Saturday 28 June 2014

துய்ப்பேம் எனினே தப்புன பலவே              படம் (மேலே) மாயாபஜார் படத்தில் எஸ்.வி.ரங்கராவ்

நாம் எப்போதும் சலிக்காமல் செய்யும் வேலை சாப்பிடுவதுதான். அதிலும் எதைச் சாப்பிடுவது என்ற விஷயத்தில் மட்டும் சலிப்பு வரும். பல வீட்டில் ஒலிக்கும் குரல்  இன்றைக்கும் இட்லிதானா? தோசைதானா? என்பதுதான். மற்றபடி மூன்று வேளையும் சாப்பிடும் தொழில் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் ஒருவர் ஒருவேளையில் எவ்வளவு சாப்பிட முடியும்? எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவன் நாட்டுக்கே ராஜாவாக அல்லது மந்திரியாகவே இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் அல்ல்து ஏழையாக இருந்தாலும் அல்லது பிச்சைக்காரனாகவே இருந்தாலும் வயிறு நிரம்பச் சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிட முடியாது. உணவின் நிறம்,மணம்,ருசி என்பது அவரவர் வசதிக்கு ஏற்ப தொண்டை வரைக்கும்தான்.  அப்புறம் ஒன்றும் இல்லை. இதற்குத்தான் இவ்வளவு அடிதடி சமாச்சாரம்.

இதே போலத்தான் ஆடை அணியும் விஷயமும். யாராக இருந்தாலும் அணிவது இரண்டு ஆடைகள்தாம். ஒன்று மேலாடை. இன்னொன்று கீழாடை. ஆடைகளின் வடிவ அமைப்பினில், தரத்தினில், விலையினில் மட்டும்தான் வேறுபாடு. விழாக் காலங்களில் எல்லா தரப்பு மக்களும் ஆடை எடுத்து மகிழ்கிறார்கள். ஆடை அணிவதில் மகிழ்ச்சி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்.

மற்ற விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலும் இதே போலத்தான் உள்ளது. மாட மாளிகையில் இருப்பவன் பஞ்சணையில் அடையும் சுகமும், குடிசையில் இருப்பவன் பாயினில் அடையும் சுகமும் எல்லாம் ஒன்றுதான். நுகர்வு (CONSUMPTION ) என்ற அடிப்படியில் நுகர்வோர் (CONSUMER) பயன்பாடு என்பது ஒரே நிலைதான்.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை
          ( - பாடல்: வாலி படம்: படகோட்டி ( 1964 )

ஒரு நோய் வந்தாலும் அது இருப்பவனுக்கு ஒரு மாதிரியாக அல்லது இல்லாதவனுக்கு இன்னொரு விதமாக வருவதில்லை. உதாரணத்திற்கு தலைவலி! வசதி படைத்தவனுக்கு ஒரு மாதிரியாகவும் சாதாரணமானவனுக்கு ஒரு மாதிரியாகவும் தலை வலிப்பதில்லை. இயற்கையின் அளவுகோல் ஒரே வலிதான். அவரவர் எடுக்கும் மருத்துவம் மட்டுமே அவரவர் வசதிக்கு ஏற்ப மாறுபடுகிறது.

ஒருமுறை சேர மன்னன் அரசபைக்குச் சென்றிருந்த கம்பர், அங்கே நடந்த உரையாடலில் அவனிடம் “ உலகத்தில் கவலையே இல்லாத மனிதர் எவருமில்லை. விஷயம் பெரிதாயினும்,சிறிதாயினும், அதனால் விளையும் காரியமாகிய துக்கமோ அவரவர் தன்மையை நோக்குமிடத்தில் ஒரே தன்மைதான்என்று சொல்லி ஒரு பாடலையும் பாடினார்.

பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பார்க்கும்
பருக்கையற்ற
கூழுக்குப் போட உப்பில்லை என்பார்க்கும் முள்
குத்தித் தைத்த
காலுக்குத் தோல் செருப்பு இல்லை என்பார்க்கும்
கனக தண்டி
மேலுக்குப் பஞ்சணை இல்லை என்பார்க்கும்
விசனம் ஒன்றே.
                   (  தனிப்பாடல் - கம்பர் பாடியது )

இப்பாடலில் கவலை என்று வரும்போது எல்லோருடைய மனநிலையும் ஒன்றுதான் என்கிறார் கம்பர்.. ஒருவனுக்கு பாலுக்கு சர்க்கரை  இல்லையே என்று கவலை. இன்னொருவனுக்கு கூழுக்கு உப்பு இல்லையே என்று கவலை. ஆகக்கூடி கவலை என்பது இல்லை என்ற ஒன்றுதான்.

எனவே கோடி கோடியாக சேர்த்து வைத்து இருந்தாலும் அவன் அனுபவிப்பது குறிப்பிட்ட அளவுதான். இதனைத்தான் நாட்டுப்புற பழமொழி ஒன்றில் “ விளக்கெண்ணையை உடம்பு முழுக்க பூசிக் கொண்டு புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் “  என்றார்கள். இரண்டு அரசியல்வாதிகள். பெயர் வேண்டாம். கோடிக் கணக்கில் சொத்து. ஊரெங்கும் அடுத்தவர் பெயரில் வாங்கப்பட்ட இடங்கள். அத்தனை இருந்தும் அவர்களால் ஆசையாக எதனையும் சாப்பிட முடியாது. வயிற்றில் தீராத புண். இறுதிக்காலம் வரை இப்படியே இருந்தார்கள். எத்தனை இடங்களை வளைத்துப் போட்டாலும் அவன் தினமும் படுத்துக் கிடப்பதும் இறந்தபின் படுக்கப் போவதும் ஆறடி நிலம்தான். அவன் எரிக்கப்பட்டால் அதுவும் இல்லை. அவன் சேர்த்த அனைத்தும் உறவினர்களுக்கோ அல்லது பினாமிகளுக்கோ போய் விடுகின்றது. அப்புறம் யாரும் அவனை நினைப்பதில்லை.


ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம என்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு  ஒழிந்தார்களே
                                 ---   திருமூலர் (திருமந்திரம்)

இவை எல்லாவற்றையும் உணர்ந்த சங்ககாலப் புலவர் நக்கீரனார் என்பவர் ஒரு பாடலை பாடி வைத்து இருக்கிறார். அதனால் செல்வத்தின் பயன் என்பது ஈதல். நாம் மட்டுமே அனுபவிப்போம் என்று கட்டி காத்தாலும் நம்மிடமே இருந்தும் நாம் அனுபவிக்காமலேயே நாம் இழப்பவை அதிகம் “ என்கிறார்.

(அதற்காக எல்லாவற்றையும் யாரோ ஒருவனிடம் கொடுத்துவிட்டு போய் விட முடியுமா? என்று கேட்காதீர்கள். தர்மம் செய்வதிலும் சில தர்மங்கள் இருக்கின்றன.)

படம் (மேலே) திருவிளையாடல் படத்தில் சிவனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நக்கீரனாக ஏ.பி.நாகராஜன்


தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.          -  புறநானூறு 189

( பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் )


இதன் விளக்கம்:

இந்த உலகம் முழுவதையும் ஒரு குடையின்கீழ் ஆளும் மன்னவனும், இரவு பகல் பாராது தூக்கமின்றி கடுமையான விலங்குகளை வேட்டையாடும் ஒருவனும் உண்பது நாழிச் சோறு; உடுப்பது மேலாடை கீழாடை என்ற இரண்டே ஆகும். மற்றவைகளும் இதே போலத்தான். நாமே எல்லாவற்றையும் அனுபவிப்போம் என்றாலும் நமக்கு அனுபவிக்க கிடைக்காமல் போய் விடுவதும் உண்டு. எனவே செல்வத்தின் பயன் என்பது ஈதல் ஆகும்.

(நாழி என்பது (ஒரு படி) அந்தக் கால அளவு. குப்பனுக்கு தேவை சட்டிச் சோறு என்று ஒரு பழமொழியும் உண்டு. இப்போது ஒரு வேளைச் சாப்பாடு (FULL MEALS) என்கிறோம்)


PICTURES THANKS TO GOOGLE


Monday 23 June 2014

பயன்படும் இணையதளங்கள் – 1
இண்டர்நெட்டில் (INTERNET) இன்று எவ்வளவோ விஷயங்கள். நமக்கு அடிக்கடி பயன்படும் தளங்களும் இருக்கின்றன. குப்பைகளும் இருக்கின்றன. சிறு துரும்பும் பல் குத்த உதவும் இது அவரவர் பயன்பாட்டைப் பொறுத்தது. இங்கு நான் அடிக்கடி எனக்காகவும், மற்றவர்களுக்காகவும் பயன்படுத்தும் இணையதளங்களைப் பற்றிய சிறு குறிப்புகளைத் தருகிறேன். எல்லோருக்கும் நன்கு தெரிந்த அடிக்கடி பயன்படும் தளங்களை இங்கு மீண்டும் சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. கீழே உள்ள இணையதள முகவரிகளை சொடுக்கினால் (CLICK) இந்த பதிவிலிருந்தே அவை ஒவ்வொன்றையும் பார்க்கலாம்.

இன்றைய தேதி, கிழமை காலநிலை  எப்படி?

நீங்கள் இருக்கும் இடத்தின் இன்றைய தேதி, கிழமை, உள்ளூர் நேரம் இவற்றை மிகவும் துல்லியமாகக் காட்டும் இணையதளம் இது. மேலும் இன்று,நாளை, நாளை மறுநாள் இருக்கப் போகும் காலநிலை (CLIMATE) இவைகள் குறித்தும் முன்னதாகவே அறிந்து கொள்ளலாம். மேலும் அதிகப்படியான தகவல்களும் உண்டு.


உங்களுக்கு வயது என்ன? பேப்பர் பென்சிலை வைத்துக் கொண்டு கணக்கு போடுவதை விட , மேலே குறிப்பிட்ட இணையதளம் சென்று ந்மது பிறந்த தேதியைத் தந்தால் போதும், நமக்கு எத்தனை வயது, மாதம், வாரம், நாள், நிமிஷம் என்ற விவரம் வந்துவிடும். இது பற்றி ஏற்கனவே தனியாகவும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கீழே சொன்ன இணையதள தகவல்கள் பயன்படும்.

மேலே உள்ள இணையதளத்தில் உங்களுடைய பிறந்தநாள், நேரத்தைக் கொடுத்துவிட்டு உங்களுடைய பிறந்த நட்ச்சத்திரம் மற்றும் இராசி கணனம் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் இன்று பிறந்த குழந்தைக்கும் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

காலையில் எழுந்தவுடன் தினசரி நாட்காட்டியில் தேதியை கிழித்துவிட்டு, இன்று என்ன சொல்லி இருக்கிறது என்று படிக்கிறோம். இந்த இணையதளம் சென்றால் அந்த நாட்காட்டி விவரத்தைக் காணலாம்.

நாள், நட்சத்திரம், ராசி பலன், பிறந்தநாள் பலன், எண் ஜோதிடம் இவைகளுக்கு மேலே சொன்ன தினத்தந்தி, தினமலர் இணைய தளங்கள் செல்லவும்.

காய்கறி - தினசரி விலை விபரம்

மேலே உள்ள இணையதளம் ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் சந்தைகளின் தினசரி காய்கறிகள், பழ வகைகள், மற்றும்  விலை விபரத்தினையும் அதனை நடத்தும் கடை முகவர்களின் தொடர்பு முகவரியினையும் அளிக்கிறது

மளிகை பொருட்கள்:

வீட்டில் இருந்தபடியே இன்றைய மளிகை சாமான்களின் விலையை கீழே உள்ள இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


அயல்நாட்டுப் பொருட்கள்:


இப்போது நாடெங்கும் வெளிநாட்டுப் பொருட்கள் குறிப்பாக சீன பொருட்கள் கிடைக்கின்றன. பர்மாபஜார் பக்கம் அவர்கள் சொல்வதுதான் விலை. நமக்கும் அவர்கள் சொல்லும் விலை சரியானதுதானா அல்லது என்ன விலைக்கு அவர்களிடம் பேரம் பேசுவது என்ற சந்தேகம் வரும். உங்கள் சந்தேகத்தை தீர்க்கும் வண்ணம் சீன பொருட்களின் விலையை கீழே உள்ள தளங்கண் மூலம் தெரிந்து கொள்ளலாம்.நுகர்வோர் (CONSUMER)

இந்த இணையதளத்தில் நாம் வாங்க நினைக்கும் பொருட்களைப் பற்றிய முழு விவரத்தினையும் அதே போன்ற மற்ற பொருட்களின் ஒப்பீட்டையும் காணலாம்.

மேலே சொன்ன  இணையதளங்களில் நாம் வாங்க நினைக்கும் அல்லது வாங்கிய பொருட்களைப் பற்றிய மற்றவர்களது அனுபவங்கள் மற்றும் குறைகளைக் காண்லாம். நாமும் நமது அனுபவங்களையும் குறைகளையும் சொல்லலாம்.

கணக்கீடுகள் ( CALCULATIONS)

நமது இந்தியா குடியரசாக மாறிய பிறகு ஏப்ரல் 1, 1957 முதல் நமது நாட்டில் மெட்ரிக் முறை அமுலுக்கு வந்தது. ஆனாலும் நாம் இன்னும் நமது நாட்டில் பழைய அளவுகளையே பழக்கத்தில் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இதனால் அடிக்கடி  நமக்கு ஒரு மீட்டர் என்றால் எத்தனை அடி?; எத்த்னை கிலோ மீட்டர் ஒரு மைல்? போன்ற சந்தேக வினாக்கள் வந்து கொண்டே இருக்கும். இவற்றை தீர்த்து வைக்கும் இணையதளம் இது.

இந்த இணையதளத்தில், உங்களுடைய சேமிப்புக் கணக்கு(SAVINGS BANK), தொடர் வைப்பு (RECURRING DEPOSITS), பிக்ஸட் டெபாசிட்டுகள்(FIXED DEPOSITS), வீட்டுக் கடன் (HOME LOAN) போன்ற அனைத்து கணக்குகளுக்குமான வட்டி, முதிர்வுத் தொகை போன்றவற்றை கணக்கிட்டுக் கொள்ளலாம். மேலும் உடல்நலம், கட்டிட வேலை சமபந்தமான கணக்கீடுகளையும் மற்ற கணக்குகளையும் நீங்களே போட்டு தெரிந்து கொள்ளலாம்.

பயணம் செய்யும்போது

நாம் பயணம் செய்ய வேண்டிய ஊர் எவ்வளவு தொலைவில் உள்ளது, பயண நேரம், பஸ் கட்டணம், சாலை வழியே பயணம் செய்யும் போது எது நேர்வழி முதலான விவரங்களை மேலே சொன்ன இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பயனர் பெயர் (USERNAME)

நாம் நமது பெயரைக் கொண்டோ அல்லது விருப்பமான பெயரைக் கொண்டோ வெவ்வேறு தளங்களில் இமெயில் போன்ற பல கணக்குகளை தொடங்குகிறோம். நாம் தொடங்க விரும்பும் பயனர் பெயர் (USERNAME) தற்சமயம் எந்தெந்த தளங்களில் இருக்கிறது , தொடங்கலாம் என்பதைக் காட்டும் இணைய தளங்கள் இவை.

பின்கோடு (இந்தியா)

இந்த இணைய தளத்தில், உங்களுக்குத் தெரிந்த பின்கோடு (இந்தியா) எண்ணைக் கொடுத்தால், அந்த தபால் அலுவலகம் இருக்கும் இடத்தின் முழு விவரங்களையும் (மேப் உள்பட) தந்துவிடும். அதே போல உங்களுக்குத் தெரிய வேண்டிய தபால் நிலையம் பற்றி பெயரைக் கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

செல்ல நாய்கள்:

என்ற தளத்தில் செல்லநாய்களின் வகைகள், அவற்றிற்கான உணவு, வளர்க்கும் முறை, ஒரு நாயின் வயது என்பது மனிதனின் வயதோடு ஒப்பிடும்போது என்ன என்பது போன்ற பல விவரங்களை காணலாம்,.

பொன்மொழிகள் (GOLDEN SAYINGS)

உங்களுக்குத் தேவையான அறிஞர்களின் பொன்மொழிகளை மேலே கண்ட இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

நகர்ப்புற விவரம்:


மேலே உள்ள இணையதளம் மூலம் சென்னையைப் பற்றிய காய்கனி விலையிலிருந்து ரியல் எஸ்டேட் வரை அன்றாட முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் திருச்சி, மதுரை, கோவை போன்ற மற்றைய ஊர்களின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்

(PICTURES THANKS TO GOOGLE)Saturday 21 June 2014

கபிஸ்தலம் – ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில்

தஞசை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ளது கபிஸ்தலம் என்ற ஊர். இந்த ஊரில் 108 திவ்ய திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. நான் இந்த ஊருக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி சென்று இருக்கிறேன். ஆனால் இந்த பெருமாள் கோயிலுக்கு சென்றதில்லை. நேற்று முன்தினம் (19.06.2014, வியாழக்கிழமை) அந்த ஊரில் நடைபெற்ற காதணி விழாவுக்கு சென்று இருந்தேன். இந்த தடவை கபிஸ்தலம் கோயிலுக்கு சென்றே ஆக வேண்டும் என்பதால் சீக்கிரமே புறப்பட்டுச் சென்றேன்.

திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வழியாக பாபநாசம் சென்றேன். பாபநாசத்தில் ஊரில் நுழைந்தவுடன் புளியமரம் என்று ஒரு பஸ் நிறுத்தம். அங்குதான் கபிஸ்தலம் செல்லும் சிற்றுந்துகள் (MINI BUS)  ஷேர் ஆட்டோக்கள் நிற்கின்றன. நான் சென்ற நேரம் சிற்றுந்து வர இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்றார்கள். ஷேர் ஆட்டோக்காரர் ஒருவர் கபிஸ்தலம், கபிஸ்தலம்என்று குரல் கொடுத்துக் கொண்டு இருந்தார். ஏறகனவே நிறையபேர் இருந்ததால் நான் அதில் ஏறவில்லை. அவர் சென்ற அடுத்த நிமிஷம் இன்னொரு ஷேர் ஆட்டோ. அதில் பயணம் செய்தேன். கட்டணம் ஐந்து ரூபாய். ஊரில் இறங்கியவுடன் கோயிலுக்கு வழி கேட்டு நடந்தேன்.

ஊருக்கு கிழக்கே (திருவையாறு கும்பகோணம் சாலையில்) சிறிது தூரத்தில்  கோயிலுக்கு செல்லும் வழியைக் காட்டும் அறிவிப்புப் பலகை ஒன்று இருந்தது. அது காட்டிய வழியே தெருவுக்குள் நுழைந்தேன். சிறிது தூரத்தில் பெருமாள் கோயில். இதுநாள் வரை பெரிய கோயிலாக இருக்கும் என்று நினைத்து இருந்தேன். இடம் பரப்பளவில் குறைவுதான். ஆனாலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்பதால் வெளியூரிலிருந்து காரிலும், ஆட்டோவிலும் பகதர்கள் தரிசனம் செய்ய வந்து இருந்தனர்.

உள்ளே நுழைந்தவுடன் ஒரு அம்மாள் பூ விற்றுக் கொண்டு இருந்தார். அவரிடம் பூ வாங்கிக் கொண்டேன். கோயிலில் பெருமாள் தரிசனம். சின்ன வயது குருக்கள் ஒருவர் அர்ச்சனை செய்தார். அங்கிருந்த மற்றொரு ஊழியர் ஒருவர் எனக்கு கோயிலின் தல புராணத்தை சொன்னார். (கஜேந்திரன் என்னும் யானையை முதலையின் பிடியிலிருந்து  ஆதிமூலம் காப்பாற்றி இருவருக்கும் சாபவிமோசனம் தந்த கதை ) நான் ஏற்கனவே படித்த கதைதான். பெருமாள் தரிசனம் முடிந்த பிறகு, உறவினர் வீட்டு காதணி விழா நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபம் (கடைவீதிக்கு) சென்றேன்.

கபிஸ்தலத்தில் எடுத்த படங்கள்.

படம் மேலே:கோயிலுக்கு செல்லும் வழியைக் காட்டும் அறிவிப்புப்பலகை 

படம் மேலே: கோயிலுக்கு செல்லும் சாலை

படம் மேலே: கோயில் முன்னே உள்ள அறிவிப்புப் பலகை 

படம் மேலே: கோயில் முன் வாயில்

படம் மேலே: கோயில் முன் வாயில் உட்புறம்

படம் மேலே: கொடிமரத்துடன் கோயிலின் உட்புறம்

படம் மேலே: கோயில் உட்புறத்தின்  இன்னொரு காட்சி

படம் மேலே: கொடிமரத்தின் பின்புறம் உள்ள கருடாழ்வார்


படம் மேலே: கோயில் மதில் சுவர்கள்

படம் மேலே: கோயில் உள்ளே உள்ள கிணறு 

படம் மேலே: தாயார் சன்னதி கோபுரம்

படம் மேலே: பெருமாள் கோயிலின் மூல கோபுரம்

படம் மேலே: கோயிலின் உள்ளே

படம் மேலே: இதுவும் அது 

படம் மேலே: கோயிலின் வலது பக்க தோற்றம்

படம் மேலே: கோயில் மண்டபம்

படம் மேலே: தலபுராணத்தை விளக்கும்  புடைப்பு சிற்பம் 

படம் மேலே: இறைச் சிற்பங்கள்

படம் மேலே:கோயிலின் உள்ளே
படம் மேலே: தற்சமயம் தண்ணீஈ இல்லாத குளம் கும்பகோணம் - திருவையாறு சாலையில் உள்ளது)

படம் மேலே: கபிஸ்தலம் காவிரி ஆற்றுப் பாலம்.

கோயில் இருக்குமிடம்:

1.கும்பகோணம் - திருவையாறு, சாலையில் சுவாமிமலை, உமையாள்புரம்  தாண்டி கபிஸ்தலம் உள்ளது. 2. திருவையாறிலிருந்தும் இந்த ஊருக்கு வரலாம். 3. தஞ்சாவூர் பாபநாசம் வழியாகவும் வரலாம்.4.கும்பகோணம் - பாபநாசம் வழியாகவும் வரலாம். 

தமிழில் கவித்தலம். கவி என்றால் குரங்கு. ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் என்ற இரு வானரங்கள் வழிபட்ட இடம் என்பதால் கவித்தலம். இந்த ஊரை மேல கபிஸ்தலம் என்றும் சொல்லுகிறார்கள்.


Sunday 15 June 2014

சிந்துபாத்வலைப்பதிவில் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து இந்த தலைப்பில் எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. காரணம் சின்ன வயதில் படித்த கதைகளில் மறக்க முடியாத சிந்துபாத் என்ற கதாபாத்திரமும் ஒன்று.

கன்னித்தீவு:

எனக்கு சிந்துபாத்தை அறிமுகம் செய்து வைத்தது தினத்தந்திதான். அப்போதுதான் பள்ளியில் முதலாம் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்பு படிக்கத் தொடங்கிய சமயம். பாடப்படிப்பு அல்லாத ஒன்றை எழுத்துக் கூட்டி படித்த பத்திரிகை எது என்றால் அது தினத்தந்திதான். காலையில் தினத்தந்தி வந்தவுடன் முதல் ஆளாக முதலில் படித்தது இரண்டாம் பக்கத்தில் உள்ள கன்னித்தீவு படக்கதைதான். அதில் வரும் சிந்துபாத்தின் சாகசங்கள் அப்போதைய வயதில் படிக்க ரொம்பவும் பிரமிப்பாக இருக்கும். ஆரம்பத்தில் தினத்தந்தியின் இரண்டாம் பக்கத்தில் சிந்துபாத்தின் மூலக் கதையை அப்படியே படக்கதையாக தொடர்ந்து வெளியிட்டார்கள்.  ஓவியர் கணு என்பவர் படங்களை வரைந்தார். பிறகு பாலன் போன்றவர்கள் வரைந்தனர். எல்லாம் கறுப்பு வெள்ளை படங்கள்தான். இப்போது வண்ணப் படங்களாக இந்த கதை வருகிறது. அப்புறம் சிந்துபாதின் ஏழு பயணங்களும் முடிந்த பிறகு கதை என்பது வேறு திசையில் கற்பனையாக வந்து கொண்டு இருக்கிறது. ஒரு சாதனைக்காக நிறையபேர் இந்த கதையை மாறி மாறி இன்றுவரை தொடர்ந்து எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். 1960 இல் தொடங்கிய இந்த படக்கதைக்கு, இன்றைக்கு (15.06.2014) தொடரும் சி:19188 என்று போட்டு இருக்கிறார்கள். அதாவது 19188 ஆவது நாளாக தினத்தந்தியில் கன்னித்தீவு கதை வந்து கொண்டு இருக்கிறது.


இந்தக் கதையை வைத்து நிறைய விஷயங்களில் மற்றவர்களை கிண்டலடிப்பது வழக்கம். பிரச்சினைகள் அல்லது வழக்குகள் வழ வழ என்று  இழுத்துக் கொண்டே போனால் தினத்தந்தி கன்னித்தீவு மாதிரி போகிறது என்பார்கள். இந்த கதையை புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். இந்த கதையில் வரும் சிந்துபாத், லைலா, மூசா மந்திரவாதி இவர்களை மறக்க முடியாது. நானும் படித்து முடித்து வேலையில் சேர்ந்து ஓய்வும் பெற்று விட்டேன். இன்னும் லைலா அப்படியே குள்ளமாகவே இருக்கிறாள். அவளுக்கு எப்போது முழு வடிவம் கிடைக்கும்? வருகின்ற தலைமுறைதான் பதில் சொல்ல வேண்டும்.

அரேபிய இரவுகள்:

உயர்நிலை பள்ளியில் படிக்கும் போது சிந்துபாத்தின் கடல்பயணங்கள் “ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான நூல் கிடைத்தது. அப்புறம் ஆயிரத்தோரு இரவு அராபியக் கதைகளில் சிந்துபாத்தின் சாகசங்களை மனக் கண்ணில் ரசிக்க முடிந்தது.

படம் மேலே - சிந்துபாத் பாக்தாத் நகர வியாபாரி. தனது வியாபாரத்தைப் பெருக்க அடிக்கடி கப்பலில் பயணம் செய்பவன். அவன் பயணம் செய்த போது பலமுறை கப்பல் உடைந்து ஆளில்லாத தீவுகளில் ஒதுங்குகிறது. அப்போது  தனக்கு ஏற்பட்ட பல திகிலான அனுபவங்களை நண்பர்களிடம் சொல்லுகிறான்.

படம் மேலே ஒருமுறை கடற் பயணத்தின் போது வழியில் ஒரு தீவு. கப்பலில் சென்ற எல்லோரும் இளைப்பாற இறங்குகின்றனர். மீண்டும் செல்லும் போது சிந்துபாத் தூங்கிவிட அவனை அங்கேயே விட்டு விட்டு  மற்றவர்கள் கப்பலில் சென்று விடுகின்றனர். கோட்டைச் சுவர் போல  இருக்கும் ரூக் என்ற ராட்சதப் பறவையின் முட்டையைப் பார்க்கிறான். இரவு அந்த முட்டையில் வந்து அமரும் ரூக் பறவையின் கால்களில் தன்னைக் கட்டிக் கொள்கிறான். காலையில் அது பறக்கும் போது அவனும் தப்பிக்கிறான்
..
படம் மேலே: ஐந்தாவது கடற் பயணத்தின் போது ஆள் இல்லாத தீவு ஒன்றில் கிழவன் ஒருவன் மீது இரக்கம் ஏற்பட்டு தனது முதுகில் ஏற்றிக் கொள்கிறான். ஆற்றைக் கடந்து  இறங்கச் சொன்னால் அவன்  மறுக்கிறான். அந்த கிழவனிடமிருந்து எப்படி மீண்டான் என்று ஒரு கதை.

படம் மேலே -ஆறாவது கடற் பயணத்தின் போது கப்பல் திசைமாறி ஒரு தீவில் ஒதுங்குகிறது. அங்கு மணலில் கிடக்கும் மாணிக்கக் கற்களை மூட்டை கட்டுகிறான். பின்னர் ஒரு தெப்பம் செய்து அதன் மூலம் அந்த தீவை விட்டு ஒரு ஆற்றின் வழியே வெளியேறுகிறான்.
  
குரங்குகள் தீவு , அவலட்சணமான பூதம் , நரமாமிசம் உண்ணும் காட்டு மிராண்டிகள், மரணக் கிணறு, கடற் கொள்ளையர்கள், யானைகள் கல்லறை என்று சிந்துபாத் செய்த ஏழு கடற்பயணங்களும் சாகசங்களாகச் செல்லுகின்றன. உண்மையிலேயே அவை  பிரமிப்பானவைதான். அந்தகாலத்து அராபியக் கதைகளை ரசித்துப் படிப்பதே தனி சுகம்தான்.

ஹாலிவுட் படங்கள்:

சிந்துபாதின் கடற் பயணங்களை  மையமாக வைத்து ஆங்கில திரைப் படங்களும் வந்தன.

Sinbad the Sailor (1947)
The Magic Voyage of Sinbad (1953)
The 7th Voyage of Sinbad (1958)
The Golden Voyage of Sinbad (1973)
Captain Sinbad (1963)
Sinbad and the Eye of the Tiger (1977)
Sinbad of the Seven Seas (1989)
Sinbad: Legend of the Seven Seas (2003)
Sinbad and the Minotaur (2010)
Sinbad: The Fifth Voyage (2011)
Sinbad: Beyond the Veil of Mists (2000)
Sinbad: The Fifth Voyage (2014)
ஆனால் திரைக்கதை என்பது முற்றிலும் மாறுபட்டது. சிந்துபாத் எதிர்கொள்ளும் மந்திரவாதியின் மந்திர தந்திரங்கள், வீரதீர செயல்கள் என்று கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றன.

படம் மேலே: Sinbad and the Eye of the Tiger (1977) படத்தில் ஒரு காட்சி


(PICTURES THANKS TO GOOGLE IMAGES)

படித்துவிட்டு தமிழ்மணத்தில் கணக்கு உள்ளவர்கள் மறக்காமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!Sunday 8 June 2014

வீட்டுக்கு ஒரு ஆட்டோ !சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் கோர்ட் உத்தரவுப்படி ஆட்டோ
கட்டணம் நிர்ணயித்து விட்டதாக செய்தி வந்தது. ஆட்டோ கட்டண விவரம் தூள் பறந்தது. பத்திரிகைகளில் வலைப் பதிவுகளில் ஆஹா ஓஹோ என்று பிரமாதப் படுத்தினார்கள். டெலிவிஷன் பெட்டி சானல்களில் அக்கு வேறு ஆணி வேறாக அலசினார்கள். சென்னைக்கு நிர்ணயித்தது போல் தமிழ்நாடு முழுக்க இதேபோல் ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றார்கள்.

ஆட்டோக்காரர்கள் மாறவில்லை

ஆனால் நடைமுறையில் பழைய குருடி கதவைத் திறடி க்தைதான். சென்னையில் மீட்டர் கட்டணப்படி ஆட்டோக்கள்  ஓடுவதாகத் தெரியவில்லை. மீட்டர் பற்றி பேசினாலே  பாதியிலேயே ஆட்களை இறக்கிவிடுவார்கள் அல்லது ஆட்டோ அங்கெல்லாம், வராது என்று சொல்லி விடுவார்கள். ஒன்றும் செய்ய முடியாது. அது அவருடைய ஆட்டோ. அவருடைய இஷ்டம்.. சென்னையில் மட்டுமல்ல. தமிழ்நாடு முழுக்க இதே நிலைமைதான். சட்டம் இருந்தும் அமுல் படுத்த முடியாத வகையறாக்களில் ஆட்டோ கட்டணமும் ஒன்று. இதற்கான காரணம் பற்றி காம்ரேடுகளும் ஆட்டோ கட்டணமும் http://tthamizhelango.blogspot.com/2013/12/blog-post_21.html என்று ஒரு கட்டுரையை வலைப் பதிவில் எழுதினேன்

முன்பு டாக்சிகள்:

இந்த ஆட்டோ ரிக்‌ஷாக்கள் வருவதற்கு முன்னர் டாக்சி டிரைவர்கள் இதே போல செய்து கொண்டு இருந்தார்கள். வாடகைக்கு மட்டும் (FOR HIRE ONLY) என்று போர்டு மாட்டிக்கொண்டு அவர்கள் செய்த பேரங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அப்புறம் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அதிகமானதும், நிறைய வீடுகளில் சொந்த கார்கள் வந்ததும்  மற்றும் கால் டாக்சிகள் வரத் துவங்கியதும் அவர்கள் கொஞ்சம் இறங்கி வந்தார்கள். வங்கிக் கடன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்   ஊழியர்களுக்கு தந்த வாகனக் கடன் போன்றவற்றால் வாகனங்கள் பெருகப் பெருக,  இப்போது பல இடங்களில் டாக்சிகளுக்கு ஆட்கள் வந்தால் போதும் என்ற நிலைமை.

தனிநபர் (PRIVATE) ஆட்டோக்கள்

இதற்கு ஒரே தீர்வு வீட்டுக்கு ஒரு ஆட்டோ ரிக்‌ஷா திட்டம்தான். அதாவது பைக், ஸ்கூட்டர் வாங்குவதற்கு பதிலாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஆட்டோ ரிக்‌ஷா வாங்கலாம். கார் விற்கும் விலைக்கு ஆட்டோ ரிக்‌ஷா வாங்குவது எவ்வளவோ மேல். மேலும் அதிகப் பயன்பாடும் உண்டு.

எங்கள் பகுதியில் ஒரு ஓட்டல் உரிமையாளர் இருக்கிறார். அவர் கார், ஆட்டோ ரிக்‌ஷா இரண்டையும் வைத்து இருக்கிறார். மார்க்கெட், பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் சென்று வர ஆட்டோவை பயன்படுத்துகிறார். அவரே சமயத்தில் ஆட்டோவை ஓட்டுகிறார். வெளியூர் பயணம், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு காரை எடுத்துக் கொள்கிறார். பெரும்பாலும் அவர்கள் குடும்பம் உபயோகிப்பது ஆட்டோதான். அவர்களது ஆட்டோ கரும் பச்சை வண்ணத்தில் இருக்கும். முகப்பிலும் பின்புறமும் பெரிதாக ஆங்கிலத்தில் PRIVATE என்று எழுதி இருக்கும். நிறைய ஓட்டல் அதிபர்களிடம் இந்த PRIVATE ஆட்டோ இருப்பதைக் காணலாம். ஓட்டல் வியாபாரத்திற்கும் (CATERING SERVICE) இந்த ஆட்டோதான்.
  
இந்த ஆட்டோ வாங்கும் திட்டத்திற்கு அரசாங்கமே வங்கிகள் மூலம் உதவி செய்யலாம். இதனால் நமது உறவினர்களை தெரிந்தவர்களை அழைத்து வர, மார்க்கெட், பள்ளி, அலுவலகம் சென்று வர என்று சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு சக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் ஏறிக் கொண்டு அவதிப்படுவது போன்ற தொல்லைகள் இல்லாமல் இருக்கும். மேலும் தனிநபர் (PRIVATE) ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அதிகமாகும் போது உள்ளூர்க்காரர்கள் நிறையபேர் ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் வரவே மாட்டார்கள். எனவே ஆட்டோக்காரர்கள் கட்டணத்தைத் தாங்களாகவே குறைத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.

அரசு நடவடிக்கை:

எனவே தனிநபர்கள் கார்கள் வைத்துக் கொள்ள அனுமதி இருப்பது போல , தனிநபர் (PRIVATE) ஆட்டோ ரிக்‌ஷாக்கள் வைத்துக் கொள்ள அனுமதியும் ஆட்டோ ஓட்டுநர் லைசென்ஸ் வழங்க அனுமதியும் தமிழக அரசு தாராளமாக வழங்க வேண்டும். இதன் மூலம் பொது மக்களுக்கும் அதிக பயன்பாடு.


( PICTURES THANKS TO GOOGLE )
Tuesday 3 June 2014

மூட்டைப் பூச்சி தொல்லைசுமார் 50 வருடங்களுக்கு முன்னர் கடையில் “ கில் பக் “ இருக்கா என்று கேட்டால் உடனே தந்துவிட மாட்டார்கள். கேட்டவர் பெரியவர் என்றால் என்ன ஏது எதற்கு என்று விசாரித்துவிட்டு தருவார்கள். சின்ன பையன் என்றால் வீட்டில் பெரியவர்களை வரச் சொல்லுவார்கள். அப்போது மூட்டைப் பூச்சி கடியும், மூட்டைப் பூச்சியைக் கொல்லும் கில்பக் (KILL BUG) பூச்சி மருந்தும் அவ்வளவு பிரபலம். வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் நிறையபேர் அப்போது நாடியதும் இந்த பூச்சி கொல்லி மருந்தைத்தான். அதனால் இந்த மருந்தை, கடைகளில் கேட்டால் உடனே தந்துவிட மாட்டார்கள். இந்த மருந்து இப்போது இல்லை.

மூட்டைப் பூச்சி:

மூட்டைப் பூச்சி என்பது சிறிய வகை பூச்சி. உடம்பு தட்டையாக, மேற்புறம் வரிவரியாக அரக்கு கலரில் இருக்கும். ஆறு கால்கள், இரண்டு மீசைகள், ரத்தத்தை உறிஞ்ச உதவும் கொடுக்கு ஆகியவை உண்டு. ஆங்கிலத்தில் BED BUG என்று பெயர். கிட்டதட்ட பெரிய கரப்பான் பூச்சியின் சிறிய வடிவம் கரப்பான் பூச்சிகளுக்கு இறக்கைகள் உண்டு. மூட்டைப் பூச்சிகளுக்கு இறக்கைகள் கிடையாது.

மூட்டைப் பூச்சி கடி:

மூட்டைப் பூச்சி கடி என்பது பட்டவர்களுக்குத்தான் தெரியும். பகலில் பதுங்கிக் கிடக்கும் இவை இரவில்தான் தமது திறமையை நம்மிடம் காட்டுகின்றன. பார்த்தால் சின்னதாக இருக்கும் இவை நம்மை கடிக்கும்போதும் நம்முடைய இரத்தத்தை  உறிஞ்சும் போதும் நமக்கு ஒன்றும் தெரியாது. இரத்தத்தைக் குடித்து முடிந்தவுடன் கடித்த இடத்தில் தடிப்பும் அரிப்பும் ஏற்படும். கடிபட்டவர் தூக்கத்தை மறந்து விட வேண்டியதுதான். படுக்கையில் இருந்து எழுந்து மூட்டைப் பூச்சிகளை வேட்டையாடுவதற்கே நேரம் சரியாகி விடும். அவற்றை நசுக்கினால் வரும் நாற்றம் சக்கிக்காது. சில வீடுகளில், மாணவர் விடுதிகளில் சுவற்றில் போர்க்களம் போல மூட்டை பூச்சியை நசுக்கிய இரத்த சுவடுகளைக் காணலாம்.

அப்போதெல்லாம் சொந்த வீட்டுக்காரர்களை விட வாடகை வீடுகளில் இருந்தவர்கள் அதிகம். மூட்டைப் பூச்சி என்பது வீட்டுக்கு வீடு சாதாரணமாக இருந்தது. அதிலும் ஒண்டு குடித்தனங்கள் இருந்த ஸ்டோர் போன்ற வீடுகளில் மக்களோடு மக்களாய் அவைகளும் வசித்தன. இந்த மூட்டைப் பூச்சிகள் மரச் சாமான்களின் இடுக்குகளிலும், சுவற்றில் உள்ள ஓட்டைகளிலும் (அப்போதெல்லாம் சுவற்றில் ஆணிகள் அடித்து போட்டோ படங்களை வரிசையாக மாட்டி வைப்பார்கள்) பாய், தலையணை, படுக்கையிலும் அண்டி கிடக்கும்  வீடு விட்டு வீடு மாறும்போது அவைகளும் பெண்டு பிளைகளோடு கூடவே குடித்தனம் வந்துவிடும். நம்மீது அவ்வளவு ரத்த பாசம் அவைகளுக்கு. மூட்டைக்கு பயந்து தியேட்டர்களுக்கு இரவுக் காட்சி படம் போனவர்களும் உண்டு. அங்கே போனாலும் இதே தொல்லைதான். பல ஊர்களில் மூட்டைப் பூச்சி கடிக்கு என்றே பேர் பெற்ற தியேட்டர்கள் இருந்தன. அந்த தியேட்டர்களில் படம் பார்க்கும்போது ஒரு மாதிரி நெளிந்து கொண்டேதான் உட்கார வேண்டும். அங்குதான் அப்படி என்றால் பஸ், ரெயில் இவற்றையும் இவை விட்டு வைப்பதில்லை. இப்போதும் ரெயில், அரசு பஸ்களில் மூட்டைப் பூச்சி கடியோடு கொசுக்கடியும் உண்டு.

மூட்டைப் பூச்சி ஒழிப்பு:

இவற்றை ஒழிக்க ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் வீடுகளில் சுடுதண்ணீரை கொதிக்க கொதிக்க மரச்சாமான்களின் இடுக்களில் ஊற்றுவது அல்லது மண்ணெண்ணெயை சொட்டு சொட்டாக தெளிப்பது அல்லது மரச்சாமான்களை வெயிலில் காயவைத்தல் அன்று சர்வ சாதாரணம். இவற்றை அழிக்க பூச்சி மருந்தை தெளிக்க வேண்டும். இதற்கென்று இருக்கும் பம்ப் ஒன்றில் கில்பக் மருந்தையும் மண்ணெண்ணெயையும் கலந்து மூக்கில் துணியை கட்டிகொண்டு நானும் தெளித்து இருக்கிறேன். இப்போது ஸ்பிரேயர்களுடன் மருந்துகள் வந்துவிட்டன. அப்படியும் அவை சாவதில்லை. தப்பி விடுகின்றன. மூட்டைக் கடிக்கு பயந்து வீட்டை அப்படியே கொளுத்தி விட்டால் கூட தேவலை என்ற எண்ணம் கூட சிலருக்கு உண்டாகி இருக்கிறது போலிருக்கிறது.. எனவே மூட்டை பூச்சிக்கு பயந்து யாரேனும் வீட்டைக் கொளுத்துவார்களா? என்ற பழமொழியையும் நம்மவர்கள உருவாக்கி இருக்கின்றனர். அதாவது அல்பமான எதிரிக்கு பயந்து நீ ஓடி ஒளியாதே என்பது பொருள்.

நாங்கள் மக்கள் நெருக்கம் மிகுந்த நகர்ப்புறத்தில் வாடகை வீட்டில் இருந்தபோது மூட்டைப்பூச்சி தொல்லையால் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறோம். இப்போது நாங்கள் இருக்கும் புறநகர்ப் பகுதியில் சொந்த வீட்டில் இந்த தொல்லை இல்லை. காரணம் வீடு கட்டும்போதே PEST CONTROL பயன்படுத்தியதுதான் என்று நினைக்கிறேன். ஆனாலும் பாம்புகள் நடமாட்டம் உண்டு.

இப்போது மூட்டைப் பூச்சிகள் அதிகம் இல்லை. இவற்றை அடியோடு ஒழிக்க அரசு எந்த முயற்சியும் செய்யாமலேயே இவை தாமாகவே குறைந்து விட்டன. காரணம் நவீனமயம் தான். ஆனாலும் ஆங்காங்கே சில இடங்களில் இவற்றைக் காணலாம். மனிதர்களிலும் சில மூட்டைப் பூச்சி கடி ஆசாமிகள் உண்டு. அவர்கள் அங்கே வரும்போதே பார்த்தவுடன் இங்கேயே சிலர் ஓடிவிடுவார்கள்.

புலவர் கவிதை:

புலவர் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்தபோது, இரவில் தனக்கு ஏற்பட்ட மூட்டைப் பூச்சி கடி அனுபவத்தினைக் கவிதையாகத் தந்து இருக்கிறார் நமது வலைப்பதிவர் புலவர் சா.இராமாநுசம் அய்யா அவர்கள்
 
   மடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்
           
மறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்
  
கடித்தயிடம் தெரியாமல்  துளியும் இரத்தம்-அட்டா
           
கசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்
   
அடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்
           
அடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை!
   
படித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்
            
பழிவந்து சேருமய்ய மூட்டை யாரே!
                      
                           -  புலவர் சா இராமாநுசம்

நன்றி: புலவர் கவிதைகள்


(PICTURES THANKS TO GOOGLE)