Thursday 30 June 2016

வாட்ஸ்அப் குப்பைகள்ஒரு அவசர ஆத்திரத்திற்கு உதவுமே என்று வாட்ஸ்அப் (WhatsApp) ஐ டவுன்லோட் செய்து தெரிந்த நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சில குழுக்களிலும் என்னை இணைத்துக் கொண்டேன்.

காப்பி பேஸ்டு நண்பர்கள்

ஆரம்பத்தில் நல்லாத்தான் போய்க் கொண்டு இருந்தது. ஒவ்வொரு குழுவிலும் என்ன நோக்கத்திற்காக அவை தொடங்கப் பட்டனவோ அது சம்பந்தப்பட்ட செய்திகள், அறிவிப்புகள் வந்து கொண்டு இருந்தன. அப்புறம் வழக்கம் போல காப்பி பேஸ்டு நண்பர்கள் இங்கும் வந்து விட்டனர். அடுத்தவர் படைப்புகளையோ அல்லது தங்களது ஃபேஸ்புக் தளத்தில் உள்ளவற்றையோ காப்பி பேஸ்டு செய்து போட ஆரம்பித்து விட்டார்கள். உதாரணத்திற்கு கபிலர் குறிஞ்சிப் பாட்டில் பாடிய 99 மலர்கள் பற்றிய விக்கிபீடியா பதிவு மற்றும் அவற்றிற்கான படங்களை இன்னும் காப்பி பேஸ்டு செய்து கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சிலர் நான்தான் தென்னைமரம் பேசுகிறேன், பனைமரம் பேசுகிறேன் என்று ஏதாவது கப்சா விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் அரசியல், சட்டஞானம் எல்லாம் உண்டு.

குப்பைகள்

சிலர் தினம் ஒரு கவிதை. இன்னும் சிலர் காலையில் எழுந்தவுடன், தினமும் ‘Good Morning Friends” என்று சொல்லுகிறார்கள்.. இதுவாவது பரவாயில்லை. சிலர் எப்போதோ நடந்த செய்திகளை இப்போதுதான் நடந்தது போன்று பகிர்வு செய்கிறார்கள். பகிர்வதற்கு முன்பு அது சரியான தகவலா என்று உறுதிப்படுத்திக் கொள்வது கிடையாது. இதுவும் போதாதென்று போட்டோ படங்கள் , வீடியோ படங்கள். என்று திரும்பத் திரும்ப ஊடகங்களிலும் ஃபேஸ்புக் தளங்களிலும் வந்தவைகளையே போட்டு அவை நிரம்பி வழிகின்றன.

இதில் உங்களுக்கு என்ன வந்தது என்று கேட்கலாம். இப்படி வழியும் தேவையற்ற தகவல்களை நீக்குவதற்கே (Clear) நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. அதிலும் இந்த போட்டோக்கள், வீடியோக்கள், செல்போனில் கேமரா மற்றும் படங்கள் உள்ள Photo Gallery பகுதியில் அடைத்துக் கொண்டு ஹேங் (Hang) ஆகி விடுகின்றன. சில உறவினர்கள், நண்பர்கள் அனுப்பும் படங்களும் வீடியோக்களும் போட்டோ காலரியில் எங்கோ புதைந்து விடுகின்றன. சிலசமயம் செல்போனில் போட்டோ எடுக்கமுடியாமல் போய்விடும் நிலை. எனவே ஒவ்வொரு முறையும் Power Off செய்து விட்டு மறுபடியும் Power On செய்து செல்போனை பழையநிலைக்கு கொண்டு வர வேண்டி உள்ளது.  

இது விஷயமாக குழு நிர்வாகிகள் (Admin) எடுத்துச் சொல்லியும் யாரும் கேட்பதில்லை. ஆர்வக் கோளாறு காரணமாக திரும்பத் திரும்ப அப்படியே செய்கிறார்கள். 

எனக்கு வந்த பதில்

நானும் பொறுத்தது போதும் என்று வாட்ஸ்அப்பில் ஒரு குழுவில் அனுப்பிய செய்தி இது.

// …. … சங்க நண்பர்களே! சங்க வளர்ச்சி, நிகழ்ச்சி பற்றிய தகவல்களைத் தாருங்கள். ஏற்கனவே மற்ற சமூக வலைத்தளத்தில் வெளியானவற்றை இங்கு மறுபடியும்  Copy & Paste செய்யாதீர்கள். - இப்படிக்கு தி.தமிழ் இளங்கோ //

உடனே வாட்ஸ்அப் நண்பர் ஒருவர் குழுவில் பகிர்ந்து கொண்ட அவருடைய பதில் இது.

// Give Freedom ma.
  Dont insists post this.
  Post that.
  Spot is to Relax and share
  If the postings annoying.
  Let the admin remove //

Friday 24 June 2016

ஊரன் அடிகள் எழுதிய - புரட்சித்துறவி வள்ளலார்எனது கல்லூரி மாணவப் பருவத்தின் போது, திருச்சி தெப்பக்குளம் அருகே இருந்த திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்திற்கு செல்லும் சமயங்களில், அங்கு வரும் தவத்திரு ஊரன் அடிகள் அவர்களைப் பார்த்து இருக்கிறேன். மரியாதை காரணமாக அவரிடம் பேசியது இல்லை. எங்கள் வீட்டு நூலகத்தில், அவர் எழுதிய ‘சாதியும் மதமும்’ என்ற நூல் இருக்கிறது. (2004 ஆம் ஆண்டு வாங்கியது.) அருமையான நூல். நான் படித்த இந்த நூலை, இலக்கியக் கூட்ட நண்பர்களுக்கு பரிசளிக்க வேண்டி, இதன் பிரதிகள் சில வாங்கலாம் என்று மேற்படி கழக புத்தக விற்பனை நிலையத்திற்கு அண்மையில் சென்றேன். அங்கு இந்த நூல் இருப்பு இல்லை. கிளை மேலாளர் திரு.காளத்தீஸ்வரன் அய்யா அவர்கள் (எனது அப்பாவிற்கும் எனக்கும் நல்ல பழக்கம்) அவர் எழுதிய புரட்சித் துறவி வள்ளலார் மற்றும் வள்ளலார் மறைந்தது எப்படி? என்ற இரு நூல்களையும் எடுத்துக் கொடுத்தார். 

தவத்திரு ஊரன் அடிகளார்

திருச்சி சமயபுரம் அருகே உள்ள நரசிங்கமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் (22.05.1933) தவத்திரு ஊரன் அடிகளார். ஸ்ரீரங்கம், வேலூர், திருச்சி ஆகிய நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியாற்றியவர். தமது 22 ஆம் வயதினில் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் நிறுவியவர்: துறவு வாழ்க்கை மேற் கொண்டவர். வடலூரிலேயே வாழ்ந்து, வடலூர் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலராக சிறப்பாகப் பணியாற்றியவர். வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சன்மார்க்க சமயம் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். 

புரட்சித்துறவி வள்ளலார் 

ஊரன் அடிகளார் ‘வள்ளலார் இராமலிங்க அடிகள் வரலாறு’ என்ற ஒரு நூல் எழுதியுள்ளார். அது ஒரு பெரிய நூல். தமிழக அரசின் பரிசு பெற்றது. 

// வள்ளலார் செய்த புரட்சிகளை உலகம் அறிய வேண்டும். அறிந்து கடைப்பிடிக்க வேண்டும். அதற்கெனச் சுருக்கமாக ஆக்கப் பெற்றதே “புரட்சித்துறவி வள்ளலார் “ என்னும் இந்நூல் //

என்று இந்நூலின் முன்னுரையில் ஊரன் அடிகளார் குறிப்பிடுகிறார்.

வள்ளலார் வரலாற்றுக் குறிப்புகள்

இப்பகுதியில் வள்ளலாரின் ` பிறப்பு (05.10.1823), சித்தி (30.01.1874) என்று வரிசையிட்டு சொல்லப்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது வள்ளலார் கொள்கைகள். (பக்கம் – 10)

1.கடவுள் ஒருவரே.
2.அவரை ஜோதி வடிவிலுண்மை அன்பால் வழிபட வேண்டும்.
3.சிறு தெய்வ வழிபாடு கூடாது.
4.அத் தெய்வங்களின் பேரால் உயிர்ப்பலி கூடாது.
5.புலால் உண்ணலாகாது.
6.சாதி சமய முதலிய வேறுபாடுகள் கூடா.
7.எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி ஒழுகும் ஆன்மநேய    ஒருமைப்பாட்டுரிமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
8.ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
9.புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா.
10.மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்.
11.காதுகுத்துதல் மூக்குக்குத்துதல் வேண்டா.
12.கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டா.
13.மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டா.
14.இறந்தவரைப் புதைக்க வேண்டும், எரிக்கக் கூடாது.
15.கருமாதி, திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டா.
16.எதிலும் பொது நோக்கம் வேண்டும்

      வள்ளலார் வரலாற்றுச் சுருக்கம்

என்னும் இப்பகுதியில் வள்ளலாரின் பெற்றோர், வள்ளலாரின் பிறப்பு தொடங்கி  சித்திவரை, சென்னை வாழ்க்கை, கந்தகோட்ட வழிபாடு, திருமணமும் இல்லற வாழ்வை நாடாமையும், தண்ணீரில் விளக்கெரித்தது, வடலூரில் சத்திய தருமச்சாலை நிறுவியது, என்று நடந்த நிகழ்வுகள் சுருக்கமாகவும் சுவாரஸ்யத்தோடும் சொல்லப்பட்டுள்ளன. 

நூலில் உள்ள சில செய்திகள் இவை.

// வள்ளலார் எப்பள்ளியிலும் பயின்றதில்லை. எவ்வாசிரியரிடத்தும் படித்ததில்லை. கற்கவேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார். கேட்கவேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார். // (இந்நூல் பக்கம் 14)

// முருகப்பெருமானை வழிபடு கடவுளாகவும், திருஞானசம்பந்தரை வழிபடு குருவாகவும், திருவாசகத்தை வழிபடு நூலாகவும் வள்ளலார் இளமையில் கொண்டார் // (இந்நூல் பக்கம் 18)

// இரவில் விளக்கில்லாத இடத்தில் இருக்கக்கூடாதென்பது பெருமான் கொள்கை. ஆதலின் பெருமானது அறையில் இரவு முழுவதும் விளக்கெரிந்து கொண்டேயிருக்கும் // (இந்நூல் பக்கம் 27)

// வள்ளலார் வெள்ளாடைத் துறவி.தூய வெண்ணிற் ஆடையே உடுத்துவார். கல்லாடை உடுத்ததில்லை. துறவுக்கோலத்துக்கு முதல் அறிகுறியாக இன்று கருதப்படுவது காவி உடை. வள்ளலார் காவிதரிக்காது வெள்ளையே உடுத்தினார். கொண்ட கோலத்தாலும் உடுத்திய உடையாலும் ஒரு புரட்சியைச் செய்தார். தத்துவங்களோடு போரிடுவதற்கு அறிகுறி, யுத்தக்குறி – போர்க்கொடி காவி. வெற்றிக்கொடி வெள்ளை. ஆதலில் வெள்ளையே போதும் என்பது வள்ளலார் கொள்கை: அவர் கூறும் விளக்கம் // (இந்நூல் பக்கம் 32)

வள்ளலாரின் பன்முகஞானம் பன்முதன்மை, என்ற தலைப்பினில் அவருடைய பல்வேறு திறமைகள் ( நூல் எழுதுதல், நூலுக்கு உரை எழுதுதல், நூலினைப் பதிப்பித்தல், சித்த மருத்துவம் செய்தல் என்று இன்ன பிற) சொல்லப்பட்டுள்ளன.

பொதுமை நெறி

என்ற பகுதியில், வள்ளலாரின் மேலே சொன்ன கொள்கைகளுக்கு, விளக்கம் தருகிறார் அய்யா ஊரன் அடிகள்.
                                                                                                                                                  
// வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற பாட்டு வள்ளலாரை அடையாளங் காட்டும் பாட்டு // (இந்நூல் பக்கம் 96)
                                                                                                                                                   
     வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
          
வாடினேன் பசியினால் இளைத்தே
     
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
          
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
     
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
          
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
     
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்
          
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். (3471)

புதுமைத்தலம் வடலூர்

என்ற தலைப்பினுள், வள்ளலார் நிறுவிய, சன்மார்க்க சங்கம் (1865), சத்திய தருமச்சாலை (1867), சத்தியஞானசபை (1872), சித்திவளாகம் (1870 – 1874 ஆகியவை குறித்தும், இந்த நிறுவனங்களின் இன்றைய நிலைமை குறித்தும் சொல்லப்பட்டுள்ளன. சத்திய தருமச்சாலை பற்றிக் குறிப்பிடுகையில், அங்குள்ள ‘அணையா அடுப்பு’ பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். 

// வள்ளற்பெருமான் அன்று ஏற்றிய அணையா அடுப்பு 147 ஆண்டுகளாக இன்றும் அணையாது எரிந்து வருகிறது. நூறாயிரக் கணக்கான ஏழை மக்களின் எரியும் வயிற்றைக் குளிரச் செய்து வருகிறது. பசித்தீயை அவித்து வருகிறது //  (இந்நூல் பக்கம் 123)

சமரசவேதம்

இந்நூலின் இறுதியாக வள்ளலாரின் படைப்புகள் பற்றிய சிறு குறிப்புகளைக் காணலாம். கீழே இந்நூலில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள திருஅருட்பா பாடல்கள் சில.

     அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
          
அன்பெனும் குடில்புகும் அரசே
     
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
          
அன்பெனும் கரத்தமர் அமுதே
     
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
          
அன்பெனும் உயிரொளிர் அறிவே
     
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
          
அன்புரு வாம்பர சிவமே.                             (3269)

     கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
          
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
     
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
          
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
     
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
          
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
     
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
          
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.  (4091)

முடிவுரை: 

வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் பற்றிய சுருக்கமான வரலாறு மற்றும் அவருடைய சமரச சன்மார்க்க நெறிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் இந்நூல்., எளிமையான நடையில் அமைந்துள்ளது. இந்த நூலினைப் படித்தவுடன் வடலூர் செல்ல வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. போய் வரவேண்டும்.

(நூலின் முன்பக்க அட்டை)

(நூலின் பின்பக்க அட்டை)

நூலின் பெயர்: புரட்சிதுறவி வள்ளலார்
ஆசிரியர்: ஊரன் அடிகள்
நூலின் பக்கங்கள்; 168 விலை: ரூ100/= ஐந்தாம் பதிப்பு 17.01.2014
நூல் வெளியீடு: சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், தபால்பெட்டி எண்.2 மனை எண் 64, முருகேசன் சாலை, என்.எல்.சி. ஆபிசர்ஸ் நகர், வடலூர் – 607 303, கடலூர் மாவட்டம் தொலைபேசி 04142 259382 செல் – 9443729881