கொஞ்ச நாட்களாகவே, குறிப்பாக புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பிற்குப்
(11.10.15 – ஞாயிறு) பிறகு, வலைப்பதிவர்கள் மத்தியில் ஒரு சுறுசுறுப்பு இல்லை; எல்லோருமே
நாட்களை நகர்த்திக் கொண்டுதான் இருந்தார்கள்.
இதுமாதிரி சமயங்களில் எல்லாம், யாராவது ஒரு பதிவர், அவரை அறியாமலேயே, ஒரு பத்துபேரை
தொடர் பதிவு எழுதச் சொல்லி கொளுத்தி போடுவார். அது வலையுலகில் பற்றி கொஞ்சநாட்களுக்கு
கனன்று கொண்டு இருக்கும். வலையுலகமும் போர் அடிக்காது. இந்த தடவை நீண்ட நாட்களுக்குப்
பிறகு, தொடங்கி வைத்து இருப்பவர் நம்ம கில்லர்ஜி. தலைப்பும் ’கடவுளைக் கண்டேன்’
என்று கொடுத்து விட்டார்.
சகோதரி ஆசிரியை கீதா (புதுக்கோட்டை) அவர்கள் , தனது பத்தில், சகோதரி
தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களுக்கு இட்ட பின்னூட்டத்திலிருந்தே, நிச்சயம் அவரிடமிருந்து,
தொடர்பதிவு எழுதிட அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து எழுதத் தொடங்கி விட்டேன். எதிர்பார்ப்பை
பொய்க்காத, அன்புச் சகோதரி தேன்மதுரத் தமிழ்
கிரேஸ் அவர்களுக்கு நன்றி. http://thaenmaduratamil.blogspot.com/2015/11/kadavulai-kanden-blogpost-chain.html
சமய ஓவியங்கள்:
( படம் – மேலே) இயேசு கோயில் வியாபாரிகளை விரட்டுதல். வரைந்த ஓவியர் CARL HEINRICH BLOCH)
இந்துக் கோயில்கள் சென்றாலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் சென்றாலும்
அங்குள்ள வண்ண ஓவியங்களை ரசிப்பவன் நான். கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் சென்றால் உட்
கூரை ஓவியங்கள் (CEILING PAINTINGS) , சுவர்ச் சித்திரங்கள் (WALL PAINTINGS) மற்றும்
ஜன்னல்களில் உள்ள கண்ணாடி ஓவியங்கள் (GLASS PAINTINGS) முதலானவற்றைக் காணலாம். அந்த
ஓவியங்கள் அனைத்தும் மைக்கேல் ஆஞ்சலோ (Michelangelo) லியனார்டோ டா வின்சி
(Leonardo da Vinci) மற்றும் ரபேல்(RAPHAEL
) போன்ற இத்தாலிய
ஓவியர்கள் வரைந்த ஓவியங்களின் அடிப்படையிலேயே இருப்பதைக் காணலாம்
(படம் – மேலே) ராஜா ரவிவர்மா வரைந்த லட்சுமி ஓவியம்)
முன்பெல்லாம் இஷ்டத்திற்கு இந்து கடவுள் படங்களை வரைந்து கொண்டு
இருந்தார்கள். கடவுளர்களுக்கு என்று முகம் கொடுத்து கிருஷ்ணர், சரஸ்வதி, லட்சுமி என்று வண்ண ஓவியங்களை வரைந்தவர் ராஜா ரவிவர்மா அவர்கள்.
இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும், மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பின் காரணமாக
அவைகளே கடவுளைக் கண்ட தெய்வீகப் படங்களாக மாறின. முன்பெல்லாம் பெரிய ஹோட்டல்களில் இந்த படங்கள் உள்ள காலண்டர் ஓவியங்களை கண்ணாடி பிரேம் போட்டு சுவரில் வரிசையாக மாட்டி வைத்திருப்பார்கள்.
சினிமாக் கடவுள்:
(படம் – மேலே) கிருஷ்ணர்
வேடத்தில் என்.டி.ராமராவ்.
சினிமாவில் நம்ப ஆட்கள் குறிப்பிட்ட சிலபேரை, குறிப்பிட்ட வேஷத்தில்
மட்டுமே நடிக்க வைத்து, மக்கள் மனதில் கடவுளர்களைப் பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்கி
விட்டார்கள். கிருஷ்ணர் என்றால் என்.டி.ராமராவ்தான் நமது மனதில் நிழலாடுவார். ராமர்
என்றாலும் அவர்தான். ( கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி என்றால் யாருக்கும் உண்மையான வ.உ.சியின்
முகம் மனதில் நிழலாடுவதில்லை; நம்ப நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் வந்து நிற்பார்)
சிவனுக்கென்று யாரையும் மனதில் நிலை நிறுத்தவில்லை.
ஒருகாலத்தில் அம்மன் என்றால் கே.ஆர். விஜயாதான் மனதில் வலம் வந்தார்.
அவர் வேப்பிலையோடு திரையில் வந்தவுடனேயே தியேட்டர்களில், பாதி அம்மணிகளுக்கு சாமி வந்துவிடும்.
அவர்களுக்கு திருநீறு கொடுத்து அம்சடக்குவதற்கு என்றே தனி ஆட்கள்; தியேட்டர் வராண்டாவிலும்
ஒரு அம்மன் படம், உண்டியலோடு திருநீறு, எலுமிச்சை மாலைகள் சகிதம் இருக்கும். அப்புறம்
ரம்யா கிருஷ்ணன். இப்போது யார் என்று தெரியவில்லை.
ஒரு படத்தில், ஒரு காட்சியில்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
_ பாடல்:
வாலி ( படம்: பாபு )
என்று பாடுகிறார் சிவாஜி கணேசன்.
சமயக் கடவுள்:
பெரிய திருமொழியில்,
நாடினேன், நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம் - திருமங்கை ஆழ்வார்,
என்று, தான் இறைவனைக் கண்டு கொண்ட அனுபவத்தைச் சொல்கிறார் திருமங்கை
ஆழ்வார்,
சைவசமயக் குரவர்களுள் ஒருவரான சுந்தரர்,
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை
நினைக்கேனே.
-
சுந்தரர்
(திருமழபாடி)
என்று சிவனைத் துதித்து பாடுகின்றார்.
மகாகவி சுப்ரமண்ய பாரதியாரும் கண்ணனைக் கடவுளாகக் கண்டு கொண்டதாக
பாடுகிறார்.
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்!
கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்!
கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!
- மகாகவி
பாரதியார் (கண்ணன் பாட்டு)
கடவுளை உணர்ந்தேன்:
நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது; அது நம்மை வழி நடத்திச்
செல்கிறது. அதற்கு கடவுள் என்றும், ஒவ்வொரு சமயத்தவரும் ஒரு பெயரிட்டும் அழைக்கின்றனர்.
எனவே என்னைப் பொறுத்தவரை ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” (திருமூலர்) என்ற கோட்பாடு உடையவன். எல்லோரும்
ஒரு தாய் வயிற்று மக்கள். நான் கடவுளைக் கண்டேன் என்பதனை விட, கடவுளை பல்வேறு சந்தர்ப்பங்களில்,
உணர்ந்தவன் என்பதே சரி. இந்த அனுபவத்தை எல்லாம் ஓரிரு வரிகளில் விளக்க இயலாது என்பதே
உண்மை. விடைதெரியாக் கேள்விகளின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.
”வேண்டத் தக்கது அறிவோய் நீ; வேண்டும் முழுவதும் தருவோய் நீ” என்ற
மாணிக்க வாசகர் கூற்றுப்படி நான் கடவுளிடம் கேட்பதற்கு என்று என்ன இருக்கிறது. எனவே
எனக்குள் மற்றவர்களுக்குத் தோன்றிய சுவாரஸ்யமான பத்து கேள்விகள் எனக்குள் எழவில்லை.
ஒவ்வொரு சமயத்தவரும் அவரவர் கடவுளை, அவரவர் வழியில், அவரவர் நம்பிக்கையில்
வழிபடுகின்றனர். யாரோ ஒரு சிலர் எங்கள் சமயம்தான் சிறந்தது, எங்கள் கடவுள்தான் உண்மையானவர்
என்று கொளுத்திப் போட ஊரே பற்றி எரிகின்றது. நடுவுநிலையில் இருப்பவர்களும், நிலை தடுமாறி
மதவெறியர்களின், தந்திரத்திற்கு பலியாகின்றனர்.
(குறிப்பு: தொடர் பதிவு என்றால், நம்மை ஒருவர் எழுத அழைத்தது போல
நாமும் சிலரை (இந்த தொடருக்கு 10 பேர்) அழைக்க வேண்டுமாம். ஏற்கனவே அவரவர் அவரவருக்குத்
தெரிந்த வலைப்பதிவர்களை அழைத்துக் கொண்டு இருக்கின்றனர். எனவே கிட்டத்தட்ட புதுக்கோட்டை
வலைப்பதிவர் சந்திப்பு – 2015 கையேட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு வாய்ப்பு வந்துவிடும்
என்று நினைக்கிறேன். எனவே நான் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.)
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)
வணக்கம் நண்பரே தாங்கள் ஆசைகளை முன் வைக்காமல் ஆன்மீகம் பற்றியும், பல நல்ல விடயங்களைக் குறித்தும் தங்களது பாணியில் புதிய முறையில் எழுதி இருப்பது நன்று நன்றி - கில்லர்ஜி
ReplyDeleteதமிழ் மணம் 1
இந்த ’கடவுளைக் கண்டேன்‘ என்ற தொடர்பதிவைத் தொடங்கி வைத்த , நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. தங்களின் பாராட்டுரைக்கு மீண்டும் நன்றி.
Deleteதங்களது இலக்கம் 6 போடவும் நன்றி
ReplyDeleteஅப்படியே செய்து விட்டேன் நண்பரே!
Deleteமிகவும் தெளிவாக அழகாக எழுதப்பட்ட கட்டுரை.
ReplyDeleteமுதலில் அதற்கு பாராட்டுக்கள்.
உண்மையான ஆத்திகருக்கும் உண்மையான நாத்திகருக்கும் இடையே நல்லதொரு புரிதல் தான் இருக்குமே தவிர சண்டை இருக்காது. தர்க்க ரீதியாக இவர்கள் புரியும் வாதங்கள் பிருஹத் ஆரண்யகத்தில் காணலாம். நல்லதொரு சமூகத்திற்கு இவர்கள் இருவருமே தேவை.
வேதம் கூறுகிறது: அவன் ஒருவனே;
படித்தவர் பலவிதமாகப் பகர்வர்.
நிற்க.
//வேண்டத் தக்கது அறிவோய் நீ; வேண்டும் முழுவதும் தருவோய் நீ” என்ற மாணிக்க வாசகர் கூற்றுப்படி நான் கடவுளிடம் கேட்பதற்கு என்று என்ன இருக்கிறது//
நாகூர் ஹனிபா அவர்கள் பாடல் ஒன்று சொல்கிறது:
ஆண்டவனே !! நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல இனி நேரம் இல்லையே. என .
ஏதும் வேண்டும் என தோன்றும்போதெல்லாம் இந்தக் கவிதை தான் என் மனதில் தோன்றும்.
சுப்பு தாத்தா.
அன்பான கருத்துரையும் பாராட்டுரையும் தந்த சுப்புத் தாத்தா அவர்களுக்கு நன்றி. வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி விட்டால், நம்மையும் அறியாமல் வார்த்தைகளில் வேதாந்தம் வந்து விடுகிறது என்பதே உண்மை.
Delete//ஒருகாலத்தில் அம்மன் என்றால் கே.ஆர். விஜயாதான் மனதில் வலம் வந்தார். அவர் வேப்பிலையோடு திரையில் வந்தவுடனேயே தியேட்டர்களில், பாதி அம்மணிகளுக்கு சாமி வந்துவிடும். அவர்களுக்கு திருநீறு கொடுத்து அம்சடக்குவதற்கு என்றே தனி ஆட்கள்; தியேட்டர் வராண்டாவிலும் ஒரு அம்மன் படம், உண்டியலோடு திருநீறு, எலுமிச்சை மாலைகள் சகிதம் இருக்கும்.//
ReplyDeleteஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! உண்மை. முற்றிலும் உண்மை. :)))))
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.
மிகவும் அருமையான அலசல் கட்டுரை. பாராட்டுகள். வாழ்த்துகள்.
//நான் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.//
என் போன்றோருக்கு வயிற்றில் பாலை வார்க்கும் இந்த கடைசி வரிகளுக்கு மட்டும் தங்களுக்கு என் கோடி கோடி நன்றிகள்.
அன்புடன் VGK
நீண்டதொரு கருத்துரை தந்து, மலரும் நினைவுகளை மீட்டிய மூத்த வலைப்பதிவர், அய்யா V.G.K அவர்களுக்கு நன்றி.
Deleteஹலோ! எச்சூஸ்மீ. ஆசைலாம் சொல்லாம எஸ்கேப்பிட்டா தொடர்பதிவு ரூல்ஸை மீறுனதா அர்த்தம்.
ReplyDeleteசகோதரி அவரின் அன்பான கட்டளைக்கு நன்றி! விதிகள் ( Rules ) என்று இருந்தால், சில விதிவிலக்குகள் ( Exceptions ) என்றும் இருக்கும் அல்லவா? அந்த பட்டியலில் என்னை சேர்த்து விடுங்கள்.
Deleteமீண்டும் தொடர் பதிவா? உங்களின் பதிவு வித்தியாசமாக சுவையாக இருந்தது. நன்றி!
ReplyDeleteசகோதரர் ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி.
Deleteகில்லர்ஜி தொடக்கி வைச்ச
ReplyDeleteஅருமையான தொடர்
விரிவான அலசலுடன்
சிறப்பான பதிவாகப் பகிர்ந்துள்ளீர்கள்
பாராட்டுகள்
கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி!
Deleteமாணிக்க வாசகர் கூற்று ஒன்றே போதும் ஐயா...
ReplyDeleteகருத்துரை தந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. மாணிக்க வாசகர் சொன்ன இந்த வரிகளை மட்டும் வைத்து பக்கம் பக்கமாக எழுதலாம்; மணிக் கணக்கில் பேசலாம் அய்யா.
Delete
ReplyDeleteநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் கேட்பதற்கு ஒன்றும் இருக்காது. எனவே கொடுத்துவைத்தவர் நீங்கள். இந்த பதிவை தாங்கள் எழுத காரணமாக இருக்கும் நண்பர் தேவகோட்டை திரு KILLERGEE அவர்களுக்கும், அருமையான பதிவைத் தந்த தங்களுக்கும் பாராட்டுக்கள்!
அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த நேரத்தில், நீங்கள் சொல்லி, உங்கள் அன்புக் கட்டளைக்கு இணங்க, நான் எழுதிய, தாயுமானவர் பாடலை மையப்படுத்தி எழுதிய “ஆசைக்கோர் அளவில்லை” என்ற பதிவு நினைவுக்கு வருகிறது அய்யா!
Deleteபதிவுலகில் சுறுசுறுப்பு குறைந்து விட்டது என்று ஆதங்கப்பட்டீர்க்ள அல்லவா? சுறுசுறுப்பு வரவழைக்க ஒரு நூல்முனை கிடைத்திருக்கிறது. பார்க்க என் பதிவில் நம்பள்கி அவர்களின் பின்னூட்டத்தை. http://swamysmusings.blogspot.com/2015/11/blog-post_13.html.
ReplyDeleteசுறுசுறுப்பு வேண்டுமென்றால் இந்த திரியைக் கொளுத்திப்போடுகிறேன். எப்படி?
அய்யா திரியை சீக்கிரம் கொளுத்திப் போடுங்கள். வலையுலகில் பட்டாசுசத்தம் எப்படி என்று பார்ப்போம்.
Deleteஅருமையான பதிவு ஐயா
ReplyDeleteநன்றி
தம +1
கரந்தை ஆசிரியருக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
வித்தியாசமான சிந்தனை யோட்டம்... எங்களையும் சிந்திக்கவைத்தது.. தொடர் பதிவு நம் வலைப்பதிவர்களை ஒரு உச்சாகம் ஐயா வாழ்த்துக்கள் த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி.
Deleteகில்லர்ஜி ஆரம்பித்து என்னையும் அழைத்திருந்தார். பிற பணிகள் காரணமாக சற்றே தாமதமாகிவிட்டது. தொடர்வேன். தங்களுடைய பதிவின்மூலமாக அறிந்திராத பல செய்திகளை அறிந்தேன். நன்றி.
ReplyDeleteமழை, வெள்ளம், தீபாவளி – காரணமாக நிறையபேர் பீன்னூட்டங்களே எழுதவில்லை அய்யா! இந்த சூழ்நிலையிலும் பல்வேறு பணிகளுக்கு இடையில் வந்து கருத்துரை சொன்ன தங்களுக்கு நன்றி.
Deleteஅருமையான பதிவு, அழகான படங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மாணிக்க வாசகர் பாடல் போல் எல்லாம் அறிந்தவர் நமக்கு எது நல்லதோ அதை தருவார். அவர் விருப்பம் போல்( குழந்தைக்கு எதுவேண்டுமோ அதை மட்டும் தரும் தாய் போல்)
சகோதரி அவர்களுக்கு நன்றி. உங்களுடைய அண்மைக்கால குன்றத்துக் கோயில் பதிவைப் படித்து விட்டேன்; ஆனாலும் கருத்துரை தர இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும்.
Deleteதொடர் பதிவுக்கு பதிலாக சிறப்பான கருத்துகளைச் சொல்லி ஒரு பதிவு. மிகவும் நன்று.
ReplyDeleteபாராட்டுகள்.
சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.
Deleteஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையில் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்பதாலுஎழுதி எழுதி ஓய்ந்து போனதால் சுறு சுறுப்பு குறைந்து போனதும்..காரணமாக இருக்கலாம் .. சுறுசுறுப்பை தொடங்கி வைத்த முதல் பெருமை கில்லர்ஜிக்கும்..., படிப்படியாக சுறு சுறுப்பை தொடரும் மற்றவர்களுக்கும், தங்களுக்கும் பெருமைகள் சேரட்டும் அய்யா...........
ReplyDeleteதோழர் வலிப்போக்கன் அவர்களுக்கு நன்றி.
Delete
ReplyDeleteஒவ்வொரு சமயத்தவரும் அவரவர் கடவுளை, அவரவர் வழியில், அவரவர் நம்பிக்கையில் வழிபடுகின்றனர். யாரோ ஒரு சிலர் எங்கள் சமயம்தான் சிறந்தது, எங்கள் கடவுள்தான் உண்மையானவர் என்று கொளுத்திப் போட ஊரே பற்றி எரிகின்றது. நடுவுநிலையில் இருப்பவர்களும், நிலை தடுமாறி மதவெறியர்களின், தந்திரத்திற்கு பலியாகின்றனர்.
இந்த நிதர்சனம் புரிந்தால் மதவெறியர்கள் மதுவெறியில் மதம் கொள்ள மாட்டார்கள். சிந்திக்க வேண்டிய பதிவு! நன்றி ஐயா!
சகோதரி அவர்களுக்கு நன்றி.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteகடவுளைப் படங்களாவும் இலக்கியப் பாடங்களாவும் காட்டியது கண்டு மகிழ்ச்சி.
த.ம.9
ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி.
Deleteவணக்கம் ஐயா,
ReplyDeleteஎன் அழைப்பினை ஏற்று பதிவிட்ட உங்களுக்கு முதலில் என் நன்றிகள்!
கடவுளைப் பற்றியும் அனைவரும் ஒன்று என்பதையும் அழகாக இனிய பாடல்கள் மற்றும் படங்களுடன் பதிவிட்டது அருமை.
மிக்க நன்றி ஐயா.
இப்பதிவிற்குத் தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன், மன்னிக்கவும். தவறாக நினைக்க வேண்டாம் ஐயா..த.ம.+1
சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களுக்கு – நன்றி! மீண்டும் வருக!
Deleteநமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது; அது நம்மை வழி நடத்திச் செல்கிறது. அதற்கு கடவுள் என்றும், ஒவ்வொரு சமயத்தவரும் ஒரு பெயரிட்டும் அழைக்கின்றனர். எனவே என்னைப் பொறுத்தவரை ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” (திருமூலர்) என்ற கோட்பாடு உடையவன்.// எங்கள் எண்ணமும் இதேதான் ஐயா.
ReplyDeleteஅருமையாக எல்லாக் கடவுளர்..அதான் சினிமாக் கடவுளர் உட்படச் சொல்லிச் சென்ற விதம் அருமை. பாடல்களும் இனிமை...
நாங்கள் கடவுளைக் கண்டே தொடர்பதிவிற்குக் கில்லர்ஜியால் அழைக்கப்பட்டிருந்ததால் நாங்கள் எழுதும் முன் வேறு பதிவுகளைப் படிக்கவில்லை. இப்போதுதான் வருகின்றோம்....அதுதான் தாமதம்...ஐயா