எனது ஆரம்பப் பள்ளி வாழ்க்கை (1 – 5) கிறிஸ்தவ மெஷினரி நடத்திய ஆர்.சி நடுநிலைப் பள்ளியில். அப்புறம் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை (6 – 11) இந்து கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில். அங்கு வகுப்புகள் துவங்கும் முன்னர் எல்லோரும் ஓரிடத்தில் கூடி காலை இறைவணக்கமாக சமஸ்கிருத துதியோடு “ அங்கிங் கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய் “ என்ற தாயுமானவர் முதல் பாடலையும் பாடுவோம். தாயுமானவர் பாடலை உரை இல்லாது புரிந்து கொள்வது கடினம். பின்னர் PUC படிப்பு திருச்சி நேஷனல் கல்லூரியில். பின்னர் பிஏ (தமிழ்)படிப்பை திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் முடித்துவிட்டு மீண்டும் நேஷனல் கல்லூரியில் எம் ஏ (தமிழ் இலக்கியம்) சேர்ந்தேன்.அப்போது “சைவசித்தாந்தம் ’ எங்களுக்கு ஒரு பாடமாக இருந்தது.அப்போது . தாயுமானவரின் பாடல்களைப் பற்றி ஓரளவு படித்து தெரிந்து கொண்டேன்.
மனித வாழ்க்கை
விசித்திரமானது. “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்றார் புத்தர். ஆனால் உற்று நோக்கினால் இந்த உலகில்
நிகழந்த கண்டுபிடிப்புகள் மற்றும் உலகம் இயங்குவது எல்லாம் ஆசையினால்தான். ஆனால்
மனிதனின் ஆசைக்கு அளவு உண்டா? நமது தாயுமானவர் ” ஆசைக்கோர் அளவில்லை “ என்கிறார். பட்டினத்தாரும் தாயுமானவரும்
துறவிகள். அவர்கள் பாடல்களில் வாழ்க்கை நிலையாமை போன்ற கருத்துக்களை மட்டுமே அதிகம்
காணலாம் நாமோ குடும்பஸ்தர்கள். நமக்குத் தேவையான கருத்துக்களை மட்டும் இவர்கள் பாடல்களில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மண்ணாசை:
ஒரு மன்னன். இந்த மண்ணுலகமே அவன் ஆட்சியின் கீழ்தான்
இருக்கிறது. இருந்தாலும் கடல் மீதும் தன் அதிகாரத்தைப் பரப்ப வேண்டும் என்ற பேராசை வருகிறது. தனது
எல்லையை விரிவுபடுத்த அண்டை நாடுகள் மீது போர் தொடுக்கிறான். அவனது ஆசைக்கு அளவே
இல்லை. இந்த உலகமே அவன் கீழ் இருந்தாலும் அவன் இறுதியில் ஆடி அடங்குவது ஆறடி
மண்ணுக்குள் தான்.
“ நாம்
வாழும்பொழுது உலகம் முழுவதையும் வளைத்து கட்டிக் கொள்ள விரும்புகிறோம்.ஆனால் இறந்த
பிறகு எவ்வளவு சிறிய இடம் நமக்குப் போதுமானது என்று தெரிகின்றது.” -
மாசிடோனியா மன்னர் பிலிப்
பொன்னாசை:
தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. ஆனாலும்
மக்களுக்கு தங்கத்தின் மீது உள்ள மோகம் குறையவில்லை. வடக்கு திசையில் இருப்பவன்
குபேரன். செல்வத்தின் அதிபதி. இதனால்தான் நிறைய கடைக்காரர்கள் தங்கள் கல்லாப்
பெட்டி உள்ள இடத்தை வடக்கு நோக்கியே வைத்து இருப்பார்கள். அந்த குபேரன் போன்று
சிலரிடம் பொன் இருக்கும். ஆனாலும் அவர்களிடம் ரசவாதம் செய்தால் பொன் கிடைக்கும்
என்றால் அதற்கும் காடு மேடு என்று பொன்னுக்கு அலைவார்கள். மிடாஸ் (KING MIDAS) என்ற மன்னன் தான்
தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று தேவதையிடம் வரம் வாங்குவான். கடைசியில் அவன்
தனது ஒரே மகளை அன்புடன் தொடும்போது அவளும் தங்கப் பதுமையாகி விடுகிறாள். பேராசை
பெரு நஷ்டம்.
இளமை மீண்டும் வருமா?
மனிதனின் வாழ்வில் இளமை முக்கியமானது. சந்தோஷமானது. அதே சமயம் இளமை நில்லாதது. சிலர் போன இளமை மீண்டும் வரவேண்டும் என்ற ஆசையினால் காயகல்பம் என்னும் மருந்தினைத் தேடி அலைந்து வாங்கிச் சாப்பிட்டு நெஞ்செரிச்சல் வந்து துன்பம் அடைகிறார்கள். காயகல்பம் என்பது சில மூலிகைகளைக் கொண்டு செய்யும் மருந்து. உண்மையில் இவர்கள் அந்த மருந்தை வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இளமை மீண்டும் கிடைக்காது. சாப்பிடுவது உறங்குவது என்றே முடியும்.
இதோ ஒரு திரைப்படப் பாடலின் வரிகள் இந்த பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ கீழே உள்ள முகவரியில் “க்ளிக்” செய்யுங்கள். https://www.youtube.com/watch?v=f1RMPVcUzIs
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பருவமென்னும் காத்திலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்
நாளைய உலகின் பாதையை இங்கே யார் காணுவார்
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா மனம் பெறுமா முதுமையே சுகமா
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ
சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
- பாடல்: கண்ணதாசன் (படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்)
தாயுமானவர் பாடல்:
இப்படி மண்ணுலகில் மனிதர்கள் ஆசையினால் படும் துன்பங்களைக் கண்ட தாயுமான
சுவாமிகள் “ தெய்வமே! ” எனக்கு உள்ளதே போதும். ” நான் நான் “ என்னும்
அகங்காரத்தினால் பாசக் கடலுக்குள் விழாமல் காப்பாற்றி, எனக்கு பரிசுத்த நிலையை
அருள்வாய். “ என்று வேண்டுகிறார்.
ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
ஆளினுங் கடல்மீதிலே
ஆனைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநா ளிருந்தபேரும்
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவது மாகமுடியும்
உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே.
- தாயுமானவர் ( பரிபூரணானந்தம். பாடல் எண் 10)
பாடலுக்கு எனது உரை:
ஆசைக்கு ஓர் அளவே கிடையாது. ஒரு மன்னன் இந்த உலகம்
முழுவதையும் கட்டி ஆண்டால் கூட, அவன் மனம் கடல் மீதும் தனது அதிகாரத்தை செலுத்தவே
விரும்பும். குபேரனுக்கு நிகராக பொன் வைத்து இருப்பவர்கள் கூட இன்னும் பொன்
வேண்டும் என்னும் ஆசையில் ரசவாதம் செய்ய அலைவார்கள்.
இவ்வுலகில் வய்தானவர்கள் மீண்டும் பழைய இளமையுடன் வாழ வேண்டும் என்ற ஆசையினால்
காயகல்பம் என்னும் மருந்தினைத் தேடி அலைந்து வாங்கிச் சாப்பிட்டு நெஞ்சு புண்ணாகி
வருந்துவார்கள். எல்லாவற்றையும் யோசிக்கும் போது அவர்கள் வாழ்நாள் முழுவதும்
நெஞ்செரிச்சல் தீர சாப்பிடுவது உறங்குவது என்றே முடியும்.
பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்ற
பரிபூரண ஆனந்தத் தெய்வமே! ” எனக்கு
உள்ளதே போதும். ” நான் நான் “
என்னும் அகங்காரத்தினால் ஒன்றை விட்டால் இன்னொரு ஆசை என்ற பாசக் கடலுக்குள்
விழாமல் இருக்கும் பரிசுத்த நிலையை அருள்வாய். “
முடிவுரை:
சில தினங்களுக்கு முன்னர் நான் தாயுமானவர் பாடல் ஒன்றுக்கு பதிவு ஒன்றினை
எழுதி இருந்தேன். எனது பதிவினைப் படித்த முன்னாள் வங்கி வேளாண் அதிகாரியும் “நினைத்துப் பார்க்கிறேன்” என்ற பெயரில் வலைப்பதிவு http://puthur-vns.blogspot.com எழுதி வருபவருமான திரு வே நடனசபாபதி அவர்கள் மேலே சொன்ன
தாயுமானவர் பாடலை நினைவு படுத்தி இருந்தார். அதன் எதிரொலிதான் இந்த பதிவு.
அன்னாருக்கு எனது நன்றி!
( PICTURES : THANKS TO
“ GOOGLE ” )