Wednesday, 17 December 2014

மியாவ் மியாவும் நாய்க் குட்டியும்



எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் அவரும், அவரது மனைவியும்தான் இருக்கிறார்கள். பிள்ளைகள் சென்னை மற்றும் பெங்களூரில். அதனால் அடிக்கடி பிள்ளைகள் இருக்கும் இடத்திற்கு சென்று விடுவார்கள். அவர் தனது வீட்டு மாடியில் கீற்றுக் கொட்டகை ஒன்றை போட்டு , ஒரு அறையைப் போல் தடுத்து, பழைய சாமான்கள் போட்டு வைக்கும் ஸ்டோர் ரூமாகவைத்து இருந்தார். அவர் ஒரு தடவை ( கடந்த ஏப்ரல் மே ) வெளியூர் போன சமயம், அந்த அறையில் ஒரு பெண்பூனை குடித்தனம் நடத்தி குட்டிகள் போட்டு குடும்பம் நடத்தியது. அவர் ஊரிலிருந்து வந்ததும் முதல் வேலையாக அவைகளை பயமுறுத்தி வெளியே அனுப்பினார். மேலேயிருந்த அவை கீழே வந்தன. கீழேயும் அவர் பயமுறுத்த எங்கள் வீட்டு மாடிப்படிகள் வழியே மேலே இருந்த கெஸ்ட் ஹவுஸுக்கு வெளியே இருந்த ஷெட்டில் அடைக்கலம் ஆகி விட்டன. தாய், குட்டிகள் எல்லாமே வெள்ளை.

( படம் மேலே) பூனைகள் வந்த புதிதில்

எங்கள் வீட்டில் இருந்த ஜாக்கிஎன்ற செல்லநாய் இருந்தவரை எதுவும் உள்ளே வராது. அது இறந்து விட்ட படியினால், இப்போது தடுக்க யாரும் இல்லை. எங்கள் ஜாக்கிக்குப் பிறகு நாங்களும் எந்த செல்லப் பிராணியும் வளர்க்க விரும்பவில்லை. எனவே மேலே இருந்த பூனைகளை விரட்டி விட்டேன். அவைகளோ வீட்டை ஒட்டி இருந்த போர் தண்ணீர் இறைக்கும் மோட்டார் அறைக்குள் சென்று விட்டன. ஒரு கட்டத்தில் என்னைக் கண்டாலே தாய்ப்பூனை, ஓடிவிடும். அந்த குட்டிப் பூனைகள் மிரள ஆரம்பித்து கத்த ஆரம்பித்தன. இரக்கப்பட்டு, சரி இருந்து போகட்டும் என்று விட்டு விட்டேன். அப்புறம் எங்கள் வீட்டில் நான், எனது மனைவி, மகன் மூவரும் அவற்றின் மீது பரிதாப்பட்டு பால், உணவு வைக்க அவைகள் இப்போது தங்கள் அன்பினால் எங்களை நண்பர்களாக மாற்றி விட்டன.





கடந்த ஆறு மாதத்தில் நன்கு வளர்ந்து விட்டன. அந்த பூனைகள் வீட்டு வராண்டாவோடு சரி. அப்புறம் வீட்டின் கொல்லைப்புறம், செடிகள் உள்ள தோட்டம் காலியிடத்தோடு வேறு எங்கும் தொந்தரவு செய்வதில்லை. இவைகளுக்கு உணவு வைக்கும்போது எங்கிருந்தோ அக்கம் பக்கம் இருக்கும் இவைகளின்  சொந்தக்கார பூனைகளும் வந்து விடும். அவைகளும் இப்போது நண்பர்களே.

(படம் மேலே)வந்த பூனைகளின் சொந்தங்கள்

(படம் மேலே) கடந்த எனது பதிவொன்றில் வந்த படம்

சென்ற மாதம் சில நாட்களாக எங்கள் பகுதியில் நல்ல மழை. மேலும் ஒரே குளிர். அருகில் உள்ள மைதானத்தில் இருந்து, தாயைப் பிரிந்த  குட்டிநாய் ஒன்று, எங்கள் வீட்டு இரும்பு கேட் இடைவெளி வழியாக உள்ளே வந்து விட்டது.. பார்க்க பாவமாக இருந்தது. விரட்ட மனம் இல்லை. மழை முடியும் மட்டும் இருக்கட்டும் என்று, அதற்கு சாப்பிட பால் கொடுத்தோம்.

மழை விட்டும் அது போக வில்லை. இங்கேயே தங்கி விட்டது. நாங்களும் அதனைக் கட்டி போடவில்லை. அதனால் வீட்டுக்கு வெளியே போய் விட்டு, மீண்டும் உள்ளே வந்து விடும். ஆரம்பத்தில் இங்கே இருந்த பூனைகள் குட்டி நாயைக் கண்டதும் அஞ்சி ஓடின. இப்போது குட்டி நாய், பூனைகள் எல்லோரும் நண்பர்கள். அருகருகே ஒன்றாய் இருந்து சாப்பிடுகின்றன; விளையாடுகின்றன; ஒன்றையொன்று கட்டி பிடித்தபடி தூங்குகின்றன.








குட்டி நாய் கொஞ்சம் பெரியதானதும், எங்கள் வீட்டு கிரில் கேட் இடைவெளி வழியாக உள்ளே வரமுடியாது போய்விடும். அப்போது அப்படியே வெளியில் (எங்கள் கிராமத்து நாய்களைப் போன்று) விட்டு விடலாம் என்று இருக்கிறோம்

பழகும் விதத்தில் பழகிப்பார்த்தால்
பகைவன்கூட நண்பனே
பாசம் காட்டி ஆசைவைத்தால்
மிருகம் கூட தெய்வமே

வளர்த்தப் பிள்ளையும் மாறிவிடும்
வாழும் உறவும் ஓடிவிடும்
வாயில்லாத உயிரை வளர்த்தால்
காடுவரைக்கும் கூட வரும்.

அன்புகாட்டும் முகம் தெரியும்
அணைக்கும் நண்பன் குரல் தெரியும்
பண்பு தெரியும் நன்றி தெரியும்
பதில் சொல்லாமல் துணைபுரியும்

சிரிக்கும் உறவில் நெருக்கமில்லை
சேர்ந்து துடிக்கும் பாசமில்லை
பிரியும் பொழுது பெருகும் கண்ணீர்
பேசும் பேச்சில் வருவதில்லை!

           -  பாடல்: கண்ணதாசன் ( படம்: தெய்வச்செயல்)
               

46 comments:

  1. செல்லப் பிராணிகள் இருப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும். போட்டோக்களைப் பார்ப்பதே மனதை நெகிழ வைக்கிறது.

    ReplyDelete
  2. படங்கள் அருமை பிறகு வருகிறேன்

    ReplyDelete
  3. அன்றே நினைத்தேன்.. விளக்கமாக வேறு ஒரு பதிவு வரும் என்று!..

    மனிதர்களாயினும் விலங்குகளாயினும் சரி -

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!..

    வாழ்க மனித நேயம்!.. வளர்க இனிய சுற்றுச்சூழல்!..

    ReplyDelete
  4. ம்யாவ்ன்னதும் ஓடி வந்தேன். பதிவும் படங்களும் மனதை அப்படியே நெகிழச்செய்தன.

    நல்லா இருங்க.

    நம்மவீட்டு ராஜலக்ஷ்மி கூட நிலநடுக்கம் நடந்தபோது வழி தவறியவள்தான். ஓனர் தேடுறாங்களோ என்னவோ:( நம்மிடம் வந்தே வருசம் மூணாகுது.

    ReplyDelete
  5. நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றிகள்.

    //வளர்த்தப் பிள்ளையும் மாறிவிடும்
    வாழும் உறவும் ஓடிவிடும்
    வாயில்லாத உயிரை வளர்த்தால்
    காடுவரைக்கும் கூட வரும்.//

    அருமையான + உண்மையான வரிகள் !

    ReplyDelete
  6. பழகும் விதத்தில் பழகிப்பார்த்தால்
    பகைவன்கூட நண்பனே
    பாசம் காட்டி ஆசைவைத்தால்
    மிருகம் கூட தெய்வமே

    அழகான பாடல்..

    ReplyDelete
  7. உண்மையில் வாயில்லா ஜீவன்கள் மனிதர்களைவிட நன்றியுணர்வு கொண்டவை என்பது உண்மை. தாங்கள் அவைகளுக்கு செய்யும் சேவைக்கு பாராட்டு.
    அழகான படங்களும் அதற்கேற்ற கவிஞரின் பாடல் வரிகளும் அருமை.

    ReplyDelete
  8. பாசம் காட்டி ஆசைவைத்தால்
    மிருகம் கூட தெய்வமே//

    அழகான அன்பான பதிவு.
    உங்கள் படங்களை பார்த்தபோது அந்த பாட்டு தான் நினைவுக்கு வந்தது.
    பின்னால் வந்து விட்டது அந்த பாட்டு.
    பூனையும்,நாயும் பகை என்பார்கள்,அவை இரண்டும் அன்பாய் ஒன்றின் மேல் ஒன்று தலைவைத்து படுத்து இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    அன்பு அனைத்து உயிர்களுக்கும் பொது என்பதை நிதர்சனம் சொல்லும் படங்கள் , பதிவு.
    உங்கள் அன்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. பூனைகள் அழகு! சிறுவயதில் எங்கள் வீட்டில் பூனை வளர்த்த நியாபகத்தை கிளறிவிட்டீர்கள்!

    ReplyDelete
  10. அருமையான பதிவு! பாடல் வரிகளுக்கேற்றது போல் தாங்களும்...என்ன ஒரு அழகான படங்கள். மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன பூனைகளும் அந்த நாய் குட்டியும். நாங்களும் செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் உங்கள் பதிவை மிக மிக ரசித்தோம் ஐயா!

    ReplyDelete
  11. மறுமொழி > Packirisamy N said...

    // செல்லப் பிராணிகள் இருப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும். போட்டோக்களைப் பார்ப்பதே மனதை நெகிழ வைக்கிறது. //

    சகோதரர் N.பக்கிரிசாமி அவர்களின், உளவியல் ரீதியான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  12. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    // படங்கள் அருமை பிறகு வருகிறேன் //

    சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  13. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

    // நல்ல அனுபவம். //

    அய்யா அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  14. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    // அன்றே நினைத்தேன்.. விளக்கமாக வேறு ஒரு பதிவு வரும் என்று!.. மனிதர்களாயினும் விலங்குகளாயினும் சரி - அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!.. வாழ்க மனித நேயம்!.. வளர்க இனிய சுற்றுச்சூழல்!.. //

    ஆமாம் சகோதரரே! நீங்கள் சொல்வது சரிதான். நமது சைவசமயத்தில் “அன்பே சிவம்” என்றுதான் சொல்லுகிறார்கள். ஆங்கிலத்திலும் “ LOVE IS GOD” – என்றும் “ GOD IS LOVE” என்றும் கூறுகிறார்கள். அன்பே வாழ்வின் சந்தோசத் திறவுகோல்.


    ReplyDelete
  15. மறுமொழி > துளசி கோபால் said...

    // ம்யாவ்ன்னதும் ஓடி வந்தேன். பதிவும் படங்களும் மனதை அப்படியே நெகிழச்செய்தன. நல்லா இருங்க. //

    துளசி டீச்சரின் வாழ்த்துக்கு நன்றி.

    // நம்மவீட்டு ராஜலக்ஷ்மி கூட நிலநடுக்கம் நடந்தபோது வழி தவறியவள்தான். ஓனர் தேடுறாங்களோ என்னவோ:( நம்மிடம் வந்தே வருசம் மூணாகுது. //

    என்ன இருந்தாலும், உங்கள் வீட்டு செல்லத்திற்கு நீங்கள் கொடுக்கும் செல்லம் போல் என்னால் இருக்க இயலாது. உங்கள் செல்லம் “கொடுத்து வைத்தவள்”

    ReplyDelete
  16. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றிகள். //

    அன்பின் V.G.K அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  17. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  18. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete

  19. மறுமொழி > கோமதி அரசு said...

    // பாசம் காட்டி ஆசைவைத்தால்
    மிருகம் கூட தெய்வமே//
    அழகான அன்பான பதிவு. உங்கள் படங்களை பார்த்தபோது அந்த பாட்டு தான் நினைவுக்கு வந்தது. பின்னால் வந்து விட்டது அந்த பாட்டு.//

    நாய்க்குட்டியையும் பூனைகளையும் ஒன்றாகப் படம் எடுத்த போது இந்த பாடல்தான் சட்டென நினைவுக்கு வந்தது. அதனால்தான் பதிவிலும் மேற்கோளாக எழுதினேன்.

    // பூனையும்,நாயும் பகை என்பார்கள்,அவை இரண்டும் அன்பாய் ஒன்றின் மேல் ஒன்று தலைவைத்து படுத்து இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    அன்பு அனைத்து உயிர்களுக்கும் பொது என்பதை நிதர்சனம் சொல்லும் படங்கள் , பதிவு. உங்கள் அன்புக்கு வாழ்த்துக்கள்.//

    பொதுவாகவே வீடுகளில் வளர்ப்புப் பிராணிகளாக நாயும், பூனையும் ஒன்றாக வளர்க்கப்படும்போது அவை சண்டை போட்டுக் கொள்வதில்லை. ஒன்றுக்கொன்று அன்பாகவே இருக்கின்றன. தங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  20. ////பழகும் விதத்தில் பழகிப்பார்த்தால்
    பகைவன்கூட நண்பனே
    பாசம் காட்டி ஆசைவைத்தால்
    மிருகம் கூட தெய்வமே///
    தங்களின் கருணை உள்ளத்திற்கு
    நன்றி சொல்ல வேண்டும் ஐயா
    வெவ்வேறு விலங்கின வகைகள்
    ஒரே இனமாக வாழ்கின்றன,
    மனிதன் மட்டும் பல இனமாக வாழ்கின்றானே

    ReplyDelete
  21. பொருத்தமான கண்ணதாசன் பாயல் அருமை, நண்பரே,,,,

    ReplyDelete
  22. வணக்கம்
    ஐயா.
    விளங்கமும் படங்களும் மிக அருமையாக உள்ளது அதிலும் தாங்கள் சொல்லிய கண்ணதாசன் பாடல் மிக சிறப்பாக உள்ளது.. த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  23. வணக்கம்
    ஐயா
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  24. மிகவும் ரசித்துப் பதிவிட்டிருக்கிறீர்கள்
    படிப்பவர்களும் ரசிக்கும்படியாகவும்
    படங்களும் கவியரசரின் கவிதையும்
    இணைத்தத விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. படங்களும் அனுபவங்களும் அருமை...

    அன்பு எதையும் சாதிக்கும்...

    ReplyDelete
  26. மறுமொழி >‘தளிர்’ சுரேஷ் said...

    // பூனைகள் அழகு! சிறுவயதில் எங்கள் வீட்டில் பூனை வளர்த்த நியாபகத்தை கிளறிவிட்டீர்கள்! //

    அன்பு நண்பர் தளிர்’ சுரேஷ அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  27. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    // அருமையான பதிவு! பாடல் வரிகளுக்கேற்றது போல் தாங்களும்...என்ன ஒரு அழகான படங்கள். மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன பூனைகளும் அந்த நாய் குட்டியும். நாங்களும் செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் உங்கள் பதிவை மிக மிக ரசித்தோம் ஐயா! //

    சகோதரர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
  28. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete

  29. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    அன்பு நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  30. மறுமொழி > ரூபன் said... ( 1 )

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.

    ReplyDelete
  31. கவிஞர் ரூபன் அவர்களுக்கு மீண்டும் வணக்கம்

    // கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்//

    நான் எப்போதும் உங்கள் வாசகன்தான். பெரும்பாலும் சிருங்கார ரசம் கொண்ட கவிதைளை படிப்பதோடு சரி.

    ReplyDelete

  32. மறுமொழி > Ramani S said...

    // மிகவும் ரசித்துப் பதிவிட்டிருக்கிறீர்கள் படிப்பவர்களும் ரசிக்கும்படியாகவும் படங்களும் கவியரசரின் கவிதையும்
    இணைத்தத விதம் அருமை பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் //

    அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு ஊக்கம் கொடுத்து வரும் கவிஞர் எஸ். ரமணி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  33. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // படங்களும் அனுபவங்களும் அருமை...
    அன்பு எதையும் சாதிக்கும்... //

    அன்புள்ளம் கொண்ட திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  34. மிருகங்களுக்கு இடையே உள்ள புரிந்துணர்வு மனித‌ர்களிடம் இல்லை.

    ReplyDelete
  35. படங்களும் அந்தச் சம்பவங்களை நீங்கள் வர்ணித்திருந்த விதமும் சுகமாக இருந்தன. கூடவே எல்லாவற்றுக்கும் பொருத்தமாக கவியரசரின் பாடல் வரிகளைப் போட்டு அழகாக நிறைவு செய்திருக்கிறீர்கள்.
    ஆமாம், திருச்சியில் அந்தப் பகுதி கோல்டன் ராக் பகுதியோ? அங்கே எங்கள் உறவினர்கள் இருக்கிறார்கள். நாங்கள் குடும்பத்துடன் வரும்போது அந்தப் பகுதிக்கு வருவோம்.

    ReplyDelete
  36. செல்லப் பிராணிகளின் படங்களும், தகவல்களும் மனதை நெகிழ வைத்தன.

    ReplyDelete
  37. நாயிற் கடையேனாய் என்பார் ஒரு நாயன்மார். இருந்தபோதிலும் அது காட்டும் அன்பிற்கும் நன்றிக்கும் ஈடு இணை எதுவுமில்லை. பதிவுகளுடன் புகைப்படங்களைப் பார்க்கும்போது படிப்பவர் மனதிலும் நாய் வளர்க்கும் ஆசை வந்துவிடும் போலுள்ளது.

    ReplyDelete
  38. healthguard என்று அச்சிடப் பட்டிருக்கும் பெட்டிக்கருகில் உள்ள பூனைகளும் கூட ,உங்களுக்கு healthguard தான் இல்லையா ?:)
    த ம 9

    ReplyDelete
  39. மறுமொழி > வர்மா said...

    // மிருகங்களுக்கு இடையே உள்ள புரிந்துணர்வு மனித‌ர்களிடம் இல்லை. //

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்து கருத்துரை தந்த வர்மா சகோதரருக்கு நன்றி.

    ReplyDelete
  40. மறுமொழி > Amudhavan said...

    // படங்களும் அந்தச் சம்பவங்களை நீங்கள் வர்ணித்திருந்த விதமும் சுகமாக இருந்தன. கூடவே எல்லாவற்றுக்கும் பொருத்தமாக கவியரசரின் பாடல் வரிகளைப் போட்டு அழகாக நிறைவு செய்திருக்கிறீர்கள். //
    அய்யா அமுதவன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி

    //ஆமாம், திருச்சியில் அந்தப் பகுதி கோல்டன் ராக் பகுதியோ? அங்கே எங்கள் உறவினர்கள் இருக்கிறார்கள். நாங்கள் குடும்பத்துடன் வரும்போது அந்தப் பகுதிக்கு வருவோம். //

    நாங்கள் இருக்கும் பகுதி ஏர்போர்ட்டிற்கும் கருணாநிதி நகருக்கும் இடைப்பட்ட பகுதி. வாருங்கள் அய்யா.


    ReplyDelete

  41. மறுமொழி > ADHI VENKAT said...

    // செல்லப் பிராணிகளின் படங்களும், தகவல்களும் மனதை நெகிழ வைத்தன. //

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  42. மறுமொழி > Dr B Jambulingam said...

    // நாயிற் கடையேனாய் என்பார் ஒரு நாயன்மார். இருந்தபோதிலும் அது காட்டும் அன்பிற்கும் நன்றிக்கும் ஈடு இணை எதுவுமில்லை. பதிவுகளுடன் புகைப்படங்களைப் பார்க்கும்போது படிப்பவர் மனதிலும் நாய் வளர்க்கும் ஆசை வந்துவிடும் போலுள்ளது. //

    முனைவர் அவர்களின், தமிழ் இலக்கிய மேற்கோளுடன் கூடிய கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  43. மறுமொழி > Bagawanjee KA said...

    // healthguard என்று அச்சிடப் பட்டிருக்கும் பெட்டிக்கருகில் உள்ள பூனைகளும் கூட ,உங்களுக்கு healthguard தான் இல்லையா ?:)
    த ம 9 //

    எதையும் கூர்மையாக கவனிக்கும் கே.ஏ.பகவான்ஜீ கண்களிலிருந்து அந்த அட்டை பெட்டியும் தப்பவில்லை என்று நினைக்கிறேன். அந்த அட்டை பெட்டிகளை வேறு இடத்தில் வைப்பதற்காக எடுத்து வைத்தோம். ஆனால் அவை இப்போது அந்த நாய்க்குட்டி மற்றும் பூனைகளுக்கு குளிருக்கு அண்டையாய் ( healthguard ஆக ) உள்ளன. அதனால் அப்படியே விட்டு விட்டோம். கருத்துரை தந்த கே.ஏ.பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.


    ReplyDelete
  44. பூனைகளும் நாயும் ஒன்றாக இருப்பது (பூனையும் நாயும் போல பகைவர்கள் என்று சொல்வார்களே!) அதிசயம் தான். படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. பெரிய சம்சாரி ஆகிவிட்டீர்கள் போலிருக்கிறதே!

    ReplyDelete