Tuesday 13 June 2017

அமுதவன் எழுதிய ‘என்றென்றும் சுஜாதா’



பெங்களூர் வாழ் தமிழரான பிரபல எழுத்தாளர் அமுதவன் அவர்கள் திருச்சிக்காரர். இவரது இயற்பெயர் மெல்க்யூ. இவர் ஒரு சிறந்த வலைப்பதிவரும் ஆவார். இவரது வலைத்தளம் சென்று அடிக்கடி இவரது கட்டுரைகளைப் படிப்பது வழக்கம். விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இவர் எழுதிய ‘என்றென்றும் சுஜாதா’ என்ற நூலை அண்மையில்தான் படித்தேன்.

நானும் அந்நாளைய எனது வாலிப வயதில் எழுத்தாளர் சுஜாதாவின் வாசகன் என்ற முறையில், இந்த நூலுக்குள் உணர்வுப் பூர்வமாகவே ஒன்றிப் போனேன். ஸ்ரீரங்கத்து தேவதைகள், நிர்வாண நகரம், கரையெல்லாம் செண்பகப் பூ, நில்லுங்கள் ராஜாவே என்று எழுதிய, என்றென்றும் சுஜாதா மறக்க முடியாத வித்தியாசமான எழுத்தாளர். கூடவே, இவர் எழுதிய தொடர்களுக்கு ஓவியர் ஜெயராஜ் வரைந்த ஓவியங்களும் வந்து நிழலாடுகின்றன. 
 
சுஜாதாவும் அமுதவனும்

பெங்களூரில் தொலைபேசித் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டு இருந்த அமுதவனுக்கு, தன்னுடைய அபிமான எழுத்தாளர் சுஜாதா பெங்களூரில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் (B.E.L) இல் என்ஜீனியராக பணிபுரிய வந்து இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கின்றது. நண்பர் மூலம் கிடைத்த விலாசத்தை வைத்துக் கொண்டு, தான் முன்பின் பார்த்திராத சுஜாதாவை அவரது இல்லத்திலேயே சந்திக்கச் செல்கிறார். அங்கு அப்போது அவருக்கு ஏற்பட்ட மகிழ்வான தருணத்தை, இந்த நூலின் முதல் அத்தியாயத்திலே சொல்லி பரவசப் படுகிறார்.

அதன் பிறகு அடிக்கடி அவரைச் சந்திக்க தான் சென்றதையும், அன்போடு நட்பு பாராட்டியதையும், பழகியதையும் தொகுத்து எழுத்தாளர் சுஜாதாவுடனான அனுபவங்களை முதல் சந்திப்பு தொடங்கி அவருடனான கடைசி சந்திப்பு முடிய ஒரு நாவல் போன்று சுவைபட சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் அமுதவன் அவர்கள்.

// எழுத்தாளன் என்றால் வறுமையை மணந்து கொண்டு கூழுக்குப் பாடும் புலவர்களாகத்தான் இன்னும் பலரை நாம் பார்க்க முடிகிறது. ‘சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்’ என்ற திருவிளையாடல் வசனம்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் இந்த மனிதன் ஜிப்பா வேட்டி ஜோல்னாப் பைக்குள் அடங்காத, பெல்ட் போடாமல் டக் இன் பண்ணிக்கொண்டு ஒரு நிறுவனத்தின் பெரிய அதிகாரி என்பதற்கேற்ப காட்சியளித்தார் // - இந்நூல் பக்கம்.158

இலக்கிய சந்திப்புகள்

நூலின் இடையிடையே சுஜாதாவின் எழுத்துக்களைப் பற்றியும், அவரைச் சந்திக்க வரும் வாசகர்கள் குறித்தும், பெங்களூரில் நடந்த இளம் எழுத்தாளர்களுடனான சந்திப்புகள், அவர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இலக்கியக் கூட்டங்கள் குறித்தும் விவரிக்கிறார்.

// பொதுவாக இளம் எழுத்தாளர்களுக்கு அவர் நிறைய குறிப்புகள் கொடுத்தாலும் மறக்காமல் கொடுக்கும் ஒரு குறிப்பு இதுதான். ஒரு கதையை முதல் பாராவின் முதல் வரியில் ஆரம்பித்து விட வேண்டும் // - இந்நூல் பக்கம்.31

பிரபலங்களும் சந்திப்புகளும்

எழுத்தாளர் அமுதவன் அவர்களுக்கு தமிழ் திரைப்பட உலகிலும் கமல்ஹாசன், சிவகுமார், பாரதிராஜா, இளையராஜா என்று நட்புகள். அவர்கள் எழுத்தாளர் அமுதவனுடனான நட்பில் எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்த விஷயங்களையும் சுவைபடச் சொல்லி இருக்கிறார். 

நடிகர் கமலஹாசன் எழுத்தாளர் சுஜாதாவை சந்திக்க விரும்பி அமுதவனிடம் சொல்கிறார். ஆனால் இருவரும் சந்தித்துக் கொள்வது என்பது ஓவ்வொரு முறையும் தள்ளிக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் சந்திப்பு நடந்தே விடுகிறது. எப்படி என்றால், கமலைச் சந்திக்க அவர் வீட்டுக்கு அருகில் வந்தபோது  சுஜாதா கார் நின்று விடுகிறது. அப்போது அங்கு காத்து இருந்த அமுதவனும் மற்றவர்களும், கார் ஸ்டார்ட் ஆக காரின் பின்னால் இருந்து  தள்ளுகிறார்கள். அப்போதுதான் அங்கு வந்த கமல் தனது காரை விட்டு இறங்கி அவரும் தள்ளுகிறார். இத்தனைக்கும் இருவரும் முன்பின் சந்தித்தது இல்லை. இப்படியாக ஒரு சந்திப்பு.  

பிணக்கும் பிரிவும் சமாதானமும்

எழுத்தாளர் சாவிக்கும் எழுத்தாளர் சுஜாதாவுக்குமான நட்பைப் பற்றி நூலாசிரியர் சொல்லும்[போது

// குமுதம் மூலம் சுஜாதா புகழ்பெற ஆரம்பித்தார் என்றாலும் ஒரு நட்சத்திர எழுத்தாளராகவும் பரபரப்பான புகழுக்குச் சொந்தக்காரராகவும் அவரை மாற்றியவர் சாவி//

என்று குறிப்பிடுகிறார். இந்நூல் பக்கம்..134. ஆனாலும் இவர்கள் இருவருக்கும் இடையில் எதனாலோ ஒரு மனக்கசப்பு; ஏற்பட்டு ரொம்ப காலம் பேச்சு வார்த்தை இல்லாமல் போய் விட்டது. இவர்கள் இருவரையும் சமாதானமாக்கும் முயற்சியில், அமுதவன் அவர்கள் ஈடுபட்டு வெற்றியும் கண்டு இருக்கிறார். இந்த அனுபவத்தை ‘சாவியுடன் மனக் கசப்பு’ என்ற அத்தியாயத்தில் சொல்லுகிறார்.

எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரம்

இன்றைக்கு இந்தியாவில் ஓட்டு இயந்திரம் பற்றி காரசார விவதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஓட்டு இயந்திரத்தை கண்டு பிடித்தவர் எழுத்தாளர் சுஜாதா என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியிடம் இந்த இயந்திரத்தின் செயல் விளக்கம் பற்றி சுஜாதா விளக்கியதையும் அவர் பாராட்டு சொன்னதையும், இந்த இயந்திரத்தின் மீதான நம்பகத் தனமை குறித்து மற்றவர்களுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு சுஜாதா சொன்ன மறுமோழிகளையும் ஒரு அத்தியாயத்தில் சொல்லி இருக்கிறார், இந்நூலாசிரியர்.

// இத்தன வருஷங்களா ஏதோ ஒன்னுக்குப் பழகிட்டு, இப்போ புதுசா ஒன்னை அறிமுகப்படுத்தி இனிமேல் இதுதான், இதை நீ ஒத்துக்கிட்டாகனும்னு சொன்னா அவ்வளவு  சீக்கிரம் ஏத்துக்க மாட்டாங்க. எதிர்ப்பு வரும். ஆனா இதில் பெரிய ஊழல் நடந்துரும், தப்பாட்டம் நடக்கும்னெல்லாம் சொல்றது அறியாமைதான்.இது எல்லா கம்ப்யூட்டர்களும் இணைக்கப்பட்ட ஒரு நெட் ஒர்க் கிடையாது. ஒவ்வொன்னும் தனிதனி யந்திரம் அவ்வளவுதான். ஒரு மொத்தத் தொகுதிக்கான அத்தனை இயந்திரங்களும் இணைக்கப்பட்டிருக்கா என்றால் அதுவும் கிடையாது.// - இந்நூல் பக்கம்.144

கடைசி நாட்கள்

எழுத்தாளர் சுஜாதாவின் கடைசி நாட்கள், பற்றிய கடைசி இரு பதிவுகள் நெஞ்சைப் பிழியும் வண்ணம் இருக்கின்றன. அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த சுஜாதா, வீடு திரும்பியதும், தான் எழுதிய ‘கற்றதும் பெற்றதும்’ என்ற தொடரில் எழுதிய சில வாசகங்கள்  கண்ணீரை வரவழைப்பதாகக் கூறி எடுத்தும் காட்டியுள்ளார்.

 // ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கும்போது, இறந்தவர் என்னைவிடச் சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு’ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God! // - இந்நூல் பக்கம்.171

இன்னும் இந்த நூலில், சுஜாதாவின் எழுத்துக்கள், சுஜாதாவின் திரையுலகப் பிரவேசம், சுஜாதாவின் தமிழ்ப் பற்று, தாய்மொழிக் கல்வி பற்றிய உயரிய எண்ணம், ரத்தம் ஒரே நிறம் என்ற தொடர் எழுதிய போது வந்த மிரட்டல்கள், திருமதி சுஜாதா சொன்ன சம்பவங்கள் என்று நிறையவே தகவல்களை சலிப்பு தட்டாதவாறு தனக்கே உரிய நடையில் சொல்லி இருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் அமுதவன் அவர்கள்.

// வேலை வாய்ப்புகளுக்கும் தாய்மொழியில் கற்பதற்கும் சம்பந்தம் இல்லை. நான் அடிக்கடி சொல்லும் உதாரணம் இது. அமெரிக்கா சென்றபோது என்னுடன் பயணித்தவர்களில் பலர் சீன இளைஞர்கள். அனைவரும் கலிஃபோர்னியா சிலிக்கன் பள்ளத் தாக்கில் கணிப்பொறி மென்பொருள் எழுதச் சென்று கொண்டிருந்தார்கள். பேச முயன்றதில் அவர்களுக்குத் தெரிந்த இரண்டே ஆங்கில வார்த்தைகள் ‘சாஃப்ட்வேர், ஓகே’ அவ்வளவுதான். மற்றதெல்லாம் ஐயாயிரம் பட எழுத்துகள் கொண்ட சீன மொழியில் கற்றவர்கள். தாய்மொழியில் பயின்றது வேலை வாய்ப்பை பாதிக்கவில்லை // - சுஜாதா ( கற்றதும் பெற்றதும் ) இந்நூல் பக்கம் 48

நூலின் பெயர்: என்றென்றும் சுஜாதா
ஆசிரியர்: அமுதவன் – நூலின் பக்கங்கள்; 184
விலை: ரூ 90/= -  நூல் வெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை.