Saturday 24 November 2018

புத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018


நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சு மைய  வளாகம் - Harshamitra Oncology Pvt Ltd - A Radiation Unit ) புத்த பௌர்ணமி விழா நடைபெற்றது. எனக்கும் WhatsApp இல் அழைப்பு தந்து இருந்தார்கள். ஒரு பார்வையாளனாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில. 
 






நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டாக்டர் ராஜ்வர்தனன் &  டாக்டர் சசிப்பிரியா குடும்பத்தினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.


Sunday 2 September 2018

செப்டம்பரே வா – COME SEPTEMBER


வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மாதாந்திர மின்சாரம் நிறுத்தம் என்பதால் எழுத இயலாமல் போயிற்று.

கிராமபோன் இசை

அப்போது நான், திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் ( 1965 – 1971)  படித்துக் கொண்டு இருந்தேன். அருகில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றில், படிக்கா விட்டாலும், எனது கல்லூரிப் படிப்பு முடியும் வரை, விடுமுறை தினங்களில், அந்த கல்வி வளாகத்தில் இருந்த ஏதேனும் ஒரு மரத்தடியிலோ அல்லது ஸ்டேடியத்திலோ, நிழலில் அமர்ந்து புத்தகங்களைப் படிப்பது வழக்கம். அங்கு வேலை பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் நாங்கள் அப்போது வசித்த  பகுதிக்கு (சிந்தாமணி) அருகிலேயே இருந்ததாலும், அப்பாவுக்கு பழக்கமானவர்கள் என்பதாலும் என்னை ஒன்றும் சொல்வதில்லை. அந்த ஸ்டேடியம் அருகில் அந்த கல்லூரியின் நியூ ஹாஸ்டல். பெரும்பாலும் இந்த ஹாஸ்டலில் சாப்பாட்டு வேளையில் அல்லது சிறப்பு நாட்களில், ஏதேனும் ஒரு இசையை மெல்லிதாக ரசிக்கும்படி வைப்பார்கள். பெரும்பாலும் அங்கே அடிக்கடி ஒலிக்கும் இசை, ‘Come September’ என்ற ஆங்கிலப் படத்தில் வரும் மெல்லிசை ஆகும். ( MUSIC THEME FROM THE MOVIE COME SEPTEMBER )  அறுபதுகளில் இந்த படத்தின் இசையை அன்றைய பள்ளி ஆண்டு விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி ஒலி பரப்புவார்கள். குறிப்பாக ‘Musical Chair’ போட்டிகளில் இந்த இசைதான் பிரதானம். அப்போதெல்லாம் இந்த செல்போன் ஆடியோ வீடியோ சமாச்சாரமெல்லாம் கிடையாது. கிராமபோன் இசைத்தட்டுதான். ஐம்பது வயதைக் கடந்த, திரையிசை ரசிகர்கர்கள்  பலருக்கும் இந்த பாடல், அவர்களது மலரும் நினைவுகளை மீட்டும். நான் கேட்டு ரசித்த அந்த பாடலைக் கேட்டு ரசிக்க கீழே உள்ள திரையை சொடுக்குங்கள். வீடியோ நன்றி  YOUTUBE


COME SEPTEMBER (1961)

இதில் வேடிக்கை என்னவென்றால், அப்போது இந்த படம் பற்றிய விவரமெல்லாம் எனக்கு தெரியாது. ஏனெனில் படம் வெளி வந்த 1961 ஆம் ஆண்டு நான் முதலாம் வகுப்பு மாணவன். பின்னாளில் தான் விவரம் தெரியும்.  COME SEPTEMBER என்ற இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை (Comedy) படமாகும். கதை என்னவென்றால், அமெரிக்க தொழிலதிபர் ராபர்ட் அவர்கள், வருடா வருடம் செப்டம்பர் மாதம், இத்தாலியில் உள்ள தனக்கு சொந்தமான சொகுசு மாளிகையில் பொழுது போக்குவது வழக்கம். இந்த பெரிய மாளிகையை  நிர்வகிக்க ஒரு மானேஜர்.  ஒருமுறை ராபர்ட் திடீரென்று, செப்டம்பருக்கு முன்னதாகவே முன்னறிவிப்பின்றி சென்று விடுகிறார். அப்போதுதான் அந்த மேனேஜர், தனது பண்ணை வீட்டை, தான் வராத காலத்தில் விடுதியாக மாற்றி வாடகைக்கு விடும் விஷயம் தெரிய வருகிறது. அப்போது நடக்கும் கூத்துகள்தான் இந்த படத்தின் கதை.

தமிழில் டப்பிங் 
 
ஆங்கிலத்தில் பிரபலமான இந்த படத்தின் திரைக்கதையை மட்டும் மையமாக வைத்து டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்க, ஏ.வி.எம் தயாரிப்பில் வந்த வண்ணத் திரைப்படம் ‘அன்பே வா’. கதாநாயகன் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள். ஜோடி சரோஜாதேவி. சிம்லாவில் உள்ள மலை பங்களாவின் மானேஜர் மற்றும் பட்லராக நடிகர் நாகேஷ். இவருக்கு ஜோடி மனோரமா. படம் வெளிவந்த ஆண்டு 1966. எம்..ஜி.ஆர் திரையுலகில் நடித்துக் கொண்டே தீவிர அரசியலில் இருந்த நேரம். படமும் வெற்றிப் படம்.

படம் மேலே - நன்றி Google

1961 இல் வெளிவந்த COME SEPTEMBER படத்தின் பாடலின் இசையை அப்படியே தழுவி வந்த திரைப்படப் பாடல் ‘ வந்தால் என்னோடு என்னோடு இங்கே வா தென்றலே’ – படம்: நான் (1967) – பாடல் காட்சியில் ஆடிப் பாடி நடித்து இருப்பவர் ஜெயலலிதா – பாடல் கவிஞர் கண்ணதாசன் – இசை T.K. ராமமூர்த்தி )


பாடலைக் கண்டு கேட்டு ரசித்திட கீழே உள்ள திரையை சொடுக்குங்கள். வீடியோ நன்றி  YOUTUBE