண்ணன், ஆகிய படங்களும், ஜெய்சங்கரோடு நடித்த ’யார் நீ’ என்ற படமும், ரவிச்சந்திரனோடு நடித்த குமரிப்பெண் என்ற படமும் எனக்கு பிடிக்கும். (ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ஜெயலலிதாவை டைரக்டரும் தயாரிப்பாளரும் ஆன பந்துலு ஒப்பந்தம் செய்தபோது, ஒரு சின்ன பெண்ணுடன் நான் எப்படி நடிப்பது என்று எம்.ஜி.ஆர் முதலில் மறுத்ததாக ஒரு தகவல் உண்டு) 
 
அரசியலில் ஜெயலலிதா அடி எடுத்து வைப்பதற்கு முன்னர், அவர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நல்ல நட்பிலேயே இருந்தார். திருச்சி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ( இப்போது அண்ணா ஸ்டேடியம் ) நடந்த, தி.மு.க மாநாடு ஒன்றில்,காவிரி தந்த கலைச்செல்வி’ என்ற நாட்டிய நாடகத்திற்காக ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் வந்து இருந்த போது, அவரை மேடையிலிருந்து தொலைவிலிருந்து பார்த்ததாக நினைவு.. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் ‘எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் கருணாநிதி எதிர்ப்பு அரசியலுக்கு ஒத்து வராததால் அவரை ஓரம் கட்டி விட்டார்கள். அதனால் கருணாநிதி எதிர்ப்பாளர்கள் ஜெயலலிதாவைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை. இவரும் கடைசிவரை இந்த கோதாவிலேயே இருந்தார். ஆரம்பத்தில் தி.மு.க அனுதாபியாக, கலைஞரை ஆதரித்த எனக்கு. ஒரு கட்டத்தில் கருணாநிதிக்கு எதிர்ப்பு காட்ட ஜெயலலிதா போன்றவர்கள் தேவைதான் என்று மனம் மாறியதும் உண்மை.

எது எப்படி இருப்பினும் இனியாவது அவர் அமைதியாக உறங்கட்டும். தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.


                                       (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)



Thursday, 5 May 2016

வைகறை என்ற கவிஞனுக்கு



வலைப்பதிவரும், பள்ளி ஆசிரியருமான, கவிஞர் வைகறை என்றறியப்பட்ட திரு.ஜோசப் பென்சிஹர் அவர்கள் இப்போதுதான் மறைந்தார் (21.04.2016) என்பது போன்ற பிரம்மை. அதற்குள் நாட்கள் , வாரங்கள் ஆகி விட்டன. இனி மாதங்கள், வருடங்கள் என்று காலச்சக்கரம் ஓடி விடும். ஆனாலும் புதுகை கவிஞர்கள் மத்தியில் அவர் நினைவு என்றும் இருக்கும் என்று எடுத்துக் காட்டும் வண்ணம், நேற்று (04.05.2016 - புதன் கிழமை) வைகறை நினைவஞ்சலி கூட்டம் -வீதி 27, புதுக்கோட்டையில், ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியில், மாலை நடைபெற்றது. 

வைகறை நினைவஞ்சலி:

எப்போதுமே புதுக்கோட்டையில் வலைப்பதிவர், வீதி இலக்கிய விழா என்றால், ’நம்ம வீட்டு கல்யாணம் நாம்தான் தோரணம் கட்ட வேண்டும்’ என்பது போல ஓடி ஆடி, ஓய்வில்லாமல் கவிஞர் வைகறை ஏதாவது செய்து கொண்டு இருப்பார். அவரை நான் கடைசியாகப் பார்த்தது, ஜனவரியில்தான். ( திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்த, வீதி இலக்கியக் கூட்டம்). அன்றும் அவர் ப்ளக்ஸ் பேனரைக் கட்டுவது, டேபிள், சேர்களை ஒழுங்கு படுத்துவது என்று மும்முரமாகவே இருந்தார். அன்று அவருடைய ஒரே மகன் ‘ஜெய்’யையும் அழைத்து வந்து இருந்தார்.

நேற்று கவிஞர் வைகறை இல்லாத ’வீதி’ இலக்கியக் களம் வெறிச்சோடிக் கிடந்தது. வந்திருந்த அனைவரும் இனம் புரியாத ஒரு சோகத்தில்தான் இருந்தனர். ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்கள் முன்னிலை வகித்து கூட்டத்தை நடத்தினார்கள். கவிஞர் வைகறையின் படத்திற்கு மலரஞ்சலி செய்யும்போது, சில பெண் கவிஞர்கள் வாய்விட்டு அழவும் செய்தனர். ஒவ்வொருவர் பேச்சிலும் இது எதிரொலிக்கவும் செய்தது. 

சென்ற மாத பவுர்ணமியில் இருந்த வைகறை, இந்த மாத பவுர்ணமியில் இல்லாமல் போய்விட்டதை நினைக்கும்போது, அன்று பாரி மகளிர் பாடிய ’கையறு நிலை’ சங்கப் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.
-    பாரிமகளிர் (புறநானூறு – 112)

சில படங்கள்:

வலைப்பதிவர், சகோதரி ஆசிரியை M.கீதா அவர்கள் ’வைகறை நினைவஞ்சலி கூட்டம் -வீதி 27 ’ என்ற தலைப்பினில் ஒரு வலைப்பதிவை http://velunatchiyar.blogspot.com/2016/05/27_4.html வெளியிட்டு இருக்கிறார். அதில் நிகழ்ச்சி பற்றிய அதிக விவரங்களும், படங்களும் இருப்பதால், நான் மீண்டும் அதே காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை இங்கு வெளியிடவில்லை. எனவே சில படங்கள் மட்டும் இங்கே.















 (கீழே உள்ள படம் மட்டும் – நன்றி Geetha M at Thendral)

வங்கி கணக்கு எண்: 

கவிஞர் வைகறையின் மனைவி ரோஸ்லின் மற்றும் அவர்கள் மகன் ஜெயசன் பெயரில் வங்கியில் ஒரு வைப்புநிதி வைப்பதற்காக முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு எண் முதலான விவரங்களை அய்யா முத்துநிலவன் அவர்கள் தனது வலைத்தளத்தில் அறிவிப்பார் என்று நினைக்கிறேன்.
xxxxxxx

பிற்சேர்க்கை (06.05.2016) 

வங்கிக் கணக்கு எண் http://www.malartharu.org/2016/05/bank-account-number.html

வணக்கம்,
வலைப்பதிவர் மாநாட்டின் வங்கிக் கணக்கையே வைகறை நிதிக்கும்  பயன்படுத்தலாமா என்கிற ஆலோசனைக் கூட்டம் இன்று பாரி மழலையர் பள்ளியில் நடைபெற்றது.

கூட்டத்தில் கவிஞர் முத்து நிலவன், கவிஞர் செல்வா, கவிஞர் கீதா மற்றும் கவிஞர் மாலதி அவர்களுடன் விதைக்கலாம் ஸ்ரீ மற்றும் சிவாவும் கலந்துகொண்டனர்.

நிறைய யோசனைக்குப்பிறகு அதே கணக்கினையே வைகறை நிதிக்கும் பயன்படுத்தலாம் என்கிற முடிவு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிதியளிக்க விரும்புவோர்கள் கீழ்க்கண்ட கணக்கிலேயே வரவு வைக்கலாம்.

First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645

நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக  இருக்கும்.
bloggersmeet2015@gmail.com

 

Saturday, 23 April 2016

கவிஞர் வைகறைக்கு கண்ணீர் அஞ்சலி!




நேற்று முன்தினம் (21.04.16) மாலை, எப்போதும் போல், கணினித் தமிழ்ச் சங்கத்தின் வாட்ஸ்அப் (Whatsapp) செய்திகளைப் பார்க்கலாம், என்று எனது செல்போனைத் திறந்த போது ஒரு அதிர்ச்சியான செய்தி காத்து இருந்தது.

// அன்புக் கவிஞர் வைகறை காலமாகி விட்டார்… //

தகவலைத் தந்தவர் கவிஞர் மீரா செல்வகுமார்.. அவரைத் தொடர்ந்து நண்பர்கள் பலரும் வாட்ஸ்அப்பில், கவிஞருக்கான தங்களது இரங்கலை பதிவு செய்து இருந்தனர். நான்,

// அதிர்ச்சியான செய்தி. நம்ப முடியவில்லை. அந்த சிரித்த முகத்தை என்னால் மறக்க இயலாது. அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கவிஞர் வைகறையின் ஆன்மா அமைதி பெறட்டும் – கண்ணீருடன் தி.தமிழ் இளங்கோ //

என்று, எனது கண்ணீர் அஞ்சலியைப் பதிவு செய்தேன்.

நல்லடக்கம்:

அவரது சொந்த ஊரான அடைக்கலாபுரத்தில் (தூத்துக்குடி தாண்டி ஆறுமுகநேரி அருகில்) வெள்ளிக்கிழமை (22.04.16) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் நடைபெறும், புதுக்கோட்டை நண்பர்கள் காலை 7 மணிக்கு ஒரு வேனில் புறப்பட இருப்பதாக தகவல் தந்தார்கள். அவர்களோடு செல்ல எனக்கு சாத்தியப் படாததால், நான் மட்டும் திருச்சியிலிருந்து (காலை 7 மணிக்கு புறப்பட்டு) பஸ்சில் மதுரைக்கு சென்றேன்; மதுரையிலிருந்து, தூத்துக்குடி வழியாக மதியம் 2.45க்கு அடைக்கலாபுரம் சென்று சேர்ந்தேன். புதுக்கோட்டை நண்பர்கள் எனக்கு முன்னதாக வந்து சென்று விட்டனர். ஊரினுள் நுழைந்ததும் கவிஞர் வைகறை என்று சொல்லிக் கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. இறந்தவர் புதுக்கோட்டையில் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் என்று சொன்னதும்தான் அவர்களுக்கு தெரிந்தது. வழி காட்டினார்கள்.

கவிஞரின் வீட்டின் வெளியே காம்பவுண்டிற்குள் அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் அவரது உடல் சவப்பெட்டியில், பூமாலைகளின் நடுவே வைக்கப்பட்டு இருந்தது. அதே சிரித்த அமைதியான முகம். அருகில் அவரது மனைவி கதறியபடியே இருந்தார். அவரது ஒரே மகன், உறவினர் ஒருவர் மடியில் களைத்துப் போய் தூங்கிக் கொண்டு இருந்தான். எனக்கு மனது தாளவில்லை. கவிஞரின் வீடு இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப் படவில்லை.அங்கு போன பின்புதான், கவிஞர் வைகறை அவர்கள் ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர் என்பதும் அவரது பெயர் ஜோசப் பென்சிஹர் என்பதும் எனக்கு தெரிய வந்தது. உறவினர்களும், நண்பர்களும், அவரோடு பணி புரிந்தவர்களும் குழுமி இருந்தனர்.

சரியாக மூன்று மணி அளவில், அந்த ஊர் பங்கு சாமியார் வந்து ஜெபம் செய்த பின்பு கவிஞரின் உடலை, அவர்களின் பங்கு கோயிலான ‘அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் வைத்து, பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் அவர்களது முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட அவ்வூர் கல்லறைத் தோட்டத்திலேயே அவரை  நல்லடக்கம் செய்தார்கள். எல்லாம் முடிந்த பிறகு, நான் நேற்று இரவு 12 மணி அளவில் வீடு திரும்பினேன்.

எப்படி இறந்தார்?

அடைக்கலாபுரத்திற்கு, திண்டுக்கல்லிலிருந்து கவிஞர் வைகறை அவர்களது ஃபேஸ்புக் (facebook) நண்பர்கள் இருவர் வந்து இருந்தனர். அவர்களில் ஒருவர் சொன்ன தகவல் இது. கவிஞர் வைகறை எப்போதுமே, தனது உடம்பிற்கு ஏதாவது என்றால் , தனக்கு இப்படி இருக்கிறது என்று மெடிக்கல் ஷாப்பில் சொல்லி, மருந்து எடுத்துக் கொள்வாராம். டாக்டரிடம் செல்வதில்லை. ரொம்ப நாளாகவே அவருக்கு வயிற்றுவலி இருந்திருக்கிறது. எப்போதும் போல, அல்சர்தானே என்று எண்ணி, இவர் மருந்தை மெடிகல் ஷாப்பில் வாங்கி சுயமருத்துவம் பார்த்து இருக்கிறார். வலி அதிகமாகவே கவிஞரை, புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டு, பின்னர் மதுரைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். விதி விளையாடி விட்டது. 35 வயதிலேயே அவருக்கு மரணம்.

( நான் பணியில் இருந்தபோது, என்னோடு பணிபுரிந்த, யூனியன் தலைவர் ஒருவரும் இப்படித்தான். தனக்கு அல்சர்தான் என்று நினைத்துக் கொண்டு, ஜெல் எனப்படும் திரவ மருந்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தார். ஒருநாள் திடீரென்று வயிற்றுவலி அதிகமாக, திருச்சியிலுள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தார்கள். சிகிச்சை பலனின்றி இறந்து போனார். PANCREAS என்றார்கள். இது நடந்து 15 வருஷம் இருக்கும்)

எனவே நண்பர்களே , டாக்டர் ஆலோசனையின்றி , சுயமருத்துவம் (Self treatment ) எதுவும் செய்யாதீர்கள்.

கவிஞர் வைகறை பற்றி கூகிள் ப்ளஸ் தரும் தகவல்:

தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். சில ஆண்டுகள் தர்மபுரியில் வசித்து வந்தார். ஆசிரியப் பயிற்சி படிக்கும் போது நண்பர்களுடன் இணைந்து “வளர்பிறை” எனும் கையெழுத்து இதழ் நடத்தினார். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் இவர் ‘நந்தலாலா.காம்’ எனும் கவிதைகளுக்கான இணைய இதழையும் நடத்தி வருகிறார்.
இதுவரை வெளியாகியுள்ள நூல்கள்:-
ஒரிஜினல் தாஜ்மகால் (2008)       
நிலாவை உடைத்த கல் (2012)
ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்  (2014)
இதழாசிரியர்:-    நந்தலாலா.காம்.

ஆன்மா அமைதி பெறட்டும்.

ஒருமுறை ஆசிரியர் நா. முத்துநிலவன் அய்யா அவர்கள் வீட்டில் , நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் விருப்பத்திற்கு இணங்க வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நான் பெரும்பாலும், சங்கோஜப் பட்டுக் கொண்டு, எனது கேமராவில் என்னையே படம் எடுக்கச் சொல்லி எடுத்துக் கொள்வதில்லை. அன்றும் அப்படித்தான்.  நான் மற்றவர்களைப் படம் எடுத்துக் கொண்டு இருந்தேன். இதனைக் கவனித்த, கவிஞர் வைகறை அவர்கள் “நீங்களும் அவர்களோடு போய் நில்லுங்கள். நான் எடுக்கிறேன். நீங்களும் படத்தில் இருக்க வேண்டும். வரலாறு முக்கியம் நண்பரே! ” என்று சொல்லி எனது கையில் இருந்த கேமராவை வாங்கி என்னையும் படம் எடுத்தார். இன்று அவரே வரலாறாகி விட்டார்.

ஜோசப் பென்சிஹர் என்கிற கவிஞர் வைகறையின் ஆன்மா அமைதி பெறட்டும். ஆதரவற்ற அவருடைய குடும்பத்திற்கு ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும்.