Monday 11 November 2013

திருச்சி: 1977 புயல் வெள்ளத்தில் நான்



அன்று சனிக்கிழமை. ( 1977 நவம்பர் 12 ) மணப்பாறையில் வங்கியில் பணி புரிந்து கொண்டு இருந்தேன். திருச்சியிலிருந்து வேலைக்கு கிளம்பும்போதே புயல் பற்றிய செய்திகளைச் சொல்லி வானொலியும் பத்திரிகைகளும் பயமுறுத்தின. வங்கியில் பெயருக்குத்தான் சனிக்கிழமை அரைநாள் வேலைநேரம். ஆனால் முழுநாள் வேலை இருக்கும். அன்றும் அப்படித்தான். காசாளராக வேலை பார்த்துக் கொண்டு இருந்தபோது கடுமையான காற்று வீசியது. கூடவே மழை. மின்தடை ஏற்பட்டதால் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் பணிகளை முடித்தோம்.

மணப்பாறை திருச்சி:

மணி மாலை 3 மணி இருக்கும். வெளியே வந்தேன். மழை விட்டு இருந்தது. புயலுக்குப் பின்னே அமைதி. மணப்பாறை பஸ் நிலையத்தில் மழைத் தண்ணீர் வாய்க்கால் போல் ஓடிக் கொண்டு இருந்தது. வேடசந்தூர் - குடகனாறு அணை உடைந்து விட்டதாகவும்  ஊரை சுற்றி வெள்ளமாகவும் மரங்கள் விழுந்து கிடப்பதாலும் பஸ், ரெயில்  கிடையாது என்று சொல்லி விட்டார்கள். ஏதோ ஒரு புண்ணியத்தில்  தனலட்சுமி ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி பஸ் ஒன்று வந்தது. திருச்சிக்கு செல்பவர்கள் அனைவரும் அதில் ஏறிக் கொண்டோம்.

பஸ்ஸில் செல்லும்போது வீடு சென்று கொண்டு இருக்கும்போது ஒழுங்காக வீடு சென்று சேருவோமா என்ற பயம். எங்கு பார்த்தாலும் வெள்ளம். சாலையில் ஆங்காங்கே தண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. மரங்கள் விழுந்து கிடந்தன. சாலை போக்குவரத்து அதிகம் இல்லை. எதிரில் வரும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கை சொன்னபடியே சென்றார்கள். பஸ் டிரைவர் சாமர்த்தியமாகவும் மெதுவாகவும் ஓட்டினார். ஆலம்பட்டிபுதூர் வானொலி நிலையம் டவர் அருகே வந்தபோது குறுக்கே ஒரு பெரியமரம் சாலையை அடைத்துக் கொண்டு கிடந்தது. பஸ்ஸை டிரைவர் நிறுத்தி விட்டார். உடனே காரில் இருந்த அனைவரும் அவரவர் பங்கிற்கு மரக் கிளைகளை ஒடித்து போட்டோம். பயணிகளில் ஒருவர் வைத்து இருந்த அரிவாள் கொஞ்சம் பெரிய கிளைகளை வெட்ட உதவியது. பஸ் செல்லும் அளவிற்கு பாதை ஏற்பட்டது. அப்போது  எங்கள் பஸ்சிற்கு பின்னால் வந்து நின்று கொண்டு  இருந்த கார்களில் இருந்து யாருமே இறங்கவில்லை. பாதை ஏற்பட்டதும் அதில் இருந்து ஒருவர் இறங்கி வந்து இரு கைகளையும்  கூப்பி நன்றி சொன்னார். அவர் நடிகர் கமலஹாசன். நிறைய பேர் அவரிடம் கைகுலுக்க ஓடினார்கள். பின்னர் அவர் வந்த காரும் உடன் வந்த காரும்  எங்களுக்கு முன்னால் செல்ல வழி கொடுத்தார்கள். கமலஹாசன்  காரில் இருந்தபடியே  கையசைத்து விட்டு சென்றார். அதன்பிறகு  பஸ் கிளம்பியது. ராம்ஜிநகரைத் தாண்டியதும் இன்னொரு சோதனை. கோரையாறு வழிந்து கொண்டு இருந்தது. பாலத்தின் மீது பஸ் மெதுவாக கடந்தது. அங்கே அடுத்த கரையில் கருமண்டபத்தில் சாலையில் மக்கள் வெள்ளம். ஊருக்குள் தண்ணீர் நுழைந்து விட்டதாகச் சொன்னார்கள் ஒருவழியாக திருச்சிக்கு மாலை வீடு வந்து சேர்ந்தேன். திருச்சி நகரம் முழுக்க புயல் வெள்ளம் காரணமாக ஒரே பரபரப்பு.   

 1977 நவம்பர் 13 - எங்கள் பகுதியில் வெள்ளம்:

அப்போது நாங்கள் திருச்சி சிந்தாமணி பகுதியில் வாடகைக்கு குடியிருந்தோம். காவிரி ஆற்றில் வெள்ளம் என்றால் முதலில் பாதிக்கப்படுவது சிந்தாமணிதான். அன்று காலை ( 1977 நவம்பர் 13 ) நான் ஊர் எப்படி இருக்கிறது என்று பார்க்க வெளியில் சென்றேன். இப்போது சத்திரம் பேருந்து நிலையமாக இருக்கும் இடம், அன்று செயிண்ட் ஜோசப் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியாகும். அதன் அருகில் உள்ள வயல்கள் யாவும் கோணக்கரை - குடமுருட்டி ஆறு வரை தண்ணீர் மயம். அப்புறம் காவிரிபாலம் வந்தேன். பாலத்தை தொட்டபடி ஆற்றில் தண்ணீர் வேகமாக ஓடியது. எதிரே ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதி கடலுக்கு அப்பால் இருப்பது போல் தெரிந்தது. ஸ்ரீரஙத்திற்கு எந்தநேரமும் ஆபத்து வரலாம் என்று பயமுறுத்தினாரகள். ஆற்றில் பல வீடுகளின் கூரைகள், வைக்கோல் போர்கள், பீரோக்கள், கட்டில்கள் என்று பல பொருட்கள் அடித்து வரப்பட்டன. சிலர் பாலத்தின் கீழே கரையில் ஒதுங்கும் பொருட்களை  “எரிகிற கொள்ளியில் இழுத்தவரை லாபம் என்று கயிறு வீசி எடுத்துக் கொண்டு இருந்தனர்.

அன்று மாலை, உறையூர்க்காரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கோணக்கரையை இடிக்கப் போவதாவும். நாங்கள் இருக்கும் பகுதியில் வெள்ளம் வந்துவிடும் என்றும் சொன்னார்கள். எனவே எப்பொழுதும் சூட்கேசில் இருக்கும் சர்ட்டிபிகேட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு முன்னே செல்லுமாறு சொன்னேன்.  அப்பா, அம்மா, தங்கை மூவரும் பாதுகாப்பான இடம் தேடி சென்றார்கள். நாங்கள் இருந்தது ஒரு ஓட்டு வீடு. நான் வீட்டை பூட்டிவிட்டு வருவதற்குள் தண்ணீர் வந்துவிட்டது. மெயின்ரோடு வருவதற்குள் இடுப்பளவு தண்ணீர் வேகமாக வந்தது. மேலும் மேலும் வெள்ளம் உயர்ந்து கொண்டே வந்தது. அருகில் இருந்த லாட்ஜ் கட்டிடத்தில் இருந்து “ மேலே வாருங்கள் மேலே வாருங்கள் “ என்று என்னைப் பார்த்து கத்தினார்கள். நான் தட்டு தடுமாறி அந்த கட்டிடத்தின் மாடிப்படிகளில் ஏறி சென்றேன். கண் எதிரேயே வலுவிழந்த பல வீடுகள் இடிந்து விழுந்தன. என்னுடைய அப்பா, அம்மா, தங்கை என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. விடிய விடிய அந்த கட்டிடத்திலேயே இருந்தேன். அடுத்தநாள் காலை கீழே இறங்கி வந்தேன். தண்ணீர் வடியவே இல்லை. தெரிந்தவர்களை விசாரித்த போது என்னுடைய பெற்றோர் தங்கை மூவரும் தெரிந்த செட்டியார் வீட்டு மாடியில் ஏறி தப்பித்து இருப்பதாகச் சொன்னார்கள்.திருச்சி சிந்தாமணி அண்ணா சிலைக்கும் ஆண்டார் தெரு பகுதிக்கும் படகுகள் விட்டு வயதானவர்களையும் பெண்களையும் மீட்டுச் சென்றார்கள்.


ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி செய்த உதவி:
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோர் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தார்கள். நாங்கள் எங்கள் அப்பாவின் நண்பர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு செல்வது என்று முடிவெடுத்து அங்கே சென்றோம். கூடவே அப்போது ஊரிலிருந்து வந்து சித்தப்பாவின் வீட்டில் இருந்த வயதான அப்பாயியையும் ( அப்பாவின் அம்மா ) அழைத்துக் கொண்டோம். ஆசிரியரைப் பற்றி சில வரிகள். பிராமண சமூகத்தைச் சேர்ந்த அவர் ஆர் சி உயர்நிலைப் பள்ளியில், உதவித் தலைமை ஆசிரியராக இருந்தவர். இந்து மதத்தில் மட்டுமன்றி , கிறிஸ்தவ மதத்திலும் ஈடுபாடு கொண்டவர். கிறிஸ்தவ கீதங்கள் நன்றாக பாடுவார். அடித்தட்டு மக்களுக்கு இலவச கோச்சிங் மற்றும் சமூக சேவைகள் பல செய்தவர்..அவரது வீடு வடக்கு ஆண்டார் தெருவில் இருந்தது. அவர் வீட்டில் நாங்கள் ஒருவாரம் தங்கி இருந்தோம். ஆசிரியர் குடும்பத்தார் எல்லோருமே எங்களை அவர்கள் வீட்டு விருந்தாளியாகவே வைத்துக் கொண்டனர் 

எங்கள் பகுதியில் வெள்ளம் வடிந்தவுடன் எங்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தேன். வீட்டில் இருந்த எல்லா பொருட்களும் வெள்ளத்தால் முற்றிலும் நாசமாகி இருந்தன. நாங்கள் வைத்து இருந்த புத்தகங்கள் யாவும் சேற்றால் உருக்குலைந்து போய் கிடந்தன. தெருவெங்கும்  வெள்ளக் குப்பைகளோடு நாற்றம். வீட்டை சுத்தம் செய்யவே ஒரு வாரம் தேவைப்படும். எனவே ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் நன்றி சொல்லி விட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் பேர் தங்கியிருந்த திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் தங்கினோம். அங்கு தங்க இடமும் உணவும் கொடுத்தார்கள். 

 மேட்டூர் அணை உடைந்த கதை:
 



       (  1977 வெள்ளத்தில் S R  கல்லூரி .படங்க்ள் உதவி: S R College , Trichy)

வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மணப்பாறை மற்றும் பல இடங்களுக்கு பஸ் வசதி இல்லை. எனவே வேலைக்கும் செல்ல இயலவில்லை. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருச்சி நகரப் பகுதிகளை பார்த்து வர நடந்து சென்றேன். செயிண்ட் ஜோசப் கல்லூரி, இ ஆர் உயர்நிலைப் பள்ளி , சாவித்திரி வித்தியா சாலை, எஸ் ஆர் கல்லூரி மற்றும் தில்லைநகர் , உறையூர் , புத்தூர் என்று எல்லாமே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள். (இன்றும் வெள்ளம் வந்ததின் நினைவாக செயிண்ட் ஜோசப் கல்லூரி கட்டிடங்களில்  H.F.L - NOVEMBER, 13, 1977 ( H.F.L என்றால் HIGH FLOOD LEVEL ) என்று எழுதப் பட்டு இருப்பதைக் காணலாம்.மக்கள் கூட்டம் கூட்டமாக தங்க இடம் கிடைத்த பகுதிகளில் தங்கி இருந்தனர். தென்னூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று எல்லோரும் வேகமாக ஓட ஆரம்பித்தனர். பஸ், கார் என்று  அனைத்து வாகனங்களும் சாலையில் வேகமாகச் சென்றன. ஓடிக் கொண்டிருந்த ஒருவரிடம்  என்ன விஷயம் என்று கேட்டேன். “மேட்டூர் அணை உடைந்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம மலைக்கோட்டை மூழ்கி விடும் “ என்று சொல்லிக் கொண்டே ஓடினார். நானும் எனது பங்கிற்கு இருப்பிடம் நோக்கி ஓடத் தொடங்கினேன். அப்போது போலீஸ் ஜீப்பில் மைக்கில் “ மேட்டூர் அணை உடையவில்லை. வதந்தியை யாரும் நம்பாதீர்கள் “ என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள். அதன் பிறகுதான் வீதியில் அமைதி திரும்பியது.

அப்புறம் ஒரு வாரம் சென்று எல்லோரும் பழையபடி வீட்டிற்கு திரும்பினோம். சுத்தம் செய்தாலும் ஒரு மாதத்திற்கும் மேல் வெள்ளத்தின் வாடை போகவில்லை.
  
செய்திச் சுருக்கம்:

அப்போது வந்த புயல் வெள்ளம் பற்றிய  செய்திச் சுருக்கம் இதுதான்:

நாகப்பட்டினத்துக்கு கிழக்கே வங்க கடலில் உருவான புயல் நவம்பர் 12-ந்தேதி தமிழ்நாட்டுக்குள் புகுந்து மணிக்கு 65 மைல் வேகத்தில் வீசியது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. நாகப்பட்டினம் வெளி உலகில் இருந்து 5 நாட்கள் துண்டிக்கப்பட்டு கிடந்தது.

திருச்சி அருகேயுள்ள கோரை ஆறு உடைப்பு எடுத்துக் கொண்டதால் திருச்சி கிராபட்டி, புத்தூர், கருமண்டலம், மிளகுபாறை, ராமலிங்கநகர் முதலிய பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. ஊருக்குள் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் ஓடியது. பிஷப் ஹீபர் கல்லூரி, தேசிய கல்லூரி ஆகியவற்றில் வெள்ளம் புகுந்தது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. படகுகளிலும் ஹெலிகாப்டர்களிலும் சென்று ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானத்தில் இருந்து உணவு பொட்டலங்கள் போடப்பட்டன. புயல்-வெள்ள சேதப்பகுதிகளை முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். விமானத்தில் பறந்தபடி பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "நாங்கள் விமானத்தில் சென்று பார்த்தபோது எங்கும் தண்ணீரைத்தான் பார்த்தோம். எத்தனை நதிகள் புதிதாக உருவாகி இருக்கிறதோ என்று எண்ணத்தக்க அளவில் தண்ணீர் இருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன.

ஆனால் உயிர் சேதம் பற்றி சரியாக மதிப்பிட முடியவில்லை" என்று கூறினார். தண்ணீர் வற்றிய பிறகு சேறும் சகதியுமாக உள்ள இடங்களில் பிணங்கள் உருக்குலைந்து கிடந்தன. சில பகுதிகளில் ஒரே இடத்தில் குவியல் குவியலாக பிணங்கள் கிடந்தன.

திண்டுக்கல் அருகே வேடசந்தூர் பக்கம் இருந்த குடவனாறு அணை வெள்ளத்தின் வேகம் தாங்காமல் உடைந்தது. இந்த அணை நீர் அருகில் இருந்த 3 கிராமங்களை அடியோடு அழித்து விட்டது. வெள்ளம் வரும் என்று பயந்து ஏராளமானபேர் ஊரை காலி செய்து ஓடியதால் உயிர் தப்பிவிட்டார்கள்.  

பிறகும் அடுத்தடுத்து புயல் உருவானது. இதனால் மழை நீடித்து மீட்பு பணி பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் புயல்-மழைக்கு பலியானார்கள். எண்ணிக்கை 504 ஆக உயர்ந்தது. அதிகப்படியாக தஞ்சை பகுதியில் 189 பேரும், மதுரை பகுதியில் 136 பேரும் பலியாகி இருந்தனர். இறந்துபோன கால்நடைகள் 20 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டது.

நன்றி! : -  மாலைமலர் (காலச் சுவடுகள் )




62 comments:

  1. நான் அந்த வெள்ளப் பாதிப்பின் போது திருச்சியில்
    தென்னூரில் இருந்தேன்
    அதன் பாதிப்புக் கொடுத்த அச்சத்தை என்னால்
    இன்றும் தங்கள் பதிவின் மூலம் உணர முடிந்தது
    நிலைமையை உணரும்படி அருமையாகப்
    பதிவு செய்துள்ளீர்கள்
    பகிர்வுக்கும் பதிவுகள் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அந்தப்புயலின் கொடூரம் நான் இருந்த நாகையில் தான் மிக அதிகம்.
    அன்று மாலை முதல் மழையும் காற்றும் பயங்கரம். கடல் அலைகள் எப்படியும் ஊருக்குள் வந்துவிடும் என்ற அச்சம் இருந்தது.

    அன்று ஒரு சுமார் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை அடித்த புயல் மின்சார கம்பிகளை மட்டும் அல்ல, கம்பங்களையும் வளைத்து விட்டு சென்றது. பல இடங்களில் வீடுகள், சாலை ஒர மரங்கள் எல்லாமே கீழே விழுந்து போக்குவரத்து நாகை துண்டிக்கப்பட்டு விட்டது.

    அடுத்த 10 நாட்களுக்கு தண்ணீர் இல்லை. பால் வரவில்லை. கெரொசின் க்குத்தான் பஞ்சம் என்று இல்லை. மெழுகுவத்தி, தீப்பெட்டி கூட கிடைக்கவில்லை.

    அரசு இயங்கியதா என்றே தெரியவில்லை. அடுத்த 15 முதல் 20 நாட்களுக்கு கடும் அவதி.

    நல்ல வேளை . கடல் நீர் உட்புகவில்லை.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். 1974 வந்த பஞ்சம் குறித்து எழுதவும்.

    ReplyDelete
  4. இப்போதும் நவம்பர் மாதம்மாகையால் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமோ?

    ReplyDelete
  5. நீங்கள் சொல்லியிருக்கும் புயல் செய்தியும் ,படங்களும் கொஞ்சம் பீதியைக் கிளப்புகின்றன.அதிலும் உங்கள் அனுபவங்கள் படிக்கும் போது பயமாகவே இருக்கிறது.
    அப்படிப் பெய்த மழை இப்பொழுதோ தலை காட்டக் கூட மறுக்கிறதே! சென்ற வருடம் போதிய மழை இல்லை. இந்த வருடமும் அப்படியாகி விடுமோ? சென்னையில் தண்ணீர் தட்டுப் பாடு வந்து விடுமோ என்கிற அச்சம் நிலவுகிறது.

    ReplyDelete
  6. I WAS ALSO IN TRICHY ON THAT DAY. PEOPLE WERE RUNNING TO TIREVERUMBUR. PEOPLE WERE VACATING . SRIIRANGAM. . MY FRIEND'S SISTER DIED DUE TO FLOODS IN KARUMANDAPAM.

    ReplyDelete
  7. இதைப் படித்துக் கொண்டே வரும்போது, சமீபத்தில் (2006) வந்த சுனாமியின் கோரத்தாண்டவம் நினைவுக்கு வந்தது.

    ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உதவியும் நினைவுப் படுத்தப்பட வேண்டியதுவே ஆகும்.

    ReplyDelete
  8. நான் அப்போது கர்நாடகா மாநிலம் உடுப்பியில் இருந்தேன். தமிழ் நாட்டில் இல்லை என்றாலும், திருச்சியில் எனது அண்ணன் ராமலிங்க நகரில் இருந்ததால் வெள்ளம் ஏற்படுத்திய சேதம் பற்றி அறிவேன். தங்களின் பதிவு மேலும் பல புதிய தகவல்களைத் தந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  9. கண் முன்னே அந்தக் காட்சிகள் விரிந்தன... அப்படியே எங்களை உருக வைத்து விட்டீர்கள்! சரியான அனுபவம்தான்!

    ReplyDelete
  10. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
    // நான் அந்த வெள்ளப் பாதிப்பின் போது திருச்சியில்
    தென்னூரில் இருந்தேன் அதன் பாதிப்புக் கொடுத்த அச்சத்தை என்னால் இன்றும் தங்கள் பதிவின் மூலம் உணர முடிந்தது
    நிலைமையை உணரும்படி அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    பகிர்வுக்கும் பதிவுகள் தொடரவும் வாழ்த்துக்கள் //

    இன்றும் அந்த நாளை நினைத்தால், விடிய விடிய குளிரில் மக்களோடு மக்களாய் வெடவெட என்று நின்றது , மனதை நடுங்க வைக்கிறது. நீங்கள் அந்தசமயம் தென்னூரில் இருந்ததால் அந்த அச்சத்தை உணர்ந்து கொண்டீர்கள். கவிஞர் ரமணியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > sury Siva said...

    // அந்தப்புயலின் கொடூரம் நான் இருந்த நாகையில் தான் மிக அதிகம். அன்று மாலை முதல் மழையும் காற்றும் பயங்கரம். கடல் அலைகள் எப்படியும் ஊருக்குள் வந்துவிடும் என்ற அச்சம் இருந்தது. //

    // அன்று ஒரு சுமார் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை அடித்த புயல் மின்சார கம்பிகளை மட்டும் அல்ல, கம்பங்களையும் வளைத்து விட்டு சென்றது. பல இடங்களில் வீடுகள், சாலை ஒர மரங்கள் எல்லாமே கீழே விழுந்து போக்குவரத்து நாகை துண்டிக்கப்பட்டு விட்டது. //

    // அடுத்த 10 நாட்களுக்கு தண்ணீர் இல்லை. பால் வரவில்லை. கெரொசின் க்குத்தான் பஞ்சம் என்று இல்லை. மெழுகுவத்தி, தீப்பெட்டி கூட கிடைக்கவில்லை. அரசு இயங்கியதா என்றே தெரியவில்லை. அடுத்த 15 முதல் 20 நாட்களுக்கு கடும் அவதி.
    நல்ல வேளை . கடல் நீர் உட்புகவில்லை. //

    அந்த நாளில் அந்த புயலால் பாதிக்கப்பட்ட உங்கள் நாகைப்பட்டின அனுபவமும் மனத்தைநடுங்கச் செய்கின்றன.
    சுப்பு தாத்தாவின் கருத்துரைக்கு நன்றி!


    ReplyDelete
  12. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். 1974 வந்த பஞ்சம் குறித்து எழுதவும். //

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துக்கு நன்றி! தாதுவருஷப் பஞ்சத்திற்குப் பிறகு ஒரு பஞ்சம் வந்தது. அது வந்த வருடம் நீங்கள் குறிப்பிடும் 1974 ஆ அல்லது அதற்கு முன்னரா என்று நினைவில் இல்லை. அப்பஞ்சத்தின் போது தமிழ்நாட்டில் கடுமையான அரிசிப் பஞ்சம். மரவள்ளிக் கிழங்கை மட்டுமே உணவாக உண்டவர்கள் உண்டு. எனது அப்பாவிடம் விவரம் கேட்டபின் எழுதுகிறேன்.

    ReplyDelete
  13. கலங்க வைக்கும் காலச்சுவடுகள்..!

    ReplyDelete
  14. maRumozi > கவியாழி கண்ணதாசன் said...

    // இப்போதும் நவம்பர் மாதம்மாகையால் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமோ? //

    கவிஞர் கவியாழி கண்ணதாசனுக்கு நன்றி! நவம்பர், டிசம்பர் என்றாலே புயல், வெள்ளம் . சுனாமிதான் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete
  15. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    // நீங்கள் சொல்லியிருக்கும் புயல் செய்தியும் ,படங்களும் கொஞ்சம் பீதியைக் கிளப்புகின்றன.அதிலும் உங்கள் அனுபவங்கள் படிக்கும் போது பயமாகவே இருக்கிறது. அப்படிப் பெய்த மழை இப்பொழுதோ தலை காட்டக் கூட மறுக்கிறதே! சென்ற வருடம் போதிய மழை இல்லை. இந்த வருடமும் அப்படியாகி விடுமோ? சென்னையில் தண்ணீர் தட்டுப் பாடு வந்து விடுமோ என்கிற அச்சம் நிலவுகிறது. //

    இயற்கையை வெல்ல யாரால் முடியும்? இறைவனிடம் வேண்டுவோம். சகோதரி ராஜலக்‌ஷ்மி பரமசிவம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!


    ReplyDelete
  16. இந்த பதிவின் மூலம் பழைய நினைவுகள் - அப்போதைய சோகங்கள் மீண்டும் மனதில் நிழலாடுகின்றன..

    எனினும் - இயற்கை சொல்லிக் கொடுத்த பாடத்தை - நாம் இன்னும் படிக்கவே இல்லை!..

    ReplyDelete
  17. மறுமொழி > Anonymous said...

    // I WAS ALSO IN TRICHY ON THAT DAY. PEOPLE WERE RUNNING TO TIREVERUMBUR. PEOPLE WERE VACATING . SRIIRANGAM. . MY FRIEND'S SISTER DIED DUE TO FLOODS IN KARUMANDAPAM. //

    அனானிமஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! அந்த சமயம் திருச்சியே பரபரப்பாகத்தான் இருந்தது. மேட்டூர் அணை உடைந்து விட்டது – என்ற வதந்தியை உருவாக்கி உலவ விட்டவர்கள் யாரென்றே தெரியவில்லை

    ReplyDelete
  18. மறுமொழி > NIZAMUDEEN said...
    //இதைப் படித்துக் கொண்டே வரும்போது, சமீபத்தில் (2006) வந்த சுனாமியின் கோரத்தாண்டவம் நினைவுக்கு வந்தது. //

    என்னங்க சார்? நலமா? மறக்க முடியாத சுனாமி!

    // ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உதவியும் நினைவுப் படுத்தப்பட வேண்டியதுவே ஆகும். //

    அவரைப் பற்றியும் அவர் செய்த சமூகத் தொண்டுகளைப் பற்றியும் தனியே எழுத வேண்டும். சகோதரர் நிஜாமுதீனுக்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > வே.நடனசபாபதி said...
    // நான் அப்போது கர்நாடகா மாநிலம் உடுப்பியில் இருந்தேன். தமிழ் நாட்டில் இல்லை என்றாலும், திருச்சியில் எனது அண்ணன் ராமலிங்க நகரில் இருந்ததால் வெள்ளம் ஏற்படுத்திய சேதம் பற்றி அறிவேன். தங்களின் பதிவு மேலும் பல புதிய தகவல்களைத் தந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!//

    அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! இப்போதும் வயல் வெளிகளில் உருவான இராமலிங்க நகர், குமரன் நகர், சீனிவாசன் நகர் ஆகிய பகுதிகளுக்கு கோரையாற்றால் பயம் நிலவுகிறது’

    ReplyDelete
  20. என் அப்பா இதை பற்றி கூறியதுண்டு. ஆனால் இன்று பாலைவனம் போல் உள்ள மணப்பாறையிலா தண்ணீர் கறைபுறண்டோடியது,நம்ப முடியவில்லை.

    ReplyDelete
  21. மறுமொழி > Sivaraj said...
    // என் அப்பா இதை பற்றி கூறியதுண்டு. ஆனால் இன்று பாலைவனம் போல் உள்ள மணப்பாறையிலா தண்ணீர் கறைபுறண்டோடியது,நம்ப முடியவில்லை. //

    சகோதரர் சிவராஜ் கருத்துரைக்கு நன்றி! எப்போதும் வறண்டு இருக்கும் மணப்பாறை பூமி , மழைக் காலத்தில் மட்டும் பசுமையாக இருக்கும். மேலும் அப்போதெல்லாம் மழை , ஒரு வாரத்திற்கு சேர்ந்தாற் போல் பெய்யும். 1977 இல் நல்ல மழை; வேடசந்தூர் அருகே குடகனாறு அணை உடைந்ததும் ஒரு காரணம்.

    ReplyDelete
  22. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வை ஏதோ நேற்று நடந்ததுபோல் வாசிப்பவர்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது உங்களுடைய எழுத்து. அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
    // சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வை ஏதோ நேற்று நடந்ததுபோல் வாசிப்பவர்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது உங்களுடைய எழுத்து. அருமை. வாழ்த்துக்கள். //

    அன்புள்ள டிபிஆர்ஜோ அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  24. EXCELLENT REPORTING... WHEN I WAS STUDIED IN 3RD STD... AT CHELLAMANI AMMAL MIDDLE SCHOOL NEAR S.V.S .GIRLS SHOOL AT SANKARAN PILLAI ROAD.. I ALSO STAYED AT CHINTHAMANI AREA...

    SIVAPARKAVI

    ReplyDelete
  25. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    // கலங்க வைக்கும் காலச்சுவடுகள்..! //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    // இந்த பதிவின் மூலம் பழைய நினைவுகள் - அப்போதைய சோகங்கள் மீண்டும் மனதில் நிழலாடுகின்றன.. எனினும் - இயற்கை சொல்லிக் கொடுத்த பாடத்தை - நாம் இன்னும் படிக்கவே இல்லை! //

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களய்ஜு கருத்துரைக்கு நன்றி! இயற்கையின் மாபெரும் சக்திக்கு முன் நான் ஒரு தூசி என்பதை உணர்ந்து கொண்ட நாள் அது.

    ReplyDelete
  27. மறுமொழி > சிவபார்கவி said...
    // EXCELLENT REPORTING... WHEN I WAS STUDIED IN 3RD STD... AT CHELLAMANI AMMAL MIDDLE SCHOOL NEAR S.V.S .GIRLS SHOOL AT SANKARAN PILLAI ROAD.. I ALSO STAYED AT CHINTHAMANI AREA... //

    சிவபார்கவி அவர்களின் கருத்துக்கு நன்றி! அப்போது நீங்கள் சிந்தாமணி பகுதியில் இருந்ததாலும், செல்லமணி அம்மாள் பள்ளியில் நீங்கள் 3 ஆம் வகுப்பு படித்ததாலும் நான் உங்கள் பெற்றோரை பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. நீங்களும் திருச்சியில் இருந்தவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி!


    ReplyDelete
  28. கலங்க வைக்கிறது உங்கள் அனுபவம்.

    இப்பொழுது பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் கலங்கி நிற்கிறார்கள்.

    ReplyDelete
  29. அந்த வெள்ளத்தில் தில்லை நகரில் எங்க சம்பந்தி குடும்பம் இருந்தது.(அவர் அப்போது சம்பந்தி ஆகவில்லை)
    வீட்டின் மொட்டை மாடியில் ஒரு இரவைக் கழித்திருக்கிறாற்கள். கொஞ்சம் வெள்ளம் குறைந்ததும் இறங்கினால் பாம்பு முதற்கொண்டு அத்தனை பிராணிகளும் குடியேறி இருந்தனவும்.
    பிறகுதான் ஆண்டார் தெரு அத்தைவீட்டுக்கு மாறி இருக்கிறார்கள். இப்பொழுது சொன்னாலும் சுவாரஸ்யமாக க் கதைபோலச் சொல்லுவார். ஆனால் அப்பொழுது பல பொருட்களை இழந்ததாக மாப்பிள்ளை சொன்னதுக்கப்புறம்தான் தெரியும். அந்தப் புயல் போதுதான் சென்னையில் மூன்றுநாட்களுக்கு மின்சாரம் இல்லை.
    ப்ரெட் ,மெழுகுவர்த்தி, மில்க்மெயிட் என்று வாங்கி வைத்து காலத்தை ஓட்டினோம்.

    ReplyDelete
  30. தாங்கள் குறிப்பிடுகின்ற 1977 ஆம் ஆண்டு திருச்சி வெள்ளத்தினை நானும் அறிவேன் ஐயா. அப்பொழுது எனது மாமா , தில்லை நகரில் இருந்தார். வீட்டிற்குள் ஏழடி உயரத்திற்குத் தண்ணீர் வந்ததாக நினைவு இருக்கின்றது. வெள்ளம் வடிந்த பல நாட்களுக்குப் பிறகு திருச்சி வந்து வீட்டைப் பார்த்தேன். தண்ணீர் தேங்கியிருந்த மேல் மட்டத்தில், தண்ணீர் விட்டுச் சென்றிருந்த கோட்டினைப் பார்த்து மலைத்தது நினைவில் இருக்கிறது.

    ReplyDelete
  31. மறுமொழி > மாதேவி said...
    // கலங்க வைக்கிறது உங்கள் அனுபவம். இப்பொழுது பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் கலங்கி நிற்கிறார்கள். //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! பிலிப்பைன்ஸ் மக்கள் படும் பாட்டை நினைத்தால் மனதிற்கு கஷ்டமாகத்தான் உள்ளது.

    ReplyDelete
  32. மறுமொழி > வல்லிசிம்ஹன் said...

    // அந்த வெள்ளத்தில் தில்லை நகரில் எங்க சம்பந்தி குடும்பம் இருந்தது.(அவர் அப்போது சம்பந்தி ஆகவில்லை)
    வீட்டின் மொட்டை மாடியில் ஒரு இரவைக் கழித்திருக்கிறாற்கள். கொஞ்சம் வெள்ளம் குறைந்ததும் இறங்கினால் பாம்பு முதற் கொண்டு அத்தனை பிராணிகளும் குடியேறி இருந்தனவும்.
    பிறகுதான் ஆண்டார் தெரு அத்தைவீட்டுக்கு மாறி இருக்கிறார்கள். இப்பொழுது சொன்னாலும் சுவாரஸ்யமாக க் கதைபோலச் சொல்லுவார். ஆனால் அப்பொழுது பல பொருட்களை இழந்ததாக மாப்பிள்ளை சொன்னதுக்கப்புறம்தான் தெரியும். //

    திருச்சி மக்களால் அந்த புயல் வெள்ளத்தினை இன்றும் மறக்க இயலாது. தில்லைநகர் பகுதியினை டாக்டர்ஸ் ஏரியா என்பார்கள். அப்போதைய வெள்ளத்தில் அங்கிருந்த மருத்துவமனைகள் அதிகம் பாதிக்கப்பட்டன. வெள்ளத்திற்குப் பின் ஏகப்பட்ட கார்களை பணிமனைகளுக்கு இழுத்துச் சென்றார்கள்.

    //அந்தப் புயல் போதுதான் சென்னையில் மூன்றுநாட்களுக்கு மின்சாரம் இல்லை. ப்ரெட் ,மெழுகுவர்த்தி, மில்க்மெயிட் என்று வாங்கி வைத்து காலத்தை ஓட்டினோம். //

    அந்த புயல் தமிழ்நாட்டை ஒரு கலக்கு கலக்கி விட்டது என்றே சொல்லலாம்.

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  33. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
    // தாங்கள் குறிப்பிடுகின்ற 1977 ஆம் ஆண்டு திருச்சி வெள்ளத்தினை நானும் அறிவேன் ஐயா. அப்பொழுது எனது மாமா , தில்லை நகரில் இருந்தார். வீட்டிற்குள் ஏழடி உயரத்திற்குத் தண்ணீர் வந்ததாக நினைவு இருக்கின்றது. //
    அன்றையதினம் கடலே திருச்சிக்குள் நுழைந்து விட்டது போன்ற உணர்வு. தலைக்கு மேலே வெள்ளம்.
    // வெள்ளம் வடிந்த பல நாட்களுக்குப் பிறகு திருச்சி வந்து வீட்டைப் பார்த்தேன். தண்ணீர் தேங்கியிருந்த மேல் மட்டத்தில், தண்ணீர் விட்டுச் சென்றிருந்த கோட்டினைப் பார்த்து மலைத்தது நினைவில் இருக்கிறது. //
    உங்களின் குறிப்பு, அன்று நாங்கள் குடியிருந்த வீட்டில் இருந்த வெள்ளம் விட்டுச் சென்ற கோட்டினை நினைவுபடுத்தியது. இன்றும் வெள்ளம் வந்ததின் நினைவாக செயிண்ட் ஜோசப் கல்லூரி கட்டிடங்களில் H.F.L - NOVEMBER, 13, 1977 ( H.F.L என்றால் HIGH FLOOD LEVEL ) என்று எழுதப் பட்டு இருப்பதைக் காணலாம்
    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களது கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  34. உங்கள் அனுபவங்கள் பயங்கரமாயிருக்கின்றன. வாழ்க்கையில் எப்போதுமே மறக்க முடியாத அனுபவம்! நான் அப்போது மன்னார்குடியில் இருந்தேன். ஆறு உடைப்பு என்ற அபாயம் அவ்வளவாக இல்லையென்றாலும் புயலும் மழையும் மரங்கள் சாய்ந்தததும் பக்கத்து கிராமங்களில் ஆறுகள் உடைப்பெடுத்ததும் இன்னும் நினைவிலிருக்கிறது. அந்த சமயம் எனக்கு குழந்தை பிறக்கும் நேரம். அதனால் வெளியுலக செய்திகள் என் காதில் விழாதவாறு என்னை பத்திரமாக ஒரு அறையில் வைத்து பாதுகாத்ததால் வேறு எந்த செய்தியும் தெரியாமல் போயிற்று.

    ReplyDelete
  35. மறுமொழி > மனோ சாமிநாதன் said...
    // உங்கள் அனுபவங்கள் பயங்கரமாயிருக்கின்றன. வாழ்க்கையில் எப்போதுமே மறக்க முடியாத அனுபவம்! //

    ஆமாம் சகோதரி! உண்மையிலேயே பயங்கரமான அனுபவம்தான். எப்படி தப்பித்தேன் என்பதே ஆச்சரியமாக உள்ளது. சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  36. அன்புள்ள ஐயா, வணக்கம்.

    இந்த 1977 வெள்ளம் மறக்கவே முடியாத சோகம் தான். நாங்கள் அப்போது வடக்கு ஆண்டார் தெருவில் தான் குடியிருந்தோம்.

    மேலச்சிந்தாமணி, கீழச்சிந்தாமணி, இப்போது உள்ள அண்ணா சிலைப்பகுதி, இப்போதுள்ள சத்திரம் பேருந்து நிலையப்பகுதிகள், SRC Colllege Road, Butterworth Road எல்லாமே மிகுந்த பாதிப்புக்கு உள்ளானதை நானும் நன்கு அறிவேன்.

    தப்பிப்பிழைத்தது வடக்கு ஆண்டார் தெரு மட்டுமே. அது சற்றே மேடான பகுதி. St. Joseph College சுவரெல்லாம் உடைந்து தண்ணீர், நாம் படித்த National College High School [Today's Smt. Indhra Gandhi Ladies College] இன் மேற்கு வாயிலில் புகுந்து, கிழக்கு வாயில் வழியாக Butter Worth Road and SRC College Road இல் நுழைந்து எங்குமே பயங்கர வெள்ளமாகத்தான் காட்சியளித்தது.

    நாங்களும் சிலருக்கு எங்களால் முடிந்த ஒருசில உதவிகள் செய்தோம். அதே நேரத்தில் தான் என் பெரிய அண்ணாவின் மனைவி [வேறொரு காரணத்தால்] இறந்து போனார்கள். அவருக்குக் காவிரி ஆற்றில் போய்ச் செய்ய வேண்டிய கர்மாக்களை [காவிரியே புறப்பட்டு வந்து இங்கு எங்கும் பரவிவிட்டதால்] இங்குள்ள காவிரியம்மன் கோட்டை வாசல் பகுதியிலேயே செய்யும்படி ஆனது.

    இந்த காவிரியம்மன் கோட்டைவாசல் என்பது இப்போதுள்ள ‘அன்னதான சமாஜம்’ திருமண மண்டபத்திற்கு நேர் எதிர்புறம் இன்றும் கோயிலாக உள்ளது. சத்தியத்துக்கு கட்டுப்பட்ட காவிரித்தாய் அந்த எல்லையைத்தாண்டி, நாங்கள் வசிக்கும் வடக்கு ஆண்டார் தெரு, மலைக்கோட்டை போன்ற நகரப்பகுதிகளுக்குள் இதுவரை வந்தது இல்லை என பெரியோர்கள் சொல்லிக்கேள்விப்பட்டுள்ளேன்.

    >>>>>

    ReplyDelete
  37. அண்ணாசிலையிலிருந்து தற்போதுள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி காலேஜின் கிழக்கு வாசல் பகுதிவரை ஒரு மிகப்பெரிய தாம்புக்கயிறு கட்டி, படகுகள் விட்டு, ஜனங்கள் பலரை காப்பாற்ற உதவியது நான் பணியாற்றிய BHEL நிறுவனமும், அதன் FIRE BRIGADE துறையுமாகும்.

    அந்த சமூக சேவையை மிகவும் பாராட்டி, தமிழக அரசு ஓர் தங்க நாணயம் BHEL க்கு அளித்தது. அது என் CUSTODY யில் தான் இருந்து வந்தது. என் பணி ஓய்வின் போது, மற்றொருவரிடம் ஒப்படைத்து வந்துள்ளேன்.

    அதில் 1977 திருச்சி வெள்ளத்தில் - உயிர்களைக் காத்து உதவியதற்காக - தமிழக அரசின் அன்பளிப்பு என்று பொறிக்கப்பட்டுள்ளது. அது இன்றும் அங்கு BHEL CASH OFFICE - STRONG ROOM - CASH CHEST இல் பத்திரமாகப்பாது காக்கப்பட்டு வருகிறது.

    அடிக்கடி திடீர் சோதனைக்கு வரும் அதிகாரிகளிடம் எடைபோட்டுக் காட்டிவிட்டு, உள்ளே வைத்துவிடும் வழக்கம் உண்டு. அங்குள்ள PROPERTY REGISTER இல் இதற்கென்றே சில பக்கங்கள் உண்டு.

    >>>>>

    ReplyDelete
  38. மேட்டூர் அணை உடைந்துவிட்டதாக வந்த வதந்தியினால் மக்கள் அல்லல் பட்டது கொஞ்சம் நஞ்சம் அல்ல. எங்கள் தெரு முழுவதும் ஆட்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். எல்லோரும் மலைக்கோட்டை உச்சியை நோக்கி ஓடுவதாகக் கேள்விப்பட்டேன்.

    பிறகு போலீஸ் ஜீப்பில் அது வதந்தி தான் - உண்மை அல்ல என கத்திக்கொண்டே சென்றார்கள். அதன் பிறகு தான் ஊரே அமைதியானது.

    மறக்க முடியாத துயரச் சம்பவங்கள் தான் இவை அனைத்துமே.

    >>>>>

    ReplyDelete
  39. //நாங்கள் எங்கள் அப்பாவின் நண்பர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு செல்வது என்று முடிவெடுத்து அங்கே சென்றோம்.//

    இவர் மிகவும் நல்ல மனிதர். எனக்கும் மிகவும் தெரிந்தவரே. அவருக்கும் என்னை நன்றாகவே தெரியும். 2-3 நாட்கள் முன்பு இவரை நான் தெப்பக்குளம் நந்திகோயில் தெருவில் நேரில் சந்தித்துப்பேசினேன்.

    இந்த வயதிலும் அதே காவி ஆடைகள், கையில் குடை, கம்பீர நடை என சுறுசுறுப்பாகவே உள்ளார். சந்தோஷமாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    அன்புடன் VGK

    ReplyDelete
  40. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )
    // அன்புள்ள ஐயா, வணக்கம். இந்த 1977 வெள்ளம் மறக்கவே முடியாத சோகம் தான். நாங்கள் அப்போது வடக்கு ஆண்டார் தெருவில் தான் குடியிருந்தோம். மேலச்சிந்தாமணி, கீழச்சிந்தாமணி, இப்போது உள்ள அண்ணா சிலைப்பகுதி, இப்போதுள்ள சத்திரம் பேருந்து நிலையப்பகுதிகள், SRC Colllege Road, Butterworth Road எல்லாமே மிகுந்த பாதிப்புக்கு உள்ளானதை நானும் நன்கு அறிவேன். //

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம். உங்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்றைய நிகழ்வை அப்படியே மீண்டும் கண் முன் கொண்டு வருகின்றன. மறக்கமுடியாத நினைவுகள்.

    // தப்பிப்பிழைத்தது வடக்கு ஆண்டார் தெரு மட்டுமே. அது சற்றே மேடான பகுதி. St. Joseph College சுவரெல்லாம் உடைந்து தண்ணீர், நாம் படித்த National College High School [Today's Smt. Indhra Gandhi Ladies College] இன் மேற்கு வாயிலில் புகுந்து, கிழக்கு வாயில் வழியாக Butter Worth Road and SRC College Road இல் நுழைந்து எங்குமே பயங்கர வெள்ளமாகத்தான் காட்சியளித்தது. //

    அன்றைய தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல குடும்பத்தினர் எங்கு போவது என்று தெரியாமல், மிரட்சியான கண்களோடு ஆண்டார் தெரு அரசமரத்தடியில் ( திருச்சி ராமா கபே எதிரில் ) நின்று கொண்டிருந்த காட்சி இன்றும் நிழலாடுகிறது.

    // நாங்களும் சிலருக்கு எங்களால் முடிந்த ஒருசில உதவிகள் செய்தோம். அதே நேரத்தில் தான் என் பெரிய அண்ணாவின் மனைவி [வேறொரு காரணத்தால்] இறந்து போனார்கள். அவருக்குக் காவிரி ஆற்றில் போய்ச் செய்ய வேண்டிய கர்மாக்களை [காவிரியே புறப்பட்டு வந்து இங்கு எங்கும் பரவிவிட்டதால்] இங்குள்ள காவிரியம்மன் கோட்டை வாசல் பகுதியிலேயே செய்யும்படி ஆனது.//

    அந்த சமயத்தில் உங்கள் பெரிய அண்ணாவின் மனைவி மரணம் என்பது வருத்தமான செய்தி.

    // இந்த காவிரியம்மன் கோட்டைவாசல் என்பது இப்போதுள்ள ‘அன்னதான சமாஜம்’ திருமண மண்டபத்திற்கு நேர் எதிர்புறம் இன்றும் கோயிலாக உள்ளது. சத்தியத்துக்கு கட்டுப்பட்ட காவிரித்தாய் அந்த எல்லையைத்தாண்டி, நாங்கள் வசிக்கும் வடக்கு ஆண்டார் தெரு, மலைக்கோட்டை போன்ற நகரப்பகுதிகளுக்குள் இதுவரை வந்தது இல்லை என பெரியோர்கள் சொல்லிக்கேள்விப்பட்டுள்ளேன். //

    இத்தனை நாட்களாக அந்த கோவிலின் பெயர் காளியம்மன் கோயில் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தேன். அப்படித்தான் சொல்லியும் வருகிறார்கள். உங்கள் மூலம் இன்று அது காவிரி அம்மன் கோவில் என்பதனைத் தெரிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  41. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )

    // அண்ணாசிலையிலிருந்து தற்போதுள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி காலேஜின் கிழக்கு வாசல் பகுதிவரை ஒரு மிகப்பெரிய தாம்புக்கயிறு கட்டி, படகுகள் விட்டு, ஜனங்கள் பலரை காப்பாற்ற உதவியது நான் பணியாற்றிய BHEL நிறுவனமும், அதன் FIRE BRIGADE துறையுமாகும். //

    அன்றைய தினம் நீங்கள் பணியாற்றிய BHEL நிறுவனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய பணி மகத்தானது. நன்றியுடன் நினைவு கூறத்தக்கது. நினைவு படுத்தியமைக்கு நன்றி!

    // அந்த சமூக சேவையை மிகவும் பாராட்டி, தமிழக அரசு ஓர் தங்க நாணயம் BHEL க்கு அளித்தது. அது என் CUSTODY யில் தான் இருந்து வந்தது. என் பணி ஓய்வின் போது, மற்றொருவரிடம் ஒப்படைத்து வந்துள்ளேன். //

    அந்த தங்கக் காசினை பாதுகாக்கும் பணியில் நீங்கள் இருந்தீர்கள் என்பது பெருமையான விஷயம்.

    // அதில் 1977 திருச்சி வெள்ளத்தில் - உயிர்களைக் காத்து உதவியதற்காக - தமிழக அரசின் அன்பளிப்பு என்று பொறிக்கப்பட்டுள்ளது. அது இன்றும் அங்கு BHEL CASH OFFICE - STRONG ROOM - CASH CHEST இல் பத்திரமாகப்பாது காக்கப்பட்டு வருகிறது.

    அடிக்கடி திடீர் சோதனைக்கு வரும் அதிகாரிகளிடம் எடைபோட்டுக் காட்டிவிட்டு, உள்ளே வைத்துவிடும் வழக்கம் உண்டு. அங்குள்ள PROPERTY REGISTER இல் இதற்கென்றே சில பக்கங்கள் உண்டு. //

    அந்த தங்கக் காசு பற்றிய விரிவான தகவல்களுக்கு நன்றி! வாழ்க BHEL நிறுவனம்.! வளர்க அதன் தொண்டு.!


    ReplyDelete
  42. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3 )

    // மேட்டூர் அணை உடைந்துவிட்டதாக வந்த வதந்தியினால் மக்கள் அல்லல் பட்டது கொஞ்சம் நஞ்சம் அல்ல. எங்கள் தெரு முழுவதும் ஆட்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். எல்லோரும் மலைக்கோட்டை உச்சியை நோக்கி ஓடுவதாகக் கேள்விப்பட்டேன். பிறகு போலீஸ் ஜீப்பில் அது வதந்தி தான் - உண்மை அல்ல என கத்திக்கொண்டே சென்றார்கள். அதன் பிறகு தான் ஊரே அமைதியானது.//

    நான் அன்று ஓடிய ஓட்டத்தை இன்று நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  43. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 4 )

    //நாங்கள் எங்கள் அப்பாவின் நண்பர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு செல்வது என்று முடிவெடுத்து அங்கே சென்றோம்.//

    இவர் மிகவும் நல்ல மனிதர். எனக்கும் மிகவும் தெரிந்தவரே. அவருக்கும் என்னை நன்றாகவே தெரியும். 2-3 நாட்கள் முன்பு இவரை நான் தெப்பக்குளம் நந்திகோயில் தெருவில் நேரில் சந்தித்துப்பேசினேன்.
    இந்த வயதிலும் அதே காவி ஆடைகள், கையில் குடை, கம்பீர நடை என சுறுசுறுப்பாகவே உள்ளார். சந்தோஷமாக உள்ளது.
    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. //


    இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் அவரைச் சந்தித்தீர்கள் என்பதனை அறியும்போது மிக்க மகிழ்ச்சி! இந்த வயதிலும் அதே காவி ஆடைகள், கையில் குடை, கம்பீர நடை என சுறுசுறுப்பாகவே உள்ளார் என்பதனை உங்களால் தெரிந்து கொண்டபோது இன்னும் அதிக மகிழ்ச்சி! நன்றி!

    ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் செய்த உதவியினை நினைவு கூறும் வண்ணம், ஒவ்வொரு வருடமும் நவம்பர், 13 ஆம் நாள் எனது தந்தை அவரைச் சந்த்தித்து நன்றி கூறுவார். முதுமை மற்று உடல்நிலை காரணமாக இப்போது எனது தந்தையால் செல்ல முடியவில்லை.

    என்மீது கொண்ட அன்பின் காரணமாக பொறுமையாகவும் விலக்கமாகவும் கருத்துரை தந்த அன்புள்ள VGK அவர்களுக்கு எனது நன்றி!



    ReplyDelete
  44. அப்பா பயங்கர அனுபவம். மிக்க நன்றி பகிர்விற்கு.
    இலங்கையில நாமிருந்த (திருமணத்தின் பின்) தேயிலை , றப்பர் தோட்டத்தில் கெழுந்து எடுத்தால் லொறி வந்து கொழுந்து சாக்கு எடுத்துச் செல்லும்.
    இப்புடி வெள்ளம் வந்தால் காலுகங்கை பெருகும்.அப்போது காஷ்மீரம் போல படகில் கொழுந்து தொழிற்சாலைக்குப் போகும். நாமும் படகில் சென்ற அனுபவம் உண்டு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  45. மறுமொழி > kovaikkavi said...

    // அப்பா பயங்கர அனுபவம். மிக்க நன்றி பகிர்விற்கு.
    இலங்கையில நாமிருந்த (திருமணத்தின் பின்) தேயிலை , றப்பர் தோட்டத்தில் கெழுந்து எடுத்தால் லொறி வந்து கொழுந்து சாக்கு எடுத்துச் செல்லும். இப்புடி வெள்ளம் வந்தால் காலுகங்கை பெருகும்.அப்போது காஷ்மீரம் போல படகில் கொழுந்து தொழிற்சாலைக்குப் போகும். நாமும் படகில் சென்ற அனுபவம் உண்டு. //

    வெள்ளம் வந்தாலே படகுப் பயணம்தானே! சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  46. மிக விரிவான பதிவு
    சில நூற்றாண்டுகளுக்கு பின் ஆனந்த ரெங்கம் பிள்ளை டைரி ஆக வாய்ப்பு இருக்கு ...
    பதிவுகளின் முக்கியத்துவம் குறித்து ஆய்வோருக்கு அவசியம் பயன்படும்.
    இது ஒரு சமூக பொருளாதார முக்கியத்துவம் கொண்ட பதிவு...
    வாழ்த்துக்கள் அய்யா

    ReplyDelete
  47. மறுமொழி > Mathu S said...

    // மிக விரிவான பதிவு சில நூற்றாண்டுகளுக்கு பின் ஆனந்த ரெங்கம் பிள்ளை டைரி ஆக வாய்ப்பு இருக்கு ...//

    ஆசிரியர் S மது அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நானும் இன்னும் சுருக்கமாக இந்த கட்டுரையை முடிக்க நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு நிகழ்வும் தொடர்ந்து சங்கிலி போல் வந்தது. இன்னும் குறைத்தால் சொல்ல வந்த கருத்து முழுமையாகாது என்பதால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலவில்லை. “ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட் குறிப்புகள்” என்ற நூலை படித்து இருக்கிறேன். அதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போன்றது.

    // பதிவுகளின் முக்கியத்துவம் குறித்து ஆய்வோருக்கு அவசியம் பயன்படும். இது ஒரு சமூக பொருளாதார முக்கியத்துவம் கொண்ட பதிவு... வாழ்த்துக்கள் அய்யா //

    பின்னாளில் வரும் ஆய்வாளர்களுக்கு இது பயன்பட்டால் நல்லதுதான். பாராட்டிற்கு மீண்டும் நன்றி!

    ReplyDelete
  48. நல்ல (?) அனுபவம்... நான் அப்போது விஜயவாடாவில்பணி மாற்றம் காரணமாக இருந்தேன். ஏறத்தாழ அதே சமயம் என்று நினைக்கிறேன். ஆந்திரக் கடற்கரையோரப் பகுதிகளும் புயலால் பாதிக்கப் பட்டு நூற்றுக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். விஜயவாடாவிலும் புயலின் பாதிப்பு இருந்தது. அன்று நாங்கள் குடியிருந்த முதல் மாடி வெராந்தாவில் வைக்கப் பட்டிருந்த ஐந்தடி நீள பென்ச் காற்றால் வீசி எறியப்பட்டு வெளியில் வீழ்ந்திருந்தது. நாங்கள் erect செய்திருந்த பெரிய பெரிய column கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்திருந்தன. . பகிர்வு என் நினைவலையையும் தூண்டி விட்டது.நன்றி.

    ReplyDelete
  49. அந்த ஒருவாரமும் BHEL SECURITY + FIRE BRIGADE தொழிலாளர்கள், தங்கள் உயிரையே பணயம் வைத்து பலரின் உயிர்களைக் காப்பாற்றினார்கள் என்பது ஒருபக்கம்.

    மறுபக்கம், BHEL CANTEEN மூலம் நிறைய எண்ணிக்கையில் உணவுப்பொட்டலங்கள் தயாரித்து வெள்ளத்தில் வீடு இழந்த பலருக்கும் வழங்கப்பட்டன.

    BHEL HOSPITAL மூலம் நிர்வாகம் ஓர் மருத்துவக்குழுவையும் அங்கு அனுப்பி இலவச மருத்தச்சேவைகள் அளிக்க உதவியது என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

    மிகவும் திட்டமிட்டு உலகத்தரம் வாய்ந்த மின்சாதனங்களை உற்பத்தி செய்து இலாபகரமாக இயங்கி வரும் இந்த BHEL என்ற பொதுத்துறை நிறுவனம், மிகவும் மனிதாபிமானம் நிறைந்த ஒன்றாகும்.

    திருவாரூர் உள்பட பல கோயில்களில் ஓடாத நிலையில் இருந்த தேர்ச்சக்கரங்களை, நவீன தொழில் நுட்பங்களுடன் புதுப்பித்து, மிகவும் பாதுகாப்பான ஹைட்ராலிக் ப்ரேக் சிஸ்டம் வைத்துக்கொடுத்து உதவியுள்ளது. அதுபோன்று கிடைக்கும் ஆர்டர்களுக்கு இலாபம் ஏதும் வைக்காமல், COST OF MATERIALS + LABOUR மட்டுமே CHARGE செய்யும் வழக்கம் உண்டு.

    அதுபோல திருச்சி தாயுமானவர் தெப்பம் உள்பட சுற்றுவட்டார பல கோயில்களில் நடைபெறும் தெப்பத்திருவிழாக்களுக்கு, அஸ்திவாரமாக அமையும் மிதக்கும் ட்ரம்ஸ் [EMPTY - OIL / GREASE - BARRELS] இலவசமாக வழங்குவார்கள். ஓர் REFUNDABLE DEPOSIT மட்டும் கட்டிவிட்டு, அவர்கள் பொறுப்பில் TRANSPORTATION செய்துகொள்ள வேண்டும்.

    மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் அருகே உள்ள மணிக்கூண்டில் இருந்த மிகப்பெரிய கிண்டாமணியில் விரிசல் ஏற்பட்டபோதும், அதை சரிசெய்து கொடுத்ததும் BHEL நிர்வாகமே.

    இத்தகையதோர் நிறுவனத்தில் சுமார் 38 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதில் எனக்கும் ஓர் பெருமை உண்டு.

    இவையெல்லாம் தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    ReplyDelete
  50. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // நல்ல (?) அனுபவம்... நான் அப்போது விஜயவாடாவில்பணி மாற்றம் காரணமாக இருந்தேன். ஏறத்தாழ அதே சமயம் என்று நினைக்கிறேன். ஆந்திரக் கடற்கரையோரப் பகுதிகளும் புயலால் பாதிக்கப் பட்டு நூற்றுக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். விஜயவாடாவிலும் புயலின் பாதிப்பு இருந்தது. அன்று நாங்கள் குடியிருந்த முதல் மாடி வெராந்தாவில் வைக்கப் பட்டிருந்த ஐந்தடி நீள பென்ச் காற்றால் வீசி எறியப்பட்டு வெளியில் வீழ்ந்திருந்தது. நாங்கள் erect செய்திருந்த பெரிய பெரிய column கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்திருந்தன. . பகிர்வு என் நினைவலையையும் தூண்டி விட்டது.நன்றி. //

    அந்த 1977 புயல் தமிழ்நாடு தொடங்கி ஒடிசா வரை உள்ள கடற்கரை பிரதேசங்களை உலுக்கி விட்டது. அய்யா GMB அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் , இங்கே உங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  51. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 5 )

    // அந்த ஒருவாரமும் BHEL SECURITY + FIRE BRIGADE தொழிலாளர்கள், தங்கள் உயிரையே பணயம் வைத்து பலரின் உயிர்களைக் காப்பாற்றினார்கள் என்பது ஒருபக்கம். //

    // மறுபக்கம், BHEL CANTEEN மூலம் நிறைய எண்ணிக்கையில் உணவுப்பொட்டலங்கள் தயாரித்து வெள்ளத்தில் வீடு இழந்த பலருக்கும் வழங்கப்பட்டன. //

    // BHEL HOSPITAL மூலம் நிர்வாகம் ஓர் மருத்துவக்குழுவையும் அங்கு அனுப்பி இலவச மருத்தச்சேவைகள் அளிக்க உதவியது என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். //

    //மிகவும் திட்டமிட்டு உலகத்தரம் வாய்ந்த மின்சாதனங்களை உற்பத்தி செய்து இலாபகரமாக இயங்கி வரும் இந்த BHEL என்ற பொதுத்துறை நிறுவனம், மிகவும் மனிதாபிமானம் நிறைந்த ஒன்றாகும்.//

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்.! அன்றைய நேரத்தில் நீங்கள் பணியாற்றிய BHEL ஆற்றிய புயல் – வெள்ள நிவாரணப் பணிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. குறிப்பாக திருவெறும்பூர் – கல்லணை சாலையில் செய்த தொண்டினையும், நீங்கள் குறிப்பிட்ட செய்திகளையும் அப்போது படங்களுடன் படித்த ஞாபகம் வருகிறது.

    // திருவாரூர் உள்பட பல கோயில்களில் ஓடாத நிலையில் இருந்த தேர்ச்சக்கரங்களை, நவீன தொழில் நுட்பங்களுடன் புதுப்பித்து, மிகவும் பாதுகாப்பான ஹைட்ராலிக் ப்ரேக் சிஸ்டம் வைத்துக்கொடுத்து உதவியுள்ளது. அதுபோன்று கிடைக்கும் ஆர்டர்களுக்கு இலாபம் ஏதும் வைக்காமல், COST OF MATERIALS + LABOUR மட்டுமே CHARGE செய்யும் வழக்கம் உண்டு.

    அதுபோல திருச்சி தாயுமானவர் தெப்பம் உள்பட சுற்றுவட்டார பல கோயில்களில் நடைபெறும் தெப்பத்திருவிழாக்களுக்கு, அஸ்திவாரமாக அமையும் மிதக்கும் ட்ரம்ஸ் [EMPTY - OIL / GREASE - BARRELS] இலவசமாக வழங்குவார்கள். ஓர் REFUNDABLE DEPOSIT மட்டும் கட்டிவிட்டு, அவர்கள் பொறுப்பில் TRANSPORTATION செய்துகொள்ள வேண்டும்.

    மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் அருகே உள்ள மணிக்கூண்டில் இருந்த மிகப்பெரிய கிண்டாமணியில் விரிசல் ஏற்பட்டபோதும், அதை சரிசெய்து கொடுத்ததும் BHEL நிர்வாகமே.

    இத்தகையதோர் நிறுவனத்தில் சுமார் 38 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதில் எனக்கும் ஓர் பெருமை உண்டு. //
    திருச்சிக்கு BHEL செய்த பணிகள் நிறையவே உண்டு. அந்த பெருமை மிக்க நிறுவனத்தில் பணியாற்றிய உங்களுக்கும், அதில் பணியாற்றிய மற்றவர்களுக்கும் இப்பொழுது பணியாற்றும் அனைவருக்கும் நிச்சயம் பெருமிதம் இருக்கும்.

    // இவையெல்லாம் தங்கள் தகவலுக்காக மட்டுமே.//

    இவ்வளவு விரிவான தகவல்களை எனக்காக மட்டுமல்லாது இந்த பதிவினைப் படிக்கும் அனைவருக்காகவும் பதிந்த அன்புள்ளம் கொண்ட VGK அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  52. அப்பப்பா..... பயங்கரமான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். அப்போது எனக்கு ஆறு வயது. நெய்வேலியிலும் பாதிப்பு இருந்ததாக அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  53. மறுமொழி >வெங்கட் நாகராஜ் said...
    // அப்பப்பா..... பயங்கரமான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். அப்போது எனக்கு ஆறு வயது. நெய்வேலியிலும் பாதிப்பு இருந்ததாக அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். //

    பயங்கரமான அனுபவம்தான். 1977 புயல், வெள்ளத்தில் சிக்கிய அல்லது பார்த்த யாரைக் கேட்டாலும் சொல்லுவார்கள். சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  54. +1
    இந்த வெள்ளம் பற்றி நன்கு அறிந்தவன்...
    எங்கள் அப்பா-தமிழ்நாடு முழுவதும் அரசு வேலையில் tour செல்வார். இந்த மழையில் எங்கள் அப்பா என் அம்மாவுடன் tour சென்றதால் அவர் காரை எடுத்து சென்றார். எங்கள் அம்மாவும் கூட சென்றதால் அரசாங்க வாகனத்தை உபயோகபடுத்தவில்லை.

    அப்பா திருச்சியில் வேடசந்தூர் இப்படி வேலையில் முழுகியபோது...நாங்கள்?

    எங்கள் வீடு ஒரு வாரம் சூதாட்ட கிளப் ;எங்கள் காலனி நண்பர்கள் முழுவதும் எங்கள் வீட்டில் தான். ரம்மி..மூணு சீட்டு; பீடி சிகரெட்; (சிகரெட் தீர்ந்தா அப்புறம் என்ன பீடி தான்)

    அந்த ஒரு வாரம் குஷி தான்....ஆனால், குடி இல்லை இல்லவே இல்லை. எங்கள் அப்பா ஒரு நாள் முன்னே சென்னை திரும்பிய பின்---என் நண்பரகள் எங்கள் வீட்ட்டை விட்டு ஓடிய ஓட்டம்---Best!

    ReplyDelete
  55. மறுமொழி > நம்பள்கி said...

    சகோதரர் நம்பள்கி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
    நீங்களும் அந்த 1977 அனுபவத்தை நகைச்சுவையோடே எழுதலாமே?

    ReplyDelete


  56. அபயாஅருணாMonday, November 30, 2015 5:56:00 p.m.

    இது உங்களின் பழைய பதிவிற்கான காமெண்டு .நான் படித்ததெல்லாம் சாவித்திரி வித்யாசாலா வும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியும் . 1976ல் எம் ஏமுடிக்கும் முன்பே செகரட்டேரியட்டில் ஃ பைனான்ஸ் டெபார்ட்மெண்டில் வேலை கிடைக்க (எமர்ஜென்சி சமயம் என்பதால் மெரிட்டில் கிடைத்த்தது) பெற்றோர்களும் தஞ்சைக்கு என் அக்காவின் காலேஜ் வேலைக்காக வீடு மாறிவிட்டார்கள் .1977ன் வெள்ளம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர அது இந்த அளவு கொடுமையாக இருந்தது என்பது தெரியாது . மகா பயங்கரமாக இருக்கிறது .புகைப் படத்தில் உள்ள படியேறினால் என் கிளாஸ் ரூம் 11 வது படிக்கும் போது . பழைய நினைவுகளை கிளறிவிட்ட பதிவு

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் வெள்ளம் – 2015 http://tthamizhelango.blogspot.com/2015/11/2015.html
      என்ற எனது பதிவினில், இந்த பதிவிற்கான மேலே உள்ள கருத்துரையைத் தந்த சகோதரி அபயா அருணாஅவர்களுக்கு நன்றி.

      Delete
  57. வேடசந்தூர் வெள்ளத்தில் அதி மோசமாக பாதிக்கபட்ட குடும்பம் .எங்கள் குடும்பம் ,உயிர் மட்டும் தான் மிஞ்சியது.பத்திர காளியம்மன் கோவிலை அடுத்து எங்கள் வீடு தரை மட்டமாகி போனது.ஓடியாடி விளையாடிய சொந்த ஊர் எங்களை அனாதையாக்கி விரட்டிவிட்டது,காலத்தின் கோலம்.இப்பொழுது திருச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,நலமாக.என் 11 வயதில் நான் பார்த்த அந்த சோகம் இன்றும் மனதை விட்டு மறைய வில்லை12/11/1977.எத்தனை சடலங்கள் என்ணி மாளவில்லை,100,200 க்கும் மேலிருக்கும்.நம் இந்திய ராணுவத்தின் மிக சிறப்பாக இருந்தது தரை மட்டமான எங்கள் வீட்டின் மேலிருந்து ஹெலிகாப்டரில் எம் ஜி யார் பார்த்து விட்டு சென்றார்..9942367005...

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. இந்த வெள்ளம் வந்த போது நான் முத்தரசநல்லூர் பக்கத்தில் இருக்கிற பழுவூர் கிராமத்தில் எங்கள் மாமா வீட்டில் இருந்துகொண்டு,10வது படித்துக் கொண்டிருந்தேன். திருச்சி தேசியக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அந்த வெள்ளத்தின் போது நான் பார்த்தவைகளை கலியன் மதவு என்கிற என் நாவலின் 21 வது அத்தியாயத்தில் எழுதியிருக்கிறேன்.

    கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் பள்ளிக்கு லீவு விட்டார்கள்.
    குடமுருட்டி ஆற்றுக்கும் ‌ வாட்டர் ஹவுஸுக்கும் நடுவில் காவிரி உடைந்து வெள்ளப்பெருக்கு.

    என் உறவினர் ஒருவர் , கர்ப்பமாக இருக்கும் தன் மனைவிக்காக மாங்காய்ப் பொறுக்கக் கொல்லைக்குச் செல்ல ஒரு தென்னை மரம் தலையில் விழுந்து அங்கேயே இறந்தார்.
    மாங்காய் பொறுக்கச் சென்ற நானும் என்னுடைய நண்பர்களும் அதை பார்த்துவிட்டு வந்து பயத்துடனும் நடுக்கத்துடன் அழுகையுடனும் செய்தி அறிவித்தோம். அப்பப்பா எத்தனையோ அனுபவங்கள். முடிந்தவரை என்னுடைய நாவலான கலியன் மதவு படைப்பில் 21 வது அத்தியாயத்தில் அதை எழுதி இருக்கிறேன்.
    ஜூனியர் தேஜ், சீர்காழி

    ReplyDelete

    ReplyDelete