என்னதான் வாளி வாளியாக, குளியலறையில், தண்ணீரில் குளித்தாலும்,
அந்த ஆற்றுக் குளியலுக்கு ஈடு ஆகாது. அதிலும் அவரவர் ஊரில், ஓடும் ஆற்றில், மேடு பள்ளம்
அறிந்து பயமில்லாமல் போடும் குளியலுக்கு ஈடு இணை கிடையாது.
காவிரியில் குளியல்:
(படம் – மேலே: திருச்சி மேலச்சிந்தாமணி காந்தி படித்துறை (படத்தின்
நடுவில் உள்ள பசுமையான இடம்) : நன்றி தி இந்து)
(படம் - மேலே : கரை புரண்டோடும் காவிரி
இன்றைக்கும் காவிரி என்றால், எனக்கு கரை இரண்டும் தொட்டுச் சென்ற
அந்நாளைய நினைவுதான் வருகின்றது. திருச்சி நகர்ப் பகுதியில் குடியிருந்தபோது , மேலச்சிந்தாமணி
அக்ரகாரம் படித்துறை என்ற காந்தி படித்துறையில், காவிரியில் குளித்த அந்த நாட்கள் பசுமையாய்
நினைவில் இருக்கின்றன. இங்கிருந்து பார்த்தால் எதிரே தொலைவில், அம்மாமண்டபம் படித்துறை
தெரியும். காவிரி ஆற்றில் தண்ணீர் வலம் சுழித்து வேகமாக ஓடும்.
சனி நீராடு - என்றபடி, சனிக்கிழமை எண்ணெய்க் குளியல் போடுபவர்கள்
உண்டு. ஆண்கள் படித்துறையில் எண்ணெய்க் குளியல்
போடுபவர்களுக்கு, எண்ணெய் தேய்த்து, உடம்பு முழுக்க பிடித்து விட்டு, கை கால்களில்
சொடக்கு எடுத்து, மாலிஷ் செய்துவிட என்றே அன்று ஆட்கள் இருந்தனர். இன்றைய விலைவாசியோடு
ஒப்பிடுகையில், அன்றைக்கு இதற்கான கட்டணம் அதிகம் இல்லை.. அவர்களே எண்ணெய், அரப்புத்தூள்
சகிதம் இருப்பார்கள். குளியலுக்கு வரும் சிலர், இவை இரண்டையும் வீட்டிலிருந்தே கொண்டு
வருவதும் உண்டு. எண்ணெய் தேய்த்துக் கொண்டவர்கள், வெறும் உடம்போடு கோவணம் அல்லது இடுப்புத்
துண்டோடு படித்துறை படிக்கட்டுகளில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருப்பார்கள். எண்ணெய்
உடம்பில் ஊறியதும் அப்புறம் குளியல். (திருப்பூர் பனியன் கம்பெனிகள் வரும்வரை, அந்நாளில்
உள்ளாடையான ஜட்டி அவ்வளவு பிரபலம் இல்லை;)
நீச்சல் தெரியாது:
எனக்கு நீச்சல் தெரியாது. எனவே தண்ணீர் நிறைய ஓடும்போது, ஆற்று
ஓரத்திலேயே பெரியவர்கள் துணையோடு, இரண்டு படிகளுக்குள்ளேயே இறங்கி குளிப்பது வழக்கம்.
ஒருமுறை தடுமாறி விழுந்து ஆற்றோடு போக இருந்தேன். நல்லவேளையாக எங்கள் சின்னம்மா என்னை
சட்டென்று பிடித்து மேலே இழுத்து விட்டார்கள். அதிலிருந்து ஆற்றில் அதிகம் தண்ணீர்
என்றால் இறங்குவதற்கு பயம். வெளியூர் சென்றால், ஆற்றுக் குளியல் போடுவது இல்லை. நீச்சல்
தெரிந்த பையன்கள், ஆற்றங்கரையில் இருக்கும் பிள்ளையார் கோயில் மேடையில் இருந்தோ அல்லது
மரக்கிளையில் இருந்தோ ஆற்றில் குதித்து விளையாடுவார்கள்.
(படம் - மேலே: நன்றி http://farm4.static.flickr.com/3492/4565723442_481fc9ce8b_m.jpg
)
கோடை நாட்களில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வருவது நின்று
விடும். காவிரி இரண்டு அல்லது மூன்று வாய்க்கால்களாக பிரிந்து ஓடும். நடு ஆற்றில் மணற்பரப்பும்
அதிகம் இருக்கும். கரையோரம் வரும் குடமுருட்டி ஆற்றின் தண்ணீர் கலங்கலாக இருக்கும். எனவே இடுப்பளவு தண்ணீரில் ஆற்றைக் கடந்து அந்தக்
கரைக்கு ( நடு ஆற்றிற்கு ) சென்று விடுவோம். அங்கிருந்தவாறே ஆற்றில் ஆனந்தக் குளியல்.
சிலசமயம் அம்மாமண்டபத்திற்கு எதிரேயும் போய் விடுவதுண்டு. கோடைக்கால விடுமுறை முடியும்
மட்டும் ஆனந்தம்தான். தண்ணீர் அதிகம் இல்லாத இந்த கோடை காலத்தில், திருச்சி மலைக்கோட்டை
கோயில் யானையை இந்த படித்துறைக்கு அருகில்தான் தினமும் அழைத்து வந்து குளிப்பாட்டுவார்கள்.
(இப்போது அந்த வழக்கம் நின்று விட்டது)
வேலையில் சேர்ந்த பிறகு காவிரிப் பாலம் வழியே ஆற்றைக் கடந்து, அக்கரைக்குச்
சென்று, நடு ஆற்றிற்கு வந்து குளிப்பது வழக்கம்.
கொள்ளிடம் குளியல்:
காவிரி ஆற்றின் கிளை நதி கொள்ளிடம். அந்த ஆற்றின் கரைகளில்தான்
அம்மாவின் ஊர் தென் கரையிலும், அப்பாவின் ஊர் வட கரையிலும் இருக்கின்றன. படிக்கும்
போது, விடுமுறை நாட்களில், அம்மாவின் ஊருக்குச் சென்றால் கொள்ளிடம் ஆற்றுக் குளியல்தான்.
அப்போதெல்லாம் அந்த ஊர் கொள்ளிடத்தின் கரை ஓரம், அவ்வளவாக ஆழம் இருக்காது; ஊற்றுநீரே
ஓடைபோல் (கல்லணை தொடங்கி) இடுப்பளவு ஆழத்தில் ஓடும். அப்போதெல்லாம் முதலைகளும் இல்லை.
( காவிரியில் எப்போது முதலை வந்தது என்பது தனிக்கதை ) எனவே பயமில்லாமல் குளிக்கலாம்.
நானும் எனது கிராம நண்பர்களும் காலையில் குளிக்கச் சென்றால் மதியம் வரை ஆற்றில்தான்,
இருப்போம். ( காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம் என்று சொல்கிறோம். ஆனால்
கொள்ளிடத்தையும் அந்நாளில் காவிரி என்றே அழைத்து இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.(“ஆறிரண்டும் காவேரி; அதன் நடுவே சீரங்கம்” என்று ஒரு நாட்டுப்
பாடல் வரி உண்டு )
உழவர் ஓதை மதகுஓதை உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி.
-
இளங்கோ அடிகள் (சிலப்பதிகாரம்)
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)
காவிரி கரை புரண்டு ஓடுவதைக் கண்ணால் காண்பதே அழகு தான். நல்ல அழகழகான படங்களுடன் கூடிய அசத்தலான பதிவுக்குப் பாராட்டுகள், சார்.
ReplyDeleteஅன்புள்ள VGK அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
Deleteசிறு வயதில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திப்போன நினைவலைகள் நெஞ்சில் மோதி விளையாடுகின்றது நண்பரே பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள்....
ReplyDeleteதேவகோட்டை நண்பருக்கு நன்றி.
Deleteஅற்புதமான படங்களுடன் பதிவு அருமை
ReplyDeleteநான் 71-73 வருடங்களில் ஆடிப்பெருக்கின் போது
பாலத்தின் மேலிருந்து அபாயம் தெரியாமல் குதித்துக்
களித்த நாட்களையும், அம்மா மண்டப படித்துறையில்
நீந்திக் களித்த நாட்களும் நினைவில் வந்து போனது
அது ஒரு கனாக் காலம்
கவிஞரே! உங்களது அந்நாளைய திருச்சி நினைவுகளை உங்கள் வலைத்தளத்தில் வார்ப்பு செய்யலாமே! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteஆறு உள்ள ஊரில் வளர்ந்து விட்டு நீச்சல் தெரியாமல் இருக்கிறீர்களே?
ReplyDeleteமுனைவர் அவர்களே! நான் வீட்டுக்கு ஒரே பையன். எப்படி வளர்த்து இருப்பார்கள் என்று தெரியும். ஆறு, ஏரி, குளம் வாய்க்கால் பக்கம் என்னை விட மாட்டார்கள். சைக்கிள் கற்றுக் கொண்டது கூட வீட்டில் அம்மாவுக்குத் தெரியாமல்தான் கற்றுக் கொண்டேன். ரோட்டில் நான் சைக்கிளில் செல்ல விடமாட்டார்கள். அப்புறம் நீச்சல் எங்கே கற்றுக் கொள்வது? தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா!
Deleteஅருமையான கட்டுரை.,ஆற்றுநீர் பொருள் கண்டேன்....
ReplyDeleteசகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி!
Deleteபள்ளி நாட்களில் வீட்டுக்குத் தெரியாமல் நீந்தக் கற்க காவிரியாற்றுக்குச் சென்று வீட்டில் வந்து தாத்தாவிடம் அடி வாங்கியது இன்னும் நினைவில் இருக்கிறது. பாசத்தினால் என் தாத்தா காவிரியின்பக்கம் செல்லவேகூடாது என்றதால், நீச்சல் கற்கும் வாய்ப்பை இழந்தேன். பின் அந்த வாய்ப்பு அமையவில்லை.
ReplyDelete
Deleteமுனைவர் அவர்களே உங்கள் நிலைமைதான் எனக்கும். வீட்டிற்கு ஒரே பையன். மேலே முனைவர் பழனி.கந்தசாமி அவர்களுக்கு அளித்த மறுமொழியில், எனது சூழ்நிலையைச் சொல்லி இருக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
பள்ளி நாட்களில் ஆற்றில் நீச்சல் அடித்த நினைவுகள் எழுகின்றன ஐயா
ReplyDeleteநன்றி
தம +1
ஆசிரியர் கரந்தையாரின் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
Deleteதங்கள் பதிவை படித்ததும் புனித வளவனார் கல்லூரியில் படித்த போது ஆடிபெருக்கன்று, நீச்சல் தெரிந்தவர்கள் திருச்சியிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் இரயிலின் மேல் ஏறி அது காவேரி பாலத்தின் மேல் செல்லும்போது குதித்து நீந்தி கரையேறியதை வியப்போடு பார்த்தது நினைவுக்கு வருகிறது. அது ஒரு மறக்கமுடியாத அனுபவம். அதை நினைவூட்டியதற்கு நன்றி!
ReplyDeleteஅய்யா VNS அவர்களுக்கு நன்றி. எனக்கும் நீங்கள் சொல்லும் அந்நாளைய ஆடி பதினெட்டு நினைவுகள் நினைவுக்கு வருகின்றன. இப்போதெல்லாம் அப்படி யாரும், ரெயில் மீதிருந்து காவிரி ஆற்றில் குதித்து சாகசம் செய்வதில்லை என்று நினைக்கிறேன்.
Deleteஆற்றில் குளிப்பது என்றும் சந்தோசம் தான் ஐயா... வருடத்திற்கு ஒரு முறையாவது அம்மா மண்டபம் வருவதுண்டு...
ReplyDeleteசுகமாய் இருந்ததெல்லாம் அந்தக் காலம் ,சமீபத்தில் ஹரித்துவார் சென்று இருந்தபோது,மனிதக் கழிவுகள் கலந்து ஓடும் கங்கையில் குளிப்பதற்க்கே அருவெருப்பாய் இருந்தது !
ReplyDeleteஅந்தக் காலத்தையும், இந்தக் காலத்தையும் ஒப்பிட்டு நோக்கிய தோழர் பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி!
Delete
ReplyDeleteஇன்றைக்கும் காவிரி என்றால், எனக்கு கரை இரண்டும் தொட்டுச் சென்ற அந்நாளைய நினைவுதான் வருகின்றத..
அழகாய் மலரும் நினைவுகள்....!
சகோதரி ஆன்மீகப் பதிவர் அவர்களுக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
ஆற்றுக் குளியலுடன் காவேரி பற்றி சொல்லியது ஒரு சிறப்பு ஐயா த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
படிக்கும்போதே படித்துறையில் இருப்பது போல் ,ஆற்றில் முங்குவது போல் சுகம்!
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
Deleteகாவிரியை பற்றிய அறிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி அய்யா....
ReplyDeleteதம்பி ஸ்ரீராமிற்கு நன்றி!
Deleteதங்கள் நினைவுகளிலிருந்து...
ReplyDeleteஅந்நாளைய காவிரியையும் இளம்பிராயத்தில் தங்களின் காவிரிப் பாசத்தையும் படிக்க, படங்கள் பார்க்க...
குளிர்ச்சி!
மயிலாடுதுறை சகோதரருக்கு நன்றி.
Deleteபத்துவயது வாக்கில் பாலக்காட்டில் என் தந்தை வழிப் பட்டி வீட்டில் சுமார் ஓராண்டுகாலம் இருந்தேன். அப்போது மலம்புழா அணை கட்டி இருக்கவில்லை. பாரதப் புழை எனப்படும் ஆறு கிராமங்களின் ஓரத்தில் ஓடும் அப்போதெல்லாம் தினம் ஆற்றுக் குளியல்தான் வெயில்காலத்தில் நீர் குறைந்து ஓடும் போதுமணலை அகற்றிப் பள்ளம் செய்து ஆற்றில் முழுகுவதுண்டு. கலணைக்கு அருகே ஓடும் வாய்க்காலில் குளித்த அனுபவமும் உண்டு. நினைவுகளை கீறி விட்ட பதிவு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் GMB அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஆற்றில் குளிப்பதே (அதுவும் நல்ல நீரில்) ஒரு சுகம்தான் அய்யா
Deleteவணக்கம் ஐயா..எனக்கு தங்களின் பதிவு சிறுவயது நியாபகத்தை நினைவூட்டியது ஐயா..நமது ஆறுகள் வற்றாமல் இருந்தால் மகிழ்ச்சி தானே ஐயா..வருங்காலத்திற்கு தாம் விட்டுச் செல்ல வேண்டியவைகளுல் ஒன்று நதிகள்..
ReplyDeleteநன்றி ஐயா..அருமையான பகிர்வு..
சகோதரி அவர்களுக்கு நன்றி.
Deleteநல்ல இடுகை!
ReplyDeleteநான் ஐந்து வயது இருக்கும் போது....இப்படித்தான் எங்க ஊரு ஆற்றில் குதித்தேன்...நான் செத்து பிளைத்வண்டா" என்று பாடலாம். ஆனால் என்ன அடுத்த நாளே நீச்சல் கற்றுக்கொண்டேன், என் குழந்தைகள் எல்லோரும் நீச்சலில் Red Cross Severn star! காரணம் என் இளமைகால அனுபவம்!
படி என்று மட்டும் நான் என்றும் என் குழந்தைகளிடம் சொன்னதில்லை...
மீதி விஷயத்தில்...நீச்சல், etc...என் அறிவுறுத்தல் அதிகம்...
நம்பள்கி சார்! உங்க ஊர் பெயரையாவது சொல்லக் கூடாதா? உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteஇந்நாளில் காவேரி ஆற்றைப் பார்க்கும் போது மனதில் வலி. கரை புரண்டு ஓடும் சமயத்தில் ஆற்றில் குளிப்பதில்லை என்றாலும், திருச்சி வரும் சமயத்தில் எல்லாம் திருப்பராய்த்துறை அகண்ட காவேரி ஆற்றில் குளிப்பது பிடித்தமான விஷயமாக இருந்தது... இன்னும் இருக்கிறது - ஆனாலும் இப்போது தண்ணீர் இல்லாது வற்றிப் போயல்லவா இருக்கிறது.....
ReplyDeleteஇனிமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
இப்போது காவேரி மனதுக்கு மிகவும் வேதனை தருகின்றது...ஐயா. தண்ணீரே இல்லாமல்..சென்ற முறை பார்த்த போது...உங்கள் பதிவு அருமை..
ReplyDeleteகீதா: நான் எனது சிறு வயதில் எங்கள் ஊர் (நாகர்கோவில்) ஆற்றில் குளித்து நீந்தி, ஒரு கரையிலிருந்து மறுகரை வரை நீந்தி...பாவாடை கட்டி குமிழி போல் செய்து மிதந்து என்று பல நினைவலைகளை மீட்டியது தங்கள் இந்தப் பதிவு ஐயா. அருமை...
ஐயா ஒரு சிறு வேண்டுகோள் தாங்கள் மின் அஞ்சல் சப்ஸ்கிரிப்ஷன் வைக்க முடியுமா ஐயா? அதில் நாங்கள் பதிந்தால் எங்கள் பெட்டிக்கே வந்துவிடுமே என்பதால்தான்....
நன்றி ஐயா