Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Friday, 5 January 2018

நடிகர் ரஜினியின் ஆன்மீக அரசியல்



இப்போது தமிழக அரசியலில் பெரிதும் பேசப்படும் விஷயம் நடிகர் ரஜினியின் ‘ஆன்மீக அரசியல்’ பற்றித்தான்.

…. …. …. …. போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு அருகே செய்தியாளர்களை சந்தித்த ரஜினிஆன்மீக அரசியல் என்பது உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, நாணயமான அரசியல். இதில் எந்த விதமான சாதி, மத சார்பும் இல்லை. இது அறம் சார்ந்த அரசியல். இது ஆத்மாவுடன் தொடர்புடைய அரசியல்எனக் கூறினார். மேலும் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பின்னால் அறிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார். ( தகவல் - நன்றி http://tamil.webdunia.com வியாழன், 4 ஜனவரி 2018 )

அண்ணாயிசம்

நடிகர் ரஜினியின் விளக்கத்தைப் படித்ததும் எனக்கு எம்ஜிஆர்தான் நினைவில் வந்தார். எம்ஜிஆரும் இப்படித்தான் கட்சி தொடங்கிய புதிதில், ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன’ என்று கேட்டதற்கு, ‘அண்ணாயிசம்’ என்று ஒன்றைச் சொல்லி அதற்கு விளக்கமும் கொடுத்தார். ‘காந்தியிசம், கம்யூனிசம், கேபிடலிசம் ஆகிய மூன்று கொள்கை தத்துவங்களில் உள்ள நல்ல அம்சங்களை திரட்டினால் என்ன கிடைக்குமோ அதுதான் அண்ணாயிசம்’ – கேட்டவர்களுக்கு தலை சுற்றியது. யாரும் எதிர்த்துப் பேசவில்லை. சொன்னவர் எம்ஜிஆர் ஆயிற்றே..

இதேபோல ஒருமுறை, மக்கட் தொகை கணக்கெடுப்பாளர், அவரிடம் ‘நீங்கள் என்ன மதம்?’ என்று கேட்டதற்கு, ‘திராவிட மதம்’ என்று கணக்கெடுப்பில் இல்லாத ஒன்றைக் கூறி அசத்தினார்.

கட்சியும் படக் கம்பெனியும்

எம்ஜிஆர் தனது கட்சிக் கொள்கைகளில் காந்தியிசம், கம்யூனிசம், கேபிடலிசம் என்று சொன்னாலும், இதில் ஒன்றைக்கூட அவர் கடைபிடிக்கவில்லை என்பதே உண்மை. அவர் தனது கட்சியை ஒரு சினிமா படக் கம்பெனி போலவே நடத்தினார். அங்கு எல்லாமே எம்.ஜி.ஆர் தான். அங்கு மூலதனம் எம்ஜிஆர் என்ற பிம்பம்தான்; கூடவே கருணாநிதி எதிர்ப்பு அரசியல். எம்ஜிஆருக்குப் பின் வந்த ஜெயலலிதாவும் இதே அரசியலைத்தான் கடை பிடித்தார். எம்ஜிஆர் காலத்தில் யாரும் அவரோடு  பேசவேண்டும் என்று நினைத்தால் எப்படியும் பேசி விடலாம்; ஆனால் அம்மையார் ஆட்சியில் எல்லாமே ‘மாட்சிமை தங்கிய மகாராணியின் பெயரால்’ நடத்தப் பட்டதால் சந்தித்து பேசுவது என்பது அவ்வளவு எளிதல்ல. 
   
மடாலய அரசியல்

உலக வரலாற்றை சற்று உற்று நோக்கினால் ஒவ்வொரு சாம்ராஜ்ஜியத்திற்கும்  பின்னால் ஆன்மீகமும் அரசியலும் பின்னிப் பிணைந்து இருக்கக் காணலாம். ஐரோப்பியாவில் நடந்த புனித சிலுவைப் போர்கள் தொடங்கி, இன்று உலகம் முழுக்க பேசப்படும் மத தீவிரவாதம் வரை எல்லாமே ஆன்மீகம் (மதம்) சம்பந்தமான அரசியல்தான். 

இங்கிலாந்து மன்னர் ஆட்சியை எடுத்துக் கொண்டால், மன்னர் கிறிஸ்தவத்தில் எந்த பிரிவைச் சார்ந்தவராக ( கத்தோலிக் அல்லது புரோட்டஸ்டாண்ட் ) இருந்தாரோ அந்த பிரிவின் மதகுரு ஆட்சியாளரிடம் செல்வாக்கு உள்ளவராக விளங்கினார். ஐரோப்பிய நாடுகள். வரலாறு பலவும் இப்படித்தான்.முஸ்லிம் நாடுகளிலும் இதே பிரிவு அரசியல்தான்.

தமிழ்நாட்டிலும் ஆன்மீக அரசியல் நடந்தது. அரசன் எந்த மதமோ அந்த மதம் தழைத்தது. அந்தந்த மதங்களின் செல்வாக்கின் போது பிறருடைய வழிபாட்டுத் தலங்கள், இலக்கியச் சுவடிகள் அழிக்கப் பட்டன.. தமிழ் தமிழன் என்று சொன்னாலும் இவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. பொதுவில் இந்து என்றாலும், இங்கு இருக்கும் ஒவ்வொரு ஜாதியும் ஒரு மதம். 

ரஜினியின் அரசியல்

ரஜினி பொத்தாம் பொதுவாக நான் அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்றால் பரவாயில்லை. ஆனால் அவரோ தனது பிரவேசம் ஆன்மீக அரசியல் என்கிறார். ஆன்மீகம் என்றால் இந்து ஆன்மீகமா, ஜெயின் அல்லது பவுத்த ஆன்மீகமா, இஸ்லாமிய ஆன்மீகமா அல்லது கிறிஸ்தவ ஆன்மீகமா என்று தெரியவில்லை. இல்லை எம்ஜிஆரின் அண்ணாயிசம் போல எல்லா மதமும் கலந்த கலவையா என்றும் தெரியவில்லை. இவரும் வழக்கம் போல எம்ஜிஆர் – ஜெயலலிதா பாணியில் படக் கம்பெனி அரசியல் செய்தாலும். ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

ஜாதியும், பணமும் மேலோங்கி உள்ள தமிழக அரசியலில், நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது, யாருக்காக என்பதனை அவர் யோசிக்க வேண்டும். மக்களிடையே வரவேற்பும் எதிர் பார்த்த அளவில் இல்லை. என்னைப் போன்ற நடிகர் ரஜினி மீது மதிப்பு வைத்து இருக்கும் பலரும் விரும்புவது, ரஜினிக்கு அரசியல் தேவை இல்லை என்பதுதான்.