Wednesday, 31 December 2014

விடை தெரியாத கேள்விக்கு விடை


ஒரு தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் வரிகள் இவை.

                   கேள்வி பிறந்தது அன்று நல்ல
                   பதில் கிடைத்தது இன்று
                   ஆசை பிறந்தது அன்று
                   யாவும் நடந்தது இன்று
                          - பாடல் கண்ணதாசன் (படம்: பச்சை விளக்கு)

அதுபோல சுமார் 35 வருடங்களுக்கு முன்னர், எனக்கு தெரியாத கேள்வி ஒன்றிற்கு இப்போதுதான் சரியான பதில் கிடைத்தது. இந்த விடையைச் சொன்ன,  வலைப் பதிவர் ஆசிரியர் ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) அவர்களுக்கு முதலிலேயே நன்றியைச் சொல்லி விடுகிறேன். விவரம் இதுதான்.

டெபாசிட் சேகரித்தல் (DEPOSIT MOBILIZATION)

என்னதான் விளம்பரம் செய்தாலும், துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தாலும், பணம் வைத்து இருப்பவர்கள் வங்கியில் டெபாசிட் செய்ய முன் வர மாட்டார்கள். அதிலும் சில பெரிய மனிதர்கள் “பூதம் காத்த புதையல்போல வீட்டிலேயே வைத்து இருப்பார்கள். காரணம் வங்கியில் டெபாசிட் செய்தால், அரசாங்கம் திடீரென்று எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற பயம்தான். எனவே அவர்களின் பயத்தினைப் போக்கி, வங்கியில் டெபாசிட் செய்தால், பணம் பாதுகாப்பாக இருக்கும், நாட்டு மக்களுக்கும் பயன்படும், நாட்டில் புதிய தொழில்கள் தொடங்க உதவும், வட்டியும் கிடைக்கும் என்று நேரில் போய் சொல்ல வேண்டும். அதாவது டெபாசிட் பிடிக்க வேண்டும். மேலும் எப்படி எப்படியெல்லாம் பிரித்து, டெபாசிட் செய்தால ( கூட்டுக் கணக்குகள்) வரி பிடித்தம் இருக்காது என்றும் சொல்வோம். வங்கிக்கும் டெபாசிட் சேரும். இதற்கு வங்கியில் அனுமதி உண்டு.   

அப்போதுதான் நான் வங்கியில் வேலைக்கு சேர்ந்து இருந்தேன்.  (அப்போது வயது 23; இப்போது 60 முடியப் போகிறது) எங்கள் வங்கியிலிருந்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை, வைப்புத் தொகை (FIXED DEPOSITS) திரட்ட (Deposits mobilization) காரில் கிளம்பினார்கள். அப்போது என்னையும் வரச் சொன்னதால் நானும் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். எங்கள் வங்கியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருக்கும் பெரிய தனக்காரர்களைக் கண்டு, எங்கள் வங்கியில் டெபாஸிட் செய்யச் சொல்லி ஒவ்வொரு ஊராகச் சென்றோம்.

கேள்வி இதுதான்

அவ்வாறு செல்லும்போது, ஆலம்பட்டி புதூர் (மணப்பாறை) என்ற ஊரினுள் இருக்கும்  ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் (தமிழாசிரியரும் கூட) ஒருவரைப் பார்க்கச் சென்றோம். அவர் நுங்கும், மணப்பாறை முறுக்கும் கொடுத்து உபசரித்தார். அவரிடம் எங்கள் ஊழியர் ஒருவர் என்னை அறிமுகம் செய்யும்போது “இவர் தமிழ் எம்.ஏ படித்தவர்என்று சொல்லி விட்டார். வந்தது வினை. அவர் தமிழாசிரியராக இருந்தவர் அல்லவா? எனவே என்னைப் பார்த்து ஙப்போல் வளை என்று யார் சொன்னது? என்று கேட்டார். சரியான பதில் தெரியும் என்பதால் சட்டென்று “ஆத்திச்சூடி - ஔவையார் என்று சொல்லி விட்டேன். இருந்தாலும் அவர் என்னை அத்தோடு விட்டு விடவில்லை ஙப்போல் வளை என்று ஏன் அந்த எழுத்தை மட்டும் சொன்னார்கள்? என்று கேட்டார். நானும் எல்லோரும் சொல்வது போல ங “ என்ற எழுத்தைப் போல வளைந்து பணிவுடன் அடக்கமாக இருக்க வேண்டும் “ என்று சொன்னேன். அவர் உடனே , சரியான பதில் இது கிடையாது என்று சொல்லி விட்டு, சில விளக்கங்கள் சொன்னார். எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை. ஙே என்று விழித்தேன். இருந்தாலும் விட்டால் போதும் என்று, அவரிடம் புரிந்தது போல் தலையாட்டினேன். என்னை அழைத்து வந்த சீனியர் ஊழியர்கள் சிரித்தனர்.


                                  (Picture thanks to www.kathukutti.com/tamil/aathichudi )

அன்று முதல் அந்த கேள்விக்கான பதிலை கேட்டு தெரிந்து கொள்ள முயன்றேன். ஆலம்பட்டி புதூர் வழியே செல்லும் போதும், இந்த ஙப் போல் வளைஎன்ற ஆத்திச்சூடி வரியைப் படிக்கும் போதும், இந்த சம்பவம் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கும். 


பதில் கிடைத்தது:

ஆத்திச்சூடிக்கு பொருள் சொன்னவர்கள் கூட “ ங போல வளைய வேண்டும்என்று முடித்துக் கொண்டார்கள். ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்ததில் திருப்தியான பதில் இல்லை. அபிதான சிந்தாமணியிலும் இதனைப் பற்றி ஒன்றும் இல்லை. கூகிளில் தேடிப் பார்த்தும் ஒன்றும் ஆகவில்லை. அண்மையில் வலைப் பதிவர் ஆசிரியர் ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) அவர்கள் பதிவு ஒன்றினை படித்தேன். யுரேகா (EUREKA)  என்று கத்த வேண்டும் போலிருந்தது. ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக எந்த கேள்விக்கு விடை தேடி அலைந்தேனோ, அந்த கேள்விக்கு அவர் தனது பதிவினில், விளக்கமாக அற்புதமாகச் சொல்லி இருந்தார். அவருக்கு மீண்டும் மனதார எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வலைப் பதிவர் ஆசிரியர் ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) சொன்ன விளக்கம் இதுதான்.

// மெய்யின் வரிசையில், இருக்கும், ‘ங்எனும் எழுத்தைத் தவிர, அதன் உயிர்மெய் வடிவங்கள் பெற்று வரும் சொல்  ஏதும் தமிழில் இல்லை.

, ஙா, ஙி, ஙீ,…….

இந்த வரிசையில் இடம் பெற்ற எந்த எழுத்துகளைக் கொண்ட தமிழ்ச்சொல் ஒன்றையேனும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா

( அங்ஙனம், இங்ஙனம், என்னும் சொற்களில் ங எனும் எழுத்து வருகிறதே என்கிறீர்களா..? அது ஙனமா..கனமா என்ற விவாதமும் நடந்து வருகிறது என்பதால் அதை இங்கு எடுத்துக் கொள்ளவில்லை )

ஆனால் இந்த ங்எனும் எழுத்தை விட்டுத் தமிழின் இயக்கத்தைக் கற்பனை செய்ய முடியவில்லை. அவ்வளவு முக்கியமான எழுத்துத்தான் இது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இந்த ஒரு மெய்யெழுத்து மட்டுமே பயன்படுகிறது. ஆனால் இதை விட்டுவிட முடியாததால், எந்தப்பயன்பாடும் இல்லாத, இதன் உயிர்மெய் வரிசையையும், ( , ஙா, ஙி, ஙீ,……. ) சேர்த்து, இந்த ஓர் எழுத்திற்காகத்  தமிழ் தனது எழுத்து வரிசையில் வைத்திருக்கிறது.

அப்படியானால் ங் போல் வளை என்றுதானே சொல்லி இருக்க வேண்டும்? ஙப்போல் வளை என்றது ஏன் என்கிறீர்களா?

முதல்காரணம்,

 பழைய வாசிப்பில், ஙப்போல் இன்றிருப்பதை, ங் போல் என்றும் படிக்கலாம். புள்ளி இருக்காது.

இரண்டாவது காரணம், தமிழ் மரபில் மெய்யெழுத்துகள், சொல்லுக்கு முதலில் வராது.

மூன்றாவது காரணம், அவ்வையார், உயிர்மெய்வரிசையில் ஆத்திச்சூடியை அமைக்கும் போது, எனும் எழுத்தில் தொடங்கும் சொல்லைக் காணாமல், அவ்வெழுத்தையே பயன்படுத்தி விட்டது.

திருக்குறளில் சுற்றந்தழால், என்றொரு அதிகாரம் உள்ளது. அதன் பொருள், ஒருவன் தன்னுடைய சுற்றத்தை நீங்காமல் தன்னோடு வைத்துப் பாதுகாத்துக் கொள்ளுதல்.

இதைத்தானே ங்செய்து கொண்டிருக்கிறது?

ஙப்போல் வளை

ங எனும் ஓரெழுத்து தனது பயன்பாட்டினால், தன்னைச் சார்ந்த உயிர் மெய்களையும் தன்னுடன் வைத்துக் காப்பது போல, ஒருவன் தன்னுடைய சுற்றத்தை அணைத்துக் காக்க வேண்டும்.//


ஆசிரியர் அவர்கள் எழுதிய பதிவு இது

ங்சொல்வது என்ன? http://oomaikkanavugal.blogspot.com/2014/12/blog-post_29.html  


கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று” –  என்ற பாடலை, கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)



               (ALL PICTURES THANKS TO “GOOGLE”)


49 comments:

  1. ஆகா
    இப்பதிவினை நானும் படித்தேன் ஐயா
    இதுவரை அறியாத செய்திதான்
    தங்களின் நீண்ட கால கேள்விக்கும் விடை கிடைத்திருக்கிறது
    ஊமைக் கனவுகள் ஜோச்ப் விஜு பாராட்டிற்கு உரியவர்
    பாராட்டுவோம்
    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. வணக்கம் !

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் முழுதும் என்ற கூற்றுக்கு
    இணங்க இன்றைய பகிர்வானது மிகவும் சிறப்பான தொண்றாக விளங்குகின்றது !
    நான் ஏற்கனவே இப் பகிர்வைப் படித்துள்ளேன் ஆதலால் மனதிற்குக் கூடுதல்
    இன்பம் கிட்டியுள்ளது இன்று தங்களால் ! வாழ்த்துக்கள் ஐயா இனிய புத்தாண்டு
    வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  3. அருமையான பதிவு அது. ரசித்துப் படித்தேன்.விஜூ போன்ற தமிழறிவு கொண்ட இன்னும் நிறையப் பேர் வலைப் பக்கம் வந்து தமிழ்த் தகவல்களை வரும் புத்தாண்டு 2015ல் தருவார்கள் என்று நம்புவோம்.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    தொடருகிறேன் பின்பு வந்து விரிவாக கருத்து தருகிறேன்..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. எனக்கும் பல காலம் இருந்த ஐயம் தங்களின் பதிவால் நீங்கியது. பகிர்ந்த தங்களுக்கும் ஐயத்தை போக்கிய வலைப் பதிவர் ஆசிரியர் திரு ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்! எழுத்தாளர் திரு இராஜேந்திரகுமார் அவர்கள் இந்த ‘ஙே’ வை அதிகம் தனது கதைகளில் அதிகம் உபயோகிப்பார். சொல்லப்போனால் இதை முதன்முதல் அவர்தான் உபயோகப்படுத்தினார் என எண்ணுகிறேன். நீங்கள் கூட இந்த பதில் ‘ஙே என்று விழித்தேன்.’என்று எழுதியிருக்கிறீர்கள். வேறு யாரேனும் ‘ங்‘ எனும் எழுத்தைத் தவிர, அதன் உயிர்மெய் வடிவங்கள் பெற்று வரும் எழுத்துக்களை பயன்படுத்தியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  6. அய்யா வணக்கம்,
    என்னையும் பொருட்படுத்தித் தங்கள் வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அய்யா!
    த ம 6

    ReplyDelete
  7. "ஙே" அதிகம் பயன்படுத்தியது நம்ம மின்னல் வரிகள் வாத்தியார்...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. பிறந்த மழலை முதலில் உதிர்க்கும் ஒலிமுத்து - ’’ ங் ‘’ ..

    தங்களின் வினாவிற்கு நல்ல பதில் கிடைத்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!..

    ReplyDelete

  9. வணக்கம் ஐயா, ஆத்திச்சூடி பற்றிய தகவல் அருமை. பலருக்கும் தெரியாத விளக்கம் என்பதால், அதைக்கூறிய ஜோசப் விஜூ அவர்களுக்கும் நன்றி!
    ....
    ஐயா. தங்கள் தகவலுக்காக... பிளாக்கரில் எனது வலைப்பக்கம் இருக்கிறது. சிரமப்பட்டு அதை தமிழ் மணத்திலும் இணைத்து விட்டேன். ஆனால், நான் வலைப்பக்கத்தின் பெயர் அடையாளத்தில் செய்த மாற்றம் காரணமாக, தமிழ் மணம் ஏற்க மறுக்கிறது. மீண்டும் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளேன். காத்திருப்பில் இருக்கிறது. அந்த வலைப்பக்கத்திலும் அவ்வப்போது பதிவுகள் போடுவது வழக்கம். தங்கள் பார்வைக்காக இந்த பதிவு, ஐயா http://migavumnallavan.blogspot.in/2014/11/blog-post_4.html

    ReplyDelete
  10. ஊமைக்கனவுகள் தளத்தில் படித்தேன்! உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் நல்ல விளக்கம் தந்து அசத்திவிட்டார் விஜு அவர்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  11. உங்க அனுபவத்தோட இந்த பதிவை கலந்து அறிமுகம் செய்தது அருமையா இருந்தது அண்ணா! மணப்பாறையில் தோன்றிய சந்தேகத்துக்கு திருச்சியில் விடை கிடச்சுருக்கு:)))

    ReplyDelete
  12. நானும் இன்று இதைத் தெரிந்துகொண்டேன்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  13. திரு சென்னை பித்தன் அவர்களின் இன்றைய
    நான் பேச நினைப்பதெல்லாம் பதிவை பாருங்கள். ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது உங்களுக்கு!

    ReplyDelete
  14. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

    வலைப் பூ நண்பரே / சகோதரியே!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  15. இத்தனை காலம் உறுத்திக் கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்த இவ்வாண்டு மிகச் சிறந்த ஆண்டுதான் இல்லையா :)
    த ம 8

    ReplyDelete
  16. இந்த ங பற்றி விஜு ஆசானின் தளத்திலும் படித்தோம். தாங்களும் இங்கு....நல்ல கேள்விக்கு தங்களுக்கு விடையும் கிடைத்தது....வலைட்தளத்தின் மூலம்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  17. அன்பார்ந்த தமிழ் வலையுலக நண்பர்களே! கடந்த இரண்டு நாட்களாக நேறு மாலை முதல் நான் வீட்டில் இல்லை. திருச்சி டவுனில் மருத்துவ மனை ஒன்றினில், ICU வில் இருக்கும் எனது சின்னம்மாவை பார்த்து வரச் சென்று விட்டேன். இதனால் அலைச்சல். எனவே உடனுக்குடன் எனது பதிவினில் மறுமொழிகளையும், மற்ற பதிவுகளில் கருத்துரையும் தர இயலாமல் போயிற்று. மறுமொழிகள் எழுதிட தாமதம் ஆனதற்கு இதுவே காரணம். அன்பர்கள் மன்னிக்கவும்.

    ReplyDelete
  18. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )

    அன்பு ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கும், புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  19. மறுமொழி > அம்பாளடியாள் said...

    சகோதரி அவர்களுக்கு வணக்கம். தங்களின் அன்பான கருத்துரைக்கும், புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  20. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    // அருமையான பதிவு அது. ரசித்துப் படித்தேன்.விஜூ போன்ற தமிழறிவு கொண்ட இன்னும் நிறையப் பேர் வலைப் பக்கம் வந்து தமிழ்த் தகவல்களை வரும் புத்தாண்டு 2015ல் தருவார்கள் என்று நம்புவோம். //

    நானும் உங்களோடு எதிர் பார்க்கிறேன், அய்யா! தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  21. மறுமொழி > ரூபன் said... (1,2)

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம் தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  22. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.


    // எனக்கும் பல காலம் இருந்த ஐயம் தங்களின் பதிவால் நீங்கியது. பகிர்ந்த தங்களுக்கும் ஐயத்தை போக்கிய வலைப் பதிவர் ஆசிரியர் திரு ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!//

    நான் ஆசிரியர் திரு ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) பதிவில் மட்டும் எனது நன்றியையும், கருத்துரையையும் மட்டும் எழுதலாம் என்றுதான் இருந்தேன். ஆனாலும், வலைப்பதிவினில் சிறந்த தமிழ் பணியாற்றி அவருக்கு அதைவிட மரியாதை செய்ய வேண்டும் என்பதனால் தனிப் பதிவாக எழுதினேன்.

    // எழுத்தாளர் திரு இராஜேந்திரகுமார் அவர்கள் இந்த ‘ஙே’ வை அதிகம் தனது கதைகளில் அதிகம் உபயோகிப்பார். சொல்லப்போனால் இதை முதன்முதல் அவர்தான் உபயோகப்படுத்தினார் என எண்ணுகிறேன். நீங்கள் கூட இந்த பதில் ‘ஙே என்று விழித்தேன்.’என்று எழுதியிருக்கிறீர்கள். வேறு யாரேனும் ‘ங்‘ எனும் எழுத்தைத் தவிர, அதன் உயிர்மெய் வடிவங்கள் பெற்று வரும் எழுத்துக்களை பயன்படுத்தியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. //

    எழுத்தாளர் ராஜேந்திரகுமார் நாவல்களில் ஒன்று கூட இதுவரை நான் படித்ததில்லை. எனக்கே இப்படி எப்படி படிக்காமல் போனோம் என்று ஆச்சரியயமாக உள்ளது.


    ReplyDelete
  23. //ங எனும் ஓரெழுத்து தனது பயன்பாட்டினால், தன்னைச் சார்ந்த உயிர் மெய்களையும் தன்னுடன் வைத்துக் காப்பது போல, ஒருவன் தன்னுடைய சுற்றத்தை அணைத்துக் காக்க வேண்டும்.//

    மிகவும் அருமையான விளக்கம். எனக்கும் இது புதிய செய்தியும் கூட. பகிர்வுக்கு நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  24. அண்ணா தங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  25. ங் வைத்து இவ்வளவு பதிவுகளா ஆச்சர்யமாக இருக்கிறது
    இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...
    தங்களின் சின்னம்மா நலமுடன் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  26. மறுமொழி > ஊமைக்கனவுகள். said...

    // அய்யா வணக்கம், என்னையும் பொருட்படுத்தித் தங்கள் வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அய்யா!
    த ம 6 //

    ஆசிரியர் திரு ஜோசப் விஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் தொடங்கியதும், உங்களையும், மணவை ஜேம்ஸ் அவர்களையும் நேரில் சந்திக்கலாம் என்று இருக்கிறேன்.

    தங்களுக்கு எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // "ஙே" அதிகம் பயன்படுத்தியது நம்ம மின்னல் வரிகள் வாத்தியார்... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றியும், புத்தாண்டு நல்வாழ்த்துக்களும். ” ஙே” வும் மின்னல் வரிகளும்” என்ற தலைப்பில் நீங்கள் ஒரு பதிவினைத் தரலாமே!

    ReplyDelete
  28. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர், தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    // பிறந்த மழலை முதலில் உதிர்க்கும் ஒலிமுத்து - ’’ ங் ‘’ ..
    தங்களின் வினாவிற்கு நல்ல பதில் கிடைத்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!.. //

    பிறந்த மழலை முதன் முதலில் உதிர்க்கும் ஒலிமுத்து - ’’ ங் ‘’ என்ற தகவல் எனக்கு புதிய செய்தி.

    ReplyDelete
  29. மறுமொழி > ஆறுமுகம் அய்யாசாமி said...

    // வணக்கம் ஐயா, ஆத்திச்சூடி பற்றிய தகவல் அருமை. பலருக்கும் தெரியாத விளக்கம் என்பதால், அதைக்கூறிய ஜோசப் விஜூ அவர்களுக்கும் நன்றி!//

    ஆமாம் அய்யா! வலைப் பதிவினில், அவர் செய்து வரும் தமிழ் மொழி தொண்டினுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

    பிளாக்கரில் தங்களது வலைப்பக்கம் புத்தாண்டின் நல்ல செய்தி. விரைவில் இந்த வலைத்தளம் வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  30. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    // ஊமைக்கனவுகள் தளத்தில் படித்தேன்! உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் நல்ல விளக்கம் தந்து அசத்திவிட்டார் விஜு அவர்கள்! பகிர்வுக்கு நன்றி! //

    சகோதரர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  31. மறுமொழி > Mythily kasthuri rengan said...

    // உங்க அனுபவத்தோட இந்த பதிவை கலந்து அறிமுகம் செய்தது அருமையா இருந்தது அண்ணா! மணப்பாறையில் தோன்றிய சந்தேகத்துக்கு திருச்சியில் விடை கிடச்சுருக்கு:))) //

    ஆமாம் சகோதரி! அங்கே அவருடைய அனுபவமும் தமிழும் இணைந்து செல்ல, இங்கே எனது வங்கி பணிக்கால அனுபவம்.
    உங்களது இயல்பான தமிழ்மொழி நடைக்கு நன்றி.

    ReplyDelete
  32. மறுமொழி > Ranjani Narayanan said...

    // நானும் இன்று இதைத் தெரிந்துகொண்டேன்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! //

    சகோதரி அவர்களுக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  33. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // திரு சென்னை பித்தன் அவர்களின் இன்றைய
    நான் பேச நினைப்பதெல்லாம் பதிவை பாருங்கள். ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது உங்களுக்கு! //

    உங்கள் தகவலைப் பார்த்ததும், அய்யா சென்னை பித்தன் அவர்களது வலைப்பக்கம் சென்று கருத்துரையும் நன்றியும் சொல்லி விட்டேன். அய்யாவின் தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  34. வணக்கம்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    HAPPY NEW YEAR 2015 ! :)

    அன்புடன் VGK

    ReplyDelete
  35. அருமையான விளக்கம். இதுவரை இப்படி படித்ததில்லை.... நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  36. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  37. மறுமொழி > yathavan nambi said...

    அன்பு நண்பருக்கு நன்றி! தங்களுக்கு எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தங்கள் வலைப்பக்கம் மீண்டும் விரைவில் வருகிறேன்.

    ReplyDelete
  38. மறுமொழி > Bagawanjee KA said...

    2014 இல், தமிழ் மணத்தில் தங்கள் வலைப் பதிவு TRAFFIC RANAK எண். 1 – இல் (முதலாவதாக) வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.


    // இத்தனை காலம் உறுத்திக் கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்த இவ்வாண்டு மிகச் சிறந்த ஆண்டுதான் இல்லையா :)
    த ம 8 //
    நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே! தங்களுக்கு எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரர் தில்லைக்கது V துளசிதரன் மற்றும் சகோதரி கீதா அவர்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.

    2014 இல், தமிழ் மணத்தில் தங்கள் வலைப் பதிவு TRAFFIC RANAK எண். 4 – இல் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.



    ReplyDelete

  40. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தங்களது கருத்துரைக்கு நன்றி.

    இனிமேல்தான், படிக்காமல் விட்டுப் போன உங்களது பதிவுகளையும் மற்றவர்கள் பதிவுகளையும் படிக்க வேண்டும்.
    காரணத்தை மேலே சொல்லியுள்ளேன்.

    ReplyDelete
  41. மறுமொழி > Mythily kasthuri rengan said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி.

    2014 இல், தமிழ் மணத்தில் தங்கள் வலைப் பதிவு TRAFFIC RANAK எண். 6 – இல் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    நண்பர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    இனிமேல்தான், படிக்காமல் விட்டுப் போன உங்களது பதிவுகளையும் மற்றவர்கள் பதிவுகளையும் படிக்க வேண்டும்.
    காரணத்தை மேலே சொல்லியுள்ளேன்.

    ReplyDelete
  43. புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் கட்டுரை சிறப்பானது. சரியான விளக்கம்

    ReplyDelete
  44. ரஞ்சனியின் வலைச்சரத்திலிருந்து வந்தேன். விளக்கம் அருமை, பொருத்தமாகவும் இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  45. மறுமொழி > அழ. பகீரதன் said...

    // புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் கட்டுரை சிறப்பானது. சரியான விளக்கம் //

    நன்றி அய்யா. தாமதமான எனது மறுமொழிக்கு மன்னிக்கவும். விரைவில் உங்கள் வலைப் பக்கம் வருகிறேன்.

    ReplyDelete
  46. மறுமொழி > Geetha Sambasivam said...

    // ரஞ்சனியின் வலைச்சரத்திலிருந்து வந்தேன். விளக்கம் அருமை, பொருத்தமாகவும் இருக்கிறது. நன்றி. //

    நன்றி அம்மா.

    ReplyDelete
  47. அருமை, மிக்க மகிழ்ச்சி..அருமையான பயனுள்ள தகவல்!!! பலரும் அறியாச் செய்தி.
    கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு..
    இத்தமிழ்க் கடலில் தான் எத்தனை நுட்பமான அற்புதங்கள்...

    விடைகண்ட ஜோசப் விஜூ அவர்களுக்கும் பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்! பாராட்டுக்கள்..

    இதுபோன்று தங்களுக்குத் தெரிந்த தமிழின் நுட்பங்களைப் வாசகர்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கோருகிறேன்.

    ReplyDelete