Monday 30 December 2013

வாக்கிங் ஸ்டிக் மனிதர்கள்என்னுடைய அப்பா திருச்சி பொன்மலை ரெயில்வேயில் DY CONTROLLER OF STORES ஆக பணிபுரிந்தவர். சுமார் இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது 60 ஆவது வயதில் பணி ஓய்வு பெற்றார். அப்போதெல்லாம் திருச்சியில் ரெயில்வே ஊழியர்கள், சக ஊழியர் பணி ஓய்வு பெறும் நாளன்று அவருக்கு ஒரு வாக்கிங் ஸ்டிக்கையும் பரிசாகத் தருவார்கள். என்னுடைய அப்பாவிற்கும் அதே போல அவரோடு பணிபுரிந்த ஊழியர்கள் வாக்கிங் ஸ்டிக்கை நினவுப்பரிசுகளில் ஒன்றாகத் தந்தார்கள். அவர் அந்த வாக்கிங் ஸ்டிக்கை வாங்கிய நாளிலிருந்து ஒருநாள் கூடப் பயன்படுத்தியது கிடையாது. இப்போது அவருக்கு சர்டிபிகேட் பிரகாரம் வயது 88 (கிராமத்து உறவினர்கள் கணக்குப்படி அவருக்கு 90 வரும் ) இன்றும் அவர் எந்த வாக்கிங் ஸ்டிக்கையும்  பயன்படுத்தாமல் நன்றாகவே இருக்கிறார்.

வாக்கிங் ஸ்டிக:

நான் சிறுவனாக இருந்தபோது பல முதியவர்கள் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நகரத் தெருக்களில் நடந்து போவதைப் பார்த்து இருக்கிறேன். திருச்சி செயிண்ட் லூர்து மாதா ஆலயத்தில் ஒரு வெளிநாட்டு பாதிரியார் இருந்தார். நல்ல உயரம். அவர் கையில் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன்தான் நடப்பார். அதேபோல ஓய்வு பெற்ற பல அரசு ஊழியர்கள் மின்சார பில்லிற்கு பணம் கட்ட வரும்போதும், ஓய்வூதியம் பெற தெப்பக்குளம் போஸ்டாபிசிற்கு வரும்போதும், டவுன்ஹால் தாலுகா அலுவலகம் வரும்போதும் வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியபடி வருவதைப் பார்த்து இருக்கிறேன். கிராமங்களில் வாக்கிங் ஸ்டிக்கிற்குப் பதிலாக கைத்தடி வைத்து இருப்பார்கள். அவ்வையார் போன்று கோலூன்றி  நடப்பார்கள். அறுபது வயது ஆகிவிட்டாலே வயதாகி விட்டது என்ற எண்ணம் அப்போது மக்களிடம் பரவலாக இருந்தது.

பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி - சீதாப்பாட்டி கதைகளில் வரும் அப்புசாமி தாத்தா வாக்கிங் ஸ்டிக்கோடு வரும் கேரக்டர். அப்போதைய பல அரசியல் தலைவர்கள் பலரது படங்களை வாக்கிங் ஸ்டிக்கோடு காணலாம்.

வாக்கிங் ஸ்டிக் எங்கே?

முன்புபோல் இப்போது வாக்கிங் ஸ்டிக்கோடு வரும்  மனிதர்களை அதிகம் காண முடிவதில்லை. கிராமத்திலும் அவ்வாறே. தடியூன்றிய மனிதர்களைக் காண்பது அரிது. அறுபது வயதானாலும், எழுபது வயதானலும் எல்லோரும் நன்றாகவே நடக்கிறார்கள். முதுமை என்ற உணர்வே வருவது இல்லை.

சராசரி வயது அதிகரிப்பு: 

அண்மையில் நான்    திருக்கடையூர்: அறுபதாம் கல்யாணம்  http://tthamizhelango.blogspot.com/2013/12/blog-post_28.html ) என்று ஒரு பதிவு எழுதினேன். அந்தப் பதிவினில்  

// திருக்கடையூரில் கோயில் வாசலில் நிறைய வேன்கள், டாக்சிகள். வெளியூரிலிருந்து வந்தவர்கள். மார்கழி என்பதால் நிறைய அய்யப்ப பகதர்கள். அவர்களுக்கு இடையில் மாலையும் கழுத்துமாய் அறுபதாம் கல்யாண மணமக்கள். நிறையபேர் அறுபது ஆனவர்களாகவே தெரியவில்லை.( காரணம் நவீன மருத்துவம் மற்றும் உடல் - உடை அலங்காரம் போன்றவை ) //

என்று எழுதினேன். அதற்கு கருத்துரை தந்த மூத்த வலைப்பதிவர் நினைத்துப் பார்க்கிறேன்திரு வே நடனசபாபதி அய்யா அவர்கள்

// எனக்குத்தெரிந்து கடந்த 25 ஆண்டுகளாகத்தான் எல்லோரும் திருக்கடையூர் சென்று அறுபதாம் கல்யாணத்தை நடத்துகிறார்கள். அதற்கு முன்பு அவரவர்கள் வீட்டிலேயே நடத்துவார்கள். மேலும் அறுபதாம் ஆண்டில் கல்யாணம் நடத்துவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அப்போதெல்லாம் சராசரி ஆயுட்காலம் 55 தான் என்பதால் 60 வயது தாண்டியவர்கள் குறைவு என்பதால் அந்த வயதை அடைந்தவர்கள் அந்த நிகழ்வை திருமணவிழாவாக கொண்டாடினார்கள்.//

என்று சராசரி வயதைப் பற்றி சொன்னார். அவர் சொன்னதுபோல் இப்போது ஒரு இந்தியனின் சராசரி வயது உயர்ந்து உள்ளது. இந்தியர்களின் சராசரி ஆயுள் 65.8 வயது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நவீன மருத்துவ முறைகள் வந்து விட்டபடியினால் அறுபது அல்லது எழுபது வயதிலும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. யாரும் வாக்கிங் ஸ்டிக்கை நாடுவதில்லை. கிராமங்களில் கூட தடியூன்றிய முதியவர்களைக் காண முடிவதில்லை. நலவாழ்வுத் துறையின் வளர்ச்சியும், ஊட்டச்சத்து உணவுகளும் இந்தியர்களின் ஆயுள் அதிகரிக்க காரணம் என்று சொல்லுகிறார்கள்.

நோயற்ற வாழ்வே: 

எனவே இன்றைய நவீன யுகத்தில் வயதானாலும், மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். நோய்களைக் கட்டுப்படுத்தலாம். எனபதனைக் கருத்தில் கொள்ளுங்கள். அனைவரும் ஆரோக்கிய வழியினை நாடுங்கள்


HEALTH  IS  WEALTH  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

                                                                                                                                                                        

Saturday 28 December 2013

திருக்கடையூர்: அறுபதாம் கல்யாணம்
                   "தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
                    
மனம் தரும் தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
                   
இனம் தரும்; நல்லனஎல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
                   
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே"

                                                                                                               - அபிராமி அந்தாதி (69)

சென்ற புதன்கிழமை சென்னையிருந்து உறவினரிடமிருந்துவியாழக் கிழமை காலை திருக்கடையூரில் அறுபதாம் கல்யாணம். கோயிலுக்கு வந்து விடுங்கள் “ என்று செய்தி வந்தது. சில காரணங்களினால், இந்த கல்யாணத்தை அவர்கள் ஒத்தி வைத்து இருந்தார்கள். இப்போது அவர்கள் ஏதோ சாத்திரத்தை முன்னிட்டு, உடனே நடத்த ஏற்பாடு செய்து விட்டார்கள்.

இந்து மதத்தில் தம்பதியரில் ஆணுக்கு அறுபது வயது ஆகும்போது “அறுபதாம் கல்யாணம் என்ற ஒரு சடங்கைச் செய்கிறார்கள். இந்த கல்யாணத்தை திருக்கடையூரில் செய்வதை விஷேசமாக நினைக்கிறார்கள். திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் உள்ளது. இந்த கோயிலின் இறைவன் பெயர்: அமிர்தகடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர். அம்பாள் பெயர்: அபிராமி

திருக்கடையூர் பயணம்:

நேற்று முந்தினம் (26.12.2013) வியாழக் கிழமை அதிகாலை 2 மணிக்கே நானும் எனது மனைவியும் எழுந்து காலைக் கடன்கள், குளியல் முடித்து விட்டு, திருச்சி கே கே நகரில்  3 மணிக்கு ஆட்டோ பிடித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் சென்றோம். அங்கிருந்து தஞ்சாவூர் சென்றோம். மார்கழி என்பதால் சரியான குளிர். அங்கு இருவரும் சூடாக டீ சாப்பிட்டோம். பின்னர் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் பிறகு கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை என்று பஸ்களில் மாறி மாறி சென்றோம். மயிலாடுதுறைக்கு பழைய பஸ் நிலையத்திற்கு நாங்கள் சென்றபோது காலை ஆறு மணி. திருக்கடையூரில் ஹோட்டல்களில் டிபன் எப்படி இருக்குமோ என்பதால் மயிலாடுதுறையில் புது பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே மாரியம்மன் கோயிலுக்கு அருகில் இருந்த ஸ்ரீ ஆரிய பவன் ஓட்டலில் டிபன் சாப்பிட்டோம். அங்கிருந்து  நடைதூரம்தான் புது பஸ் நிலையம். அங்கிருந்து பஸ்சில் புறப்பட்டு அரைமணி நேரத்தில் திருக்கடையூர் வந்தோம்.

கல்யாணமாம் கல்யாணம்
:
திருக்கடையூரில் கோயில் வாசலில் நிறைய வேன்கள், டாக்சிகள். வெளியூரிலிருந்து வந்தவர்கள். மார்கழி என்பதால் நிறைய அய்யப்ப பக்தர்கள். அவர்களுக்கு இடையில் மாலையும் கழுத்துமாய் அறுபதாம் கல்யாண மணமக்கள். நிறையபேர் அறுபது ஆனவர்களாகவே தெரியவில்லை.( காரணம் நவீன மருத்துவம் மற்றும் உடல் - உடை அலங்காரம் போன்றவை ) கோயில் வாசலில் எங்கள் உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்று செல்போனில் தெரிந்து கொண்டு கோயில் நுழைவு மண்டபம் சென்றோம். அவர்கள் புறப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம். மணமக்களுக்கு மாமன்கள் மாலைகள் சாற்றினர்.

முன்னரே செய்த ஏற்பாட்டின்படி ஒரு குருக்கள் வழிநடத்திச் சென்றார்.  மண்டபம் தாண்டி உள்ளே சென்றோம்.
 
படம் (மேலே) IMG 2048 கோயிலின் உள்ளே உள்ள தேவஸ்தான அலுவலகம் 

படம் (மேலே) IMG 2032 கோயிலின் உள்ளே கொடிக்கம்பம்.


படம் (மேலே) IMG 2047 கோயிலின் உள்ளே உள்ள நந்திபடம் (மேலே) IMG 2033 கோயிலின் இரண்டாவது வாயில்

அங்குள்ள கோபுரவாசலில் பசுமாடு ஒன்றை ஒருவர் ( மாட்டுக்கு சொந்தக்காரர் ) பிடித்துக் கொண்டு இருந்தார். அங்கு வரும் மணமக்கள் ஒவ்வொருவரும் அந்த மாட்டிற்கு கோமாதாபூஜை செய்து வாழைப் பழம் கொடுக்கின்றனர். மாட்டின் சொந்தக்காரருக்கு ஒரு தொகை. ( கஜ பூஜையும் செய்வார்கள். நாங்கள் சென்றபோது  கோயில் யானை இல்லை. அது இறந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாளில் புதுயானை வந்துவிடும் என்றார்கள்) பின்னர் அங்கிருந்து உள்ளே அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். 


படம் (மேலே) IMG 2036 கோயிலில் உள்ள யாளி தூண்கள்


படம் (மேலே) IMG 2039 கோயிலில் உள்ள ஒரு சிலை


நான் கோயிலை கேமராவில் படம் பிடிக்கும் அவசரத்தில் அவர்களை தொடர்ந்து செல்லாததால் அவர்களை விட்டு விட்டேன். பின்னர் அந்த கும்பலில் அவர்களைக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவர்களை கள்ளவாரண பிள்ளையார் சன்னதியில் கண்டேன். சன்னதியில் செல்போன், கேமரா அனுமதி இல்லை. பின்னர் அங்கிருந்து அபிராமி அம்பாள் சன்னதி. சன்னதியின் வெளியே வந்தோம். நான்கு சுற்றுப் பிரகார மண்டபத்தில் ஆங்காங்கே திருமணம் நடத்த தயாராக பூஜைப் பொருட்களோடு  ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு, அங்கங்கே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. ஒரே புகைமயம். ஒரு திருமணம் நடைபெற்று முடிந்ததும் அடுத்த தம்பதிக்கு அந்த இடத்தை சினிமா செட்டிங்ஸ் போல ஒழுங்குபடுத்துகிறார்கள்.
 

படம் (மேலே) IMG 2049 அபிராமி அம்பாள் சன்னதி வாயில்

 
படம் (மேலே) IMG 2044 தயார்நிலையில் பூஜைப் பொருட்கள்

                 படம் (மேலே) IMG 2068 ஒரு காட்சி

எங்கள் உறவினரின் அறுபதாம் கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. மணமக்கள் திருக்கடையூரில் அணிந்த மாலையை மார்க்கண்டேயர் கோயிலில்தான் கழட்ட வேண்டுமாம். எனவே அங்கிருந்து திருமணல்மேடு மார்க்கண்டேயர் கோயில் சென்றோம்.

படம் (மேலே) IMG 2091 அறிவிப்பு பலகை.1


படம் (மேலே) IMG 2092 அறிவிப்பு பலகை.2


படம் (மேலே) IMG 2093 மார்க்கண்டேயர் கோயில் நுழைவு கோபுரம்

பின்னர் அங்கிருந்து கிளம்பி தென்பாதி சீர்காழியில் உள்ள வசந்தபவனில் சாப்பாடு. சென்னை உறவினர்கள் அவர்கள் வேனில் செல்ல, நாங்கள் இருவரும் சீர்காழி கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி என்று பஸ்களில் மாறி மாறி ஊர் வந்து சேர்ந்தோம்.  


தலபுராணம்:

திருக்கடையூர் என்ற இந்த திருத்தலத்தோடு இரண்டு புராணக்கதைகள் உள்ளன. எல்லோரும் அறிந்ததுதான்.

 
படம் (மேலே) IMG 2025 கோயிலின் இரண்டாவது வாயில் கோபுரம் 


படம் (மேலே) மேற்படி கோபுரம்  மேல் உள்ள திருப்பாற்கடல் கடையும் காட்சி சிற்பங்கள்


படம் (மேலே) மேற்படி கோபுரம்  மேல் உள்ள சம்பந்தர் பல்லக்கில் செல்லும் காட்சி சிற்பங்கள்

அமிர்தம் கடைந்த கதை: அமுதம் எடுப்பதற்காக அசுரர்களும் தேவர்களும் , வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைகின்றனர். ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டிய பிள்ளையார் வணக்கத்தை மறந்து விடுகின்றனர். எனவே அமுதம் எடுத்து வைக்கப்பட்ட குடத்தை பிள்ளையார் கடவூர் என்ற இந்த திருக்கடையூரில்  ஒளித்து வைக்கிறார். தேவர்கள் பிள்ளையாரை வணங்கி அமுதம் உண்ணுகின்றனர். அந்த குடம் லிங்கமாக மாறி விடுகிறது. எனவே இறைவன் பெயர் அமிர்தகடேஸ்வரர் (அமிர்தம் + கடம் (குடம் )+ ஈஸ்வரர்)

மார்க்கண்டேயன் கதை: திருக்கடையூருக்கு அருகில் உள்ள மிருகண்டு என்பவர்க்கு குழந்தையில்லை. அவர் சிவனை வேண்ட, இறைவன் அருளால் அவர் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அவனுக்கு மார்க்கண்டேயன் என்று பெயர். அவனது விதிப்படி அவன் பதினாறு வயது வரைதாம் வாழ்வான். இதனால் ஒவ்வொரு நாளும் சிவாலயங்கள் சென்று வழிபட்டு வந்தான்.  மார்க்கண்டேயன் ஆயுள் முடிந்ததும் எமன் அவனது உயிரை எடுக்க பாசக் கயிற்றை வீசுகிறான். அப்போது மார்க்கண்டேயன் திருக்கடையூர் ஈசனுக்கு பூசை செய்து கொண்டு இருக்கிறான். பாசக்கயிறு ஈசன் மீதும் விழுகிறது. இதனால் வெகுண்ட சிவன் எமனை காலால் எட்டி உதைக்க அவன் மார்க்கண்டேயனை விட்டு ஓடுகிறான். இறைவன் என்றும் பதினாறு வயதினை மார்க்கண்டேயனுக்கு தருகிறார்.  திருக்கடையூர் அருகிலுள்ள திரு மணல்மேல் குடியில் மார்க்கண்டேயருக்கு கோயில் உண்டு.

இந்த இரண்டு கதைகளிலும் ஆயுள்பலம்  சம்பந்தப்பட்டு இருப்பதால், இந்த கோவிலில் அறுபதாம் கல்யாணம் செய்கிறார்கள்.

சில செய்திகள்:

இந்த கோயிலில் திருமணம் செய்ய வருபவர்கள் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை.

கோயிலில் திருமண நிகழ்ச்சிகளை கேமரா, வீடியோ எடுக்கலாம். இறைவன் சன்னதியில் மட்டும் கூடாது.

கோயிலுக்கு வெளியே தங்குவதற்கு நிறைய இடங்கள் உள்ளன. சுத்தமான கட்டணக் கழிப்பிடங்கள் உள்ளன.

இங்கு எல்லாமே வியாபாரம்தான். எனவே இதற்கென்று இருக்கும் புரோக்கர்களிடம் பணத்தைக் கொடுத்து விட்டால் எல்லாமே வரிசைக் கிரமமாக நடந்து விடும். அலைய வேண்டியதில்லை.

பெரும்பாலும் காலை முகூர்த்தங்கள்தான். சூரிய உதயம் முதல் பகல் 12 மணி வரை வெளியூரிலிருந்து வரும் கல்யாண கும்பல் அதிகமாக இருப்பதால்,  கோயிலில் உள்ள கடவுள்களை சரியாக தரிசனம் செய்ய முடிவதில்லை. பிற்பகல் மற்றும் மாலை வேளை கோயிலில் கும்பலும், இரைச்சலும் குறைவு. நிதானமாக வழிபடலாம்.


மூத்த வலைப்பதிவர் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் அறுபதாம் கல்யாணம் பற்றி தனது பதிவு ஒன்றில் தரும் தகவல்கள்.


அறுபதாம் கல்யாணம் என்று சொல்லப்படும் சஷ்டியப்த பூர்த்திபோன்ற ஒருசில விழாக்களைப்பற்றி அடியேன் கேள்விப்பட்டுள்ள ஒருசில சிறப்புச் செய்திகளைத் தங்கள் தகவலுக்காக இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:1] 59 வயதுகள் பூர்த்தியாகி 60ல் அடியெடுத்து வைக்கும் நாளில் செய்துகொள்வது “உக்ரஹ சாந்தி” என்றதொரு ஹோமம். 

அடுத்த ஓராண்டு அரோக்யத்துடன் இருந்து சஷ்டியப்த பூர்த்தி நல்லபடியாக நடக்க எண்ணி, சிறப்பு வழிபாடுகளுடன் வேண்டிக்கொண்டு செய்யும் ஓர் விசேஷ ஹோமம் இது.

பிறந்து 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் [பிறந்த அதே தமிழ் வருஷம், அதே தமிழ் மாதம், அதே ஜன்ம நக்ஷத்திரம் சேரும் நன்னாளில்] செய்துகொள்ளும் விசேஷ பூஜைகளும் ஹோமங்களுமேசஷ்டியப்த பூர்த்தி எனப்படுவது.  

ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் எந்தெந்த கிரஹங்கள் எந்தெந்த ராசியில் உள்ளனவோ, அதே ராசிகளில் அதே கிரஹங்கள் மீண்டும் வந்து அமர்வது என்பது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழக்கூடிய அபூர்வமானதோர் நிகழ்வாகும். 

இதுபோன்ற அபூர்வமான கிரஹ அமைப்புகள் தான் சஷ்டியப்த பூர்த்தி நன்னாளின் தனிச்சிறப்பாகும். 

பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில், ஒரே ஒருமுறை மட்டும் தான் இத்தகைய அபூர்வ நிகழ்வினை மீண்டும் சந்திப்பதற்க்கான வாய்ப்பு அமையும். [அதுவும் பிராப்தம் இருந்தால் மட்டுமே] 

{குழந்தை பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படும் ஜாதகத்தின் இராசிக்கட்டங்களில் இந்த கிரஹங்கள் எந்தெந்த ராசியில் அன்று அமைந்திருந்தன என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதே கிரஹங்கள் மீண்டும் அதே ராசிகளில் அப்படியே அமர்ந்திருப்பது, இந்த சஷ்டியப்தபூர்த்தி என்று கொண்டாடிடும் நாளில் மட்டுமே தான். }

மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்வினைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற விரும்பினால், 120 ஆண்டுகளுக்கு மேல் அவர் இந்த பூமியில் வாழ வேண்டியிருக்கும். ;)))))

(நன்றி!:வை கோபாலகிருஷ்ணன் http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html) 

 

Monday 23 December 2013

எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ...
நமக்குத் தெரிந்த ஒருவரது பெயரைச் சொன்னாலோ அல்லது ஒருவரைப் பற்றிய நினைவு வந்தாலோ நமக்கென்று பழக்கமான அவரது முகம் நினைவினில் வந்து நிழலாடும். எனக்கு எம்ஜிஆர் என்றால் ... ... நினைவுக்கு வருவது நான் ஆணையிட்டால் என்று சவுக்கை சுழற்றும் “எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜிஆர் தான். அந்தப் படம் வந்தபோது (1965) நான் பள்ளி மாணவன். தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாது. எம்ஜிஆர் ரசிகன். அவ்வளவுதான். அந்த படத்தை பார்த்த பின்னர் , கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டு மாட்டுக் கொட்டகையில் கயிற்றை சவுக்குபோல் முறுக்கி நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் “ என்று பாடிய சந்தோஷமான நாட்கள் இனி வராது.

எனது பள்ளிப் பருவத்தில் நான் எம்ஜிஆர் ரசிகன். அதற்காக அவரது படங்களே கதி என்று இருந்தவன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. படிப்பில் கோட்டை விட்டதில்லை. எம்ஜிஆர் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். இருந்தாலும் எனக்கு எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றே நான் நினைத்தேன். நான் மட்டுமல்ல நிறையபேர் அப்படித்தான் நினைத்தார்கள்.. அப்பொழுதெல்லாம் சினிமா என்றால் நைட்ஷோதான். எம்ஜிஆர் படங்கள் தவிர வேறு பார்ப்பதில்லை. அப்புறம் கல்லூரிக்குச் சென்ற பின்னர்தான் மற்றவர்கள் நடித்த  படங்களைப் பார்த்தேன்.

எங்கள் அம்மாவின் கிராமத்திலும் சரி, அப்பாவின் கிராமத்திலும் சரி உறவினர்கள் அனைவருமே அப்போது திமுக அனுதாபிகள். இயல்பாகவே நானும் திமுக அனுதாபியாகப் போனேன். ( இப்போது எந்த கட்சி அனுதாபியும் கிடையாது ) கூடவே எம்ஜிஆர் படங்களை காணும் ஆர்வம்.. நாங்கள் குடியிருந்த சிந்தாமணி பகுதியில் திராவிடப் பண்ணைஎன்று புத்தக பதிப்பாளர் வீடும், பதிப்பகமும் இருந்தது. இதன் உரிமையாளர் பண்ணை முத்துக் கிருஷ்ணன். அறிஞர் அண்ணா புத்தகங்களை வெளியிட்டதற்காக அபராதமும் சிறைத் தண்டனையும் பெற்றவர். அவருடன் எனது அப்பாவிற்கும், சித்தப்பாவிற்கும் நல்ல பழக்கம். அவருடைய வீட்டிற்கு திமுகவின் அப்போதைய முக்கிய தலைவர்கள் வருவார்கள். அப்போது அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன், மதியழகன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோரை நேரில் பார்த்து இருக்கிறேன். எம்ஜிஆர் இங்கு வந்ததில்லை. அவர் திருச்சி வந்தால் ஆஸ்பி ஹோட்டலுக்கு சென்று விடுவார். எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆசை இருந்தாலும் சந்தர்ப்பம் அமையவில்லை

அறிஞர் அண்ணா மறைந்த பிறகு கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது திருச்சியில் 1970 இல் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ( இப்போது அண்ணா ஸ்டேடியம் ) நடந்தது.  மாநில சுயாட்சி கோஷம் எழுப்பப்பட்டது அங்குதான். அப்போது திருச்சியில் நடக்கும் திமுகவின் எந்த நிகழ்ச்சியானாலும்,  சிந்தாமணியில் உள்ள் அண்ணா சிலையிலிருந்துதான் தொடங்குவார்கள். அப்படியே இந்த மாநாட்டிற்கும் இந்த அண்ணா சிலையிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. மாலைவேளை என்பதால் அந்தபகுதி முழுவதும் விளக்குகள் மயம். ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் தேர் போன்று அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் தலைவர்கள். எம்ஜிஆர் நடுநாயகமாக இருந்தார். கூட்டம் எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் அந்த ரதத்துடனேயே சென்றது. அவர்களில் நானும் ஒருவன். அப்போதுதான் எம்ஜிஆரை முதன் முதல் பார்த்தேன். கொஞ்சதூரம் சென்றுவிட்டு நேரில் பார்த்த திருப்தியில் பாதியிலேயே வந்துவிட்டேன்.

அடுத்து அந்த மாநாட்டிற்கு நானும் சென்று இருந்தேன். மாநாட்டு மேடையில் அப்போது ஒருவர் முழங்கிக் கொண்டு இருந்தார். திடீரென்று மாநாட்டு பந்தல் முன்பு ஒரே சலசலப்பு. மைக் முன்பு பேசிக் கொண்டு இருந்தவர் நிறுத்தி விட்டார். எம்ஜிஆர் எம்ஜிஆர் ‘ என்று கத்தினார்கள். கூடவே வாழ்க, வாழ்க என்று கோஷம். அப்போதுதான் மேடைக்கு வந்தார் எம்ஜிஆர். இதுமாதிரி கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று மேடைக்கு வருவதுதான் எம்ஜிஆர் ஸ்டைல். கூடவே ஜெயலலிதா. மாநாட்டில் நடக்கவிருக்கும் காவிரி தந்த கலைச்செல்வி நாடகத்திற்காக வந்து இருந்தார். அதன்பிறகு கட்சியில் எவ்வளவோ மாற்றங்கள். அரசியலில் நண்பர்களிடையே பூசல். அதிமுக பிறந்தது. எம்ஜிஆர் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சிக் கட்டிலுக்கு வரவே முடியவில்லை. எம்ஜிஆர் ரசிகனாக இருந்தாலும் நான் அவர் கட்சியில் உறுப்பினராக  சேர்ந்ததில்லை.திமுக அனுதாபியாகவே இருந்தேன். இப்போது நான் எந்த கட்சி அனுதாபியும் இல்லை. ஆனாலும் நான் இப்போதும் எம்ஜிஆர் ரசிகன்தான். மனதை உற்சாகப் படுத்திக் கொள்ள எம்ஜிஆர் படப் பாடல்கள்தான .

( PICTURES THANKS TO GOOGLE )
 
வாசகர்களுக்கு: மேலே எனது அனுபவங்களைச் சொன்னேன். எம்ஜிஆர் பற்றிய மேலும் அதிக தகவல்கள், படங்கள், பாடல்கள். பேட்டிகள் ஆகியவற்றிற்கு கீழே உள்ள மய்யம் தளத்திற்குச் செல்லவும். கிட்டத்தட்ட நானூறு பக்கங்கள் அல்லது அதற்கும் மேல் என்று நினைக்கிறேன். பொறுமையாகப் பார்வையிடவும். நன்றி!
  

 

Saturday 21 December 2013

காம்ரேடுகளும் ஆட்டோ கட்டணமும்மாஸ்கோவில் மழை பெய்தால் மாம்பலத்தில் குடை பிடிப்பவர்கள் “ என்று கம்யூனிஸ்டுகளைப் பற்றி மாஜினி என்ற எழுத்தாளர் ரெங்கசாமி கிண்டலாகச் சொன்னாலும் அதன் உண்மை என்னவென்றால் பொதுமக்கள் நலனுக்காக எப்போதும் போராடத் தயராக இருப்பவர்கள் என்பதுதான். ஆனாலும் அந்த காம்ரேடுகள் எதிர்த்து போராட முன்வராத விஷயம் ஆட்டோ கட்டணம்தான்.  ஏனோ நம்மூர் ஆட்டோ கட்டணத்தைப் பற்றி கண்டு கொள்வதே கிடையாது. இந்த இடத்தில் காம்ரேடுகளின் சைக்காலஜி எல்லோருக்கும் தெரிந்ததுதான். சங்கத்து ஆள எவண்டா அடிச்சவன் “ என்று போராடும் இடத்தில் இருப்பதுதான். இருந்தாலும் பொது மக்களுக்காக காம்ரேடுகள் தமிழ்நாடு முழுக்க ஆட்டோ கட்டணம் பற்றி ஒரு முடிவினைச் சொல்லலாம்.

அண்மையில் கண் டாக்டர் ஒருவரைப் பார்க்க மாலை தஞ்சாவூர் சென்று இருந்தேன். திரும்புவதற்கு தாமதமாகி விட்டது. திருச்சி வந்தபோது இரவு 11 மணி. நான் செல்ல வேண்டிய K K  நகர் பகுதிக்கு பஸ் இல்லை. ஷேர் ஆட்டோக்களும் இல்லை. முன்பு நைட் சர்வீஸ் பஸ் இருந்தது. இப்போது அதுவும் இல்லை. எனவே ஆட்டோவை நாட வேண்டி இருந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து K K  நகர் செல்ல ஆட்டோ கட்டணம் 180 ரூபாய் தர வேண்டி இருந்தது. இதற்கு டவுன் பஸ் கட்டணம் 5 ரூபாய்தான் ஆகும். தஞ்சாவூரிலிருந்து திருச்சி வருவதற்கு அரசு பஸ் (எக்ஸ்பிரஸ்) கட்டணம் 31 ரூபாய்.


                                                  Picture (above) thanks to : THE HINDU

சென்னையில் ஒரு வழியாக ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து விட்டார்கள். இருந்தாலும் எவையெவை மீட்டர் கட்டணப்படி ஓடும் ஆட்டோக்கள், பாதியிலேயே ஆட்களை இறக்கிவிடும் ஆட்டோக்கள் என்று தெரியவில்லை. வாக்கு வாதம் மிஞ்சினால்  சங்கத்து ஆள எவண்டா அடிச்சவன் “ என்று செல்போன் உபயத்தில் குவிந்து விடுவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் தெரிந்த ஆட்டோக்காரர்களும் இப்படித்தான் செய்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் ஏதேதோ பட்டியல் வாசிக்கிறார்கள்.எங்களைப் போன்ற புறநகர்வாசிகளுக்கு ஆட்டோகாரர்கள் தயவு அதிகம் தேவை. எனவே ஒன்றும் சொல்வதில்லை. நாட்டில் ஓடும் பல ஆட்டோக்கள் போலீஸ்காரர்களின் மனைவிகள் பெயரில் அல்லது அந்த அம்மணிகளின் பினாமிகள் பெயரில்தான் இருக்கின்றன என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் இன்னும் ஆட்டோ கட்டணம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. பொதுநலன் குறித்து அக்கறை உள்ள தொண்டு நிறுவனங்கள் யாராவது இதற்கு ஒரு வழக்கு போட்டால் தேவலை.

                                                    Picture (above) thanks to : INDIATIMES

( இந்த கட்டுரையை MS WORD இல் டைப் செய்யும்போது கோவையில் புதிய ஆட்டோ மீட்டர் கட்டண முறை வருகிற ஜனவரி 1–ந் தேதி முதல் அமுல்படுத்துவது என்று  ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு செய்துள்ளதாக செய்தி வாசித்தேன்.)
Thursday 19 December 2013

திருச்சி: புத்தூர் குழுமாயி அம்மன் கோயில்


திருச்சியிலுள்ள முக்கியமான அம்மன் கோயில்களில் புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலும் ஒன்று. (படம்.1) திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ளதாலும், இந்த கோயிலின் குட்டிகுடி திருவிழா இந்த பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப் படுவதாலும் புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பகுதி காவல்தெய்வமும் இதுவே ஆகும்.

கோயில் அமைந்துள்ள இடம்:

திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில், உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் வனப் பகுதியில் இந்த குழுமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகில் தொட்டிப் பாலம் உள்ளது. இந்த கோயிலுக்குச் செல்ல புத்தூர் நாலு ரோடு , பிஷப் ஹீபர் கல்லூரி வழியாக குமரன் நகர் செல்ல வேண்டு.ம். அங்கிருந்து இடது (தெற்கு) பக்கம் கோயிலுக்குச் செல்லும் பாதை வழியாக நடந்தும் செல்லலாம். நடக்க இயலாதவர்கள் இரு சக்கர வாகனத்திலோ காரிலோ அல்லது ஆட்டோவிலோ செல்வது நல்லது.

கோயில் வரலாறும் திருவிழாவும்:

நாயக்கர்கள் காலத்தில், புத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் தங்கள் நிலத்தை வெட்டி உள்ளனர். அப்போது அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டது. எனவே தெய்வ வாக்கு கேட்டபோது, வன தெய்வம் காளி அங்கு குடியிருப்பதாகக் கூறியது. எனவே அங்கு காவல் தெய்வமாக இந்த அம்மனை வைத்து வழிபடத் துவங்கினர். இதற்கு இடையில் ஒரு மலையாள மந்திரவாதி அம்மனின் சக்தியை அடக்க சில ஏவல் வேலைகள் செய்தான். இதனால் பயந்துபோன கிராம மக்கள் அருகிலுள்ள இரட்டை மலை ஒண்டி கருப்புசாமி கோயிலில்  அருள்வாக்கு கேட்டனர். அந்த கருப்புசாமி கடவுளும் தனக்கு ஆடு பலி கொடுத்து விழா நடத்தினால், அந்த மந்திரவாதியை அழிப்பதாகச் சொல்ல, அவர்களும் விழா எடுத்தனர். மந்திரவாதியும் அழிந்தான். அது முதல் இந்த கோயிலுக்கு குட்டி குடி திருவிழா என்று நடத்தப் படுகிறது. ( சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் தல புராணத்திலும் இதேபோல ஒரு மந்திரவாதி கதை உண்டு. நான் எழுதிய பதிவைக் காண்க:  சிறுவாச்சூர் மதுர காளியம்மன் http://tthamizhelango.blogspot.com/2012/01/blog-post_08.html
  
கிராம மக்கள் குழி வெட்டும்போது இந்த அம்மன் தோன்றியதால்  குழுமாயி அம்மன் என்று பெயர் வந்ததாகச் சொல்லுவார்கள். ( சற்று ஆராய்ந்து பார்த்தால், குளுமையான இந்த இடத்தில் அமர்ந்த அம்மன் , குளுமையான அம்மன் என்று பெயர் பெற்று குளுமாயி எனத் திரிபடைந்து, குழுமாயி என மாறி இருக்கலாம் என்பது எனது கருத்து) 

ஆபத்தான ஆறுகள்:

இந்த கோயில் இருக்கும் இடத்தில் உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் ஒரே இடத்திலிருந்து பிரிகின்றன. இந்த ஆற்றில் இறங்க உள்ளூர் மக்களே அஞ்சுவர். நீர்ச்சுழலும் பாதுகாப்பற்ற சூழலுமே இங்கு நிலவுகிறது. கோயிலுக்கு மேலே மேற்கே உள்ள ஆற்றங்கரையானது பக்கவாட்டு சுவர் இல்லாமல் செல்கிறது. ஆற்றில் சிக்கி நிறையபேர் இறந்து இருக்கிறார்கள். எனவே கோயிலுக்குச் செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மீது கவனம் தேவை.

தொட்டிப் பாலம்:

இந்த அம்மன் கோவில் அருகே கோரையாறு, உய்யக்கொண்டான் வாய்க்காலுடன் கலக்கிறது. மழைக் காலங்களில் கோரையாற்றில் வரும் வெள்ளம் இந்த கோயிலுக்கு அருகேயுள்ள புத்தூர், உறையூர் பகுதிகளை சேதப்படுத்துவதால், அதனைத் தவிர்க்க தொட்டிப்பாலம் ஒன்றை கட்டியுள்ளனர். இந்த பாலத்திலும் ஆங்காங்கே ஆறுகள் பற்றிய எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைத்துள்ளார்கள்

கோயில் படங்கள்:

இந்த மாதம் முதல் வாரத்தில் 06.12.2013 அன்று திருச்சி தீரன் நகர் செல்ல வேண்டி இருந்தது. (அங்கிருந்து காட்டுப் பகுதி வழியே உள்ள ஒருசாலை வயலூர் ரோட்டில் உள்ள குமரன் நகருக்கு செல்கிறது. வழியில் இயற்கை எழில் கொஞ்ச  குழுமாயி அம்மன் கோயில் உள்ளது.) நான் அந்த பாதை வழியே எனது TVS – XL SUPER வண்டியில் அந்த அம்மன் கோயிலுக்குச் சென்று எனது கேமராவில் படம் பிடித்தேன். திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் என்னால் எடுக்கப்பட்ட சில வண்ணப்படங்கள் இங்கே:படம்.2 மேலே: புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் எழில் தோற்றம் படம்.3 மேலே: அருவியுடன் கூடிய அம்மன் கோயில்  
படம்.4 மேலே: கோயிலின் முகப்பு  
   

படம்.5 மேலே: கோயிலின் அருகே உள்ள அருவி  
     
                                           
படம்.6 மேலே: கோயிலின் அருகே உள்ள பாலம்  
   
                             
படம்.7 மேலே:  கோயிலின் அருகே உள்ள அருவியின் மற்றொரு காட்சி 

  
                                                      
படம்.8 மேலே: கோயிலின் இன்னொரு காட்சி 
        

                           

படம்.9 மேலே:  கோயிலின் அருகே உள்ள மரம் 
            படம்.10 மேலே: கோயிலின் அருகே உள்ள ஆறு மற்றும் குமரன்நகர் செல்லும் பாதை.
                         


படம்.11 மேலே: கோயிலுக்குச் செல்ல ஆற்றைக் கடக்க உதவும் நடைபாலம்.
                                            


படம்.12 மேலே:  பாலத்தில் உள்ள எச்சரிக்கை அறிவிப்பு

 

Tuesday 3 December 2013

அரிக்கேன் விளக்கு – அனுபவம்இப்போது மின்வெட்டு என்றாலே வீடுகளில் அலறுகிறோம். ஆனால் முழுக்க முழுக்க மின்சாரமே வீடுகளில் இல்லாத காலத்திலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிறையபேர் மறந்து விட்டோம். அப்போது அரிக்கேன் விளக்குதான் அதிகமாக பயன்பாட்டில் இருந்தது. Hurricane  என்றால் புயல் என்று பெயர். எந்த புயல் காற்றிலும் விளக்கு அணையாத வண்ணம் வடிவமைக்கப் பட்டதால் Hurricane lamp என்று பெயர். தமிழில் அரிக்கேன் விளக்கு ஆயிற்று.

நகர்ப்புறம்:

அப்போது தமிழ்நாட்டில் மின்சாரம் என்பது தொழிற்சாலைகளில் மட்டும்தான். வீடுகளில் அவ்வளவாக பயன்பாட்டிற்கு வராதநேரம் நகரமாக இருந்தாலும் பெரும்பாலான வீடுகளில் மின்சார இணைப்பு இருக்காது. மின் இணைப்பு உள்ள ஸ்டோர் வீடுகளை கட்டி வாடகைக்கு விடுபவர் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு 40 வாட்ஸ் குண்டு பல்பு மட்டுமே எரிய அனுமதிப்பார். ஒரே ஒரு மெயின் ஸ்விட்ச் மட்டுமே இருக்கும். மின்சாரத்திற்கென்று தனி சார்ஜ் வசூலிக்கப்படும். .ஓட்டல்களில் அல்லது அரசு அலுவலங்களில் மட்டும் என்று ஒன்றிரண்டு இடங்களில் குண்டு பல்புகள் எரிந்து கொண்டு இருக்கும். வீடுகளில் கெரசினால் எரியும் அரிக்கேன் விளக்கு அல்லது சிம்னி விளக்குதான். எனவே இப்போது மின்வெட்டு போல அப்போது கெரசின் எனப்படும் மண்ணெண்ணைக்கு ( சீமை எண்ணெய்) ஏற்படும் தட்டுப்பாட்டில் மக்கள் கஷ்டப்பட்டார்கள்


எனது ஆனாஆவன்னா படிப்பு தொடங்கியபோது வீட்டில் இருந்தது அந்தக் கால அரிக்கேன் விளக்குதான். பள்ளிப் படிப்பு வரை இரவுநேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தேன். படிக்கும்போது அரிக்கேன் லைட் கண்ணாடியில் இங்க் பேனாவினால் பெயர் எழுதியது, சின்னச் சின்ன படங்கள் வரைந்தது என்பது அந்தக்கால சந்தோஷங்களில் ஒன்று. அதே போல நண்பர்களோடு அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கைவிரல்களைக் வைத்து  சுவற்றில் மான், கொக்கு, பாம்பு வடிவங்களை காட்டி விளையாடுவதும் உண்டு. மழையில் நனைந்து வரும்போது சட்டைப் பையில் இருக்கும் ரூபாய் நோட்டுக்கள் ஈரமாக இருக்கும். அவற்றை காய வைக்க அரிக்கேன் விளக்கு கண்ணாடி அருகே கொஞ்ச நேரம் காட்டினால் போதும். அவை காய்ந்து பழைய நிலைக்கு வந்துவிடும்.(PICTURE THANKS  TO  Trashball! A Subsidiary of Ex-Communicated Communications, Inc.)

அரிக்கேன் விளக்கில் தினம்தோறும் கெரசின் ஊற்றி விளக்கையும் கண்ணாடியையும்  சுத்தம் செய்வது என்பது அப்போது பெரிய வேலை. கண்ணாடியை அதில் மாட்டுவது அல்லது கழட்டுவது  என்பது ரொம்பவும் கவனமான விஷயம். அதிக ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். இல்லையேல் கண்ணாடி உடைந்துவிடும்.

கிராமங்களில்:

கிராமத்தில் பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் அரிக்கேன் விளக்குதான். சமையல் கட்டில் மினுக்மினுக் என்று எரியும் சிறிய சிம்னி விளக்குதான். பெரும்பாலான சமயம் அதற்குரிய கண்ணாடி எப்போதோ உடைந்து போயிருக்கும். நடு வீட்டில் உள்ள கொஞ்சம் பெரிய சிம்னி விளக்கில் மட்டும கண்ணாடி இருக்கும். உடைந்தாலும் உடனே வாங்கி விடுவார்கள். அரிக்கேன் விளக்கை பெரும்பாலும் வீட்டுத் திண்ணையில் கட்டி தொங்க வைத்து இருப்பார்கள். அல்லது திண்ணையிலேயே இருக்கும். இதன் வெளிச்சம் நடு வீட்டிற்கும் திண்ணைக்கும் தெருவிற்கும் வரும்.

வண்டிப் போக்குவரத்து இருக்கும் கிராமங்களில் பேருந்து நிற்கும் மெயின்ரோட்டில் இருக்கும் டீக்கடைகளில் பெரும்பாலும் இந்த அரிக்கேன் விளக்குதான். பெட்ரோமாக்ஸ் விளக்கும் சில கடைகளில் அபூர்வமாக இருக்கும். ஊர் சத்திரங்களிலும் சாவடிகளிலும் அரிக்கேன் விளக்கு வெளிச்சம்தான். கிராமத்து சாலைகளில் மாட்டு வண்டியை இரவு நேரத்தில் ஓட்டும்போது இந்த அரிக்கேன் விளக்கு வண்டியின் நுகத்தடியில் தொங்கும்

எம்ஜிஆர் நடித்த ஒரு படம் பெரிய இடத்துப் பெண். அந்த படத்தில் அவனுக்கென்ன் தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவா “ என்று ஒரு பாடல். அதில்  இரவுநேரம் ஆள் இல்லாத, அரிக்கேன் விளக்கு மட்டும் தொங்கவிடப்பட்ட மாட்டு வண்டி போய்க்கொண்டே இருக்கும். இந்த பாடலை வீடியோவில் கண்டு மகிழ கீழே உள்ள இணையதள முகவரியினை கிளிக் செய்யுங்கள் ( YOUTUBE இல் பதிவு செய்திட்ட சகோதரர் அப்துல் கபூர் அவர்களுக்கு நன்றி)


இரவு நேரத்தில் களத்து மேட்டுக்கு காவலுக்குச் செல்லும் பெரியவர்கள் ஒரு பெரிய போர்வையைப் போர்த்தியபடி ஒரு கையில் பெரிய தடியையும் இன்னொரு கையில் அரிக்கேன் விளக்கையும் கொண்டு செல்வார்கள். ஒருமுறை விடுமுறையில் மழைக் காலத்தில் கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டில் இருந்தேன். இரவு நேரம். ஐப்பசி அடை மழை. பின்புறம் மாட்டுத் தொழுவத்தில் மாடுகள் கத்த ஆரம்பித்தன. இரவு நேரத்தில் யாராவது புதியவர்கள் வந்தாலோ அல்லது ஏதேனும் ஆபத்து என்றாலோ அவை கத்தும். என்னுடைய தாத்தாவும் நானும் திண்ணையில் இருந்த அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு போய் பார்த்தோம். வழிதெரியாது வந்த வேறு தெரு நாய் ஒன்று மழைக்கு அங்கே ஒதுங்கி இருந்தது. அதனை விரட்டிய பின்னரே வந்தோம். அந்த மழை காற்றிலும் விளக்கு அணையவில்லை. இன்னும் பல கிராமங்களில் அரிக்கேன் விளக்கு பயன்பாட்டில் உள்ளது.

இன்னும் சில செய்திகள்:

பழைய எழுத்தாளர்கள் வடுவூர் துரைசாமி அய்யங்கார், கல்கி, மாதவையர் நாவல்களில் அவ்வப்போது இந்த அரிக்கேன் விளக்கு வந்து போகும். ரெயில்வே லைன்மேன்கள், கேட் கீப்பர்கள்  இந்த அரிக்கேன் விளக்கை வைத்துதான் காவல் காத்தார்கள். அப்போதைய ரெயில்வே கார்டு அரிக்கேன் விளக்கில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு, பச்சை விளக்குகளைத்தான் அசைத்தார்.


இப்போது நாடெங்கும் மின்வெட்டு. இன்வெர்ட்டரும் சமயத்தில் கை
கொடுப்பதில்லை. எனவே பழையபடி பல இடங்களில் அரிக்கேன் விளக்கு உபயோகத்தில் வந்து விட்டது. மின்வெட்டைக் கண்டித்து போராட்டம் செய்பவர்கள் இப்போது “அரிக்கேன் விளக்கு ஏந்தும் போராட்டம்நடத்துகிறார்கள். அப்போது நாடு முழுக்க இருந்ததே அரிக்கேன் விளக்குதான்.


( PICTURES  &  VIDEO - THANKS  TO  GOOGLE )