நீங்கள் உங்கள்
வீட்டில் உள்ள பழைய பெட்டிகள், தட்டுமுட்டு
சாமான்களை சுத்தம் செய்து கொண்டு
இருக்கிறீர்கள். அல்லது இறந்து போன தாத்தா, பாட்டி பெட்டிகளை அல்லது அலமாரிகளில்
என்ன வைத்து இருப்பார்கள் என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். “இந்த
கிழம் நமக்கெல்லாம் என்னத்தை வைத்து
இருக்கப் போகிறது?” என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போது, ஒரு
வங்கி கணக்கு புத்தகம் (Bank Pass Book) கிடைக்கின்றது. புரட்டிப் பார்க்கின்றீர்கள். அதில் வெறும் 32 ரூபாய் 50
காசு மட்டும்தான் இருக்கிறது. இதெல்லாம் ஒரு கணக்கா என்று அந்த புத்தகத்தை தூக்கி
எறியப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு நிமிஷம்.
கணக்கெடுப்பு:
முன்பெல்லாம் மாத
இருப்பு, காலாண்டு இருப்பு, அரையாண்டு இருப்பு, ஆண்டு இருப்பு என்று அந்தந்த கிளைகளில் உள்ள கணக்குகளை,
ஊழியர்கள் கணக்கெடுத்து சரி பார்ப்பார்கள். ஒரு கிளையின் நிதி நிலைமை
ஆராயப்படுவதோடு, கணக்குகளில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிந்து சரி செய்யவும் இந்த
இருப்புக் கணக்கெடுப்பு (BALANCING WORK) உதவும். இப்போது வங்கிகளில் எல்லாமே கம்ப்யூட்டர் மயம். எனவே சில
நிமிடங்களில் எல்லாவற்றையும் எடுத்து விடுகிறார்கள்.
இயக்கப்படாத கணக்குகள்:
அவ்வாறு கணக்கிருப்பு
எடுக்கும்போது, இயக்கப்படாத கணக்குகள் (Inoperative Accounts) என்ற சில கணக்குகளையும் சரி பார்ப்பார்கள். சில
வங்கிகளில் Inactive Accounts என்றும்,
Non Operative Accounts என்றும்
சொல்வார்கள். மொத்தத்தில் அவைகளில் பல மாதங்களுக்கு வரவு – செலவு இல்லாமல்
இயக்கப்படாத கணக்குகளாக செயலற்று இருக்கும். அவ்வாறு கணக்கெடுக்கும் போது
சில கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பிற்கும் (Minimum Balance) கீழே, நூறு
ரூபாய்க்கும் குறைவாக இருக்கும். இன்னும் சில கணக்குகளில் இருப்பு ஆயிரக் கணக்கில்
அல்லது அதற்கு மேலும் இருக்கும். ஐம்பதாயிரத்திற்க்கு மேல் இருக்கும் கணக்குகளும்
உண்டு. இந்த இயக்கப்படாத வங்கிக் கணக்குகளில் திடீரென்று வரவு – செலவு வந்தால் தனி கவனம் செலுத்த வேண்டியது,
வங்கி நிரவாகத்தின் பொறுப்பு ஆகும். ஏனெனில் இது மாதிரியான கணக்குகளில்தான் மோசடி
நடக்கும்.
வேலைக்கு சேர்ந்த
புதிதில் இந்த கணக்குகளை இருப்பு (BALANCING WORK) எடுக்கும்போது எதுவும் நினைத்ததில்லை. சில மாதங்கள்
கழித்து எனது மேலதிகாரியிடம் “ சார், இந்த மாதிரி நிறைய கணக்குகள் இருக்கின்றனவே,
அதிலும் சில கணக்குகளில் அதிக தொகையும் இருக்கின்றனவே, இவற்றை சம்பந்தப்பட்ட
டெபாசிட்தாரர்களுக்கு தெரிவிக்கலாமே அல்லது கடிதம் போட்டால் அவர்களுடை வாரிசுதாரர்களுக்கு
போய்ச் சேருமே ? எல்லாம் உள்ளூர்தானே? ஏன் யாரும் அப்படி செய்வதில்லை? ” என்று
கேட்டேன்.
அதற்கு அவர் “செய்யலாம்தான்.
ஆனால் அதில் நிறைய வில்லங்கங்கள் இருக்கிறன. FIXED DEPOSIT போன்றவைகளுக்கு மட்டும்தான் நினைவூட்டல் கடிதம்
அனுப்புவது வழக்கம். இது போன்ற இயக்கப்படாத சேமிப்பு கணக்குகளுக்கு அனுப்புவது
இல்லை. நாம் கடிதம் அனுப்ப போய் , அந்த கடிதம், கணக்கை வைத்து இருப்பவருக்கோ அல்லது அவரது நேரடி
வாரிசுக்கோ கிடைத்தால் பரவாயில்லை. வேறு யாரேனும் கிரிமினல் மூளைக்காரன் கையில்
கிடைத்தால் நமக்குத்தான் தொந்தரவு. வீட்டில் பாஸ் புத்தகத்தை பார்ப்பவர்கள்,
அவர்களாகவே வருவார்கள் ”
என்றார்.
இந்த கணக்குகளில்
உள்ள இருப்புகள் யாவும் சில காலத்திற்குப் பிறகு உரிமை கோராத கணக்குகள் (UNCLAIMED
DEPOSITS) என்ற வகையில் சேர்க்கப்பட்டு
அரசாங்க கணக்கில் சேர்ந்து விடும். இப்போதைய கம்யூட்டர் நெட் ஒர்க்கில் அவை
தாமாகவே போய் நின்றுவிடும். அந்த காலத்திற்கு ஏற்றது போல ”தனந்தேடி உண்ணாமற் புதைக்க வேண்டாம்” (உலகநீதி) என்றார் உலகநாதர் இந்த காலத்தில் சிலர்
உண்ணாமல் கொள்ளாமல் செலவு செய்யாமல் பணத்தை வங்கி கணக்குகளில் வைத்துவிட்டு
யாருக்கும் சொல்லாமல் இறந்து விடுகின்றனர். இவர்களை என்னவென்று சொல்வது?
( இது மாதிரியான இயக்கப்படாத கணக்குகளில் (Inoperative Accounts) எச்சரிக்கையாக இருக்கும்படியும், இது மாதிரியான கணக்குகளுக்கும் கடிதம் அனுப்பும்படியும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி (RESRVE BANK OF INDIA) உத்தரவு போட்டு இருக்கிறது. இதில் கடிதம் அனுப்புவதில் நடைமுறைச் சிக்கல்களே அதிகம் )
காரணங்கள்:
இதுமாதிரி பல
சேமிப்பு கணக்குகள் செயல்படாமல் அல்லது இயக்கப்படாமல் (Inoperative) இருப்பதற்கு பல காரணங்களைச் சொல்லலாம்.
பலரும் தங்களது கணக்குகளை ரகசியமாகவே வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். பலபேர், வீட்டில்
கூட சொல்வதில்லை. அடிக்கடி வெளியூருக்கு பணி மாறுதல் ஆகும் நிலைமையில்
இருப்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒரு கணககைத் தொடங்கிவிட்டு அப்படியே விட்டு விட்டு
வந்து விடுகிறார்கள். அதேபோல பல மாணவர்கள் கல்வி உதவித்தொகை (SCHOLARSHIP) வாங்கும்போது கணக்கைத் தொடங்குவார்கள்;
உதவித்தொகை கணக்கில் வந்ததும். பணத்தை எடுப்பதோடு சரி. குறைந்த பட்ச இருப்புத்
தொகையை (Minimum Balance) மறந்து விடுவார்கள்.
சிலர் இறந்து போனதும்
அவர்களுடைய சேமிப்புக் கணக்குகளும் இவ்வாறு ஆகி விடுகின்றன. அவர்களது வாரிசுகள், இறந்து போனவர் வங்கியில்
கடன் வாங்கி ஏதேனும் வாங்கி இருந்தால் நம்மை கட்டச் சொன்னால் என்ன செய்வது என்ற
பயம் வந்து வங்கிப் பக்கமே செல்வதில்லை. ஜாமீன் கையெழுத்து போட்டு இருந்தாலொழிய உங்களை
யாரும் ஒன்று செய்யப் போவதில்லை. இப்போதெல்லாம் கடன் கணக்குகளுக்கு (LOAN
ACCOUNTS) இன்சூரன்ஸ் முறை வந்து விட்டது..(ஒரு தமிழ் திரைப்பட நகைச்சுவைக் காட்சி
ஒன்றில், கவுண்டமணி – செந்தில்
ஜோடி, பொதுமக்கள் மத்தியில், இந்த பயத்தை நன்றாகவே விதைத்து இருக்கிறார்கள்.
அப்பாவி மக்களின் பயத்திற்கு கேட்க வேண்டியதில்லை.)
என்ன செய்ய
வேண்டும்?
அந்த வங்கி கணக்கு
புத்தகத்தை தூக்கி எறியப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்? குறைந்த இருப்பே
இருக்கிறது என்று நினைக்காதீர்கள். ஒருவேளை அந்த பெரியவர் தனது வங்கிக் கணக்கு
புத்தகத்தை மேற்கொண்டு அப்டேட் (UPDATE) செய்யாததினால்
கணக்கில் வந்த வேறு தொகை அவருக்கே
தெரியாது போயிருக்கலாம். அல்லது அவர் ஒரு அரசாங்க ஊழியராகவோ அல்லது தனியார்
ஊழியராகவோ இருந்து அவர் இறந்த பிறகு, அவருக்கு வரவேண்டிய ஏதேனும் நிலுவைத் தொகை (Arrears
) தொகை கணக்கில் வரவு வைக்கப்பட்டு
இருக்கலாம். அல்லது அந்த கணக்கை முன்னிட்டு FIXED DEPOSIT – கள்
இருந்து வரவு வைக்கப்படாமல் இருக்கலாம். யார்
கண்டது?
எனவே எதுவாக
இருந்தாலும், அந்த வங்கி கணக்கு புத்தகத்தை வங்கிக்கு எடுத்துச் சென்று அப்டேட் (UPDATE) செய்யுங்கள். அந்த கணக்கு சம்பந்தப்பட்ட வேறு
டெபாசிட்டுகள் இருக்கிறதா என்று விசாரியுங்கள். கணக்கைத் தொடர்ந்து வைத்து இருக்க
முடியுமானால் தொடருங்கள். முடியாத பட்சத்தில் சட்டப்படி அந்த கணக்கை முடித்து
விடுங்கள். எல்லோருக்கும் நல்லது.
(ALL PICTURES THANKS TO “GOOGLE”)
(ALL PICTURES THANKS TO “GOOGLE”)





