Wednesday, 17 October 2012

ஊருக்குள் மழைநீர் – ஏன்?முன்பெல்லாம்  (ஐம்பது வருடத்திற்கு முன்பு) மழைக் காலம் வந்து விட்டால் குறைந்தது மூன்றுமணி நேரமாவது மழை இருக்கும். சிலசமயம் காற்றும் மழையோடு போட்டி போடும். காற்று ஓய்ந்ததும் மழை அடர்த்தியாக நின்று நிதானமாக பெய்யும். சிலசமயம் நாள் முழுக்க அல்லது விடிய விடிய கூட மழை பெய்தது உண்டு. அப்போது கூட பள்ளிக்கூடங்களுக்கு அவ்வளவு மழையிலும் விடுமுறை தரமாட்டார்கள். பிள்ளைகள் குடை பிடித்துக் கொண்டு அல்லது பெற்றோர் துணையோடு பள்ளிக்கு சென்று வருவார்கள். எவ்வளவு மழைநீர் பெய்தாலும் ஊருக்குள் தேங்காது. மழைநீர் தெருக்களில் வாய்க்கால் போல் செல்லும். பிள்ளைகள் காகித கப்பல் செய்து தண்ணீரில் விட்டு விளையாடுவார்கள். பள்ளமான இடத்தில் அல்லது ஆற்றங்கரையோரம் வீடு கட்டியவர்கள் மட்டும் துன்பத்திற்கு உள்ளாவார்கள். அதுவும் மாவட்ட நிர்வாகத்தினரால் உடனே சரி செய்யப்பட்டுவிடும்.

ஆனால் இப்போதோ ஒரு சின்ன மழை அரைமணி நேரம் பெய்தால் கூட ஊர் தாங்கமாட்டேன் என்றாகி விடுகிறது. அந்த சின்ன மழையையும் செய்தியாகப் போட்டுவிடுகிறார்கள். மழை வருவதற்கு முன்னரே எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை தந்து விடுகிறார்கள். ஒரு மூன்று மணிநேரம் மழை பெய்தால் போதும். தெருக்களில் வெள்ளம். வீட்டிற்குள் வந்து விடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்குகிறது. இதற்கு காரணம் என்ன?


          ( PHOTO  THANKS TO www.photoblog.nbcnews.com )


சாலை அமைக்கும் முறை:

எப்போதும் வீடு கட்டும் போது தெருச் சாலைகளின் உயரத்தை கணக்கிட்டு, வீட்டை உயர்த்தி கட்டுவார்கள். வீட்டைச் சுற்றி சுற்றுச் சுவருக்குள் இருக்கும் காலி இடம் மற்றும் தோட்டத்தை மண்போட்டு வெளியிலிருந்து தண்ணீர் உள்ளே வராதவாறு அமைப்பார்கள். தெருச் சாலைகளையும் ஊருக்கு வெளியே உள்ள சாலைகளையும் அமைக்கும் போது ரொம்பவும் உயர்த்த மாட்டார்கள். மேலும் ஆங்காங்கே தண்ணீர் வெளியேற சின்னச்சின்ன கால்வாய்கள் அமைப்பார்கள். அதேபோல் பழைய சாலையை புதுப்பிக்கும் போதும் பழைய தார்ச் சாலையை வெட்டி எடுத்துவிட்டு பழைய உயரத்திற்கே அமைப்பார்கள். இதனால் எவ்வளவு மழை பெய்தாலும் மழைநீர் வெளியேறி விடும். ஊருக்குள் தண்ணீர் தேங்குவதில்லை. ஆனால் இப்போதோ இந்த நடைமுறைகளை கடைபிடிப்பதில்லை. பழைய தார்ச்சாலைகளை வெட்டி எடுப்பதில்லை. அப்படியே சாலையின் மேல் சாலையை அமைத்து உயர்த்திக் கொண்டே போகிறார்கள். ஊரைச் சுற்றி இருக்கும் சாலைகள் குளத்துக் கரைகள் போல் அமைந்து விடுகின்றன.. பழைய வீடுகள் இதனால் பாதிக்கப் படுகின்றன. ஒரு சின்னமழை பெய்தால் கூட தண்ணீர் வெளியேறுவதில்லை. இப்போது எங்கு பார்த்தாலும் உயரம் உயரமாக நான்குவழிச் சாலைகள். பல இடங்களில் மழைநீரோ அல்லது வெள்ளப் பெருக்கோ ஏற்பட்டால் வெளியேற வழி இல்லை. அவைகளுக்கு அடியில் பல ஊர்கள்.

ஆக்கிரமிப்புகள்:

ஒரு இடத்தில் இது இராணுவ நிலம் “ என்ற பெயர்ப் பலகை. அந்த பெயர்ப் பலகையை தவிர சுற்றி இருக்கும் இராணுவ நிலம் முழுக்க ஆக்கிரமித்து வீடுகள். அங்கு உள்ளவர்களுக்கு ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, மின்சாரம் எல்லாமே உண்டு. அதேபோல ஆறு, வாய்க்கால், குளம், குட்டை என்று ஆக்கிரமித்தவர்களுக்கும் மேற்படி சொன்ன அனைத்தும் கிடைக்கும். அப்போதெல்லாம் அதிகாரிகள் ஜீப்பில் அடிக்கடி ரோந்து வருவார்கள். இதுமாதிரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள். முன்பு ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ஒரு பயம் இருந்தது. இது மாதிரியான ஆக்கிரமிப்புகளை அகற்றினால் வெள்ளநீர் சரியான முறையில் வெளியேறிவிட வாய்ப்பு அதிகம்.


விளைநிலங்கள் வீட்டுமனைகளாக:

முன்பெல்லாம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும்போது சாலையின் இருபுறமும் ஒரே வயல்களாக. நீர் நிலைகளாக இருக்கும். கொக்குகளும் நாரைகளும் பறப்பதைக் காணலாம். இப்போதோ புதுப்புது நகர்களின் பெயரில் வண்ண வண்ண கொடிகள் பறக்கின்றன. எல்லா வயல்களும் வீட்டு மனைகளாகிக் கொண்டு வருகின்றன. இங்கு கட்டப்படும் வீடுகள் பின்னாளில் மழைக்காலங்களில் தண்ணீரால் தத்தளிக்கின்றன.  குப்பை கூளங்கள்:

திருச்சியிலிருந்து தஞ்சைக்கு செல்லும்போது வழியில் வல்லம் என்ற இடத்தில் ஒரு காட்சியை பார்க்க நேரிட்டது. ஒரு கல்லூரி சாலை ஓரத்தில் உள்ள வாய்க்கால் கரையில் அமைந்துள்ளது. சாலைக்கும் கல்லூரிக்கும் இடையில் வாய்க்கால் மேல் ஒரு சின்ன பாலம். அந்த கல்லூரியின் குப்பைகளை (தேவையற்ற காகிதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட) அந்த பாலத்திற்கு அடியில் வாய்க்காலில்தான் கொட்டுகிறார்கள். இது போன்று நாடெங்கும் நிறையபேர் செய்கிறார்கள். இதுபோல கொட்டுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாக்கடை, கால்வாய்களில் தேங்கும் குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும். 

           

22 comments:

 1. மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களால் மழைநீரால் மட்டுமா பாதிப்பு? மொத்த சுற்றுசூழலும்..

  தேவைப்படும் பதிவு அய்யா!

  ReplyDelete
 2. தக்க சமயத்தில் பதிவிடப்பட்ட
  பயனுள்ள அருமையான பதிவு
  குப்பையை குப்பைத் தொட்டியில் சேர்க்கிற வரையிலும்
  கழிவு நீரை சாக்கடையில் சேர்க்கிற வரையிலும்
  தனி மனித பொறுப்பிருக்கிறது என்பதை
  அறிகிற வரை இந்தப் பிரச்சனை தொடரத்தான் செய்யும்
  சிந்திக்கச் செய்து போகும் பயனுள்ள அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நடக்கும் உண்மைகள்... மாற வேண்டும்... (TM 2)

  ReplyDelete
 4. சிறப்பான பகிர்வு... எல்லா ஆற்றுப் படுகைகளிலும், விளை நிலங்களிலும் வீடுகள் கட்டிக்கொண்டே போகிறார்கள்... மக்களும் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.

  இன்னும் பல கிராமங்களில் சிமெண்ட் சாலைகள் போட்டு விடுகிறார்கள். மழை பெய்தால் மண்ணுக்குள் செல்ல முடியாது, நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே தான் போகிறது!

  தக்க சமயத்தில் நல்ல பகிர்வு. பாராட்டுகள். த.ம. 3

  ReplyDelete
 5. REPLY TO ….வே.சுப்ரமணியன். said...

  சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 6. REPLY TO …. Ramani said...
  கவிஞரின் கருத்துரைக்கு நன்றி! சொல்லுவதை சொல்லி வைப்போம்.

  ReplyDelete
 7. REPLY TO …. திண்டுக்கல் தனபாலன் said...

  // நடக்கும் உண்மைகள்... மாற வேண்டும்... //

  பொது நலத்தோடு எல்லோரும் செயல்பட்டால் மாறலாம். தங்கள் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 8. REPLY TO …. வெங்கட் நாகராஜ் said...
  தங்கள் பாராட்டிற்கு நன்றி! இப்போது எந்த ஊரில் இருக்கிறீர்கள்?

  ReplyDelete
 9. கிராமப்புறங்களில் அழகிய விசாலமான இடத்தில் கொட்டித்தீர்க்கும் மழை உருண்டோடி வாய்கால் வழி சேர்ந்து ஏரி குளங்களை நிரப்பி எந்த இம்சையும் யாரும் தராமல் வந்து போகும் அந்த நிலை மாற்றியது நாமே இயற்கையை இம்சிப்பதை நிறுத்தினாலே போதுமே.

  ReplyDelete
 10. அருமையான அலசல் சார்! பழைய சாலை மீதே மீண்டும் தார் சாலை அமைத்து எங்கும் உயரமாகி இருப்பதி இருப்பதை எனது ஊரிலேயே கவனித்திருக்கிறேன் சார்! அதேபோல் வீட்டின் கட்டமைப்பையும் எங்கும் சரிவர கவனிப்பதில்லை!

  ReplyDelete
 11. பயனுள்ள ஆராய்ச்சிப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு.

  மழைநீர் ஓடிச்சென்று குளம், ஆறுகளில் விழும். இப்போது குளங்கள் மூடப்பட்டு வீடுகளாகிவிட்டன.

  தெருக்களும் உயர்ந்ததால் மழைநீர் தேங்கியே நிற்கின்றது.வடிகால்களும் குப்பை அடைத்து நிற்கின்றது. வீடுகளிலும் மழை நீரை சேகரித்து வைத்து பயன்படுத்துவதில்லை.

  ReplyDelete
 13. REPLY TO …. Sasi Kala said...

  இயற்கையை நேசிக்கும் சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!  ReplyDelete
 14. REPLY TO …. யுவராணி தமிழரசன் said...

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! உங்கள் ஊரில் மட்டுமல்ல எல்லா ஊரிலும் இப்படித்தான் செய்கிறார்கள்.

  ReplyDelete
 15. REPLY TO …. மாதேவி said...
  சகோதரியின் விளக்கமான கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 16. REPLY TO …. பழனி.கந்தசாமி said...
  நல்லாச் சொன்னீங்க. என்று பாராட்டியமைக்கு நன்றி!

  ReplyDelete
 17. மிகவும் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் தகவலுக்கு நன்றிகள்.

  // மழைநீர் தெருக்களில் வாய்க்கால் போல் செல்லும். பிள்ளைகள் காகித கப்பல் செய்து தண்ணீரில் விட்டு விளையாடுவார்கள்.//

  ;))))) இனிமையான மகிழ்வு தரும் நிகழ்ச்சி.

  ReplyDelete
 18. திரு VGK அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வருகையை எதிபார்த்தேன். கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 19. சென்னையைச் சூழ்ந்துள்ள இன்றைய மழை, வெள்ளத்தைப் பார்க்கும்போது இந்த பதிவினை மீள் பதிவாக விரிவாக்கி எழுதலாமா என்று தோன்றுகிறது.

  ReplyDelete