Monday, 16 November 2015

எம்.ஆர்.ராதா சினிமா பாடல்கள்




எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்றால் தி.மு.க அனுதாபிகள்தான். சிவாஜி ரசிகர்கள் என்றால் அவர்கள் காங்கிரஸ் பக்கம்தான். எந்த கட்சி சார்பாக இல்லாமலும் மற்ற நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு. அவர்கள் சினிமாவை கலை கலைக்காகவே என்ற நிலையில் நின்று ரசிப்பவர்கள். அந்த வகையில் எம்.ஆர்.ராதா, சந்திரபாபு போன்ற கலைஞர்களுக்கும் ரசிகர்கள் உண்டு. சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவைப் பற்றியும், சினிமா நடிகர்களைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. அவருக்கென்று ஒரு தனி நடிப்பு அவரிடம் இருந்தது போலவே, அவருக்கென்றே சில காட்சி அமைப்புகளும் பாடல்களும் சினிமாவில் அமைக்கப்பட்டன.

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் – (1954)

எம்.ஆர்.ராதா என்றாலே மனக்கண் முன் வந்து நிற்கும் படம் “ரத்தக் கண்ணீர்” தான். 1954 இல் இந்த படம் வந்தபோது நான் பிறந்து இருக்கவில்லை. வளர்ந்து பெரியவனாக ஆன பிறகுதான் இந்த படத்தையே பார்க்க முடிந்தது. புரட்சிகரமான வசனங்கள் நிரம்பிய இந்த படத்தில் வரும்  ”குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்” என்ற பாடல் மறக்க முடியாத ஒன்றாகும்.

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி கொள்வதென்பதேது?
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?

(வசனம்: ஆம், ஆம், வாழ்க்கையில்
குற்றங்களைப் புரிந்த  எனக்கு நிம்மதி ஏது? )

அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது? முடியாது,

(வசனம்: உண்மை, உண்மை என் ஆனந்தம்,
என் மகிழ்ச்சி, என் இன்பம் அத்தனையும்
அற்றுப் போய்விட்டது)
-    பாடல்:  கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி

இந்த பாடலின் இடையிடையே எம்.ஆர்.ராதாவின் கரகரத்த குரலில்  ” ” வாழ்க்கையில் குற்றங்களைப் புரிந்த எனக்கு நிம்மதி ஏது?, ஒழிந்தது, என் ஆணவன், என் கர்வம், என் அகம்பாவம், ‘’ போன்ற வசனங்களும் வரும். இந்த பாடலின் காட்சியில் எம்.ஆர்.ராதாவின் நடிப்பு ரொம்பவும் மிகை என்றும் சொன்னார்கள். ஆனால் இந்த படத்திற்கு இந்த பாடல் காட்சி கொடுத்த பாப்புலாரிட்டியை மறுக்க முடியாது. பாடலைக் கண்டு கேட்டு மகிழ கீழே உள்ள you tube  இணையதள முகவரியினை சொடுக்குங்கள்.
             
 
சின்ன அரும்பு மலரும் (1961)

முன்பெல்லாம் பழைய படங்களை மீண்டும் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றால், காத்து இருக்க வேண்டும். எப்போது போடுவார்கள் என்றே தெரியாது. இப்போது 95% தியேட்டர்கள் (ஏசி உட்பட) மூடப்பட்டு விட்டன. பழைய படங்கள் பார்க்க வேண்டும் என்றால் டிவி தான். என்னைப் போன்றவர்களுக்கு, இண்டர்நெட் வந்த பிறகு யூடியூப் (YOUTUBE) சவுகரியமாகப் போய் விட்டது. நினைத்த நேரத்தில் பிடித்த படத்தை பார்க்க யூடியூப் உதவியாக இருக்கிறது. அப்படி அண்மையில் பார்த்தது,‘பங்காளிகள்’ என்ற திரைப்படம். ஜெமினி கணேசன், எம்.ஆர்.ராதா, அஞ்சலிதேவி, E.V.சரோஜா மற்றும் தேவிகா ஆகியோர்  நடித்தது. இதில் குழந்தைப்பாசம் உள்ளவராக எம்.ஆர்.ராதா பாடும்,

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும்
நான் களிக்கும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே

மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே
மனம் மகிழும் நாள் வரும்
நான் மகிழும் நாள் வரும்

       -  பாடல் கவிஞர் மருதகாசி (பங்காளிகள்)

என்ற பாடல் காட்சி பார்ப்பவர் நெஞ்சை கரைய வைக்கும். பாடலைக் கண்டு கேட்டு மகிழ, கீழே உள்ள you tube இணையதள முகவரியினை சொடுக்குங்கள்.

https://www.youtube.com/watch?v=rigaKnrraZo
 
சொந்தமுமில்லே ஒரு பந்தமுமில்லே (1965)

‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’ என்று ஒரு படம். 1965 இல் வெளிவந்தது. ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் எம்.ஆர்.ராதா நடித்தது. இதில் முடிதிருத்தும் கலைஞராக நடித்து இருப்பார். சலூனில் பணிபுரியும் முடிவெட்டும் மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து எம்.ஆர்.ராதாவும் பாடுவதாக அமைந்த,

சொந்தமுமில்லே பந்தமுமில்லே.....
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்!
நாங்க மன்னருமில்லே மந்திரியில்லே
வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்!
-    பாடல்: கவிஞர் கண்ணதாசன்

என்ற பாடல். இதில் சலூனில் முடிதிருத்தும் கலைஞருக்கும் , வாடிக்கையாளருக்கும் உள்ள உறவு, எம்.ஆர்.ராதா பாணியில் நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது. பாடலைக் கண்டு கேட்டு மகிழ கீழே உள்ள you tube  இணையதள முகவரியினை  சொடுக்குங்கள்.

https://www.youtube.com/watch?v=thhp6yyFoAI
                                                                                                                                                     
இன்னும் சில பாடல்கள் உண்டு. படிப்பவர்களுக்கு நேரம் இருக்காது. எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

                (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES) 

34 comments:

  1. ரத்தக் கண்ணீரின் அந்த பாடல் மிக பிரபலம்! சிவாஜியுடன் ஒரு பாடல் மாமா... மாப்ளே... என்று போட்டி பாடலாக ( உத்தமபுத்திரன் என்று நினைவு) மறக்க முடியாது. பாகப்பிரிவினை படத்தில் கூட ஓர் பாடல் இருப்பதாக நினைவு! சுவாரஸ்யமான பகிர்வு!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. நீயே உனக்கு என்றும் நிகரானவன் – எனத் தொடங்கும், ’பலே பாண்டியா” படப்பாடலில்தான் மாமா மாப்ளே என்று வரும். பாகப்பிரிவினை படத்தில் ‘ஒற்றுமையாய் வாழ்வதாலே’ என்ற பாடல் காட்சியில், வீட்டை இரண்டாக்கி கொண்டு இருப்பார்.

      Delete
  2. அருமையான பாடல் பகிர்வு.

    ReplyDelete
  3. எம் ஆர் ராதாவின் டயலாக் டெலிவரி தனித்துவம் வாய்ந்தது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரி அபயா அருணா அவர்களே! அவருடைய கரகரப்பான குரல் வசனத்தை இன்னும் மறக்க இயலாது. சினிமா பாட்டு புஸ்தகம் காலத்தில், எல்லா பாட்டு புஸ்தகக் கடைகளிலும், எம்.ஆர்.ராதாவின் ‘ரத்தக் கண்ணீர்’ கதை - வசனப் புத்தகம் தொங்கும்.

      Delete
  4. நீங்கள் சொன்னது போல் நடிகவேள் திரு M.R. இராதா அவர்களின் நடிப்பை எல்லா கட்சியையும் சேர்ந்தவர்களும் கட்சி பேதம் பாராட்டாமல் இரசித்தார்கள். அவர் சிவாஜியுடனோ அல்லது எம்ஜியாருடனோ நடித்தாலும் அவரது நடிப்பு எப்போதும் தனியாகவே தெரியும். தமிழ் திரைப்பட உலகத்தின் இன்னொரு மு(சொ)த்து அவர். படத்தில் அவர் பாடிய பாடல்களை வெளியிட்டு பழைய நினைவுகளை கொண்டு வந்தமைக்கு நன்றி!

    அவர் நடித்த ‘இருவர் உள்ளம்’ திரைப்படத்தில் ‘புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை’ என்ற பாட்டையும் மறக்க இயலாது.

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எழுதுவதற்கு என்று ஏதும் தோன்றவில்லை. எனவே ஏற்கனவே எழுதி வைத்திருந்த இந்த பதிவை வெளியிட்டேன்.

      Delete
  5. பாடல்கள் = பாடங்கள்...

    தினமலர் வாரமலரில் "கலகக்காரனின் கதை" ஞாபகம் வந்தது...

    ReplyDelete
  6. நல்ல தகவல்களை பகிர்ந்து இருக்கின்றீர்கள் தொடருங்கள்....
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  7. அருமை நண்பரே,,,பதிவு அருமை...ஆனால் குற்றம் புரிந்தவன் பாடலை எழுதியது கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தஞ்சை ராமைய்யா தாஸ் அல்ல...நன்றி

    ReplyDelete
    Replies
    1. தவறினைச் சுட்டிக்காட்டிய நண்பருக்கு நன்றி. பாடலாசிரியர் தஞ்சை ராமையாதாஸ் என்பதனை, கு.சா.கிருஷ்ணமூர்த்தி என்று பிழை திருத்தம் செய்துள்ளேன் அய்யா!

      Delete
  8. எம்.ஆர்.ராதா சினிமா பாடல்கள் பற்றிய அருமையான அலசல். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    //‘தளிர்’ சுரேஷ் Monday, November 16, 2015 3:04:00 p.m.
    ரத்தக் கண்ணீரின் அந்த பாடல் மிக பிரபலம்! சிவாஜியுடன் ஒரு பாடல் மாமா... மாப்ளே... என்று போட்டி பாடலாக ( உத்தமபுத்திரன் என்று நினைவு) மறக்க முடியாது. //

    அன்புள்ள தளிர் சுரேஷ் சார்,

    அந்த ‘மாமா .... மாப்ளே’ பாடல் மிக அருமையானது. அது இடம் பெற்ற படம் உத்தம புத்திரன் அல்ல. அது ’பலே பாண்டியா’ என்ற படத்தில் வரும் மிகச்சிறப்பானதோர் பாடல்.

    அந்தப்பாடல் காட்சியில் சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் ஒருவரையொருவர் சும்மா போட்டி போட்டுக்கொண்டு மிகப்பிரமாதமாக நடித்திருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.G.K அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. வசனத்தை உச்சரிக்கும் விதம் என்ற நிலையில் தனக்கென தனி பாணியைக் கொண்டிருந்தவர் எம்.ஆர்.ராதா. அவரைப் பற்றிய பகிர்வும், படங்களும் அருமை. நன்றி.

    ReplyDelete
  10. சரிதான் ஐயா. எம் ஆர் ராதாவின் நடிப்பை எல்லோருமே ரசித்தார்கள். டயலாக் டெலிவரி ரொம்பப் பிடிக்கும். எங்களுக்கு ரொம்பப் பிடித்த பாடல் மாமா மாப்ளே....

    அருமையான பகிர்வு ஐயா!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான்; எல்லோருக்குமே எம்.ஆர்.ராதாவின் நடிப்பு, வசனம் பிடிக்கும். கருத்துரை தந்த தில்லைக்கது ஆசிரியர் V.துளசிதரன் அவர்களுக்கு நன்றி.

      Delete
    2. சகோதரி தேன்மதுரத்தமிழ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  11. அருமையான தொகுப்பு! 'பலே பாண்டியா' பாடல் எல்லாவற்றையும் விட மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. என்றும் எனக்குப் பிடித்த நடிகர். இவருக்கு எழுதப் படிக்க தெரியாதாமே! எம் எம் ராஜம் அம்மா கீயூமர் கிளப்பில் கூறியது. யுரியூப்பில் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே. நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆச்சரியமான விஷயம்தான். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  13. இனிய பாடல்கள், எனக்கும் பழைய படங்களும் பாடல்களும் விருப்பம் ஐயா.

    குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது? - இன்று இது மாறிப்போய் விட்டதோ என்று தோன்றுகிறது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி தேன்மதுரத்தமிழ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

      Delete
  14. பலே பாண்டியா பாடலை படமெடுக்கும் பொழுது
    ராதா அவர்களின் தலையில் இருந்த விக் கழன்று கொண்டதாம்
    ஆனாலும் சமேயோசிதமாக ராதா அவர்கள் தலையில் ஒரு கை வைத்து
    மற்றொரு கையினை ராகத்திற்குத் தக்கவாறு ஆட்டி ஆட்டி கர்ட்சியினை
    சிறப்பு செய்திருப்பார்
    மீண்டும் ஒரு முறை பலே பாண்டியா பாடலைப் பாருங்களேன்
    தலையில் கை வைத்த வண்ணம் பாடும் காட்சியைக் காண்பீர்கள்
    அருமையான பதிவு ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தையாருக்கு நன்றி!

      Delete
  15. வில்லன்,குணசித்திரம்,நகைச்சுவை என்று எதையையும் சிறப்பாகச் செய்தவர்.குற்றம் புரிந்தவன் பாடல்...சி எஸ் ஜெயராமன் பாட்டும் எம் ஆர் ராதாவின் வசனமும் இணைந்து மறக்க முடியாத பாடலாகி விட்டது

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவருக்கு நன்றி!

      Delete
  16. அருமையான பாடல்கள்.... இன்னமும் கேட்கப் பிடித்த பாடல்கள்......

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  17. நல்ல பாடல்கள். இரண்டாவது பாடல் நான் கேட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. இரண்டாவது பாடலைக் (சின்ன அரும்பு மலரும்) கேட்டது இல்லையா? ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது. முன்பு இலங்கை வர்த்தக ஒலிபரப்பில் அடிக்கடி ஒலி பரப்புவார்கள். அப்படியானால் நீங்கள் வயதில் ரொம்பவும் இளைஞர் என்று நினைக்கிறேன்.

      Delete